Beginning
ஆவிக்குரிய வாழ்க்கை
8 எனவே, இப்போது இயேசுகிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் தண்டனைக்குரியவர்களாகத் தீர்ப்பளிக்கப்படமாட்டார்கள். 2 ஏன் நான் அவ்வாறு தீர்ப்பளிக்கப்படமாட்டேன்? ஏனென்றால் இயேசு கிறிஸ்துவிற்குள் உயிருள்ள ஆவியின் சட்டவிதி என்னைப் பாவம், மரணம் என்பவைகளின் சட்ட விதிகளிடமிருந்து விடுதலை செய்கிறது. 3 சட்ட விதிக்கு சக்தி இல்லை. ஏனென்றால் அது மனித பெலவீனங்களால் வரையறுக்கப்பட்டது. சட்ட விதியால் செய்ய முடியாததை தேவன் செய்து முடிக்கிறார். தேவன் தன் சொந்தக் குமாரனையே பூமிக்குப் பாவமனித சாயலாக அனுப்பினார். அவரை பாவத்தைப் போக்கும் பலியாகவும் கருதினார். எனவே மனித வாழ்க்கை மூலம் பாவத்தை அழித்தார். 4 தேவன் அதனை சட்டவிதியின் நீதி நம்மிடம் நிறைவேறும்படிக்கே இவ்வாறு செய்தார். இப்பொழுது நாம் நமது மாம்சத்தின்படி நடக்காமல் ஆவியைப் பின்பற்றி வாழ்கிறோம்.
5 மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்திற்கு உரியவற்றைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். ஆவியைப் பின்பற்றி நடக்கிறவர்கள் ஆவிக்குரியதை மட்டுமே சிந்திக்கிறார்கள். 6 ஒருவனது சிந்தனையானது பாவத்தால் கட்டுப்படுத்தப்படுமானால் அவன் சாவை அடைகிறான். ஒருவனது சிந்தையானது ஆவியால் கட்டுப்படுத்தப்படுமானால் அவன் நல்வாழ்வையும், சமாதானத்தையும் அடைகிறான். 7 எப்படியென்றால் மாம்ச எண்ணம் தேவனுக்கு எதிரான பகையாகின்றது. அவன் தேவனுடைய சட்டவிதிகளுக்குக் கட்டுப்பட மறுக்கிறான். உண்மையில் அவனால் கீழ்ப்படியவும் முடியாமல் போகின்றது. 8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்கு வேண்டியவர்களாக முடியாது.
9 தேவனுடைய ஆவி உங்களிடம் வாழ்ந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள். ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல. 10 உங்கள் பாவத்தால் சரீரமானது இறந்து போகும். ஆனால் கிறிஸ்து உங்களில் இருந்தால் ஆவி உங்களுக்கு நல் வாழ்வைக் கொடுக்கும். ஏனென்றால் கிறிஸ்து உங்களை தேவனோடு சரியாக்கினார். 11 தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். தேவனுடைய ஆவி உங்களில் இருக்குமானால் பின்னர் அவர் சரீரத்திற்கும் உயிர் தருவார். தேவன் ஒருவரே இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பியவர். அவர் உங்கள் சரீரங்களுக்கும் உங்களுக்குள் உள்ள ஆவியின் மூலம் உயிர்தருவார்.
12 சகோதர சகோதரிகளே, நாம் நமது மாம்சங்களால் ஆளப்படக் கூடாது. நமது மாம்சங்களின் விருப்பப்படியும் இருக்கக் கூடாது. 13 பாவம் தூண்டும் தவறான செயல்களைச் செய்ய உங்கள் வாழ்வு பயன்படுமானால் நீங்கள் ஆவிக்குரிய நிலையில் இறந்தவர்களாவீர்கள். ஆனால் நீங்கள் ஆவியின் உதவியோடு தீமை செய்வதை நிறுத்தினால் உண்மையான வாழ்வைப் பெறுவீர்கள்.
14 எவரெல்லாம் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். 15 நம்மை மீண்டும் அடிமைப்படுத்தி அச்சமூட்டுகிற ஆவியைப் நாம் பெறவில்லை. தேவனுடைய பிள்ளைகளாக நம்மை உருவாக்கும் ஆவியைப் பெறுகிறோம். அப்படிப் பெற்றால் “என் அன்பான பிதாவே” என்று அழைக்கும் உரிமையைப் பெறுவோம். 16 ஆவியானவர் நம்முடைய ஆவியோடு சேர்ந்துகொண்டு நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்று சாட்சி கொடுக்கிறார். 17 நாம் தேவனுடைய பிள்ளைகளானால், தேவன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருக்கிற மகிமையை நாம் பெறுவோம். நாம் அவற்றை தேவனிடமிருந்து பெறுவோம். கிறிஸ்துவிடம் உள்ள அதே மகிமையும் நமக்குக் கிடைக்கும். ஆனால் கிறிஸ்து துன்பப்பட்டது போன்று நாமும் படவேண்டியதிருக்கும்.
எதிர்காலச் சிறப்பு
18 இப்பொழுது துன்பப்படுகிறோம். ஆனால் நமக்குக் கொடுக்கப்படப் போகும் சிறப்பை நிகழ்காலத் துன்பத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இத்துன்பம் ஒன்றுமில்லாமல் போகும். 19 தேவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தேவன் தன் பிள்ளைகள் யாரென்பதை வெளிப்படுத்தப் போகும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கின்றன. அவை அதனைப் பெரிதும் விரும்புகின்றன. 20 தேவனால் படைக்கப்பட்ட அனைத்தும் பயனற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. அவை மாற்றமடைய விரும்பாவிட்டாலும் தேவன் அவற்றை மாற்றிவிட முடிவு செய்துள்ளார். 21 ஆனாலும் “தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் அழிவிலிருந்து விடுதலை பெறும்” என்ற நம்பிக்கையுண்டு. தேவன் படைத்த எல்லாம், தேவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலையையும், மகிமையையும் பெறும் என்ற நம்பிக்கையும் உண்டு.
22 ஒரு பெண், குழந்தை பெறுவதற்கான நேரத்தை வலியோடு எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பது போன்று தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. 23 உலகம் மட்டுமல்ல. நாமும் உள்ளுக்குள் வேதனையோடு காத்துக்கொண்டிருக்கிறோம். தேவனுடைய வாக்குறுதியினுடைய முதல் பாகம் போல் நாம் ஆவியின் முதல் பலனைப் பெற்றிருக்கிறோம். நம்மை தேவன் தமது பிள்ளைகளாக்குவார் என்று நாமும் எதிர்பார்க்கிறோம். அதாவது நாம் நமது சரீரத்தின் விடுதலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். 24 அந்த நம்பிக்கையால்தான் நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம். கண்ணால் காண முடிவதை நம்புவது என்பது உண்மையில் நம்பிக்கையன்று, நம்மிடம் ஏற்கெனவே இருப்பதை மக்கள் நம்பவேண்டியதில்லை. 25 இதுவரை நாம் பெறாததைப் பெறுவதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
26 அதோடு ஆவியானவர் நமக்கு உதவுகிறார். நாம் பலவீனமானவர்கள். ஆவியானவர் நமது பல வீனங்களில் உதவுகிறார். நாம் எவ்வாறு வேண்டிக்கொள்வது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். எனினும் ஆவியானவர் நமக்காக தேவனிடம் வேண்டுகிறார். அவரது வேண்டுதல்களை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல இயலாது. 27 மக்களின் மனதில் உள்ளதை தேவன் ஆராய்கிறார். ஆவியானவரின் மனதில் உள்ளதும் தேவனுக்குத் தெரியும். ஏனென்றால் தேவனுடைய விருப்பப்படியே ஆவியானவரின் வேண்டுதல்கள் மக்களுக்காக அமைந்திருக்கும்.
28 தன்னை நேசிக்கும் மக்களுக்கு தேவன் எல்லாவற்றின் மூலமும் நன்மை செய்கிறார் என்பதை நாம் அறிகிறோம். தேவன் இம்மக்களைத் தம் திட்டப்படியே தேர்ந்தெடுத்துள்ளார். 29 தேவன் அம்மக்களை உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அறிந்திருக்கிறார். அம்மக்களைத் தம் குமாரனைப் போலவே இருக்கும்படி முடிவு செய்தார். அநேக சகோதரர்களுக்குள்ளே தமது குமாரனே முதற் பேறானவராய் இருக்க வேண்டும் என விரும்பினார். 30 எனவே தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். அவர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை நீதிமான்களாக்கினார். அவர்களை மகிமையும்படுத்தினார்.
தேவனின் அன்பு
31 எனவே, இதைப் பற்றி என்ன சொல்லலாம்? தேவன் நம்மோடு இருந்தால் எவராலும் நாம் தோற்கடிக்கப்பட முடியாது. 32 தேவன் நமக்காகத் தனது சொந்தக் குமாரனையும் துன்பத்துக்குட்படுத்தினார். நமக்காகவே தன் குமாரனை தேவன் அர்ப்பணித்தார். எனவே இயேசு கிறிஸ்து இப்போது நம்மோடு இருப்பதால், தேவன் எல்லாவற்றையும் தருவார். 33 தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை யாரால் குறை சொல்ல முடியும்? எவராலும் முடியாது, ஏனென்றால் தேவன்தான் தமது மக்களை நீதிமான்களாக்குகிறார். 34 தேவனுடைய மக்கள் தவறுடையவர்கள் என்று யாரால் குற்றம்சாட்ட முடியும்? எவராலும் முடியாது. கிறிஸ்து இயேசு நமக்காக இறந்தார். அதோடு முடியவில்லை. அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். இப்போது அவர் தேவனுடைய வலதுபுறத்தில் இருந்துகொண்டு நமக்காக வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார். 35 கிறிஸ்துவின் அன்பிலிருந்து எவற்றாலும் நம்மைப் பிரிக்க இயலுமா? இயலாது. தொல்லைகளால் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்க இயலுமா? பிரச்சனைகளும், தண்டனைகளும் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்குமா? இயலாது. உணவும் உடையும் இல்லாத வறுமை கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது. ஆபத்தும் மரணமும் கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது.
36 “எப்பொழுதும் உமக்காக நாங்கள் மரண ஆபத்தில் இருக்கிறோம்.
வெட்டப்படும் ஆடுகளைவிடவும் நாம் பயனற்றவர்கள் என மக்கள் நினைக்கின்றனர்” (A)
என எழுதப்பட்டுள்ளது.
37 தேவன் நம்மீது அன்புகொண்டவர். அவரால் நாம் அனைத்திலும் பெரும் வெற்றி பெறுகிறோம். 38-39 தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதனாலும் பிரிக்க முடியாது என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும். சாவாலோ, வாழ்வாலோ, தேவ தூதர்களாலோ, ஆளும் ஆவிகளாலோ, தற்காலப் பொருளாலோ, பிற்கால உலகத்தாலோ, நமக்கு மேலே உள்ள சக்திகளாலோ, நமக்குக் கீழே உள்ள சக்திகளாலோ, உலகில் உள்ள வேறு எதனாலுமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மை ஒருபோதும் பிரித்துவிட முடியாது.
தேவனும் யூதமக்களும்
9 நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் உண்மையைக் கூறுகிறேன். நான் பொய் சொல்வதில்லை. என் உணர்வுகள் பரிசுத்த ஆவியானவரால் ஆளப்படுகின்றன. அந்த உணர்வுகள் நான் பொய்யானவனில்லை என்று கூறுகின்றன. 2 எனக்குப் பெருந்துக்கம் உண்டு. யூதமக்களுக்காக எப்பொழுதும் நான் மிகவும் கவலைப்படுகிறேன். 3 அவர்கள் எனது சகோதர சகோதரிகளுமாகவும், மண்ணுலகக் குடும்பமுமாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். அவர்களுக்கு உதவியாக இருக்குமானால் நான் பழிக்கப்படவும், கிறிஸ்துவிலிருந்து துண்டித்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். 4 அவர்கள் இஸ்ரவேல் மக்கள். யூதர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். தேவனுடைய மகிமை அவர்களுக்கு உண்டு. தேவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உடன்படிக்கைகள் உண்டு. தேவன் அவர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தையும், வழிபாட்டு முறைகளையும் கொடுத்தார். தனது வாக்குறுதிகளை யூதர்களுக்கு தேவன் கொடுத்திருக்கிறார். 5 அவர்கள் நமது மூதாதையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள் வழியில் கிறிஸ்துவும் மண்ணுலகில் பிறந்தார். கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் மேலான தேவன். அவரை எப்பொழுதும் துதியுங்கள். ஆமென்.
6 நான் யூதர்களுக்காக வருத்தப்படுகிறேன். அவர்களிடம் தேவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறதில்லை. ஆனால் இஸ்ரவேல் மக்களில் ஒரு சிலரே தேவனுடைய உண்மையான மக்களாய் இருக்கிறார்கள். 7 ஆபிரகாமின் சில மரபுவழியினரே ஆபிரகாமின் உண்மையான மக்களாக இருக்கின்றனர். இதையே ஆபிரகாமிடம் தேவன் “ஈசாக்கு உனது சட்டபூர்வமான மகன்” [a] என்று கூறினார். 8 ஆபிரகாமின் அனைத்து சந்ததியினருமே தேவனுடைய பிள்ளைகள் இல்லை என்பது தான் இதன் பொருள். ஆபிரகாமுக்கு அவர் வாக்குறுதி செய்தார். ஆனால் ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள் எல்லாம் தேவனுக்கும் உண்மையான பிள்ளைகள் ஆகின்றனர். ஏனென்றால் 9 “சரியான நேரத்தில் நான் திரும்ப வருவேன். சாராள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்” [b] என்பது தான் தேவனுடைய வாக்குறுதி.
10 அது மட்டுமல்ல, ரெபேக்காவும் பிள்ளைகளைப் பெற்றாள். ஒரே தந்தையை இப்பிள்ளைகள் கொண்டிருந்தார்கள். அவரே நமது தந்தையான ஈசாக்கு. 11-12 இரு மகன்களும் பிறப்பதற்கு முன்பே தேவன் ரெபேக்காவிடம், “மூத்த மகன் இளையவனுக்கு சேவை செய்வான்” [c] என்றார். அவர்கள் நல்லதோ தீயதோ எதுவாக இருந்தாலும் செய்வதற்கு முன்னரே தேவன் இவ்வாறு சொன்னார். இத்திட்டம் ஏற்கெனவே தேவனால் உருவாக்கப்பட்டது என்பதுதான் காரணம். தேவன் அவனைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். அதனால் தேர்ந்தெடுத்தார். அதுதான் காரணமே தவிர பிள்ளைகள் ஏதோ செய்ததற்காக அல்ல. 13 “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்” [d] என்று எழுதப்பட்டிருக்கிறது.
14 எனவே இதைப்பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?தேவன் அநீதியாய் இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? முடியாதே. 15 “நான் யாரிடம் இரக்கம் காட்டவேண்டும் என்று விரும்புகிறேனோ அவனிடம் இரக்கம் காட்டுவேன்.” [e] என்று தேவன் மோசேயிடம் சொல்லி இருக்கிறார். 16 எனவே கருணை காட்டப்படத் தகுதியான ஒருவனை தேவன் தேர்ந்தெடுக்கிறார். அவரது தேர்ந்தெடுப்பு மனித விருப்பங்களுக்கும் முயற்சிகளுக்கும் அப்பாற்பட்டது. 17 “நான் உன்னை அரசனாக்கினேன். நீ எனக்காக இதைச் செய். எனது பலத்தை நான் உனக்குக் காட்டும்படியாக எனது பெயர் உலகமெங்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன்” [f] என தேவன் பார்வோனிடம் கூறியதாக எழுதப்பட்டிருக்கிறது. 18 எனவே, தேவன் இரக்கத்துக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்தவர்களிடம் இரக்கமாய் இருக்கிறார். கடினமாக இருக்கத் தேர்ந்தெடுத்தவர்களிடத்தில் கடினமாக இருக்கிறார்.
19 “நமது செயல்களையெல்லாம் தேவனால் கட்டுப்படுத்த முடியுமானால் பிறகு ஏன் அவர் நமது பாவங்களுக்காக நம்மைக் குற்றம் சாட்டுகிறார்” என்று உங்களில் ஒருவர் கேட்கலாம். 20 அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா? 21 ஜாடியைச் செய்கிறவன் தன் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதே களிமண்ணால் அவன் வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒரு பொருளை அவன் சிறப்பான பயனுக்காகவும், மற்றொன்றை அவன் அன்றாட பயனுக்காகவும் செய்யலாம்.
22 இதைப் போன்றுதான் தேவனும் செய்கின்றார். அவர் தமது கோபத்தை வெளிக்காட்டவும் தனது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பினார். தன் கோபத்தைத் தூண்டிய மக்களை அழிக்கத் தயாராய் இருந்த நிலையில் தேவன் அவர்களை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்டார். 23 தன் உயர்வும் சிறப்பும் வெளிப்படும் காலம் வரைக்கும் தேவன் பொறுமையோடு காத்திருந்தார். அவரது இரக்கத்தைப் பெறுவோரிடம் அவர் தனது மகிமையைக் கொடுத்தார். அவர் அதற்குரியவர்களாக அவர்களைத் தயார்படுத்தினார். 24 நாங்களே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாங்களே தேவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர் எங்களை யூதர்களிடமிருந்தும் யூதர் அல்லாதவர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தார்.
25 “எனக்கு உரியவர்கள் அல்ல என்னும் மக்களையும்
‘என் மக்களே’ என்றும்,
நேசிக்கப்படாது இருந்தவர்களையும்,
‘என்னால் நேசிக்கப்படும் மக்கள்’
என்று நான் அழைப்பேன். (B)
26 “நீங்கள் என்னுடைய மக்கள் அல்லவென்று
அவர்களுக்குச் சொல்லப்பட்ட அதே இடத்திலே
அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” (C)
என்று ஓசியாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.
27 ஏசாயா இஸ்ரவேலைப்பற்றிக் கதறினார்.
“இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரையில் உள்ள மணலைப் போன்றிருக்கிறது.
எனினும் சிலரே இரட்சிக்கப்படுவார்கள்.
28 ஆமாம். மண்ணில் வாழும் மக்களை தேவன் விரைவாக நியாயம்தீர்த்து முடிப்பார்.”.(D)
29 “கர்த்தருக்கு அனைத்து வல்லமையும் உண்டு.
எங்களுக்காக அவர் சிலரைக் காப்பாற்றினார்.
அவர் அதனைச் செய்திருக்காவிட்டால்
இப்போது நாங்கள் சோதோமைப் போலாகி கொமோராவுக்கு ஒத்தவராய் இருப்போம்” (E)
என்று ஏசாயா சொன்னார்.
30 இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? யூதரல்லாதவர்கள் தேவன் முன் நீதிமான்களாக விளங்க முயற்சி செய்யவில்லை. எனினும் நீதிமான்களாக ஆனார்கள். காரணம் அவர்களது விசுவாசமே. 31 ஆனால் இஸ்ரவேல் மக்கள் சட்டவிதிகளின்படி வாழ்ந்து தேவனுக்கேற்ற நீதிமான்களாக விரும்பினார்கள். ஆனால் அவர்கள் வெல்லவில்லை. 32 காரணம் அவர்கள் அதனை தேவனில் நம்பிக்கை வைக்காமல், தங்கள் செயல்கள் மூலம் தேடினர். தடுக்கி விழத்தக்க கல்லிலேயே தடுக்கி விழுந்தார்கள். 33 அந்தக் கல்லைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது.
“பாருங்கள்! நான் கல்லை சீயோனில் வைத்திருக்கிறேன்.
அது மக்களைத் தடுக்கி விழச் செய்யும்.
அந்தப் பாறை மக்களைத் தடுமாறி விழ அனுமதிக்கும்.
ஆனால் அக்கல்லிடம் நம்பிக்கைக்கொண்ட எவனும் அவமானம் அடைவதில்லை.” (F)
10 சகோதர சகோதரிகளே, அனைத்து யூதர்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். அதைத் தான் தேவனிடம் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன். 2 யூதர்களைப் பற்றி என்னால் இவ்வாறு கூற முடியும். அவர்கள் உண்மையில் தேவனைப் பின்பற்ற விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான வழி தெரியவில்லை. 3 தேவனுக்கேற்ற நீதிமான்களாகும் தேவனுடைய வழி அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தம் சொந்த வழியிலேயே நீதிமான்களாக முயன்றனர். எனவே அவர்கள் தேவனுடைய வழியை ஏற்றுக்கொள்ளவில்லை. 4 கிறிஸ்து சட்டவிதியின் முடிவாய் இருக்கிறார். அதனால் அவரிடம் நம்பிக்கையாக இருக்கிற எவரும் தேவனுக்கேற்ற நீதிமானாக இயலும்.
5 மோசே சட்டவிதிகளைப் பின்பற்றி நீதிமானாகும் வழியைப் பற்றி எழுதியிருக்கிறார்: “சட்டவிதியைப் பின்பற்றி வாழ நினைக்கிறவன், சட்டவிதியின்படி காரியங்களையும் செய்ய வேண்டும்,” [g] 6 ஆனால் விசுவாசத்தினாலே நீதிமானாவதைப் பற்றி வேதவாக்கியம், “யார் மோட்சத்துக்குப் போகக் கூடியவன் என்று நீ உனக்குள்ளே சொல்லாதே.” (இதற்கு “எவனொருவன் மோட்சத்துக்குப் போய் கிறிஸ்துவை பூமிக்கு அழைத்து வரக்கூடியவன்?” என்று பொருள்) 7 “எவனொருவன் உலகத்துக்கும் கீழே போகக் கூடியவன் என்றும் சொல்லாதே” (இதற்கு “எவனொருவன் கீழே போய் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து ஏறி வரப்பண்ணுபவன்” என்று பொருள்) என்று எழுதப்பட்டுள்ளது.
8 மேலும் “தேவனுடைய போதனைகள் உங்களுக்கு அருகில் உள்ளது. அவை உங்கள் வாயிலும் இதயத்திலும் உள்ளன” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அப்போதனைகள் மக்களிடம் நாம் சொல்லத்தக்க நம்பிக்கையைப் பற்றிய போதனைகளாகும். 9 உனது வாயால் நீ “இயேசுவே கர்த்தர்” என்று சொல்வாயானால் இரட்சிக்கப்படுவாய். உனது இதயத்தில் நீ “தேவன் இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார்” என்று நம்புவாயானால் இரட்சிக்கப்படுவாய். 10 நாம் இதயத்தில் விசுவாசித்தால் தேவனுக்கேற்ற நீதிமானாகிறோம். நாம் விசுவாசிப்பதை வாயால் சொன்னால் இரட்சிக்கப்படுகிறோம்.
11 “கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற எவரும் வெட்கப்படுவதில்லை” [h] என்று எழுதப்பட்டிருக்கிறது. 12 இதில் “எவரும்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்குக் காரணம் உண்டு. அவர்கள் யூதர்களாகவோ, யூதரல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர் ஒருவரே அனைவருக்கும் உரிய கர்த்தராவார். தன்னிடம் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் ஆசீர்வாதம் தருகிறார். 13 “கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவர்” [i] என்று எழுதப்பட்டிருக்கிறது.
14 மக்கள் கர்த்தர் மீது விசுவாசம் வைப்பதற்கு முன்னர் அவர்கள் அவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். கர்த்தரிடம் அவர்கள் நம்பிக்கை வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எனவே மக்கள் கர்த்தரைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு மற்றவர்கள் செய்தியைப் பரப்பவேண்டும். 15 ஒருவன் சென்று அவர்களிடம் செய்தியைப் பரப்புவதற்கு முன்பு, அவன் அனுப்பப்பட வேண்டும். “நற்செய்தியைச் சொல்ல வருகின்றவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன” [j] என்று எழுதப்பட்டிருக்கிறது.
16 நற்செய்தியை யூதர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைப்பற்றி ஏசாயா, “ஆண்டவரே, அவர்களுக்கு நாங்கள் சொன்னதையெல்லாம் யார் விசுவாசிக்கிறார்கள்?” [k] என்று கேட்கிறார். 17 எனவே நற்செய்தியைக் கேட்பதன் மூலமே விசுவாசம் பிறக்கிறது. ஒருவன் கிறிஸ்துவைப் பற்றிக் கூறும்போது மக்கள் நற்செய்தியைக் கேட்கிறார்கள்.
18 ஆனால் “மக்கள் நற்செய்தியைக் கேட்டதில்லையா?” என்று நான் கேட்கிறேன். ஆமாம்.
“அவர்களின் சப்தங்கள் உலகம் முழுவதும் சென்றன.
அவர்களின் வார்த்தைகள் உலகின் கடைசிவரை பரவின” (G)
என்று எழுதப்பட்டது போல் அவர்கள் கேட்டார்கள்.
19 “இஸ்ரவேல் மக்கள் அதனைப் புரிந்துகொள்ளவில்லையா?” என்று மீண்டும் நான் கேட்கிறேன். ஆமாம். அவர்கள் புரிந்துகொண்டனர்.முதலில் மோசே இதனைச் சொன்னார்.
“நீங்கள் பொறாமைப்படும் வகையில் அந்நாட்டுக்குரிமை இல்லாத மக்களைப் பயன்படுத்துவேன்.
உங்களுக்குக் கோபம் வரும் வகையில் புரிந்துகொள்ள இயலாத நாட்டு மக்களை உபயோகப்படுத்துவேன்.” (H)
20 ஏசாயாவும் தைரியத்தோடு தேவனுக்காக இதைச் சொன்னார்.
“என்னைத் தேடியலையாத மக்களால் கண்டு பிடிக்கப்பட்டேன்.
என்னை விசாரித்து வராதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன். (I)
21 இவ்வளவு நாட்களும்
“நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.
அவர்களோ எனக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள்.
என்னைப் பின்பற்றவும் மறுத்துவிட்டனர்” (J)
என்று யூத மக்களைப் பற்றி ஏசாயா வழியாக தேவன் கூறுகிறார்.
2008 by World Bible Translation Center