Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 யோவான் 1-5

உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்த சிலவற்றைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இதை நாங்கள் கேட்டோம், எங்கள் கண்களாலேயே பார்த்தோம், நாங்கள் நோக்கினோம். எங்கள் கைகளால் தொட்டோம். ஜீவன் தரும் வார்த்தையைக் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுதுகிறோம். அந்த ஜீவன் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. நாங்கள் அதைப் பார்த்தோம். நாங்கள் அதற்கான சான்றுகளைத் தரமுடியும். நாங்கள் இப்போது அந்த ஜீவனைக் குறித்து உங்களுக்குக் கூறுகிறோம். அது என்றென்றும் தொடரும் ஜீவனாகும். பிதாவாகிய தேவனோடு இருந்த ஜீவன் அது. தேவன் இந்த ஜீவனை எங்களுக்கு வெளிப்படுத்தினார். எங்களோடு நீங்களும் இவற்றில் பங்குள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டுமிருக்கிற காரியங்களை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். பிதாவாகிய தேவன், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆகியோரோடு கூடிய ஐக்கியத்தில் நாம் ஒருமித்துப் பங்கு பெறுகிறோம். நம் மகிழ்ச்சி முழுமையாகும்படி இக்காரியங்களை உங்களுக்கு எழுதுகிறோம்.

தேவன் நமது பாவங்களை மன்னிக்கிறார்

தேவனிடமிருந்து நாங்கள் கேட்ட உண்மையான போதனை இதுவே ஆகும். அதை இப்போது உங்களுக்குச் சொல்கிறோம். தேவன் ஒளியானவர். தேவனில் இருள் இல்லை. ஆகையால் நாம் தேவனோடு நெருக்கமான உறவு உடையவர்கள் என்று சொல்லிக்கொண்டே இருளில் தொடர்ந்து வாழ்வோமானால், பிறகு நாம் பொய்யர்களாயிருக்கிறோம். அப்படியானால், நாம் உண்மையைப் பின்பற்றாதவர்களாக இருக்கிறோம். தேவன் ஒளியில் இருக்கிறார். நாமும் கூட ஒளியில் வாழவேண்டும். தேவன் ஒளியில் இருப்பதுபோல நாம் ஒளியில் வாழ்ந்தால் ஒருவரோடொருவர் நெருக்கமான ஐக்கியமாக இருக்கிறோம். மேலும் அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தமானது எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குகிறது.

நமக்குப் பாவமில்லையென்று நாம் கூறினால் நம்மை நாமே முட்டாளாக்கிக்கொள்வதோடு, நம்மில் உண்மையும் இருக்காது. ஆனால் நாம் நம் பாவங்களை ஒத்துக்கொண்டால் தேவன் நமது பாவங்களை மன்னிப்பார். நாம் தேவனை நம்ப முடியும். தேவன் சரியானதையே செய்கிறார். நாம் செய்த எல்லா பாவங்களிலுமிருந்தும் தேவன் நம்மைச் சுத்தமாக்குவார். 10 நாம் பாவம் செய்ததில்லை என்று கூறினால் அதன் மூலம் தேவனைப் பொய்யராக்குகிறோம். நாம் தேவனின் உண்மையான போதனையையும் ஏற்றுக்கொள்வதில்லை.

இயேசு நமது உதவியாளர்

எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்கும்படிக்கு நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆனால் ஒருவன் பாவம் செய்தால் இயேசு கிறிஸ்து நமக்கு உதவுகிறார். அவர் நீதியுள்ளவர். பிதாவாகிய தேவனுக்கு முன்பாக இயேசு நமக்காகப் பரிந்து பேசுவார். நமது பாவங்கள் நம்மிலிருந்து நீக்கப்படும் வழி இயேசுவே. எல்லா மக்களின் பாவங்களும் நீக்கப்படும் வழி இயேசுவே.

நாம் செய்யும்படியாக தேவன் கூறியவற்றிற்கு நாம் கீழ்ப்படிந்தால், நாம் தேவனை உண்மையாக அறிந்திருக்கிறோம் என்பதில் உறுதியாக இருக்கலாம். ஒருவன், “நான் தேவனை அறிவேன்!” என்கிறான். ஆனால் அவன் தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லையென்றால் அவன் ஒரு பொய்யன். அவனில் உண்மை இல்லை. ஆனால் ஒருவன் தேவனின் போதனைக்குக் கீழ்ப்படியும்போது, அம்மனிதனில் தேவனின் அன்பு முழுமை பெற்றிருக்கும். நாம் தேவனைப் பின்பற்றுகிறோம் என்பதை இவ்வாறே அறிந்துகொள்கிறோம். ஒரு மனிதன் தான் தேவனில் வாழ்வதாகக் கூறினால், அவன் இயேசு வாழ்ந்ததைப் போன்று வாழ வேண்டும்.

பிற மக்களை நேசிக்கும்படியாக தேவன் கட்டளையிட்டார்

எனது அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. துவக்கத்திலிருந்தே உங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளை அது. நீங்கள் ஏற்கெனவே கேட்ட போதனையே இக்கட்டளையாகும். இருந்த போதிலும் இக்கட்டளையை ஒரு புதிய கட்டளையாக உங்களுக்கு எழுதுகிறேன். இக்கட்டளை உண்மையானது. இதன் உண்மையை இயேசுவிலும் மற்றும் உங்களிலும் நீங்கள் காணலாம். இருள் நீங்கிக்கொண்டிருக்கிறது. உண்மை ஒளி ஏற்கெனவே ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.

ஒரு மனிதன், “நான் ஒளியில் இருக்கிறேன்” என்கிறான். ஆனால் அவன் அவனது சகோதரனை வெறுக்கிறானென்றால், அவன் இன்னும் இருளில் இருக்கிறான் என்றே பொருள்படும். 10 தன் சகோதரனை நேசிக்கிற மனிதன் ஒளியில் இருக்கிறான். பாவத்திற்குக் காரணமாக இருக்கிற எதுவும் அவனிடம் இல்லை. 11 ஆனால் சகோதரனை வெறுக்கிற ஒருவன் இருளில் இருக்கிறான். அவன் இருளில் வாழ்கிறான். அவன் எங்கு போய்க்கொண்டிருக்கிறான் என்பது அம்மனிதனுக்குத் தெரியாது. ஏன்? இருள் அவனைக் குருடனாக்கியிருக்கின்றது.

12 அன்பான பிள்ளைகளே, இயேசுவின் மூலமாக உங்கள் பாவங்கள்
    மன்னிக்கப்பட்டதால் உங்களுக்கு நான் எழுதுகிறேன்.
13 தந்தையரே, துவக்கத்திலிருந்தே இருக்கின்ற ஒருவரை நீங்கள்
    அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞர்களே, தீயவனை நீங்கள் வென்றதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
14 பிள்ளைகளே, பிதாவை நீங்கள் அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
    தந்தையரே, துவக்கத்திலிருந்தே இருக்கின்ற ஒருவரை நீங்கள் அறிந்திருப்பதால் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
இளைஞரே, நீங்கள் பலமானவர்களாக இருப்பதால் உங்களுக்கு எழுதுகிறேன்.
    ஏனெனில் வார்த்தை உங்களில் உள்ளது.
தீயவனை வெற்றி கொண்டீர்கள்.
    எனவே நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

15 உலகத்தையோ, உலகத்தின் பொருள்களையோ நேசிக்காதீர்கள். ஒருவன் உலகை நேசித்தால், பிதாவின் அன்பு அம்மனிதனில் இருப்பதில்லை. 16 இவை உலகின் தீய காரியங்களாகும். பாவமிக்க சுயத்தை திருப்திப்படுத்தும் பொருள்களை விரும்புதல், நாம் பார்க்கிற பாவமிக்க பொருள்களை விரும்புதல், நம்மிடம் உள்ள பொருள்களால் மிகவும் கர்வமாக உணர்தல், இவற்றில் ஒன்றேனும் பிதாவினிடமிருந்து வருவதில்லை. இவை அனைத்தும் உலகிலிருந்து வருவன. 17 உலகம் மறைந்துபோகிறது. மனிதர்கள் விரும்பும் உலகத்தின் எல்லாப் பொருள்களும் அழிந்துபோகின்றன. தேவன் விரும்புவதைச் செய்யும் மனிதனோ என்றென்றும் வாழ்கிறான்.

கிறிஸ்துவின் பகைவரைப் பின்பற்றாதீர்கள்

18 எனது அன்பான பிள்ளைகளே, முடிவு நெருங்குகிறது. போலிக் கிறிஸ்து வந்துகொண்டிருப்பதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் பகைவர்கள் பலர் இங்கு ஏற்கெனவே உள்ளனர். எனவே முடிவு நெருங்குகிறது என்பதை நாம் அறிவோம். 19 நமது குழுவிலேயே கிறிஸ்துவின் பகைவர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் நம்மை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் நம்மோடு சேர்ந்தவர்களாக வாழவில்லை. உண்மையிலேயே நம் குழுவில் உள்ளவர்களாக அவர்கள் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் பிரிந்தனர். அவர்களில் ஒருவர் கூட நம்மோடு உண்மையாகச் சேர்ந்திருந்ததில்லை என்பதை இது காட்டுகிறது.

20 புனிதமான ஒருவர் உங்களுக்குக் கொடுத்த பரிசை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எனவே உங்கள் எல்லோருக்கும் உண்மை தெரியும். 21 ஏன் நான் உங்களுக்கு எழுதுகிறேன்? நீங்கள் உண்மையை அறியாததால் எழுதுகிறேனா? இல்லை! நீங்கள் உண்மையை அறிந்திருப்பதாலேயே இக்கடிதத்தை எழுதுகிறேன். உண்மையிலிருந்து எந்தப் பொய்யும் வருவதில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

22 எனவே யார் பொய்யன்? இயேசுவை கிறிஸ்துவல்ல என்று கூறுபவனே பொய்யன். அவனே போலிக் கிறிஸ்து. அம்மனிதன் பிதாவிலோ அல்லது குமாரனிலோ நம்பிக்கை வைப்பதில்லை. 23 ஒருவன் குமாரனில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் அவன் பிதாவை உடையவனல்ல. குமாரனை ஏற்கிற ஒருவனுக்கு பிதாவும்கூட இருக்கிறார்.

24 துவக்கத்திலிருந்தே நீங்கள் கேட்ட போதனையைப் பின்பற்றுவதைத் தொடருங்கள். அப்போதனையைத் தொடர்ந்து பின்பற்றினால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25 நமக்கு குமாரன் வாக்களித்த நித்திய ஜீவன் இதுதான்.

26 உங்களைத் தவறான வழிக்குள் நடத்த முயன்றுகொண்டிருக்கிற மக்களைக் குறித்தே இக்கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். 27 கிறிஸ்து உங்களுக்குக் கொடுத்த சிறப்பான அபிஷேகம் உங்களிடையே நிலைத்திருக்கிறது. எனவே உங்களுக்குப் போதிப்பதற்கு எந்த மனிதனும் தேவையில்லை. அவர் உங்களுக்குக் கொடுத்த அந்த அபிஷேகமானது எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிக்கிறது. அந்த அபிஷேகம் உண்மையானது. அது பொய்யானதன்று. எனவே அவரது அபிஷேகம் போதித்ததைப் போல கிறிஸ்துவில் வாழ்வதைத் தொடருங்கள்.

28 ஆம், எனது அன்பான பிள்ளைகளே, அவரில் வாழுங்கள். நாம் இதைச் செய்தால் கிறிஸ்து மீண்டும் வரும் நாளில் அச்சமற்றவர்களாக இருக்க முடியும். அவர் வரும் போது நாம் மறைந்துகொள்ளவோ, வெட்கமடையவோ தேவையில்லை. 29 கிறிஸ்து நீதியுள்ளவர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால் நீதியைச் செய்கின்ற எல்லா மக்களும் தேவனின் பிள்ளைகளே என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

நாம் தேவனின் பிள்ளைகள்

பிதா நம்மை மிகவும் நேசித்தார்! நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். ஆனால் உலகத்தின் மக்களோ நாம் தேவனின் பிள்ளைகள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. அதற்குக் காரணம் தேவனை அவர்கள் அறியாமல் இருப்பது ஆகும். அன்பான நண்பர்களே, நாம் இப்போது தேவனின் பிள்ளைகள். நாம் எதிர்காலத்தில் எவ்வாறு இருப்போம் என்பது இன்னும் நமக்குக் காட்டப்படவில்லை. கிறிஸ்து மீண்டும் வரும்போது நாம் அவரைப்போல இருப்போம் என்பதை நாம் அறிவோம். கிறிஸ்து தூய்மையானவர். கிறிஸ்துவில் இந்த நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்துவைப் போலவே தன்னைத் தூய்மையாக வைத்துக்கொள்கிறான்.

ஒருவன் பாவம் செய்யும்போது, அவன் தேவனின் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். ஆம், தேவனின் நியாயப்பிரமாணத்திற்கு எதிராக வாழ்வதைப்போன்றதே பாவம் செய்தலாகும். மனிதரின் பாவங்களை நீக்குவதற்காக கிறிஸ்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். கிறிஸ்துவில் பாவம் இல்லை. எனவே கிறிஸ்துவில் வாழ்கிற மனிதனும் பாவத்தைச் செய்வதில்லை. ஒருவன் தொடர்ந்து பாவம் செய்தால், அவன் கிறிஸ்துவை உண்மையாகவே புரிந்துகொண்டதில்லை என்றும், கிறிஸ்துவை அறிந்துகொண்டதே இல்லை. என்றுமே பொருள்படும்.

அன்பான பிள்ளைகளே, தவறான வழிக்குள் ஒருவன் உங்களை நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்து நீதியுள்ளவர். கிறிஸ்துவைப்போல சரியானவராக இருப்பதற்கு ஒரு மனிதன் சரியானதை மட்டுமே செய்யவேண்டும். துவக்கத்தலிருந்தே பிசாசு பாவம் செய்துகொண்டிருக்கிறான். பாவத்தைத் தொடர்ந்து செய்யும் மனிதன் பிசாசுக்குரியவன். தேவ குமாரன் பிசாசின் செயலை அழிக்கும்பொருட்டே வந்தார்.

தேவன் ஒருவனை அவரது பிள்ளையாக மாற்றும்போது அவன் பாவத்தைத் தொடர்ந்து செய்வதில்லை. ஏன்? தேவன் அவனுக்கு அளித்த புது வாழ்க்கை அவனில் நிலைத்திருக்கிறது. எனவே அம்மனிதன் பாவத்தில் தொடர முடியாது. ஏன்? அவன் தேவனின் பிள்ளையாக மாறியிருக்கிறான். 10 எனவே தேவனின் பிள்ளைகள் யாரென்பதையும் பிசாசின் பிள்ளைகள் யாரென்பதையும் நாம் பார்க்க முடியும். மேலும் தனது சகோதரனை நேசிக்காத ஒருவனும் தேவனின் பிள்ளை இல்லை.

நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும்

11 துவக்கத்திலிருந்தே நீங்கள் கேட்டிருக்கிற போதனை இது. நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். 12 காயீனைப்போல இராதீர்கள். காயீன் தீயவனுக்கு உரியவனாக இருந்தான். காயீன் அவனது சகோதரனைக் கொன்றான். ஆனால் காயீன் அவனது சகோதரனை ஏன் கொன்றான்? காயீன் செய்தவை தீயனவாக இருந்ததாலும், அவன் சகோதரன் செய்தவை நல்லனவாக இருந்ததாலுமே.

13 சகோதர சகோதரிகளே, இவ்வுலகத்தின் மக்கள் உங்களை வெறுக்கும்போது ஆச்சரியப்படாதீர்கள். 14 நாம் மரணத்தை விட்டு, ஜீவனுக்குள் வந்திருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். கிறிஸ்துவில் நமது சகோதரரையும் சகோதரிகளையும் நாம் நேசிப்பதால் இதனை அறிவோம். சகோதரனை நேசிக்காத மனிதன் இன்னும் மரணத்தில் இருக்கிறான். 15 தன் சகோதரனை வெறுக்கிற ஒருவன் கொலையாளி ஆவான். எந்த கொலையாளிக்கும் தேவன் தரும் நித்திய வாழ்வு இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

16 உண்மையான அன்பு எதுவென்பதை இவ்வாறே நாம் அறிவோம். இயேசு அவரது ஜீவனை நமக்காகக் கொடுத்தார். எனவே நாம் நமது ஜீவனைக் கிறிஸ்துவில் நமது சகோதரருக்காகவும் சகோதரிகளுக்காகவும் கொடுக்க வேண்டும். 17 தேவைப்பட்ட பொருள்கள் எல்லாவற்றையும் பெறுகிற அளவுக்குப் போதுமான செல்வந்தனாக ஒரு விசுவாசி இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஏழையானவனும் தேவையான பொருள்கள் கிடைக்காதவனுமாகிய கிறிஸ்துவில் சகோதரனை அவன் பார்க்கிறான். தேவையானவற்றைப் பெற்ற சகோதரன் ஏழை சகோதரனுக்கு உதவாமலிருந்தால் பயன் என்ன? அவன் இதயத்தில் தேவனின் அன்பு இல்லை. 18 எனது பிள்ளைகளே, நம் அன்பு வார்த்தைகளிலும் பேச்சிலும் மட்டும் இருக்கலாகாது. நம் அன்பு உண்மையான அன்பாக இருக்க வேண்டும். நாம் செய்கிற காரியங்களால் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

19-20 நாம் உண்மையின் வழியைச் சார்ந்தவர்கள் என்பதை இந்த வழியால் அறியலாம். நம்மைக் குற்றவாளிகளாக நமது இருதயங்களே உணர்த்தும்போது, நமது இருதயங்களைக் காட்டிலும் தேவன் உயர்ந்தவராக இருப்பதால் அவர் எல்லாவற்றையும் அறிவார்.

21 எனது அன்பான நண்பர்களே, நாம் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்பதை உணராவிட்டால் நாம் தேவனிடம் அச்சமற்றவர்களாக இருக்கமுடியும். 22 நாம் கேட்கிற பொருட்களை தேவன் கொடுப்பார். நாம் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாலும், தேவனை மகிழ்வூட்டுகிற காரியங்களைச் செய்வதாலும் இவற்றைப் பெறுகிறோம். 23 தேவன் கட்டளையிடுவது இதுவே. நாம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். இது தேவனின் கட்டளை ஆகும். 24 தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற மனிதன் தேவனில் வாழ்கிறான். தேவனும் அம்மனிதனில் வாழ்கிறார். தேவன் நம்மில் வாழ்கிறார் என்பதை நாம் எப்படி அறிகிறோம்? தேவன் நமக்களித்த ஆவியானவரால் நாம் அறிகிறோம்.

தவறான போதகர்களைக் குறித்து யோவானின் எச்சரிக்கை

எனது அன்பான நண்பர்களே, இவ்வுலகில் பல தவறான போதகர்கள் இப்போது வாழ்கிறார்கள். எனவே எல்லா ஆவிகளையும் நம்பாதீர்கள். தேவனிடமிருந்து வந்தவையா எனப் பார்ப்பதற்கு அந்த ஆவிகளை சோதித்துப் பாருங்கள். தேவனின் ஆவியை அறியும் வகை இதுவே ஆகும். ஓர் ஆவி, “இயேசு பூமிக்கு வந்து மனிதனான கிறிஸ்து என்பதை நான் நம்புகிறேன்” என்று கூறும். அந்த ஆவி தேவனிடமிருந்து வந்தது. இன்னோர் ஆவி இயேசுவைக் குறித்து இவ்வாறு கூற மறுக்கிறது, இது தேவனிடமிருந்து வந்த ஆவி அல்ல. போலி கிறிஸ்து வந்துகொண்டிருப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இப்போது போலி கிறிஸ்து ஏற்கெனவே உலகில் வந்திருக்கிறான்.

எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள். எனவே நீங்கள் அவர்களை வெற்றிகொண்டிருக்கிறீர்கள். ஏன்? உங்களில் இருப்பவர் உலகத்து மக்களில் இருப்பவனைக் காட்டிலும் பெரியவர். அம்மக்களோ உலகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் கூறுபவை உலகத்திற்குரியவை. அவர்கள் கூறுவதை உலகம் கேட்கிறது. ஆனால் நாம் தேவனுக்குரியவர்கள். எனவே தேவனை அறிந்த மக்கள் நம் பேச்சைக் கேட்கிறார்கள். ஆனால் தேவனிடமிருந்து வராத மக்கள் நம் பேச்சைக் கேட்பதில்லை. இப்படித் தான் உண்மையான ஆவியானவரையும், பொய்யான பிற ஆவிகளையும் தெரிந்துகொள்கிறோம்.

அன்பு தேவனிடமிருந்து வருகிறது

அன்பான நண்பர்களே, தேவனிடமிருந்து அன்பு வருவதால் நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். பிறரை நேசிக்கிறவன் தேவனின் பிள்ளையாயிருக்கிறான். எனவே பிறரை நேசிக்கிறவன் தேவனை அறிகிறான். பிறரை நேசிக்காதவன் தேவனை அறியமாட்டான். ஏனெனில் தேவன் அன்பாயிருக்கிறார். தேவன் அவரது ஒரே குமாரனை அவர் மூலமாக நமக்கு வாழ்வளிக்கும் பொருட்டு இவ்வுலகத்திற்கு அனுப்பினார். தேவன் தன் அன்பை இவ்விதம் நமக்குப் புலப்படுத்தினார். 10 தேவன் நம்மிடம் காட்டும் அன்பே உண்மையான அன்பாகும். நாம் தேவனிடம் காட்டும் அன்பல்ல. தேவன் நமது பாவங்களை நீக்கும் வழியாக அவரது குமாரனை அனுப்பினார்.

11 அன்பான நண்பர்களே, தேவன் நம்மை இவ்வளவு அதிகமாக நேசித்தார்! எனவே நாமும் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும். 12 எந்த மனிதனும் தேவனைக் கண்டதில்லை. ஆனால் நாம் ஒருவரையொருவர் நேசித்தால், அப்போது தேவன் நம்மில் வசிப்பார். நாம் ஒருவரையொருவர் நேசித்தால் அப்போது தேவனின் அன்பு அதன் குறிக்கோளை அடைகிறது. அது நம்மில் முழுமை பெறுகிறது.

13 நாம் தேவனிலும் தேவன் நம்மிலும் வாழ்வதை அறிந்திருக்கிறோம். தேவன் நமக்கு அவரது ஆவியானவரைக் கொடுத்ததால் நாம் இதனை அறிகிறோம். 14 தேவன் குமாரனை இவ்வுலகின் மீட்பராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம். இப்போது மக்களுக்கு அதையே நாம் கூறுகிறோம். 15 ஒரு மனிதன், “இயேசு தேவனின் குமாரன் என்பதை நம்புகிறேன்” என்று சொன்னால் அப்போது தேவன் அம்மனிதனில் வாழ்கிறார். அம்மனிதனும் தேவனில் வாழ்கிறான். 16 தேவன் நமக்காகக் கொண்டுள்ள அன்பை அதனால் அறிகிறோம். அந்த அன்பை நாம் நம்புகிறோம்.

தேவன் அன்பாக இருக்கிறார். அன்பில் வாழ்கிற மனிதன் தேவனில் வாழ்கிறான். தேவனும் அம்மனிதனில் வாழ்கிறார். 17 தேவனின் அன்பு நம்மில் முழுமையடைந்தால், தேவன் நம்மை நியாயந்தீர்க்கும் நாளில் நாம் அச்சமின்றி இருக்க முடியும். இவ்வுலகில் நாம் அவரைப்போல இருப்பதால், நாம் அச்சமில்லாமல் இருப்போம். 18 தேவனின் அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கே அச்சம் இருக்காது. ஏன்? தேவனின் முழுமையான அன்பு அச்சத்தை அகற்றுகிறது. தேவன் தரும் தண்டனையே ஒருவனை அச்சுறுத்துகிறது. எனவே அச்சமுள்ள மனிதனிடம் தேவனின் அன்பு முழுமை பெறவில்லை.

19 முதலில் தேவன் நம்மை நேசித்ததால், நாம் நேசிக்கிறோம். 20 ஒருவன், “நான் தேவனை நேசிக்கிறேன்” என்று கூறியும், அம்மனிதன் கிறிஸ்துவில் அவனது சகோதரனையோ, சகோதரியையோ வெறுத்தால் அப்போது அம்மனிதன் பொய்யன் ஆகிறான். அம்மனிதன் தான் காண்கிற சகோதரனை நேசிப்பதில்லை. எனவே அவன் ஒருபோதும் கண்டிராத தேவனை நேசிக்க இயலாது. 21 தேவனை நேசிக்கிற ஒருவன் அவனது சகோதரனையும் நேசிக்க வேண்டும் என்பதே அவர் நமக்கு வழங்கிய கட்டளை ஆகும்.

தேவனின் மக்கள் உலகை எதிர்த்து வெற்றி பெறுகிறார்கள்

இயேசுவே கிறிஸ்து என நம்புகிற மக்கள் தேவனின் பிள்ளைகளாவர். பிதாவை நேசிக்கிற மனிதன் தேவனின் பிள்ளைகளையும் நேசிக்கிறான். நாம் தேவனின் பிள்ளைகளை நேசிக்கிறோம் என்பதை எவ்வாறு அறிவோம்? தேவனை நேசிப்பதாலும், அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதினாலும் அறிகிறோம். தேவனை நேசித்தல் என்பது அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் என்று பொருள்படும். தேவனின் கட்டளைகள் நமக்கு மிகவும் கடினமானவையல்ல. ஏன்? தேவனின் பிள்ளையாகிய ஒவ்வொரு மனிதனும் உலகை எதிர்த்து வெல்கிற ஆற்றல் பெற்றிருக்கிறான். நமது விசுவாசமே உலகத்திற்கு எதிராக வென்றது. எனவே உலகை எதிர்த்து வெற்றியடைகிற மனிதன் யார்? இயேசு தேவனின் குமாரன் என்று நம்புகிற ஒருவனே ஆவான்.

தேவன் நமக்கு அவரது குமாரனைக் குறித்துக் கூறினார்

இயேசு கிறிஸ்துவே நம்மிடம் வந்தவர். இயேசு நீரோடும் இரத்தத்தோடும் வந்தவர். இயேசு நீரினால் மட்டுமே வரவில்லை. இல்லை, இயேசு நீரினாலும் இரத்தத்தினாலும் வந்தார். இது உண்மையென்று நமக்கு ஆவியானவர் கூறுகிறார். ஆவியானவர் உண்மையாவார். எனவே இயேசுவைக் குறித்து நமக்குக் கூறும் மூன்று சாட்சிகள் இருக்கின்றன. ஆவி, நீர், இரத்தம் இந்த மூன்று சாட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன.

சிலவற்றை உண்மையானவையாக மக்கள் கூறும்போது அவற்றை நம்புகிறோம். ஆனால் தேவன் சொல்வது அதைக் காட்டிலும் முக்கியமானது. இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். அவரது சொந்த குமாரனைக் குறித்து உண்மையை அவர் நமக்குக் கூறினார். 10 தேவனின் குமாரனை நம்புகிற மனிதன் தேவன் நமக்குக் கூறிய உண்மையை தனக்குள் கொண்டிருக்கிறான். தேவனை நம்பாத மனிதனோ தேவனைப் பொய்யராக்குகிறான். ஏன்? தேவன் அவரது குமாரனைக் குறித்துக் கூறிய செய்திகளை அம்மனிதன் நம்பவில்லை. 11 இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். தேவன் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்துள்ளார். மேலும் இந்த நித்திய ஜீவன் அவரது குமாரனில் உள்ளது. 12 குமாரனைக் கொண்டிருக்கிற மனிதனுக்கு உண்மையான ஜீவன் உண்டு. ஆனால் தேவனின் குமாரனைக் கொண்டிராத ஒருவன் அந்த ஜீவனைக் கொண்டிருப்பதில்லை.

நமக்கு இப்போது நித்திய ஜீவன் உண்டு

13 தேவனின் குமாரனை நம்புகிற மக்களாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். உங்களுக்கு இப்போது நித்திய ஜீவன் கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறியும்படியாக இதை எழுதுகிறேன். 14 எந்த ஐயமுமின்றி நாம் தேவனிடம் வரமுடியும். அவர் மனம் ஒத்துக்கொள்கிற எதனையும் நாம் தேவனிடம் வேண்டுகிறபோது, நாம் கேட்பதை தேவன் கவனிக்கிறார். 15 நாம் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் தேவன் கவனித்துக் கேட்கிறார். எனவே, நாம் தேவனிடமிருந்து கேட்கிற பொருட்களை அவர் நமக்குத் தருவார் என்பதை நாம் அறிகிறோம்.

16 கிறிஸ்துவில் சகோதரனோ சகோதரியோ நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவம் செய்வதை ஒருவன் பார்க்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பாவம் செய்கிற அந்த சகோதரன் அல்லது சகோதரிக்காக பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்போது தேவன் அச்சகோதரன் அல்லது சகோதரிக்கு ஜீவனைக் கொடுப்பார். நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவத்தைச் செய்கிற மக்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன். மரணத்திற்குள் வழி நடத்தும் பாவமுண்டு. அத்தகைய பாவத்திற்காக ஒரு மனிதன் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று நான் சொல்லவில்லை. 17 தவறு செய்வது எப்பொழுதும் பாவமாகும். ஆனால் நித்திய மரணத்திற்குள் வழி நடத்தாத பாவமுமுண்டு.

18 தேவனின் பிள்ளையாக மாறிய மனிதன் பாவம் செய்வதைத் தொடர்வதில்லை என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன், தேவனின் பிள்ளையைப் பாதுகாக்கிறார். தீயவனால் அம்மனிதனைத் துன்புறுத்த இயலாது. 19 நாம் தேவனுக்கு உரியவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் தீயவனோ உலகம் முழுவதையும் கட்டுப்படுத்துகிறான். 20 தேவகுமாரன் வந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன் நமக்குத் தெளிவை கொடுத்திருக்கிறார். உண்மையான தேவனை இப்போது நாம் அறியமுடியும். தேவனே உண்மையான ஒருவர். அந்த உண்மையான தேவனிடமும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமும் நமது ஜீவன் உள்ளது. அவரே உண்மையான தேவனும், அவரே நித்திய ஜீவனுமானவர். 21 ஆகையால், அன்பான மக்களே, விக்கிரகங்களாகிய போலிக் கடவுள்களை விட்டு நீங்கள் தூர விலகுங்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center