Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 28-30

தீரு தன்னைத்தானே ஒரு தேவன் என்று நினைக்கிறது

28 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, தீருவின் அரசனிடம் கூறு: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“‘நீ மிகவும் பெருமைகொண்டவன்!
    நீ சொல்கிறாய்: “நான் தெய்வம்!
கடல்களின் நடுவே தெய்வங்கள் வாழும் இடங்களில்
    நான் அமருவேன்.”

“‘நீ ஒரு மனிதன். தெய்வம் அல்ல!
    நீ தேவன் என்று மட்டும் நினைக்கிறாய்.
நீ தானியேலைவிட புத்திசாலி என்று நினைக்கிறாய்!
    உன்னால் எல்லா இரகசியங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறாய்!
உனது ஞானத்தாலும், புத்தியினாலும்
    நீ உனது செல்வத்தை பெற்றாய்.
நீ பொன்னையும் வெள்ளியையும்
    உன் செல்வத்தில் சேர்த்துக்கொண்டாய்.
உன் ஞானத்தாலும் வியாபாரத்தாலும்
    செல்வத்தை வளரச்செய்தாய்.
அச்செல்வத்தால்
    இப்பொழுது பெருமைகொள்கிறாய்.

“‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
தீரு, நீ ஒரு தேவனைபோன்று உன்னை நினைத்தாய்.
உனக்கு எதிராகச் சண்டையிட நான் அந்நியரை அழைப்பேன்.
    அவர்கள், நாடுகளிலேயே மிகவும் கொடூரமானவர்கள்!
அவர்கள் தம் வாளை உருவி,
    உனது ஞானத்தால் கொண்டுவந்த அழகிய பொருட்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள்.
    அவர்கள் உன் சிறப்பைக் குலைப்பார்கள்.
அவர்கள் உன்னைக் குழியிலே விழத் தள்ளுவார்கள்.
    நீ கடலின் நடுவே கொலையுண்டு மரிக்கிற பயணிகளைப்போன்று மரிப்பாய்.
அம்மனிதன் உன்னைக் கொல்வான்.
    “நான் ஒரு தேவன்” என்று இனியும் சொல்வாயா?
இல்லை! அவன் தனது வல்லமையால் உன்னை அடைவான்.
    நீ தேவனில்லை, மனிதன் என்பதை நீ அறிவாய்.
10 அந்நியர்கள் உன்னை வெளிநாட்டவரைப்போல நடத்தி கொலை செய்வார்கள்!
    அவை நிகழும், ஏனென்றால், நான் கட்டளையிட்டேன்!’”
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

11 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 12 “மனுபுத்திரனே, தீரு அரசனைப்பற்றிய சோகப் பாடலை நீ பாடு. அவனிடம் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“‘நீ உயர்ந்த (இலட்சிய) மனிதனாக இருந்தாய்.
    நீ ஞானம் நிறைந்தவன்.
    நீ முழுமையான அழகுள்ளவன்.
13 நீ ஏதேனில் இருந்தாய்.
அது தேவனுடைய தோட்டம்.
    உன்னிடம் எல்லா விலையுயர்ந்த கற்களும் பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் ஆகியவற்றை வைத்திருந்தாய்.
இவை அனைத்தும் பொன்னில் வைக்கப்பட்டிருந்தன.
    நீ படைக்கப்பட்ட நாளிலேயே இவ்வழகுகள் உனக்குக் கொடுக்கப்பட்டன.
    தேவன் உன்னை பலமுள்ளதாகச் செய்தார்.
14 நீ தேர்ந்தெடுக்கப்பட்ட கேரூப்களில் ஒருவன் உனது
    சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன.
நான் உன்னை தேவனுடைய பரிசுத்த மலையில் வைத்தேன்.
நீ அந்த இடத்திற்குப் பொறுப்பாளியாயிருந்தாய்.
    நீ நெருப்பைப்போன்று ஒளிவீசும் நகைகளின் மத்தியில் நடந்தாய்.
15 நான் உன்னைப் படைக்கும்போது நீ நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தாய்.
    ஆனால் பிறகு கெட்டவனானாய்.
16 உனது வியாபாரம் உனக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்தது.
    ஆனால் அவை உனக்குள் கொடூரத்தை வைத்தன. நீ பாவம் செய்தாய்.
எனவே நான் உன்னைச் சுத்தமற்ற ஒன்றாக நடத்தினேன்.
    நான் உன்னைத் தேவனுடைய மலையில் இருந்து அப்பால் எறிந்தேன்.
நீ சிறப்புக்குரிய கேருபீன்களில் ஒருவன்.
    உனது சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன.
ஆனால் நான் உன்னை நெருப்பைபோன்று ஒளிவீசும்
    நகைகளைவிட்டு விலகச் செய்தேன்.
17 உனது அழகு உன்னைப் பெருமைகொள்ளச் செய்தது.
    உனது மகிமை உன் ஞானத்தை அழித்தது.
எனவே உன்னைத் தரையில் எறிவேன்.
    இப்பொழுது மற்ற அரசர்கள் உன்னை முறைத்துப் பார்க்கின்றனர்.
18 நீ பல பாவங்களைச் செய்தாய்.
நீ அநீதியான வியாபாரியாக இருந்தாய்.
    இவ்வாறு நீ பரிசுத்தமான இடங்களை அசுத்தமாக்கினாய்.
எனவே உனக்குள்ளிருந்து நெருப்பை நான் கொண்டுவந்தேன்.
    இது உன்னை எரித்தது!
நீ தரையில் எரிந்து சாம்பலானாய்.
    இப்பொழுது ஒவ்வொருவரும் உன் அவமானத்தைப் பார்க்கமுடியும்.

19 “‘மற்ற நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் உனக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து திகைத்தார்கள்.
    உனக்கு நடந்தது ஜனங்களை அஞ்சும்படிச் செய்யும்.
    நீ முடிவடைந்தாய்!’”

சீதோனுக்கு எதிரான செய்தி

20 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 21 “மனுபுத்திரனே, சீதோனுக்கு எதிராகத் திரும்பி எனக்காகத் தீர்க்கதரிசனம் சொல். 22 ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: என்று சொல்.

“‘சீதோனே நான் உனக்கு எதிராக இருக்கிறேன்!
    உன் ஜனங்கள் என்னை மதிக்க கற்பார்கள்.
நான் சீதோனைத் தண்டிப்பேன்.
    பிறகு, நானே கர்த்தர் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
பிறகு, நான் பரிசுத்தமானவர் என்று அறிவார்கள்.
    அவ்வாறே என்னை அவர்கள் மதிப்பார்கள்.
23 நான் சீதோனுக்கு நோயையும் மரணத்தையும் அனுப்புவேன்.
    நகரத்தில் பலர் மரிப்பார்கள்.
பலர் (பகைவீரர்) வாளால் நகரத்திற்கு வெளியில் கொல்லப்படுவார்கள்.
    பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!’”

இஸ்ரவேலைக் கேலி செய்வதை நாடுகள் நிறுத்தும்

24 “‘இஸ்ரவேலைச் சுற்றிலுள்ள நாடுகள் அவளை வெறுத்தனர். ஆனால் அந்நாடுகளுக்குத் தீமைகள் ஏற்படும். பிறகு அங்கே இஸ்ரவேல் வம்சத்தாரைப் புண்படுத்தும் முட்களும் துன்புறுத்தும் நெருஞ்சிலும் இல்லாமல் போகும். அப்பொழுது நானே அவர்களுடைய கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்ளுவார்கள்.’”

25 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “நான் இஸ்ரவேல் ஜனங்களை மற்ற நாடுகளில் சிதறடித்தேன். ஆனால் மீண்டும் இஸ்ரவேல் வம்சத்தாரை ஒன்று சேர்ப்பேன். பிறகு அந்நாடுகள் நான் பரிசுத்தமானவர் என்பதை அறிந்து அவ்வாறு என்னை மதிப்பார்கள். அந்நேரத்தில், இஸ்ரவேலர்கள் தம் நாட்டில் வாழ்வார்கள், நான் அந்த நாட்டை என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்தேன். 26 அவர்கள் தம் நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்கள் வீடுகட்டுவார்கள். திராட்சை தோட்டங்களை அமைப்பார்கள். அதனை வெறுக்கிற, சுற்றிலும் உள்ள அனைத்து நாட்டினரையும் நான் தண்டிப்பேன். பிறகு இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். நானே அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

எகிப்துக்கு விரோதமான செய்தி

29 பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதம் பன்னிரண்டாம் தேதியிலே எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எகிப்து மன்னனான பார்வோனைப் பார். அவனுக்கும் எகிப்துக்கும் எதிராக எனக்காகப் பேசு. ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:

“‘எகிப்து மன்னனான பார்வோனே, நான் உனக்கு விரோதமானவன்.
    நீ நைல் நதியின் நடுவிலே பெரிய பூதம்போன்று படுத்துக்கொண்டு,
“இது என்னுடைய நதி!
    நான் இந்த நதியை உண்டாக்கினேன்!” என்று சொல்கிறாய்.

4-5 “‘ஆனால் நான் உனது வாயில் கொக்கியைப் போடுவேன்.
    நைல் நதியிலுள்ள மீன் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும்.
நான் உன்னையும் உனது மீனையும் நதியை விட்டு வெளியே இழுத்து,
    வறண்ட நிலத்தில் போடுவேன்.
நீ தரையில் விழுவாய்.
    உன்னை எவரும் எடுக்கவோ புதைக்கவோமாட்டார்கள்.
நான் உன்னைக் காட்டு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் கொடுப்பேன்.
    நீ அவற்றின் உணவு ஆவாய்.
பிறகு எகிப்தில் வாழ்கிற அனைத்து ஜனங்களும்
    நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்!

“‘ஏன் நான் இவற்றைச் செய்கிறேன்?
இஸ்ரவேலர்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள்.
    ஆனால் அந்த உதவி நாணல் கோலைப்போன்று பலவீனமாக இருந்தது!
இஸ்ரவேல் ஜனங்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள்.
    ஆனால் எகிப்து அவர்களது கைகளையும் தோள்களையும் கிழித்தது.
அவர்கள் உதவிக்காக உன்மேல் சாய்ந்தார்கள்.
    ஆனால் நீ அவர்களின் இடுப்பை திருப்பி முறிந்துபோகப் பண்ணினாய்.’”

எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“நான் உனக்கு எதிராக ஒரு வாளைக் கொண்டுவருவேன்.
    நான் உனது ஜனங்களையும் மிருகங்களையும் அழிப்பேன்.
எகிப்து வெறுமையாகி அழியும்.
    பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

தேவன் சொன்னார்: “ஏன் நான் இவற்றைச் செய்யப்போகிறேன்? நீ, ‘இது எனது நதி. நான் இந்த நதியை உண்டாக்கினேன்’ என்று கூறினாய். 10 எனவே, நான் (தேவன்) உனக்கு விரோதமாக இருக்கிறேன். உன் நைல் நதியின் பல கிளைகளுக்கும் நான் விரோதமானவன். நான் எகிப்தை முழுமையாக அழிப்பேன். நகரங்கள் மிக்தோலிலிருந்து செவெனேவரை, எத்தியோப்பியா எல்லைவரை வெறுமையாகும். 11 எந்த மனிதரும் மிருகமும் எகிப்து வழியாகப் போகமுடியாது. எதுவும் 40 ஆண்டுகளுக்கு எகிப்தில் வாழ முடியாது. 12 நான் எகிப்தை அழிப்பேன். நகரங்கள் 40 ஆண்டுகளுக்கு அழிந்த நிலையிலேயே இருக்கும். நான் எகிப்தியர்களைப் பல நாடுகளில் சிதறடிப்பேன். நான் அவர்களை அயல்நாடுகளில் அந்நியர்களாக்குவேன்.”

13 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் எகிப்தியர்களைப் பல நாடுகளில் சிதறடிப்பேன். ஆனால் 40 ஆண்டுகள் முடிந்ததும் அவர்களை மீண்டும் கூட்டுவேன். 14 நான் எகிப்திய கைதிகளை மீண்டும் கொண்டுவருவேன். நான் எகிப்தியர்களை மீண்டும் அவர்கள் பிறந்த நாடான பத்ரோசுக்குக் கொண்டுவருவேன். ஆனால் அவர்களது அரசு முக்கியமற்றிருக்கும், 15 இது மிக அற்பமான அரசாக இருக்கும். இது மற்ற நாடுகளைவிட மேலாக என்றும் உயராது. நான் அதனை வேறு நாடுகளை ஆளமுடியாதபடி மிகச் சிறிதாக்குவேன். 16 இஸ்ரவேல் வம்சத்தார் மீண்டும் எகிப்தைச் சார்ந்திருக்கமாட்டார்கள். இஸ்ரவேலர்கள் தம் பாவத்தை நினைப்பார்கள். அவர்கள் தேவனை நோக்கித் திரும்பாமல், உதவிக்காக எகிப்திடம் திரும்பினார்கள். அவர்கள் நானே கர்த்தரும் ஆண்டவருமாயிருக்கிறேன் என்பதை அறிவார்கள்.”

பாபிலோன் எகிப்தைக் கைப்பற்றும்

17 இருபத்தேழாம் ஆண்டின் முதலாம் மாதம் (ஏப்ரல்) முதலாம் நாளில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார், தீருவுக்கு எதிராகத் தன் படையைக் கடுமையாகப் போரிடுமாறு செய்தான். அவர்கள் எல்லா வீரர்களின் தலைகளையும் மொட்டையடித்தனர். ஒவ்வொருவரின் தோளும் பாரமான தடிகள் சுமந்து தோல் உரிந்துபோனது, நேபுகாத்நேச்சாரும் அவனது படையும் தீருவைத் தோற்கடிக்கக் கடுமையாக வேலை செய்தது. ஆனால் அக்கடும் வேலையால் அவர்கள் எதையும் பெறவில்லை.” 19 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: “நான் எகிப்து நாட்டை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாருக்குக் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் எகிப்தியர்களைச் சிறை எடுத்துச்செல்வான். நேபுகாத்நேச்சார் எகிப்திலிருந்து பல விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துச்செல்வான். இது நேபுகாத்நேச்சாரின் படைகளுக்கான கூலியாகும். 20 நான் நேபுகாத்நேச்சாருக்கு அவனது கடுமையான உழைப்புக்குப் அன்பளிப்பாக எகிப்தைக் கொடுப்பேன். ஏனென்றால், அவர்கள் எனக்காக உழைத்தார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்!

21 “அந்த நாளில் நான் இஸ்ரவேல் வம்சத்தாரைப் பலமுள்ளவர்களாக்குவேன். பிறகு உன் ஜனங்கள் எகிப்தியரைப் பார்த்துச் சிரிப்பார்கள். அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”

பாபிலோன் படை எகிப்தைத் தாக்கும்

30 கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார், “மனுபுத்திரனே, எனக்காகப் பேசு. ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.

“‘அழுதுகொண்டே சொல்:
    “அந்தப் பயங்கரமான நாள் வருகிறது.”
அந்த நாள் அருகில் உள்ளது!
ஆம், கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு நாள் அருகில் உள்ளது.
    அது மேகமூடிய நாள்.
    இது நாடுகளை நியாயந்தீர்க்கும் காலமாக இருக்கும்!
எகிப்திற்கு எதிராக ஒரு வாள் வருகிறது!
    எத்தியோப்பியாவிலுள்ள ஜனங்கள் பயத்தால் நடுங்குவார்கள், அந்த நேரத்தில் எகிப்து விழும்.
பாபிலேனின் படை எகிப்திய ஜனங்களைச் சிறை பிடித்துச் செல்லும்.
    எகிப்தின் அடித்தளம் உடைந்து போகும்!

“‘பல ஜனங்கள் எகிப்தோடு சமாதான உடன்படிக்கை செய்தனர். ஆனால் எத்தியோப்பியா, பூத், லூத், அரேபியா, லிபியா மற்றும் இஸ்ரவேலர்கள் அழிக்கப்படுவார்கள்!

“‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
எகிப்திற்கு ஆதரவளிக்கும் ஜனங்கள் வீழ்வார்கள்!
    அவளது பலத்தின் பெருமை அழியும்.
மிக்தோல் முதல் செவெனே வரைக்குமுள்ள எகிப்திய ஜனங்கள் போரில் கொல்லப்படுவார்கள்.
    எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்!
எகிப்து அழிக்கப்பட்ட மற்ற நாடுகளோடு சேரும்.
    எகிப்தும் வெறுமையான நாடுகளில் ஒன்றாகும்.
நான் எகிப்தில் ஒரு நெருப்பைக் கொளுத்துவேன்.
    அவளது ஆதரவாளர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள்.
பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!

“‘அந்த நேரத்தில், நான் தூதுவர்களை அனுப்புவேன். அவர்கள் கெட்ட செய்தியோடு எத்தியோப்பியாவிற்குக் கப்பலில் போவார்கள். எத்தியோப்பியா இப்போது பாதுகாப்பை உணர்கிறது. எகிப்து தண்டிக்கப்படும்போது, எத்தியோப்பியர்கள் பயத்தினால் நடுங்குவார்கள்! அந்த நேரம் வருகிறது!’”

10 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“நான் பாபிலோன் அரசனைப் பயன்படுத்துவேன்.
    நான் நேபுகாத்நேச்சாரை எகிப்து ஜனங்களை அழிக்கப் பயன்படுத்துவேன்.
11 நேபுகாத்நேச்சாரும் அவனது ஜனங்களும்
    நாடுகளிலேயே மிகவும் கொடூரமானவர்கள்.
    நான் எகிப்தை அழிக்க அவர்களைக் கொண்டுவருவேன்.
அவர்கள் தம் வாள்களை எகிப்திற்கு எதிராக உருவுவார்கள்.
    அவர்கள் அத்தேசத்தை மரித்த உடல்களால் நிரப்புவார்கள்.
12 நான் நைல் நதியை வறண்ட நிலமாக்குவேன்.
    பிறகு நான் வறண்ட நிலத்தைத் தீயவர்களுக்கு விற்பேன்.
நான் அந்நியர்களைப் பயன்படுத்தி அந்நாட்டைக் காலி பண்ணுவேன்!
    கர்த்தராகிய நான் பேசியிருக்கிறேன்.”

எகிப்தின் விக்கிரகங்கள் அழிக்கப்படும்

13 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.
“நான் எகிப்திலுள்ள விக்கிரகங்களை அழிப்பேன்.
    நான் நோப்பின் சிலைகளை வெளியே அப்புறப்படுத்துவேன்.
எகிப்து நாட்டில் இனிமேல் ஒரு தலைவனும் இருக்கமாட்டான்.
    நான் எகிப்து நாட்டில் அச்சத்தை வைப்பேன்.
14 நான் பத்ரோசைக் காலி பண்ணுவேன்.
    நான் சோவானில் நெருப்பைக் கொளுத்துவேன்.
    நான் நோ நகரைத் தண்டிப்பேன்.
15 நான் எகிப்தின் கோட்டையான சீனுக்கு விரோதமாக எனது கோபத்தை ஊற்றுவேன்.
    நான் நோ ஜனங்களை அழிப்பேன்!
16 நான் எகிப்தில் நெருப்பைக் கொளுத்துவேன்.
    சீன் என்னும் பெயருள்ள நகரம் துன்பத்தில் இருக்கும்.
நோ நகரத்திற்குள் வீரர்கள் நுழைவார்கள்.
    நோ ஒவ்வொரு நாளும் புதிய துன்பங்களை அனுபவிக்கும்.
17 ஆவென், பிபேசெத் ஆகிய நகரங்களின் இளைஞர்கள் போரில் மரிப்பார்கள்.
    பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்படுவார்கள்.
18 நான் எகிப்தின் நுகங்களை முறிக்கும்போது தக்பானேசிலே பகல் இருண்டு போகும்.
    எகிப்தின் பெருமையான பலம் முடிந்துபோகும்!
எகிப்தை ஒரு மேகம் மூடும்.
    அவளது மகள்கள் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்படுவார்கள்.
19 எனவே நான் எகிப்தைத் தண்டிப்பேன்.
    பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!”

எகிப்து என்றென்றும் பலவீனமாகும்

20 சிறைபிடிக்கப்பட்ட பதினொன்றாவது ஆண்டின் முதல் மாதத்து (ஏப்ரல்) ஏழாம் நாள் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 21 “மனுபுத்திரனே, நான் எகிப்து மன்னனான பார்வோனின் கையை (பலம்) உடைத்திருக்கிறேன். எவரும் அவனது கையில் கட்டுப்போட முடியாது. அது குணமாவதில்லை. எனவே அவனது கையானது வாளைத் தாங்கும் அளவிற்குப் பலம் பெறுவதில்லை.”

22 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் எகிப்து மன்னனான பார்வோனுக்கு விரோதமானவன். அவனது இரண்டு கைகளையும் நான் உடைப்பேன். அவற்றில் ஒன்று ஏற்கெனவே உடைந்தது; இன்னொன்று பலமுள்ளது. நான் அவனது கையிலிருந்து வாளானது விழும்படிச் செய்வேன். 23 நான் எகிப்தியர்களை நாடுகளிடையே சிதறடிப்பேன். 24 நான் பாபிலோன் அரசனது கையைப் பலப்படுத்துவேன். நான் எனது வாளை அவனது கையில் கொடுப்பேன். ஆனால் நான் பார்வோனின் கைகளை உடைப்பேன். பிறகு பார்வோன் வலியால் கதறுவான். அவனது கதறல் மரிக்கிறவனின் கதறல் போன்றிருக்கும். 25 எனவே நான் பாபிலோன் அரசனின் கைகளைப் பலப்படுத்துவேன். ஆனால் பார்வோனின் கைகள் கீழே விழும். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!

“நான் பாபிலோன் அரசனது கையில் என் வாளைக் கொடுப்பேன். பிறகு அவன் எகிப்து நாட்டிற்கு எதிராக வாளை நீட்டுவான். 26 நான் நாடுகளில் எகிப்தியர்களைச் சிதறடிப்பேன், பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center