Beginning
ஆசாரியன் மெல்கிசேதேக்
7 மெல்கிசேதேக் சாலேமின் அரசன். அவன் மிக உயர்ந்த தேவனுடைய ஆசாரியனுமாகவும் இருந்தான். அரசர்களை வென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமை மெல்கிசேதேக் சந்தித்து ஆசிவழங்கினான். 2 அதன் பிறகு, பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் அவனுக்குக் கொடுத்தான்.
(சாலேமின் அரசனான மெல்கிசேதேக் என்ற பெயருக்கு இரு பொருள் உண்டு. மெல்கிசேதேக் என்பதற்கு “நன்மையின் அரசன்” என்ற பொருளும் “சலேமின் அரசன்” என்பதற்கு “சமாதானத்தின் அரசன்” என்ற பொருளும் உண்டு.) 3 இவனது தாய் தந்தையரைப் பற்றி எவருக்கும் தெரியாது. எங்கிருந்து வந்தான் என்றும் தெரியாது. எங்கே பிறந்தான், எப்போது இறந்தான் என்றும் ஒருவருக்கும் தெரியாது. இவன் தேவனுடைய குமாரனைப் போன்றவன். அவன் என்றென்றைக்கும் ஆசாரியனாகவே இருக்கிறான்.
4 போரில் கைப்பற்றிய பொருள்களில் பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் இவனுக்குக் கொடுத்ததின் மூலம் இவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். 5 இப்போது லேவியின் வாரிசுதாரர்களாக உள்ள ஆசாரியர்கள் இஸ்ரவேலைச் சேர்ந்த மக்களிடமிருந்து பத்தில் ஒருபாகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென சட்டம் கூறுகிறது. அதாவது ஆபிரகாமின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் கூட மக்களிடமிருந்து இந்த பத்தில் ஒரு பங்கை அவர்கள் வசூலிக்கிறார்கள். 6 இப்பொழுது மெல்கிசேதேக் ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு தேவனுடைய விசேஷ வாக்குறுதிகளை பெற்ற ஆபிரகாமை ஆசீர்வதித்தான். 7 மிகப் பெரிய மனிதர்களே சிறியவர்களை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
8 ஒரு புறத்தில் வாழ்ந்து மடிகிற ஆசாரியர்களால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. இன்னொரு புறத்தில் இன்னும் உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படுகிற மெல்கிசேதேக்கால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. 9 உண்மையில், ஆபிரகாமின் மூலமாக லேவியே பத்தில் ஒரு பாகத்தை மெல்கிசேதேக்குக்கு கொடுத்தான் என்று கூட நீங்கள் சொல்லக் கூடும். 10 ஏன்? ஏனெனில் மெல்கிசேதேக் ஆபிரகாமைச் சந்தித்தபோது லேவி இன்னும் பிறந்திருக்கவில்லை. தன் முன்னோரான ஆபிரகாமின் சரீரத்திலேயே இன்னும் அவன் இருந்தான்.
11 லேவி பரம்பரை ஆசாரிய முறைமைகளை அடிப்படையாய்க் கொண்ட சட்டத்தை [a] இஸ்ரவேல் மக்கள் பெற்றார்கள். ஆனால் இம்முறைமையினால் மக்கள் ஆன்மீக முதிர்ச்சியை அடைய முடியவில்லை, ஆரோனைப் போல அல்லாமல் மெல்கிசேதேக் போன்ற வேறொரு ஆசாரியன் அவசியமானார். 12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டால் நியாயப்பிரமாணமும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். 13 எப்போதும் ஒரு ஆசாரியனாக சேவை செய்திராத ஒரு குடும்பக் குழுவினைச் சேர்ந்த ஒரு மனிதரைப் பற்றி இப்பகுதிகள் பேசுகின்றன. 14 நமது கர்த்தர் யூதாவின் குடும்பக் குழுவிலிருந்து வந்தவர் என்பது தெளிவு. மோசேயும் இந்தக் குடும்பக் குழுவிலிருந்து வரும் ஆசாரியர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.
மெல்கிசேதேக்கைப் போன்று இயேசுவும் ஒரு ஆசாரியர்
15 மெல்கிசேதேக் போன்ற ஒரு வித்தியாசமான ஆசாரியர் வருவார் என்பதால் இது மேலும் தெளிவாகிறது. 16 மாம்சீகமான பரம்பரை பற்றிய சில சட்டங்களினால் ஆசாரியனாகாமல் அழிக்க முடியாத ஜீவனுக்குரிய வல்லமையால் அவர் ஆசாரியனாகிறார். 17 “நீர் மெல்கிசேதேக்கைப் போன்று என்றென்றைக்கும் உரிய ஆசாரியராக இருக்கிறீர்” [b]என்று வேதவாக்கியங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.
18 ஆகவே அந்தப் பழைய சட்டம் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில் பழைய சட்டம் பலவீனமானதும், பயனற்றதுமாய் இருந்தது. 19 மோசேயின் நியாயப்பிரமாணமானது எதையும் முழுமை ஆக்கவில்லை. எனவே சிறிதளவேனும் நல்ல நம்பிக்கை நமக்கு கொடுக்கப்பட்டது. மேலும் அதன் மூலமாகத்தான் தேவனுக்கு அருகில் வருகிறோம்.
20 இது மிக முக்கியமானது. மற்றவர்களை ஆசாரியர்களாக்கியபோது ஆணை எதுவும் கொடுக்கப்படவில்லை. 21 ஆனால் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக்கியபோது தேவன் பிரமாணம் கொடுத்தார்.
“‘நீரே என்றென்றைக்கும் ஆசாரியனாக இருக்கிறீர்’
என்று கர்த்தர் ஆணையிட்டுரைத்தார்.
மேலும் அவர் தன் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்” (A)
என்றும் அவர் சொன்னார்.
22 மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு [c] இயேசுவே ஒரு நிரூபணமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள் ஆகும்.
23 ஏனைய ஆசாரியர்கள் இறந்தார்கள். எனவே நிறைய ஆசாரியர்கள் இருக்க வேண்டும். 24 இயேசுவே என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடியவர். எனவே மாறா ஆசாரியத்துவம் கொண்டுள்ளார். 25 எனவே தன் மூலமாக தேவனிடம் வருகிறவர்களை இயேசுவால் முழுமையாக இரட்சிக்க முடியும். ஏனெனில் நமக்காகப் பரிந்து பேச இயேசு எப்பொழுதும் வாழ்கிறார்.
26 ஆகவே, இயேசுவே நமக்குத் தேவையான சிறந்த பிரதான ஆசாரியர். அவர் பரிசுத்தமானவர். அவரிடம் எவ்விதப் பாவங்களும் இல்லை. அவர் குற்றமில்லாதவர். பாவிகளால் பாதிக்கப்படாதவர். இவர் பரலோகத்தில் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார். 27 இவர் மற்ற ஆசாரியர்களைப் போன்றவரல்லர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பலிசெலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் முதலாவது தங்கள் பாவங்களுக்காகவும், பின்பு மக்களின் பாவங்களுக்காகவும் பலி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இவரோ அவ்வாறில்லை. அத்தகைய தேவையும் இவருக்கில்லை. இவர் தன்னையே பலிகொடுத்திருக்கிறார். அதுவே என்றென்றைக்கும் போதுமானது. 28 மோசேயின் சட்டம் மனிதர்களை ஆசாரியர்களாக நியமிக்கிறது. அம்மனிதர்களுக்கு பலவீனமிருந்தது. ஆனால் ஆணை அடங்கிய அந்தப் பகுதி சட்டத்திற்குப் பிறகு வருகிறது. மேலும் அது என்றென்றைக்குமாக பரிசுத்தமாக்கப்பட்ட தேவனுடைய குமாரனான இயேசுவைப் பிரதான ஆசாரியராக நியமித்தது.
இயேசுவே நமது பிரதான ஆசாரியர்
8 பரலோகத்தில் தேவனுடைய சிம்மாசனத்திற்கு வலதுபக்கமாய் வீற்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார் என்பதையே நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். 2 மேலும், பரிசுத்த இடத்திலும், மனிதர்களால் அல்லாமல் தேவனால் ஸ்தாபிக்கப்பட்ட பரிசுத்தக் கூடாரத்திலும் அவர் ஆசாரியராக சேவை செய்துகொண்டிருக்கிறார்.
3 காணிக்கைகளையும் பலிகளையும் கொடுக்கும் பொருட்டு ஒரு பிரதான ஆசாரியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆதலால் வழங்குவதற்கு ஏதோ ஒன்று இயேசுவுக்கும் தேவையாயிருக்கிறது. 4 நமது பிரதான ஆசாரியனும் இப்போது பூமியில் இருந்திருந்தால், ஆசாரியனாக இருக்கமாட்டார். ஏனெனில் சட்டம் விவரிக்கிற காணிக்கைகளை வழங்குகிற ஆசாரியர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள். 5 அவர்கள் புரியும் சேவையானது பரலோகத்தில் உள்ள சேவையின் சாயலாகவும், நிழலாகவும் மட்டுமே இருக்கிறது. அதனால்தான் பரிசுத்தக் கூடாரத்தை மோசே ஸ்தாபிக்கப் போகும்போது தேவன் எச்சரித்தார். “மலையிலே உனக்கு நான் காட்டிய மாதிரியின்படியே நீ ஒவ்வொன்றையும் செய்ய உறுதியாய் இரு” என்று தேவன் சொன்னார். 6 மிக உயர்ந்த கடமையானது இயேசுவுக்குத் தரப்பட்டது என்பதே இதன் பொருள் ஆகும். மேலும் இதே முறையில் அவர் நடுவராக இருக்கிற உடன்படிக்கையும் உயர்வானதாகும். ஏனெனில், நல்ல வாக்குறுதிகளால் இந்த உடன்படிக்கை நிறுவப்பட்டது.
7 பழைய உடன்படிக்கையில் எவ்விதக் குறையும் இல்லாவிட்டால் இரண்டாவது உடன்படிக்கைக்குத் தேவையில்லாமல் போயிருக்கும். 8 ஆனால் தேவன் மக்களிடம் சில பிழைகளைக் கண்டுபிடித்து அவர்களிடம்,
“இஸ்ரவேல் [d] மக்களோடும் யூதா மக்களோடும்
ஒரு புதிய உடன்படிக்கையை நான் ஏற்படுத்தும் காலம் வந்துகொண்டிருக்கிறது.
9 அவர்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று எகிப்துக்கு வெளியே வழி நடத்தியபோது அவர்களுடைய முன்னோர்களோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கைபோல் அது இருக்காது.
அது வித்தியாசமாக இருக்கும், ஏனெனில், அந்த உடன்படிக்கைக்கு அவர்கள்
உண்மையுள்ளவர்களாகத் தொடர்ந்து இருக்கவில்லை என்பதால் நான் அவர்களிடமிருந்து விலகினேன்.”
அக்காரியங்களைக் கர்த்தர் சொன்னார்.
10 “அந்த நாட்களுக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களோடு நான் செய்துகொள்ளும் புதிய உடன்படிக்கையாகும் இது.
நான் எனது சட்டங்களை அவர்கள் மனங்களில் பதித்து அவர்கள் இதயங்களின் மேல் எழுதுவேன்.
நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.
அவர்கள் எனது பிள்ளைகளாக இருப்பார்கள்.
11 அதற்குப் பின்பு கூடவாழும் குடிமகனுக்கோ அல்லது தேசத்தவனுக்கோ கர்த்தரை அறிந்துகொள் எனப் போதிக்கவேண்டிய அவசியம் ஒருவனுக்கும் இருக்காது.
ஏனெனில் சிறியவன் முதற் கொண்டு பெரியவன் வரைக்கும் அவர்கள் எல்லாரும் என்னை அறிவார்கள்.
12 ஏனெனில் நான் அவர்கள் எனக்கெதிராகச் செய்த தவறுகளை மன்னித்து விடுவேன்.
அவர்களின் பாவங்களை இனிமேல் நினையாது இருப்பேன்.” (B)
13 தேவன் இதனைப் புதிய உடன்படிக்கை என்று அழைத்தபோது முதல் உடன்படிக்கையை பழசாக்கினார். இப்போது பழமையானதும் நாள்பட்டிருக்கிறதுமான அந்த உடன்படிக்கை விரைவில் மறைந்துபோகும்.
பழைய உடன்படிக்கையின்படி வழிபாடு
9 முதலாம் உடன்படிக்கையானது வழிபாட்டிற்கான விதிகளை உடையது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிபாட்டிற்கான இடத்தை உடையது. 2 இந்த இடம் ஒரு கூடாரத்துக்கு உள்ளே இருந்தது. கூடாரத்திற்குள் முன் பகுதி உள்ள இடம் பரிசுத்தமான இடம் என அழைக்கப்பட்டது. அந்தப் பரிசுத்தமான இடத்தில் ஒரு குத்துவிளக்கும், ஒரு மேஜையும், தேவனுக்குப் படைக்கப்பட்ட சிறப்பான அப்பங்களும் இருந்தன. 3 இரண்டாம் திரைக்குப் பின்னே மிகப் பரிசுத்தமானது என அழைக்கப்படும் இடம் இருந்தது. 4 அதில் பொன்னால் செய்த தூபகலசமும் பழைய உடன்படிக்கை வைக்கப்பட்ட பரிசுத்தமான பெட்டியும் [e] இருந்தன. அப்பெட்டி தங்கத் தகட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பெட்டிக்குள் மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரமும் துளிர்த்த இலைகளையுடைய ஆரோனின் கைத்தடியும் இருந்தன. மேலும் பத்துக் கட்டளைகள் பொறித்த உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. 5 அப்பெட்டியின் மேல் கிருபையாகிய இருக்கையை மறைத்தபடி தேவனுடைய விசேஷ தூதர்கள் இருந்தார்கள். (இப்பொழுது இவற்றைப் பற்றிய உண்மையான விபரங்களைச் சொல்லக் காலம் போதாது.)
6 இவ்விதத்தில் எல்லாப் பொருள்களும் ஆயத்தப்படுத்தப்பட்ட பிறகு, ஆராதனை சேவையை செய்யும் பொருட்டு ஆசாரியர்கள் முதலாம் பரிசுத்தக் கூடாரத்தில் நித்தமும் செல்லத் தொடங்குவார்கள். 7 ஆனால் பிரதான ஆசாரியர் மட்டுமே மிகப் பரிசுத்தமான இரண்டாம் அறைக்குள் பலியின் இரத்தத்தைச் சிந்தி நுழைய முடியும். அவர் முதலில் தான் செய்த பாவங்களுக்காகக் காணிக்கை செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அறியாமையால் மக்கள் செய்த பாவங்களுக்காக அவர் காணிக்கைகளை வழங்கவேண்டும்.
8 முதலாம் கூடாரம் நிற்கும் வரையிலும் மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போகும் வழியானது மூடப்பட்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்தவே பரிசுத்த ஆவியானவர் இவ்விரண்டு அறைகளையும் பயன்படுத்துகிறார். 9 எல்லாமே நிகழ் காலத்தின் ஒரு அடையாளமானது. தாம் செலுத்தும் காணிக்கையாலும், பலிகளாலும் வழிபடுகிறவனின் மனசாட்சியானது முழுமைப்படுத்தப்படுவதில்லை. 10 ஏனெனில் உண்ணுதல், பருகுதல், சடங்குக் குளியல்கள் ஆகிய புற விஷயங்களைப் பற்றிய காணிக்கைகளும் பலிகளுமாகவே இருக்கின்றன. இவ்விஷயங்கள் தேவனுடைய புதிய வழி உண்டாகும் வரைக்கும் பயன்படுகின்றன.
புதிய உடன்படிக்கையின்படி வழிபாடு
11 மேலும் இப்போது வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியனாகக் கிறிஸ்து வந்திருக்கிறார். (சாதாரண கூடாரத்தின் வழியே அவர் வரவில்லை). மனிதக் கைகளால் உருவாக்கப்படாத உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான கூடாரத்தின் வழியே வந்தார். அக்கூடாரமானது தேவன் உருவாக்கிய இவ்வுலகத்தின் பகுதியல்ல. 12 மேலும் மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் இயேசு நுழைந்தபோது, வெள்ளாட்டுக்கடாக்கள் மற்றும் காளைகளின் இரத்தத்தை அவர் பயன்படுத்தவில்லை. மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் நுழைய அவர் தன் சொந்த இரத்தத்தையே பயன்படுத்தினார். எல்லா காலத்திற்கும் போதுமென்கிற அளவிற்கு ஒரே ஒருமுறை தான் அவர் அதற்குள் சென்றார். இவ்வழியில் நமக்கு அவர் நித்திய விடுதலையைப் பெற்றுத்தந்தார்.
13 வெள்ளாட்டுக்கடா காளை ஆகியவற்றின் இரத்தமும் தீட்டுப்பட்ட மக்கள் மீது தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும் அவர்களைப் பரிசுத்தமாக்கிப் புறப்பரிசுத்தம் உடையவர்களாக்க முடியும். 14 இது உண்மை எனில், கிறிஸ்துவின் இரத்தம் இதிலும் மிக்க வல்லமை உள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனுக்கு இயேசு தன்னைத் தானே ஒரு முழுமையான பலியாக வழங்கினார். ஆகவே நமக்கு ஆன்மீக மரணத்தைக் கொண்டுவருகிற தீய செயல்களில் இருந்து அவர் இரத்தமானது நம் இதயத்தை சுத்தமாக்கும். ஜீவனுள்ள தேவனை வழிபடும் வண்ணம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம்.
15 கிறிஸ்து இறந்ததால், புதிய உடன்படிக்கையின் [f] நடுவராக அவர் ஆனார். இப்போது முதல் உடன்படிக்கையின் கீழ் செய்த தவறுகளில் இருந்து மக்களை விடுவிக்கும் கிறிஸ்துவின் மரணம் ஒன்றிருந்தது. அதனால், அழைக்கப்பட்டவர்கள் என்றென்றும் உரிமைகளைப் பெறுவர்.
16 ஒரு மனிதன் இறக்கும்போது அவன் தன் மரண சாசனத்தை விட்டுச்செல்கிறான். ஆனால் அம்மரண சாசனத்தை எழுதியவன் இறந்துபோனான் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும். 17 மரண சாசனத்தை எழுதியவன் வாழ்கிறான் என்றால் அந்த சாசனத்திற்குப் பொருள் இல்லை. அந்த சாசனத்தை அவன் இறந்த பிறகே பயன்படுத்த முடியும். 18 தேவனுக்கும் அவரது மக்களுக்கும் ஏற்பட்ட முதல் உடன்படிக்கையும் இது போலாயிற்று. இதுவும் இரத்தமில்லாமல் நன்மையடையவில்லை. 19 முதலில் மோசே சட்டத்தில் உள்ள ஒவ்வொரு கட்டளையையும் அறிவித்தான். பிறகு இளங்காளைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு மயிரோடும் ஈசோப்போடும் [g] கூட எடுத்து சட்டப் புத்தகத்தின் மேலும் மக்கள் மீதும் தெளிக்கப் பயன்படுத்தினான். 20 “தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுதான்” என்று மோசே கூறினான். 21 இவ்வாறு பரிசுத்தக் கூடாரத்தின் மேலும் மோசே இரத்தத்தை தெளித்தான். அத்துடன் வழிபாட்டிற்குரிய அனைத்துப் பொருட்களின் மீதும் தெளித்தான். 22 அனைத்தையும் இரத்தத்தால் சுத்தப்படுத்த முடியும் என்று சட்டம் சொல்கிறது. இரத்தம் இல்லாமல் எவ்வித பாவங்களும் மன்னிக்கப்படமாட்டாது.
கிறிஸ்துவின் பலி பாவங்களை நீக்குகிறது
23 எனவே பரலோகத்தில் உள்ளவற்றின் சாயலாக உள்ள இவற்றை விலங்குகளைப் பலி கொடுத்து சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் பரலோகத்தில் உள்ளவற்றிற்கு இதைவிடச் சிறப்பான பலிகள் அவசியம் ஆகும். 24 கிறிஸ்து மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போனார். ஆனால் உண்மையானதின் சாயலாக மனிதக் கைகளால் செய்யப்பட்ட இடத்திற்குப் போகவில்லை. கிறிஸ்து பரலோகத்திற்கே சென்றார். இப்போது அங்கே நமக்காக தேவனுக்கு முன் தோன்றுகிறார்.
25 ஒவ்வொரு ஆண்டும் தனக்குச் சொந்தமற்ற இரத்தத்தோடு பிரதான ஆசாரியன் மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் கிறிஸ்து தன்னையே வழங்கிக்கொள்ள வேண்டியதில்லை. 26 அப்படியானால் உலகம் உண்டானது முதல் அவர் அநேகந்தரம் இதுபோல் பாடுபட வேண்டியது இருந்திருக்கும். அவர் தம்மை தாமே பலியிட வேண்டியிருந்தது. அதனால் அவர் இந்தக் கடைசி காலத்தில் ஒரே ஒருதரம் தம்மைப் பலியிட்டார். இதன் மூலம் அவர் அனைவரது பாவங்களையும் நீக்கிவிட்டார்.
27 ஒவ்வொரு மனிதனும் ஒருமுறை மட்டுமே சாகிறான். அதன் பிறகு நியாயந்தீர்க்கப்படுகிறான். 28 ஆகையால் ஒவ்வொருவரின் பாவங்களையும் தீர்க்கும்படி கிறிஸ்து ஒருமுறை மரித்தார். மேலும் கிறிஸ்து இரண்டாம் முறையும் வருவார். பாவங்களைத் தீர்க்கும்படி அல்ல. தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அளிக்க வருவார்.
கிறிஸ்துவின் பலி நம்மை முழுமையாக்குகிறது
10 நியாயப்பிரமாணமானது எதிர்காலத்தில் நேரிடும் நன்மைகளைப் பற்றிய முழுமையற்ற ஒரு சித்திரத்தையே கொடுக்கிறது. அது தெளிவற்றதாக உள்ளது. அது உண்மையான விஷயங்களின் முழுச் சித்திரம் அல்ல. அது மக்களிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான பலிகளைக் கொடுக்குமாறு கூறுகிறது. தேவனை வழிபட வருகிறவர்களும் அவ்வாறே கொடுத்து வருகின்றனர். நியாயப்பிரமாணம் அவர்களை என்றும் முழுமையானவர்களாக ஆக்காது. 2 சட்டம் மனிதர்களை பூரணப் படுத்துமானால், வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிற பலிகளும் நின்றிருக்கும். ஏனெனில் வழிபடுகிறவர்கள் ஏற்கெனவே பரிசுத்தப்படுத்தப்பட்டு அவர்கள் தம் பாவங்களுக்காகக் குற்ற உணர்ச்சி உடையவர்களாக இருக்கமாட்டார்கள். 3 ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிற அப்பலிகள் அவர்களின் பாவங்களையே அவர்களுக்கு நினைவுறுத்துகின்றன. 4 ஏனென்றால் வெள்ளாடு, கன்று குட்டி போன்றவற்றின் இரத்தம் நமது பாவங்களை விலக்காது.
5 ஆகவே கிறிஸ்து இந்த உலகத்துக்கு வரும்போது, அவர்,
“நீர் காணிக்கைகளையும் பலிகளையும் விரும்புவதில்லை.
ஆனால் எனக்காக ஒரு சரீரத்தை ஆயத்தம் செய்தீர்.
6 மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகள் உம்மைச் சந்தோஷப்படுத்தாது.
பாவநிவாரண பலிகளும் உம்மைத் திருப்திப்படுத்தாது.
7 பிறகு நான், ‘தேவனே! இதோ இருக்கிறேன்.
உம்முடைய விருப்பத்தை நிறைவேற்ற வந்திருக்கிறேன்.
நியாயப்பிரமாண புத்தகத்தில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது’ என்றேன்.” (C)
8 “நீர் பலிகளையும் காணிக்கைகளையும் விரும்புவதில்லை. மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகளாலும் பாவநிவாரணபலிகளாலும் நீர் திருப்தியுறவில்லை” (இந்தப் பலிகள் எல்லாம் கட்டளையிடப்பட்டிருந்தாலும் கூட) என்று முதலில் அவர் சொன்னார். 9 பிறகு கிறிஸ்து, “தேவனே! நான் இதோ இருக்கிறேன். உம்முடைய விருப்பப்படி செய்வதற்காக வந்திருக்கிறேன்” என்றார். ஆகவே தேவன் முதலாவதுள்ள பலி முறைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து தன் புதிய வழிகளைத் தொடங்கிவிட்டார். 10 இயேசு கிறிஸ்து தேவனுடைய விருப்பப்படியே காரியங்களைச் செய்தார். அதனால் அவரது இறப்பாகிய பலி மூலம் நம்மைப் பரிசுத்தமாக்கினார். அவர் இப்பலியை என்றென்றைக்கும் போதுமான வகையில் ஒருமுறை செய்து முடித்தார்.
11 ஒவ்வொரு நாளும் ஆசாரியர்கள் நின்றுகொண்டு தமது மதச் சடங்குகளைச் செய்கின்றனர். அவர்கள் மீண்டும் மீண்டும் அதே பலிகளைக் கொடுக்கின்றனர். ஆனால் அப்பலிகள் ஒருபோதும் பாவங்களை நீக்காது. 12 ஆனால் கிறிஸ்து மக்களின் பாவங்களைப் போக்க ஒரே ஒரு முறைதான் தன்னைப் பலிகொடுத்தார். என்றென்றைக்கும் அது போதுமானதாயிற்று. அவர் தேவனுடைய வலதுபுறத்தில் அமர்ந்துகொண்டார். 13 அவர் இப்பொழுது தனது எதிரிகளைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டுவரக் காத்துக்கொண்டிருக்கிறார். 14 ஒரே ஒரு பலியின் மூலம் அவர் என்றென்றைக்கும் தம் மக்களை முழுமையாக்கிவிட்டார். அம்மக்களே பரிசுத்தமாக்கப்படுகிறார்கள்.
15 பரிசுத்த ஆவியானவரும் இதைப்பற்றி சொல்லியிருக்கிறார். முதலில் அவர்,
16 “பிறிதொரு காலத்தில் அவர்களோடு நான் செய்யப்போகிற உடன்படிக்கை இதுதான்.
என் சட்டங்களை அவர்கள் இதயங்களில் பதியவைப்பேன்.
மேலும் அவற்றை அவர்களின் மனங்களில் எழுதுவேன்” (D)
17 என்று சொன்னார். மேலும்,
“அவர்களின் பாவங்களையும் அவர்கள் செய்த தீமைகளையும் நான் மன்னித்து விடுவேன்.
மீண்டும் அவற்றை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன்” (E)
18 ஒரு முறை இப்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. பிறகு பலிகளுக்கான தேவை இல்லை.
தேவனிடம் நெருங்கி வாருங்கள்
19 ஆதலால் சகோதர சகோதரிகளே! மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் நுழைய நாம் முழுமையாக விடுதலை பெற்று விட்டோம். நாம் அச்சம் இல்லாமல் இதனைச் செய்யமுடியும். ஏனென்றால் கிறிஸ்துவின் மரணம் நமக்காக நிகழ்ந்துவிட்டது. 20 இப்போது மிகப் பரிசுத்தமான இடத்தின் வழியை மூடிக்கொண்டிருக்கிற அத்திரைக்குள் நுழைய நம்மிடம் ஒரு புதிய வழி இருக்கிறது. தன் சரீரத்தையே பலியாகத் தந்து அப்புதிய வாழ்வின் வழியை இயேசு திறந்தார். 21 தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மாபெரும் ஆசாரியர் ஒருவர் நமக்கு இருக்கிறார். 22 நாம் சுத்தப்படுத்தப்பட்டு குற்ற உணர்விலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். நமது சரீரங்கள் பரிசுத்த நீரால் கழுவப்பட்டுள்ளன. எனவே உண்மையான இதயத்தோடும், விசுவாசம் நமக்களிக்கிற உறுதியோடும் தேவனை நெருங்கி வாருங்கள். 23 மற்றவர்களுக்கு நாம் சொல்கிற நமது நம்பிக்கையை பலமாகப் பற்றிக்கொள்வோம். நமக்கு வாக்குறுதியளித்த ஒருவரை நாம் நம்ப முடியும்.
உறுதிபெற ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள்
24 நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் சிந்திக்க வேண்டும். நமது அன்பை வெளிப்படுத்தவும் நன்மை செய்யவும் எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுவது என்று பார்க்கவேண்டும்.
25 சிலர் வழக்கமாய்ச் செய்வதுபோல நாம் ஒன்றாகச் சந்திப்பதை நிறுத்திவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாகக் கிறிஸ்து திரும்பிவரும் அந்த நாள் மிக விரைவில் வருவதை நாம் பார்ப்பதுபோல் செயல்பட வேண்டும்.
கிறிஸ்துவிடமிருந்து விலகாதீர்கள்
26 நாம் உண்மையை உணர்ந்துவிட்ட பின்னர் வெளிப்படையாகத் தொடர்ந்து பாவங்களைச் செய்து வந்தால் பிறகு நம் பாவங்களுக்கு வேறு எந்த பலியும் இல்லை. 27 நாம் தொடர்ந்து பாவம் செய்தால், நம்மிடம் நியாயத்தீர்ப்புக்கான அச்சமும் பகைவர்களை அழிக்கும் கோபமான நெருப்புமே இருக்கும். 28 மோசேயினுடைய சட்டத்தை ஒருவன் ஒதுக்கினால் அக்குற்றத்தை உறுதிப்படுத்த இரண்டு அல்லது மூன்று சாட்சிகளே போதுமானதாக இருந்தன. அவன் மன்னிக்கப்படவில்லை. அவன் கொல்லப்பட்டான். 29 ஆகவே தேவனுடைய குமாரன் மேல் வெறுப்பைக் காட்டுகிறவன் எவ்வளவு மோசமான தண்டனைக்கு உரியவன் என்பதை யோசித்துப் பாருங்கள். அவன் இரத்தத்தைப் பரிசுத்தமற்றதாக நினைத்தான். புதிய உடன்படிக்கையின்படி இயேசு சிந்திய அந்த இரத்தம் தான் அம்மனிதனைப் பரிசுத்தமாக்கிய உடன்படிக்கையின் இரத்தமாகும். தனக்குக் கிருபை காட்டிய ஆவியையே அம்மனிதன் அவமானப்படுத்தினான். 30 “நான், மக்கள் செய்கிற பாவங்களுக்குத் தண்டனை தருவேன். நானே பதிலுக்குப் பதில் செய்வேன்” [h]என்று தேவன் சொன்னதை நாம் அறிவோம். அதோடு, “கர்த்தர் தன் மக்களை நியாயம் தீர்ப்பார்” [i]என்றும் சொன்னார். 31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது ஒரு பாவிக்கு மிகப் பயங்கரமாக இருக்கும்.
உனது தைரியத்தையும் மகிழ்ச்சியையும் விட்டுவிடாதே
32 நீங்கள் முதன் முதலாக உண்மையை அறிந்துகொண்ட நாட்களை நினைத்துப் பாருங்கள். பல சோதனைகளை நீங்கள் சகித்துக்கொண்டீர்கள். எனினும் நீங்கள் உறுதியாக இருந்தீர்கள். 33 சிலவேளைகளில் வெறுக்கத்தக்க காரியங்களைப் பற்றி உங்களிடம் சொன்னார்கள். பலர் முன்னிலையில் உங்களைக் குற்றம் சுமத்தித் தண்டித்தார்கள். சில வேளைகளில் அப்படி நடத்தப்பட்டவர்களுக்கும் நீங்கள் உதவியாய் இருந்தீர்கள். 34 ஆமாம், நீங்கள் சிறையில் இருந்த அவர்களுக்கு உதவி, அவர்கள் துன்பத்தில் பங்குகொண்டீர்கள். உங்கள் சொத்து உங்களிடமிருந்து அபகரிக்கப்பட்டபோதும் நீங்களும் அதை மகிழ்வோடு ஒத்துக்கொண்டீர்கள். ஏனெனில், இதைவிடவும் மதிப்புமிக்க நிலையான சொத்து உங்களுக்கு உண்டு என்று நீங்கள் அறிவீர்கள்.
35 எனவே முன்பு நீங்கள் வைத்திருந்த தைரியத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் தைரியம் உங்களுக்கு பலனைத் தரும். 36 நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும். தேவனுக்கு விருப்பமானவற்றை நீங்கள் செய்த பிறகு, நிச்சயம் தேவன் வாக்களித்ததை நீங்கள் பெறுவீர்கள். 37 கொஞ்ச காலத்தில்,
“வரவேண்டியவர் வருவார்,
அவர் தாமதிக்கமாட்டார்.
38 விசுவாசத்தினாலே நீதிமானாக
இருக்கிறவன் பிழைப்பான்.
அவன் அச்சத்தால் இதிலிருந்து பின்வாங்குவானேயானால்
நான் அவன்மீது பிரியமாக இருக்கமாட்டேன்.” (F)
39 ஆனால், நாம் கெட்டுப்போகும்படி பின் வாங்குகிறவர்களாய் இருக்கக்கூடாது. நாம் விசுவாசம் உடையவர்களாகவும் இரட்சிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
2008 by World Bible Translation Center