Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ரோமர் 1-3

இயேசு கிறிஸ்துவின் ஒரு ஊழியனும், அப்போஸ்தலனாகும்படி தேவனால் அழைக்கபட்டவனுமாகிய பவுல் எழுதுவது:

தேவனுடைய நற்செய்தியை எல்லாருக்கும் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். தனது மக்களுக்கு நற்செய்தியை தரப்போவதாக தேவன் ஏற்கெனவே வாக்குறுதி தந்துள்ளார். தேவன் தனது தீர்க்கதரிசிகள் மூலம் இவ்வாக்குறுதியை வழங்கினார். இந்த வாக்குறுதி பரிசுத்த வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. 3-4 அந்த நற்செய்தி தேவனுடைய குமாரனும் நமது கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியது. ஒரு மனிதனைப் போன்று அவர் தாவீதின் குடும்பத்தில் பிறந்தார். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் மூலம் இயேசு தேவனுடைய குமாரன் என்பதை மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததன் மூலம் பலமாய் நிரூபித்துக் காட்டினார்.

கிறிஸ்துவின் மூலம் தேவனுக்குச் சேவை செய்யும் சிறப்பை எனக்குக் கொடுத்தார். தேவன் மேல் நம்பிக்கையும், கீழ்ப்படிதலுமுள்ளவர்களாக உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களையும் வழிநடத்தும்படிக்கு இப்பணியை தேவன் எனக்குக் கொடுத்தார். நான் கிறிஸ்துவுக்காக இப்பணியைச் செய்கிறேன். ரோமிலுள்ள நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாக அழைக்கப்பட்டீர்கள்.

தன் பரிசுத்த மக்களாக தேவனால் அழைக்கப்பட்ட, ரோமிலுள்ள உங்கள் அனைவருக்கும் இக்கடிதம் எழுதப்படுகிறது.

தேவனுடைய நேசத்துக்குரியவர்கள் நீங்கள். பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.

நன்றியின் பிரார்த்தனை

முதலில் நான் உங்களுக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் உலகின் பல பகுதிகளிலுள்ள மக்களும் உங்களது பெரிய விசுவாசத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். 9-10 ஒவ்வொரு முறையும் பிரார்த்தனை செய்யும்போதெல்லாம் உங்களை நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். இது உண்மை என தேவனுக்குத் தெரியும். மக்களிடம் தேவனுடைய குமாரனைப் பற்றிய நற்செய்தியைக் கூறுவதன் மூலம் தேவன் ஒருவருக்கே நான் எனது ஆவியின் வழியே சேவை செய்கிறேன். உங்களிடம் வர அனுமதிக்குமாறு தேவனிடம் பிரார்த்திக்கிறேன். தேவன் விரும்பினால் இது நிகழும். 11 நான் உங்களைப் பார்க்க மிகவும் விரும்புகிறேன். உங்களைப் பலப்படுத்தும் ஆவிக்குரிய வரங்களை உங்களுக்குத் தர நான் விரும்புகிறேன். 12 நம்மிடம் உள்ள விசுவாசத்தின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனது விசுவாசம் உங்களுக்கும், உங்கள் விசுவாசம் எனக்கும் உதவியாக இருக்கும்.

13 சகோதர, சகோதரிகளே, உங்களிடம் வருவதற்காக நான் பலமுறை திட்டமிட்டேன். ஆனால் இப்போதுவரை நான் வரத் தடைசெய்யப்பட்டேன். நீங்கள் ஆத்தும வளர்ச்சியைப் பெறுவதற்காக நான் அங்கே வர விரும்புகிறேன். யூதர் அல்லாத மக்களுக்கு நான் உதவியது போலவே நான் உங்களுக்கும் உதவ விரும்புகிறேன்.

14 கிரேக்கர்களுக்கும், கிரேக்கர் அல்லாதவர்களுக்கும், அறிவுள்ளவர்களுக்கும், அறிவற்றோருக்கும் நான் சேவை செய்யக் கடனாளியாயிருக்கிறேன். 15 அதனால் தான் நான் ரோமிலுள்ள உங்களுக்கும் நற்செய்தியைப் போதிக்க விரும்புகிறேன்.

16 நான் நற்செய்தியைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன். விசுவாசமுள்ள அனைவரையும் இரட்சிக்கவும், முதலில் யூதர்களையும் பின்னர் யூதர் அல்லாதவர்களையும் இரட்சிக்கவும் தேவன் பயன்படுத்திய வல்லமை இந்த நற்செய்தியே ஆகும். 17 தேவன் எவ்வாறு நீதிமான்களை உருவாக்குகிறார் என்று நற்செய்தி காட்டுகிறது. மக்களை நீதிமான்களாக தேவன் உருவாக்கும் வழிமுறையானது விசுவாசத்திலேயே தொடங்கி முடிகிறது. எழுதியிருக்கிறபடி “தேவன் மேலுள்ள விசுவாசத்தால் நீதிமான் என்றென்றும் வாழ்ந்திருப்பான்.” [a]

அனைவரும் பாவிகளே

18 தேவனுடைய கோபம் பரலோகத்தில் இருந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. தேவனுக்கு எதிராக மக்களால் செய்யப்படும் அனைத்து பாவங்களும், பிழைகளும் தேவனுடைய கோபத்துக்குக் காரணம். அவர்களிடம் உண்மை இருக்கிறது. ஆனால் தமது பாவ வாழ்வால் உண்மையை மறைத்து விடுகிறார்கள். 19 தேவனைப் பற்றி அனைத்தும் அவர்களுக்குத் தெரியும்படி செய்யப்பட்டது. எனவே, தேவன் தனது கோபத்தைக் காட்டுகிறார். ஆமாம், தன்னைப் பற்றிய அனைத்தையும் தேவனே தெளிவாக வெளிக்காட்டியுள்ளார்.

20 தேவனைப் பற்றிய பல உண்மைகள் மனிதர்களால் காண முடியாததாக உள்ளது. அவர் முடிவில்லாத வல்லமையும், தெய்வத்துவமும் கொண்டவர். ஆனால் உலகம் உண்டான நாள் முதல் மக்களால் அவரை அவரது படைப்புகள் மூலம் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலேயே இருக்கிறார். அதனால் மக்கள் தாங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு சாக்குப்போக்கு சொல்லித் தப்பித்துக்கொள்ள இயலாது.

21 தேவனைப் பற்றி மக்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதில்லை; அவருக்கு நன்றி சொல்வதும் இல்லை. மக்கள் எண்ணங்களில் பயனற்றுப் போயினர். அவர்களின் அறிவீனமான நினைவுகளில் இருள் நிறைந்திருக்கிறது. 22 மக்கள் தம்மைப் புத்திசாலிகள் என்று கூறிக்கொண்டே அறிவற்றோராக விளங்குகிறார்கள். 23 அவர்கள் எப்பொழுதும் நிலைத்திருக்கும் தேவனின் மகிமையை விட்டொழிந்தார்கள். மக்கள் அந்த மகிமையை சாதாரண மண்ணுலக மக்களைப் போன்றும், பறவைகள், மிருகங்கள், பாம்புகள் ஆகியன போன்றும் உள்ள உருவ வழிபாட்டுக்கு மாற்றிவிட்டார்கள்.

24 மக்கள் பாவங்களால் நிறைந்து, கெட்டவற்றைச் செய்யவே விரும்பினர். எனவே தேவன் அவர்களை விட்டு விலகி, பாவ வழியிலேயே அவர்கள் தொடர்ந்து செல்ல விட்டுவிட்டார். அதனால் மக்கள் ஒவ்வொருவரும் தம் சரீரங்களை அவமானப்படுத்தி முறையற்ற வாழ்வில் தம்மைக் கெடுத்தனர். 25 தேவனுடைய உண்மையை அவர்கள் பொய்யாக மாற்றிவிட்டார்கள். அவர்கள் தேவனை வணங்கவில்லை. அவர் அவர்களைப் படைத்தவர்! தேவன் என்றென்றும் புகழப்படுவதற்குரியவர். ஆமென்.

26 மக்கள் அவ்விதமான காரியங்களைச் செய்ததால், அவர்கள் அவமானத்துக்குரியவற்றில் ஈடுபட்டனர். தேவன் அவர்களை விட்டு விலகிவிட்டார். பெண்கள் ஆண்களோடு கொள்ளவேண்டிய இயற்கையான பாலுறவை விட்டு விட்டு இயல்பற்ற வகையில் பிற பெண்களோடு பாலுறவு கொள்ளத் தொடங்கினர். 27 அவ்வாறே ஆண்களும் இயல்பான முறையில் பெண்களோடு உறவு கொள்வதை விட்டு விட்டனர். அதனால் தவறான காமவெறியினால் ஆண்களோடு ஆண்கள் அவலட்சணமாக உறவு கொண்டதால் அந்த அக்கிரமத்துக்குரிய தண்டனையையும் தம் சரீரத்தில் பெற்றுக்கொண்டனர்.

28 தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம் என்று மக்கள் நினைக்கவில்லை. எனவே தேவன் அவர்களைக் கைவிட்டுவிட்டார். அவர்கள் தங்கள் பயனற்ற சிந்தனைகளில் அமிழ்ந்து கிடக்க அனுமதித்தார். எனவே அவர்கள் செய்யக் கூடாதவற்றையெல்லாம் செய்து வந்தனர். 29 எல்லாவிதமான பாவம், தீமை, சுயநலம், வெறுப்பு போன்றவை அனைத்தும் அவர்களிடம் நிறைந்து காணப்பட்டன. அவர்கள் பொறாமை, கொலை, சண்டை, பொய், வம்பு ஆகியவற்றைக் கொண்டவர்களாய் விளங்கினர். 30 ஒருவரைப் பற்றி ஒருவர் கெட்ட செய்தியைப் பரப்பிக்கொண்டனர். அவர்கள் தேவனை வெறுத்தனர். அவர்கள் முரடர்களாகவும், அகந்தையுள்ளவர்களாகவும், தம்மைப்பற்றி வீண் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களாகவும் இருந்தனர். தீய காரியங்களைச் செய்யப் புதுப்புது வழிகளைக் கண்டு பிடித்தனர். தம் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருந்தனர். 31 அவர்கள் முட்டாள்களாய் இருந்தனர். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறினர். அவர்கள் மற்றவர்களிடம் இரக்கமும், கருணையும் காட்டியதே இல்லை. 32 அவர்களுக்கு தேவனுடைய சட்டம் தெரியும். இதுபோல் பாவம் செய்கிறவர்கள் மரணத்துக்கு உரியவராவார் என்பதையும் அவர்கள் அறிவர். ஆனால் அவர்கள் அத்தகைய பாவங்களையே தொடர்ந்து செய்தனர். அதோடு இவ்வாறு பாவம் செய்கிற மற்றவர்களையும் பாராட்டி வந்தனர்.

யூதர்களும் பாவிகளே

மற்றவர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்க உன்னால் முடியும் என நீ எண்ணுவாயானால் நீயும் குற்ற உணர்விற்குரியவன்தான். பாவம் செய்பவனாகவும் இருக்கிறாய். அவர்களுக்குத் தீர்ப்பளிக்கிற நீயும் அதே பாவச் செயல்களைச் செய்கிறாய். உண்மையில் நீயே குற்றவாளியாக இருக்கும்போது நீ எவ்வாறு மற்றவர்களைக் குற்றம் சாட்டமுடியும். இத்தகையவர்களுக்கு தேவன் தீர்ப்பளிப்பார். அவரது தீர்ப்பு நீதியாய் இருக்கும். அத்தவறான செயல்களைச் செய்பவர்களுக்கு நீயும் தீர்ப்பளிக்கிறாய். ஆனால் அதே தவறுகளை நீயும் செய்கிறாய். தேவனுடைய தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பது உனக்குத் தெரியுமா? தேவன் உன்னிடம் மிகக் கருணையோடும் பொறுமையாகவும் இருக்கிறார். அவரிடம் திரும்பி வருவாய் எனக் காத்திருக்கிறார். ஆனால் அவரது கருணையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். ஏனென்றால் உன் இதயத்தையும் வாழ்வையும் நல் வழியில் திருப்பும் அவரது நோக்கத்தை நீ உணர்ந்துகொள்ளவில்லை.

நீ கடினமாகவும் உறுதியாகவும் இருக்கிறாய். நீ மாற மறுக்கிறாய். உன் தண்டனையை மிகுதிப்படுத்துகிறாய். தேவனுடைய கோபம் வெளிப்படும் நாளில் நீ தண்டனையைப் பெறுவாய். அன்று மக்கள் தேவனுடைய சரியான தீர்ப்பினை அறிந்துகொள்வர். ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கேற்றபடி அவனுக்கு தேவன் நற்பலனோ, தண்டனையோ கொடுப்பார். சிலர் தேவனுடைய மகிமைக்காகவும், கனத்துக்காகவும், என்றும் அழிவற்ற வாழ்வுக்காகவும் வாழ்கிறார்கள். நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இத்தகு வாழ்வை அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நித்திய வாழ்வை தேவன் தருகிறார். மற்றவர்களோ சுய நலவாதிகளாகி, உண்மையைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். அவர்கள் பாவத்தின் வழி நடப்பவர்கள். இவர்களுக்கு தேவன் தண்டனையையும், கோபாக்கினையையும் வழங்குவார். முதலில் யூதர்களுக்கும் பின்பு யூதர் அல்லாதவர்களுக்கும், தீங்கு செய்கிற எவருக்கும் தேவன் துயரமும், துன்பமும் கொடுப்பார். 10 முதலில் யூதர்களிலும் பின்பு யூதர் அல்லாதவர்களிலும் நன்மை செய்கிற எவருக்கும் தேவன் மகிமையையும், கனத்தையும், சமாதானத்தையும் தருவார். 11 தேவன் அனைத்து மக்களுக்கும் ஒரேவிதமாகவே தீர்ப்பளிப்பார்.

12 தேவனுடைய சட்டத்தை அறிந்தவர்களானாலும், அதைப்பற்றிக் கேள்விப்பட்டிராத மக்களாயினும் பாவம் செய்யும்போது ஒத்த நிலை உடையவர்ளாக ஆகிறார்கள். சட்ட அறிவு அற்றவர்களாகவும், பாவிகளாகவும் இருப்பவர்கள் கைவிடப்படுவார்கள். அதேபோல், சட்டம் தெரிந்தும் பாவம் செய்தவர்கள் அதே சட்டத்தின்படி தீர்ப்பளிக்கப்படுவார்கள். 13 ஒருவன் சட்ட அறிவைப் பெறுவதன் மூலம் தேவனுக்கு முன்பாக நீதிமானாக முடியாது. சட்டம் சொல்லும் வழி முறைகளின்படி வாழும்போது மட்டுமே தேவனுடைய முன்னிலையில் ஒருவன் நீதிமானாக வாழமுடியும்.

14 யூதரல்லாதவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லை. எனினும் அவர்கள் இயல்பாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது நியாயப்பிரமாணம் இல்லாவிட்டாலும் தங்களுக்குத் தாங்களே நியாப்பிரமாணமாய் இருக்கிறார்கள். 15 அவர்களின் மனதுக்கு எது சரி, எது தவறு என்று தெரிகிறது. அவர்களின் சிந்தனையே குற்றமுள்ளது எது என்றும், சரியானது எது என்றும் கூறுவதினால் அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கேற்ற செயல்கள் தங்கள் இதயங்களில் எழுதியிருக்கிறதென்று காட்டுகிறார்கள்.

16 தேவன் மறைவான எண்ணங்களுக்கும் தீர்ப்பளிப்பார். அந்நாளில் மக்களின் மனதுக்குள் இருக்கும் மறை பொருட்கள் வெளிவரும். நான் மக்களுக்குச் சொல்லும் நற்செய்தியின்படி தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலம் தீர்ப்பளிப்பார்.

யூதர்களும் நியாயப்பிரமாணமும்

17 நீ என்ன செய்யப்போகிறாய்? நீ யூதனென்று சொல்லிக்கொள்கிறாய். நீ நியாயப் பிரமாணத்தில் விசுவாசம் வைத்து தேவனுக்கு நெருக்கமாய் இருப்பதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறாய். 18 தேவன் உனக்கு என்ன செய்ய விரும்புகிறார் என்று உனக்குத் தெரியும். நீ நியாயப்பிரமாணத்தைக் கற்றவனாதலால் உனக்கு எது முக்கியமானது என்றும் தெரியும். 19 என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிற மக்களுக்கு நீங்களே வழிகாட்டி என எண்ணிக்கொள்கிறீர்கள். பாவ இருட்டில் உள்ள மக்களுக்கு நீங்களே வெளிச்சம் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். 20 அறிவற்ற மக்களுக்குச் சரியானதைக் காட்ட முடியும் என்று கருதுகிறீர்கள். இன்னும் கற்கவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு நீங்களே குரு என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் நியாயப்பிரமாணம் இருப்பதால் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும், எல்லா உண்மைகளும் உங்களிடம் இருப்பதாகவும் எண்ணுகிறீர்கள். 21 நீங்கள் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள். நீங்கள் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? நீங்கள் மற்றவர்களிடம் களவு செய்யக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே களவு செய்கிறீர்கள். 22 நீங்கள் மற்றவர்களிடம் விபச்சாரம் செய்யக் கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே அதே பாவத்தைச் செய்யும் பாவிகளாக இருக்கிறீர்கள். சிலைகளை நீங்கள் வெறுக்கிறீர்கள். ஆனால் அதே கோவில்களைக் கொள்ளையடிக்கிறீர்கள். 23 நீங்கள் தேவனுடைய நியாயப்பிரமாணம் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள். ஆனால் அதை மீறி நடந்து தேவனுக்கு அவமானத்தை உருவாக்குகிறீர்கள். 24 “யூதர்களால்தான் யூதர் அல்லாதவர்கள் தேவனைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்” [b] என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.

25 நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடித்தால்தான் விருத்தசேதனம் செய்துகொண்டதில் பொருள் உண்டு. நீங்கள் சட்ட விதிகளை மீறுவீர்களேயானால் நீங்கள் விருத்தசேதனம் செய்தும் அது பயனற்றதாகிறது. 26 யூதர் அல்லாதவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களே. எனினும் அவர்கள் சட்டவிதிகளின்படி வாழ்வார்களேயானால் அவர்களும் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களாகவே கருதப்படுவர். 27 யூதர்களாகிய உங்களுக்கு எழுதப்பட்ட சட்டவிதிகளும், விருத்தசேதனமும் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் மீறுகிறீர்கள். எனவே தம் சரீரங்களில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாக இருந்தும் கூட சட்ட விதிகளை மதித்து நடப்பவர்கள் உங்கள் குற்றத்தை நிரூபித்து விடுகிறார்கள்.

28 சரீரத்தால் யூதனாகப் பிறந்தவன் எவனும் உண்மையில் யூதன் அல்லன். உண்மையான விருத்தசேதனம் என்பது சரீரத்தளவில் செய்யப்படுவது அல்ல. 29 மனத்தளவில் யூதனாக இருப்பவனே உண்மையான யூதன். உண்மையான விருத்தசேதனம் இருதயத்தில் செய்யப்படுவது. அது ஆவியால் செய்யப்படுவது. அது எழுதப்பட்ட ஆணைகளால் செய்யப்படுவதல்ல. ஆவியின் மூலம் இதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படும் ஒருவன் மக்களால் புகழப்படாவிட்டாலும் தேவனால் புகழப்படுவான்.

எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன? யூதர்களிடம் நிறைய சிறப்புத் தன்மைகள் உள்ளன. தேவன் அவர்களை நம்பியே தம் போதனைகளைக் கொடுத்தார். இதுதான் மிக சிறப்பான மேன்மையாகும். சில யூதர்கள் தேவனுடைய நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை என்பது உண்மையாகும். எனினும் அது தேவனுடைய வாக்குறுதியை மதிப்பற்றதாகச் செய்யாது. உலகில் உள்ள அத்தனை மக்களும் பொய்யராகிப் போனாலும் தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராகவே இருப்பார்.

“நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவராய் விளங்குவீர்.
    உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடைவீர்” (A)

என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.

நாம் தவறு செய்யும்போது, தேவன் சரியானவர் என்று தெளிவாக அது காட்டிவிடும். எனவே தேவன் நம்மைத் தண்டிக்கும்போது அவர் நீதியில்லாதவர் என்று கூற முடியுமா? (சிலர் இவ்வாறு கூறுவதாக எண்ணுகிறேன்.) கூடாது நம்மை தேவன் தண்டிக்க முடியாமல் போனால், பின்பு உலகத்தையும் தேவனால் நியாயந்தீர்க்க முடியாமல் போகும்.

“நான் பொய் சொல்லும்போது அது தேவனுக்குப் பெருமையே சேர்க்கிறது. ஏனெனில் என் பொய் தேவனுடைய உண்மையை விளங்க வைக்கிறது. அப்படி இருக்கும்போது நான் ஏன் பாவி என்று தீர்ப்பளிக்கப்பட வேண்டும்?” என்று ஒருவன் கேட்கிறான். “நாம் தீமை செய்வோம். அதன் மூலம் நன்மை வரும்” என்று சொல்வதைப் போலாகும் அது. ஆனால் சிலர் அவ்வாறுதான் நாங்கள் போதிக்கிறோம் என்று விமர்சிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தவறு. அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.

அனைவரும் குற்றவாளிகளே

யூதர்களாகிய நாம் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பு மிக்கவர்களா? இல்லை. யூதர்களும், யூதரல்லாதவர்களும் சமமானவர்கள் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அவர்கள் எல்லாம் குற்றம் உடையவர்களே. 10 எழுதப்பட்டபடி,

“சரியானவன் ஒருவன் கூட இல்லை.
11 புரிந்துகொள்கிறவனும் எவனுமில்லை.
    உண்மையில் தேவனோடிருக்க விரும்புகிறவனும் யாரும் இல்லை.
12 எல்லோரும் வழிதப்பியவர்கள்.
    எல்லோருமே பயனற்றுப்போனவர்கள்.
நல்லவை செய்பவன் ஒருவனாகிலும் இல்லை.” (B)

13 “அவர்களின் வாய்கள் திறந்த சவக் குழிகள் போன்றவை;
    தங்கள் நாக்குகளை பொய் சொல்லவே பயன்படுத்துகிறார்கள்.” (C)

“அவர்கள் சொல்லும் காரியங்கள் பாம்புகளின் விஷத்தைப் போன்றது.” (D)

14 “அவர்களது வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்துள்ளது.” (E)

15 “அவர்கள் எப்போதும் தாக்கவும் கொலை செய்யவும் தயாராக உள்ளனர்.
16     அவர்கள் செல்லும் வழிகளில் நாசமும் துன்பமும் உள்ளன.
17 அவர்களுக்குச் சமாதானத்தின் வழி தெரியாது.” (F)

18 “அவர்களிடம் தெய்வ பயமில்லை; தேவனிடம் மரியாதையும் இல்லை.” (G)

19 நியாயப்பிரமாணம் சொல்லுவதெல்லாம் அதற்கு உட்பட்டவர்களுக்கே. இது யூதர்களின் வாய்களை அடைத்துவிட்டது. இது உலகத்தார் அனைவரையும் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குக் கீழ்ப்படியும்படி செய்தது. 20 ஏனென்றால் எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. நியாயப்பிரமாணத்தின் நோக்கம் பாவம் பற்றிய உணர்வைக் கொண்டு வருவதுதான்.

நீதி செய்யும் தேவன்

21 சட்டவிதிகளின் உதவி இல்லாமலேயே தேவன் மக்களைச் சரியான வழியில் நடத்துகிறார். தேவன் இப்போது நமக்குப் புதிய வழியைக் காட்டியுள்ளார். சட்டங்களும், தீர்க்கதரிசிகளும் இப்புதிய வழியைப்பற்றிப் பேசியுள்ளனர். 22 இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் தேவன் மக்களை சரியான வழிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கும் எல்லாருக்கும் தேவன் இதைச் செய்தார். எந்த வேறுபாடும் இல்லை. 23 மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர். 24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவில் உள்ள இரட்சிப்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுவார்கள். 25 விசுவாசத்தின் மூலம் பாவிகள் மன்னிக்கப்பட தேவன் இயேசுவை ஒரு வழியாக வகுத்தார். இயேசுவின் இரத்தத்தால் தேவன் இதைச் செய்தார். எது சரியானதோ, நியாயமானதோ அதையே தேவன் செய்வார் என்பதை இது காட்டும். கடந்த காலத்தில் தேவன் மிகப் பொறுமையாக இருந்தார். மக்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்காமல் விட்டார். 26 இவ்வாறு தேவன் சரியான வழியில் நியாயம்தீர்ப்பார் என்பதை இன்று இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் இயேசுவில் விசுவாசம் உள்ள எவரையும் தேவன் நீதிமான்களாக்குகிறார்.

27 எனவே நம்மை நாமே மேன்மை பாராட்டிக்கொள்ள ஏதேனும் காரணம் உள்ளதாக இல்லை. எதற்காக இல்லை? சட்ட வழிகளின்படி வாழ்வதால் அல்ல, விசுவாசத்தால் மட்டுமே. நாம் பெருமை பாராட்டுவதை நிறுத்த வேண்டும். எதற்காக? 28 ஏனென்றால் ஒருவன் சட்டவழிகளின்படி வாழ்வதால் நீதிமானாக முடியாது; இயேசுவை விசுவாசிப்பதன் மூலமே நீதிமானாக முடியும். இதுவே நமது நம்பிக்கை. 29 தேவன் என்பவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் யூதர் அல்லாதவர்களுக்கும் உரியவரே. 30 ஒரே ஒரு தேவனே உள்ளார். அவரே யூதர்களையும் அவர்கள் விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்குகிறார். அவ்வாறே யூதரல்லாதவர்களையும் ஆக்குகிறார். 31 விசுவாசத்தின் வழியைப் பின்பற்றுவதன் மூலம் சட்ட விதிகளை அழித்துவிடுகிறோமா? இல்லை. இவ்வாறு நாம் உண்மையாகச் சட்டத்தைக் கைக்கொள்கிறோம்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center