Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ரோமர் 11-13

தன் மக்களை மறவாத தேவன்

11 “தேவன் தன் மக்களைத் தூரமாகத் தள்ளி விட்டாரா?” என்று நான் கேட்கிறேன். இல்லை. நானும் ஒரு யூதன் தான். நான் ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து வந்துள்ளேன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இஸ்ரவேல் மக்கள் பிறப்பதற்கு முன்னரே அவர்களைத் தம் மக்களாக தேவன் தேர்ந்தெடுத்து விட்டார். தேவன் அவர்களைத் தூரத் தள்ளிவிடவில்லை. எலியாவைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் உறுதியாக அறிவீர்கள். இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக எலியா தேவனிடம் வேண்டினார். “கர்த்தரே! இந்த மக்கள் உமது தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். உமது பலிபீடங்களை அழித்தனர். நான் மட்டுமே மிஞ்சியிருக்கிறேன். இப்பொழுது அவர்கள் என்னையும் கொன்று போட முயற்சி செய்கின்றனர்” [a] என்றார் எலியா. இதற்கு தேவன் என்ன பதில் சொன்னார் தெரியுமா? “பாகால் என்னும் தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு வணங்காத 7,000 பேரை நான் எனக்காக மீதியாய் வைத்திருக்கிறேன்” [b] என்றார்.

இப்பொழுதும் அதேபோலத்தான். தேவன் சிலரைக் கருணையால் தேர்ந்தெடுத்துள்ளார். தேவன் தன் மக்களைக் கருணையால் தேர்ந்தெடுத்துள்ளதால் அது அவர்களது செய்கைகளால் அல்ல என்றாகிறது. தேவன் மக்களை அவர் தம் செய்கைகளால் தேர்ந்தெடுத்திருந்தால் அது கருணையால் அல்ல என்றும், செயல்களினிமித்தம் காட்டப்படும் கருணை உண்மையான பரிசாகாது என்றும் தெரிகிறது.

அப்படியானால் நடந்தது இதுதான். இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கேற்ற நீதிமான்களாக முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் தோல்வியுற்றனர். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீதிமான்களாகச் செயல்புரிகிறார்கள். மற்றவர்களோ முரடர்களாகவும், தேவனுடைய வார்த்தைகளைக் கவனிக்க மறுப்பவர்களாகவும் உள்ளனர். “மக்களின் உணர்ச்சியை தேவன் மறக்கச் செய்தார்” என்றும் அதனால்,

“தேவன் அவர்களின் கண்களை மூடினார்.” (A)

“அதனால் அவர்களால் உண்மையைப் பார்க்க முடியவில்லை.
    தேவன் அவர்களின் காதுகளை மூடினார்.
அதனால் அவர்களால் உண்மையாகக் கேட்க முடியவில்லை.
    இது இன்றும் தொடர்கிறது”. (B)

என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

“அவர்களின் சொந்த விருந்துகளே அவர்கள் வலையாகவும், கண்ணியாகவும் ஆகட்டும்.
    அவர்கள் விழுந்து தண்டிக்கப்படட்டும்.
10 உண்மையைக் காண இயலாதபடி அவர்களின் கண்கள் மூடிப் போகட்டும்.
    அவர்கள் என்றென்றைக்கும் துன்பத்தில் இருக்கட்டும்” என்று தாவீது கூறியிருக்கிறார். (C)

11 “யூதர்கள் அழிந்துபோகிற அளவுக்கா தடுக்கிவிழுந்தார்கள்?” என்று கேட்கிறேன். இல்லை. அவர்களின் தவறுகள் மற்ற யூதர் அல்லாதவர்களுக்கு இரட்சிப்பாயிற்று. இதனால் யூதர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. 12 யூதர்களின் தவறு உலகத்துக்கு அதிக ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தது. அவர்களின் குறைவு யூதரல்லாதவர்களுக்கு அதிக ஆசீர்வாதமாய் ஆயிற்று. யூதர்கள் தேவனுக்கேற்றவர்களாக ஆகும்வரை இன்னும் எவ்வளவு ஆசீர்வாதங்கள் வரும் எனக் கற்பனை செய்யுங்கள்.

13 நான் இப்போது யூதரல்லாத மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். நான் யூதரல்லாதவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன். என்னால் முடிந்தவரை என் வேலைகளை முடிக்க வேண்டும். 14 நான் என் நாட்டு மக்களை வைராக்கியம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். இந்த வழியில் அவர்களில் சிலரையாவது இரட்சிப்பிற்குள் கொண்டுவர உதவமுடியும். 15 தேவன் யூதர்களிடமிருந்து விலகிக்கொண்டார். உலகிலுள்ள மற்றவர்களுக்கு அவர் நெருக்கமானார். அவர் யூதர்களை ஏற்றுக்கொள்ளும்போது, அவரது மக்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவது உறுதியாக இருக்கும். 16 ஒரு அப்பத்தின் முதல் துண்டு தேவனுக்குப் படைக்கப்படுமானால் மற்றக் முழுதும் புனிதமாகிவிடும். ஒரு மரத்தின் வேர்கள் புனிதமாய் இருந்தால் மற்ற கிளைகளும்கூட புனிதமாகிவிடும்.

17 ஒலிவ மரத்தின் சில கிளைகளை ஒடித்தெறிந்து விட்டு அந்த இடத்தில் காட்டு ஒலிவ மரத்தின் கிளைகளை ஒட்ட வைத்தால் எப்படி இருக்ககுமோ அப்படி இருக்கிறீர்கள். யூதரல்லாத நீங்கள் காட்டு ஒலிவ மரத்தைப் போன்றவர்கள். யூதரல்லாத நீங்கள் யூதர்களோடு இணைத்து வைக்கப்பட்டு, நீங்களும் அதே வேர்களைப் பங்கிட்டு, மரச் சாற்றிலிருந்து குடிக்கிறீர்கள். யூதர்களின் பலனையும் பெறுகின்றீர்கள். 18 நீங்கள் அந்தக் கிளைகளைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். அதற்கான எந்தக் காரணமும் உங்களுக்கு இல்லை. நீங்கள் வேர்களுக்கு உயிர்கொடுக்கவில்லை. வேர்களே உங்களுக்கு உயிரைக் கொடுக்கின்றன. 19 “நான் ஒட்டவைக்கப்படுவதற்காகவே அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டதென்று சொல்லுகிறாயே.” 20 அது உண்மை. ஆனால் விசுவாசம் இல்லாததால்தான் அக்கிளைகள் முறிக்கப்பட்டன. உனது விசுவாசத்தினால்தான் நீ அந்த மரத்தின் ஒரு பகுதியானாய். இதற்காகப் பெருமைப்படாதே, பயப்படு. 21 உண்மையான கிளைகளை மரத்தோடு நிலைத்திருக்க தேவன் அனுமதிக்கவில்லை என்றால் நீ விசுவாசம் இழந்துவிட்டால் உன்னையும் இணைந்து இருக்க அனுமதிக்கமாட்டார்.

22 தேவன் இரக்கமுடையவர் எனினும் பயங்கரமானவரும் கூட என்பதை அறிந்துகொள். தன்னைப் பின்பற்றுவதை நிறுத்துகின்ற மக்களை அவர் தண்டிக்கிறார். நீங்கள் அவரைப் பின்பற்றினால் அவர் உங்களிடம் அன்போடு இருப்பார். நீங்கள் அவரைப் பின்பற்றுவதை நிறுத்தினால் மரத்திலிருந்து வெட்டியெறியப்படுவீர்கள். 23 மீண்டும் யூதர்கள் தேவன் மீது விசுவாசம் வைக்கத் தொடங்கினால் தேவன் மீண்டும் அவர்களை ஏற்றுக்கொள்வார். அவர்கள் துவக்கத்தில் எப்படியிருந்தார்களோ அப்படி அவர்களை தேவன் உருவாக்குவார். 24 காட்டுமரக் கிளைகள் ஒரு ஒலிவ மரத்தின் கிளையாக ஒட்டி வளர்வது இயற்கையன்று, யூதரல்லாதவர்களாகிய நீங்கள் காட்டு ஒலிவ மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளைகளைப் போன்றவர்கள். இப்பொழுது நல்ல ஒலிவ மரத்தோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள். யூதர்களோ நல்ல ஒலிவமரத்தில் வளர்ந்த கிளைகளைப் போன்றவர்கள். எனவே, நிச்சயமாக அவர்கள் தங்கள் சொந்த மரத்தில் மீண்டும் ஒட்டிக்கொள்வார்கள்.

25 சகோதர சகோதரிகளே, நீங்கள் இந்த இரகசிய உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த உண்மையானது உங்களுக்குப் புரியாததைப் புரிந்துகொள்ள உதவும். “இஸ்ரவேலின் ஒரு பகுதியினருக்குக் கடின இதயம் உண்டாயிருக்கும். குறிப்பிட்ட யூதரல்லாதவர்கள் தேவனிடம் சேர்ந்த பின்பு இது மாறும் என்பதுதான் அந்த உண்மை. 26 இவ்வாறு இஸ்ரவேலர்கள் அனைவரும் காப்பாற்றப்படுவர்.

“மீட்பர் சீயோனிலிருந்து வருவார்.
    யாக்கோபின் குடும்பத்திலிருந்து தீமைகளை அகற்றுவார்.
27 நான் அவர்களது பாவங்களை விலக்கும் போது நான்
    இந்த உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்” (D)

என்று எழுதப்பட்டிருக்கிறது.

28 தேவனுடைய நற்செய்தியை யூதர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அதனால் அவர்கள் தேவனுடைய எதிரிகள் ஆயினர். இது யூதரல்லாதவர்களுக்கு உதவியாய் ஆயிற்று. ஆனால் யூதர்கள் அனைவரும் இப்பொழுது தேவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாய் இருப்பதால் அவர் அவர்களைப் பெரிதும் நேசிக்கிறார். அவர்களின் தந்தைகளுக்குக் கொடுத்த வாக்கின்படி தேவன் அவர்களை நேசிக்கிறார். 29 தேவன் தனது கிருபையையும் அழைப்பையும் எப்பொழுதும் மாற்றிக்கொள்ளமாட்டார். 30 ஒருமுறை நீங்கள் தேவனுக்குப் பணிய மறுத்தீர்கள். ஆனால் இப்பொழுது இரக்கத்தைப் பெற்றீர்கள். யூதர்கள் பணிய மறுத்ததே இதற்குக் காரணம். 31 தேவன் உங்களிடம் இரக்கம் காட்டுவதால் யூதர்கள் இப்பொழுது தேவனுக்குப் பணிய மறுக்கிறார்கள். எனினும் எதிர்காலத்தில் உங்களைப் போல் அவர்களும் இரக்கத்தைப் பெறுவார்கள். 32 அனைத்து மக்களும் தேவனுக்குப் பணிய மறுத்திருக்கின்றனர். தேவன் பணியாதவர்களை ஓரிடத்தில் சேர்த்தார். எனவே, அவர் அனைவர் மீதும் இரக்கம் கொள்ள முடியும்.

தேவனுக்கு மகிமை

33 ஆமாம். தேவனுடைய செல்வம் மிகவும் பெருமை மிக்கது. அவரது அறிவுக்கும் ஞானத்துக்கும் எல்லை இல்லை. தேவன் தீர்மானிப்பதை ஒருவராலும் விளக்க முடியாது. தேவனுடைய வழிகளை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.

34 “கர்த்தரின் மனதை அறிந்தவன் யார்?
    தேவனுக்கு அறிவுரைகளைத் தரத் தகுந்தவர் யார்?” (E)

35 “தேவனுக்கு யாரேனும் எதையேனும் கொடுத்ததுண்டா?
    மற்றவர்க்கு எதையும் தேவன் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை” (F)

என்று எழுதப்பட்டிருக்கிறது.

36 ஆமாம். தேவனே அனைத்தையும் உருவாக்கினார். தேவனாலும், தேவனுக்காகவும் தொடர்ச்சியாய் எல்லாம் இயங்குகின்றன. அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

வாழ்க்கையை தேவனுக்குக் கொடுங்கள்

12 சகோதர சகோதரிகளே! ஏதாவதுகொஞ்சம் செய்யுங்கள் என வேண்டுகிறேன். தேவன் நம்மிடம் மிகுந்த இரக்கத்தைக் காட்டியிருக்கிறார். உங்கள் சரீரங்களை தேவனுக்கு உயிர்ப் பலியாகத் தாருங்கள். இதுவே அவரை வழிபடுவதற்கான பக்தி வழியாகும். தேவன் இதில் திருப்தியடைகிறார். உலகிலுள்ள மக்களைப் போன்று ஆக வேண்டுமென உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். ஆனால் மனதில் புதிய எண்ணங்களால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு தேவனுடைய விருப்பத்தை உங்களால் ஏற்றுக்கொள்வது பற்றி முடிவு செய்ய முடியும். நல்லவை எவை, தேவனுக்கு விருப்பமானவை எவை என்று உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

தேவன் எனக்கொரு சிறப்பான வரத்தைக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொல்ல என்னிடம் சில காரியங்கள் இருக்கின்றன. உங்கள் நிலைமைக்கு மீறிய நினைப்பினைக்கொள்ளாதீர்கள். உண்மையாகவே நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின்படியே ஒவ்வொருவனும் தம்மைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சரீரம் உள்ளது. அதற்குப் பல உறுப்புகளும் உள்ளன. எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை. இது போலவே, நாம் பல வகை மக்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் நாம்அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம். நாம் அந்த சரீரத்தின் பல உறுப்புகள். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளைச் சார்ந்துள்ளன.

நமக்குப் பலவிதமான வரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வரமும் நமக்கு தேவனுடைய இரக்கத்தால் கிடைத்தது. நம்மிடையே தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தைப் பெற்றவன் அதனை தன் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். சேவை செய்வதற்கான வரத்தைப் பெற்ற ஒருவன் நன்றாக சேவை செய்வானாக. போதிக்கும் வரத்தைப் பெற்ற ஒருவன் போதிப்பானாக! மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வரத்தைப் பெற்ற ஒருவன் அவ்வாறே ஆறுதல் சொல்வானாக. மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்து உதவுகிற வரத்தைப் பெற்ற ஒருவன் ஏராளமாகக் கொடுத்து உதவுவானாக! தலைவனாக இருக்க வரத்தைப் பெற்றவன் கடுமையாகப் பணியாற்றி சிறந்த தலைவனாக இருப்பானாக! மற்றவர்களிடம் இரக்கம் காட்டும் வரத்தைப்பெற்ற ஒருவன் மகிழ்ச்சியோடு இரக்கம் காட்டுவானாக!

உங்கள் அன்பு உண்மையானதாக இருக்க வேண்டும். பாவத்துக்குரியவற்றை வெறுத்து ஒதுக்குங்கள். நல்லவற்றை மட்டும் செய்யுங்கள். 10 சகோதர சகோதரிகளைப் போன்று ஒருவருக்கொருவர் இதமாக அன்பு செலுத்துங்கள். மரியாதை செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளங்கள். 11 நீங்கள் கர்த்தருக்காக உழைக்க வேண்டிய காலத்தில் சோம்பேறியாக இராதீர்கள். அவருக்குச் சேவை செய்வதிலே ஆவிப் பூர்வமாக இருங்கள். 12 உங்களுக்கு விசுவாசம் இருப்பதால் மகிழ்ச்சியாய் இருங்கள். எப்பொழுதும் பிரார்த்தனை செய்யுங்கள். 13 தேவனுடைய மக்களுக்குத் தேவை ஏற்படும்போது உதவி செய்யுங்கள். அம்மக்களுக்கு உங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுங்கள்.

14 உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்கும் நல்லதையே செய்யுங்கள். அவர்களுக்கு நல்லதைக் கூறுங்கள். அவர்களை சபிக்காதீர்கள். 15 மற்றவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கும்போது நீங்களும் அவர்களோடு மகிழ்ச்சியோடு இருங்கள். மற்றவர்கள் துக்கமாய் இருக்கும்போது நீங்கள் அவர்களோடு துக்கமாய் இருங்கள். 16 ஒருவரோடு ஒருவர் சமாதானமாக வாழுங்கள். எவ்வளவு ஞானம் எனக்கு உண்டு என்று மமதை கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்கு முக்கியமாய்த் தோன்றாதவர்களோடும் கூட நட்புடன் இருங்கள். சுய பெருமை பாராட்டாதீர்கள்.

17 யாரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களுக்குத் தீமையையே திரும்பிச் செய்யாதீர்கள். எல்லாராலும் நல்லவை என்று எண்ணப்படுவதையே நீங்களும் எவ்வளவு செய்ய முடியும் என்று பாருங்கள். 18 முடிந்தளவு எல்லா மக்களோடும் சமாதானமாய் இருங்கள். 19 என் அன்பு நண்பர்களே, எவரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களைத் தண்டிக்க முயலாதீர்கள். தேவன் தன் கோபத்தால் அவர்களைத் தண்டிக்கும் வரையில் பொறுத்திருங்கள்.

“நானே தண்டிக்கிறேன்.
    நானே பதிலுக்குப் பதில் செய்வேன்”(G)

என்று கர்த்தர் கூறுகிறார் என்று எழுதப்பட்டுள்ளது.

20 “உங்கள் பகைவன் பசியாய் இருந்தால்
    அவனுக்கு உணவைக் கொடுங்கள்.
அவன் தாகமாய் இருந்தால் அவன்
    குடிக்க ஏதாவது கொடுங்கள்.
இதன் மூலம் அவனை வெட்கம்கொள்ளச் செய்யலாம்.”(H)

21 பாவத்திடம் தோல்வி அடைந்துவிடாதீர்கள். நன்மை செய்வதின் மூலம் தீமையை நீங்கள் தோற்கடித்து விடுங்கள்.

அரசு அதிகாரத்திற்கு அடிபணியவும்

13 நீங்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய வேண்டும். ஆட்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆட்சி புரியும் அதிகாரத்தை தேவன் கொடுத்திருக்கிறார். இப்பொழுது அதிகாரம் செய்கின்றவர்களுக்கு தேவனாலேயே அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அரசு அதிகாரத்திற்கு எதிராக இருப்பவன் உண்மையில் தேவனுடைய கட்டளைக்கு எதிராக இருக்கிறான் என்றே பொருளாகும். அரசுக்கு எதிராகச் செயல்படுபவன் உண்மையில் தண்டிக்கப்படத்தக்கவன். நன்மை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டிய தேவையில்லை. ஆனால் தீமை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டும். நீங்கள் ஆள்வோர்களைக் கண்டு அச்சம்கொள்வதில் இருந்து விடுதலை பெறவேண்டுமா? அப்படியானால் நன்மையை மட்டும் செய்யுங்கள். நீங்கள் நன்மையைச் செய்தால் அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.

ஒரு ஆள்வோன் என்பவன் உங்களுக்கு உதவி செய்வதற்காக தேவனால் நியமிக்கப்பட்டவன். ஆனால் நீங்கள் தப்பு செய்தால் அஞ்சவேண்டும். உங்களைத் தண்டிக்கிற அதிகாரம் அவர்களுக்குண்டு. அதை அவர்கள் பயன்படுத்துவார்கள். தேவனுடைய பணியாளாகவே அவர்கள் தண்டனை வழங்குவார்கள். எனவே நீங்கள் அரசாங்கத்திற்கு அடிபணியுங்கள். நீங்கள் பணியாவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்யத்தக்க நல்ல காரியமே அரசுக்குப் பணிவதுதான்.

இதற்காகத்தான் நீங்கள் வரிகளைச் செலுத்துகிறீர்கள். அவர்கள் தேவனுக்காகவும் உங்களுக்காகவும் உழைத்து வருகிறார்கள். தம் நேரமனைத்தையும் ஆட்சி செலுத்துவதிலேயே செலவழிக்கிறார்கள். அனைவருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். கொடுக்க வேண்டிய வரிகளையும் கொடுத்துவிடுங்கள். மரியாதை செலுத்த வேண்டியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். எவருக்கு பயப்பட வேண்டுமோ அவர்களுக்கு பயப்படுங்கள்.

பிறரை நேசிப்பதே பிரமாணம்

எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் படாதிருங்கள். அன்புக்கு மட்டும் கடன்படுங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிற ஒருவன் உண்மையில் சட்டமுழுவதிற்கும் அடிபணிந்தவனாய் இருப்பான். இவற்றையெல்லாம் நான் எதற்காகக் கூறுகிறேன் என்றால் “விபசாரம் செய்யாதிருங்கள். கொலை செய்யாதிருங்கள். களவு செய்யாதிருங்கள். அடுத்தவர்க்கு உரிய பொருட்களை விரும்ப வேண்டாம்.” [c] சட்டவிதி இவற்றைச் சொல்கிறது. இவை எல்லா கட்டளைகளும், “தன்னை தானே நேசித்துக்கொள்வது போலவே ஒருவன் அடுத்தவனையும் நேசிக்க வேண்டும்” [d] என்று ஒரு விதியையே சொல்கின்றன. 10 அன்பானது மற்றவர்களுக்குத் தவறு செய்யாதது. எனவே, அன்பு சட்டவிதியின் நிறைவேறுதலாய் இருக்கிறது.

11 நாம் மிக முக்கியமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால் இவற்றைக் கூறுகிறேன். நீங்கள் தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் இதுதான். நாம் முதலில் நம்பியதைக் காட்டிலும் இரட்சிப்பின் காலம் நெருங்கிவிட்டது. 12 “இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். 13 பகலுக்குரியவர்கள் செய்யத்தக்க செயல்களைச் சீராய் நாம் செய்வோம். களியாட்டமும், குடிவெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நாம் இருக்கக் கூடாது. 14 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். உங்கள் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது பற்றியும் தீய காரியங்களை செய்வது பற்றியும் யோசிக்காதீர்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center