Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
அப்போஸ்தலர் 4-6

யூத ஆலோசனைச் சங்கத்தின் முன்

பேதுருவும், யோவானும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சில மனிதர்கள் அவர்களிடம் வந்தார்கள். யூத ஆசாரியர்களும், ஆலயத்தைப் பாதுகாக்கும் வீரர்களுக்குத் தலைவனும், சில சதுசேயரும் அவர்களோடு வந்திருந்தனர். பேதுருவும், யோவானும் மக்களிடம் போதித்தவற்றைக் குறித்து அவர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். அப்போஸ்தலர்கள் இயேசுவைக் குறித்து மக்களுக்குக் கூறும்போது, மக்கள் மரணத்திலிருந்து இயேசுவின் வல்லமையால் உயிர்த்தெழுவார் என்பதையும் போதித்தார்கள். யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அது ஏற்கெனவே இரவு நேரமாயிருந்தது. எனவே அடுத்த நாள்வரைக்கும் பேதுருவையும் யோவானையும் சிறையில் வைத்திருந்தார்கள். ஆனால் பேதுருவும் யோவானும் செய்த போதனைகளைக் கேட்ட மக்களில் பலரும் அவர்கள் கூறியவற்றை விசுவாசித்தனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரம் பேராக இருந்தது.

மறுநாள் யூதத் தலைவர்களும், அதிகாரிகளும், வேதபாரகரும் எருசலேமில் சந்தித்தனர். அன்னா, காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோரும் அங்கிருந்தனர். தலைமை ஆசாரியனின் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர். எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் பேதுருவையும் யோவானையும் அவர்கள் நிறுத்தினர். யூத அதிகாரிகள் பல முறை அவர்களிடம், “ஊனமுற்ற இந்த மனிதனை எவ்வாறு குணப்படுத்தினீர்கள்? எந்த வல்லமையைப் பயன்படுத்தினீர்கள்? யாருடைய அதிகாரத்தினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.

அப்போது பேதுரு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அவன் அவர்களை நோக்கி, “மக்களின் அதிகாரிகளே, முதிய தலைவர்களே, ஊனமுற்ற மனிதனுக்கு ஏற்பட்ட நல்ல காரியத்தைக் குறித்து எங்களை வினவுகிறீர்களா? அவனைக் குணப்படுத்தியது யார் என்று எங்களை வினவுகிறீர்களா? 10 நீங்கள் யாவரும், யூத மக்கள் அனைவரும், இம்மனிதன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் குணம் ஆக்கப்பட்டான் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். இந்த மனிதன் ஊனமுற்றவனாயிருந்தான். ஆனால் இப்போது இயேசுவின் வல்லமையால் குணம் பெற்று உங்களுக்கு முன்பாக எழுந்து நிற்கிறான்.

11 “‘கட்டிடம் கட்டுபவர்களாகிய நீங்கள் இயேசுவை முக்கியமற்ற கல்லைப் போன்று கருதினீர்கள்.
    ஆனால் இந்தக் கல்லோ மூலைக்கல்லாயிற்று.’ (A)

12 மக்களை இரட்சிக்கக் கூடியவர் இயேசு ஒருவரே. உலகத்தில் மக்களை இரட்சிக்கும் வல்லமையுடன் தரப்பட்ட நாமம் இயேசுவினுடையது மட்டுமே. இயேசுவின் மூலமாகவே நாம் இரட்சிக்கப்படவேண்டும்!” என்றான்.

13 பேதுருவும் யோவானும் வேறு சிறப்பான பயிற்சியோ கல்வியோ பெறவில்லை என்பதை யூதத் தலைவர்கள் புரிந்துகொண்டனர். பேதுருவும் யோவானும் பேசுவதற்கு அஞ்சவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். அதனால் அதிகாரிகள் வியப்புற்றனர். பேதுருவும் யோவானும் இயேசுவுடன் இருந்தவர்கள் என்பதை உணர்ந்தனர். 14 இரண்டு அப்போஸ்தலர்களுடன் ஊனமாயிருந்த அந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அம்மனிதன் குணமடைந்திருப்பதை அவர்கள் கண்டனர். எனவே அப்போஸ்தலருக்கு எதிராக அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை.

15 அக்கூட்டத்திலிருந்து போகுமாறு யூதத் தலைவர்கள் அவர்களுக்குக் கூறினர். அதன் பின்பு தாங்கள் செய்ய வேண்டியது என்னவென்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 16 அவர்கள், “இம்மனிதர்களை நாம் என்ன செய்வோம்? அவர்கள் பேரதிசயம் ஒன்றைச் செய்துள்ளார்கள் என்பதை எருசலேமின் ஒவ்வொரு மனிதனும் அறிவான். இது தெளிவு. இது உண்மையல்லவென்று நம்மால் சொல்ல முடியாது. 17 ஆனால் இம்மனிதனைக் குறித்து இவர்கள் மக்களுக்குச் சொல்வதற்கு அஞ்சும்படி செய்யவேண்டும். அப்போது மக்களிடம் இச்செய்தி மேலும் பரவாது” என்றனர்.

18 எனவே யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் மீண்டும் உள்ளே அழைத்தனர். இயேசுவின் பெயரில் எதையும் கூறாதபடியும் போதிக்காதபடியும் அவர்கள் அப்போஸ்தலர்களுக்குக் கூறினர். 19 ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் எதைச் சரியென்று நினைக்கிறீர்கள்? தேவன் எதை விரும்புவார்? நாங்கள் கீழ்ப்படியவேண்டுவது உங்களுக்கா அல்லது தேவனுக்கா? 20 நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் மக்களுக்குக் கண்டிப்பாகக் கூற வேண்டும்” என்றார்கள்.

21-22 நடந்ததற்காக எல்லா மக்களும் தேவனை வாழ்த்திக்கொண்டிருந்தபடியால் யூதத் தலைவர்கள் அப்போஸ்தலரைத் தண்டிப்பதற்கு ஒரு வழியும் காண முடியவில்லை. (இந்த அதிசயம் தேவனிடமிருந்து வந்த ஒரு சான்று. குணமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவனாயிருந்தான்!) எனவே யூத அதிகாரிகள் மீண்டும் அப்போஸ்தலரை எச்சரித்து விடுவித்தனர்.

விசுவாசிகளின் பிரார்த்தனை

23 பேதுருவும் யோவானும் யூதத் தலைவர்களின் கூட்டத்தை விட்டு நீங்கி, அவர்களது குழுவிற்குச் சென்றனர். முக்கிய ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் தங்கள், குழுவினருக்குக் கூறினர். 24 விசுவாசிகள் இதனைக் கேட்டபோது, அவர்கள் ஒரே மனதுடன் தேவனிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக உணர்ந்தனர். 25 அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான்.

“‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்?
    அவர்கள் செய்வது வீணானது.

26 “‘பூமியின் அரசர்கள் போருக்குத் தயாராகின்றனர்.
    தலைவர்கள் அனைவரும் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக ஒருமித்துக் கூடுகின்றனர்.’ (B)

27 ஏரோதும் பொந்தியு பிலாத்துவும் தேசங்களும், எல்லா யூத ஜனங்களும் சேர்ந்து எருசலேமில் இயேசுவுக்கு எதிராகக் கூடினபோது இவை அனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்தன. இயேசு உமது தூய ஊழியர். அவரே கிறிஸ்துவாகும்படி நீர் உண்டாக்கியவர். 28 கூடி வந்த இந்த மக்கள் உம் திட்டம் நிறைவேறும்படி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டனர். உம் வல்லமையின்படியும், சித்தத்தின்படியும் அது நிகழ்ந்தது. 29 கர்த்தாவே, இப்போதும் அவர்கள் கூறுவதைக் கவனியும். அவர்கள் எங்களை அச்சமடையும்படியாகச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் உமக்கு ஊழியம் செய்பவர்கள். 30 நீர் விரும்புகிறவற்றை நாங்கள் தைரியமாகக் கூறுவதற்கு எங்களுக்கு உதவும். நோயுற்றோரைக் குணப்படுத்தும். சான்றுகள் கொடும். உம் தூய பணியாளராகிய இயேசுவின் வல்லமையால் அதிசயங்கள் நடக்கும்படிச் செய்யும்” என்று பிரார்த்தனை செய்தனர்.

31 விசுவாசிகள் பிரார்த்தனை செய்த பிறகு அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். அச்சமின்றி தேவனுடைய செய்தியைத் தொடர்ந்து கூறினர்.

விசுவாசிகளின் ஒருமித்த வாழ்வு

32 விசுவாசிகள் அனைவரும் இருதயத்தில் ஒருமனமுள்ளவர்களாக ஒரே ஊக்கமுடையோராக இருந்தனர். அவர்களில் ஒருவரும் தன்னிடமிருந்த பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தமானவை எனக் கூறவில்லை. மாறாக அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 33 மிகுந்த வல்லமையோடு, அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு மரணத்தினின்று உண்மையாகவே எழுப்பப்பட்டார் என்பதை மக்களுக்குக் கூறினர். 34 விசுவாசிகளை தேவன் அதிகமாக ஆசீர்வதித்தார். அவர்கள் அனைவரும் தேவையான பொருட்களைப் பெற்றனர். வயல்களையோ, வீடுகளையோ உடைய ஒவ்வொருவரும் அவற்றை விற்றனர். அப்பணத்தைக் கொண்டு வந்து 35 அதனை அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தனர். பின்பு ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன.

36 விசுவாசிகளில் ஒருவன் யோசேப்பு என அழைக்கப்பட்டான். அப்போஸ்தலர்கள் அவனை பர்னபாஸ் என்று அழைத்தனர். (இந்தப் பெயர், “பிறருக்கு உதவுகின்ற மனிதன்” எனப் பொருள்படும்) அவன் சீப்புருவில் பிறந்த லேவியன். 37 அவனுக்குச் சிறிது நிலம் இருந்தது. அவன் அந்த நிலத்தை விற்று பணத்தைக் கொண்டுவந்து, அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.

அனனியாவும் சப்பீராளும்

அனனியா என்றொரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சப்பீராள். தனக்கிருந்த கொஞ்ச நிலத்தை அனனியா விற்றான். ஆனால் தனக்குக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே அவன் அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தான். மீதியிருந்த பணத்தை இரகசியமாக தனக்கென வைத்துக்கொண்டான். அவன் மனைவி இதனை அறிந்து இத்திட்டத்துக்கு ஒப்புக்கொண்டாள்.

பேதுரு “அனனியாவே, சாத்தான் உனது இருதயத்தை ஆள ஏன் அனுமதித்தாய்? நீ பொய் கூறி, பரிசுத்த ஆவியை ஏமாற்ற முயன்றாய். நீ உனது நிலத்தை விற்றாய். ஆனால் பணத்தில் ஒரு பகுதியை ஏன் உனக்காக வைத்துக்கொண்டாய்? நீ நிலத்தை விற்கும் முன்பு அது உனக்கு உரியதாக இருந்தது. நீ அதனை விற்ற பிறகும் அந்தப் பணத்தை நீ விரும்பிய வகையில் செலவழித்திருக்கலாம். ஏன் இந்தத் தீய செயலைச் செய்வதற்கு எண்ணினாய்? நீ தேவனிடம் பொய் கூறினாய், மனிதரிடம் அல்ல!” என்றான்.

5-6 அனனியா இதனைக் கேட்டபோது, கீழே விழுந்து உயிர்விட்டான். சில இளைஞர்கள் வந்து அவன் சரீரத்தைப் பொதிந்தனர். அதனை வெளியே எடுத்துச்சென்று புதைத்தனர். இதைக் குறித்துக் கேள்விப்பட்ட ஒவ்வொரு மனிதனின் மனமும் அச்சத்தால் நிரம்பியது.

சுமார் மூன்று மணிநேரம் கழித்து அவனுடைய மனைவி சப்பீராள் உள்ளே வந்தாள். தனது கணவனுக்கு நிகழ்ந்ததைக் குறித்து அவள் அறிந்திருக்கவில்லை. பேதுரு அவளை நோக்கி, “உங்கள் நிலத்திற்காக எவ்வளவு பணம் கிடைத்தது என்பதைக் கூறு. இவ்வளவுதானா?” என்று கேட்டான்.

சப்பீராள் பதிலாக, “ஆம், இவ்வளவு தான் எங்கள் நிலத்திற்காகக் கிடைத்தது” என்றாள்.

பேதுரு அவளை நோக்கி, “கர்த்தருடைய ஆவியைச் சோதிப்பதற்கு நீயும் உன் கணவனும் ஏன் ஒத்துக்கொண்டீர்கள்? கவனி, அந்தக் காலடிகளின் சத்தத்தைக் கேட்டாயா? உனது கணவனைப் புதைத்த மனிதர்கள் கதவருகே வந்துவிட்டனர். உன்னையும் அவர்கள் அவ்வாறே சுமந்து செல்வர்” என்றான். 10 அதே கணத்தில் சப்பீராள் அவன் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். அம்மனிதர்கள் உள்ளே வந்து அவள் இறந்துவிட்டதைக் கண்டனர். அவர்கள் அவளைச் சுமந்துசென்று, அவளது கணவனின் அருகே புதைத்தனர். 11 விசுவாசிகளனைவரும், இந்தக் காரியங்களைக் குறித்துக் கேட்ட பிற மக்களும் பயத்தால் நிரம்பினர்.

தேவனிடமிருந்து சான்றுகள்

12 அப்போஸ்தலர்கள் அதிசயங்கள் பலவற்றையும், வல்லமைமிக்க காரியங்களையும் செய்தனர். எல்லா மக்களும் இந்தக் காரியங்களைப் பார்த்தனர். சாலோமோனின் மண்டபத்தில் அப்போஸ்தலர்கள் கூடியிருந்தனர். அவர்கள் ஒரே நோக்கம் உடையோராக இருந்தனர். 13 வேறு எந்த மக்களும் அவர்களோடு அங்கு நிற்பதற்குத் தகுதியானவர்களாகத் தங்களைக் கருதவில்லை. அப்போஸ்தலர்களை எல்லா மக்களும் மிகவும் புகழ்ந்தார்கள். 14 மேலும் மேலும் மிகுதியான மக்கள் கர்த்தரில் நம்பிக்கை வைத்தனர். பல பெண்களும் ஆண்களும் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்க்கப்பட்டனர். 15 எனவே மக்கள் தங்களுடைய நோயாளிகளை தெருவுக்குக் கொண்டு வந்தனர். பேதுரு அவ்வழியே வருகிறானென்று கேள்விப்பட்டனர். எனவே மக்கள் நோயாளிகளை சிறு கட்டில்களிலும் படுக்கைகளிலும் படுக்கவைத்தனர். பேதுருவின் நிழல் நோயாளிகள் மீது விழுந்தால் கூட அவர்கள் குணமாவதற்கு அதுவே போதும் என்று அவர்கள் நம்பி பேதுரு நடக்கும் வழியில் அவர்களைப் படுக்க வைத்தனர். 16 எருசலேமின் சுற்றுப் புறத்திலுள்ள எல்லா ஊர்களிலுமிருந்து மக்கள் வந்தனர். நோயாளிகளையும் பிசாசின் அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்டோரையும் அவர்கள் கொண்டு வந்தனர். இந்த மக்கள் எல்லோரும் குணம் பெற்றனர்.

தடை செய்யும் முயற்சி

17 தலைமை ஆசாரியனும், அவருடைய எல்லா நண்பர்களும் (சதுசேயர் எனப்பட்ட குழுவினர்) மிகவும் பொறாமை கொண்டனர். 18 அவர்கள் அப்போஸ்தலரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர். 19 ஆனால் இரவில் கர்த்தருடைய தூதன் ஒருவன் சிறையின் கதவுகளைத் திறந்தான். தேவ தூதன் அப்போஸ்தலர்களை வெளியே அழைத்துச் சென்று அவர்களை நோக்கி, 20 “செல்லுங்கள். தேவாலயத்தில் போய் நில்லுங்கள். இப்புதிய வாழ்க்கையைக் குறித்த ஜீவ வார்த்தைகள் அனைத்தையும் மக்களுக்குக் கூறுங்கள்” என்றான். 21 அப்போஸ்தலர்கள் இதைக் கேட்டபோது அவ்வாறே கீழ்ப்படிந்து தேவாலயத்துக்குச் சென்றார்கள். அது அதிகாலை வேளையாக இருந்தது. அப்போஸ்தலர்கள் மக்களுக்குப் போதிக்க ஆரம்பித்தனர். தலைமை ஆசாரியனும் அவனது நண்பர்களும் தேவாலயத்துக்கு வந்தனர். யூதத் தலைவர்களும் எல்லா முக்கியமான யூத முதியவர்களும் கூடி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போஸ்தலர்களை அவர்களிடம் அழைத்து வருவதற்கெனச் சில மனிதர்களை அனுப்பினர். 22 அவர்கள் சிறைக்குப் போனபோது, அங்கு அப்போஸ்தலர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பிச் சென்று, யூத அதிகாரிகளுக்கு அதனை அறிவித்தனர். 23 அம்மனிதர்கள், “சிறை பூட்டித் தாளிடப்பட்டிருந்தது. சிறைவாயில்களருகே காவலர்கள் நின்றனர். ஆனால் நாங்கள் கதவுகளைத் திறந்தபோது சிறையில் யாருமில்லை!” என்றனர். 24 தேவாலயத்துக் காவலரின் தலைவனும் முக்கிய போதகர்களும் இதனைக் கேட்டனர். அவர்கள் குழப்பமுற்றனர். அவர்கள் ஆச்சரியமுற்று, “இதனால் என்ன நடக்கப்போகிறதோ?” என்றனர்.

25 பின் மற்றொரு மனிதன் வந்து, “கேளுங்கள்! நீங்கள் சிறையில் அடைத்த மனிதர்கள் தேவாலயத்துக்குள் நிற்கின்றனர். அவர்கள் மக்களுக்கு உபதேசித்துக்கொண்டிருக்கின்றனர்” என்று அவர்களுக்குக் கூறினான். 26 காவலர் தலைவனும், காவலரும் வெளியே வந்து அப்போஸ்தலரை அழைத்துச் சென்றனர். மக்களுக்குப் பயந்ததால் வீரர்கள் தங்கள் வலிமையைப் பயன்படுத்தவில்லை. மக்கள் சினம் கொண்டு கற்களாலெறிந்து அவர்களைக் கொல்லக்கூடுமென்று வீரர்கள் பயந்தனர்.

27 வீரர்கள், கூட்டத்திற்கு அப்போஸ்தலரை அழைத்து வந்து, யூதத் தலைவர்களுக்கு முன்பு அவர்களை நிற்கும்படியாகச் செய்தனர். தலைமை ஆசாரியன் அப்போஸ்தலர்களை விசாரித்தான். 28 அவன், “இந்த மனிதனைக் குறித்து உபதேசிக்கக் கூடாது என உங்களுக்கு ஏற்கெனவே நாங்கள் உறுதியாகக் கட்டளை இட்டிருக்கவில்லையா? ஆனால் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? எருசலேமை உங்கள் உபதேசங்களால் நிரப்பியுள்ளீர்கள். இந்த மனிதனின் மரணத்திற்கு எங்களைக் காரணர்களாக ஆக்குவதற்கு நீங்கள் முயல்கிறீர்கள்” என்றான்.

29 பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் பதிலாக “நாங்கள் தேவனுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும். உங்களுக்கு அல்ல! 30 நீங்கள் இயேசுவைக் கொன்றீர்கள். அவரைச் சிலுவையில் தொங்கும்படியாகச் செய்தீர்கள். ஆனால் நமது முன்னோரின் கர்த்தராகிய நம் தேவன் இயேசுவை மரணத்தினின்று எழுப்பினார்! 31 தேவன் இயேசுவை உயர்த்தித் தனது வலது பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். இயேசுவை எங்கள் தலைவராகவும் இரட்சகராகவும் ஆக்கினார். எல்லா யூதர்களும் தங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக தேவன் இதைச் செய்தார். இப்போது தேவன் அவர்கள் பாவங்களை மன்னிக்க முடியும். 32 இக்காரியங்கள் அனைத்தும் நடந்ததைக் கண்டோம். இவை அனைத்தும் உண்மையென்று நாங்கள் கூறமுடியும். பரிசுத்த ஆவியானவரும் இவையனைத்தும் உண்மையென்று நிலை நாட்டுகிறார். தேவன் அவருக்குக் கீழ்ப்படிகிற அனைவருக்கும் பரிசுத்த ஆவியை அளித்திருக்கிறார்” என்று கூறினர்.

33 யூதத் தலைவர்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அப்போஸ்தலரைக் கொல்வதற்கு ஒரு வழிகாண அவர்கள் திட்டமிட ஆரம்பித்தனர். 34 கூட்டத்திலிருந்த பரிசேயரில் ஒருவர் எழுந்தார். அவர் பெயர் கமாலியேல். அவர் வேதபாரகராக இருந்தார். எல்லா மக்களும் அவரை மதித்தனர். சில நிமிடங்கள் அப்போஸ்தலரை வெளியே அனுப்புமாறு அவர் கூறினார். 35 பின் அவர் அங்கிருந்தோரை நோக்கி, “இஸ்ரவேலின் மனிதர்களே, இம்மனிதருக்கெதிராகச் செயல்படுமாறு நீங்கள் வகுக்கும் திட்டங்களில் எச்சரிக்கையாக இருங்கள்! 36 எப்போது தெயுதாஸ் தோன்றினான் என்பதை நினைவு கூருகிறீர்களா? அவன் தன்னை ஒரு முக்கியமான மனிதன் என்று கூறினான். சுமார் 400 மனிதர்கள் அவனோடு சேர்ந்துகொண்டனர். ஆனால் அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றியவர்கள் சிதறுண்டு ஓடினார்கள். அவர்களால் எதையும் செய்யக் கூடவில்லை. 37 அவனுக்குப்பின் கலிலேயாவிலிருந்து யூதா என்னும் பெயருள்ள மனிதன் வந்தான். மக்கள்தொகை பதிவு செய்த காலத்தில் அவன் வந்தான். அவன் தன்னைப் பின் பற்றியவர்களுக்குத் தலைமையும் தாங்கினான். அவனும் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறியோடினர். 38 எனவே இப்போது உங்களுக்குச் சொல்கிறேன். இம்மனிதரிடமிருந்து விலகியிருங்கள். அவர்களைத் தனித்து விட்டுவிடுங்கள். அவர்கள் திட்டம் மனிதர்களிடமிருந்து உருவாகியிருந்தால் அது தகர்ந்து விழும். 39 ஆனால் அது தேவனிடமிருந்து வந்ததெனில், நீங்கள் அவர்களைத் தடுக்கவியலாது. நீங்கள் தேவனுடனேயே சண்டையிடுபவர்களாக ஆவீர்கள்” என்றார்.

கமாலியேல் கூறியவற்றிற்கு யூதத் தலைவர்கள் உடன்பட்டனர். 40 அவர்கள் அப்போஸ்தர்களை மீண்டும் உள்ளே அழைத்தனர். அவர்கள் அப்போஸ்தலரை அடித்து இயேசுவைக் குறித்து மேலும் மக்களிடம் பேசாதிருக்குமாறு கூறினர். பின்னர் அப்போஸ்தலர்களைப் போகுமாறு விடுவித்தனர். 41 அப்போஸ்தலர்கள் கூட்டத்தைவிட்டுச் சென்றனர். இயேசுவின் பெயரில் வெட்கமுறும்படியாகக் கிடைக்கப்பெற்ற பெருமைக்காக அப்போஸ்தலர்கள் மகிழ்ந்தனர். 42 மக்களுக்குப் போதிப்பதை அப்போஸ்தலர்கள் நிறுத்தவில்லை.இயேசுவே கிறிஸ்து என்னும் நற்செய்தியை அப்போஸ்தலர்கள் மக்களுக்குத் தொடர்ந்து கூறி வந்தனர். தேவாலயத்திலும், மக்களின் வீடுகளிலும் ஒவ்வொரு நாளும் அவர்கள் இதைச் செய்தனர்.

உதவியாளர்கள் நியமனம்

இயேசுவைப் பின்பற்றுவோராகப் பற்பல மக்கள் மாறிகொண்டிருந்தனர். ஆனால் அதே வேளையில் கிரேக்க மொழி பேசுகின்ற சீஷர்களுக்கும் மற்ற யூதச் சீஷர்களுக்கும் ஒரு விவாதம் நடந்தது. சீஷர்கள் ஒவ்வொரு நாளும் பெற்ற பங்கைப் போன்று அவர்களுடனிருந்த விதவைகளுக்கு அளிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் சீஷர்கள் கூட்டத்தை ஒருமிக்க அழைத்தனர்.

அப்போஸ்தலர்கள் அவர்களை நோக்கி, “தேவனுடைய வார்த்தையைப் போதிக்கும் எங்கள் வேலை தடையுற்றுள்ளது. அது நல்லதல்ல! மக்களுக்கு உண்பதற்கு எதையேனும் கொடுப்பதில் உதவுவதைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தையைத் தொடர்ந்து போதிப்பதே எங்களுக்கு நல்லது. எனவே, சகோதரர்களே, உங்களில் ஏழு பேரைத் தேர்ந்து எடுங்கள். மக்கள் நல்லவர்களெனக் கருதுவோராக அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் ஆவியாலும், ஞானத்தாலும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இந்த வேலையைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களை நியமிப்போம். பின்னர் நாங்கள் எங்கள் முழு நேரத்தையும் பிரார்த்தனை செய்வதற்கும், தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதற்கும் பயன்படுத்துவோம்” என்றனர்.

கூட்டத்தினர் எல்லோரும் இந்தத் திட்டத்தை வரவேற்றனர். எனவே அவர்கள் ஏழு பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் ஸ்தேவான் (நம்பிக்கை மிகுந்தவனும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனுமான மனிதன்), பிலிப்பு, [a] ப்ரோகோரஸ், நிகனோர், தீமோன், பர்மேனஸ், நிக்கோலஸ் (அந்தியோகியாவிலிருந்து வந்தவனும் யூதனாக மாற்றப் பட்டவனும் ஆவான்) ஆகியோராவர். அவர்கள் அந்த ஏழு பேரையும் அப்போஸ்தலர்களுக்கு முன்பாக அழைத்து வந்தனர். அப்போஸ்தலர்கள் பிரார்த்தனை செய்து தங்கள் கைகளை அவர்கள் மீது வைத்தனர்.

தேவனுடைய வார்த்தை மென்மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை எட்டியது. எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்தது. யூத ஆசாரியர்களில் ஒரு பெரும் கூட்டத்தினரும் கூட விசுவாசம் வைத்துக் கீழ்ப்படிந்தனர்.

ஸ்தேவானுக்கு எதிராக யூதர்கள்

ஸ்தேவான் மிகுந்த ஆசீர்வாதத்தைப் பெற்றான். தேவனிடமிருந்து ஸ்தேவானும் அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் தேவனிடமிருந்து மக்களுக்குச் சான்றுகளைக் காட்டும் வல்லமையையும் பெற்றிருந்தான். ஆனால் சில யூதர்கள் வந்து ஸ்தேவானிடம் விவாதித்தனர். அவர்கள் ஒரு யூத ஜெப ஆலயத்திலிருந்து வந்திருந்தனர். அது விடுதலை பெற்ற யூதர்களுக்குரிய ஜெப ஆலயமாக இருந்தது. (இந்த ஜெப ஆலயம் சிரேனே, அலெக்ஸாண்டிரியா ஆகிய இடங்களிலுள்ள யூதர்களுக்கு உரியது) சிலிசியா, ஆசியா ஆகிய இடங்களின் யூதர்களும் அவர்களோடிருந்தனர். அவர்கள் எல்லோரும் வந்து ஸ்தேவானிடம் விவாதித்தனர். 10 ஞானத்தோடு பேசுவதற்கு ஆவியானவர் ஸ்தேவானுக்கு உதவினார். அவனுடைய வலிமையான சொற்கள் யூதர்கள் அவனோடு வாதிட முடியாதபடி செய்தன.

11 எனவே யூதர்கள் சில மனிதர்களுக்குக் கூலி கொடுத்து “மோசேக்கு எதிராகவும், தேவனுக்கெதிராகவும் ஸ்தேவான் தீயவற்றைக் கூறுவதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் செய்தார்கள். 12 இவ்வாறு செய்ததால் யூதர்கள் மக்களையும். முதிய யூதத் தலைவர்களையும், வேதபாரகரையும் கலக்கமுறச் செய்தனர். அவர்கள் மிகுந்த கோபமடைந்து ஸ்தேவானிடம் வந்து அவனைப் பிடித்தனர். யூத அதிகாரிகள் கூடியிருந்த இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர்.

13 யூதர்கள் சிலரை அக்கூட்டத்திற்கு அழைத்து வந்தனர். ஸ்தேவானைக் குறித்துப் பொய் சொல்லும்படி அவர்களுக்கு யூதர்கள் கூறியிருந்தனர். அந்த மனிதர்கள், “இவன் எப்போதும் பரிசுத்தமான இடத்தைக் குறித்துக் கெட்டதையே சொல்கிறான். மோசேயின் சட்டத்திற்கு எதிராகவே எப்போதும் சொல்கிறான். 14 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இந்த இடத்தை அழிப்பார் என்று அவன் கூறியதை நாங்கள் கேட்டோம். நாம் கடைப்பிடிக்குமாறு மோசே சொன்னவற்றை இயேசு மாற்றுவார் என்றும் அவன் கூறினான்” என்றனர். 15 கூட்டத்தில் அமர்ந்திருந்த மக்கள் எல்லோரும் ஸ்தேவானைக் கூர்ந்து நோக்கினர். அவனது முகம் தேவதூதனின் முகத்தைப்போன்று தோன்றியது. அவர்கள் அதைக் கண்டனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center