Beginning
இக்கோனியத்தில் ஊழியம்
14 பவுலும் பர்னபாவும் இக்கோனியம் நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். (இதைத் தான் அவர்கள் ஒவ்வொரு நகரத்திலும் செய்தனர்) அவர்கள் அங்குள்ள மக்களிடம் பேசினர். பவுலும் பர்னபாவும் பேசின விதத்தில் பல யூதர்களும், கிரேக்கர்களும் அவர்கள் கூறியதை முழுமையாக நம்பினர். 2 ஆனால் மனந்திரும்பாத யூதர்கள், யூதரல்லாத சகோதரரைக் குறித்துத் தீமையானவற்றை எண்ணும்படியாகச் செய்தனர்.
3 எனவே பவுலும் பர்னபாவும் இக்கோனியத்தில் நீண்ட காலம் தங்கினர். கர்த்தருக்காகத் துணிவோடு பேசினர். தேவனுடைய கிருபையைக் குறித்து பவுலும், பர்னபாவும் பேசினர். அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதற்கு அப்போஸ்தலர்களுக்கு உதவி செய்து அவர்கள் கூறியதை உண்மையென்று தேவன் நிரூபித்தார். 4 ஆனால் நகர மக்களில் சிலர் யூதர்கள் கூறியதை ஒப்புக்கொண்டனர். நகரத்தின் மற்ற மக்களோ பவுலையும் பர்னபாவையும் நம்பினர். எனவே நகரம் பிரிவுபட்டது.
5 சில யூதரல்லாத மக்களும், சில யூதர்களும் அவர்களின் யூத அதிகாரிகளும் பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்த முயன்றனர். இந்த மக்கள் அவர்களைக் கற்களால் எறிந்துகொல்ல எண்ணினர். 6 பவுலும் பர்னபாவும் இதை அறிந்தபோது, நகரிலிருந்து சென்றனர். அவர்கள் லிஸ்தீராவுக்கும், தெர்பைக்கும் லிக்கோனியாவின் நகரங்களுக்கும், அந்த நகரங்களைச் சூழ்ந்த கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்றனர். 7 அவர்கள் அங்கும் கூட நற்செய்தியைக் கூறினர்.
லிஸ்திரா, தெர்பை நகர ஊழியம்
8 பாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன். 9 அவன் அங்கு உட்கார்ந்துகொண்டு பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். பவுல் அவனைப் பார்த்தான். தேவன் அவனைக் குணப்படுத்த முடியும் என்பதை அம்மனிதன் நம்பியதைப் பவுல் கண்டான். 10 எனவே பவுல் உரக்க, “எழுந்து உன் கால்களால் நில்” என்றான். அம்மனிதன் குதித்தெழுந்து சுற்றிலும் நடக்க ஆரம்பித்தான்.
11 பவுல் செய்ததை மக்கள் கூட்டத்தினர் கண்டபோது, அவர்கள் லிக்கோனிய மொழியில் சத்தமிட்டனர். அவர்கள், “தேவர்கள் மனிதரைப்போன்று மாறியுள்ளனர்! அவர்கள் நம்மிடம் இறங்கி வந்துள்ளனர்!” என்றனர். 12 மக்கள் பர்னபாவை “சீயெஸ்” என அழைக்கத் தொடங்கினர். பவுல் முக்கிய பேச்சாளராக இருந்ததால், அவர்கள் பவுலை “ஹெர்ம்ஸ்” என்றழைத்தனர். 13 சீயஸின் தேவாலயம் நகரத்தினருகில் இருந்தது. தேவாலயத்தின் பூசாரி சில காளைகளையும் மாலைகளையும் நகரக் கதவுகளுக்கருகே கொண்டுவந்தான். பவுலையும் பர்னபாவையும் வழிபடுவதற்கு பூசாரிகளும் மக்களும் பலி செலுத்த விரும்பினர்.
14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் மக்கள் செய்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்தனர். [a] பின் அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் ஓடி, அவர்களிடம் உரத்த குரலில், 15 “மனிதரே ஏன் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் தேவர்கள் அல்ல. உங்களைப்போன்ற மனிதர்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் உங்களைப்போலவே உண்டு. உங்களுக்கு நற்செய்தியைச் சொல்ல நாங்கள் வந்தோம். பயனற்ற இந்தக் காரியங்களை விட்டுவிலகும்படியாக நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையான ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள். அவரே வானம், பூமி, கடல், அவற்றிலுள்ள பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர்.
16 “முன்பு எல்லா தேசங்களும் அவை விரும்பியவற்றைச் செய்வதற்கு தேவன் அனுமதித்தார். 17 ஆனால் அதே சமயம் தேவன் உண்மையானவர் என்பதை நிறுவும் காரியங்களையே தேவன் செய்தார். அவர் உங்களுக்கு நல்லவற்றையே செய்கிறார். அவர் வானிலிருந்து உங்களுக்கு மழையைத் தருகிறார். அவர் தக்க காலங்களில் உங்களுக்கு நல்ல அறுவடையைக் கொடுக்கிறார். அவர் மிகுதியான உணவை உங்களுக்குத் தருகிறார். அவர் உங்கள் இருதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறார்” என்றனர்.
18 பவுலும் பர்னபாவும் மக்களுக்கு இவற்றைக் கூறினர். ஆனாலும் அவர்களை வழிபடுவதற்காக அவர்கள் இட்ட பலியை அநேகமாக பவுலும் பர்னபாவும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
19 பின் அந்தியோகியாவிலிருந்தும், இக்கோனியத்திலிருந்தும் சில யூதர்கள் வந்தனர். அவர்கள் பவுலை எதிர்க்கும்படியாக மக்களை ஏவினர். எனவே மக்கள் பவுலின்மீது கற்களை வீசி, அவன் இறந்துவிட்டானென்று நினைத்து அவனை ஊருக்குப் புறம்பே இழுத்து வந்தனர். 20 இயேசுவின் சீஷர்கள் பவுலைச் சுற்றிலும் கூடினர். பின் அவன் எழுந்து ஊருக்குள் மீண்டும் சென்றான். மறுநாள் அவனும் பர்னபாவும் புறப்பட்டு தெர்பை நகரத்துக்குச் சென்றனர்.
அந்தியோகியாவுக்குத் திரும்புதல்
21 பவுலும் பர்னபாவும் தெர்பை நகரத்திலும் நற்செய்தியைக் கூறினர். பல மக்கள் இயேசுவின் சீஷராயினர். லிஸ்திரா, இக்கோனியம், அந்தியோகியா நகரங்களுக்குப் பவுலும் பர்னபாவும் திரும்பினர். 22 அந்நகரங்களில் இயேசுவின் சீஷர்களை பவுலும் பர்னபாவும் வலிமைமிக்கவர்களாக ஆக்கினர். நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு அவர்கள் உதவினர். பவுலும் பர்னபாவும், “தேவனுடைய இராஜ்யத்துக்குள் செல்லும் நம் பாதையில் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்” என்றனர். 23 பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை அமர்த்தினார்கள். அவர்கள் உபவாசமிருந்து அம்மூப்பர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர். அம்மூப்பர்கள் கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைத்த மனிதராயிருந்தார்கள். எனவே பவுலும் பர்னபாவும் கர்த்தரின் பாதுகாப்பில் அவர்களை விட்டனர்.
24 பவுலும் பர்னபாவும் பிசிதியா நாட்டின் வழியாகச் சென்றனர். பின் அவர்கள் பம்பிலியா நாட்டிற்கு வந்தனர். 25 அவர்கள் பெர்காவில் தேவனுடைய செய்தியைக் கூறினார்கள். பின் அவர்கள் அத்தாலியா நகரத்திற்குச் சென்றனர்.
26 அங்கிருந்து பவுலும் பர்னபாவும் சிரியாவிலுள்ள அந்தியோகியாவிற்குக் கடல் வழியாகப் பயணமாயினர். இந்நகரில்தான் விசுவாசிகள் அவர்களை தேவனுடைய கண்காணிப்பில் ஆட்படுத்தி இவ்வேலை செய்ய அனுப்பியிருந்தனர். இப்போது அவர்கள் தங்கள் வேலையை முடித்திருந்தனர்.
27 பவுலும் பர்னபாவும் வந்துசேர்ந்தபோது அவர்கள் சபையைக் கூட்டினர். தேவன் அவர்களோடு செய்த எல்லாக் காரியங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் அவர்களுக்குக் கூறினர். அவர்கள், “வேறு தேசங்களின் மக்களும் நம்பும்படிக்கு தேவன் ஒரு வாசலைத் திறந்தார்” என்றார்கள். 28 கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர்.
எருசலேமில் சந்திப்பு
15 பின்பு யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்குச் சில மனிதர் வந்தனர். யூதரல்லாத சகோதரருக்கு அவர்கள் “நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள். இதைச் செய்யும்படியாக மோசே நமக்குக் கற்பித்தார்” என்று போதிக்க ஆரம்பித்தனர். 2 பவுலும் பர்னபாவும் இந்தப் போதனையை எதிர்த்தனர். அதைக் குறித்து இந்த மனிதரிடம் அவர்கள் விவாதித்தனர். எனவே அந்தச் சபையார் பவுலையும் பர்னபாவையும், வேறு சில மனிதர்களையும் எருசலேமுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். அங்கிருந்த அப்போஸ்தலரிடமும் மூப்பர்களிடமும் இதைக் குறித்து அதிகமாகப் பேசப் போகிறவர்களாக இந்த மனிதர்கள் இருந்தார்கள்.
3 அவர்கள் பயணத்திற்கு சபை உதவிற்று. பெனிக்கே, சமாரியா ஆகிய தேசங்களின் வழியாக அம்மனிதர்கள் சென்றனர். யூதரல்லாத மக்கள் உண்மையான தேவனிடம் திரும்பியது குறித்த அனைத்தையும் அவர்கள் கூறினர். இது எல்லா சகோதரர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. 4 பவுலும் பர்னபாவும் பிறரும் எருசலேமை வந்தடைந்தனர். அப்போஸ்தலரும், மூப்பர்களும் விசுவாசிகள் அனைவரும் சேர்ந்து அவர்களை வரவேற்றனர். பவுலும் பர்னபாவும், பிறரும் தேவன் தங்களிடம் செய்த அனைத்துக் காரியங்களையும் கூறினர். 5 எருசலேமின் விசுவாசிகளில் சிலர் பரிசேயர்கள். அவர்கள் எழுந்து “யூதரல்லாத விசுவாசிகள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு அவர்களுக்குக் கூற வேண்டும்” என்று கூறினர்.
6 அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். 7 நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி, “சகோதரர்களே, தொடக்கக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நீங்கள் நினைவுகூருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியைப் போதனை செய்வதற்கு அப்போது உங்களுக்கிடையிலிருந்து தேவன் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் என் மூலமாக நற்செய்தியைக் கேட்டு விசுவாசம் வைத்தனர். 8 தேவன் மனிதரின் எண்ணங்களை அறிவார். அவர் யூதரல்லாத மக்களையும் ஏற்றுக்கொண்டார். எங்களுக்குச் செய்தது போலவே அவர்களுக்கும் பரிசுத்த ஆவியை அளித்து தேவன் இதனைக் காட்டினார். 9 இந்த மனிதர்கள் தேவனுக்கு நம்மிலிருந்தும் வேறுபட்டவர்களல்லர். அவர்கள் விசுவாசம் வைத்தபோது, தேவன் அவர்கள் இருதயங்களை பரிசுத்தமுறச் செய்தார். 10 எனவே யூதரல்லாத விசுவாசிகளிகளின் கழுத்தில் ஏன் பெரும் பாரத்தைச் சுமத்துகிறீர்கள். தேவனைக் கோபப்படுத்த நீங்கள் முயன்றுகொண்டிருக்கிறீர்களா? அந்தப் பாரத்தைச் சுமப்பதற்கு நமக்கும் நமது முன்னோர்களுக்கும் வலிமை இருக்கவில்லை! 11 நாமும் இந்த மக்களும் கர்த்தராகிய இயேசுவின் கிருபையினாலே இரட்சிக்கப்படுவோம் என்று நான் நம்புகிறேன்.” என்றான்.
12 அப்போது அந்தக் கூட்டம் முழுமையும் அமைதியாயிற்று. பவுலும் பர்னபாவும் பேசுவதைக் கவனித்தனர். யூதரல்லாத மக்களின் மத்தியில் தேவன் அவர்கள் மூலமாகச் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் விவரித்தார்கள். 13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். 14 தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்று, அவர்களைத் தனது மக்களாக்கினார். 15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன.
16 “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன்.
தாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன்.
அது விழுந்துவிட்டது.
அந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன்.
அவனது வீட்டைப் புதியதாக்குவேன்.
17 பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர்.
யூதரல்லாத மக்களும் என் மக்களே.
கர்த்தர் இதைக் கூறினார்.
இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’(A)
18 “தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப்பட்டிருந்தன.
19 “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். 20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்:
‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.
பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.
இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’
21 ஒவ்வொரு நகரத்திலும் மோசேயின் சட்டத்தைப் போதிக்கும் மனிதர்கள் இருப்பதால், அவர்கள் இவற்றைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஓய்வு நாளன்றும் மோசேயின் போதனைகள் ஜெப ஆலயத்தில் படிக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதப்படவேண்டும்” என்று கூறினான்.
யூதரல்லாத சகோதரருக்குக் கடிதம்
22 பவுல், பர்னபா ஆகியோருடன் அந்தியோகியாவுக்குச் சில மனிதர்களை அனுப்பவேண்டுமென அப்போஸ்தலரும், மூப்பரும், சபையினர் எல்லோரும் முடிவு செய்தார்கள். அக்கூட்டத்தினர் தங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் பர்சபா என்ற யூதாவையும், சீலாவையும் தேர்ந்தெடுத்தனர். எருசலேமின் சகோதரர்கள் அவர்களை மதித்தனர். 23 அக்கூட்டத்தினர் அவர்கள் மூலமாக அக்கடிதத்தை அனுப்பினார்கள். அக்கடிதம் கூறியது:
அப்போஸ்தலர்கள், மூப்பர்கள், சகோதரர்களிடமிருந்து,
அந்தியோகியாவிலும், சிரியாவிலும், சிலிசியாவிலுமுள்ள
அன்பான யூதரல்லாத சகோதரருக்கு:
24 எங்கள் கூட்டத்திலிருந்து சில மனிதர்கள் உங்களிடம் வந்தார்கள் எனக் கேள்விப்பட்டோம். அவர்கள் கூறிய காரியங்கள் உங்களைத் தொந்தரவு செய்து உங்கள் மனங்களை நிலைகுலையச் செய்துள்ளன. ஆனால் அவற்றைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களுக்குக் கூறவில்லை. 25 சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்து உங்களிடம் அனுப்புவதென நாங்கள் எல்லோரும் முழு மனதாக முடிவு செய்துள்ளோம். நமது அன்பான நண்பர்களாகிய பர்னபா, பவுல் ஆகியோரோடு அவர்களும் இருப்பார்கள். 26 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சேவைக்காக பர்னபாவும் பவுலும் தங்கள் பிராணனையே கொடுத்துள்ளார்கள். 27 எனவே அவர்களோடு யூதாவையும் சீலாவையும் அனுப்புகிறோம். அவர்கள் வாய் வார்த்தைகளினால் அவற்றை உங்களுக்கு உறுதிசெய்வார்கள். 28 உங்கள் மீது இன்னும் அதிகமான பாரங்கள் விதிக்கப்படலாகாதென பரிசுத்த ஆவியானவர் முடிவு செய்தார். நாங்களும் அதை ஆமோதிக்கிறோம். நீங்கள் செய்யத் தேவையான இந்தக் காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும்.
29 விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடாதீர்கள்.
இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடாதீர்கள்.
பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.
இத்தகைய காரிங்களில் நீங்கள் உங்களை
ஈடுபடுத்தாதிருந்தால் நல்லது.
30 எனவே பவுல், பர்னபா, யூதா, சீலா ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்றனர். அவர்கள் அந்தியோகியாவுக்குச் சென்றனர். அந்தியோகியாவில் விசுவாசிகளைக் கூட்டி அக்கடிதத்தைக் கொடுத்தனர். 31 விசுவாசிகள் அதை வாசித்தபோது மகிழ்ச்சியடைந்தனர். அக்கடிதம் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. 32 யூதாவும் சீலாவும்கூடத் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். சகோதரர்கள் வலிமைபெற உதவுவதற்காக அவர்கள் பல காரியங்களைக் கூறினர். 33 அவர்கள் சகோதரரிடமிருந்து அமைதியின் வாழ்த்தைப் பெற்றனர். யூதாவும் சீலாவும் எருசலேமில் தங்களை அனுப்பிய சகோதரரிடம் சென்றனர். 34 [b]
35 ஆனால் பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவில் தங்கினர். அவர்களும் இன்னும் பலரும் தேவனுடைய செய்தியைக் கற்பிக்கவும் உபதேசிக்கவும் செய்தார்கள்.
பவுலும் பர்னபாவும் பிரிதல்
36 சில நாட்களுக்குப் பிறகு பவுல் பர்னபாவை நோக்கி, “பல ஊர்களில் கர்த்தரின் செய்தியை நாம் கூறியுள்ளோம். அந்த ஊர்களிலுள்ள சகோதரர்களையும் சகோதரிகளையும் சந்திக்கவும், அவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதைக் காணவும் நாம் அந்த ஊர்களுக்குத் திரும்பவும் போக வேண்டும்” என்றான்.
37 பர்னபா அவர்களோடு யோவான் மாற்குவையும் அழைத்துச் செல்ல விரும்பினான். 38 ஆனால் அவர்களின் முதல் பயணத்தில் பம்பிலியாவில் யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்தான். அவர்களது வேலையில் அவர்களோடு அவன் சேர்ந்துகொள்ளவில்லை. எனவே பவுல் அவனைத் தம்முடன் அழைத்துச் செல்ல வேண்டாமென வலியுறுத்தினான். 39 பவுலும் பர்னபாவும் இதைக் குறித்துப் பெரிய வாக்குவாதம் நிகழ்த்தினார்கள். எனவே அவர்கள் பிரிந்து வெவ்வேறு வழிகளில் சென்றார்கள். பர்னபா சீப்புருவுக்கு கடல் வழியாகச் சென்றான். அவனோடு மாற்குவையும் சேர்த்துக்கொண்டான்.
40 பவுல் தன்னோடு செல்வதற்கு சீலாவைத் தேர்ந்துகொண்டான். அந்தியோகியாவில் சகோதரர்கள் பவுலைக் கர்த்தரின் கவனிப்பில் ஒப்புவித்து அவனை அனுப்பினர். 41 பவுலும் சீலாவும் சிரியா, சிலிசியா நாடுகளின் வழியாக சபைகள் பலமடைவதற்கு உதவியபடியே பயணம் செய்தனர்.
2008 by World Bible Translation Center