Beginning
விசுவாசம்
11 நாம் நம்புகிறவற்றின் மீது கொண்டுள்ள உறுதிதான் விசுவாசம் ஆகும். நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் கூட உண்மையான ஒன்றை நம்புவது தான் விசுவாசம். 2 முன்பு வாழ்ந்தவர்களை தேவன் பெரிதும் விரும்பினார். ஏனென்றால் அவர்கள் இது போன்ற விசுவாசம் கொண்டவர்களாய் இருந்தார்கள்.
3 தேவன் தமது ஆணையால் இந்த முழு உலகையும் படைத்தார் என்று நாம் நம்ப விசுவாசம் உதவுகிறது. அதாவது நாம் பார்க்கின்ற பொருட்கள் எல்லாம் பார்க்கப்படாத ஒன்றால் உருவாக்கப்பட்டதை உணர்ந்துகொள்கிறோம்.
4 காயீனும் ஆபேலும் தேவனுக்குப் பலி கொடுத்தார்கள். ஆனால் ஆபேலின் பலி, அவனது விசுவாசம் காரணமாக உயர்வாகக் கருதப்பட்டது. தேவனும் அதையே விரும்பி ஏற்றுக்கொண்டார். ஆகவே அவனை நல்லவன் என்று அழைத்தார். அவன் இறந்து போனான். எனினும் அவன் தன் விசுவாசத்தின் வழியே இன்னும் பேசிக்கொண்டிருக்கிறான்.
5 ஏனோக்கு இறக்கவில்லை. இந்த பூமியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான். அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் தேவனுக்கு விருப்பமானவனாக இருந்தான். தேவன் அவனைத் தன்னிடம் எடுத்துக்கொண்டார். அதனால் மக்கள் அதன் பிறகு அவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. இது அவனது விசுவாசத்தினாலேயே ஆயிற்று. 6 விசுவாசம் இல்லாமல் எவனும் தேவனுக்கு விருப்பமானவனாக இருக்கமுடியாது. தேவனிடத்தில் வருகிறவன் அவர் உண்மையாகவே இருக்கிறார் என நம்பிக்கை கொள்கிறான். அதோடு தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுப்பார் என்றும் நம்பிக்கை கொள்ளவேண்டும்.
7 நோவா, இதுவரை அவன் காணாததைப் பற்றி தேவனால் எச்சரிக்கை செய்யப்பட்டான். ஆனால் நோவா தேவன் மீது விசுவாசமும், மரியாதையும் கொண்டிருந்தான். எனவே அவன் பெரிய கப்பலைச் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொண்டான். தனது விசுவாசத்தின் மூலமாக இந்த உலகம் தவறானது என்பதை நோவா நிரூபித்தான். இதனால் விசுவாசத்தின் வழியாக தேவனுக்கு முன் நீதிமான்களாகக் கருதப்பட்ட சிலருள் ஒருவனானான்.
8 தேவன் ஆபிரகாமை அழைத்தார். அவர் வாக்களித்தப்படி ஒரு இடத்துக்குப் பயணம் போகச் சொன்னார். அவனுக்கு அந்த இடம் எங்கே உள்ளது என்று தெரியாது. எனினும் அவனுக்கு விசுவாசம் இருந்ததால், தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவர் சொன்னபடி பயணம் செய்தான். 9 தேவன் தருவதாக வாக்களித்த நாட்டில் ஆபிரகாம் வாழ்ந்தான். அங்கே ஒரு பரதேசியைப் போல அலைந்தான். எனினும் அவன் விசுவாசம் வைத்திருந்தான். ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோரோடு கூடாரத்தில் குடியிருந்தான். அவர்களும் தேவனுடைய வாக்குறுதியைப் பெற்றார்கள். 10 ஆபிரகாம், உண்மையான அஸ்திபாரம் இடப்பட்ட தேவனுடைய நகரத்துக்காகக் [a] காத்திருந்தான்.
11 ஆபிரகாம் மிகவும் முதியவன். குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு இல்லாதவன். சாராளும் அப்படியே. ஆபிரகாம் தேவனிடம் விசுவாசம் வைத்ததால் அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. 12 அவன் ஏறக்குறைய இறந்து போகின்றவனைப் போன்று இருந்தான். ஆனால் அவனிடமிருந்து முதுமைப் பருவத்தில் ஒரு பரம்பரை தோன்றி வானத்து நட்சத்திரங்களைப் போன்று விளங்கியது. கடற்கரையில் உள்ள மணலைப்போன்று ஏராளமான மக்கள் அவனிடமிருந்து வெளிப்பட்டனர்.
13 இந்த மாபெரும் மனிதர்கள் அனைவரும் இறுதிவரை தங்கள் விசுவாசத்துடனேயே வாழ்ந்தனர். இவர்கள் வாக்களிக்கப்பட்டதைப் பெற்றுக்கொள்ளாமல், வெகுதூரத்திலே அவற்றைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டனர். பூலோகத்தில் தாம் அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும் இருந்ததை அவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொண்டனர். 14 அவர்கள் தம் சொந்த தேசத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையே இத்தகைய விஷயங்களைப் பேசுகிறவர்கள் உணர்த்துகிறார்கள். 15 அவர்கள் தாங்கள் விட்டுவந்த நாட்டைப் பற்றி நினைத்திருந்தார்களேயானால் அவர்கள் அதற்குத் திரும்பிப் போக சமயம் கிடைத்திருக்குமே. 16 ஆனால் அவர்கள் பரலோகம் என்னும் சிறப்பான நாட்டிற்குப் போகக் காத்திருக்கிறார்கள். எனவே தேவன் தன்னை அவர்களது தேவன் என்று அழைத்துக்கொள்வதில் வெட்கப்படுவதில்லை. தேவன் அவர்களுக்காக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்.
17-18 தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை சோதித்தார். ஆபிரகாமிடம் ஈசாக்கைப் பலி கொடுக்கும்படி தேவன் சொன்னார். ஆபிரகாமும் விசுவாசத்தின் காரணமாக அந்தக் கட்டளையைப் பின்பற்றினான், ஏனென்றால் ஏற்கெனவே தேவன் ஆபிரகாமுக்கு வாக்களித்துள்ளார். “ஈசாக்கு மூலம் உன் பரம்பரை வளரும்” என்றும் கூறியுள்ளார். ஆனாலும் ஒரே மகனான அந்த ஈசாக்கைப் பலிகொடுக்க ஆபிரகாம் முன் வந்தான். 19 தேவன் மக்களை மரணத்திலிருந்து எழுப்புவார் என ஆபிரகாம் நம்பினான். உண்மையில் அதுபோன்றே ஆபிரகாம் அவன் மகனைக் கொல்லாதபடி தேவன் தடுத்துவிட்டார். இதுவும் மரணத்திலிருந்து எழுப்பியது போலாயிற்று.
20 யாக்கோபையும் ஏசாவையும் ஈசாக்கு ஆசீர்வதித்தான். ஈசாக்கு இதனை விசுவாசத்தின் அடிப்டையில் செய்தான். 21 யாக்கோபு யோசேப்பின் மகன்களில் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். யாக்கோபு தான் இறந்துகொண்டிருக்கும்போது இதனைச் செய்தான். அவன் தனது கோலின் முனையில் சாய்ந்துகொண்டு தொழுதான். யாக்கோபு இப்படிச் செய்ததற்கும் அவனது விசுவாசமே காரணமாகும்.
22 யோசேப்பு இறந்துகொண்டிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டுப் போவதைப் பற்றி பேசினான். அவன் இதனை விசுவாசத்தால் சொன்னான். தனது சரீரத்தை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் மக்களிடம் சொன்னான்.
23 மோசே பிறந்த பிறகு, அவன் அழகாக இருந்ததை அவன் பெற்றோர்கள் கண்டு மூன்று மாத காலத்திற்கு மறைத்து வைத்தார்கள். விசுவாசத்தின் அடிப்படையிலேயே இதைச் செய்தனர். அரச கட்டளைக்குப் பயப்படாமல் இதை செய்தனர்.
24 மோசே வளர்ந்து பெரியவன் ஆனான். பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்படுவதை மறுத்தான். 25 பாவத்துக்குரிய தற்காலிக சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட தேவனுடய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே அவன் தேர்ந்தெடுத்தான். 26 எகிப்தின் கருவூலத்தைவிட கிறிஸ்துவுக்காகத் தாங்கிக்கொண்ட பாடுகளை மதிப்புமிக்கதாக அவன் நினைத்தான். ஏனெனில் வர இருக்கிற பலனுக்காக அவன் பார்த்திருந்தான்.
27 மோசே எகிப்திலிருந்து வெளியேறினான். தன் விசுவாசத்தின் அடிப்படையில் அப்படிச் செய்தான். அவன் அரசனின் கோபத்துக்கும் அஞ்சவில்லை. அவன் தொடர்ந்து உறுதியாக இருந்தான். ஒருவராலும் பார்க்க இயலாத தேவனை அவனால் பார்க்க முடிந்தது. 28 அவன் பஸ்காவைத் தயார் செய்தான். கதவின் மீது இரத்தத்தைப் பூசினான். யூதமக்களின் முதல் ஆண் குழந்தையை மரண தூதன் [b] கொல்லாதபடிக்கு இதைச் செய்தான். மோசே இதனை விசுவாசத்தோடு செய்தான்.
29 மோசே தன் மக்களை அழைத்துக்கொண்டு போனான். அப்போது செங்கடல் காய்ந்த தரையைப் போலாயிற்று. அவர்களின் விசுவாசமே இதற்குக் காரணமாகும். எகிப்தியர்களும் அவ்வாறே கடலைக் கடக்க முனைந்து அமிழ்ந்துபோனார்கள்.
30 எரிகோவின் சுவர்கள், தேவனது மக்களின் விசுவாசத்தினால் விழுந்துபோனது. அவர்கள் ஏழு நாட்கள் அந்தச் சுவர்களைச் சுற்றி வந்தனர். அப்புறம் அச்சுவர்கள் விழுந்தன.
31 ராகாப் என்னும் விலைமாதும் இஸ்ரவேல் ஒற்றர்களை நண்பர்களைப்போல வரவேற்றாள். அவளது விசுவாசத்தின் காரணமாகக் கீழ்ப்படியாதவர்கள் கொல்லப்பட்டபோது அவள் தன் வீட்டாருடன் சேதமடையாமல் தப்பினாள்.
32 பின்னும் வேறு எடுத்துக்காட்டுகளை நான் சொல்லவேண்டுமா! கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும் தீர்க்கதரிசிகளையும் குறித்து விளக்கிச் சொல்லக் காலம் போதாது. 33 விசுவாசத்தாலேயே அவர்கள் அரசுகளை வெற்றிகொண்டார்கள். நீதியை வலியுறுத்தினார்கள். தேவனுடைய வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டார்கள். சிலர் சிங்கங்களின் வாய்களை மூடினார்கள். 34 சிலர் நெருப்பின் உக்கிரத்தைக் குறைத்தார்கள். வாளின் சாவிலிருந்து தப்பினார்கள். பலவீனத்திலிருந்து அவர்கள் பலம் பெற்று அந்நியப் படைகளைத் தோற்கடித்து யுத்தத்தில் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். 35 இறந்துபோன தங்களுடையவர்களை பெண்கள் மீண்டும் அடைந்தார்கள். மற்றவர்கள் வாதைக்குள்ளானபோதும் விடுபட மறுத்தார்கள். மரணத்திலிருந்து ஒரு சிறந்த வாழ்விற்கென உயிரோடு எழுப்பப்படுவதற்காக இதனைச் செய்தார்கள். 36 வேறு சிலர் கேலிசெய்யப்பட்டனர்; அடிக்கப்பட்டனர்; கட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். 37 சிலர் கல்லால் எறியப்பட்டார்கள்; வாள்களினால் இரண்டு துண்டாகக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். சிலர் செம்மறியாட்டுத் தோலையும், வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு திரிந்து ஏழ்மையையும், துன்பத்தையும், கசப்புகளையும் அனுபவித்தனர். 38 உலகம் அந்த உத்தமர்களுக்கு உகந்ததாக இல்லை. அவர்கள் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தனர். மலைக் குகைகளிலும் பூமியில் உள்ள பொந்துகளிலும் வாழ்ந்தார்கள்.
39 தம் விசுவாசத்தாலேயே அவர்கள் புகழப்படுகின்றனர். ஆனால் இவர்களில் எவரும் தேவனுடைய வாக்குறுதியை அடையவில்லை. 40 தேவன் நமக்குச் சிறந்த சிலவற்றைத் தரத் திட்டமிட்டிருந்தார். பிறகு நம்மோடு சேர்ந்து மட்டுமே அவர்களும் முழுமைபடுத்தப்படுவார்கள்.
இயேசுவின் முன்மாதிரியை நாமும் பின்பற்றுவோம்
12 நம்மைச் சுற்றிலும் விசுவாசமுடையவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். விசுவாசம் என்றால் என்ன பொருள் என்று அவர்களது வாழ்க்கை நமக்குக் கூறுகின்றது. நாமும் அவர்களைப்போல் வாழவேண்டும். நம் முன் நடக்கும் பந்தயத்தில் நாமும் பங்கெடுத்து ஓடவேண்டும். நம் முயற்சியில் இருந்து நாம் என்றும் பின்வாங்கக் கூடாது. நம்மைத் தடுத்து நிறுத்துகிற எதையும் நமது வாழ்விலிருந்து தூக்கி எறிய வேண்டும். நம்மைப் பற்றுகிற பாவங்களையும் விலக்கிவிட வேண்டும். 2 நாம் இயேசுவை முன்மாதிரியாகக்கொண்டு பின்பற்ற வேண்டும். நம் விசுவாசத்தின் தலைவரே இயேசுதான். நம் விசுவாசத்தை அவர் முழுமையாக்குகிறார். அவர் சிலுவையில் துன்புற்று மரணம் அடைந்தார். ஆனால் சிலுவையின் அவமானத்தைப் பொருட்படுத்தாமல் சிலுவையின் துன்பங்களை அவர் ஏற்றுக்கொண்டார். தேவன் அவருக்கு முன்னால் வைக்கப்போகிற மகிழ்ச்சிக்காகவே இத்தனையையும் ஏற்றுக்கொண்டார். எனவே இப்போது அவர் தேவனுடைய வலது புறத்தில் வீற்றிருக்கிறார். 3 இயேசுவைப் பற்றி நினைத்துப்பாருங்கள். பாவிகள் அவருக்கு எதிராகச் செயல்புரிந்தபோது அவர் அதனைப் பொறுமையாக ஏற்றுக்கொண்டார். இயேசு செய்தது போலவே நீங்களும் பொறுமையோடு சோர்ந்து போகாமல் இருங்கள்.
தேவன் பிதாவைப் போன்றவர்
4 நீங்கள் பாவத்திற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் போராட்டம் இன்னும் நீங்கள் கொல்லப்படுகிற அளவுக்கு வன்மையாகவில்லை. 5 நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். அவர் உங்கள் ஆறுதலுக்காகவே பேசுகிறார். நீங்கள் அந்த வார்த்தைகளை மறந்துவிட்டீர்கள்.
“என் மகனே! கர்த்தர் உன்னைத் தண்டிக்கும்போது அதனை அற்பமாக எண்ணாதே.
அவர் உன்னைத் திருத்தும்போது உன் முயற்சியைக் கைவிட்டு விடாதே.
6 தம் நேசத்துக்குரிய ஒவ்வொருவரையும் கர்த்தர் தண்டிக்கிறார்.
தம் மக்களாக ஏற்றுக்கொள்கின்ற எல்லோரையும் தண்டித்துத் திருத்துகிறார்.” (A)
7 எனவே ஒரு பிதாவின் தண்டனை என்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு தந்தை தன் மகனைத் தண்டிப்பது போன்றே தேவன் உன்னையும் தண்டித்திருக்கிறார். எல்லாப் பிள்ளைகளுமே தம் தந்தைகளால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். 8 நீங்கள் எந்த நாளிலும் தண்டிக்கப்படாவிட்டால் உண்மையில் தேவனுடைய பிள்ளைகள் ஆகவில்லை என்று பொருள். 9 இங்கே பூமியில் தண்டிக்கிற தந்தைகளையே நாம் கொண்டிருக்கிறோம். அதற்காக அவர்களை நாம் மதிக்கிறோம். ஆகவே நம் ஆன்மீகத் தந்தைக்கு மிக அதிகமாக அடங்கி நடக்கவேண்டும். நாம் இதனைச் செய்தால் நமக்கு வாழ்வு உண்டு. 10 உலகில் உள்ள தந்தைகளின் தண்டனை கொஞ்ச காலத்திற்குரியது. அவர்கள் தங்களின் சிந்தனைக்குச் சரியாகத் தோன்றுகிறதையே செய்கிறார்கள். ஆனால் தேவன் நமக்கு உதவி செய்வதற்காகவே தண்டிக்கிறார். எனவே நாமும் அவரைப் போன்று பரிசுத்தமாகலாம். 11 எந்தத் தண்டனையும் அந்நேரத்தில் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பதில்லை! ஆனால், பிறகு அதில் பழகியவர்கள், நேர்மையான வாழ்விலிருந்து வருகிற சமாதானத்தை அனுபவிப்பார்கள்.
எவ்வாறு வாழ்வது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள்
12 நீங்கள் பலவீனமாகிவிட்டீர்கள். மீண்டும் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள். 13 சரியான வழியில் நடவுங்கள், அப்போதுதான் இரட்சிக்கப்படுவீர்கள். உங்கள் பலவீனம் எந்த இழப்புக்கும் காரணமாகக் கூடாது.
14 எல்லோரோடும் சமாதானமாய் இருக்க முயலுங்கள். பரிசுத்தமான வாழ்க்கையை வாழ முயலுங்கள். ஏனெனில், அது இல்லாமல் யாராலும் கர்த்தரைக் காணமுடியாது. 15 ஒருவனும் தேவனுடைய கிருபையைத் தவறவிடாதபடிக்கும் மக்களுக்கு விஷமூட்ட வளரும் விஷ வேரைப் போல உங்கள் குழுவுக்கு யாராலும் தொல்லை வராதபடிக்கும் உறுதி செய்யுங்கள். 16 எவரும் பாலியல் பாவத்தைச் செய்யாதபடி எச்சரிக்கையாயிருங்கள். எவரும் ஏசாவைப்போல் ஆகாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏசா தன் குடும்பத்தின் மூத்த மகன். தன் தந்தையின் சொத்தில் அவனுக்கு இரட்டைப் பங்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஏசா தன் வாரிசுரிமையைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஒரு வேளை உணவுக்காக அவற்றை விற்றுவிட்டான். 17 பிறகு ஏசா ஆசியைப்பெற விரும்பிய போதிலும், கண்ணீர்விட்டுக் கதறிக் கெஞ்சினாலும் கூட அவனால் அதைப் பெற முடியவில்லை.ஏனெனில் மனமாறுதலுக்கு வழி காணாமல் போனான்.
18 நீங்கள் புதிய இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களால் தொடமுடிகிற இடமில்லை இது. நெருப்பு எரிவதும், அடர்த்தியான மேகங்களாலும் இருட்டாலும், புயலாலும் சூழ்ந்த மலையில்லை இது. 19 எக்காள சத்தத்தைக் கேட்டோ அல்லது கட்டளையிடும் ஒரு குரலைக் கேட்டோ நீங்கள் அந்த இடத்துக்கு வரவில்லை. வார்த்தைகளின் சத்தமும் எழும்பாது. அந்த சத்தத்தைக் கேட்டவர்கள் மீண்டும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். 20 ஏனென்றால் “ஒரு மிருகமாகிலும் அம்மலையைத் தொட்டால் கற்களால் அடிபட்டுச் சாக வேண்டியதிருக்கும்” [c]என்ற கட்டளையைக் கேட்க அவர்கள் விரும்பவில்லை. 21 “நான் பயத்தால் நடுங்குகிறேன்” [d]என்று மோசேயும் சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது.
22 ஆனால் நீங்கள் அது போன்ற இடத்துக்கு வரவில்லை. இந்தப் புதிய இடத்தின் பெயர் சீயோன் மலை. தேவன் வசிக்கும் நகரத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது பரலோகமான எருசலேம். ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் மகிழ்ச்சியோடு கூடுகிற இடம். 23 இங்கே பரலோகத்தில் பெயரெழுதப்பட்ட முதற் பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபை உள்ளது. எல்லோரையும் நியாயம் தீர்க்கிற நீதிபதியாக தேவன் இருக்கிறார். முழுமையாக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகள் உள்ளன. 24 இயேசுவிடம் வந்திருக்கிறீர்கள். அவரே தம் மக்களுக்கு தேவனிடமிருந்து புதிய உடன்படிக்கையைக் கொண்டு வந்தவர். ஆபேலின் இரத்தம் பேசியதைவிட நன்மைகளைப் பேசுகிற, தெளிக்கப்பட்ட இயேசுவின் இரத்தமிருக்கும் இடத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்.
25 எச்சரிக்கையாய் இருங்கள். தேவன் பேசும்போது கவனிக்கத் தவறாதீர்கள். பூமியில் எச்சரிக்கப்பட்டபோதும் கூட இஸ்ரவேல் மக்கள் இதுபோலத்தான் கவனிக்க மறுத்தார்கள். அதனால் அவர்களால் தப்பிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது பரலோகத்திலிருந்து தேவன் பேசுகிறார். அதைக் கவனிக்க மறுக்கிறவர்கள் முன்பைவிட மோசமான நிலையை அடைவார்கள். 26 அவருடைய பேச்சு அப்போது பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “இன்னொருமுறை நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைப்பேன்” [e]என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். 27 “இன்னொரு முறை” என்பது என்னால் உருவாக்கப்பட்டவை எல்லாம் அழிக்கப்படும் எனப் பொருள்படும். அவை அசையத்தக்க பொருட்களே. அசைக்கக் கூடாத பொருட்களே என்றும் நிலைத்திருக்கும்.
28 அசைக்கப்பட முடியாத ஓர் இராஜ்யத்தை நாம் பெற்றுக்கொண்டிருப்பதால் நாம் நன்றி சொல்லவேண்டும். மிகவும் அச்சத்தோடும் மரியாதையோடும் கூடிய ஒப்புக்கொள்ளத்தக்க ஒரு வழியில் நாம் தேவனை வழிபடவேண்டும். 29 ஏனென்றால் நமது தேவன் அனைத்தையும் அழிக்கும் நெருப்பைப் போன்றவர்.
தேவனை பிரியப்படுத்தும் வழிபாடு
13 கிறிஸ்துவுக்குள் நீங்கள் சகோதர சகோதரிகளாவீர்கள். தொடர்ந்து ஒருவரை ஒருவர் நேசியுங்கள். 2 மக்களை உங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்யுங்கள். இதனால் சிலர் அறியாமலேயே தேவ தூதர்களையும் உபசரிப்பதுண்டு. 3 நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோல் சிறையிலுள்ள மக்களை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்களே துன்பமுறுவதைப்போல், துன்பமுற்றுக் கொண்டிருப்பவர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள்.
4 திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார். 5 பண ஆசையில் இருந்து உனது வாழ்வை விலக்கிவை. உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைந்துகொள். தேவன்,
“நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்.
நான் உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கூறியிருக்கிறார். (B)
6 எனவே,
“கர்த்தர் எனக்கு உதவுபவர்.
நான் அச்சப்படத் தேவையில்லை.
எவரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாக நீங்கள் சொல்லலாம். (C)
7 உங்கள் தலைவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் தேவனுடைய செய்தியைக் கற்றுத்தந்தார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்ந்து மடிந்தார்கள் என எண்ணுங்கள். அவர்களின் விசுவாசத்தைக் கடைப்பிடியுங்கள். 8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், நாளையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பவர். 9 எல்லா வகையான தவறான உபதேசங்களும் உங்களைத் தவறான வழியில் செலுத்தாதபடிக்குக் கவனமாக இருங்கள். உங்கள் இதயம் தேவனுடைய கிருபையால் பலம் பெறட்டும். அது உணவு பற்றிய சட்டங்களால் நிறையாமல் இருக்கட்டும். அது உங்களுக்குப் பயன் தராது.
10 பரிசுத்த கூடாரத்தில் சேவை செய்கிற அந்த யூத ஆசாரியர்கள் இருந்து சாப்பிடும் உரிமையற்ற ஒரு பலி நம்மிடம் உண்டு. 11 பிரதான ஆசாரியர் மிருக இரத்தத்தை எடுத்துக்கொண்டு மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்லுகிறார். அவர் பாவங்களுக்காக அதனைச் செலுத்துகிறார். ஆனால் அந்த மிருகங்களின் சரீரம் வெளியே எரிக்கப்படுகிறது. 12 எனவே, இயேசுவும் நகரத்திற்கு வெளியே துன்பப்பட்டார். அவர் தன் இரத்தத்தைப் பாவத்துக்காகவே சிந்தினார். தன் மக்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காக இரத்தம் சிந்தி மரித்தார். 13 எனவே, நாம் கூடாரத்துக்கு வெளியே சென்று அவருடைய அவமானத்தில் பகிர்ந்துகொள்வோம். இயேசுவுக்கு நேர்ந்த அதே அவமானத்தை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 14 இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு நகரம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வரப்போகிற என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற நகரத்திற்காகக் காத்திருக்கிறோம். 15 எனவே, அவர் மூலமாக நம் தினசரி துதி காணிக்கையை நாம் தேவனுக்கு வழங்குவோம். அது அவர் பெயரைத் துதிக்கும் உதடுகளின் கனியாகும். 16 மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், பகிர்ந்துகொள்ளவும் மறக்காதீர்கள். இவையே தேவன் விரும்பும் பலியாகும்.
17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்களின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். அவர்கள் உங்கள் மேல் பொறுப்புள்ளவர்கள். அவர்கள் உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்கள் துக்கத்தோடு அல்ல சந்தோஷத்தோடு அவற்றைச் செய்பவர்கள். நீங்கள் அவர்களுக்குப் பணியாமல் அவர்களின் பணியை கடினப்படுத்தினால் அது எவ்வகையிலும் உங்களுக்கு உதவாது.
18 எங்களுக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். சுத்தமான மனசாட்சி உடையவர்களாய் நாங்கள் இருக்கிறோம். என்றும், எப்போதும் நல்ல செயல்களையே செய்ய விரும்புகிறோம் என்றும் நாங்கள் உறுதி கூறுகிறோம். 19 உங்களிடத்தில் நான் மிக விரைவில் வருவதற்கு வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் மற்ற அனைத்தையும் விட இதனையே பெரிதும் விரும்புகிறேன்.
20-21 சமாதானத்தின் தேவன் எல்லா நன்மைகளையும் உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். எனவே அவர் விரும்புகிறபடி நீங்கள் செய்யுங்கள். தேவன் ஒருவரே தம் மந்தையின் பெரிய மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினால் எழுப்பினார். அவர் விரும்புவதை நீங்கள் செய்யும்படிக்கு ஒவ்வொரு விதமான நன்மையையும் செய்யும் திறமையை உங்களுக்கு வழங்கவேண்டும் என நான் வேண்டுகிறேன். இயேசுவுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
22 என் சகோதர சகோதரிகளே! உங்களை உற்சாகப்படுத்த நான் எழுதிய சிறு செய்தியை நீங்கள் பொறுமையுடன் கேட்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவை உங்களை பலப்படுத்தும். இது நீண்ட நிருபம் அன்று. 23 நம் சகோதரன் தீமோத்தேயு சிறைக்கு வெளியே உள்ளான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவன் மிக விரைவில் வந்து சேர்ந்தால், நாங்கள் இருவருமே சேர்ந்து உங்களைப் பார்ப்போம்.
24 உங்கள் தலைவர்களுக்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லுங்கள். இத்தாலியில் உள்ள தேவனுடைய பிள்ளைகள் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.
25 உங்கள் அனைவரோடும் தேனுடைய கிருபை இருப்பதாக.
2008 by World Bible Translation Center