Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 18-20

18 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “ஜனங்களாகிய நீங்கள் இப்பழமொழியை மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்.

“‘ஏன்? நீங்கள் பெற்றோர்கள் புளித்த திராட்சை தின்றார்கள்.
    ஆனால் குழந்தைகள் புளிப்புச் சுவையைப் பெறுகிறார்கள்’” என்று சொல்லுகிறீர்கள்.

(நீங்கள் பாவம் செய்தால் எதிர்காலத்தில் எவராவது தண்டனை அனுபவிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.)

ஆனால் எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “எனது உயிரைக்கொண்டு நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்களிக்கிறேன். இப்பழமொழி இனிமேல் உண்மையாக இருக்காது. நான் ஒவ்வொரு மனிதனையும் அவ்வாறே நடத்துகிறேன். அவன் பெற்றவனா, பிள்ளையா என்பதைப்பற்றி கவலையில்லை. பாவம் செய்கிற ஒருவன் அதற்கேற்றபடி மரிப்பான்!

“ஒருவன் நல்லவனாக இருந்தால் அவன் நன்றாக வாழ்வான்! அந்நல்லவன் ஜனங்களிடம் நியாயமாக இருக்கிறான். அந்நல்லவன் மலைகளுக்குச் சென்று பொய்த் தெய்வங்களுக்கு உணவு காணிக்கை தரவில்லை. இஸ்ரவேலில் உள்ள அசுத்த பொய்த் தெய்வங்களிடம் வேண்டுதல் செய்யவில்லை. அவன் அயலானின் மனைவியோடு விபச்சாரப் பாவத்தைச் செய்யவில்லை. அவன் தனது மனைவியுடன் அவளது விலக்குக் காலத்தில் பாலின உறவுவைத்துக் கொள்ளவில்லை. அந்நல்லவன் பிறரை தன் நன்மைக்காகப் பயன்படுத்தவில்லை. எவராவது அவனிடமிருந்து பணம் கடன் வாங்கினால் திருப்பித் தரும்போது அடமானத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறான். அந்நல்லவன் பசித்தவர்களுக்கு உணவைத் தருகிறான். தேவையானவர்களுக்கு ஆடை கொடுக்கிறான். ஒருவன் அந்நல்லவனிடம் கடன் வாங்க விரும்பினால் அவன் கடன் கொடுப்பான். அவன் அந்தக் கடனுக்காக வட்டி பெறவில்லை. அவன் வஞ்சகமாக நடந்துகொள்ளவில்லை. அவன் எல்லோரிடமும் நேர்மையாக நடந்து கொள்கிறான். ஜனங்கள் அவனை நம்பலாம். அவன் எனது சட்டங்களுக்கு அடிபணிகிறான், அவன் எனது முடிவுகளைப்பற்றி எண்ணுகிறான், நியாயமாக இருக்கக் கற்றிருக்கிறான். அவன் நல்லவன், அதனால் வாழ்வான்.

10 “ஆனால் அந்நல்லவனுக்கு ஒரு மகன் பிறந்து அவன் தன் தந்தையைப்போல் இந்நற்காரியங்களில் எதையும் செய்யாதவனாக இருக்கலாம். அந்த மகன் பொருட்களைத் திருடலாம், பிறரைக் கொலை செய்யலாம். 11 அம்மகன் இத்தீமைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அவன் மலைகளுக்குப் போய் பொய்த் தெய்வங்களுக்கு உணவுக் காணிக்கை தரலாம். அப்பாவியாகிய மகன் அயலான் மனைவியோடு கள்ள உறவு வைத்திருக்கலாம். 12 அவன் ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் தவறாக நடத்தலாம். அவன் ஜனங்களை ஏமாற்றி பயன்பெறலாம். ஒருவன் தனது கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அவன் அடமானத்தைத் திருப்பிக் கொடுக்காமல் இருக்கலாம். அந்தப் பாவி மகன் அந்த ஆபாசமான விக்கிரங்களுக்கு பிரார்த்தனை செய்து வேறு பயங்கரமான செயல்களைச் செய்யலாம். 13 ஒருவனுக்கு இப்பாவி மகனிடம் இருந்து பணம் கடன் வாங்கும் தேவை ஏற்படலாம். அம்மகன் அவனுக்குக் கடன் கொடுக்கலாம். ஆனால் அவன் அக்கடனுக்கு வட்டி கொடுக்கும்படி வற்புறுத்துவான். எனவே அப்பாவி மகன் வாழமாட்டான். அவன் எல்லா அருவருப்பான செயல்களையும் செய்தான். அதனால் மரணம் அடைவான். அவனது மரணத்திற்கு அவனே பொறுப்பாவான்.

14 “இப்பொழுது, இப்பாவி மகனுக்கு ஒரு மகன் பிறந்திருக்கலாம். ஆனால் இந்த மகன் தன் தந்தை செய்த எல்லாப் பாவங்களையும் பார்த்து அவன் தந்தையைப்போன்று வாழ மறுக்கலாம். அந்த நல்ல மகன் ஜனங்களை நியாயமாக நடத்தலாம். 15 அந்நல்ல மகன் மலைகளுக்குப் போய் தனது உணவைப் பொய்த் தெய்வங்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில்லை. இஸ்ரவேலில் அசுத்தத் தெய்வங்களிடம் அவன் விண்ணப்பம் செய்வதில்லை. அவன் அயலானின் மனைவியோடு விபச்சாரம் செய்வதில்லை. 16 அந்நல்ல மகன் ஜனங்களை ஒடுக்குவதில்லை. ஒருவன் இவனிடம் வந்து கடன் கேட்டால் இவன் அடமானத்தைப் பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கிறான். அவன் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அடமானத்தை இவன் திருப்பிக் கொடுக்கிறான். இந்நல்ல மகன் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறான். தேவையானவர்களுக்கு ஆடை கொடுக்கிறான். 17 இவன் ஏழைகளுக்கு உதவுகிறான். ஒருவன் இவனிடம் பணம் கடன் கேட்க விரும்பினால் கடன் கொடுக்கிறான். இவன் அக்கடனுக்கு வட்டி வசூலிக்கவில்லை. இந்நல்ல மகன் எனது நியாயங்களுக்கு அடிபணிந்து எனது நியாயங்களைப் பின்பற்றுகிறான். இந்நல்ல மகன் தந்தையின் பாவங்களுக்காக மரணமடையமாட்டான். இந்நல்ல மகன் வாழ்வான். 18 இத்தந்தை ஜனங்களுக்குக் கொடுமை செய்து அவர்களின் பொருட்களைத் திருடியிருக்கலாம். அவன் தனது ஜனங்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் இருக்கலாம். இத்தந்தை தனது சொந்தப் பாவங்களுக்காக மரிப்பான். ஆனால் அம்மகன் தனது தந்தையின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான்.

19 “நீ, ‘அம்மகன் தந்தையின் பாவங்களுக்காக ஏன் தண்டிக்கப்படவில்லை?’ என்று கேட்கலாம், மகன் நல்லவனாக இருந்து நன்மையைச் செய்தான் என்பதுதான் காரணம்! அவன் வெகு கவனமாக எனது நியாயங்களுக்குக் கீழ்ப்படிந்தான்! எனவே அவன் வாழ்வான். 20 பாவங்கள் செய்கிற ஒருவனே மரணத்திற்கு ஆளாவான். ஒரு மகன் தனது தந்தையின் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான். ஒரு தந்தை தன் மகனது பாவங்களுக்காகத் தண்டிக்கப்படமாட்டான். ஒரு நல்லவனின் நன்மை அவனை மட்டுமே சேரும். ஒரு கெட்டவனின் பாவங்கள் அவனை மட்டுமே சேரும்.

21 “இப்பொழுது, தீயவன் தனது வாழ்க்கை முறையை மாற்றினால் பிறகு அவன் மரிக்கமாட்டான் வாழ்வான். அவன் தான் செய்த பாவங்களை நிறுத்திவிடலாம் அவன் எனது சட்டங்களுக்கு கவனமாகக் கீழ்ப்படியலாம். அவன் நல்லவனாகவும் நியாயமானவனாகவும் ஆகலாம். 22 தேவன் அவன் செய்த தீயவைகளை நினைக்கமாட்டார். தேவன் அவனது நன்மைகளை மட்டுமே நினைப்பார்! எனவே அம்மனிதன் வாழ்வான்!”

23 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் தீயவர்கள் மரிப்பதை விரும்பவில்லை. நான் அவர்கள் தம் வாழ்வை மாற்றுவதை விரும்புகிறேன். எனவே, அவர்கள் வாழமுடியும்!

24 “இப்பொழுது, ஒரு நல்ல மனிதன் தனது நற்செயல்களை நிறுத்தலாம். அவன் தன் வாழ்வை மாற்றி முன்பு தீயவர்கள் என்னென்ன பாவங்களைச் செய்தார்களோ அவற்றைச் செய்யத் தொடங்கலாம். (அத்தீயவன் மாறினான் எனவே அவன் வாழமுடியும்). எனவே, அந்நல்ல மனிதன் மாறிப் தீயவனானால் பிறகு தேவன் அவன் செய்த நன்மைகளைப்பற்றி நினைக்கமாட்டார். அவன் அவருக்கு எதிராக மாறி பாவம் செய்யத் தொடங்கிவிட்டான் என்பதையே நினைப்பார். எனவே அம்மனிதன் தனது பாவங்களுக்காக மரிப்பான்.”

25 தேவன் சொன்னார்: “நீங்கள், ‘எனது தேவனாகிய ஆண்டவர் நியாயமானவராக இல்லை!’ என்று சொல்லலாம். ஆனால், கவனியுங்கள், இஸ்ரவேல் குடும்பத்தாரே, நியாயமற்றவர்கள் நீங்கள்தான்! 26 ஒரு நல்ல மனிதன் மாறிப் பாவம் செய்யத் தொடங்கினால் அவன் தனது பாவங்களுக்காக மரிப்பான். 27 ஒரு தீயமனிதன் மாறி நன்மை செய்யத் தொடங்கினால், பிறகு அவன் தனது வாழ்வைக் காப்பாற்றுவான். அவன் வாழ்வான்! 28 அந்த மனிதன், எவ்வளவு தீயவனாக இருந்தான், அவன், தான் எவ்வளவு மோசமானவன் என்று உணர்ந்து என்னிடம் திரும்பிவரத் தீர்மானித்தான். அவன் கடந்த காலத்தில் செய்த பாவத்தை நிறுத்தினான். எனவே அவன் வாழ்வான், மரிக்கமாட்டான்!”

29 இஸ்ரவேல் ஜனங்கள் சொன்னார்கள்: “அது செம்மையில்லை! எனது கர்த்தராகிய ஆண்டவர் அவ்வாறு இருக்கக்கூடாது!”

தேவன் சொன்னார்: “நான் நியாயமாகவே இருக்கிறேன். நீங்களே நியாயமற்றவர்கள்! 30 ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் ஒவ்வொரு மனிதரையும் அவர்கள் செய்தவற்றுக்காகவே நியாயம் தீர்க்கிறேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். “எனவே என்னிடம் திரும்பி வாருங்கள்! அந்த அருவருப்பான பொருட்கள் (விக்கிரகங்கள்) உங்களைப் பாவம் செய்யத் தூண்ட அனுமதிக்காதீர்கள்! 31 எல்லா அருவருப்பான பொருட்களையும் தூர எறியுங்கள். அவை நீங்கள் செய்தவை. அவையே உங்களது பாவங்களுக்கெல்லாம் காரணம்! உங்களது இருதயங்களையும் ஆவிகளையும் புதுப்பித்துக்கொள்ளுங்கள்! இஸ்ரவேல் ஜனங்களே, உங்களது மரணத்தை ஏன் நீங்களே வரவழைத்துக்கொள்கிறீர்கள்? 32 நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை. தயவுசெய்து திரும்பிவந்து வாழ்ந்திருங்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைக் கூறினார்.

19 தேவன் என்னிடம் கூறினார்: “இஸ்ரவேல் தலைவர்களைப்பற்றிய இந்த சோகப் பாடலை நீ பாடவேண்டும்.

“‘உன்னுடைய தாய், அங்கு
    ஆண் சிங்கங்களுடன் படுத்திருக்கும் பெண் சிங்கத்தைப் போலிருக்கிறாள்.
அவள், இளம் ஆண் சிங்கங்களுடன் படுக்கச் சென்றாள்.
    பல குட்டிகளை பெற்றெடுத்தாள்.
தனது குட்டிகளில் ஒன்று எழும்புகிறது.
    அது பலமான இளஞ்சிங்கமாக வளர்ந்திருக்கிறது.
அது தனது உணவைப் பிடிக்கக் கற்றிருக்கிறது.
    அது மனிதனைக் கொன்று தின்றது.

“‘அது கெர்ச்சிப்பதை ஜனங்கள் கேட்டனர்.
    அவர்கள் அதனை வலையில் பிடித்தனர்!
அதன் வாயில் கொக்கிகளைப் போட்டனர்:
    அதனை எகிப்துக்குக் கொண்டு போனார்கள்.

“‘அக்குட்டி தலைவனாகும் என்று தாய்ச்சிங்கம் நம்பிக்கை வைத்திருந்தது.
    ஆனால் இப்போது அது நம்பிக்கையிழந்துவிட்டது.
எனவே அது தனது அடுத்த குட்டியை எடுத்தது.
    சிங்கமாவதற்குரிய பயிற்சியைக் கொடுத்தது.
அது பெரிய சிங்கத்தோடு வேட்டைக்குப் போனது.
    அது பலமான இளம் சிங்கமாயிற்று.
அது தனது உணவைப் பிடிக்கக் கற்றது.
    அது மனிதனைக் கொன்று தின்றது.
அது அரண்மனைகளைத் தாக்கியது.
அது நகரங்களை அழித்தது.
    அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அதன் கெர்ச்சினையைக் கேட்டு பேசப் பயந்தனர்.
பிறகு அதனைச் சுற்றி வாழ்ந்த ஜனங்கள் அதற்கு ஒரு வலை அமைத்தனர்.
    அவர்கள் அதனைத் தம் வலையில் பிடித்தனர்.
அவர்கள் கொக்கிகளைப் போட்டு அதனைப் பூட்டினார்கள்.
அவர்கள் அதனை வலைக்குள் வைத்தனர்.
    எனவே அவர்கள் பாபிலோன் அரசனிடம் கொண்டு போனார்கள்.
இப்பொழுது அதன் கர்ச்சனையை
    இஸ்ரவேல் மலைப் பகுதிகளில் நீங்கள் கேட்க முடியாது,

10 “‘உனது தாய் தண்ணீர் கரையில் நடப்பட்ட
    திராட்சைக் கொடியைப் போன்றவள்.
அவளுக்கு மிகுதியான தண்ணீர் இருந்தது.
    எனவே அவள் தழைத்த திராட்சைக் கொடியாயிருந்தாள்.
11 பிறகு அவள் நிறைய கிளைகளோடு வளர்ந்தாள்.
    அந்தக் கிளைகள் கைத்தடிகளைப் போன்றிருந்தன.
    அக்கிளைகள் அரசனின் செங்கோலைப் போன்றிருந்தன.
அத்திராட்சைக் கொடி மேலும் மேலும் உயரமாக வளர்ந்தது,
    அது பல கிளைகளைப் பெற்று மேகங்களைத் தொட்டன.
12 ஆனால் அக்கொடி வேரோடு பிடுங்கப்பட்டு
    தரையில் வீசியெறியப்பட்டது.
சூடான கிழக்குக் காற்று வந்து பழங்களை காய வைத்தது.
    பலமான கிளைகள் ஒடிந்தன. அவை நெருப்பில் எறியப்பட்டன.

13 “‘இப்போது திராட்சைக் கொடி வனாந்தரத்தில் நடப்படுகிறது.
    இது வறண்ட தாகமுள்ள நிலம்.
14 பெரிய கிளையிலிருந்து நெருப்பு பரவியது.
    அந்நெருப்பு அதன் கிளைகளையும் பழங்களையும் எரித்தது.
எனவே இனிமேல் அதில் கைத்தடி இல்லை.
    அரசனின் செங்கோலும் இல்லை.’

இது மரணத்தைப்பற்றிய சோகப் பாடல். இது மரணத்தைப்பற்றிய துன்பப் பாடலாகப் பாடப்பட்டது.”

20 ஒரு நாள், சில மூப்பர்கள் (தலைவர்கள்) இஸ்ரவேலில் இருந்து, கர்த்தரிடம் ஆலோசனை கேட்க என்னிடம் வந்தனர். இது கைதியான ஏழாம் ஆண்டு ஐந்தாம் மாதம் பத்தாம் நாள். அம்மூப்பர்கள் (தலைவர்கள்) எனக்கு முன்னால் உட்கார்ந்தார்கள்.

பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மூப்பர்களிடம் (தலைவர்கள்) கூறு. அவர்களிடம், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: என்னிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறீர்களா? அது அவ்வாறானால் நான் அதனைத் தரமாட்டேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.’ அவர்களை நியாயம்தீர்க்க வேண்டுமா? மனுபுத்திரனே, நீ அவர்களை நியாயம்தீர்க்கிறாயா? அவர்கள் பிதாக்கள் செய்த அருவருப்பான பாவங்களைப்பற்றி நீ சொல்ல வேண்டும். நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நான் இஸ்ரவேலைத் தேர்ந்தெடுத்த நாளில், நான் யாக்கோபின் குடும்பத்தின்மேல் என் கையை உயர்த்தி, நான் அவர்களுக்கு முன்னால், எகிப்தில், என்னை வெளிப்படுத்தினேன். என் கையை உயர்த்தி நான் சொன்னேன்: “நானே உமது தேவனாகிய கர்த்தர்.” அந்நாளில் உன்னை எகிப்தைவிட்டு வெளியே எடுத்துச்செல்வேன் என்று வாக்களித்தேன்: நான் உங்களுக்குக் கொடுத்த நாட்டிற்கு அழைத்துச் செல்வேன். இது பல நன்மைகள் நிறைந்த நல்ல நாடு. இது எல்லா நாடுகளையும்விட அழகான நாடு!

“‘நான் இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அவர்களது அருவருப்பான விக்கிரகங்களை எறிந்து விடும்படிச் சொன்னேன். எகிப்தில் உள்ள அசுத்தமான சிலைகளோடு சேர்ந்து தீட்டுப்படுத்திக்கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். “நானே உங்களது தேவனாகிய கர்த்தர்.” ஆனால் அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பி என் சொல்லைக் கேட்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் தம் அருவருப்பான விக்கிரகங்களை எறியவில்லை. ஆனால் அவர்கள் எகிப்தியரின் அந்த ஆபாசமான சிலைகளை விடவில்லை. எனவே நான் (தேவன்) எகிப்தில் அவர்களையும் அழித்திட முடிவு செய்தேன். எனது கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணருமாறுச் செய்தேன். ஆனால் நான் அவர்களை அழிக்கவில்லை. அவர்களை எகிப்தைவிட்டு வெளியே கொண்டுவருவேன் என்று அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டில் ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன். நான் எனது நல்ல பெயரை அழிக்கவில்லை. எனவே, மற்ற ஜனங்களின் முன்பு இஸ்ரவேலை நான் அழிக்கவில்லை. 10 நான் இஸ்ரவேல் குடும்பத்தாரை எகிப்திற்கு வெளியே கொண்டுவந்தேன். நான் அவர்களை வனாந்தரத்தில் வழிநடத்தினேன். 11 பிறகு நான் எனது சட்டங்களைக் கொடுத்தேன். எனது விதிகளை எல்லாம் அவர்களிடம் சொன்னேன். ஒருவன் அந்த விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். 12 நான் அவர்களுக்கு ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களைப்பற்றியும் சொன்னேன். அவ்விடுமுறை நாட்கள் எனக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள அடையாளங்கள் ஆகும். நானே கர்த்தர். நான் அவர்களை எனக்குப் பரிசுத்தமாக்கிக் கொண்டிருந்தேன் என அவை காட்டும். எனக்குரிய சிறப்பாக அவற்றைச் செய்தேன்.

13 “‘ஆனால் இஸ்ரவேல் குடும்பத்தார் வனாந்தரத்தில் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எனது விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவை நல்ல விதிகள். ஒருவன் அவ்விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். அவர்கள் ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களை எல்லாம் முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் அந்நாட்களில் பலமுறை வேலை செய்தனர். நான் அவர்களை வனாந்தரத்திலேயே அழிக்கவேண்டுமென முடிவெடுத்தேன். என் கோபத்தின் முழு சக்தியையும் அவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். 14 ஆனால் அவர்களை நான் அழிக்கவில்லை. நான் இஸ்ரவேலரை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்ததை மற்ற நாடுகள் பார்த்தன. நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை எனவே மற்றவர்கள் முன்பு நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. 15 வனாந்தரத்தில் அந்த ஜனங்களுக்கு இன்னொரு வாக்கு கொடுத்தேன். நான் கொடுத்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வரமாட்டேன் என்று சொன்னேன். அது நன்மைகள் நிறைந்த நல்ல நாடு. எல்லா நாடுகளையும் விட அது அழகான நாடு!

16 “‘இஸ்ரவேல் ஜனங்கள் எனது விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். என் சட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் எனது ஓய்வுக்குரிய சிறப்பான நாட்களை முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் இவற்றையெல்லாம் செய்தனர். ஏனென்றால், அவர்கள் இருதயங்கள் அந்த அசுத்த விக்கிரங்களுக்குச் சொந்தமாயிருந்தன. 17 ஆனால் நான் அவர்களுக்காக வருத்தப்பட்டேன். நான் அவர்களை அழிக்கவில்லை. நான் வனாந்தரத்தில் அவர்களை முழுமையாக அழிக்கவில்லை. 18 வனாந்திரத்தில் நான் அவர்களது பிள்ளைகளோடு பேசினேன்: “உங்கள் பெற்றோர்களைப்போன்று இருக்க வேண்டாம். நீங்கள் அசுத்த சிலைகளோடு சேர்ந்து அசுத்தமாகவேண்டாம். அவர்களின் சட்டங்களைப் பின்பற்றவேண்டாம். அவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டாம். 19 நானே கர்த்தர். நானே உங்கள் தேவன். எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். எனது கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் சொன்னபடி செய்யுங்கள். 20 எனது ஓய்வுக்குரிய நாட்கள் எல்லாம் முக்கியமானவை என்று காட்டுங்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே அவை சிறப்பான அடையாளங்களாக இருப்பதை நினைவுகொள்ளுங்கள். நானே கர்த்தர். அவ்விடுமுறைகள் நானே உங்கள் தேவன் என்பதைக் காட்டும்.”

21 “‘ஆனால் அப்பிள்ளைகள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எனது கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. நான் சொன்னபடி அவர்கள் செய்யவில்லை. அவை நல்ல சட்டங்கள். ஒருவன் அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான். அவர்கள் எனது சிறப்பிற்குரிய ஓய்வு நாட்களை முக்கியமற்றவையாகக் கருதினர். எனவே அவர்களை வனாந்திரத்தில் நான் முழுமையாக அழிக்க விரும்பினேன். 22 ஆனால் நான் என்னைக் கட்டுப்படுத்தினேன். நான் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்ததை மற்ற நாட்டினர் பார்த்தனர். நான் எனது நல்ல பெயரை அழிக்க விரும்பவில்லை. எனவே மற்ற நாடுகளின் முன்னால் நான் இஸ்ரவேலரை அழிக்கவில்லை. 23 எனவே வனாந்திரத்தில் அந்த ஜனங்களுக்கு வேறொரு வாக்கு தந்தேன். அவர்களைப் பல்வேறு நாடுகளில் சிதறடிப்பேன் என்று வாக்குறுதி செய்தேன்.

24 “‘இஸ்ரவேல் ஜனங்கள் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் எனது சிறப்புக்குரிய ஓய்வு நாட்களை முக்கியமற்றதாகக் கருதினார்கள். அவர்கள் தம் தந்தையர்களுடைய அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். 25 எனவே நான் அவர்களுக்கு நன்மையற்ற சட்டங்களைக் கொடுத்தேன். வாழ்வு தராத கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்தேன். 26 நான் அவர்கள் தமது அன்பளிப்புகளால் (அவர்கள் விக்கிரகங்களுக்கு படைத்தவை) தங்களையே தீட்டுப்படுத்திக்கொள்ள இடங்கொடுத்தேன். அவர்கள் தம் முதல் குழந்தைகளைக் கூட பலியிடத் தொடங்கினார்கள். இவ்வழியில், அந்த ஜனங்களை அழிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.’ 27 எனவே இப்பொழுது, மனுபுத்திரனே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. அவர்களிடம், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: இஸ்ரவேல் ஜனங்கள் என்னைப்பற்றி கெட்டவற்றைச் சொன்னார்கள். எனக்கு எதிராகத் தீயத்திட்டங்களைப் போட்டனர். 28 ஆனால் நான் வாக்களித்த நாட்டிற்கு அவர்களை அழைத்து வந்தேன். அவர்கள் அனைத்து குன்றுகளையும் பச்சை மரங்களையும் பார்த்தனர். அவர்கள் அந்த இடங்களுக்கு தொழுகைச் செய்யச் சென்றனர். அவர்கள் தம் பலிகளையும் எனக்குக் கோப பலியையும் [a] கொண்டு சென்றனர். அவர்கள் பலிகளைக் கொடுத்தனர். அது இனிய மணத்தைக் கொடுத்தது. அந்த இடங்களில் எல்லாம் அவர்கள் பானங்களின் காணிக்கையைக் கொடுத்தனர். 29 நான் அந்த ஜனங்களிடம் அந்த மேடான இடங்களுக்கு ஏன் போகிறீர்கள் என்று கேட்டேன். இன்றும் அம்மேடான இடங்கள் அங்கு இருக்கின்றன’” என்று சொல்.

30 தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்துப் பாவங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் பேசு. ‘என் கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: உங்கள் முற் பிதாக்களைப்போன்று தீமைகளைச் செய்து நீங்கள் உங்களை அசுத்தமாக்கிக்கொண்டீர்கள். நீங்கள் வேசியைப்போன்று நடந்துகொண்டீர்கள். நீங்கள் உங்கள் முன்னோர்கள் வழிபட்ட அருவருப்பான தெய்வங்களை வணங்க என்னைவிட்டு விலகினீர்கள். 31 நீங்கள் அதேபோன்று அன்பளிப்புகளைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பொய்த் தெய்வங்களுக்குப் பலியாக நெருப்பில் போடுகிறீர்கள். இன்றுவரை நீங்கள் அசுத்த விக்கிரகங்களோடு சேர்ந்து உங்களை தீட்டாக்கிக்கொண்டீர்கள்! நான் உங்களை என்னிடம் ஆலோசனை கேட்க வரவிடவேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? நானே ஆண்டவரும் கர்த்தருமாயிருக்கிறேன். என் உயிரின் மூலம் நான் வாக்களிக்கிறேன், நான் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லமாட்டேன். உங்களுக்கு ஆலோசனை தரமாட்டேன்! 32 நீங்கள் வேறு நாட்டினரைப்போன்று இருப்போம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பிற நாட்டினரைப்போன்று வாழ்கிறீர்கள். நீங்கள் மரத்துண்டுகளையும் கல்லையும் (சிலைகள்) சேவிக்கிறீர்கள்.’”

33 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரைக்கொண்டு நான் வாக்களிக்கிறேன், நான் உங்களை அரசனைப்போன்று ஆள்வேன். ஆனால் நான் என் வல்லமை வாய்ந்த கையை உயர்த்தி உங்களைத் தண்டிப்பேன். நான் உங்களுக்கு எதிரான எனது கோபத்தைக் காட்டுவேன்! 34 உங்களை நான் சிதறடித்த நாடுகளிலிருந்து வெளியே கொண்டு வருவேன். நான் உங்களை ஒன்று சேர்ப்பேன். இந்நாடுகளிலிருந்து உங்களை மீண்டும் கொண்டு வருவேன். ஆனால், நான் எனது வல்லமை வாய்ந்த கரத்தை உங்களுக்கு எதிராக உயர்த்தி உங்களைத் தண்டிப்பேன். உங்களுக்கு எதிரான எனது கோபத்தைக் காட்டுவேன்! 35 நான் உங்களை முன்புபோல் வனாந்திரத்தில் வழிநடத்துவேன். ஆனால் இது மற்ற நாட்டினர் வாழும் இடம். நாம் நேருக்கு நேராக நிற்போம். நான் உங்களை நியாயந்தீர்ப்பேன். 36 நான் எகிப்தின் அருகில் உள்ள வனாந்திரத்தில் உங்கள் முன்னோர்களை நியாயந்தீர்த்தது போன்று உங்களை நியாயந்தீர்ப்பேன்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

37 “நான் உடன்படிக்கையின் உங்கள் குற்றங்களை நியாயம் தீர்த்து தண்டிப்பேன். 38 நான் எனக்கு எதிராகத் திரும்பி பாவம் செய்தவர்களை விலக்குவேன். நான் அவர்களை உங்கள் தாய்நாட்டிலிருந்து விலக்குவேன். அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”

39 இப்பொழுது, இஸ்ரவேல் குடும்பத்தினரே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “எவராவது தம் அசுத்த விக்கிரகங்களை தொழுதுகொள்ளவேண்டுமானால், அவன் போய் தொழுதுகொள்ளட்டும். ஆனால் பிறகு, என்னிடமிருந்து ஆலோசனை கிடைக்கும் என்று எண்ண வேண்டாம்! இனிமேலும் எனது நாமத்தை உங்கள் அன்பளிப்புகளாலும், உங்கள் விக்கிரகங்களாலும் நீங்கள் தீட்டுப்படுத்த முடியாது.”

40 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “ஜனங்கள் எனது பரிசுத்தமான மலைகளுக்கு இஸ்ரவேலிலுள்ள உயரமான மலையில் எனக்குச் சேவை செய்ய வரவேண்டும்! இஸ்ரவேலின் எல்லா வம்சத்தாருமாகிய அனைவரும் உங்கள் நிலத்தில் (தேசத்தில்) இருப்பீர்கள். என்னிடம் வந்து ஆலோசனை கேட்கக்கூடிய இடம் அதுதான். நீங்கள் அந்த இடத்திற்கு உங்கள் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு வரவேண்டும். உங்கள் விளைச்சலின் முதல் பகுதியை அந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவேண்டும். உங்கள் பரிசுத்த அன்பளிப்புகள் அனைத்தையும் அந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவேண்டும். 41 பிறகு நான் உங்கள் பலிகளின் இனிய மணத்தால் பிரியமாய் இருப்பேன். நான் உங்களைத் திரும்ப அழைத்து வரும்போது அது நிகழும். நான் உங்களைப் பல தேசங்களில் சிதற அடித்திருந்தேன். ஆனால் நான் உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் உங்களை எனது சிறப்புக்குரிய ஜனங்களாக மீண்டும் செய்வேன். அந்நாடுகள் எல்லாம் இதனைப் பார்க்கும். 42 பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்குக் கொண்டுவரும்போது இதனை அறிவீர்கள். உங்கள் முற்பிதாக்களிடம் அந்த நாட்டையே உங்களுக்குத் தருவதாக வாக்களித்திருந்தேன். 43 அந்நாட்டில் உங்களை அசுத்தமாக்கிய நீங்கள் செய்த பாவங்களை நினைப்பீர்கள். நீங்கள் உங்கள் தீய வழிகளினிமித்தம் வெட்கப்பட்டுப்போவீர்கள். 44 இஸ்ரவேல் குடும்பத்தாரே, நீங்கள் பல கெட்டக் காரியங்களைச் செய்தீர்கள். அத்தீயக்காரியங்களால் நீங்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எனது நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ள உங்களுக்கேற்ற அத்தண்டனைகளை நான் தரவில்லை. பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.”

45 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 46 “மனுபுத்திரனே, யூதாவின் தென் பகுதியிலுள்ள நெகேவைப் பார். நெகேவ் காட்டிற்கு [b] எதிராகப் பேசு. 47 நெகேவ்காட்டிடம் சொல், ‘கர்த்தருடைய வார்த்தையைக் கேள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: பார், உன் காட்டில் நெருப்பிட நான் தயாராக இருக்கிறேன். நெருப்பானது எல்லா பச்சை மரங்களையும் எல்லா காய்ந்த மரங்களையும் அழிக்கும். எரியும் ஜூவாலையை அணைக்கமுடியாது. தெற்கிலிருந்து வடக்கு வரையுள்ள அனைத்து நிலமும் எரியும். 48 பிறகு எல்லா ஜனங்களும் கர்த்தராகிய நானே நெருப்பு வைத்தேன் என அறிவார்கள். அந்நெருப்பு அணைக்கப்படாது!’”

49 பிறகு நான் (எசேக்கியேல்) சொன்னேன், “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே! நான் இவற்றைச் சொன்னால், பிறகு ஜனங்கள் நான் கதைகளை மட்டும் சொல்வதாக நினைப்பார்கள். இது உண்மையில் நிகழும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள்!”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center