Beginning
1 கிறிஸ்து இயேசுவின் ஒரு அப்போஸ்தலனாக இருக்கும்பொருட்டு பவுலாகிய நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் ஒரு அப்போஸ்தலனாக வேண்டுமென தேவன் விரும்பினார். என்னிடமிருந்தும், நம் சகோதரர் சொஸ்தெனேயிடமிருந்தும் இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது.
2 கொரிந்து பட்டணத்தின் சபைக்கும் கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்கும் இந்தக் கடிதம் எழுதப்படுகிறது. தேவனுடைய பரிசுத்த மக்களாக நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். அவர்களுக்கும் நமக்கும் கர்த்தராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் பெயரில் நம்பிக்கை வைத்து எங்கெங்கும் இருக்கிற மக்களுடன் இணைந்து நீங்களும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
3 நம் பிதாவாகிய தேவனிடமிருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபையும், சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.
பவுல் தேவனுக்கு நன்றி கூறுதல்
4 கிறிஸ்து இயேசு மூலமாக தேவன் உங்களுக்கு அளித்த கிருபைக்காக நான் எப்போதும் என் தேவனுக்கு உங்களுக்காக நன்றி சொல்வேன். 5 இயேசுவில் எல்லா வகையிலும் நீங்கள் ஆசி பெற்றிருக்கிறீர்கள். உங்கள் எல்லா பேச்சிலும், எல்லாவகை அறிவிலும் நீங்கள் ஆசி பெற்றுள்ளீர்கள். 6 கிறிஸ்துவைப் பற்றிய உண்மை உங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 7 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மறு வருகைக்காக நீங்கள் காத்திருக்கையில் தேவனிடமிருந்து பெற வேண்டிய வெகுமதி யாவும் பெற்றுள்ளீர்கள். 8 இயேசு இறுதி வரைக்கும் உங்களை பலமுடையவர்களாக ஆக்குவார். அவர் உங்களை பலசாலிகளாக மாற்றுவதால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வருகை தரும் அந்நாளில் உங்களிடம் எந்தத் தவறும் காணப்படாது. 9 தேவன் நம்பிக்கைக்குரியவர். தேவனாகிய ஒருவரே உங்களைத் தம் குமாரானாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும்படியாக அழைத்தார்.
கொரிந்து சபையில் பிரச்சனைகள்
10 சகோதர சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரினால் உங்களை ஒன்று வேண்டுகிறேன். நீங்கள் ஒருவரோடு ஒருவர் கருத்தொற்றுமையுடன் வாழ வேண்டுகிறேன். அப்போது உங்களுக்குள் பிரிவினைகள் ஏற்படாது. ஒரே விதமான சிந்தனையும், ஒரே நோக்கமும் கொண்டு முழுக்க இணைந்தவர்களாய் நீங்கள் வாழ வேண்டுமென வேண்டுகிறேன்.
11 எனது சகோதர சகோதரிகளே! குலோவேயாளின் குடும்பத்தினர் சிலர் உங்களைப்பற்றி என்னிடம் கூறினர். உங்களுக்கிடையில் வாக்குவாதங்கள் இருக்கின்றன என நான் கேள்விப்பட்டேன். 12 நான் கூற விரும்புவது இது தான்: உங்களில் ஒருவர் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். மற்றொருவர் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னொருவர் “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னும் ஒருவர் “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். 13 கிறிஸ்துவைப் பலவகைக் குழுக்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது! சிலுவையில் பவுல் உங்களுக்காக மரித்தானா? இல்லை. பவுலின் பெயரால் நீங்கள் ஞானஸ்நானம் அடைந்தவர்களா? இல்லை. 14 கிறிஸ்பு மற்றும் காயு தவிர வேறு எவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை என்பதில் தேவனுக்கு நன்றியுடைவனாயிருக்கிறேன். 15 எனது பெயரில் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள் என எவரும் இப்போது கூற முடியாது என்பதால் நான் தேவனுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். 16 ஸ்தேவான் குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். ஆனால் வேறெவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. 17 மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் வேலையைக் கிறிஸ்து எனக்குத் தரவில்லை. நற்செய்தியை மக்களுக்குக் கூறும் வேலையையே கிறிஸ்து எனக்கு அளித்தார். ஆனால் உலகத்து ஞானத்தைக் காட்டும் சொற்களைப் பயன்படுத்தாமல் நற்செய்தியை மட்டும் சொல்லவே இயேசு கிறிஸ்து என்னை அனுப்பினார். நற்செய்தியைக் கூற உலக ஞானத்தை நான் பயன்படுத்தினால், அப்போது கிறிஸ்துவின் சிலுவை அர்த்தமற்றதாகிவிடும்.
கிறிஸ்துவில் காணப்படும் ஞானம்
18 கெட்டுப்போகிற மக்களுக்குச் சிலுவை பற்றிய போதனை முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ, அது தேவனுடைய வல்லமையாகும்.
19 “நான் ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன்.
நான் மேதைகளின் அறிவைப் பயனற்றதாக்குவேன்.” (A)
என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டு இருக்கிறது.
20 தற்காலத்தின் ஞானி எங்கே? கல்வியில் தேர்ந்தவன் எங்கே? இன்றைய தத்துவஞானி எங்கே? உலகத்து ஞானத்தை தேவனே மடமையாக மாற்றினார். 21 தேவன் தனது ஞானத்தினால் விரும்பியது இதுவே: உலகத்தின் ஞானத்தால், உலகம் தேவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. தேவனை விசுவாசிக்கிற மக்களைக் காக்கும்பொருட்டு மடமையாய்த் தோன்றும் தனது செய்தியை தேவன் பயன்படுத்தினார்.
22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 24 ஆனால், தேவன் தேர்ந்துள்ள யூதருக்கும், கிரேக்கருக்கும் கிறிஸ்துவே தேவனின் வல்லமையும், தேவஞானமும் ஆவார். 25 தேவனுடைய மடமை கூட மனிதரின் ஞானத்திலும் சிறந்தது. தேவனுடைய சோர்வும் கூட மனிதரின் பலத்தைக் காட்டிலும் வலிமை உடையது.
26 சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்துள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர். 27 ஞானிகளுக்கு வெட்கத்தைத் தரும்படியாக தேவன் உலகத்தின் முட்டாள்தனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். பலவான்களான மனிதர்களை அவமதிக்க உலகத்தின் பலவீனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். 28 உலகம் முக்கியமற்றதென்று நினைப்பதை தேவன் தேர்ந்துகொண்டார். உலகம் வெறுப்பதையும், பயனற்றதெனக் கருதுவதையும் அவர் தேர்ந்தெடுத்தார். முக்கியமென உலகம் பார்க்கிறவற்றை அழிப்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார். 29 எந்த மனிதனும் தேவனுக்கு முன்பு தற் பெருமை அடையாதபடிக்கு தேவன் இப்படிச் செய்தார். 30 உங்களைக் கிறிஸ்து இயேசுவின் ஒரு பாகமாகும்படி செய்தவர் தேவனே, தேவனிடம் இருந்து கிறிஸ்து நமக்கு ஞானமாக இருக்கிறார். பாவத்தில் இருந்து விடுதலை அடையவும், தேவனோடு இணக்கமாக இருக்கவும் கிறிஸ்துவே காரணமாவார். நாம் பரிசுத்தமாய் இருப்பதற்கும் கிறிஸ்துவே காரணமாவார். 31 எனவே எழுதப்பட்டுள்ளபடி “ஒருவர் பெருமைப்படுவதாக இருந்தால், தேவனில் மட்டுமே பெருமைப்பட வேண்டும்.” [a]
சிலுவையைப் பற்றிய செய்தி
2 அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களிடம் வந்தபோது தேவனுடைய உண்மையை உங்களுக்குச் சொன்னேன். ஆனால் அதிகமான ஞானத்தையோ, அழகிய வார்த்தைகளையோ நான் உபயோகிக்கவில்லை. 2 உங்களோடு இருக்கையில் இயேசு கிறிஸ்துவையும் அவரது சிலுவை மரணத்தையும் தவிர பிற அனைத்தையும் மறப்பேன் என முடிவெடுத்தேன். 3 நான் உங்களிடம் வந்தபோது மிகவும் சோர்வாகவும், பயத்தால் நடுங்கிக்கொண்டும் இருந்தேன். 4 எனது போதனையும் பேச்சும் வலியுறுத்திச் சொல்லும் ஆற்றலுள்ள ஞானம் பொருந்திய வார்த்தைகளைக்கொண்டனவாய் இருக்கவில்லை. பரிசுத்தாவி கொடுக்கின்ற வல்லமையே எனது போதனைக்கு நிரூபணம் ஆகும். 5 உங்கள் விசுவாசம் தேவனுடைய வல்லமையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், மனிதனின் ஞானத்தில் இருக்கக் கூடாதென்பதற்காகவும் நான் இவ்வாறு செய்தேன்.
தேவனுடைய ஞானம்
6 பக்குவமடைந்த மக்களுக்கே நாம் ஞானத்தைப் போதிக்கிறோம். ஆனால் நாம் போதிக்கும் இந்த ஞானம் இவ்வுலகத்திலிருந்து வருவதல்ல. இந்த உலகத்து ஆட்சியாளர்களின் ஞானமும் இதுவல்ல. அந்த ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து வருகின்றனர். 7 ஆனால் நாம் தேவனுடைய இரகசியமான ஞானத்தைப் பேசுகிறோம். மக்களிடமிருந்து இந்த ஞானம் மறைக்கப்பட்டுள்ளது. நமது மகிமைக்காக தேவன் இந்த ஞானத்தைத் திட்டமிட்டார். உலகம் தோன்றுவதற்கு முன்பே தேவன் இதைத் திட்டமிட்டார். 8 இந்த உலகத்தில் எந்த ஆட்சியாளனும் இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அவர்கள் அதனைப் புரிந்துகொண்டிருந்தால் மகிமையின் கர்த்தரை சிலுவையில் கொன்றிருக்கமாட்டார்கள். 9 ஆனால்,
“தேவன் தன்னை நேசிக்கும் மக்களுக்காகச்
செய்த ஏற்பாட்டை எந்த கண்ணும் பார்க்கவில்லை.
எந்தக் காதும் கேட்கவில்லை,
எந்த மனிaதனும் எண்ணிப் பார்த்ததில்லை” (B)
என்று எழுதப்பட்டிருக்கிறது.
10 ஆனால், தேவன் இவற்றை ஆவியானவரின் மூலமாக எங்களுக்குக் காட்டியுள்ளார்.
ஆவியானவர் எல்லாவற்றையும் அறிவார். தேவனுடைய ஆழ்ந்த அந்தரங்கங்களையும் பரிசுத்த ஆவியானவர் அறிவார். 11 அதை இப்படி விளக்கலாம்: ஒருவர் அடுத்தவருடைய எண்ணங்களை அறிய முடியாது. அவனுக்குள்ளிருக்கிற அவனுடைய ஆவியே அறியும். அதுவே தேவனுக்கும் பொருந்தும். தேவனுடைய ஆவியானவர்தான் அந்த எண்ணங்களை அறிவார். 12 நாம் உலகின் ஆவியைக்கொண்டிருக்கவில்லை. நாம் தேவனிடமிருந்து அவரது ஆவியானவரைப் பெற்றோம். தேவன் நமக்குக் கொடுத்துள்ள பொருள்களை அறியுமாறு நாம் ஆவியானவரைப் பெற்றோம்.
13 நாம் இவற்றைப் பேசும்போது மனிதனுக்குள்ள ஞானத்தால் நாம் அறிவிக்கப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. பரிசுத்த ஆவியானவர் அறிவித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். ஆன்மீகக் கருத்துகளை விளக்க ஆன்மீகமான சொற்களையே பயன்படுத்துகிறோம். 14 ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடாத மனிதன் தேவனுடைய ஆவியானவரிடமிருந்து வரும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவன் அவற்றை மடமையாகக் கருதுகிறான். அவன் ஆவியானவர் கருதுவனவற்றை புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவை ஆன்மீகமாகவே புரிந்துகொள்ளப்படக் கூடும். 15 ஆனால், ஆன்மீக உணர்வுள்ளவனோ எல்லாவற்றைப் பற்றியும் நியாயம் தீர்க்கமுடியும். மற்றவர்கள் அவனை நியாயம் தீர்க்க முடியாது.
16 “யார் தேவனுடைய எண்ணத்தை அறிவார்?
யார் தேவனுக்கு அறிவுறுத்துவார்கள்?” (C)
என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு கிறிஸ்துவின் சிந்தனை இருக்கிறது.
மனிதனைப் பின்பற்றுவது தவறு
3 சகோதர சகோதரிகளே, கடந்த காலத்தில்ஆன்மீகமானவர்களிடம் பேசுவதைப் போல நான் உங்களிடம் பேச முடியாமல் போயிற்று. கிறிஸ்துவில் குழந்தைகளைப் போன்று, உலகின் சாதாரண மக்களிடம் பேசுவதைப் போன்று உங்களிடம் பேச வேண்டியதாயிற்று. 2 நான் உங்களுக்குக் கற்பித்தவை பாலைப் போன்றது, திட உணவைப் போன்றவை அல்ல. ஏனெனில் திட உணவை உட்கொள்ளுமளவிற்கு நீங்கள் பக்குவம் பெறவில்லை. இப்போதும்கூட திட உணவை ஏற்கும் தகுதியை நீங்கள் பெறவில்லை. 3 நீங்கள் இன்னும் ஆன்மீகமான மக்கள் அல்ல. உங்களுக்குப் பொறாமையும், வாதாடுகிற குணமும் உண்டு. இது நீங்கள் ஆன்மீகமானவர்கள் அல்ல என்பதைக் காட்டுகிறது. உலகின் சாதாரண மக்களைப் போலவே நீங்களும் நடந்துகொள்கின்றீர்கள். 4 உங்களில் ஒருவன் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்”எனவும், இன்னொருவன் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” எனவும் கூறுகிறீர்கள். நீங்கள் அப்படிப்பட்டவற்றைக் கூறும்போது நீங்களும் உலகின் சாதாரண மக்களைப் போல நடந்துகொள்கிறீர்கள்.
5 அப்பொல்லோ முக்கியமானவனா? இல்லை. பவுல் முக்கியமானவனா? இல்லை. நீங்கள் விசுவாசிப்பதற்கு உதவிய தேவனுடைய பணியாட்களே நாங்கள். தேவன் எங்களுக்கு இட்ட பணியையே நாங்கள் ஒவ்வொருவரும் செய்தோம். 6 நான் விதையை விதைத்தபோது, அப்பொல்லோ நீரூற்றினான். ஆனால் தேவன் ஒருவரே விதையைத் துளிர்த்து வளரும்படியாகச் செய்தார். 7 எனவே விதையை விதைக்கின்ற மனிதன் முக்கியமானவன் அல்ல. அதற்கு நீரூற்றுகின்ற மனிதனும் முக்கியமானவன் அல்ல. எல்லாவற்றையும் வளர்ச்சியுறும்படி செய்கின்றவராகிய தேவன் ஒருவரே முக்கியமானவர். 8 விதையை விதைப்பவனுக்கும், நீரூற்றிப் பேணுபவனுக்கும் குறிக்கோள் ஒன்றே. தன் வேலைக்குரிய வெகுமதியை ஒவ்வொருவனும் பெறுவான். 9 நாங்கள் தேவனுக்காக ஒருமித்து உழைக்கிற வேலையாட்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு நிலத்தைப் போன்றவர்கள்.
நீங்களே தேவனுக்குரிய ஒரு வீட்டைப் போன்றவர்கள். 10 சிறந்த வீட்டைக் கட்டும் வேலையாளைப் போன்று நான் வீட்டின் அஸ்திபாரத்தைக் கட்டினேன். தேவன் எனக்கு அளித்த வரத்தை நான் அதற்குப் பயன்படுத்தினேன். மற்றவர்கள் அந்த அஸ்திபாரத்தின் மீது கட்டுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவனும் அதனை எவ்வாறு கட்டுகிறான் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். 11 அஸ்திபாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறெந்த அஸ்திபாரத்தையும் ஒருவரும் அமைக்க முடியாது. ஏற்கெனவே கட்டப்பட்ட அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவாகும். 12 பொன், வெள்ளி, மணிகள், மரம், புல், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தி ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மீது கட்டமுடியும். 13 ஒவ்வொருவனின் வேலையும் இறுதியில் (கிறிஸ்து மக்களை நியாயம் தீர்க்கிற நாளில்) பகிரங்கப்படுத்தப்படும். அந்த நாளில் ஒவ்வொருவனின் பணியையும் அக்கினி சோதிக்கும். 14 அஸ்திபாரத்தில் ஒருவன் கட்டிய கட்டிடம் நிலைக்குமாயின் அவன் தகுந்த நற்பலன் பெறுவான். 15 ஆனால், ஒருவனின் கட்டிடம் எரிந்து போகுமானால் அவன் நஷ்டம் அடைவான். அந்த மனிதன் காப்பாற்றப்படுவான். எனினும் அக்கினியினின்று தப்பி வந்தாற்போன்று ஒரு நிலையை அவன் அடைவான்.
16 நீங்களே தேவனுடைய ஆலயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார். 17 தேவனுடைய ஆலயத்தை அழிக்கும் ஒருவனை தேவன் அழிப்பார். ஏன்? தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது. நீங்கள் தேவனுடைய ஆலயமாவீர்கள்.
18 உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவன் தன்னை இவ்வுலகில் ஞானமுள்ளவனாக நினைத்தால் அவன் முட்டாளாக வேண்டும். இந்த வகையில் அவன் உண்மையான ஞானியாகிறான். 19 ஏன்? ஏனெனில் இந்த உலகத்து ஞானத்தை தேவன் மடமையானதாகவே கருதுகிறார். அது வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. “அவர் ஞானிகள் தங்கள் தந்திர வழிகளைப் பயன்படுத்துகையில் அவர்களை மடக்கிப் பிடிக்கிறார்” [b] என்று எழுதப்பட்டிருக்கிறது. 20 தேவன் ஞானிகளின் எண்ணத்தை அறிவார். அவர்களுடைய எண்ணங்கள் பயனற்றவை என்பதை தேவன் அறிவார். [c] 21 எனவே, நீங்கள் மனிதரைப்பற்றி பெருமைப் பாராட்டாதீர்கள். எல்லாப் பொருள்களும் உங்களுக்கு உரியனவே. 22 பவுல், அப்பொல்லோ, கேபா, உலகம், வாழ்வு, மரணம், நிகழ்காலம், எதிர்காலம் இவை எல்லாம் உங்களுடையவையே. 23 நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்து தேவனுக்கு உரியவர்.
கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள்
4 மக்கள் நம்மைப்பற்றி நினைக்க வேண்டியது இதுவாகும். நாம் கிறிஸ்துவின் பணியாட்களே. தேவன் தமது இரகசியமான உண்மைகளை ஒப்படைத்திருக்கிற மக்கள் நாமே. 2 ஒரு விஷயத்தில் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கிற ஒருவன் அந்நம்பிக்கைக்குத் தான் தகுதியானவனே என்று காட்ட வேண்டும். 3 நீங்கள் எனக்கு நீதி வழங்கினால் அதைப் பொருட்படுத்தமாட்டேன். எந்த உலகத்து நீதிமன்றமும் எனக்கு நியாயம் தீர்ப்பதைக் கூடப் பொருட்டாகக்கொள்ளமாட்டேன். நான் எனக்கு நீதி வழங்கமாட்டேன். 4 நான் எந்தத் தவறும் இழைத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னைக் களங்கம் அற்றவனாக மாற்றாது. என்னை நியாயம் தீர்க்கிறவர் கர்த்தர் ஒருவரே. 5 எனவே தகுந்த நேரம் வரும் முன்பு நீதி வழங்காதீர்கள். கர்த்தர் வரும்வரை காத்திருங்கள் அவர் இருளில் மறைந்திருப்பவற்றின் மீது ஒளியை அனுப்புவார். மக்களின் மனதிலிருக்கும் இரகசியமான விஷயங்களை அவர் வெளிப்படுத்துவார். ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கீர்த்தியை அவனவனுக்குக் கிடைக்கும்படியாகச் செய்வார்.
6 சகோதர சகோதரிகளே! அப்பொல்லோவையும், என்னையும் இவற்றில் உதாரணங்களாக நான் உங்களுக்குக் காட்டினேன். எழுதப்பட்டுள்ள சொற்களின் பொருளை எங்களிடமிருந்து நீங்கள் அறிந்துகொள்ளுமாறு இதைச் செய்தேன். “வேத வாக்கியங்களில் எழுதி இருப்பதைப் பின்பற்றி நடவுங்கள்.” அப்போது நீங்கள் ஒருவனைக் குறித்துப் பெருமை பாராட்டி, இன்னொருவனை வெறுக்கமாட்டீர்கள். 7 நீங்கள் பிற மக்களை விட சிறந்தவர்கள் என்று யார் கூறினார்கள்? உங்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றையே நீங்கள் அனுபவிக்கிறீர்கள். உங்களுக்குத் தரப்பட்டவையே உங்களுக்கு வாய்த்திருக்கையில் அவற்றை உங்கள் வல்லமையால் பெற்றதாக நீங்கள் ஏன் பெருமை அடைய வேண்டும்?
8 உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் நீங்கள் பெற்றிருப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் செல்வந்தர்களென எண்ணுகிறீர்கள். எங்கள் உதவியின்றி நீங்கள் ஆளுபவர்களாக விளங்குவதாகக் கருதுகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே மன்னர்களாக விளங்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போது, நாங்களும் உங்களோடுகூட ஆளுபவர்களாக இருந்திருப்போம். 9 ஆனால் தேவன் எனக்கும் பிற அப்போஸ்தலர்களுக்கும் கடைசியான இடத்தையே கொடுத்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எல்லோரும் பார்த்திருக்க மரண தண்டனை அளிக்கப்பட்ட மனிதர்களைப் போன்றவர்கள் நாங்கள். தேவ தூதர்களும் மனிதர்களும் முழு உலகமும் பார்த்திருக்கும் ஒரு காட்சியைப் போன்றவர்கள் நாங்கள். 10 கிறிஸ்துவுக்கு நாங்கள் மூடர்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் ஞானிகளாக நீங்கள் உங்களைக் கருதுகிறீர்கள். நாங்கள் பலவீனர்கள். ஆனால் நீங்கள் பலசாலிகளாக நினைக்கிறீர்கள். மக்கள் உங்களை கௌரவிக்கின்றனர். ஆனால் அவர்கள் எங்களை கௌரவப்படுத்துவதில்லை. 11 இப்போதும் குடிப்பதற்கும், உண்பதற்கும் தேவையான பொருள்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. எங்களுக்கு வேண்டிய ஆடைகள் இருப்பதில்லை. அவ்வப்போது பிறரால் அடிக்கப்படுகிறோம். எங்களுக்கு வீடுகள் இல்லை. 12 எங்களுக்குத் தேவையான உணவின்பொருட்டு எங்கள் கைகளால் கடினமாக உழைக்கிறோம். மக்கள் எங்களை சபிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்கிறோம். நாங்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறபோது பொறுமையுடன் சகித்துக்கொள்கிறோம். மக்கள் குறை கூறுகையில் பொறுத்துக்கொள்கிறோம். 13 மக்கள் எங்களைக் குறித்துத் தீமைகளைப் பேசினாலும், நாங்கள் அவர்களைக் குறித்து நல்லவற்றையே பேசுகிறோம். பூமியின் கழிவுப் பொருள்களாகவும், அழுக்காகவுமே மக்கள் எங்களை இதுவரைக்கும் நடத்தி வந்துள்ளனர்.
14 நீங்கள் வெட்கமடையுமாறு செய்ய நான் முயலவில்லை. உங்களை எனது சொந்தக் குழந்தைகளெனக் கருதி இவற்றையெல்லாம் உங்களுக்கு முன் எச்சரிக்கையாய் எழுதுகிறேன். 15 கிறிஸ்துவில் பதினாயிரம் போதகர்களை நீங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் உங்களுக்குப் பல தந்தையர் இல்லை. நற்செய்தியின் மூலமாகக் கிறிஸ்து இயேசுவில் நான் உங்களுக்குத் தந்தையானேன். 16 நீங்களும் என்னைப் போலவே இருக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன். 17 அதனாலேயே நான் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன். கர்த்தருக்குள் அவன் என் மகன் ஆவான். நான் தீமோத்தேயுவை நேசிக்கிறேன். அவன் உண்மையுள்ளவன். கிறிஸ்து இயேசுவில் என் வாழ்வின் நெறியை நீங்கள் நினைவுகூருவதற்கு அவன் உதவி செய்வான். எல்லா சபைகளிலும் அந்த வாழ்க்கை நெறியையே நான் போதிக்கிறேன்.
18 நான் உங்களிடம் மீண்டும் வரமாட்டேன் என எண்ணி உங்களில் சிலர் தற்பெருமையால் நிரம்பி இருக்கிறீர்கள். 19 ஆனால் மிக விரைவில் உங்களிடம் வருவேன். தேவன் நான் வரவேண்டுமென விரும்பினால் நான் வருவேன். அப்போது தற் பெருமை பாராட்டுவோர் சொல்வதை அல்ல, செயலில் காட்டுவதைக் காண்பேன். 20 தேவனுடைய இராஜ்யம் பேச்சல்ல, பெலத்திலே என்பதால் இதைக் காண விரும்புகிறேன். 21 உங்கள் விருப்பம் என்ன? நான் உங்களிடம் தண்டனை தர வருவதா? அல்லது அன்பு, மென்மை ஆகியவற்றோடு வருவதா?
2008 by World Bible Translation Center