Beginning
9 நான் ஒரு சுதந்திரமான மனிதன். நான் ஒரு அப்போஸ்தலன். நமது கர்த்தராகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன். கர்த்தரில் எனது பணிக்கு நீங்கள் உதாரணமாவீர்கள். 2 மற்ற மக்கள் என்னை அப்போஸ்தலனாக ஒருவேளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், நீங்கள் நிச்சயமாக என்னை அப்போஸ்தலனாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். கர்த்தரில் நான் ஒரு அப்போஸ்தலன் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.
3 சில மனிதர்கள் என்னை நியாயம் தீர்க்க விரும்புகிறார்கள். நான் இந்தப் பதிலை அவர்களுக்கு அளிக்கிறேன். 4 உண்ணவும், பருகவும் நமக்கு உரிமை இருக்கிறது அல்லவா? 5 நாம் பயணம் செய்யும்போது விசுவாசத்திற்குள்ளான மனைவியை அழைத்துச் செல்ல உரிமை இருக்கிறது அல்லவா? மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தரின் சகோதர்களும், கேபாவும் இதைச் செய்கிறார்கள். 6 பர்னபாவும் நானும் மட்டுமே எங்கள் வாழ்க்கைக்கு சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. 7 படையில் சேவை புரியும் எந்த வீரனும் தன் செலவுக்குத் தன் சொந்தப் பணத்தைக் கொடுப்பதில்லை. திராட்சையை விதைக்கிற யாரும் அதன் பழத்தை உண்ணாமல் இருப்பதில்லை. மந்தையை மேய்க்கிற எவரும் அதன் பாலைப் பருகாமல் இருப்பதில்லை.
8 இவை மனிதன் நினைப்பவை மாத்திரமல்ல. தேவனின் சட்டமும் அவற்றையே கூறுகின்றன. 9 ஆம், மோசேயின் சட்டத்தில் அது எழுதப்பட்டுள்ளது “உழைக்கும் மிருகத்தை, தானியத்தைப் பிரிக்கப் பயன்படுத்தும்போது அதன் வாயை மூடாதே. அது தானியத்தை உண்ணாதபடி தடை செய்யாதே.” [a] தேவன் இதைக் கூறியபோது, அவர் உழைக்கும் மிருகங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டாரா? இல்லை. 10 இவ்வாக்கியம் நம்மைப் பற்றிக் குறிக்கவில்லையா? ஆம் வேத வாக்கியங்கள் நமக்காக எழுதப்பட்டதால் எல்லா வகையிலும் இது நம்மையே குறிக்கிறது. தம் வேலைக்கு சிறிதளவு தானியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உழுகிறவனும், தானியத்தை அறுவடை செய்கிறவனும் அந்தந்த வேலையைச் செய்யவேண்டும். 11 நாங்கள் ஆன்மீக விதையை உங்களில் விதைத்துள்ளோம். ஆகவே இந்த வாழ்க்கையில் உங்களுடைய சில பொருள்களை நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காக அறுவடை செய்யக்கூடும். இது அதிகமாக ஆசைப்படுவதல்ல. 12 பிறர் உங்களிடமிருந்து பொருளைப் பெறும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். எனவே எங்களுக்கும் நிச்சயமாய் இந்த உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமையை நாங்கள் பயன்படுத்தவில்லை. இல்லை, பிறர் கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்காமலிருப்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் சகித்துக்கொள்கிறோம். 13 தேவாலயத்தில் பணிவிடை செய்பவர்களுக்கு உணவு தேவாலயத்தில் இருந்து கிடைக்கிறது. பலிபீடத்தில் பணி செய்பவருக்குப் பலிபீடத்தில் படைக்கப்பட்டவற்றில் ஒரு பகுதி கிட்டும். 14 நற்செய்தியை அறிவிப்போரின் வாழ்க்கைக்குரிய பொருள் அந்த வேலையிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.
15 ஆனால் இந்த உரிமைகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை. இவற்றைப் பெற வேண்டுமென்று முயற்சி செய்யவும் இல்லை. இதை உங்களுக்கு எழுதுவதினால் என் நோக்கமும் அதுவல்ல. பெருமைப்படுவதற்குரிய காரணத்தை என்னிடமிருந்து அபகரித்துச் செல்லப்படுவதைவிட நான் இறப்பது நல்லதாகும். 16 நற்செய்தியைப் போதிப்பது நான் பெருமைப்படுவதற்குரிய காரணமல்ல. நற்செய்தியைப் போதிப்பது எனது கடமை. நற்செய்தியைப் போதிப்பது என்பது நான் கண்டிப்பாக செய்யவேண்டியது. அதைச் செய்யாமலிருப்பது எனக்குத் தீமையாகும். 17 நானே என் தேர்வுக்குத் தகுந்தபடி நற்செய்தியைப் போதித்தால் நான் ஒரு வெகுமதிக்குத் தகுதியுடையவனாகிறேன். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. நான் நற்செய்தியைப் போதிக்க வேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை நான் செய்கிறேன். 18 எனக்கு என்ன பலன் கிடைக்கிறது? நற்செய்தியை எங்கும் பரப்புவதே எனக்கு கிட்டும் வெகுமதி. எனவே நற்செய்தி எனக்கு வழங்குகிற “பலன் பெறுதல்” என்கிற உரிமையை நான் பயன்படுத்தவில்லை.
19 நான் சுதந்திரமானவன். யாருக்கும் உரியவன் அல்ல. ஆனால் எல்லா மனிதருக்கும் என்னை அடிமையாக்குகிறேன். என்னால் இயன்ற அளவுக்கு மக்களைக் காப்பதற்காக இதைச் செய்கிறேன். 20 யூதர்களிடம் நான் யூதனைப் போலானேன். யூதர்களை காப்பதற்காக இதைச் செய்தேன். நான் சட்டத்தின் ஆளுகைக்குக் கட்டுப்படாதவன்தான். ஆனால் சட்டப்படி வாழும் மக்களின் முன்பு சட்டப்படி வாழும் மனிதனாகவே நான் ஆனேன். சட்டத்தால் ஆளப்படுகிற மக்களைக் காப்பாற்றவே நான் இதைச் செய்தேன். 21 சட்டத்தின் கீழ் இல்லாத மக்களிடம் சட்டத்தைப் பின்பற்றாதவனாக நடந்துகொண்டேன். சட்டத்தின்படி நடவாத மக்களை காப்பதற்காக நான் இதைச் செய்தேன். (ஆனால் தேவனின் சட்டத்தை நான் மீறவில்லை. கிறிஸ்துவின் சட்டப்படியே நான் ஆளப்படுகிறேன்) 22 பலவீனமான மனிதரை அவர்கள் கர்த்தருக்கென்று ஆதாயம் செய்யும்படி பலவீனமானவனைப்போல நடந்துகொண்டேன். எல்லா மனிதர்களுக்கும் நான் எல்லாரையும்போல நடந்துகொண்டேன். எந்த வகையிலாவது மனிதர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென இவ்வாறு செய்தேன். 23 நற்செய்தியின் பொருட்டு இவற்றையெல்லாம் செய்கிறேன். நற்செய்தியின் ஆசீர்வாதத்தில் பங்குபெற விரும்பி இவற்றைச் செய்கிறேன்.
24 ஒரு பந்தயத்தில் எல்லா ஓட்டக்காரர்களும் ஓடுவது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒருவனே பரிசைப் பெறுவான். எனவே அதைப் போன்று ஓடுங்கள். வெற்றி பெறுவதற்காக ஓடுங்கள். 25 பந்தயங்களில் பங்கு பெறுகிறவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொள்வர். ஒரு கிரீடத்தை வெல்வதற்காக இதைச் செய்வார்கள். கொஞ்ச காலத்தில் அழியக் கூடிய உலக ரீதியான கிரீடம் அது. ஆனால் நாம் பெறும் கிரீடமோ அழியாது நிலைநிற்கும். 26 குறிக்கோளோடு ஓடுகிற மனிதனைப் போன்று நானும் ஓடுகிறேன். காற்றோடு மோதாமல் இலக்கில் தாக்குகிற குத்துச் சண்டை வீரனைப்போல போரிடுகிறேன். 27 எனது சொந்த சரீரத்தையே நான் அடக்குகிறேன். அதை எனக்கு அடிமையாக்குகிறேன். நான் பிறருக்குப் போதித்த பின்பு நானே புறந்தள்ளி விழாதபடிக்கு (தேவனால் அப்புறப்படுத்தப்படாதபடிக்கு) இதைச் செய்கிறேன்.
யூதர்களைப் போல இராதீர்
10 சகோதர சகோதரிகளே, மோசேயைப் பின்பற்றிய நமது முன்னோர்களுக்கு நேர்ந்தது என்னவென்று நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்: அவர்கள் எல்லாரும் மேகத்தின் கீழ் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கடல்வழியே கடந்து சென்றார்கள். 2 அந்த மக்கள் எல்லாரும் மேகத்திலும் கடலிலும் மோசேயோடு உள்ள நல்லுறவில் ஞானஸ்நானம் செய்யப்பட்டார்கள். 3 ஒரே வகையான ஆன்மீக உணவை அவர்கள் அனைவரும் உட்கொண்டார்கள். 4 ஒரே வகையான ஆன்மீக பானத்தை அவர்கள் பருகினார்கள். அவர்களோடிருந்த ஆன்மீகப் பாறையில் இருந்து அவர்கள் பருகினர். அந்தப் பாறை கிறிஸ்து. 5 ஆனால் அம்மக்கள் பலர் தேவனுக்கு உகந்தவர்களாய் இருக்கவில்லை. வானந்தரத்தில் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
6 நடந்தேறிய இக்காரியங்கள் நமக்கு உதாரணங்களாக அமையும். அந்த மக்கள் செய்த தீய காரியத்தைச் செய்ய விரும்புவதினின்று இவை நம்மைத் தடுத்து நிறுத்தும். 7 அந்த மக்களில் சிலர் செய்தது போல் விக்கிரகங்களை வணங்காதீர்கள். “மக்கள் உண்பதற்காகவும் பருகுவதற்காகவும் அமர்ந்தனர். மக்கள் நடனமாடுவதற்காக எழுந்து நின்றனர்” [b] என்று எழுதப்பட்டிருக்கிறது. 8 அந்த மக்களுள் சிலர் செய்ததைப்போல் பாலுறவுப் பாவங்களை நாம் செய்யக் கூடாது. ஒரே நாளில் தம் பாவத்தினால், 23,000 பேர் இறந்தனர். 9 அம்மக்களில் சிலர் செய்தது போல் நாம் கர்த்தரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது. கர்த்தரைச் சோதித்ததால் அவர்கள் பாம்புகளினால் கொல்லப்பட்டார்கள். 10 அம்மக்களுள் சிலர் செய்ததுபோல் முறுமுறுக்காதீர்கள். அழிவுக்கான தேவ தூதனால் அம்மக்கள் கொல்லப்பட்டார்கள்.
11 அம்மக்களுக்கு நடந்தவை நமக்கு உதாரணங்கள் ஆகும். நமக்கு எச்சரிக்கையாக அவை எழுதப்பட்டுள்ளன. அப்பழைய வரலாறுகள் முடிவடையும் காலத்தில் நாம் வாழ்கிறோம். 12 அதனால், உறுதியாக நிற்பதாக எண்ணும் ஒருவன் விழுந்துவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும். 13 எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை தேவன் உங்களுக்குத் தரமாட்டார். உங்களுக்குச் சோதனை வரும்போது அச்சோதனையில் இருந்து விடுபடவும் தேவன் உங்களுக்கு வழிகாட்டுவார். அப்போது நீங்கள் சோதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடும்.
14 என் அன்புக்குரிய நண்பர்களே, அதனால் நீங்கள் விக்கிரக வழிபாட்டிலிருந்து விலகுங்கள். 15 நீங்கள் அறிவுள்ள மனிதர்கள் என்பதால் உங்களோடு பேசுகிறேன். நான் சொல்வதை நீங்களே சரியா, தவறா எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். 16 நாம் நன்றியறிதலுடன் பங்குபெறும் ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தைப் பங்கிடுவதாகும். நாம் பகிர்ந்துண்ணும் அப்பமோ கிறிஸ்துவின் சரீரத்தைப் பகிர்தலாகும். 17 ஒரு அப்பம் உள்ளது. நாமோ பலர். ஆனால் அந்த ஒரே அப்பத்தை நாம் பகிர்ந்துகொள்கிறோம். எனவே நாம் உண்மையாகவே ஒரே சரீரமாக இருக்கிறோம்.
18 இஸ்ரவேல் மக்களை நினைத்துப்பாருங்கள். படைக்கப்பட்டவற்றைப் புசிப்பவர்கள் பலிபீடத்துடன் நல்லுறவுகொண்டிருக்கிறார்கள் அல்லவா. 19 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு முக்கியத்துவம் உடையது என்று சொல்ல நான் முன் வரவில்லை. விக்கிரகம் ஒரு குறிப்பிடத்தக்க பொருள் எனவும் நான் கூறவில்லை. 20 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பொருள்கள் பிசாசுகளுக்கே கொடுக்கப்படுகின்றன, தேவனுக்கல்ல. நீங்கள் பிசாசுகளோடு எந்தப் பொருளையும் பகிர்ந்துகொள்வதை நான் விரும்பமாட்டேன். 21 கர்த்தருடைய பாத்திரத்திலிருந்தும் பிசாசுகளின் பாத்திரத்திலும் நீங்கள் பருக முடியாது. கர்த்தரின் மேசையிலும் பிசாசுகளின் மேசையிலும் உங்களால் உண்ண முடியாது. 22 கர்த்தரை எரிச்சல் கொள்ளச் செய்யலாமா? நாம் அவரைவிட பலசாலிகளா? இல்லை.
உங்கள் சுதந்திரம் எதற்கு?
23 “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆம், ஆனால் எல்லாப் பொருள்களும் நல்லதல்ல. “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டவை” எனினும், சில பொருள்கள் பக்தியில் வளருவதற்குப் பிறருக்கு உதவுவதில்லை. 24 தனக்கு மட்டுமே உதவக்கூடிய காரியங்களை ஒருவன் செய்ய முயலக்கூடாது. பிறருக்குப் பயன்படக் கூடிய செயல்களை அவன் செய்ய முயற்சி செய்தல் வேண்டும்.
25 சந்தையில் விற்கப்படும் எந்த இறைச்சியையும் சாப்பிடுங்கள். சரி அல்லது தவறு என்பது பற்றி (அதைச் சாப்பிடுவது தொடர்பாக) எந்தக் கேள்வியையும் கேட்காதீர்கள். 26 “இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தருக்கு உரியவை.” [c] ஆதலால் நீங்கள் அதைச் சாப்பிடலாம்.
27 அவிசுவாசியான ஒரு மனிதன் அவனோடு உண்ணுவதற்கு உங்களை அழைக்கக் கூடும். நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன் வைக்கப்படும் உணவு எதுவாயினும் அதனை உண்ணுங்கள். சாப்பிடத் தகுந்ததா, இல்லையா என அறியும் பொருட்டு வினா எழுப்பாதீர்கள். 28 ஆனால் ஒருவன் உங்களுக்கு “அது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு” என்று கூறினால், பின்னர் அதை உண்ணுவது குற்றமாகும். ஏனெனில் அது குற்றம் என மக்கள் நினைக்கிறார்கள். அதைக் கூறிய மனிதனின் மனச்சாட்சியை நீங்கள் கெடுக்கக் கூடாது. 29 நீங்கள் அது குற்றமென நினைப்பதாக நான் கருதவில்லை. ஆனால் மற்ற மனிதன் அதைக் குற்றமென எண்ணுகிறான். அதனால் நான் அந்த இறைச்சியை உண்ணமாட்டேன். மற்றொரு மனிதன் என்ன நினைப்பானோ என்கிற எண்ணத்தால் எனது சுதந்திரம் தீர்மானிக்கப்பட நான் அனுமதிக்கமாட்டேன். 30 நான் உணவை நன்றியுணர்வுடன் உண்ணுகிறேன். எனவே தேவனுக்கு நான் நன்றி தெரிவிக்கிற ஏதோ சிலவற்றில் என்னைப் பற்றி பிறர் விமர்சிப்பதை நான் விரும்புவதில்லை.
31 எனவே உண்டாலும், பருகினாலும், வேறு எதைச் செய்தாலும் ஒவ்வொன்றையும் தேவனுடைய மகிமைக்காகச் செய்யுங்கள். 32 யூதர்கள், கிரேக்கர்கள் அல்லது தேவனுடைய சபையார் தவறிழைக்கும்படிச் செய்யவைக்கிற எந்தச் செயலையும் செய்யாதீர்கள். 33 நானும் அதனையே செய்கிறேன். எல்லாரையும் எல்லா வகைகளிலும் திருப்திப்படுத்த முனைகிறேன். எனக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றை நான் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் அநேக மக்களுக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றைச் செய்ய முயற்சிக்கிறேன். பிறர் இரட்சிக்கப்படுவதற்காக பலருக்குப் பயன்படுவதையே செய்ய முயற்சி செய்கிறேன்.
11 நான் கிறிஸ்துவை உதாரணமாகப் பின்பற்றுவதுபோல, என்னை உதாரணமாகப் பின்பற்றுங்கள்.
தலைமைக்குக் கீழ்ப்படிதல்
2 நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைவுகூருவதால் உங்களைப் புகழ்கிறேன். நான் உங்களுக்கு வழங்கியிருக்கிற போதனைகளை நீங்கள் பின்பற்றிக்கொண்டுள்ளீர்கள். 3 ஆனால் நீங்கள், இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனின் தலைவரும் கிறிஸ்துவே. பெண்ணின் தலைவன் ஆணாவான். கிறிஸ்துவின் தலைவர் தேவனே.
4 தீர்க்கதரிசனம் சொல்கிறவனோ அல்லது பிரார்த்திக்கிறவனோ தலையை மூடியிருந்தால் அது அவன் தலைக்கு இழுக்கைத் தரும். 5 தீர்க்கதரிசனம் சொல்கிறவளும் பிரார்த்தனை செய்கிறவளும் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தலையை மூடியிராவிட்டால் அது அவள் தலைக்கு இழுக்கைத் தரும். தலைமயிரை மழித்துக்கொண்ட பெண்ணுக்கு அவள் ஒப்பாவாள். 6 ஒரு பெண் தனது தலையை மூடியிராவிட்டால் அவள் தலை மயிரை மழிப்பதற்கு ஒப்பாகும். தலை மயிரைக் குறைப்பதோ, மழிப்பதோ பெண்ணுக்கு இழிவைத் தரும். எனவே அவள் தனது தலையை மூடியிருக்க வேண்டும்.
7 ஆனால், ஓர் ஆண் தனது தலையை மூடக்கூடாது. ஏனெனில் அவன் தேவனைப் போல அமைக்கப்பட்டவன். அவன் தேவனுக்கு மகிமையாய் அமைபவன். ஆனால் பெண்ணோ ஆணுக்கு மகிமையாய் அமைபவள். 8 பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை. ஆணிலிருந்து பெண் தோன்றினாள். 9 ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. பெண்ணோ ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். 10 அதனால்தான் பெண் ஒருவனுக்கு அடங்கியவள் என்பதைக் காட்டும்படியாக தனது தலையை மூடியிருக்க வேண்டும். தேவதூதர்களுக்காகவும் அவள் இதைச் செய்தல்வேண்டும்.
11 ஆனால் கர்த்தருக்குள் பெண் ஆணுக்கு முக்கியமானவள். அவ்வாறே ஆணும் பெண்ணுக்கு முக்கியமானவன். அவ்வாறே ஆணும் பெண்ணுக்கு முக்கியமானவன். 12 ஆணிடமிருந்து பெண் தோன்றியதால் இது உண்மையாகிறது. ஆனால் பெண்ணிடம் இருந்து ஆண் பிறக்கிறான். உண்மையாகவே ஒவ்வொன்றும் தேவனிடம் இருந்து வருகிறது.
13 இதை நீங்களே முடிவு செய்யுங்கள். தனது தலையை மறைக்காமல் தேவனிடம் பிரார்த்தனை செய்வது ஒரு பெண்ணுக்கு உகந்ததா? 14 நீளமான மயிரோடு இருப்பது ஆணுக்கு இழுக்கானது என்பதை இயற்கையே உணர்த்துகிறது. 15 ஒரு பெண்ணுக்கு நீளமான கூந்தலிருப்பது அவளுக்கு கௌரவமாகும். ஏனெனில் ஒரு மகிமையாகவே அது அவளுக்குத் தரப்பட்டிருக்கிறது. 16 இதைக் குறித்துச் சிலர் இன்னும் விவாதிக்க விரும்பலாம். ஆனால் நாங்களும், தேவனுடைய சபைகளும் அம்மக்கள் இதைப்பற்றி வாக்குவாதம் செய்வதை ஏற்பதில்லை.
கர்த்தரின் திருவிருந்து
17 இப்போது உங்களுக்குச் சொல்பவற்றில் நான் உங்களைப் புகழமாட்டேன். நீங்கள் ஒன்று சேர்வது உங்களுக்குத் தொல்லை உருவாகுவதில் முடிகிறது. 18 முதலில், ஒரு சபையாக நீங்கள் சேரும்போது உங்களுக்குள் பிரிவினைகள் உண்டு என்று நான் கேள்விப்பட்டேன். அதில் சிலவற்றை நான் நம்புகிறேன். 19 பிரிவினைகள் இருப்பது தேவைதான். உங்களில் யார் சரியான காரியத்தைச் செய்கிறவர் என்பதைத் தெளிவுபடுத்த அது உதவும்.
20 நீங்கள் ஒன்று கூடுகையில் கர்த்தரின் திருவிருந்தை [d] உண்மையாகப் புசிப்பதில்லை. 21 ஏன்? ஏனெனில் நீங்கள் சாப்பிடும்போது இன்னொருவருக்காகக் காத்திராது உண்ணுகிறீர்கள். சிலருக்குப் போதுமான அளவு சாப்பிடக் கிடைப்பதில்லை. ஆனால் மற்றும் சிலர் போதைக்கு ஆளாகும் அளவுக்கு உட்கொள்கிறார்கள். 22 உங்கள் வீடுகளில் நீங்கள் சாப்பிடவும், குடிக்கவும் செய்யலாம். தேவனுடைய சபையினர் முக்கியமற்றவரென நீங்கள் நினைப்பதாக எனக்குப் படுகிறது. நீங்கள் ஏழைகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறீர்கள். நான் என்ன கூறமுடியும்? உங்களை இதற்காகப் புகழ்வதா? நான் உங்களைப் புகழேன்.
23 நான் உங்களுக்குச் சொன்ன போதனை உண்மையில் கர்த்தரால் எனக்குக் கொடுக்கப்பட்டது ஆகும். இயேசு கொலை செய்யப்படுவதற்காக ஒப்புவிக்கப்பட்ட இரவில் அவர் அப்பத்தை எடுத்து நன்றி கூறினார். 24 அந்த அப்பத்தைப் பகிர்ந்து அவர் “இதை புசியுங்கள். இது எனது சரீரமாகும். இது உங்களுக்குரியது. என்னை நினைவுகூருவதற்காக இதைச் செய்யுங்கள்” என்றார். 25 அவர்கள் அதைச் சாப்பிட்டபின், இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து பகிர்ந்தளித்தார். “தேவனிடமிருந்து அவரது மக்களுக்கு அளிக்கப்பட்ட புது உடன்படிக்கையை இந்த இரசக் கோப்பை காட்டுகிறது! எனது இரத்தத்தில் இந்த உடன்படிக்கை ஆரம்பமாகிறது. நீங்கள் இதைப் பருகும்போது, என்னை நினைப்பதற்காக அவ்வாறு செய்யுங்கள்” என்றார். 26 ஒவ்வொரு முறையும் அப்பத்தைச் சாப்பிடும்போதும் இந்த பானத்தைப் பருகும்போதும், கர்த்தர் வரும்வரையில் கர்த்தருடைய மரணத்தைப் பிறருக்கு அறிவிக்கிறீர்கள்.
27 எனவே தகுதியற்ற வகையில் இந்த அப்பத்தை உண்டாலோ, அல்லது கர்த்தரின் இந்தப் பாத்திரத்தில் பருகினாலோ, அப்போது அந்த மனிதன் கர்த்தரின் சரீரத்துக்கும், இரத்தத்துக்கும் எதிராகப் பாவம் செய்தவனாகிறான். 28 இந்த அப்பத்தை பகிர்ந்துகொள்வதற்கு முன்னரும், இந்த பாத்திரத்தில் இருந்து பருகும் முன்னரும் ஒவ்வொருவனும் தன் இதயத்தைப் பரீட்சித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். 29 கர்த்தருடைய சரீரத்தின் பொருளை நிதானித்து அறியாமல் ஒருவன் இந்த அப்பத்தை உண்ணவோ இந்த பானத்தைப் பருகவோ செய்தால் அந்த மனிதன் உண்பதாலும் பருகுவதாலும் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படுவான். 30 எனவே தான், உங்களில் பலர் நோயுற்றவராகவும் பலவீனராகவும் காணப்படுகிறீர்கள். பலர் இறந்தும் போய்விட்டார்கள். 31 நாமே நம்மைச் சரியான வழியில் நியாயம் தீர்த்திருந்தோமானால் தேவன் நம்மை நியாயம் தீர்த்திருக்கமாட்டார். 32 ஆனால், தேவன் நம்மை நியாயம் தீர்க்கும்போது, நமக்குச் சரியான வழியைக் காட்டும்படி நமக்குத் தண்டனை அளிக்கிறார். நாம் இந்த உலகத்திலுள்ள பிற மனிதரோடு குற்றம் சாட்டப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்கிறார்.
33 சகோதர சகோதரிகளே! எனவே, நீங்கள் ஒன்று சேர்ந்து உண்ணுவதற்கு வருகையில் பிறருக்காகக் காத்திருங்கள். 34 ஒருவன் மிகுந்த பசியால் வாடினால், அவன் வீட்டில் உண்ணட்டும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் வராதபடிக்கு நீங்கள் ஒன்று கூடுகையில் இதைச் செய்யுங்கள். நான் வரும்போது நீங்கள் செய்யவேண்டிய பிற காரியங்களைக் குறித்து உங்களுக்குக் கூறுவேன்.
2008 by World Bible Translation Center