Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
தானியேல் 1-3

தானியேல் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படுதல்

நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அரசனாக இருந்தான். நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்தான். நேபுகாத்நேச்சார் அவனது படையுடன் எருசலேமை முற்றுகையிட்டான். யூதாவின் அரசனாகிய யோயாக்கீமின் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் இது நடந்தது. கர்த்தர் யூதாவின் அரசனான யோயாக்கீமை, நேபுகாத்நேச்சார் தோற்கடிக்கும்படி அனுமதித்தார். தேவனுடைய ஆலயத்திலிருந்து நேபுகாத்நேச்சார் அனைத்துப் பாத்திரங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டான். நேபுகாத்நேச்சார் அவற்றைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை அவனது விக்கிரக தெய்வங்களின் ஆலயத்தில் வைத்தான்.

பிறகு அரசனான நேபுகாத்நேச்சார் அஸ்பேனாஸ் என்பவனுக்கு ஒரு கட்டளை கொடுத்தான். (அஸ்பேனாஸ், அரசனுக்குப் பணிவிடை செய்யும் அலிகளில் மிக முக்கியமான தலைவன்). அரசன், அஸ்பேனாசிடம் அவனது வீட்டிற்கு சில யூதர்களை அழைத்துவரும்படி சொன்னான். நேபுகாத்நேச்சார் முக்கியமான குடும்பங்களிலிருந்தும் இஸ்ரவேல் அரசகுடும்பங்களிலிருந்தும், யூதர்களை விரும்பினான். அரசனான நேபுகாத்நேச்சார் ஆரோக்கியமான இளம் யூதர்களை மட்டுமே விரும்பினான். தம் உடம்பில் தழும்போ, காயமோ, குறைபாடுகளோ இல்லாத இளைஞர்களை அரசன் விரும்பினான். அரசன் அழகான சுறுசுறுப்பான இளைஞர்களை விரும்பினான். இளைஞர்களில் எல்லாவற்றையும் எளிதாகவும், வேகமாகவும், கற்றுக்கொள்ளும் ஆற்றலுடையவர்களை அரசன் விரும்பினான். அரசன், தன் வீட்டில் வேலை செய்யத் தகுதியுள்ள இளைஞர்களை விரும்பினான். அரசன் அஸ்பேனாசிடம், அந்த இஸ்ரவேல் இளைஞர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும், மொழியையும் கற்றுக்கொடுக்கும்படி கூறினான்.

அரசனான நேபுகாத்நேச்சார் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள உணவையும் திராட்சைரசத்தையும் இளைஞர்களுக்குக் கொடுத்தான். அது அரசன் உண்ணும் உணவின் தரத்தில் இருந்தது. அரசன் இஸ்ரவேலிலிருந்து கொண்டுவரப்பட்ட இளைஞர்கள் மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற வேண்டும் என விரும்பினான். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இளைஞர்கள் பாபிலோன் அரசனது பணியாட்களாக இருக்கவேண்டும். அந்த இளைஞர்களுள் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். இந்த இளைஞர்களெல்லாம் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அஸ்பேனாஸ் அந்த இளைஞர்களுக்கு வேறு பெயர்களைக் கொடுத்தான். தானியேலுக்குப் பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்குச் சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் புதிய பெயர்கள் கொடுக்கப்பட்டன.

தானியேல் அரசனது வளமான உணவையும், திராட்சைரசத்தையும் உண்ண விரும்பவில்லை. தானியேல் அந்த உணவினாலும் திராட்சைரசத்தாலும் தன்னைத்தானே அசுத்தப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. எனவே, அவன் அஸ்பேனாசிடம் தன்னைத் தானே அசுத்தப்படுத்திக்கொள்ளாமல் இருக்க அனுமதி கேட்டான்.

தேவன், அஸ்பேனாஸ் தானியேலிடம் தயவும் இரக்கமும் கொள்ளும்படி செய்தார். 10 ஆனால் அஸ்பேனாஸ் தானியேலிடம், “நான் என் அரசரான எஜமானருக்குப் பயப்படுகிறேன். அரசர் இந்த உணவையும், திராட்சைரசத்தையும் உனக்குத் தரும்படி கட்டளையிட்டிருக்கிறார். நீ இந்த உணவை உண்ணாவிட்டால், பலவீனமுடையவனாகவும், நோயாளியாகவும் ஆவாய். நீ உன் வயதுள்ள மற்ற இளைஞர்களைவிட மோசமான நிலையில் இருப்பாய். அரசர் இதனைப் பார்த்து என் மீது கோபங்கொள்வார். அவர் என் தலையை வெட்டிவிடலாம், ஆனால் இதற்கு உனது தவறே காரணமாகும்” என்று சொன்னான்.

11 பிறகு தானியேல் அவர்களது காவலனிடமும் பேசினான். அஸ்பேனாசு அந்தக் காவலனிடம் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைக் கவனித்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருந்தான். 12 தானியேல் காவலனிடம் “தயவுசெய்து பின் வரும் சோதனையைப் பத்து நாட்களுக்கு எங்களுக்குத் தாரும். எங்களுக்கு உண்ண காய்கறிகளும், குடிக்கத் தண்ணீரும் தவிர வேறு எதுவும் தரவேண்டாம். 13 பத்து நாட்களுக்குப் பின்னர் அரசனது உணவை உண்ணும் மற்றவர்களோடு எங்களை ஒப்பிட்டுப் பார்த்து, யார் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் எனப் பாரும். பிறகு நீர் எங்களை எவ்வாறு நடத்துவது என்று முடிவு செய்யலாம். நாங்கள் உமது பணியாளர்கள்” என்று சொன்னான்.

14 எனவே, காவலன் பத்து நாட்களுக்குத் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைச் சோதிக்க ஒப்புக்கொண்டான். 15 பத்து நாட்களுக்குப் பிறகு, தானியேலும் அவனது நண்பர்களும் அரசனது உணவை உண்டுவந்த மற்றவர்களைவிட ஆரோக்கியமாகக் காணப்பட்டனர். 16 எனவே, காவலன் அரசனது உணவையும் திராட்சைரசத்தையும் தொடர்ந்து கொடுப்பதை நிறுத்தினான். அதற்குப் பதிலாக அவன் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்குக் காய்கறிகளைக் கொடுத்தான்.

17 தேவன்,தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்கு ஞானத்தையும், பலவித எழுத்துக்களையும், அறிவியலையும் கற்றுக்கொள்ளும் திறமையையும் கொடுத்தார். தானியேல், பலவித தரிசனங்களையும், கனவுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.

18 அரசன் அனைத்து இளைஞர்களும் மூன்று ஆண்டுகளுக்குப் பயிற்சி பெறவேண்டும் என்று விரும்பினான். அக்கால முடிவில் அரசனான நேபுகாத்நேச்சாரின் முன்பு எல்லா இளைஞர்களையும் அஸ்பேனாஸ் கொண்டுவந்தான். 19 அரசன் அவர்களோடு பேசினான். அரசன் அந்த இளைஞர்களில் எவரும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியவர்களைப்போன்று சிறந்தவர்களாக இல்லை என்பதைக் கண்டுகொண்டான். எனவே அந்த நான்கு இளைஞர்களும் அரசனின் பணியாட்கள் ஆயினர். 20 ஒவ்வொரு முறையும் அரசன் அவர்களிடம் கேட்கும் முக்கியமான கேள்விகளுக்கு அவர்கள் மிகுந்த ஞானத்தையும் புத்தியையும் காட்டினார்கள். அரசன் அவனது அரசாங்கத்தில் உள்ள மந்திரவாதிகளையும், ஞானிகளையும்விட இவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்கள் என்று கண்டான். 21 எனவே தானியேல் தெடார்ந்து அரசனது பணியாளாக கோரேஸ் ஆண்ட முதலாம் ஆண்டு மட்டும் இருந்தான்.

நேபுகாத்நேச்சாரின் கனவு

நேபுகாத்நேச்சாரின் ஆட்சியின் இரண்டாவது ஆண்டில் அவனுக்குச் சில கனவுகள் வந்தன. அக்கனவுகள் அவனை மிகவும் துன்புறுத்தின. அவனால் தூங்கமுடியவில்லை. எனவே அரசன், தனது அறிஞர்களைத் தன்னிடம் அழைத்தான். அவர்கள் தங்கள் மந்திர, தந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நட்சத்திரங்களைக் கவனித்தனர். அவர்கள் கனவுகளின் பலனைச் சொல்லவும் எதிர்காலத்தில் நடக்கக்கூடியதைத் கூறவுமே இவ்வாறு செய்தனர். தனது கனவைப் பற்றி தனக்குச் சொல்லவேண்டும் என்று அரசன் அவர்களிடம் கேட்டான். எனவே அவர்கள் வந்து அரசனின் முன்னால் நின்றார்கள்.

அரசன் அவர்களிடம், “நான் ஒரு கனவு கண்டேன். அது என்னைத் தொல்லைப்படுத்துகிறது. நான் கனவின் பொருளை அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.

பிறகு கல்தேயர்கள் அரசனுக்குப் பதில் சொன்னார்கள். அவர்கள் அராமிக் மொழியில் பேசினார்கள். அவர்கள் அரசே, “நீர் என்றென்றும் வாழ்க. நாங்கள் உமது வேலைக்காரர்கள். தயவுசெய்து உமது கனவைக் கூறும். பிறகு அதன் அர்த்தம் என்னவென்று நாங்கள் கூறுவோம்” என்று சொன்னார்கள்.

பிறகு அரசன் நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “இல்லை, நீங்கள் எனது கனவைச் சொல்ல வேண்டும். பிறகு அதன் பொருள் என்னவென்றும் செல்லவேண்டும். நீங்கள் இவற்றைச் சொல்லாவிடால் உங்களைத் துண்டுதுண்டாக வெட்டிப் போடும்படிக் கட்டளையிடுவேன். அதோடு உங்கள் வீடுகள் குப்பைமேடுகளாக அழிக்கும்படிக் கட்டளையிடுவேன். ஆனால் நீங்கள் எனது கனவையும், அதன் பொருளையும் சொல்லிவிட்டால் நான் உங்களுக்கு பரிசுகளையும், அன்பளிப்புகளையும், மரியாதையும் தருவேன். எனவே என் கனவையும், அதன் பொருளையும் கூறுங்கள்” என்றான்.

மீண்டும் அந்த ஞானிகள் அரசனிடம், “தயவு செய்து கனவை எங்களுக்குச் சொல்லும். பிறகு நாங்கள் அதன் பொருளைக் கூறுகிறோம்” என்றனர்.

பிறகு அரசனான நேபுகாத்நேச்சார், “நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கின்றீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நான் என்ன சொன்னேன் என்பதின் கருத்தை நீங்கள் அறிவீர்கள். எனது கனவைப்பற்றிச் சொல்லாவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள்! எனவே நீங்கள் அனைவரும் என்னிடம் பொய் சொல்ல உடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் காலதாமதம் செய்கின்றீர்கள். நீங்கள் நான் செய்ய விரும்புவதை மறந்துவிடுவேன் என்று நம்புகிறீர்கள். இப்பொழுது எனது கனவைக் கூறுங்கள். உங்களால் எனது கனவைக் கூறமுடியுமானால் அதன் பொருளையும் கூறமுடியும் என்று நான் அறிவேன்” என்றான்.

10 கல்தேயர்கள் அரசனுக்குப் பதிலாக, “அரசர் கேட்பவற்றைச் சொல்லக்கூடிய மனிதன் பூமியில் எவனுமில்லை. இதுவரை எந்த அரசரும் இப்படிப்பட்ட ஒன்றை ஒரு மந்திரவாதியிடமோ, ஒரு ஜோசியனிடமோ, ஒரு கல்தேயனிடமோ, கேட்டதில்லை. மிகச் சிறந்தவனும், வலிமைபொருந்தியவனுமான எந்த அரசனும் இதுவரை இவ்வாறு அறிவாளிகளிடம் கேட்டதில்லை. 11 அரசர் மிகக் கடினமான ஒன்றைச் செய்யும்படிக் கேட்கிறீர். தெய்வங்களால் மட்டுமே அரசரது கனவையும், அக்கனவின் பொருளையும் கூறமுடியும். ஆனால் தெய்வங்கள் மனிதர்களோடு வாழ்வதில்லை”என்றனர்.

12 அரசன் இதனைக் கேட்டபோது மிகவும் கோபமடைந்தான். எனவே அவன் பாபிலோனில் உள்ள எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படிக் கட்டளையிட்டான். 13 அரசனான நேபுகாத்நேச்சாரின் கட்டளை அறிவிக்கப்பட்டது. எல்லா ஞானிகளும் கொல்லப்படவிருந்தனர். அரசனது ஆட்கள் தானியேலையும் அவனது நண்பர்களையும் கொலை செய்வதற்காகத் தேடினார்கள்.

14 அரசனது காவலர்களுக்கு ஆரியோகு தலைவனாக இருந்தான். அவன் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்வதற்குப் போனான். ஆனால் தானியேல் அவனிடம் புத்திசாலித்தனமாகவும், சாதுர்யமாகவும் பேசினான். 15 தானியேல் ஆரியோகுவிடம்: “அரசர் எதற்காக, இத்தகைய பயங்கரத் தண்டனையைக் கொடுத்தார்” என்று கேட்டான்.

பிறகு ஆரியோகு அரசனது கனவைப் பற்றிய முழு செய்தியையும் சொன்னான். உடனே தானியேல் புரிந்துகொண்டான். 16 தானியேல் இச்செய்தியை அறிந்ததும் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் சென்றான். தானியேல் அரசனிடம் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டான். பிறகு அவனால் அரசனது கனவையும் அதன் பொருளையும் சொல்ல முடியும் என்றான்.

17 பின்னர் தானியேல் தனது வீட்டிற்குப் போனான். அவன் தனது நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரிடம் எல்லாவற்றையும் சொன்னான். 18 தானியேல் அவனது நண்பர்களிடம் பரலோகத் தேவனிடம் ஜெபிக்குமாறு வேண்டினான். தானியேல் அவர்களிடம் இந்த இரகசியத்தை அறிந்துகொள்ள உதவ கருணைகாட்டுமாறு தேவனிடம் விண்ணப்பிக்கும்படி வேண்டினான். இதனால் பாபிலோனிலுள்ள ஞானிகளோடு தானியேலும், அவனது நண்பர்களும் கொல்லப்படாமல் இருப்பார்கள்.

19 இரவில், தேவன் தானியேலுக்குத் தரிசனத்தின் மூலம் இரகசியத்தை விளக்கினார். பின்னர் தானியேல் பரலோகத்தின் தேவனைப் புகழ்ந்து போற்றினான்.

20 தானியேல், “என்றென்றும் தேவனுடைய நாமத்தைப் போற்றுங்கள்.
    அதிகாரமும் ஞானமும் அவரோடுள்ளன.
21 அவர் காலத்தையும் பருவத்தையும் மாற்றுகிறார்.
    அவர் அரசர்களை மாற்றுகிறார்.
    அவர் அரசர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறார்.
அதோடு அரசர்களின் அதிகாரத்தை எடுத்தும்விடுகிறார். அவர் ஜனங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார்.
    எனவே அவர்கள் ஞானம் பெறுகின்றனர். அவர் ஜனங்கள் பலவற்றைக் கற்று ஞானிகளாக அனுமதிக்கிறார்.
22 அவர் புரிந்துகொள்வதற்குக் கடினமான இரகசியங்களைத் தெரிந்திருக்கிறார்.
    அவரிடம் ஒளி வாழ்கிறது.
    எனவே அவருக்கு இருட்டிலும் இரகசியமான இடத்திலும் இருப்பது தெரிகிறது.
23 என் முற்பிதாக்களின் தேவனே நான் நன்றி சொல்லி உம்மைப் போற்றுகிறேன்.
    நீர் எனக்கு ஞானமும் பலமும் கொடுத்தீர்.
நாங்கள் கேட்டவற்றை நீர் சொன்னீர்.
    நீர் அரசனது கனவைப் பற்றி எங்களுக்குச் சொன்னீர்” என்றான்.

தானியேல் கனவின் பொருளைக் கூறுகிறான்

24 பின்னர் தானியேல், ஆரியோகுவிடம் சென்றான். அரசனான நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்ல ஆரியோகுவைத் தேர்ந்தெடுத்திருந்தான். தானியேல் ஆரியோகிடம், “பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்லவேண்டாம். என்னை அரசனிடம் கொண்டுபோங்கள். நான் அவரிடம் அவரது கனவையும் அதன் பொருளையும் கூறுவேன்” என்றான்.

25 எனவே ஆரியோகு தானியேலை மிக விரைவாக அரசனிடம் அழைத்துச் சென்றான். ஆரியோகு அரசனிடம், “நான் யூதாவிலுள்ள கைதிகளில் ஒருவனைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவன் அரசனிடம் அவரது கனவைப்பற்றிச் சொல்லமுடியும்” என்றான்.

26 அரசன் தானியேலிடம் (பெல்தெஷாத்சார்), “உன்னால் எனது கனவையும் அதன் பொருளையும் பற்றி சொல்லமுடியுமா?” என்று கேட்டான்.

27 தானியேல்: “அரசரான நேபுகாத்நேச்சாரே, எந்த ஞானிகளாலும், எந்த ஜோசியர்களாலும், எந்த கல்தேயர்களாலும் அரசனின் இரகசியம் குறித்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. 28 ஆனால் பரலோகத்தில் இரகசியங்களைப் பற்றிச் சொல்ல ஒரு தேவன் இருக்கிறார். தேவன் அரசரான நேபுகாத்நேச்சாருக்கு வருங்காலத்தில் என்ன நடைபெறும் என்பதைக் காட்ட கனவுகளைக் கொடுத்தார். இதுதான் உமது கனவு. உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நீர் பார்த்தவை இவைதான். 29 அரசரே, நீர் உமது படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தீர். நீர் வருங்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கத் தொடங்கினீர். எதிர்காலத்தைக் குறித்த இரகசியங்களைத் தேவன் ஜனங்களுக்குச் சொல்லமுடியும். அவர் உமக்கு வருங்காலத்தில் என்ன நிகழும் என்பதைக் காட்டினார். 30 தேவன் என்னிடம் இந்த இரகசியத்தைச் சொன்னார். ஏன்? நான் மற்றவர்களைவிட ஞானம் கொண்டவன் என்பதற்காக அல்ல. அரசரான நீர் அந்த கனவின் பொருளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தேவன் என்னிடம் சொன்னார். அதே வழியில், உம் மனதில் ஓடிய நினைவுகளையும் நீர் புரிந்துகொள்வீர்.

31 “அரசரே, உமது கனவில் உமக்கு முன்னால் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அச்சிலை மிகப் பெரியதும், பளபளப்பானதும், மனதைக் கிளர்ச்சியூட்டக் கூடியதாகவும் இருந்தது. அது ஒருவனின் கண்களை வியப்பால் விரியச்செய்யத்தக்கது. 32 அச்சிலையின் தலையானது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் மார்பும், கைகளும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. அச்சிலையின் வயிறும், கால்களின் மேல்பகுதியும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. 33 அச்சிலையின் கால்களின் கீழ்ப்பகுதி இரும்பால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் பாதங்கள் கொஞ்சம் இரும்பாலும், கொஞ்சம் களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்தது. 34 நீர் அந்தச் சிலையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீர் ஒரு பாறையைப் பார்த்தீர். கைகளால் பெயர்க்கப்படாத அக்கல் பெயர்ந்து உருண்டு வந்தது. அக்கல் காற்று வழியாக உருண்டுவந்து இரும்பாலும் களிமண்ணாலும் ஆன அச்சிலையின் பாதங்ககளில் மோதி அதின் பாதங்களை நொறுக்கியது. 35 பிறகு அந்த இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, தங்கம் எல்லாம் ஒரே நேரத்தில் துண்டுத் துண்டாக நொறுங்கியது. அவை, கோடைக் காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போன்று இருந்தன. அவற்றில், எதுவும் மிச்சமில்லாமல் அவை காற்றினால் அடித்துக்கொண்டு போகப்பட்டது. அங்கு ஒரு சிலை இருந்தது என்று எவராலும் சொல்லமுடியாதபடி இருந்தது. பிறகு சிலையைத் தாக்கிய அக்கல் பெரிய மலையாகி அந்தப் பூமி முழுவதையும் நிரப்பியது.

36 “இதுவே உமது கனவு. இப்பொழுது அரசரிடம் அதன் பொருள் என்னவென்று நான் கூறுவேன். 37 அரசரே, நீர் மிக முக்கியமான அரசராக இருக்கிறீர். பரலோத்தின் தேவன் உமக்கு இராஜ்யம், அதிகாரம், பலம், மகிமை எல்லாம் கொடுத்திருக்கிறார். 38 தேவன் உமக்குக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார். உமக்கு மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும், ஆளும் வல்லமையையும் கொடுத்திருக்கிறார். அவை எங்கே வாழ்ந்தாலும் அவற்றை ஆளும்படி உம்மை தேவன் செய்திருக்கிறார். அரசரான நேபுகாத்நேச்சாரே, நீர்தான் அந்தத் தங்கத்தாலான சிலையின் தலையைப் போன்றவர்.

39 “உமக்குப் பிறகு இன்னொரு இராஜ்யம் வரும். அது வெள்ளியைப் போன்றது. ஆனால் அந்த இராஜ்யம் உமது இராஜ்யத்தைப்போன்று அவ்வளவு உயர்வுடையதாக இராது. அதன் பின்னர் மூன்றாவது இராஜ்யமானது பூமி முழுவதையும் ஆளுகைச் செய்யும். அது வெண்கலப் பகுதி. 40 பிறகு நான்காவது இராஜ்யம் வரும். அது இரும்பைப்போன்று வலிமை உடையதாக இருக்கும். இரும்பானது எவ்வாறு உடைத்து தூள்தூளாக்குமோ அது போன்று நான்காவது இராஜ்யமும் மற்ற இராஜ்யங்களை நொறுக்கிப்போடும்.

41 “சிலையின் பாதங்கள் கொஞ்சம் இரும்பாலும், கொஞ்சம் களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்ததை நீர் பார்த்தீர். அதன் பொருள் அந்த நான்காவது இராஜ்யம் பிரிக்கப்பட்டதாயிருக்கும். அதில் இரும்பும், களிமண்ணும் கலந்திருப்பதால் இரும்பின் உறுதி கொஞ்சம் இருக்கும். 42 சிலையின் கால்விரல்கள் பாதி இரும்பாகவும், பாதி களிமண்ணாகவும் இருந்தது. எனவே நான்காவது இராஜ்யமும் இரும்பைப்போல கொஞ்சம் பலமுள்ளதாகவும், களிமண்ணைப்போல கொஞ்சம் பலவீனமுள்ளதாகவும் உடையதாக இருக்கும். 43 இரும்பு களிமண்ணோடு கலந்திருந்ததை நீர் பார்த்தீர். ஆனால் இரும்பும், களிமண்ணும் முழுமையாகக் கலக்காது. இதுபோல, நான்காவது இராஜ்யத்தில் ஜனங்கள் கலவையாக இருப்பார்கள். அந்த ஜனங்கள் ஒரே ஜனங்களாக இணையமாட்டார்கள்.

44 “நான்காவது இராஜ்யத்தில் அரசர்கள் இருக்கும்போது, பரலோகத்தின் தேவன் வேறொரு இராஜ்யத்தை உருவாக்குவார். இந்த இராஜ்யம் என்றென்றும் இருக்கும். இது அழிக்கப்படாது. இந்த இராஜ்யம் இன்னொரு ஜனங்கள் கூட்டத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை. இந்த இராஜ்யம் மற்ற இராஜ்யங்களை நொறுக்கும். இது அந்த இராஜ்யங்களை ஒரு முடிவிற்குக் கொண்டுவரும். ஆனால் இந்த இராஜ்யம் என்றென்றும் தொடர்ந்திருக்கும்.

45 “அரசரான நேபுகாத்நேச்சாரே, ஒரு மலையிலிருந்து ஒரு கல் எவராலும் பெயர்க்கப்படாமல் பெயர்ந்து வந்ததை நீர் பார்த்தீர். அக்கல் இரும்பு, வெண்கலம், களிமண், வெள்ளி, தங்கம் ஆகியவற்றைத் தூள்தூளாக்கியது. இதேபோல் தேவன் வருங்காலத்தில் என்ன நிகழும் என்று உமக்குக் காட்டினார். அந்தக் கனவு உண்மையானது. நீர் இந்த விளக்கத்தை நம்பலாம்” என்றான்.

46 அப்போது அரசனான நேபுகாத்நேச்சார் தானியேலின் முன் தரையில் விழுந்து வணங்கினான். அரசன் தானியேலைப் போற்றினான். அரசன் தானியேலைப் பெருமைப்படுத்துவதற்குக் காணிக்கை கொடுக்கவும், தூபம் காட்டவும் கட்டளையிட்டான். 47 பிறகு அரசன் தானியேலிடம், “உனது தேவன் உண்மையிலேயே அதிமுக்கியமானவரும், வல்லமை உடையவருமானவர் என்பதை அறிவேன். அவர் அனைத்து அரசர்களுக்கும் கர்த்தராக இருக்கிறார். ஜனங்கள் அறியாதவற்றை அவர்களுக்கு அவர் கூறுகிறார். இது உண்மை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் நீ இந்த இரகசியத்தை என்னிடம் சொல்லும் தகுதி பெற்றிருக்கிறாய்” என்றான்.

48 பிறகு அரசன் தானியேலுக்கு தனது இராஜ்யத்தில் மிக முக்கியமான ஒரு பதவியைக் கொடுத்தான். அதோடு அரசன் தானியேலுக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்தான். நேபுகாத்நேச்சார் தானியேலைப் பாபிலோன் மாகாணத்தின் ஆளுநராகவும் உயர்த்தினான். அதோடு அரசன் தானியேலைப் பாபிலோன் தேசத்தின் ஞானிகளுக்கெல்லாம் அதிகாரியாகவும் ஆக்கினான். 49 தானியேல் அரசனிடம் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும் அதிகாரிகளாக்கும்படி வேண்டினான். தானியேல் வேண்டியபடியே அரசன் செய்தான். தானியேலும் அரசன் அருகிலே இருக்கும் முக்கியமானவர்களில் ஒருவனானான்.

தங்க விக்கிரகமும் நெருப்புச் சூளையும்

நேபுகாத்நேச்சார் அரசனிடம் தங்கத்தினால் செய்த ஒரு விக்கிரகம் இருந்தது. அந்த விக்கிரகம் 60 முழம் உயரமும் 6 முழம் அகலமுமானது. பிறகு அவன் அந்த விக்கிரகத்தைப் பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தான். பின்னர் அரசன் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், கருவூலக்காரரையும், ஆலோசகரையும், ஆளுநரையும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் அனைவரையும் கூடி வருமாறு அழைத்தான். அரசன், அவர்கள் அனைவரும் விக்கிரகத்தின் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினான்.

எனவே அவர்களெல்லாம் அரசனான நேபுகாத்நேச்சார் அமைத்திருந்த விக்கிரகத்தின் முன் வந்து நின்றார்கள். பிறகு அரசனுக்காக அறிவிப்பு செய்யும் கட்டியக்காரன் உரத்தக்குரலில், “பல தேசங்களிலிருந்தும், பலமொழி இனங்களிலிருந்தும் வந்துள்ள ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் எல்லா இசைக்கருவிகளின் சப்தங்களைக் கேட்டதும் பணிந்து வணங்கவேண்டும். எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு மற்றும் மற்ற இசைக்கருவிகளின் ஒலியை கேட்கும்போது, நீங்கள் தங்க விக்கிரகத்தை தொழுதுகொள்ளவேண்டும். அரசனான நேபுகாத்நேச்சார் இந்த விக்கிரகத்தை அமைத்திருக்கிறார். எவனாவது கீழே விழுந்து தங்க விக்கிரகத்தை தொழாமலிருந்தால் அவன் சீக்கிரமாக அதிக வெப்பமுள்ள எரிகிற அக்கினிச் சூளையிலே போடப்படுவான். இது அனைவருக்குமுரிய அரச கட்டளையாகும்” என்றான்.

எனவே அவர்கள், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான இசைக்கருவிகளின் ஒலியைக் கேட்டதும் மிக விரைவாக கீழே விழுந்து தங்க விக்கிரகத்தைக் தொழுதுகொண்டார்கள். சகல தேசத்தாரும், இனத்தாரும், மொழிக்காரர்களும் கீழே விழுந்து அரசனான நேபுகாத்நேச்சார் நிறுவிய தங்க விக்கிரகத்தைத் தொழுதுகொண்டார்கள்.

பின்னர், சில கல்தேயர்கள் அரசனிடம் வந்தனர். அந்த ஆட்கள் யூதர்களுக்கு விரோதமாகப் பேசத்தொடங்கினர். அவர்கள் அரசனான நேபுகாத்நேச்சாரிடம், “அரசே! நீர் என்றும் வாழ்க. 10 அரசரே, நீர் ஒரு கட்டளை கொடுத்தீர். எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகல இசைக் கருவிகளின் ஒலியைக் கேட்டதும் ஒவ்வொருவரும் இந்தத் தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழுதுகொள்ளவேண்டும் என்று சொன்னீர். 11 அதோடு, எவனாவது தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழுதுகொள்ளாமலிருந்தால் அவன் அதிக வெப்பமுள்ள எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவான் என்றும் நீர் கட்டளையிட்டீர். 12 சில யூதர்கள் அரசரான உமது கட்டளையில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். நீர் அந்த யூதர்களை பாபிலோன் மாகாணத்தின் முக்கியமான அதிகாரிகளாக ஆக்கினீர். அவர்கள் பெயர்களாவன: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ. அவர்கள் உமது தெய்வத்தைத் தொழுவதில்லை. அவர்கள் உம்மால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைப் பணிந்து வணங்கவில்லை” என்று புகார் கூறினார்கள்.

13 நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். அவன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அழைத்தான். எனவே அவர்கள் அரசன் முன்பு கொண்டுவரப்பட்டார்கள். 14 நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரே நீங்கள் எனது தெய்வத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? நீங்கள், என்னால் நிறுவப்பட்ட தங்க விக்கிரகத்தைத் தொழவில்லை என்பது உண்மையா? 15 இப்பொழுது நீங்கள் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு ஆகிய இசைக் கருவிகளின் ஒலியைக் கேட்டதும் நான் நிறுவிய தங்க விக்கிரகத்தைப் பணிந்து தொழவேண்டும். நான் செய்திருக்கிற இவ்விக்கிரகத்தை நீங்கள் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது. ஆனால், நீங்கள் இதனைத் தொழாவிட்டால், மிகவும் சூடான எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவீர்கள். பிறகு உங்களை என் அதிகாரத்திலிருந்து எந்தத் தேவனாலும் காப்பாற்ற முடியாது” என்றான்.

16 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அரசனிடம்: “நேபுகாத்நேச்சாரே, நாங்கள் உம்மிடம் இவற்றைப்பற்றி விளக்கிடத் தேவையில்லை. 17 நீர் எங்களை எரிகிற அக்கினி சூளையில் போட்டால் நாங்கள் சேவிக்கிற எங்கள் தேவன் எங்களைக் காப்பாற்றுவார். அவர் விரும்பினால் உமது வல்லமையிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவார். 18 ஆனால் எங்களை அவர் காப்பாற்றாவிட்டாலும்கூட, நாங்கள் உமது தெய்வங்களைச் சேவிக்கமாட்டோம். நீர் நிறுவிய தங்க விக்கிரகத்தை தொழமாட்டோம். இது அரசராகிய உமக்குத் தெரிந்திருக்கவேண்டும்” என்றார்கள்.

19 பின்னர் நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கெதிரான கோபம் அவனது முகத்தில் வெளிப்பட்டது. அவன், வழக்கத்தை விடச் சூளையை ஏழு மடங்கு மிகுதியாகச் சூடாக்கும்படிக் கட்டளையிட்டான். 20 பிறகு நேபுகாத்நேச்சார் தனது வீரர்களில் மிகவும் பலமானவர்களிடம் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை நன்றாகக் கட்டும்படி கட்டளையிட்டான். அரசன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அக்கினி சூளையிலே போடும்படி வீரர்களிடம் கட்டளையிட்டான்.

21 எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் கட்டப்பட்டு அக்கினி சூளையிலே போடப்பட்டனர். அவர்கள் சால்வை, நிசார் தலைப்பாகை, மற்றும் ஆடைகளை அணிந்திருந்தனர். 22 அரசன் கட்டளையிடும்போது மிகவும் கோபமுடையவனாக இருந்தான். எனவே அவர்கள் சூளையைச் சீக்கிரமாக சூடாக்கினார்கள். அந்நெருப்பு பலமான வீரர்களையும் எரிக்கும் அளவில் மிகவும் சூடாக இருந்தது. அவர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைத் தூக்கிச் சென்று அக்கினிச் சூளையில் போடுவதற்கு அருகில் சென்றபோது அவ்வீரர்களை நெருப்பு அழித்துப்போட்டது. 23 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் இறுகக் கட்டப்பட்ட நிலையில் நெருப்பில் விழுந்தனர்.

24 பின்னர் அரசனான நேபுகாத்நேச்சார் குதித்து எழுந்தான். அவன் மிகவும் வியப்புற்று தனது ஆலோசகர்களிடம்: “நாம் மூன்றுபேரை மட்டுமே கட்டி நெருப்பில் போட்டோம். இது சரிதானா?” என்றான்.

அவனது ஆலோசகர்கள்: “ஆம் அரசே” என்றனர்.

25 அரசன் அவர்களிடம், “பாருங்கள், நான்குபேர் நெருப்பிற்குள் நடமாடுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. அவர்கள் நெருப்பால் எரிக்கப்படவில்லை. நான்காவது ஆள் ஒரு தேவபுத்திரனைப் போன்று இருக்கிறார்” என்றான்.

26 பிறகு நேபுகாத்நேச்சார் அக்கினிச் சூளையின் வாசலருகே சென்று உரத்தகுரலில், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே வெளியே வாருங்கள்! உன்னதமான தேவனுடைய பணியாட்களே, வெளியே வாருங்கள்” என்றான்.

எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் நெருப்பிலிருந்து வெளியே வந்தனர். 27 அவர்கள் வெளியே வரும்போது, அவர்களைச் சுற்றி தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், அரசனின் மந்திரிகளும் சூழ்ந்து நின்றனர். நெருப்பானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைச் சுடாமலிருந்ததை அவர்களால் பார்க்க முடிந்தது. அவர்களின் உடல்கள் வெந்துபோகவில்லை. அவர்களின் தலைமயிர் கருகவில்லை. அவர்களின் சால்வைகள் எரிக்கப்படவில்லை அவர்கள்மேல் அக்கினியின் மணம் வீசவில்லை.

28 பிறகு நேபுகாத்நேச்சார்: “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனைப் போற்றுங்கள். அவர்களின் தேவன், தூதனை அனுப்பி அவர்களைக் காப்பாற்றிவிட்டார். இந்த மூன்று பேரும் அவர்களின் தேவனை நம்பினார்கள். அவர்கள் எனது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் மற்ற தெய்வங்களுக்குப் பணிவிடைச் செய்து தொழுவதைவிட மரித்துப்போகத் தயாராக இருந்தனர். 29 எனவே, நான் இப்போது இந்தச் சட்டத்தை ஏற்படுத்துகிறேன். எந்த தேசத்தினராகவும், மொழியினராகவும் உள்ள என் ஜனங்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனுக்கு எதிராக ஏதாவது சொன்னால் அவர்களைத் துண்டு துண்டாக வெட்டுவேன். அவர்களது வீட்டை எருக்களமாகிப் போடுவேன். வேறு எந்த தேவனும் தம் ஜனங்களை இதுபோல் காப்பாற்ற முடியாது” என்றான். 30 பிறகு அரசன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைப் பாபிலோன் மாகாணத்தின் முக்கிய அதிகாரிகளாக்கினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center