Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாக்கோபு 1-5

தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியனான யாக்கோபு, உலகமெங்கும் பரவியுள்ள பன்னிரண்டு குடிகளுக்கும் வாழ்த்துக்களோடு எழுதிக்கொள்வது:

விசுவாசமும் ஞானமும்

எனது சகோதர சகோதரிகளே, உங்களுக்குப் பலவகையான தொந்தரவுகள் இருக்கும். ஆனால் இவை நிகழும்போது இதற்காக மகிழ்ச்சி அடையுங்கள். ஏனென்றால், இத்தொந்தரவுகள் உங்களது விசுவாசத்தை சோதிக்கின்றன என நீங்கள் அறியுங்கள். இவை உங்களுக்குப் பொறுமையைத் தருகின்றது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொறுமை வெளிப்படக்கடவது. அப்பொறுமை உங்களை, நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல் முழுமையும் நிறைவும் உள்ளவர்களாக ஆக்கித் தன் பணியை நிறைவு செய்யும்.

ஆனால் உங்களில் எவருக்கேனும் ஞானம் வேண்டுமானால் நீங்கள் தேவனிடம்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். தேவன் தாராளமானவர். கேட்கின்ற ஒவ்வொருவருக்கும் கொடுப்பதில் அவர் மகிழ்வடைகிறார். ஆகையால் தேவன் உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பார். ஆனால் நீங்கள் தேவனைக் கேட்டுக்கொள்ளும்போது உங்களுக்கு அவர் மீது விசுவாசம் வேண்டும். தேவனை சந்தேகித்தல் கூடாது. சந்தேகப்படுகிறவன் கடலில் உள்ள அலைகளைப் போன்றவன். காற்று அந்த அலைகளை மேலும் கீழுமாகப் புரட்டும். 7-8 சந்தேகப்படுகிறவன் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட சிந்தனைகளை உடையவனாக இருக்கிறான். அவன் தான் செய்கின்ற எதைப் பற்றியும் தீர்மானிக்க முடியாதவன். இத்தகையவன் கர்த்தரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது.

உண்மையான செல்வம்

தேவன் தன்னை செல்வந்தனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு ஏழைச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். 10 மேலும் தேவன் தன்னைப் பணிவுள்ளவனாக ஆக்கியிருக்கிறார் என ஒரு பணக்காரச் சகோதரன் அல்லது சகோதரி பெருமைப்பட வேண்டும். எப்படி? “அவன் ஒரு காட்டுப் பூவைப்போல உதிர்ந்து போவான்” என்று தேவன் சொன்னார். 11 சூரியன் உதயமானதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடாகிறது. சூரிய வெப்பமானது செடிகளைக் காய வைக்கிறது. பூ உதிர்ந்துவிடுகின்றது. அந்த பூ அழகாக இருந்தது. ஆனால் அது வாடிப்போய் விடுகிறது. பணக்காரனும் அப்படித்தான். அவன் தன் வியாபாரத்துக்காகத் திட்டமிடும்போது இறந்துபோவான்.

தேவனிடமிருந்து சோதனைகள் வருவதில்லை

12 சோதிக்கப்படும்போது உறுதியாய் இருக்கிற மனிதன் மிகுந்த பாக்கியவான் ஆகிறான். ஏனெனில் தான் நேசிக்கிறவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த வாழ்வு என்னும் பரிசை, சோதனையில் தேறிவிடும்போது அவன் பெறுவான். 13 ஒரு மனிதன் சோதிக்கப்படும்போது, “அந்த சோதனை தேவனிடமிருந்து உண்டாகிறது” என்று அவன் சொல்லக் கூடாது. பொல்லாங்கினால் தேவன் சோதிக்கப்படுவதில்லை. மேலும் தேவன் ஒருவரையும் சோதிப்பதும் இல்லை. 14 அவனவன் தனது சுய ஆசைகளாலேயே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். 15 இந்த ஆசையானது கருத்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது. மேலும் பாவம் முழுமையடையும்போது மரணத்தைத் தருகிறது.

16 எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, ஏமாற்றப்படாமல் இருங்கள். 17 எல்லா நன்மைகளும் தேவனிடமிருந்தே வருகின்றன. ஒவ்வொரு முழுமையான வரமும் அவரிடமிருந்தே வருகின்றது. இவை, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றை உருவாக்கிய பிதாவிடமிருந்தே வருகின்றன. அவர் மாறுவதில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கிறார். 18 உண்மையான வார்த்தை மூலமே தேவன் நமக்கு வாழ்க்கையைத் தர முடிவு செய்துள்ளார். அவரால் படைக்கப்பட்ட அனைத்திலும் நம்மையே முக்கியமானவையாகக் கருதுகிறார்.

கவனிப்பதும் கீழ்ப்படிவதும்

19 எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, கேட்பதில் தீவிரமாகவும், பேசுவதில் பொறுமையாகவும், கோபிப்பதில் தாமதமாகவும் இருங்கள். 20 ஒருவனின் கோபமானது, அவனை தேவன் விரும்புகிற நல் வழியில் நடத்தாது. 21 எனவே உங்களைச் சுற்றி மிகுந்த அளவில் இருக்கிற எல்லாவிதமான அழுக்கையும், தீமையையும் நீங்கள் ஒழித்துவிட்டு உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற வல்ல போதனையைப் பணிவுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

22 தேவன் சொல்கிறபடி செய்கிறவர்களாக இருங்கள். போதனையைக் கேட்கிறவர்களாக மட்டுமே இருந்து தம்மைத் தாமே வஞ்சித்துக்கொள்கிறவர்களாக இருக்காதீர்கள். 23 ஒருவன் தேவனுடைய போதனையைக் கேட்டுவிட்டு எதுவும் செயல்படாமல் இருந்தால் அது ஒருவன் கண்ணாடியின் முன் நின்று தன் பிம்பத்தைத் தானே பார்த்துக்கொள்வது போன்றது ஆகும். 24 அவன் தன்னைத் தானே பார்த்து, அந்த இடம் விட்டுப் போனபிறகு தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். இதுவும் அதைப் போன்றதுதான். 25 முழுமையான தேவனுடைய சட்டத்தை ஆழமாக ஆராய்ந்து, கேட்டு மறந்துவிடுகிறவனாக இல்லாமல் தொடர்ந்து அதைப் படித்து அதன்படி நடக்கிறவன் தான் செய்வதில் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறான். தேவனுடைய சட்டம் மக்களை விடுதலையடையச் செய்கிறது.

தேவனை வழிபடுகிற உண்மையான வழி

26 தெய்வ பக்தி உள்ளவன் என ஒருவன் தன்னைப்பற்றி எண்ணிக்கொள்ளலாம். ஆனால் தன் நாக்கை அவன் அடக்கிக்கொள்ளவில்லையெனில், தன்னைத்தானே அவன் முட்டாளாக்கிக்கொள்கிறான். அவன் “தெய்வ பக்தி” பயனற்றதாக இருக்கின்றது. 27 பிதாவாகிய தேவன் தூய்மையானதும் குற்றமற்றதுமென எண்ணுகிற வழிபாடு என்பது உதவி தேவைப்படுகிற விதவைகள், அனாதைகள் ஆகியோர்மேல் அக்கறை கொள்வதும் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்வதுமே ஆகும்.

அனைவரையும் நேசியுங்கள்

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, நம் மகிமைமிக்க கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் விசுவாசிகளாயிருக்கும்போது, பாரபட்சமாக இருக்காதீர்கள். உதாரணமாக, ஒருவன் சிறந்த ஆடைகளையும் தங்க மோதிரங்களையும் அணிந்தவனாக உங்களிடம் வரலாம். இன்னொருவன் ஏழையாக பழைய அழுக்கான ஆடைகளை அணிந்தவனாக வரலாம். நீங்கள் செல்வந்தனிடம் அதிகம் அக்கறை காட்டுகிறீர்கள். “நல்ல ஆசனத்தில் அமருங்கள்” என்று கூறுகிறீர்கள். ஆனால் ஒரு ஏழை வந்தால் அவனை நிற்கவைக்கிறீர்கள். அல்லது தரையிலே உட்காரும்படி கூறுகிறீர்கள். இப்படிச் செய்யும்போது சிலர் மற்றவர்களைவிட மிகவும் முக்கியமானவர்கள் என்பது போல உங்களில் சிலரை நடத்துகிறீர்கள். அப்போது தகாத நோக்கங்கள் உள்ள நீதிபதியாக நீங்கள் ஆகிறீர்கள்.

அன்பான சகோதர சகோதரிகளே, உலகம் ஏழையாகப் பார்க்கிற ஒருவனை விசுவாசத்தில் செல்வந்தனாக தேவன் தேர்ந்தெடுத்தார் என்பது உண்மையில்லையா? தான் நேசிப்பவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த இராஜ்யத்தை அந்த ஏழை மக்கள் பெறுவார்கள். ஆனால் நீங்கள் ஏழைகளை மதிக்கவில்லை என்பதைப் புலப்படுத்தினீர்கள். செல்வந்தர்களே உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள் என்பது உண்மை இல்லையா? நீதிமன்றத்திற்கு உங்களை இழுப்பது அவர்கள் அல்லவா? நீங்கள் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறீர்களோ அந்த நல்ல பெயரைப் பழித்துப் பேசுகிறவர்கள் அவர்கள் அல்லவா?

ஒரு சட்டம் மற்ற சட்டங்களை ஆளுகின்றது. “நீ உன்னை நேசிப்பது போன்று மற்றவர்களையும் நேசிப்பாயாக” [a]என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்ட சட்டம்தான் மிகச் சிறந்த சட்டமாகும். நீ இச்சட்டத்தின்படி செய்தால் பிறகு நீ சரியானதைச் செய்கிறாய். ஆனால் நீ ஒருவனை மற்றவர்களை விட முக்கியமாக நடத்தினால் பிறகு நீ பாவம் செய்தவன் ஆகிறாய். நீ மிக உயர்ந்த தேவனின் சட்டத்தை உடைத்த குற்றவாளி ஆகிறாய்.

10 ஒருவன் தேவனின் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பவனாக இருக்கலாம், ஆனால் அவன் ஒரே ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு அவன் அனைத்துக் கட்டளைகளையும் உடைத்தவனாகிறான். 11 “விபசாரம் செய்யாமல் இருப்பாயாக” [b]என்று தேவன் கூறினார். அதோடு “கொலை செய்யாமல் இருப்பாயாக” [c]என்றும் கூறியுள்ளார். எனவே, நீ விபசாரம் செய்யாமல் இருந்து, கொலை மட்டும் செய்வாயானால், பிறகு நீ சட்டத்தில் கட்டளைகளை உடைத்தவன் ஆகிறாய்.

12 உங்களை விடுவிக்கிற சட்டத்தால் நியாயந்தீர்க்கப்பட்ட மக்களைப்போல நீங்கள் பேசவும் வாழவும் வேண்டும். 13 மற்ற மனிதர்கள் மீது கருணை காட்ட ஒருவன் தவறினால், அவனை நியாயந்தீர்க்கும்போது தேவன் அவன் மீது கருணை காட்டத் தவறுவார். மனிதர்கள் மீது கருணை காட்டுகிறவன் நியாயத்தீர்ப்பு நாளில் பயமின்றி நிற்க முடியும்.

விசுவாசமும் நற்செயல்களும்

14 எனது சகோதர சகோதரிகளே, ஒருவன் விசுவாசம் கொண்டவனாக தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டு காரியரீதியாக எதுவும் செய்யாமல் இருப்பானேயானால் அவனது விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை. அத்தகைய விசுவாசம் யாரையாவது இரட்சிக்குமா? 15 கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனோ சகோதரியோ உண்ண உணவும் உடுக்க உடையும் தேவைப்பட்டவராக இருக்கலாம். 16 நீங்கள் அவனிடம் “தேவன் உன்னோடு இருக்கிறார். இருக்க வசதியான இடமும், உண்ண நல்ல உணவும் உனக்குக் கிட்டும் என்று நம்புகிறேன்” என்று சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதனால் எந்தப் பயனுமில்லை. உங்கள் வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. 17 இது போலத்தான் விசுவாசமும், செயலின்மையால் இறந்து விடுகிறது.

18 ஒருவன், “உன்னிடம் விசுவாசம் உள்ளது. ஆனால் நான் செயல் புரிகிறேன். செயல்களற்ற உன் விசுவாசத்தை நீ காட்டு. நான் செய்கிற செயல்கள் மூலம் நான் என் விசுவாசத்தைக் காட்டுவேன்” என்று கூறலாம். 19 ஒரே ஒரு தேவன் தான் இருக்கிறார் என்று நீ நம்புகிறாயா? நல்லது. ஆனால் பிசாசுகள் கூட அதை நம்பி பயத்தால் நடுங்குகின்றன.

20 நீ புத்தியில்லாதவன். செயலற்ற விசுவாசம் என்பது உயிரற்றது என்பதை நீ அறியமாட்டாயா? 21 தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தில் காணிக்கையாக்கியபோது செயல்கள் மூலம் ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டான். 22 இதனால் நீ ஆபிரகாமின் விசுவாசமும் அவனது செயலும் ஒருங்கே செயல்பட்டதைக் காண இயலும். அவனது செயல்கள் அவனது விசுவாசத்தை முழுமையாக்கியது. 23 எனவே “ஆபிரகாம் தேவனை நம்பினான். அது அவனை நீதிமானாக்கியது” [d]என்கிற பகுதிக்கு இது முழுமையான பொருளைத் தருகிறது. மேலும் இதனால்தான் “தேவனின் நண்பன்” என்று அவன் அழைக்கப்பட்டான். 24 எனவே ஒருவன் வெறும் விசுவாசத்தால் மட்டுமல்ல, தான் செய்கிற காரியங்களால் நீதிமானாக்கப்படுகிறான் என்பதை நீங்கள் பார்க்கமுடியும்.

25 ராகாப் இன்னொரு எடுத்துக்காட்டாகும். அவள் ஒரு விலைமகள். ஆனால் அவள் தனது செயல்களால் தேவனுக்கு முன் நீதியுள்ளவளாக்கப்பட்டாள். அவள் தேவனுடைய பிள்ளைகளான ஒற்றர்களைத் தன் வீட்டிற்குள் வைத்திருந்து, அவர்கள் தப்பிச் செல்ல உதவினாள். [e]

26 எனவேதான் ஆவி இல்லாத ஓர் சரீரம் இறந்ததாயிருக்கிறதைப்போலச் செயல்கள் அற்ற விசுவாசம் கூட இறந்ததாயிருக்கிறது.

நாம் சொல்வதைக் கட்டுப்படுத்துதல்

எனது சகோதர சகோதரிகளே, உங்களில் பலர் போதகர்களாகக் கூடாது. ஏனென்றால் போதிப்பவர்களாகிய நாம் மற்றவர்ளைவிட அதிகமாக நியாயந்தீர்க்கப்படுவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நாமெல்லோரும் பல தவறுகளைச் செய்கிறோம். ஒருவன் எப்பொழுதும் தவறாகப் பேசாதவனாக இருந்தால் அவன் முழுமையானவனாகிறான். அவன் தனது முழு சரீரத்தையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றவனாகிறான். நாம் குதிரைகளை அடக்கவேண்டுமானால் அவற்றின் வாயிலே கடிவாளத்தைப் போடுகிறோம். அதன் மூலம் அதன் முழு சரீரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறோம். இது போலத் தான் கப்பலிலும். ஒரு கப்பல் மிகப் பெரியது; அது பெருங்காற்றால் தள்ளப்படுவது. ஆனால் சிறு சுக்கான் அந்த முழு கப்பலையும் இயக்கப் பயன்படுகின்றது. சுக்கானை இயக்குபவனுக்குக் கப்பலை எங்கே கொண்டு போவது என்று தெரியும். அவன் விரும்புகிற இடத்துக்கே கப்பல் போகும். நமது நாக்கும் அப்படித்தான். அது சரீரத்தின் ஒரு சிறிய உறுப்பு. ஆனால் அது பெரிய காரியங்களைச் செய்வதைப்பற்றிப் பெருமை பேசுகிறது.

மேலும் சிறிய ஒரு நெருப்புப் பொறி எப்படி ஒரு முழுக் காட்டையே எரித்துவிட முடியும் என்பதைப் பற்றி எண்ணுங்கள். மேலும் நாக்கு உண்மையில் நெருப்புப் பொறியாக இருக்கிறது. நம் சரீர உறுப்புகளின் நடுவில் தீமைகளை மூட்டிவிடுகிறது. நாக்கு தன் தீமையை சரீரம் முழுக்கப் பரப்பி நம் முழு வாழ்வையும் சிக்கலாக்கி வைக்கிறது. நரகத்திலுள்ள நெருப்பால் நாக்கு கொழுத்தப்படுகிறது.

மக்கள் எல்லாவகையான மிருகங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன ஆகியவற்றையெல்லாம் அடக்கும் வலிமை பெற்றவர்கள். ஆனால் நாவானது அடங்காததும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது. அந்த நாவால் தான் நம் பிதாவாகிய கர்த்தரைத் துதிக்கிறோம். அவர் சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர்களையும் பழிக்கிறோம். 10 துதித்தலும் பழித்தலும் ஒரே வாயில் இருந்துதான் வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, அப்படி நடக்கக் கூடாது. 11 ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து இனிப்பும், கசப்புமான நீர் சுரக்க முடியாது. 12 என் சகோதர சகோதரிகளே, அத்திமரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே உவர்ப்பான நீரூற்று இனிப்பான நீரைக் கொடுக்காது.

உண்மையான ஞானம்

13 உங்களில் ஞானமும், விவேகமும் பொருந்திய ஒருவன் இருந்தால் தன் நன்னடத்தையின் மூலம் பணிவோடு நற்காரியங்களைச் செய்து அதை அவன் புலப்படுத்தட்டும். 14 உங்கள் இதயத்தில் கசப்பான பொறாமையும் சுயநலமும் இருந்தால், உங்கள் ஞானத்தைப்பற்றி நீங்கள் பெருமைப்பட முடியாது. அப்பெருமைப் பாராட்டுதல் உண்மையை மறைக்கிற ஒரு பொய்யாகவே இருக்கும். 15 அவ்வித ஞானம் சொர்க்கத்தில் இருந்து வருவதில்லை. சுயநல வேட்கைகளிலிருந்தும், பேய்த்தனத்திலிருந்தும் உருவாகும் இந்த உலகத்திலிருந்து அது வருகிறது. 16 எங்கே பொறாமையும், சுயநலமும் உள்ளதோ அங்கே குழப்பமும் எல்லா வகைப் பாவங்களும் இருக்கும். 17 ஆனால் மேலிருந்து வருகிற ஞானம் முதலாவதாகத் தூய்மையாக இருக்கிறது. பிறகு சமாதானமாகவும், இணக்கமுள்ளதாகவும், எளிதில் மகிழ்ச்சிப்படுத்த முடிந்ததாகவும், கருணை நிறைந்ததாகவும் பல நற்செயல்களை உருவாக்குவதாகவும் இருக்கிறது. பாரபட்சமற்றதாகவும் போலித்தன்மையற்றதாகவும் கூட இருக்கிறது. 18 சமாதானமான வழியிலே சமாதானத்துக்காக உழைக்கிற மக்கள் நீதியாகிய வாழ்வின் பலனைப் பெறுகின்றார்கள்.

தேவனுக்கு உங்களையே கொடுங்கள்

உங்களுக்குள்ளே சண்டைகளும், வாக்குவாதங்களும் எங்கிருந்து வருகின்றன? உங்கள் சரீர உறுப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்ளக் காரணமாக இருக்கிற உங்கள் உள் ஆசைகளில் இருந்து இவை வரவில்லையா? நீங்கள் சிலவற்றை விரும்புகிறீர்கள். ஆனால் அவை கிடைப்பதில்லை. எனவே கொலைக்காரராகவும் பொறாமை உள்ளவர்களாகவும் மாறுகிறீர்கள். அப்படியும் நீங்கள் விரும்புகிறவற்றை அடைய முடியாமல் போகிறது. நீங்கள் அதனால் சண்டையும் சச்சரவும் செய்கிறீர்கள். நீங்கள் தேவனிடம் கேட்டுக்கொள்ளாததால் எதையும் பெறுவதில்லை. மேலும் தவறான நோக்கங்களோடு நீங்கள் கேட்பதால், நீங்கள் கேட்கிறபோது எதையும் பெறுவதில்லை. சொந்த இன்பத்தில் திளைக்கும் வகையில் நீங்கள் கேட்கிறீர்கள்.

தன் கணவனின் நம்பிக்கைக்கு உரியவளாக இல்லாத ஒரு பெண்ணைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். உலகின் பகுதியாக இருக்க விரும்புதல் என்பது தேவனை வெறுப்பது போல் என்று நீங்கள் அறியமாட்டீர்களா? அல்லது “தேவன் நமக்குள் வசிக்க வைத்த ஆவியானவர் நம்மில் வைராக்கியத்தோடு இருக்கிறார்” [f] என்று வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பதைப் பொருளற்றது என நீங்கள் எண்ணுகிறீர்களா? ஆனால் நம்மீதான அவரது கிருபை மிகவும் உயர்ந்தது. வேதவாக்கியத்தில் எழுதப்பட்டிருப்பது போல், “பெருமை பாராட்டுபவர்களுக்கு எதிராக தேவன் இருக்கிறார். ஆனால் அவர் பணிவான மக்களுக்குக் கிருபையை வழங்குகிறார்.” [g]

எனவே, உங்களையே தேவனிடம் ஒப்படையுங்கள். சாத்தானை எதிர்த்து நில்லுங்கள். அவன் ஓடிவிடுவான். தேவனை நெருங்கி வாருங்கள். தேவன் உங்களிடம் நெருங்கி வருவார். நீங்கள் பாவிகள். எனவே, உங்கள் வாழ்விலிருந்து பாவத்தை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் தேவனையும் உலகத்தையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முயல்கிறீர்கள். உங்கள் சிந்தனைகளைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சோகமாயிருங்கள்; வருத்தமாய் இருங்கள். உங்கள் சிரிப்பை அழுகையாக மாற்றுங்கள். உங்கள் மகிழ்ச்சியை சோகமாக மாற்றுங்கள். 10 தேவனின் முன் பணிவோடு வணங்குங்கள். அவர் உங்களை உயர்த்துவார்.

நீங்கள் நியாயாதிபதி அல்ல

11 சகோதர சகோதரிகளே, தீயகாரியங்களைப் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். கிறிஸ்துவில் உன் சகோதரனை அவமானப்படுத்துவது அல்லது அவனை நியாயம் தீர்ப்பது என்பது அவன் பின்பற்றுகிற சட்டத்தை அவமானப்படுத்துவதற்கு சமமாகும். உன் சகோதரனை நியாயம் தீர்த்தால் அவன் பின்பற்றிக்கொண்டிருந்த சட்டத்தையே நியாயம் தீர்க்கிறாய் என்பதே அதன் பொருளாகும். 12 சட்டத்தை உருவாக்கியவர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவர் தேவனாவார். சட்டத்தையே கேள்விக்குட்படுத்தினால், சட்டத்திற்குக் கட்டுப்பட்ட குடிமகனாக இருப்பதை விட்டு நீ நீதிபதியாகிறாய் என்பது பொருளாகும். சட்டத்தைக் காப்பாற்றவும், அழிக்கவும் அதிகாரம் கொண்டவர் அவர் ஒருவரே. எனவே உன் சகோதரனையும் சகோதரியையும் நீ தான் நியாயம் தீர்க்க வேண்டும் என நினைக்க நீ யார்?

தேவன் உன் வாழ்வைத் தீர்மானிக்கட்டும்

13 “இன்று அல்லது நாளை நாம் ஒரு நகரத்திற்குப் போவோம். அங்கே ஓராண்டு தங்குவோம். வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று உங்களில் சிலர் கூறுகிறார்கள். கவனியுங்கள். 14 "நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. உங்கள் வாழ்க்கை பனி புகையைப் போன்றது. கொஞ்ச காலத்திற்கே உங்களால் பார்க்கமுடியும். ஆனால் பிறகு மறைந்துவிடும் என்பதை நினைத்துப்பாருங்கள். 15 எனவே, "தேவனின் விருப்பம் இருந்தால் நாம் வாழ்வோம். இதை அல்லது அதைச் செய்வோம்" என்று எண்ணுங்கள். 16 ஆனால், இப்போது நீங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கிற பெரிய காரியங்கள் எல்லாவற்றைப்பற்றியும் பெருமை பாராட்டிக்கொள்கிறீர்கள். அது தவறாகும். 17 எனவே இப்போது கவனம் செலுத்துங்கள். ஒருவனுக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாமல் போனால், அவன் ஒரு பாவியாகிறான்.

சுய நலமிக்க பணக்காரர்கள் தண்டிக்கப்படுவர்

பணக்காரர்களே! கவனியுங்கள், கதறுங்கள், துக்கமாயிருங்கள். ஏனென்றால் பெரும் துன்பம் உங்களுக்கு வரப்போகிறது. உங்கள் செல்வம் அழுகியது, எதற்கும் பயனற்றது. உங்கள் ஆடைகள் செல்லரித்துப் போகும். உங்கள் தங்கமும் வெள்ளியும் துருப்பிடித்துப் போகும். அந்தத் துருவே நீங்கள் தவறானவர்கள் என்பதை நிரூபிக்கும். அது உங்கள் சரீரத்தை நெருப்பு போல எரித்துவிடும். உங்கள் கடைசி நாட்களில் செல்வத்தைச் சேர்த்தீர்கள். மக்கள் உங்கள் வயல்களில் வேலை செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் கூலி கொடுக்கவில்லை. அவர்கள் கூலிகளை நீங்கள் வைத்துக்கொண்டீர்கள். இப்போது அவர்கள் மீண்டும் உங்களைப் பார்த்து கூக்குரலிடுகிறார்கள். கூலிக்காரர்களின் கதறல்களை அனைத்து அதிகாரமுமுள்ள கர்த்தர் கேட்டார்.

பூமியில் உங்கள் வாழ்வானது செல்வமிக்கது. உங்கள் விருப்பத்தின்படி கிடைப்பதைக்கொண்டு திருப்தி அடைகிறீர்கள். உங்களை நீங்கள் கொழுக்க வைத்து வெட்டப்படப்போகிற மிருகங்களைப்போல் ஆகிறீர்கள். நல்ல மக்களுக்கு நீங்கள் இரக்கம் காட்டவில்லை. உங்களை எதிர்த்து நிற்காத நல்ல மக்களை நீங்கள் தண்டித்துக் கொலை செய்தீர்கள்.

பொறுமையாய் இருங்கள்

சகோதர சகோதரிகளே, பொறுமையாக இருங்கள். கர்த்தராகிய இயேசு வருவார். காலம் வரும்வரை பொறுமையாக இருங்கள். ஒரு விவசாயி தன் பயிர் வளர்ந்து அறுவடையாகும்வரை காத்திருக்கிறான். தன் பயிருக்காக வேண்டி முதல் மழைக்கும் இறுதி மழைக்கும் அவன் மிகப் பொறுமையாக காத்திருக்கிறான். நீங்களும் கூடப் பொறுமையாக இருக்க வேண்டும். நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். கர்த்தராகிய இயேசு சீக்கிரம் வருவார். சகோதர சகோதரிகளே, உங்களை நீங்களே குற்றவாளியாக நியாயம் தீர்த்துக்கொள்ளாதபடிக்கு ஒருவரை ஒருவர் எதிர்த்து புகார்கள் செய்வதை நிறுத்துங்கள். பாருங்கள், கதவுக்கு வெளியே நீதிபதி நின்றுகொண்டிருக்கிறார்.

10 துன்பப்படுதலுக்கும் பொறுமைக்கும் ஒரு உதாரணமாகக் கர்த்தரின் பெயரில் பேசிய தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். 11 சகித்துக்கொண்டதால் இப்போது நாம் அவர்களை “ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்று அழைக்கிறோம். நீங்கள் யோபின் பொறுமையைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவரது அனைத்துத் துன்பங்களுக்கும் பிறகு கர்த்தர் உதவினார். இது, தேவன் கிருபையும், இரக்கமும் உடையவர் என்பதைக் காட்டும்.

நீங்கள் சொல்வதைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்

12 எனது சகோதர சகோதரிகளே, இது மிகவும் முக்கியமானது. பரலோகம் அல்லது பூமியின் பெயரைப் பயன்படுத்தி ஆணையிடுவதை நிறுத்துங்கள். உண்மையில் எந்த ஆணையுமே இடாதீர்கள். உங்கள் “ஆமாம்” என்பது “ஆமாமாகவே” இருக்க வேண்டும். மேலும் உங்கள் “இல்லை” என்பது “இல்லை” யாகவே இருக்கவேண்டும். நீங்கள் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படாதபடிக்கு இதை மட்டுமே சொல்லுங்கள்.

பிரார்த்தனையின் அதிகாரம்

13 உங்களில் எவருக்கேனும் துன்பம் வந்தால் அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களில் யாரேனும் மகிழ்ச்சியுடன் இருந்தால் அவர்கள் பாடவேண்டும். 14 உங்களில் எவருக்கேனும் நோய் வந்தால் ஆலயத்தில் உள்ள மூப்பர்களை அழைக்கவேண்டும். அவர்கள் கர்த்தரின் பெயரால் எண்ணெயைத் தடவிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். 15 விசுவாசத்தோடு செய்யப்படுகிற எந்தப் பிரார்த்தனையும் பயன் தரும். அது நோயைக் குணமாக்கும்.

16 நீங்கள் செய்த தவறுகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு ஒருவருக்காக ஒருவர் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் தேவன் குணப்படுத்துவார். நல்லவர்கள் பிரார்த்தனை செய்தால் நன்மைகள் நிகழும். 17 எலியாவும் நம்மைப்போன்ற ஒருவன் தான். மழை பெய்யக் கூடாது என்று பிரார்த்தனை செய்தான். எனவே மூன்றரை வருடங்களாக மழை இல்லாமல் இருந்தது. மழை வேண்டுமென எலியா பிரார்த்தனை செய்தான். 18 எலியாவின் பிரார்த்தனைக்குப்பின் மழை வந்தது. பயிர்கள் செழித்தன.

ஆன்மாவைக் காப்பாற்றுதல்

19 எனது சகோதர சகோதரிகளே, உங்களில் ஒருவன் உண்மையிலிருந்து விலகிப் போகலாம். இன்னொருவன் அவனைத் திரும்பவும் அழைத்து வரலாம். 20 இதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். தவறான வழியிலிருந்து ஒரு பாவியைத் திருப்புகிற ஒருவன் அம்மனிதனின் ஆன்மாவைக் காப்பாற்றிப் பல பாவங்களை அழிக்கிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center