Beginning
சபையின் ஒரு தார்மீகச் சிக்கல்
5 பாலுறவு தொடர்பான பாவங்கள் உங்களிடம் உள்ளன, என்று மக்கள் உண்மையாகவே கூறுகின்றனர். அவை தேவனை அறியாத மக்களிடம் கூட இல்லாத தீய வகையான பாலுறவு தொடர்பான பாவங்கள் ஆகும். ஒருவன் அவனது தந்தையின் மனைவியுடன் உறவு கொண்டிருக்கிறான் என்று மக்கள் கூறுகின்றனர். 2 எனினும் நீங்கள் உங்களைக் குறித்துப் பெருமையடைகின்றீர்கள். அதற்குப் பதிலாக, ஆழ்ந்த வருத்தம் கொண்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தைச் செய்தவனை உங்களிடமிருந்து விலக்கி வைக்கவேண்டும். 3 என்னுடைய சரீரம் உங்களோடு இருக்கிறதில்லை. ஆனால் ஆவியில் நான் உங்களோடு இருக்கிறேன். உங்களோடு நான் அங்கே இருந்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ, அதே போல இப்பாவத்தைச் செய்த மனிதனை நான் ஏற்கெனவே நியாயம் தீர்த்துவிட்டேன். 4 நம் கர்த்தராகிய இயேசுவின் பெயரால் ஒன்று கூடுங்கள், நான் ஆவியில் உங்களோடு இருப்பேன். நம் கர்த்தராகிய இயேசுவின் வல்லமை உங்களோடு இருக்கும். 5 இந்த மனிதனை சாத்தானிடம் ஒப்படையுங்கள். அப்போது பாவம் நிரம்பிய அவனது சுயம் அழிக்கப்படும். அவனது ஆவியோ கர்த்தர் வரும் நாளில் காக்கப்படும்.
6 நீங்கள் தற்பெருமை பாராட்டுவது நல்லதல்ல. உங்களுக்கு இந்தப் பழமொழி தெரியும். “சிறிது புளிப்பு மாவானது எல்லா மாவையும் புளிக்கவைக்கும்.” 7 புளித்த பழைய மாவை அகற்றுங்கள். இதனால் புதிய மாவாக நீங்கள் ஆகமுடியும். நீங்கள் புளிக்காத அப்பமாக ஏற்கெனவே இருக்கிறீர்கள். ஆம் நமது பஸ்கா ஆட்டுக் குட்டியாகிய [a] கிறிஸ்துவோ ஏற்கெனவே நமக்காகக் கொல்லப்பட்டுள்ளார். 8 எனவே நமது பஸ்கா விருந்தை உண்போமாக. ஆனால் புளித்த பழைய மாவைக்கொண்ட அப்பத்தை உண்ணக் கூடாது. புளித்த மாவு பாவத்தையும் தவறுகளையும் குறிக்கும். ஆனால் நாம் புளிக்காத மாவுடைய அப்பத்தை உண்போம். அது நன்மை, உண்மை ஆகியவற்றைக் குறிக்கும் அப்பமாகும்.
9 பாலுறவில் பாவம் செய்யும் மக்களோடு நீங்கள் தொடர்புகொள்ளக் கூடாது என்று என் கடிதத்தில் எழுதி இருந்தேன். 10 உலக இயல்பின்படி வாழ்கின்ற மக்களோடு நீங்கள் தொடர்புகொள்ளக்கூடாது என்று நான் கருதவில்லை. உலக இயல்பின்படியான வாழ்வை உடைய அம்மக்களும் பாலுறவுரீதியாகப் பாவச் செயல்களைச் செய்கின்றனர். அவர்கள் சுயநலம் உள்ளவர்களாகவோ, பிறரை ஏமாற்றுபவராகவோ உள்ளனர். அவர்கள் உருவங்களை வணங்குகின்றனர். அவர்களைவிட்டு விலக வேண்டுமானால் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போக வேண்டியதிருக்கும். 11 நீங்கள் தொடர்புகொள்ளக்கூடாத மக்களை உங்களுக்கு இனம் காட்டுவதற்காகவே இதை எழுதுகிறேன். தன்னைக் கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரனாகக் கூறியும் பாலுறவில் பாவம் செய்கின்றவனுடனும், தன்னலம் பொருந்தியவனுடனும், உருவங்களை வணங்குபவனோடும், மற்றவர்கள் மீது களங்கம் சுமத்துபவனோடும், மது அருந்துபவனோடும், மக்களை ஏமாற்றுகின்றவனோடும் நீங்கள் தொடர்புகொள்ளக் கூடாது. அப்படிப்பட்டவர்களோடு அமர்ந்து உணவு உட்கொள்ளுதலும் கூடாது.
12-13 சபையின் அங்கம் அல்லாத அந்த மனிதர்களைப் பற்றித் தீர்ப்புக் கூறுவது எனது வேலையல்ல. தேவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். சபையின் அங்கத்தினருக்கு நீங்கள் தீர்ப்பு வழங்கவேண்டும். “தீயவனை உன்னிடமிருந்து விலக்கிவிடு” என்று எழுதப்பட்டிருக்கிறது.
பிரச்சனைகளைத் தீர்த்தல்
6 உங்களில் ஒருவனுக்கு இன்னொருவனுக்கு எதிராக ஏதேனும் பிரச்சனை உருவாகும்போது நீதிமன்றத்திலுள்ள நியாயாதிபதிகளிடம் நீங்கள் போவதென்ன? தேவனோடு சரியானவராக அந்த மனிதர்கள் இருப்பதில்லை. ஆகவே அந்த மனிதர்கள் உங்களுக்கு நீதி வழங்க நீங்கள் அனுமதிப்பதேன்? தேவனுடைய மனிதர்கள் அதனைத் தீர்மானிக்க நீங்கள் சம்மதிக்காதது ஏன்? 2 தேவனுடைய மனிதர்கள் உலகத்திற்கு நீதி வழங்குவர் என்பது கண்டிப்பாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் உலகத்திற்கு நீதி வழங்கக் கூடுமாயின் இத்தகைய சிறு பிரச்சனைகளையும் நியாயம் தீர்க்கமுடியும். 3 எதிர்காலத்தில் நீங்கள் தேவ தூதர்களையே நியாயம் தீர்ப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இந்த வாழ்க்கையின் காரியங்களை நாம் நியாயம் தீர்க்க முடியும். 4 எனவே நியாயம் தீர்க்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் உங்களிடையே இருக்குமானால், ஏன் அப்பிரச்சனைகளைச் சபையின் அங்கத்தினரல்லாத மனிதர்களிடம் எடுத்துச் செல்கிறீர்கள்? அந்த மனிதர்கள் சபையைப் பொறுத்த அளவில் பொறுப்பற்றவர்கள். 5 நீங்கள் வெட்கப்படும்படியாக இதனைக் கூறுகிறேன். நிச்சயமாய் உங்கள் மத்தியிலேயே இரு சகோதரர்களுக்கு இடையே உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய ஞானமுள்ள சிலர் இருக்கிறார்கள். 6 ஆனால் இப்போதோ ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகிறான். இயேசுவை நம்பாதவர்களான மனிதர்கள் அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும்படியாக எதற்காக அனுமதிக்கிறீர்கள்?
7 உங்களிடையே வழக்குகள் இருக்கிறது என்னும் உண்மை தோல்வியின் ஒரு குறியீடு ஆகும். அதைவிட மற்றொருவன் செய்யும் தவறுகளையும் ஏமாற்றுவதையும் பொறுத்துக்கொள்வதுமே மேலானதாகும். 8 ஆனால் நீங்களே உங்களுக்குள் தவறிழைத்து ஏமாற்றுகிறீர்கள். கிறிஸ்துவுக்குள் உங்கள் சொந்த சகோதரர்களுக்கே இதைச் செய்கிறீர்கள்.
9-10 தவறிழைக்கும் மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் பங்கு இல்லை என்பது உங்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். ஏமாற்றப்படாதீர்கள். பாலுறவில் பாவம் செய்யும் மக்களும், உருவங்களை வழிபடும் மக்களும், பிற பெண்களை நாடும் மனிதர்களும் மற்ற மனிதர்கள் தம்மை பாலுறவுக்காப் பயன்படுத்த அனுமதிக்கும் மனிதர்களும், பிற மனிதர்களோடு பாலுறவு கொள்ளும் மனிதர்களும், களவு செய்வோரும், தன்னலம் உடையோரும், குடிப்பழக்கம் உள்ளவர்களும், தீயவற்றை பிறருக்குச் சொல்லும் மனிதர்களும், ஏமாற்றுவோர்களுமாகிய மனிதர்களும் தேவனுடைய இராஜ்யத்தை அடையமாட்டார்கள். 11 முன்னர் உங்களில் சிலரும் அவ்வாறு வாழ்ந்தீர்கள். ஆனால் நீங்கள் தூய்மையாய்க் கழுவப்பட்டீர்கள். நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். கர்த்தரின் பெயரால் தேவனோடு சரியானவர்களாக நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.
சரீரம்-தேவ மகிமைக்கு
12 “எல்லாப் பொருள்களும் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆனால், அனைத்துப் பொருள்களும் நல்லவை அல்ல. “எல்லாப் பொருள்களும் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆனால், எந்தப் பொருளும் எனக்கு எஜமானனாக நான் விடமாட்டேன். 13 “வயிற்றுக்கு உணவு. உணவுக்காக வயிறு” ஆம். ஆனால் தேவன் இரண்டையும் அழிப்பார். சரீரம் பாலுறவு தொடர்பான பாவத்திற்காக அமைந்ததன்று. ஆனால் சரீரம் கர்த்தருக்குரியது. மேலும் கர்த்தர் சரீரத்துக்குரியவர். 14 தேவனுடைய வல்லமையால் தேவன் கர்த்தராகிய இயேசுவை மரணத்தினின்று எழுப்பினார். தேவன் நம்மையும் மரணத்தினின்று எழுப்புவார். 15 உங்கள் சரீரமும் கிறிஸ்துவின் பாகங்கள் என்பது உங்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியும். எனவே, நான் கிறிஸ்துவின் பாகங்களை எடுத்து ஒரு வேசியின் பாகங்களோடு சேர்க்கக் கூடாது. 16 “இருவர் ஒன்றாவார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனால் வேசியோடு உடலுறவு கொண்ட ஒருவன் அவளோடு ஒன்றாகிறான் என்பது உங்களுக்குத் தெரியும். 17 ஆனால் தேவனோடு தன்னை இணைக்கிற மனிதன் ஆவியில் அவரோடு ஒன்றுபடுகிறான்.
18 உடலுறவிலான பாவத்தை விட்டு விலகுங்கள். ஒரு மனிதன் செய்கிற பிற பாவங்கள் அவன் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவையல்ல. உடலுறவு தொடர்பான பாவம் செய்கிறவன் தன் சரீரத்துக்கு எதிராகப் பாவம் செய்கிறான். 19 பரிசுத்த ஆவியானவர் தங்கும் இடமாக உங்கள் சரீரம் உள்ளது. பரிசுத்த ஆவியானவர் உங்களில் உள்ளார். தேவனிடமிருந்து பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றீர்கள். நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல. 20 தேவன் விலை கொடுத்து உங்களை மீட்டுக்கொண்டார். உங்களது சரீரத்தால் அவரை மகிமைப்படுத்துங்கள்.
திருமணம் குறித்த போதனைகள்
7 இப்போது, நீங்கள் எனக்கு எழுதிய விஷயங்களைக் குறித்து விவாதிப்பேன். ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. 2 ஆனால் பாலுறவினால் ஏற்படும் பாவம் எப்போதும் ஆபத்துக்குரியதென்பதால் ஒவ்வொரு ஆணும் தன் சொந்த மனைவியோடு வாழ்தல் வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அவளது சொந்தக் கணவனோடு இருத்தல் வேண்டும். 3 ஒரு மனைவி என்கிற அளவில் எவற்றையெல்லாம் கணவனிடமிருந்து பெறக்கூடுமோ, அவை அனைத்தையும் கணவன் அவனது மனைவிக்கு வழங்கவேண்டும். அவ்வாறே ஒரு கணவன் என்கிற அளவில் எவற்றையெல்லாம் மனைவியிடமிருந்து பெறக் கூடுமோ அவை அனைத்தையும் மனைவி தன் கணவனுக்கு வழங்குதல் வேண்டும். 4 மனைவிக்கு அவளது சரீரத்தின் மீது சொந்தம் பாராட்டும் அதிகாரம் கிடையாது. அவள் சரீரத்தின் மீது அவளது கணவனுக்கே அதிகாரம் உண்டு. கணவனுக்கு அவன் சரீரத்தின் மீது எந்த அதிகாரமும் கிடையாது. அவன் மனைவிக்கே அவனது சரீரத்தின்மீது அதிகாரம் உண்டு. 5 கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சரீரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பு தெரிவிக்காதீர்கள். ஆனால் விதிவிலக்காக சில காலத்திற்குப் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பதென்றால் நீங்கள் இருவருமாக ஒப்பந்தத்திற்கு வரவேண்டும். பிரார்த்தனையில் ஈடுபடுவதற்காக இதை நீங்கள் செய்யலாம். பின்னர் இருவரும் ஒருமித்து வாழ்தல் வேண்டும். இது எதற்காக எனில், பலவீனமான தருணங்களில் உங்களை சாத்தான் கவர்ந்திழுத்துவிடாமல் இருப்பதற்காகும். 6 நீங்கள் சில காலம் பிரிந்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்காகவே நான் இதனைச் சொல்கிறேன். இது கட்டளை அல்ல. 7 எல்லோரும் என்னைப் போல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் ஒவ்வொருவனும் அவனுக்குரிய வரத்தை தேவனிடம் இருந்து பெற்றிருக்கிறான். ஒருவனுக்கு ஒரு வகை வரமும், இன்னொருவனுக்கு வேறு வகை வரமும் அளிக்கப்படுள்ளன.
8 திருமணம் செய்யாதவர்களுக்காகவும், விதவைகளுக்காகவும் இப்போது இதனைக் கூறுகின்றேன். என்னைப்போல தனித்து வாழ்தல் அவர்களுக்கு நல்லது. 9 ஆனால் சுய கட்டுப்பாடு இல்லையெனில், அவர்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும். பாலுறவு ஆசையினால் வெந்துபோவதைக் காட்டிலும் திருமணம் புரிந்துகொள்வது நல்லது.
10 திருமணம் புரிந்தவர்களுக்காக இப்போது இந்தக் கட்டளையை இடுகிறேன். (இந்த ஆணை என்னுடையதன்று, ஆனால் கர்த்தருடையது) மனைவி கணவனை விட்டுப் பிரியக் கூடாது. 11 ஆனால், மனைவி கணவனைப் பிரிந்தால் அவள் மீண்டும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. அல்லது, அவளுடைய கணவனோடேயே நல்லுறவுடன் மீண்டும் வாழவேண்டும். கணவனும் மனைவியை விவாகரத்து செய்யக் கூடாது.
12 மற்ற எல்லாருக்காகவும் இதனைக் கூறுகிறேன். (நானே இவற்றைக் கூறுகிறேன். கர்த்தர் அல்ல) கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரன் விசுவாசமற்ற ஒருத்தியை மணந்திருக்கக்கூடும். அவள் அவனோடு வாழ விரும்பினால் அவன் அவளை விவாகரத்து செய்யக்கூடாது. 13 விசுவாசமற்ற கணவனோடு ஒரு பெண் வாழ்தல் கூடும். அவளோடு அவன் வாழ விரும்பினால், அவனை அவள் விவாகரத்து செய்யக் கூடாது. 14 விசுவாசமற்ற கணவன் விசுவாசம் உள்ள மனைவி மூலமாக பரிசுத்தமாக்கப்படுவான். விசுவாசமற்ற மனைவி விசுவாசமுள்ள கணவனால் பரிசுத்தமாக்கப்படுவாள். இது உண்மையில்லையெனில் உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் இப்போது உங்கள் பிள்ளைகள் பரிசுத்தமானவர்கள்.
15 விசுவாசமற்ற ஒருவன் விலக எண்ணினால், அவன் விலகி வாழட்டும். அவ்வாறு நிகழ்ந்தால் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரனோ அல்லது சகோதரியோ விடுதலை பெறுவார். அமைதி நிரம்பிய வாழ்க்கைக்காக தேவன் நம்மை அழைத்தார். 16 மனைவியே! நீ ஒருவேளை உன் கணவனை காப்பாற்றக் கூடும். கணவனே, நீ ஒருவேளை உன் மனைவியை காப்பாற்றக் கூடும். பிற்காலத்தில் நிகழப்போவதை நீங்கள் தற்சமயம் அறியமாட்டீர்கள்.
தேவன் அழைத்தபடியே வாழுங்கள்
17 தேவன் உங்களுக்குத் தந்த வாழ்வின்படியே ஒவ்வொருவனும் வாழ்ந்துகொண்டிருக்கட்டும். தேவன் உங்களை அழைத்தபோது நீங்கள் இருந்தபடியே வாழுங்கள். எல்லா சபைகளிலும் நான் உருவாக்கிய விதி இது தான். 18 அழைக்கப்பட்டபோது ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனாக இருந்தால், பின்னர் அதன் அடையாளங்களை மாற்ற அவன் முயற்சி செய்யக் கூடாது. அழைக்கப்பட்டபோது விருத்தசேதனம் செய்யப்படாதவனாக இருந்தால், பிறகு அவன் விருத்தசேதனம் செய்துகொள்ளக் கூடாது. 19 ஒருவன் விருத்தசேதனம் செய்யப்பட்டவனா, செய்யப்படாதவனா என்பது முக்கியமில்லை. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே முக்கியமான காரியம். 20 தேவன் அழைத்தபோது இருந்தபடியே ஒவ்வொருவனும் இருக்கட்டும். 21 தேவன் அழைத்தபோது நீ அடிமையாய் இருந்தால் நீ அதுபற்றிக் கவலைப்படாதே. ஆனால் நீ சுதந்தரமானவனாக இருந்தால், பிறகு எல்லாவகையிலும் வாய்ப்பைப் பயன்படுத்து. 22 கர்த்தர் அழைத்தபோது அடிமையாய் இருந்தவன் கர்த்தருக்குள் சுதந்தர மனிதனாக இருக்கிறான். அவன் கர்த்தருக்குரியவன். அழைக்கப்பட்டபோது சுதந்திர மனிதனாக இருந்தவனோ இப்போது கிறிஸ்துவுக்கு அடிமையாக இருக்கிறான். 23 நீங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டீர்கள். எனவே மனிதருக்கு அடிமை ஆகாதீர்கள். 24 சகோதரர்களே, சகோதரிகளே! தேவனோடான உங்கள் புது வாழ்க்கையில், உங்களில் ஒவ்வொருவரும் நீங்கள் அழைக்கப்பட்டபோது இருந்தபடியே வாழ்க்கையைத் தொடரவேண்டும்.
திருமணம் குறித்த கேள்விகள்
25 திருமணம் செய்துகொள்ளாதவர்களைப் பற்றி இப்போது எழுதுகின்றேன். கர்த்தரிடமிருந்து இது பற்றிய கட்டளை எதுவும் எனக்கு வரவில்லை. ஆனால், என் கருத்தைச் சொல்கிறேன். கர்த்தர் என்னிடம் இரக்கம் காட்டுவதால் என்னை நீங்கள் நம்பலாம். 26 இது சச்சரவுகளின் காலம். எனவே நீங்கள் இருக்கிறபடியே வாழ்வது உங்களுக்கு நல்லது என நினைக்கிறேன். 27 உங்களுக்கு மனைவி இருந்தால் அவளை விலக்கி வைக்க முற்படாதீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் ஒரு மனைவியைத் தேட முயலாதீர்கள். 28 ஆனால் நீங்கள் திருமணம் செய்ய முடிவுசெய்தால், அது பாவமல்ல திருமணமாகாத ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்துகொள்பவர்களுக்கோ இந்த வாழ்க்கையில் ஏராளமான தொல்லைகள். நீங்கள் அத்தொல்லைகளிலிருந்து விடுபட்டவர்களாய் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
29 சகோதர சகோதரிகளே, நான் கருதுவது இதுதான். நமக்கு அதிக காலம் தரப்படவில்லை. இப்போதிருந்தே மனைவியுள்ளவர்கள் மனைவி இல்லாதவர்களைப்போல தங்கள் நேரத்தை கர்த்தரின் சேவைக்காகப் பயன்படுத்துதல் வேண்டும். 30 துக்கம் உடையவர்கள் துக்கமில்லாதவர்களைப்போல வாழ்தல் வேண்டும். சந்தோஷம் உடையவர்கள் சந்தோஷம் அற்றவர்களைப் போல வாழவேண்டும். பொருள்களை வாங்கும் மனிதர்கள் ஏதுமற்றவர்கள்போல இருக்கவேண்டும். 31 இந்த உலகப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், அந்தப் பொருட்கள் முக்கியமானவை அல்ல என்பது போன்று வாழவேண்டும். இந்த உலகமும் இந்த உலகத்தின் வழிகளும் மறைந்துபோகும். எனவே, நீங்கள் இவ்வாறு வாழ வேண்டும்.
32 நீங்கள் கவலையினின்று விடுபட வேண்டுமென நான் விரும்புகிறேன். திருமணம்Ԕஆகாதவன் கர்த்தரின் வேலையில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறான். 33 ஆனால், திருமணமானவனோ உலகத்துப் பொருள்கள் தொடர்பான வேலைகளில் மும்முரமாய் ஈடுபடுகிறான். அவன் மனைவியை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறான். 34 அவன் இரண்டு காரியங்களை நினைவில் கொள்ள வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவதும், கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துவதும் ஆகியவை அவை. திருமணம் ஆகாத பெண்ணோ, ஒரு இளம்பெண்ணோ கர்த்தரின் வேலையில் முனைவாள். கர்த்தருக்கு சரீரத்தையும் ஆன்மாவையும் முழுக்க அர்ப்பணிக்க விரும்புகிறாள். ஆனால், திருமணமான பெண்ணோ உலகக் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுகிறாள். அவள் கணவனை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்கிறாள். 35 உங்களுக்கு உதவிசெய்வதற்காகவே இவற்றைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. ஆனால் நீங்கள் தக்க வழியில் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். உங்கள் நேரத்தைப் பிற பொருள்களுக்காகச் செலவிடாமல் உங்களை முழுக்க தேவனுக்குக் கொடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
36 ஒருவனின் மகள் திருமணமாகும் வயதைக் கடந்துவிட்டபட்சத்தில், அப்பெண்ணின் தந்தை அவளுக்குச் செய்யவேண்டியதைச் செய்யவில்லை என நினைக்கலாம். திருமணம் என்பது முக்கியமானது என அவன் நினைக்கலாம். தனக்கு விருப்பமானதைச் செய்யவேண்டும். திருமணம் செய்துகொள்ள அவளை அனுமதிக்க வேண்டும். அது பாவமல்ல. 37 ஆனால் இன்னொரு மனிதன் மனதில் திடமானவனாக இருக்கக்கூடும். அங்கு திருமணத்துக்குத் தேவையிராது. அவன் விருப்பப்படியே செய்ய அவனுக்கு உரிமையுண்டு. தனது கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் முடித்துவைக்க அவன் விரும்பாவிட்டால் அப்போது அவன் சரியான செயலையே செய்கிறான். 38 தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைப்பவனும் சரியான செயலைச் செய்கிறான். தனது கன்னிப் பெண்ணாகிய மகளைத் திருமணம் முடித்து வைக்காதவன் அதைக் காட்டிலும் சிறப்பான செயலைச் செய்கிறான். [b]
39 எவ்வளவு காலம் கணவன் உயிரோடு இருக்கிறானோ அதுவரைக்கும் ஒரு பெண் அவனோடு சேர்ந்து வாழ்தல் வேண்டும். ஆனால் அவள் கணவன் இறந்தால், அப்பெண் தான் விரும்புகிற யாரையேனும் மணந்துகொள்ளும் உரிமை பெறுகின்றாள். ஆனால், கர்த்தருக்குள் அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். 40 பெண் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சந்தோஷமாய் இருக்கிறாள். இது எனது கருத்து. தேவனுடைய ஆவி எனக்குள் இருப்பதாக நான் நம்புகிறேன்.
விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்ட உணவு
8 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி குறித்து இப்போது எழுதுவேன். “நாம் அறிவுடையவர்கள்” என்பது நம் அனைவருக்கும் தெரியும். “அறிவு” உங்களைப் பெருமை உடையவர்களாக மாற்றும். ஆனால், அன்பு பிறருக்கு உதவி செய்யுமாறு உங்களை மாற்றும். 2 தனக்கு ஏதோ தெரியுமென எண்ணுகிற ஒருவனுக்கு, இருக்க வேண்டிய அளவுக்கு ஞானம் இருப்பதில்லை. 3 ஆனால், தேவனை நேசிக்கிற மனிதனோ தேவனால் அறியப்பட்டவன்.
4 எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி உண்பதைப் பற்றி நான் கூறுவது இதுவே: விக்கிரகமானது இவ்வுலகத்தில் ஒரு பொருட்டல்ல என்பது நமக்குத் தெரியும். ஒரே ஒரு தேவனே உள்ளார் என்பதையும் நாம் அறிவோம். 5 பரலோகத்திலும் பூலோகத்திலும் தேவர்களாக அழைக்கப்படும் பல பொருள்கள் இருக்கின்றன. எனினும் அவை நமக்கு முக்கியமல்ல. “தேவனென்றும்,” “கர்த்தரென்றும்” மனிதர்கள் கருதுகின்ற பல பொருள்கள் உண்டு. 6 ஆனால் நமக்கோ ஒரே ஒரு தேவன் உள்ளார். அவர் நமது பிதாவே. எல்லாம் அவரிலிருந்தே வந்தன. நாம் அவருக்காக வாழ்கிறோம். ஒரே ஒரு கர்த்தரே உண்டு. அவர் இயேசு கிறிஸ்து ஆவார். எல்லாப் பொருள்களும் இயேசுவின் மூலமாக உண்டாக்கப்பட்டன. நாம் அவர் மூலமாகவே உயிரைப் பெறுகிறோம்.
7 ஆனால் எல்லோரும் இதனை அறியார். விக்கிரக வழிபாட்டுக்குப் பழகிப்போன சிலர் இருக்கிறார்கள். எனவே இறைச்சி உண்ணும்போது அது விக்கிரகத்துக்குரியது என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகிறது. இந்த இறைச்சியைச் சாப்பிடுவது சரியா என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அதனைச் சாப்பிடும்போது அவர்கள் குற்றமனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். 8 ஆனால், இறைச்சியுண்பது தேவனுக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லாது. இறைச்சியுண்ணாமையும் தேவனுக்குக் குறைவான மகிழ்ச்சியைத் தருபவர்களாக நம்மை ஆக்காது.
9 ஆனால், உங்கள் சுதந்திரத்தைக் குறித்துக் கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிமையற்ற மக்களை உங்கள் சுதந்திரம் பாவத்தில் விழக் காரணமாக இருக்கும். 10 உங்களுக்குப் புரிந்துகொள்ளும் திறமை இருக்கிறது. எனவே விக்கிரகங்களுக்குரிய கோயிலில் உண்பதை நீங்கள் இயல்பானதாகக் கருதலாம். ஆனால் விசுவாசம் குறைவுள்ள மனிதன் உங்களை அங்கு பார்க்கக் கூடும். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதற்கு அவன் முற்பட இது வழி வகுக்கும். ஆனால், அது சரியானதல்ல என்றும் அவன் நினைப்பான். 11 உங்கள் அறிவினால் பலவீனமான இந்தச் சகோதரன் அழிக்கப்படுவான். ஆனால் இந்தச் சகோதரனுக்காகவும் இயேசு மரித்தார். 12 கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சகோதர சகோதரிகளுக்கு எதிராக நீங்கள் இவ்வாறு பாவம் செய்தாலும் அவர்கள் தவறென நினைக்கிற காரியங்களைச் செய்யும்படியாகத் தூண்டி அவர்களைத் துன்புறுத்தினாலும் நீங்கள் கிறிஸ்துவுக்கு எதிராக பாவம் செய்கின்றீர்கள். 13 நான் உண்ணும் உணவு எனது சகோதரனைப் பாவம் செய்யத் தூண்டினால் நான் மீண்டும் இறைச்சி சாப்பிடவேமாட்டேன். எனது சகோதரன் மீண்டும் பாவம் செய்யாதபடி இறைச்சி உண்ணுவதை விட்டுவிடுவேன்.
2008 by World Bible Translation Center