Beginning
பவுலும்-தேவசபையும்
10 நான் பவுல். உங்களை வேண்டிக்கொள்கிறேன். கிறிஸ்துவின் கருணையோடும், சாந்தத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். நான் உங்களோடு இருக்கும்போது தாழ்மையுடையவனாகவும் உங்களைவிட்டுத் தூரமாயிருக்கும்போது உங்கள் மேல் கண்டிப்புடனும் இருப்பதாகச் சிலர் என்னிடம் கூறுகிறார்கள். 2 நாங்கள் உலக நடைமுறைப்படி வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கின்றனர்.அங்கு வரும்போது அவர்களிடம் நான் தைரியமாக இருக்கவேண்டும். நான் அங்கு வரும்போது, உங்களிடம் கண்டிப்பாய் அந்த தைரியத்தைப் பயன்படுத்தாதபடிக்கு இருக்க நான் பிரார்த்திக்கிறேன். 3 நாம் மனிதர்கள். ஆனால் உலகம் போரிடும் முறையைப் போலவே போரிடுவதில்லை. 4 உலகத்தார் பயன்படுத்தும் ஆயுதங்களிருந்து முற்றிலும் மாறான வேறுவகையான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறோம். நமது ஆயுதங்களுக்கான சக்தியைத் தேவனிடமிருந்து பெறுகிறோம். இவை பகைவர்களின் வலிமையான இடங்களை அழித்துவிடும். நாம் மக்களின் விவாதங்களை அழிக்கிறோம். 5 தேவனுடைய ஞானத்திற்கு எதிராகத் தோன்றும் பெருமிதங்களையெல்லாம் நாம் அழித்து வருகிறோம். அவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்து கிறிஸ்துவுக்கு அடிபணியுமாறு செய்கிறோம். 6 அடிபணியாத எவரையும் தண்டிக்கத் தயாராக இருக்கிறோம். முதலில் நீங்கள் முழுமையாக அடிபணியுமாறு விரும்புகிறோம்.
7 உங்களுக்கு முன்னாலுள்ள உண்மைகளை நீங்கள் கவனித்துகொள்ள வேண்டும். ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று நம்புவானேயானால் பிறரைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 8 கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பற்றி நாங்கள் இன்னும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்பது உண்மை. ஆனால் உங்களைத் தூக்கியெறிய இந்த அதிகாரத்தை எங்களுக்குக் கொடுக்கவில்லை. உங்களை பலப்படுத்தவே கொடுத்திருக்கிறார். அதனால் அதுபற்றி பெருமைப்பட்டுக்கொள்ள நான் வெட்கப்படவில்லை. 9 இந்த நிருபத்தின் மூலம் உங்களைப் பயமுறுத்துகிறவனாய் நான் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். 10 ஆனால் சிலரோ, “பவுலின் நிருபங்கள் பலமுள்ளவை; மிகவும் முக்கியமானவை. ஆனால் அவன் எங்களோடு இருக்கும்போது பலவீனனாக இருக்கிறான். அவன் பேச்சு எந்தப் பயனையும் விளைவிப்பதில்லை” என்று சொல்கிறார்கள். 11 “நாங்கள் இப்பொழுது அங்கே உங்களோடு இல்லை. அதனால் நிருபத்தின் மூலம் பேசுகிறோம். ஆனால் நாங்கள் உங்களோடு இருக்கும்போதும் நிருபத்தில் உள்ளது போலவே செயல்படும் அதிகாரத்துடன் இருப்போம்” என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
12 தம்மைத் தாமே முக்கியமானவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் குழுவுடன் சேர நாங்கள் விரும்பவில்லை. எங்களை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்பமாட்டோம். அவர்களைப் போன்று ஆகவும் விரும்பமாட்டோம். அவர்கள் தங்களைக்கொண்டே தங்களை அளக்கிறார்கள். தங்களைக்கொண்டே தங்களை ஒப்பிடுகின்றனர். அவர்கள் அறிவுள்ளவர்கள் அல்ல.
13 எங்களுக்குத் தரப்பட்ட வேலைகளின் அளவை மீறி எப்போதும் பெருமைபேசிக்கொள்ளமாட்டோம். தேவன் எங்களுக்குக் கொடுத்த பணியின் அளவிற்கே பெருமை கொள்ளுகிறோம். உங்கள் நடுவில் இதுவும் எங்கள் வேலைகளுள் ஒன்றாக இருக்கிறது. 14 அளவுமீறி பெருமை பேசித் திரிபவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் உங்களிடம் வராமல் இருந்திருந்தால் எங்களைப் பற்றி அளவுக்கு மீறி பெருமை பேசி இருப்போம். ஆனால் நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியோடு உங்களிடம் வந்தோம். 15 மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு எங்கள் அளவைக் கடந்து பெருமை பாராட்டமாட்டோம். உங்கள் விசுவாசம் வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் உங்களிடையே எங்கள் வேலையானது மென்மேலும் வளர்ச்சியடைய நீங்கள் உதவுவீர்கள் என்றும் நம்புகிறோம். 16 உங்கள் இருப்பிடத்துக்கு அப்பாலும் நாங்கள் நற்செய்தியைப் பரப்ப விரும்புகிறோம். மற்றவர்களால் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டதை எங்களால் செய்யப்பட்டதாகக் கூறி பெருமைப்படமாட்டோம். 17 ஆனால், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.” [a] 18 தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன்.
பவுலும்-போலி அப்போஸ்தலர்களும்
11 நான் கொஞ்சம் முட்டாளாக இருந்தாலும் என்னை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே என்னை நீங்கள் பொறுத்துக்கொண்டிருக்கிறீர்கள். 2 நான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது தேவனிடமிருந்து வந்த பெருமை ஆகும். நான் உங்களைக் கிறிஸ்துவுக்குத் தருவதாய் வாக்குறுதி கொடுத்தேன். கிறிஸ்துவே உங்களது ஒரே மணவாளன். அவரது தூய மணப் பெண்ணாக உங்களை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். 3 எனினும் கிறிஸ்துவிடமுள்ள உங்கள் முழு அர்ப்பணிப்பில் இருந்து விலகும்படி உங்கள் மனம் கெடுக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன். பாம்பின் (சாத்தான்) தந்திர வழிகளின் மூலம் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போல உங்களுக்கும் நேரும். 4 நாங்கள் சொன்னதற்கு மாறாக இயேசுவைப் பற்றி போதிக்க வரும் எவரையும் நம்பி சகித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற ஆவிக்கும் நற்செய்திக்கும் மாறுபட்ட ஆவியையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகவே என்னையும் சகித்துக்கொள்ளுங்கள்.
5 மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன். 6 நான் பயிற்சி பெற்ற பேச்சாளன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்குப் போதிய ஞானம் உண்டு. நாங்கள் அவற்றை உங்களுக்கு எல்லா வழிகளிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.
7 நான் உங்களுக்கு இலவசமாக தேவனுடைய நற்செய்தியைப் போதித்திருக்கிறேன். உங்களை உயர்த்துவதற்காக நான் பணிந்துபோயிருக்கிறேன். அதனைத் தவறு என்று எண்ணுகிறீர்களா? 8 உங்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு மற்ற சபைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றேன். 9 நான் உங்களோடு இருக்கும்போது, எனது தேவைகளுக்காக உங்களைத் துன்புறுத்தியதில்லை. எனக்கு தேவையானவற்றையெல்லாம் மக்கதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் கொடுத்தனர். எந்த வகையிலும் நான் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இனிமேலும் பாரமாக இருக்கமாட்டேன். 10 இதைப் பற்றி நான் பெருமைபட்டுக்கொள்வதை அகாயாவிலுள்ள [b] எவரும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை நான் என்னோடு இருக்கிற கிறிஸ்துவின் சத்தியத்தைக்கொண்டு கூறுகிறேன். 11 உங்களுக்குப் பாரமாயிருக்க விரும்பவில்லை என்று ஏன் கூறுகிறேன். உங்கள் மீது எனக்கு அன்பில்லையா? உண்டு. அதைப்பற்றி தேவன் நன்கு அறிவார்.
12 நான் இப்பொழுது செய்வதைத் தொடர்ந்து செய்வேன். ஏனென்றால் எங்கள் மீது குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் தேடுகிறவர்களுக்குக் காரணம் கிடைக்கக் கூடாது. தம் வேலையைப் பற்றிப் பெருமை பேசுகிறவர்கள் தம் வேலையை நம் வேலையைப் போன்ற ஒன்றாகச் சொல்லிக்கொள்ள விரும்புவார்கள். 13 அப்படிப்பட்டவர்கள் உண்மையான அப்போஸ்தலர்கள் அல்லர்; பொய் நிறைந்த பணியாளர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடைய அப்போஸ்தர்களின் வேடத்தைத் தரித்துக்கொள்ளுகிறார்கள். 14 இது எங்களை வியப்படையச் செய்யவில்லை. ஏனென்றால், சாத்தானே ஒளியின் தூதனாக [c] மாறுவேடம் அணிந்திருக்கிறான். 15 எனவே சாத்தானின் வேலைக்காரர்கள் நீதியின் வேலைக்காரர்களைப் போன்று வேடமிடுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் இவர்கள் இறுதியில் தங்கள் செயலுக்காகத் தண்டிக்கப்படுவர்.
பவுலும்-அவரது துன்பங்களும்
16 நான் மீண்டும் கூறுகிறேன். நான் அறிவற்றவன் என்று எவரும் எண்ண வேண்டாம். ஆனால் நீ என்னை அறிவற்றவன் என்று எண்ணினால் ஒரு அறிவற்றவனை ஏற்றுக்கொள்வது போல் என்னையும் ஏற்றுக்கொள். பின்பு இதைப் பற்றி நானும் பெருமைப்பட்டுக்கொள்ளுவேன். 17 ஏனென்றால் என்னைப் பற்றி நான் உறுதியாக இருக்கிறேன். நான் கர்த்தரைப் போன்று பேசுபவன் அல்லன். நான் அறிவற்றவன் போன்றே பெருமை பாராட்டுகிறேன். 18 உலகத்தில் ஏராளமானவர்கள் தம்மைப் பற்றிப் பெருமைபட்டுக்கொள்ளுகிறார்கள். நானும் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். 19 நீங்கள் புத்திசாலிகள். எனவே புத்தியற்றவர்களோடு நீங்கள் சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்ளுங்கள். 20 நீங்கள் சகித்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒருவன் உங்களைக் கட்டாயப்படுத்தி காரியங்களைச் செய்யச் சொன்னாலும், ஒருவன் உங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டாலும், ஒருவன் உங்களை ஏமாற்றினாலும், ஒருவன் தன்னை உயர்த்திக்கொண்டாலும், ஒருவன் உங்கள் முகத்தில் அறைந்தாலும் நீங்கள் அனைத்தையும் பொறுத்துக்கொள்வீர்கள். 21 இதனைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் செய்வதற்கு நாம் பலவீனம் உள்ளவர்களாய் இருக்கிறோம்.
எவனாவது தன்னைப் பாராட்டிப் பேச தைரியம் உள்ளவனாய் இருந்தால் நானும் தைரியம் உள்ளவனாய் இருப்பேன். (நான் அறிவற்றவனைப் போன்று பேசிக்கொண்டிருக்கிறேன்.) 22 அவர்கள் எபிரேயர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் ஆபிரகாமின் குடும்பத்தில் உள்ளவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். 23 அவர்கள் கிறிஸ்துவுக்குச் சேவை செய்பவர்களானால் நான் அவர்களை விட மிகுதியாகச் செய்துகொண்டே இருக்கிறேன். (நான் பைத்தியக்காரனைப் போன்று பேசுகிறேன்) நான் அவர்களைவிடக் கடினமாக உழைத்திருக்கிறேன். நான் பல முறைகள் சிறைபட்டிருக்கிறேன். நான் மிக அதிகமாக அடி வாங்கி இருக்கிறேன். நான் பலமுறை மரணத்தின் அருகில் சென்று வந்திருக்கிறேன்.
24 நான் யூதர்களால் சவுக்கால் முப்பத்தொன்பது அடிகளை ஐந்து தடவை பெற்றிருக்கிறேன். 25 மூன்று முறை மிலாறுகளால் அடிபட்டேன். ஒருமுறை நான் கல்லால் எறியப்பட்டு ஏறக்குறைய சாகும் தருவாயில் இருந்தேன். மூன்று முறை கப்பல் விபத்தில் சிக்கிக்கொண்டேன். ஒரு முறை கடலிலேயே ஒரு இராப்பகல் முழுவதையும் கழித்தேன். 26 நான் பலமுறை பயணங்கள் செய்திருக்கிறேன். நான் ஆறுகளாலும், கள்ளர்களாலும், யூத மக்களாலும், யூதரல்லாதவர்களாலும் ஆபத்துக்குட்பட்டிருக்கிறேன். நகரங்களுக்குள்ளும், மக்களே வசிக்காத இடங்களிலும், கடலுக்குள்ளேயும், ஆபத்துகளில் சிக்கியிருக்கிறேன். சகோதரர்கள் என்று சொல்லிக்கொண்டு உண்மையில் சகோதரர்களாக இல்லாத சிலராலும் நான் ஆபத்துக்குள்ளானேன்.
27 நான் பலமுறை கடினமாக உழைக்க, கடினமான சோர்வூட்டத்தக்கவற்றைச் செய்ய நேர்ந்தது. பல தடவை நான் தூங்காமல் இருந்திருக்கிறேன். பல முறை நான் உணவில்லாமல் பட்டினியாகவும், தாகத்தோடும் இருந்திருக்கிறேன். பல சமயங்களில் உண்ணுவதற்கு எதுவுமேயற்ற நிலையில் இருந்திருக்கிறேன். குளிரில் ஆடையில்லாமல் நிர்வாணமாகவும் இருந்திருக்கிறேன். 28 இவற்றைத் தவிர மேலும் பல பிரச்சனைகளும் எனக்குண்டு. குறிப்பாக எல்லா சபைகளைப் பற்றியும் ஒவ்வொரு நாளும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். 29 ஒருவன் பலவீனமடைவதைக் கண்டால் நானும் பலவீனனாகி விடுகிறேன். ஒருவன் பாவம் செய்வதைப் பார்த்தால் கோபத்தால் நான் எரிச்சலாகிவிடுகிறேன்.
30 நான் என்னையே பாராட்டிக்கொள்ள வேண்டுமானால் என் பலவீனத்தை வெளிப்படுத்தும் காரியங்களைக் குறித்தே பெருமை பாராட்டிக்கொள்ள வேண்டும். 31 நான் பொய் சொல்வதில்லையென்று தேவனுக்குத் தெரியும். அவரே தேவன். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதா. அவர் எக்காலத்திலும் பாராட்டுக்கு உரியவர். 32 நான் தமஸ்குவில் இருந்தபோது, அரேத்தா அரசனுடைய படைத் தளபதி என்னைக் கைது செய்ய விரும்பினான். அதற்காக நகரைச் சுற்றிக் காவலர்களை நிறுத்தினான். 33 ஆனால் சில நண்பர்கள் என்னைக் கூடைக்குள் வைத்து சுவரில் ஒரு சிறிய துளை செய்து அதன் வழியே என்னை இறக்கிவிட்டனர். எனவே நான் அந்த படைத் தளபதியிடமிருந்து தப்பினேன்.
பவுலின் சிறப்பான ஆசீர்வாதம்
12 நான் தொடர்ந்து என்னைப் பாராட்டிக்கொள்வது எனக்கு தகுதியாயிராது. எனினும் நான் இப்போது கர்த்தரின் தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் பற்றிப் பேசுகிறேன். 2 கிறிஸ்துவுக்கு உள்ளான ஒரு மனிதனை நான் அறிவேன். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னரே மூன்றாவது வானம் வரை தூக்கி எடுத்துச் செல்லப்பட்டான். அவன் சரீரத்தில் இருந்தானா, சரீரத்திற்கு வெளியே இருந்தானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தேவனுக்குத் தெரியும். 3-4 அவன் பரலோகத்துக்குத் தூக்கி எடுத்துச் செல்லப்பட்டதை நான் அறிவேன். அப்போது அவன் சரீரத்தோடு இருந்தானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் விளக்க இயலாத சிலவற்றை அவன் கேட்டிருக்கிறான். மனிதனால் சொல்ல அனுமதிக்கப்படாதவற்றை கேட்டிருக்கிறான். 5 நான் இவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் என்னைப்பற்றிப் பாராட்டிப் பேசமாட்டேன். நான் எனது பலவீனத்தைப் பற்றி மட்டுமே பாராட்டிக்கொள்வேன்.
6 நான் என்னையே பாராட்டிப் பேசிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நான் முட்டாளாக இருக்கமாட்டேன். ஏனென்றால் நான் உண்மையைச் சொல்லிவிடுவேன். அதோடு நான் சொல்வதையும் செய்வதையும் காணும் மக்கள் என்னைப் பற்றி மிகுதியாக நினைத்துக்கொள்வார்கள். அதனால் என்னைப் பற்றி நானே பெருமை பேசிக்கொள்ளமாட்டேன்.
7 எனக்குக் காட்டப்பட்ட அதிசயங்களைக் குறித்து நான் அதிகம் பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடாது. வேதனை மிக்க ஒரு பிரச்சனை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. (மாம்சத்தில் ஒரு முள் என்பது அதன் பொருள்) அது சாத்தானிடம் இருந்து அனுப்பப்பட்ட தூதுவன். நான் அதிக அளவு பெருமை பாராட்டிக்கொள்வதில் இருந்து அது என்னை அடித்துக் கட்டுப்படுத்தும். 8 அப்பிரச்சனையில் இருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் மூன்று முறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். 9 ஆனால் கர்த்தரோ என்னிடம், “என் கிருபை உனக்குப் போதும். நீ பலவீனப்படும்போது என் பெலன் உனக்குள் முழுமையாகும்” என்றார். எனவே நான் என் பலவீனத்தைப் பற்றி மேன்மைப்படுத்தி பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கியிருக்கிறது. 10 எனவே பலவீனனாக இருக்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் என்னைப்பற்றி அவதூறாகப் பேசும்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கஷ்ட காலங்கள் வரும்போது மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் என்னை மோசமாக நடத்தும்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குப் பிரச்சனைகள் வரும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும் கிறிஸ்துவுக்காகத்தான். நான் பலவீனப்படும்போதெல்லாம், உண்மையில் பலமுள்ளவன் ஆகிறேன்.
கொரிந்து கிறிஸ்தவர்கள் மேல் பவுலின் அன்பு
11 நான் முட்டாளைப் போன்று பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். இவ்வாறு நீங்களே என்னைச் செய்தீர்கள். நீங்களெல்லாம் என்னைப் பாராட்டியிருக்கலாம். நான் அதற்குத் தகுதியுடையவன் அல்லன். எனினும் என்னை “அந்த மகா பிரதான அப்போஸ்தலர்களோடு” ஒப்பிடும்போது நான் குறைந்தவன் அல்லன். 12 நான் உங்களோடு இருந்த போது, நான் அப்போஸ்தலன் என்பதை நிரூபிக்கும் வகையில் பலவற்றைச் செய்தேன். நான் அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் பொறுமையோடு செய்தேன். 13 எனவே ஏனைய சபைகளைப் போன்று நீங்களும் எல்லாவற்றையும் பெற்றீர்கள். உங்களுக்கு எதிலும் குறைவில்லை. ஆனால் ஒரு வேறுபாடு, நான் எவ்வகையிலும் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இது தான் குறை. இதற்காக என்னை மன்னியுங்கள்.
14 மூன்றாவது முறையாக இப்பொழுது உங்களிடம் வர நான் தயாராக உள்ளேன். நான் உங்களுக்குப் பாரமாக இருக்கமாட்டேன். உங்களுக்கு உரிய எந்தப் பொருளையும் நான் சொந்தம் கொண்டாடமாட்டேன். நான் உங்களை மட்டுமே விரும்புகிறேன். பெற்றோருக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்க வேண்டியவர்கள் பிள்ளைகள் அல்ல. பெற்றோர்களே பிள்ளைகளுக்குப் பொருட்களைச் சேர்த்து வைக்கவேண்டும். 15 எனவே, நான் எனக்குரியவற்றையெல்லாம் உங்களுக்காகச் செலவு செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் என்னையும் உங்களுக்காகத் தருவேன். நான் உங்களை மிகுதியாக நேசித்தால் நீங்கள் என்னைக் குறைவாக நேசிப்பீர்களா?
16 நான் உங்களுக்குப் பாரமாக இல்லை என்பது தெளிவாயிற்று. ஆனால் என்னைத் தந்திரமானவன் என்றும், பொய் சொல்லி உங்களை வசப்படுத்திவிட்டேன் என்றும் எண்ணுகிறீர்கள். 17 நான் யாரையாவது அனுப்பி உங்களை ஏமாற்றி இருக்கிறேனா? இல்லையே. நீங்களும் அதை அறிவீர்கள். 18 உங்களிடம் செல்லுமாறு நான் தீத்துவை அனுப்பினேன். எங்கள் சகோதரனையும் அவனோடு சேர்த்து அனுப்பினேன். தீத்து உங்களை ஏமாற்றவில்லை. அல்லவா? தீத்துவும் நானும் ஒரே ஆவியால் வழி நடத்தப்பட்டு ஒரேவிதமான வாழ்வை நடத்தினோம்.
19 காலமெல்லாம் எங்களின் பாதுகாப்புக்காகப் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களா? தேவனுக்கு முன்பாக கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். நீங்கள் எமது பிரியமான நண்பர்கள். நாங்கள் செய்வது எல்லாம் உங்களைப் பலப்படுத்துவதற்காகத்தான். 20 நான் இவற்றையெல்லாம் ஏன் செய்கிறேன்? உங்களிடம் நான் வரும்போது, நீங்கள் எதிர்பார்க்கிறபடி நானும், நான் எதிர்பார்க்கிறபடி நீங்களும் இல்லாமல் போகக்கூடாது என்று அஞ்சுகிறேன். விரோதம், பொறாமை, கோபம், சுயநலம், தீய பேச்சு, மோசமான பெருமிதம், குழப்பம் போன்றவற்றால் நீங்கள் அழியக்கூடாது என்று அஞ்சுகிறேன். 21 மீண்டும் நான் உங்களிடம் வரும்போது தேவன் என்னை உங்கள் முன் தாழ்த்தி விடுவாரோ என்று அஞ்சுகிறேன். பலர் தாங்கள் செய்த அசுத்தம், வேசித்தனம், பாலியல் குற்றங்கள் போன்ற பாவங்களைத் தொடக்கத்தில் செய்து, பிறகு மாறாமலும் அதற்காக மனம் வருந்தாமலும் இருப்பதைப் பற்றியும் நான் துக்கப்பட வேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறேன்.
இறுதி எச்சரிக்கைகளும் வாழ்த்துக்களும்
13 மூன்றாவது முறையாக நான் மீண்டும் வருவேன். “எல்லா குற்றச் சாட்டுகளும் இரண்டு மூன்று சாட்சிகளால்தான் உறுதிப்படவேண்டும்.” [d] என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். 2 நான் இரண்டாவது முறை உங்களோடு இருந்தபோது பாவம் செய்தவர்களை எச்சரித்திருந்தேன். இப்பொழுது உங்களிடம் இருந்து விலகி இருக்கிறேன். பாவம் செய்த மற்ற எல்லாரையும் எச்சரிக்கிறேன். நான் உங்களிடம் மீண்டும் வரும்போது உங்கள் பாவங்களுக்காக உங்களைத் தண்டிப்பேன். 3 கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா? (உங்களை நான் தண்டிக்கு போது, நீங்கள் அதைப் பார்ப்பீர்கள்.) அவர் உங்களிடத்தில் பலவீனராக இல்லை; வல்லவராய் இருக்கிறார். 4 சிலுவையில் அறையப்படும்போது கிறிஸ்து பலவீனமானவராயிருந்தார் என்பது உண்மை. ஆனால் தேவனுடைய வல்லமையால் இப்போது வாழ்கிறார். நாமும் கிறிஸ்துவுக்குள் பலவீனராக இருக்கிறோம் என்பது உண்மை. ஆனால் தேவனுடைய வல்லமையால் நாங்கள் உங்களுக்காக கிறிஸ்துவுக்குள் உயிரோடு இருப்போம்.
5 நீங்கள் உங்களையே பாருங்கள். விசுவாசத்தில் வாழ்கிறீர்களா என உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரா, இல்லையா என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் சோதனையில் தோற்றுவிட்டால் கிறிஸ்து உங்களோடு இல்லை. 6 நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் இல்லை என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 7 நீங்கள் தவறாக எதுவும் செய்யக் கூடாது என்பதே தேவனிடம் எங்கள் பிரார்த்தனை. நாங்கள் சோதனையில் வெற்றி பெற்றோமா இல்லையா என்பது முக்கியமல்ல. நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் என மக்கள் நினைக்க நேர்ந்தாலும் கூட நீங்கள் நேர்மையானதைச் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். 8 உண்மைக்கு எதிரானவற்றை எங்களால் செய்ய முடியாது. எங்களால் உண்மைக்குரியதை மட்டுமே செய்ய முடியும். 9 நீங்கள் பலமுள்ளவர்களாய் இருக்கும்வரை நாங்கள் பெலவீனராய் இருப்பதைக் குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியே. நீங்கள் மென்மேலும் பலமுள்ளவர்களாகும்படிக்கு பிரார்த்தனை செய்கிறோம். 10 நாங்கள் உங்களோடு இல்லாததால் இதை எழுதுகிறேன். எனவே உங்களிடம் வரும்போது என்னிடம் உள்ள ஆற்றலைப் பயன்படுத்தி உங்களைத் தண்டிக்கமாட்டேன். கர்த்தர் எனக்கு உங்களைப் பலப்படுத்தவே வல்லமை கொடுத்துள்ளார். உங்களை அழிக்க அல்ல.
11 சகோதர, சகோதரிகளே, மகிழ்ச்சியோடு இருங்கள். முழுமை பெற முயலுங்கள். நான் செய்யச் சொன்னவற்றைச் செய்யுங்கள். ஒருவருக்கொருவர் மனதார ஒத்துப் போங்கள். சமாதானத்தோடு வாழுங்கள். அப்பொழுது அன்புக்கும் சமாதனத்திற்கும் உரிய தேவன் உங்களோடு இருப்பார்.
12 ஒருவரையொருவர் பரிசுத்தமான முத்தத்தால் வாழ்த்துங்கள். தேவனுடைய பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துக்களைக் கூறுகிறார்கள்.
13 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனின் அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
2008 by World Bible Translation Center