Beginning
லூக்காவின் இரண்டாவது புத்தகம்
1 அன்பான தேயோப்பிலுவே, நான் எழுதிய முதல் புத்தகத்தில் இயேசு செய்தவைகளையும், கற்பித்தவைகளையும் எல்லாம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். 2 நான் இயேசுவின் வாழ்க்கை முழுவதையும் தொடக்கத்திலிருந்து இறுதியில் அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் எழுதியிருந்தேன். இது நடக்கும் முன் இயேசு தான் தேர்ந்தெடுத்த அப்போஸ்தலர்களிடம் பேசினார். பரிசுத்த ஆவியின் வல்லமையால் அப்போஸ்தலர்கள் செய்யவேண்டியவற்றை இயேசு அவர்களுக்குக் கூறினார். 3 இது இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்தது. ஆனால் அவர் அப்போஸ்தலருக்குத் தான் உயிரோடிருப்பதைக் காட்டினார். வல்லமைமிக்க செயல்கள் பலவற்றைச் செய்து இயேசு இதை நிரூபித்தார். இயேசு மரணத்தினின்று எழுந்த பின்பு 40 நாட்களில் அப்போஸ்தலர்கள் பலமுறை இயேசுவைப் பார்த்தனர். தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றி இயேசு அப்போஸ்தலர்களிடம் பேசினார். 4 ஒருமுறை இயேசு அவர்களோடு உணவு உட்கொண்டு இருக்கும்போது எருசலேமை விட்டுப் போக வேண்டாமென அவர்களுக்குக் கூறினார். இயேசு, “பிதா உங்களுக்குச் சிலவற்றைக் குறித்து வாக்குறுதி அளித்துள்ளார். இதைக் குறித்து முன்னரே நான் உங்களுக்குக் கூறினேன். இங்கேயே எருசலேமில் இந்த வாக்குறுதியைப் பெறுவதற்காகக் காத்திருங்கள். 5 யோவான் மக்களுக்கு, தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்கினான். ஆனால் ஒரு சில நாட்களில் நீங்கள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்” என்று சொன்னார்.
இயேசுவின் பரமேறுதல்
6 அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள்.
7 இயேசு அவர்களை நோக்கி “நாட்களையும் நேரத்தையும் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் பிதா ஒருவரே. உங்களால் இந்தக் காரியங்களை அறிந்துகொள்ள முடியாது. 8 ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவார். வரும்போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். நீங்கள் எனது சாட்சிகளாக இருப்பீர்கள். மக்களுக்கு என்னைப்பற்றிக் கூறுவீர்கள். முதலில் எருசலேமின் மக்களுக்குக் கூறுவீர்கள். பின் யூதேயா முழுவதும். சமாரியாவிலும், உலகத்தின் எல்லாப் பகுதியிலும் நீங்கள் மக்களுக்குக் கூறுவீர்கள்” என்றார்.
9 இயேசு அப்போஸ்தலர்களுக்கு இந்தக் காரியங்களைக் குறித்துக் கூறிய பிறகு வானிற்குள்ளாக அவர் மேலே எடுத்துச் செல்லப்பட்டார். அப்போஸ்தலர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவர் மேகத்திற்குள்ளாகச் சென்றார். பின்னர் அவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. 10 இயேசு மேலே போய்க்கொண்டிருந்தார். அப்போஸ்தலர்கள் வானையே நோக்கிக்கொண்டிருந்தனர். திடீரென வெண்ணிற ஆடை அணிந்த இருவர் அவர்களுக்கு அருகே நின்றனர். 11 அவ்விருவரும் அப்போஸ்தலர்களை நோக்கி, “கலிலேயாவிலிருந்து வந்துள்ள மனிதர்களே, ஏன் நீங்கள் வானத்தைப் பார்த்தவாறே நின்றுகொண்டிருக்கிறீர்கள்? இயேசு உங்களிடமிருந்து பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதை நீங்கள் கண்டீர்கள். நீங்கள் பார்த்தபோது சென்றதைப் போலவே அவர் திரும்பவும் வருவார்” என்று கூறினர்.
புதிய அப்போஸ்தலர்
12 பின்பு ஒலிவ மலையிலிருந்து அப்போஸ்தலர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். (இம்மலை எருசலேமிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது) 13 அப்போஸ்தலர்கள் நகரத்திற்குள் சென்றனர். அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அந்த அறை மாடியிலிருந்தது. பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்படும் சீமோன் மற்றும் யாக்கோபின் மகனாகிய யூதாஸ் ஆகிய அப்போஸ்தலர்கள் அங்கிருந்தனர்.
14 அப்போஸ்தலர்கள் அனைவரும் சேர்ந்திருந்தனர். ஒரே குறிக்கோள் உடையோராக விடாது பிரார்த்தனை செய்துகொண்டேயிருந்தனர். இயேசுவின் தாயாகிய மரியாளும் அவரது சகோதரர்களும் சில பெண்களும் அப்போஸ்தலரோடு கூட இருந்தனர்.
15 சில நாட்களுக்குப் பிறகு விசுவாசிகளாக அவர்கள் ஒன்று கூடினர். (சுமார் 120 பேர் அக்கூட்டத்தில் இருந்தனர்.) பேதுரு எழுந்து நின்று, 16-17 “சகோதரர்களே! வேதவாக்கியங்களில் பரிசுத்த ஆவியானவர் சில காரியங்கள் நடக்கும் என்று தாவீதின் மூலமாகக் கூறினார். நமது கூட்டத்தில் ஒருவனாகிய யூதாஸைக்குறித்து அவன் கூறியுள்ளான். யூதாஸ் நம்மோடு கூட சேவையில் ஈடுபட்டிருந்தான். இயேசுவைச் சிறைபிடிக்க யூதாஸ் மனிதர்களுக்கு வழிகாட்டுவான் என்பதை ஆவியானவர் கூறியிருந்தார்,” என்றான்.
18 (இதைச் செய்வதற்கு யூதாஸிற்குப் பணம் தரப்பட்டது. ஒரு நிலத்தை வாங்குவதற்கு அப்பணம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் யூதாஸ் தலைகுப்புற வீழ்ந்து அவன் சரீரம் பிளவுண்டது. அவனது குடல் வெளியே சரிந்தது. 19 எருசலேமின் மக்கள் அனைவரும் இதை அறிந்தனர். எனவேதான் அந்நிலத்திற்கு “அக்கெல்தமா” என்று பெயரிட்டனர். அவர்கள் மொழியில் அக்கெல்தமா என்பது “இரத்த நிலம்” எனப் பொருள்படும்.)
20 “சங்கீதத்தின் புத்தகத்தில் யூதாஸைக்குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
“‘மக்கள் அவனது நிலத்தருகே செல்லலாகாது,
யாரும் அங்கு வாழலாகாது.’ (A)
மேலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
‘இன்னொருவன் அவன் பணியைப் பெறட்டும்.’ (B)
21-22 “எனவே இன்னொருவன் நம்மோடு சேர்ந்துகொண்டு இயேசு உயிரோடு எழுந்ததற்கு சாட்சியாக இருக்கட்டும். ஆண்டவராகிய இயேசு நம்மோடு இருந்தபோது எப்போதும் நம்மோடு கூட இருந்த மனிதர்களில் ஒருவனாக அவன் இருத்தல் வேண்டும். யோவான் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து இயேசு பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் நம்மோடு இருந்தவனாக அவன் இருக்க வேண்டும்” என்றான்.
23 அப்போஸ்தலர்கள் கூட்டத்திற்கு முன் இருவரை நிறுத்தினர். ஒருவன் யோசேப்பு பர்சபா என்பவன். அவன் யுஸ்து என அழைக்கப்பட்டான். மற்றவன் மத்தியா என்பவன். 24-25 அப்போஸ்தலர்கள், “ஆண்டவரே, நீர் எல்லா மனிதர்களின் உள்ளங்களையும் அறிந்தவர். இந்த இருவரில் உம் சேவைக்கு நீர் யாரைத் தேர்ந்தெடுக்கிறீர் என்பதை எங்களுக்குக் காட்டும். யூதாஸ் இதனைவிட்டு நீங்கித் தனக்குரிய இடத்திற்குச் சென்றுவிட்டான். ஆண்டவரே, எந்த மனிதன் அப்போஸ்தலனாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டும்!” என்று பிரார்த்தனை செய்தார்கள். 26 பின்னர் அப்போஸ்தலர்கள் அந்த இருவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க சீட்டுகள் எழுதிப் போட்டனர். அதன்படி ஆண்டவர் விரும்பியவராக மத்தியாவை சீட்டுகள் காட்டின. எனவே அவன் மற்ற பதினொருவரோடும் கூட ஓர் அப்போஸ்தலன் ஆனான்.
பரிசுத்த ஆவியானவரின் வருகை
2 பெந்தெகோஸ்தே நாளில் அப்போஸ்தலர் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். 2 திடீரென வானிலிருந்து ஓசை ஒன்று எழுந்தது. பெருங்காற்று அடித்தாற்போல அது ஒலித்தது. அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் அவ்வொலி நிரப்பிற்று. 3 நெருப்புக் கொழுந்து போன்றவற்றை அவர்கள் கண்டனர். அக்கொழுந்துகள் பிரிந்து சென்று அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் நின்றன. 4 அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
5 அக்காலத்தில் எருசலேமில் மிக பக்திமான்களாகிய யூதர்கள் சிலர் தங்கியிருந்தனர். உலகத்தின் எல்லா தேசத்தையும் சார்ந்தவர்களாக இந்த மனிதர்கள் இருந்தனர். 6 ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர்.
7 யூதர்கள் இதனால் ஆச்சரியமடைந்தனர். அப்போஸ்தலர்கள் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள், “பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் எல்லோரும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்! 8 ஆனால் நமது மொழிகளில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம். எப்படி இது இயலும்? நாம் 9 பார்த்தியா, மேதியா, ஏலாம், மெசொபொதாமியா, யூதேயா, கப்பதோகியா, பொந்து, ஆசியா, 10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேனே நகரங்களிற்கு அருகேயுள்ள லிபியா நாட்டுப் பகுதிகள், 11 கிரேத்தா, ரோமிலிருந்து வந்த மக்கள் மற்றும் அரேபியா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். நம்மில் சிலர் யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறியவர்கள். நாம் வெவ்வேறு நாட்டினர். ஆனால் இவர்கள் நம் மொழிகளில் பேசுவதைக் கேட்கிறோமே! அவர்கள் தேவனைக் குறித்துக் கூறும் மேன்மையான காரியங்களை நம்மெல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறதே” என்றார்கள்.
12 மக்கள் அனைவரும் வியப்புற்றவர்களாகவும் குழப்பமடைந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று வினவினர். 13 பிற மக்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சிரித்தனர். அம்மக்கள் அப்போஸ்தலர் மிகுதியான மதுவைப் பருகியிருந்தனர் என நினைத்தனர்.
பேதுரு மக்களிடம் பேசுதல்
14 அப்பொழுது பேதுரு மற்ற அப்போஸ்தலர் பதினொருவரோடும் எழுந்து நின்றான். எல்லா மக்களும் கேட்கும்படியாக உரக்கப் பேசினான். அவன், “எனது யூத சகோதரர்களே, எருசலேமில் வசிக்கும் மக்களே, நான் கூறுவதைக் கவனியுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில கருத்துக்களை உங்களுக்குக் கூறுவேன். கவனமாகக் கேளுங்கள். 15 நீங்கள் நினைக்கிறது போல் இம்மனிதர்கள் மது பருகியிருக்கவில்லை. இப்போது காலை ஒன்பது மணிதான். 16 இங்கு இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பதைக் குறித்து யோவேல் என்னும் தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார். யோவேல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:
17 “‘தேவன் கூறுகிறார், கடைசி நாட்களில் நான் எனது ஆவியை எல்லா மக்களுக்கும் அள்ளி வழங்குவேன்.
ஆண் மக்களும், பெண்மக்களும் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
உங்கள் இளைஞர் தரிசனம் காண்பார்கள்.
உங்கள் முதியோர் விசேஷக் கனவுகள் காண்பர்.
18 அந்நேரத்தில் எனது ஆவியை எனது ஊழியர்களாகிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுப்பேன்.
அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
19 மேலே வானில் வியப்புறும் காட்சிகளைக் காண்பிப்பேன்.
கீழே பூமியிலும் சான்றுகள் தருவேன்.
அங்கு இரத்தம், நெருப்பும், புகை மண்டலமும் இருக்கும்.
20 சூரியன் இருளாக மாறும்.
நிலா இரத்தம் போல் சிவப்பாகும்.
அப்போது கர்த்தருடைய மகத்தான மகிமை மிக்க நாள் வரும்.
21 கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான்.’ (C)
22 “எனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 23 இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்பதை தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகுகாலத்திற்கு முன்னரே தேவன் இந்தத் திட்டத்தை வகுத்திருந்தார். 24 மரணத்தின் வேதனையை இயேசு அனுபவித்தார். ஆனால் தேவன் அவரை விடுவித்தார். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். மரணம் இயேசுவைத் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை. 25 தாவீது இயேசுவைக் குறித்து இவ்வாறு கூறினான்:
“‘நான் ஆண்டவரை எப்போதும் என்முன் காண்கிறேன்.
என்னைப் பாதுகாப்பதற்கு எனது வலப்புறத்தே உள்ளார்.
26 எனவே என் உள்ளம் மகிழுகிறது,
என் வாய் களிப்போடு பேசுகிறது.
ஆம், எனது சரீரமும் கூட நம்பிக்கையால் வாழும்.
27 ஏனெனில் மரணத்தின் இடத்தில் [a] எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை.
உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை.
28 வாழும் வகையை எனக்குப் போதித்தீர்.
என்னருகே நீர் வந்து அளவற்ற ஆனந்தம் தருவீர்.’ (D)
29 “எனது சகோதரர்களே, நமது முன்னோராகிய தாவீதைக் குறித்து உண்மையாகவே உங்களுக்கு என்னால் சொல்லமுடியும். அவன் இறந்து புதைக்கப்பட்டான். அவன் புதைக்கப்பட்ட இடம் இங்கேயே நம்மிடையே இன்றும் உள்ளது. 30 தாவீது ஒரு தீர்க்கதரிசி. தேவன் கூறிய சில செய்திகளை அவன் அறிந்திருந்தான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவரை தாவீதைப்போன்று மன்னனாக்குவேன் என்று தேவன் தாவீதுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். 31 அது நடக்கும் முன்பே தாவீது அதனை அறிந்திருந்தான். எனவேதான் அவரைக் குறித்து தாவீது இவ்வாறு கூறினான்.
“‘அவர் மரணத்தின் இடத்தில் விடப்படவில்லை.
அவர் சரீரம் கல்லறையில் அழுகவில்லை.’ (E)
தாவீது மரணத்தின்று எழும்பும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினான். 32 எனவே தாவீதை அல்ல, இயேசுவையே தேவன் மரணத்தினின்று எழுப்பினார். நாங்கள் எல்லோரும் இதற்கு சாட்சிகள். நாங்கள் அவரைக் கண்டோம். 33 இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இப்போது இயேசு தேவனோடு, தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். பிதா பரிசுத்தாவியை இயேசுவுக்குக் கொடுத்துள்ளார். பிதா கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது பரிசுத்த ஆவியேயாகும். எனவே இயேசு அந்த ஆவியை இப்பொழுதுகொடுத்துக்கொண்டிருக்கிறார். இதையே நீங்கள் பார்க்கவும், கேட்கவும் செய்கிறீர்கள். 34-35 தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான்,
“‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார்,
உம் எதிரிகள் அனைவரையும் உம்
அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’ (F)
36 “எனவே எல்லா யூத மனிதர்களும் இதை உண்மையாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் இருக்கும்படியாக இயேசுவை தேவன் உண்டாக்கினார். அவரே நீங்கள் சிலுவையில் அறைந்த மனிதர்” என்றான்.
37 மக்கள் இதைக் கேட்டபோது அவர்கள் தங்கள் இதயத்தில் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அவர்கள் பேதுருவையும் பிற அப்போஸ்தலரையும் நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.
38 பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39 இந்த வாக்குறுதி உங்களுக்குரியது. அது உங்கள் பிள்ளைகளுக்கும் தொலைவில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் கூட உரியது. ஆண்டவராகிய நமது தேவன் தன்னிடம் அழைக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அது உரியது” என்று கூறினான்.
40 வேறு பல வார்த்தைகளையும் கூறி பேதுரு அவர்களை எச்சரித்தான். அவன் அவர்களை, “இன்று வாழ்கின்ற மக்களின் தீமைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான். 41 பேதுரு கூறியவற்றை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3,000 மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
விசுவாசிகளின் ஒருமனம்
42 விசுவாசிகள் தொடர்ந்து ஒன்றாக சந்தித்தனர். அப்போஸ்தலரின் போதனையைக் கற்பதற்குத் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். விசுவாசிகள் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்து உண்டு, ஒருமித்து பிரார்த்தனை செய்தார்கள். 43 பல வல்லமை மிக்க, வியப்பான காரியங்களை அப்போஸ்தலர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தேவனை மிகவும் மரியாதையாக உணர்ந்தனர். 44 எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 45 விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர். 46 ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர். 47 விசுவாசிகள் தேவனை வாழ்த்தினர். எல்லா மக்களும் அவர்களை விரும்பினர். ஒவ்வொரு நாளும் அதிகமதிகமான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். விசுவாசிகளின் கூட்டத்தில் கர்த்தர் அம்மக்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்.
ஊனமுற்ற மனிதனின் சுகம்
3 ஒருநாள் பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். பிற்பகல் மூன்று மணியாகி இருந்தது. அது தினமும் தேவாலயத்தில் பிரார்த்தனை நேரமாகும். 2 அவர்கள் தேவாலயத்தின் முற்றத்தில் போய்கொண்டிருக்கும்போது, ஒரு மனிதன் அங்கிருந்தான். அவன் பிறந்தது முதல் ஊனமுற்றவனாக இருந்தான். அவனால் நடக்க முடியாததால் அவனது நண்பர்கள் சிலர் அவனைச் சுமந்து வந்தனர். அவனது நண்பர்கள் ஒவ்வொரு நாளும் அவனை தேவாலயத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் ஊனமுற்ற மனிதனை தேவாலயத்துக்கு வெளியே ஒரு பெருங்கதவின் அருகே உட்கார வைத்தனர். அது அலங்கார வாசல் என அழைக்கப்பட்டது. தேவாலயத்துக்குள் போகும் அனைவரிடமும் அம்மனிதன் பணத்திற்காகப் பிச்சை கேட்டான். 3 அன்றையத்தினம் அம்மனிதன் பேதுருவும், யோவானும் தேவாலயத்துக்குள் போய்க்கொண்டிருப்பதைக் கண்டான். அவன் அவர்களிடம் பணத்திற்காக வேண்டினான்.
4 பேதுருவும் யோவானும் ஊனமுற்ற அம்மனிதனை நோக்கி, “எங்களைப் பார்” என்றனர். 5 அம்மனிதன் அவர்களைப் பார்த்தான். அவர்கள் ஏதேனும் கொஞ்சம் பணம் கொடுப்பார்களென அவன் எதிர்பார்த்தான். 6 ஆனால் பேதுரு, “என்னிடம் வெள்ளியோ, பொன்னோ கிடையாது, ஆனால் உனக்குக் கொடுக்கக்கூடிய வேறு பொருள் என்னிடம் உள்ளது. நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் எழுந்து நட!” என்று கூறினான்.
7 பின் பேதுரு அம்மனிதனின் வலது கையைப் பிடித்து அவனைத் தூக்கினான். உடனே அம்மனிதனின் பாதங்களும் கால்களும் பலம் பெற்றன. 8 அம்மனிதன் குதித்தெழுந்து, அவனது பாதங்களில் நின்று, நடக்க ஆரம்பித்தான். அவன் அவர்களோடு தேவாலயத்துக்குள் சென்றான். அம்மனிதன் நடந்துகொண்டும், குதித்துக்கொண்டும் தேவனை வாழ்த்தியவனாக இருந்தான். 9-10 எல்லா மக்களும் அவனை அடையாளம் கண்டுகொண்டனர். எப்போதும் அலங்கார வாசல் அருகே அமர்ந்து பணத்திற்காகப் பிச்சை கேட்கும் ஊனமுற்ற மனிதனே அவன் என்று மக்கள் அறிந்தனர். இப்போது அதே மனிதன் நடந்துகொண்டிருப்பதையும் தேவனை வாழ்த்திக்கொண்டிருப்பதையும் அவர்கள் கண்டார்கள். மக்கள் ஆச்சரியமடைந்தார்கள். எவ்வாறு இது நடக்கக் கூடுமென்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பேதுருவின் பிரசங்கம்
11 அம்மனிதன் பேதுருவோடும் யோவானோடும் சேர்ந்துகொண்டிருந்தான். அம்மனிதன் நலம் பெற்றதையறிந்து எல்லா மக்களும் ஆச்சரியம் கொண்டனர். சாலமோனின் மண்டபத்தில் பேதுருவிடமும் யோவானிடமும் அவர்கள் ஓடிச் சென்றனர்.
12 இதைக் கண்டதும் பேதுரு, மக்களை நோக்கி, “எனது யூத சகோதரர்களே, நீங்கள் ஏன் இதைக் கண்டு ஆச்சரியப்படுகிறீர்கள்? இம்மனிதனை எங்களது வல்லமையால் நடக்கும்படியாகச் செய்தோம் என்பது போல் நீங்கள் எங்களைப் பார்க்கிறீர்கள். நாங்கள் நல்லவர்களாக இருப்பதால் இதைச் செய்ய முடிந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 13 இல்லை! தேவன் இதைச் செய்தார்! அவர் ‘ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனும்’ ஆனவர். அவரே நமது முன்னோர்களின் தேவன். அவர் தனது விசேஷ ஊழியரான இயேசுவுக்கு மகிமையை அளித்தார். ஆனால் நீங்களோ இயேசுவைக் கொல்லும்படியாகக் கொடுத்தீர்கள். பிலாத்து இயேசுவுக்கு விடுதலையளிக்க முடிவு செய்தான். ஆனால் உங்களுக்கு இயேசு வேண்டாதவரென நீங்கள் பிலாத்துவுக்குக் கூறினீர்கள். 14 இயேசு தூயவராகவும் நல்லவராகவும் இருந்தார். ஆனால் நீங்கள் அவர் தேவையில்லையெனக் கூறினீர்கள். இயேசுவுக்குப் பதிலாக ஒரு கொலையாளியை [b] உங்களுக்குத் தரும்படியாக நீங்கள் பிலாத்துவை வேண்டினீர்கள். 15 உயிரளிக்கிறவரை நீங்கள் கொன்றீர்கள். ஆனால் தேவனோ அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். நாங்கள் இதற்கு சாட்சிகள். எங்கள் கண்களாலேயே இதைக் கண்டோம்.
16 “இயேசுவின் வல்லமையே ஊனமுற்ற மனிதனை நன்றாக நடக்கும்படிச் செய்தது. இயேசுவின் வல்லமையில் நாங்கள் நம்பிக்கை வைத்ததால் இது நிகழ்ந்தது. நீங்கள் இம்மனிதனைப் பார்க்க முடிகிறது. உங்களுக்கு இவனைத் தெரியும். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையால் அவன் முழுக்கக் குணமடைந்தான். அது நிகழ்ந்ததை நீங்கள் எல்லாரும் கண்டீர்கள்.
17 “எனது சகோதரர்களே, நீங்கள் செய்வதை அறியாததால் அவற்றை இயேசுவுக்குச் செய்தீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் தலைவர்களும் அதைப் புரிந்துகொள்ளவில்லை. 18 இக்காரியங்கள் நடந்தேறுமென தேவன் கூறினார். அவரது கிறிஸ்து துன்புற்று இறப்பார் என்பதை தேவன் தம் தீர்க்கதரிசிகள் மூலமாகக் கூறினார். தேவன் இதை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை உங்களுக்குக் கூறியுள்ளேன். 19 எனவே நீங்கள் உங்கள் இருதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள்! தேவனிடம் திரும்புங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னிப்பார். 20 பின் ஆண்டவர் உங்களுக்கு ஆவிக்குரிய இளைப்பாறுதலை நல்குவார். கிறிஸ்துவாக இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகிய இயேசுவை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
21 “ஆனால் எல்லாக் காரியங்களும் மீண்டும் சரியாகும் வரை இயேசு பரலோகத்தில் இருக்க வேண்டும். பல்லாண்டுகளுக்கு முன்னரே தேவன் தனது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசியபோதே, இவற்றைப்பற்றிக் கூறியுள்ளார். 22 மோசே, ‘கர்த்தராகிய உங்கள் தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை அளிப்பார். உங்கள் சொந்த மக்களிடையேயிருந்து அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார். அவர் என்னைப் போலவே இருப்பார். அத்தீர்க்கதரிசி உங்களுக்குக் கூறுகின்ற எல்லாவற்றிற்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். 23 எந்த மனிதனாகிலும் அந்தத் தீர்க்கதரிசிக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அப்போது அம்மனிதன் தேவனுடைய மக்களிடமிருந்து பிரிந்து இறப்பான்’” [c] என்றான்.
24 “தேவனுக்காகப் பேசிய சாமுவேலும் அவருக்குப் பின் வந்த மற்ற எல்லாத் தீர்க்கதரிசிகளும் இக்காலத்தைக் குறித்துப் பேசினார்கள். 25 தீர்க்கதரிசிகள் பேசிய அனைத்தையும் நீங்கள் பெற்றீர்கள். அதைப் போலவே தேவன் உங்கள் முன்னோரோடு செய்த உடன்படிக்கையையும் நீங்கள் பெற்றீர்கள். தேவன் உங்கள் தந்தையாகிய ஆபிரகாமிடம், ‘உன் தலைமுறையினரால் உலகின் ஒவ்வொரு தேசமும் ஆசீர்வதிக்கப்படும்’ [d] என்று கூறினார். 26 தேவன் தனது விசேஷ ஊழியரை அனுப்பியுள்ளார். தேவன் அவரை முதலாவதாக உங்களிடம் அனுப்பினார். உங்களை ஆசீர்வதிப்பதற்கு தேவன் இயேசுவை அனுப்பினார். நீங்கள் ஒவ்வொருவரும் தீய செயல்களைச் செய்கிறதிலிருந்து உங்களைத் திருப்புவதின் மூலம் தேவன் இதைச் செய்கிறார்” என்றான்.
2008 by World Bible Translation Center