Beginning
ரேகாபியர் வம்சத்தின் நல்ல எடுத்துக்காட்டு
35 யூதாவின் அரசனாக யோயாக்கீம் இருந்தபோது, எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. யோயாக்கீம் யோசியாவின் மகன். கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான். 2 “எரேமியா ரேகாபியரது வீட்டுக்குப்போ. கர்த்தருடைய ஆலயத்தின் பக்கத்து அறைகள் ஒன்றுக்கு அவர்கள் வருமாறு வரவழை. அவர்கள் குடிக்கத் திராட்சைரசத்தைக் கொடு.”
3 எனவே நான் (எரேமியா) யசினியாவை அழைக்கப்போனேன். யசினியா எரேமியா என்பவனின் மகன். அந்த எரேமியா அபசினியாவின் மகன். நான் யசினியாவின் அனைத்து சகோதரர்களையும் மகன்களையும் வரவழைத்தேன். நான் ரேகாபியரது வம்சத்தார் அனைவரையும் வரவழைத்தேன். 4 கர்த்தருடைய ஆலயத்திற்கு ரேகாபியருடைய குடும்பத்தாரை அழைத்து வந்தேன். அனானின் மகன்களது அறை என்று அழைக்கப்படும் அறைக்குள் நாங்கள் சென்றோம். அனான் இத்தலியாவின் மகன். அனான் தேவனுடைய மனிதனாக இருந்தான். அந்த அறை யூதாவின் இளவரசன் தங்கும் அறைக்கு அடுத்ததாக இருந்தது. சல்லூமின் மகனான மாசெயாவின் அறையின் மேலே உள்ளது. மாசெயா ஆலயத்தின் வாசல் காவலன். 5 பிறகு நான் (எரேமியா) சில கோப்பைகளைத் திராட்சை ரசத்தால் ரேகாபியர் வம்சத்தாருக்கு முன்னால் நிரப்பினேன். நான் அவர்களிடம், “கொஞ்சம் திராட்சைரசம் குடியுங்கள்” என்று சொன்னேன்.
6 ஆனால் ரேகாபியர் ஜனங்களோ, “நாங்கள் எப்பொழுதும் திராட்சைரசம் குடிப்பதில்லை. இதனை நாங்கள் எப்பொழுதும் குடிப்பதில்லை. ஏனென்றால், எங்கள் முற்பிதாவான ரேகாபின் மகனான யோனதாப் இந்தக் கட்டளையைக் கொடுத்தார். ‘நீயும் உனது சந்ததியாரும் என்றைக்கும் திராட்சை ரசத்தைக் குடிக்க வேண்டாம். 7 நீங்கள் எப்பொழுதும் வீடுகளைக் கட்ட வேண்டாம். விதைகளை நடவேண்டாம், அல்லது திராட்சை கொடிகளைப் பயிரிடவேண்டாம். நீங்கள் இக்காரியங்கள் எதுவும் செய்யவேண்டாம். நீங்கள் கூடாரங்களில் மட்டுமே வாழ வேண்டும். நீங்கள் இவ்வாறு செய்தால் பிறகு நீங்கள் நீண்ட காலம் இடம் விட்டு இடம் போய் வாழ்வீர்கள்.’ 8 எனவே, ரேகாபியராகிய நாங்கள் எங்கள் முற்பிதாவான யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நாங்கள் என்றைக்கும் திராட்சை ரசம் குடிக்கமாட்டோம். எங்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் என்றென்றும் திராட்சை ரசம் குடிக்கமாட்டார்கள். 9 நாங்கள் வாழ்வதற்காக வீடு கட்டவில்லை. நாங்கள் திராட்சைத் தோட்டங்களையோ வயல்களையோ சொந்தமாக்கியதில்லை. நாங்கள் என்றென்றும் அறுவடை செய்ததுமில்லை. 10 நாங்கள் கூடாரங்களில் வாழ்ந்திருக்கிறோம். எங்கள் முற்பிதா யோனதாப்பின் கட்டளையின்படி கீழ்ப்படிந்திருக்கிறோம். 11 ஆனால் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் யூதா நாட்டை தாக்கியபோது, நாங்கள் எருசலேமிற்குள் சென்றோம். நாங்கள் எங்களுக்குள், ‘வாருங்கள், நாம் எருசலேம் நகருக்குள் நுழைவோம். எனவே, நாம் பாபிலோனியரின் படையிடமிருந்தும் அராமியரின் படையிடமிருந்தும் தப்பிக்கலாம்’ என்று சொன்னோம். எனவே நாங்கள் எருசலேமில் தங்கியிருக்கிறோம்.”
12 பிறகு எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. 13 “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறது: எரேமியா, யூதாவின் ஆண்களிடமும் எருசலேம் ஜனங்களிடமும் போய் இந்த வார்த்தையைச் சொல். ‘ஜனங்களாகிய நீங்கள் ஒரு பாடம் கற்றுக்கொண்டு எனது செய்திக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ இந்த வார்த்தை கர்த்தரிடம் இருந்து வருகிறது. 14 ‘ரேகாப்பின் மகனான யோனதாப் அவரது மகன்களிடம் திராட்சைரசத்தைக் குடிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். அக்கட்டளை கீழ்ப்படியப்பட்டிருக்கிறது. இன்றுவரை, யோனாதாபின் சந்ததியார் முற்பிதாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்கின்றனர். அவர்கள் திராட்சைரசம் குடிப்பதில்லை. ஆனால் நானே கர்த்தர். நான் யூதாவின் ஜனங்களாகிய உங்களுக்குச் செய்தியை மீண்டும் மீண்டும் கொடுத்திருக்கிறேன். ஆனால் நீ எனக்குக் கீழ்ப்படியவில்லை. 15 இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களாகிய உங்களிடம் எனது வேலைக்காரர்களான தீர்க்கதரிசிகளை அனுப்பினேன். நான் அவர்களை மீண்டும் மீண்டும் அனுப்பினேன். அத்தீர்க்கதரிசிகள் உங்களிடம், “இஸ்ரவேல் மற்றும் யூதாவிலுள்ள ஒவ்வொருவரும் தீயவை செய்வதை நிறுத்தவேண்டும். நீங்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும். அந்நிய தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். அவர்களைத் தொழுதுகொள்ளவோ சேவை செய்யவோ வேண்டாம். நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தால் பிறகு நீங்கள், நான் உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டில் வாழ்வீர்கள்” ஆனால் ஜனங்களாகிய நீங்கள் எனது வார்த்தையை கவனிக்கவில்லை. 16 யோனதாப்பின் சந்ததியார் தங்கள் முற்பிதா கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். ஆனால் யூதாவின் ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை’” என்றார்.
17 எனவே, “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். ‘யூதா மற்றும் எருசலேமிற்குப் பல தீமைகள் ஏற்படும் என்று சொன்னேன். நான் விரைவில் அத்தீமைகள் ஏற்படும்படிச் செய்வேன். நான் அந்த ஜனங்களிடம் பேசினேன். ஆனால், அவர்கள் கவனிக்க மறுத்தனர். நான் அவர்களை அழைத்தேன். ஆனால் அவர்கள் எனக்குப் பதில் சொல்லவில்லை.’”
18 பிறகு எரேமியா ரேகாபியருடைய வம்சத்து ஜனங்களிடம் கூறினான். “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், ‘நீங்கள் உங்களது முற்பிதா யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தீர்கள். யோனாதாபின் அனைத்து போதனைகளையும் பின்பற்றினீர்கள். அவன் கட்டளையிட்ட அனைத்தையும் செய்தீர்கள்.’ 19 எனவே, இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘ரேகாபின் மகனான யோனதாபின் சந்ததி எனக்கு சேவைசெய்ய எப்பொழுதும் இருக்கும்.’”
எரேமியாவின் புத்தகச்சுருளை யோயாக்கீம் எரிக்கிறான்
36 கர்த்தரிடமிருந்து வார்த்தை எரேமியாவிற்கு வந்தது. யூதாவின் அரசனாக யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆண்ட நான்காம் ஆட்சி ஆண்டில் இது நடந்தது. கர்த்தரிடமிருந்து வந்த செய்தி இதுதான்: 2 “எரேமியா, ஒரு புத்தச்சுருளை எடு. நான் உன்னிடம் சொன்ன அனைத்து செய்திகளையும் அதில் எழுது. நான் உன்னிடம் இஸ்ரவேல் மற்றும் யூதா மற்றும் அனைத்து தேசங்களைப்பற்றிக் கூறியிருக்கிறேன். யோசியா அரசனாக இருந்த காலம் முதல் இன்றுவரை நான் உனக்குச் சொன்ன அனைத்தையும் எழுது. 3 நான் அவர்களுக்காக செய்ய திட்டமிட்டுக்கொண்டிருப்பதை ஒரு வேளை யூதா ஜனங்கள் கேட்கலாம். அப்போது ஒவ்வொருவனும் தன்னுடைய தீயச் செயல்களை நிறுத்திவிடலாம். அவர்கள் அவ்வாறு செய்தால், நான் அவர்கள் ஏற்கனவே செய்த பாவங்களை மன்னிப்பேன்.”
4 எனவே எரேமியா, பாருக் என்ற பெயருள்ளவனை அழைத்தான். பாருக் நேரியாவின் மகன். எரேமியா கர்த்தர் கூறிய வார்த்தையைச் சொன்னான். எரேமியா பேசிக்கொண்டிருக்கும் போது, பாருக் புத்தகச்சுருளில் அச்செய்திகளை எழுதினான். 5 பிறகு எரேமியா பாருக்கிடம், “என்னால் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகமுடியாது. அங்கே நான் போவதற்கு அனுமதியில்லை. 6 எனவே, நீ கர்த்தருடைய ஆலயத்திற்குள் போக வேண்டுமென்று விரும்புகிறேன். உபவாச நாளில் நீ அங்கே போ. புத்தகச்சுருளில் உள்ளவற்றை ஜனங்களுக்கு வாசி. கர்த்தரிடமிருந்து கேட்ட செய்தியை நான் சொல்ல நீ புத்தகச்சுருளில் எழுதியவற்றை வாசி. தாங்கள் வாழும் பட்டணங்களிலிருந்து எருசலேமிற்கு வந்த யூதாவின் அனைத்து ஜனங்களுக்கும் அச்செய்தியை வாசி. 7 ஒரு வேளை அந்த ஜனங்கள் கர்த்தர் தங்களுக்கு உதவ வேண்டுமென கேட்பார்கள். ஒரு வேளை ஒவ்வொருவனும் தன்னுடைய தீய செயல் செய்வதை நிறுத்திவிடலாம். கர்த்தர் அந்த ஜனங்களுடன் கோபமுள்ளவராக இருக்கிறார்” என்பதை அறிவித்திருக்கிறார். 8 எனவே, நேரியாவின் மகனான பாருக் தீர்க்கதரிசியான எரேமியா சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான். பாருக், கர்த்தருடைய செய்தி எழுதப்பட்டிருந்த புத்தகச்சுருளை உரக்க வாசித்தான். அவன் அதனை கர்த்தருடைய ஆலயத்தில் வாசித்தான்.
9 யோயாக்கீம் அரசனான ஐந்தாம் ஆண்டின் ஒன்பதாவது மாதத்தில் ஒரு உபவாசம் அறிவிக்கப்பட்டது. எருசலேம் நகரத்தில் வாழ்கின்ற அனைத்து ஜனங்களும் யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமிற்கு வந்த ஒவ்வொருவரும் கர்த்தருக்கு முன்னால் உபவாசம் இருக்கவேண்டும். 10 அப்போது, எரேமியாவின் வார்த்தைகள் உள்ள புத்தகச்சுருளைப் பாருக் வாசித்தான். அவன் புத்தகச்சுருளை கர்த்தருடைய ஆலயத்தில் வாசித்தான். கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த எல்லா ஜனங்களின் முன்பும் பாருக் புத்தகச்சுருளை வாசித்தான். பாருக், புத்தகச்சுருளில் உள்ளவற்றை வாசிக்கும்போது மேற்பிரகாரத்திலுள்ள கெமரியாவின் அறையில் இருந்தான். அந்த அறை ஆலயத்தின் புதிய வாசல் நுழைவில் இருந்தது. கெமரியா சாப்பானின் மகன். கெமரியா ஆலயத்தில் எழுத்தாளனாக இருந்தான்.
11 மிகாயா என்ற பெயருடைய ஒருவன் கர்த்தரிடமுள்ள எல்லாச் செய்திகளையும் புத்தகச்சுருளில் பாருக் வாசிப்பதிலிருந்து கேட்டான். மிகாயா, கெமரியாவின் மகன். கெமரியா, சாப்பானின் மகன். 12 மிகாயா புத்தகச்சுருளிலுள்ள செய்திகளை கேட்டதும் அரசனின் அரண்மனையில் உள்ள செயலாளனின் அறைக்குச் சென்றான். அரசனின் அரண்மனையில் எல்லா அரச அதிகாரிகளும் உட்கார்ந்திருந்தனர். அந்த அதிகாரிகளின் பெயர்களாவன: செயலாளனாகிய எலிசாமா, செமாயாவின் மகனாகிய தெலாயா, அக்போரின் மகனான எல்நாத்தான், சாப்பானின் மகனான கெமரியா, அனனியாவின் மகனான சிதேக்கியா, மற்றும் பல பிரபுக்களும் அங்கே இருந்தனர். 13 மிகாயா, பாருக் புத்தகச்சுருளில் வாசித்து கேட்ட அனைத்தையும் அதிகாரிகளிடம் சொன்னான்.
14 பிறகு அனைத்து அதிகாரிகளும் யெகுதி என்னும் பெயருள்ள ஒருவனை பாருக்கிடம் அனுப்பினர். யெகுதி நெத்தானியாவின் மகன். நெத்தானியா செலேமியாவின் மகன். செலேமியா கூஷியின் மகன். யெகுதி பாருக்கிடம், “நீ வாசித்த புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டு என்னுடன் வா” என்றான்.
நேரியாவின் மகனான பாருக் புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டு யெகுதியோடு அதிகாரிகளிடம் சென்றான்.
15 பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம், “உட்கார், எங்களிடம் புத்தகச்சுருளை வாசி” என்றனர். எனவே, பாருக் அவர்களுக்குப் புத்தகச்சுருளை வாசித்தான்.
16 அந்த அரச அதிகாரிகள் புத்தகச்சுருளில் உள்ள அனைத்து செய்திகளையும் கேட்டனர். பிறகு அவர்கள் பயந்தனர். ஒருவரையொருவர் பார்த்தனர். அவர்கள் பாருக்கிடம், “நாங்கள் புத்தகச்சுருளில் உள்ள செய்திகளை அரசன் யோயாக்கீமிடம் கூறவேண்டும்” என்றனர். 17 பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். அவர்கள், “பாருக், எங்களிடம் சொல். புத்தகச்சுருளில் எழுதப்பட்டுள்ள செய்திகளை நீ எங்கிருந்து பெற்றாய்? எரேமியா சொன்னவற்றை நீ எழுதினாயா?” என்று கேட்டனர்.
18 பாருக், “ஆம், எரேமியா சொன்னான். நான் மையால் இப்புத்தகச்சுருளில் எழுதினேன்” என்று பதில் சொன்னான்.
19 பிறகு அரச அதிகாரிகள் பாருக்கிடம், “நீயும் எரேமியாவும் போய் ஒளிந்துக்கொள்ளுங்கள். எங்கே ஒளிந்திருக்கிறீர்கள் என்று யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றனர்.
20 பிறகு அரச அதிகாரிகள் அப்புத்தகச்சுருளை எழுத்தாளனான எலிசாமாவின் அறையிலே வைத்தனர். அவர்கள் அரசனான யோயாக்கீமிடம் சென்றனர். அவர்கள் அவனிடம் புத்தகச்சுருளைப் பற்றிச் சொன்னார்கள்.
21 எனவே, அரசன் யோயாக்கீம் யெகுதியை அனுப்பி புத்தகச்சுருளை வரவழைத்தான். யெகுதி எழுத்தாளனான எலிசாமாவின் அறையிலிருந்து புத்தகச்சுருளைக் கொண்டுவந்தான். பிறகு யெகுதி அரசனிடம் புத்தகச்சுருளை வாசித்தான். அரசனைச்சுற்றி அனைத்து அதிகாரிகளும் நின்றனர். 22 இது நடந்த காலம் ஒன்பதாவது மாதம். எனவே, அரசன் யோயாக்கீம் குளிர்காலத்துக்கான அறையில் உட்கார்ந்திருந்தான். அரசனுக்கு முன்னால் நெருப்புக் குண்டத்தில் நெருப்பு எரிந்துக்கொண்டிருந்தது. 23 யெகுதி புத்தகச்சுருளை வாசிக்கத் தொடங்கினான். அவன் இரண்டு மூன்று பத்திகள் வாசித்ததும் அரசனான யோயாக்கீம் புத்தகச்சுருளைப் பிடுங்கினான். பிறகு அவன் அந்தப் பத்திகள் எழுதப்பட்டிருந்த புத்தகச்சுருளைச் சிறிய கத்தியால் வெட்டி நெருப்பிற்குள் போட்டான். இறுதியாக புத்தகச்சுருள் முழுவதும் நெருப்பில் எரிந்துப்போயிற்று. 24 அரசன் யோயாக்கீமும் அவனது வேலைக்காரர்களும் புத்தகச்சுருளில் உள்ளவற்றை வாசிக்கக் கேட்டபோது அவர்கள் பயப்படவில்லை. அவர்கள் தாங்கள் செய்த தப்புக்காக வருத்தத்தைக் காட்ட தங்கள் ஆடைகளைக் கிழிக்கவில்லை.
25 எல்நாத்தன், தெலாயா மற்றும் கெமரியா அரசன் யோயாக்கீமிடம் புத்தகச்சுருளை எரிக்க வேண்டாம் என்று சொல்ல முயன்றனர். ஆனால் அரசன் அவர்கள் சொன்னதைக் கேட்கவில்லை. 26 யோயாக்கீம் அரசன் சிலரிடம் எழுத்தாளனான பாருக்கையும் தீர்க்கதரிசி எரேமியாவையும் கைது செய்யும்படிக் கட்டளையிட்டான். அவர்கள், அரசனின் மகன் யெரமெயேல், அஸ்ரியேலின் மகன் செராயா, அப்தெயேலின் மகனான செலேமியாவும் ஆவார்கள். ஆனால் அவர்களால் பாருக்கையும் எரேமியாவையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஏனென்றால், கர்த்தர் அவர்களை மறைத்துவிட்டார்.
27 கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்குச் செய்தி வந்தது. இது, கர்த்தரிடமிருந்து வந்தச் செய்தி முழுவதும் எழுதப்பட்ட புத்தகச்சுருள் அரசன் யோயாக்கீமால் எரிக்கப்பட்டப்பிறகு வந்தது. எரேமியா பாருக்கிடம் பேசியிருந்தான். பாருக் அவற்றைப் புத்தகச்சுருளில் எழுதியிருந்தான். கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்தச் செய்தி இதுதான்:
28 “எரேமியா, இன்னொரு புத்தகச்சுருளை எடு. முதல் புத்தகச்சுருளில் இருந்த அனைத்து செய்திகளையும் இதில் எழுது. அந்தச் சுருள் அரசன் யோயாக்கீமால் எரிக்கப்பட்டது. 29 எரேமியா, யூதா அரசன் யோயாக்கீமிடம் இவற்றையும் சொல், கர்த்தர் சொல்கிறது இதுதான்: ‘யோயாக்கீம், அப்புத்தகச்சுருளை எரித்தாய். நீ, “பாபிலோன் அரசன் உறுதியாக வந்து இந்நாட்டை அழிப்பான் என்று எரேமியா ஏன் எழுதினான்? பாபிலோன் அரசன் இத்தேசத்திலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழிப்பான் என்று ஏன் அவன் சொல்கிறான்?” என்று சொன்னாய். 30 எனவே, யூதாவின் அரசனான யோயாக்கீம் பற்றி கர்த்தர் சொன்னது இதுதான். யோயாக்கீமின் சந்ததியார் தாவீதின் சிங்காசனத்தில் உட்காரமாட்டார்கள். யோயாக்கீம் மரிக்கும்போது, அவன் அரசனுக்குரிய அடக்க ஆராதனையைப் பெறமாட்டான். ஆனால் அவனது உடல் தரையில் வீசி எறியப்படும். அவனது உடல் பகலின் வெப்பத்திலும் இரவில் குளிரிலும் கிடக்கும்படி விடப்படும். 31 கர்த்தராகிய நான், யோயாக்கீமையும் அவனது பிள்ளைகளையும் தண்டிப்பேன். அவனது அதிகாரிகளையும் நான் தண்டிப்பேன். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் அவர்கள் துன்மார்க்கர்கள். பயங்கரமான பேரழிவு அவர்களுக்குக் கொண்டுவருவதாக நான் வாக்குறுதி செய்திருக்கிறேன். எருசலேமில் வாழ்கிற ஜனங்களுக்கும் யூதாவில் வாழ்கிற ஜனங்களுக்கும் வரும். நான் வாக்குறுதி அளித்தபடி அவர்களுக்கு அனைத்து தீயவற்றையும் கொண்டு வருவேன். ஏனென்றால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை.’”
32 பிறகு எரேமியா இன்னொரு புத்தகச்சுருளை எடுத்தான். அவன் அதனை எழுத்தாளன் நேரியாவின் மகனான பாருக்கிடம் கொடுத்தான். எரேமியா சொன்னபடி, பாருக் புத்தகச்சுருளில் எழுதினான். அதில் அரசன் யோயாக்கீமால் நெருப்பில் எரிக்கப்பட்ட அதே செய்திகளை எழுதினான். அச்செய்திகளைப் போன்ற பல்வேறு வார்த்தைகளும் இரண்டாவது புத்தகச்சுருளில் சேர்க்கப்பட்டன.
எரேமியா சிறையில் போடப்படுகிறான்
37 நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அரசன். நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் மகன் கோனியாவின் இடத்தில் சிதேக்கியாவை யூதாவின் அரசனாக நியமித்தான். சிதேக்கியா யோசியா அரசனின் மகன். 2 ஆனால் சிதேக்கியா, தீர்க்கதரிசி எரேமியாவிற்குப் பிரசங்கத்திற்காக கர்த்தர் கொடுத்திருந்த செய்திகளைப் பொருட்படுத்தவில்லை. சிதேக்கியாவின் வேலைக்காரர்களும் யூதாவின் ஜனங்களும் கர்த்தருடைய செய்திகளுக்கு கவனம் செலுத்தவில்லை.
3 சிதேக்கியா அரசன், யூகால் என்ற பெயருடையவனையும் ஆசாரியன் செப்பனியாவையும் ஒரு செய்தியுடன் எரேமியாவிடம் அனுப்பினான். யூகால் செலேமியாவின் மகன். ஆசாரியன் செப்பனியா, மாசெயாவின் மகன். அவர்கள் எரேமியாவிற்குக் கொண்டுவந்த செய்தி: “எரேமியா, எங்களுக்காக நமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்.”
4 (அந்நேரத்தில், எரேமியாவைச் சிறையில் போட்டிருக்கவில்லை. எனவே அவன் விரும்பிய இடத்துக்குப் போகச் சுதந்திரம் உடையவனாக இருந்தான். 5 அதே நேரத்தில் பார்வோனின் படையானது எகிப்திலிருந்து யூதாவிற்குப் புறப்பட்டது. எருசலேமைச் சுற்றி அதைத் தோற்கடிப்பதற்காக பாபிலோனியாவின் படையானது முற்றுகையிட்டது. பிறகு, அவர்கள் எகிப்திலிருந்து படை புறப்பட்டு வருவதாக கேள்விப்பட்டனர். எனவே, பாபிலோனியப் படை எருசலேமைவிட்டுப் போய் எகிப்திலிருந்து வந்த படையோடு சண்டையிடப் போனது.)
6 தீர்க்கதரிசி எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. 7 “இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வது: ‘யூகாலே, செப்பனியா, யூதாவின் அரசனான சிதேக்கியா என்னிடம் சில கேள்விகள் கேட்க உன்னை அனுப்பியதை நான் அறிவேன். அரசன் சிதேக்கியாவிடம் இதைக் கூறு. பாபிலோனியன் படைக்கு எதிராக உனக்கு உதவ பார்வோனின் படை எகிப்திலிருந்து வந்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பார்வோனின் படை திரும்பிப் போகும். 8 அதற்குப் பிறகு பாபிலோனின் படை இங்கே திரும்பி வரும். அவர்கள் எருசலேமைத் தாக்குவார்கள். பிறகு பாபிலோனிலிருந்து வந்தப் படை எருசலேமைப் பிடித்து நெருப்பிடுவார்கள்.’ 9 இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘எருசலேம் ஜனங்களே உங்களை முட்டாள்களாக்காதீர்கள். நீங்கள் உங்களுக்குள் “பாபிலோனின் படை உறுதியாக நம்மைத் தனியேவிடும்” என்று சொல்ல வேண்டாம். அவர்கள் வேறிடத்திற்கு போகமாட்டார்கள். 10 எருசலேம் ஜனங்களே உங்களைத் தாக்கும் பாபிலோனியப் படை முழுவதையும் நீங்கள் தோற்கடித்தாலும் அங்கே கூடாரத்தில் காயப்பட்டவர்கள் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். அந்தச் சில காயப்பட்டவர்களும்கூடத் தம் கூடாரத்தை விட்டு வெளியே வந்து எருசலேமை எரித்துப்போடுவார்கள்.’”
11 பாபிலோனியப் படை எகிப்தின் பார்வோனின் படையோடு போரிடச் சென்றபோது, 12 எரேமியா எருசலேமிலிருந்து பென்யமீன் தேசத்திற்குப் பயணம் செய்ய விரும்பினான். அங்கே அவன் தனது குடும்பத்திற்குரிய சொத்தைப் பங்கு வைப்பதற்காகப் போய்க்கொண்டிருந்தான். 13 ஆனால் எரேமியா எருசலேமின் பென்யமீன் வாசலுக்குப் போனபோது காவலர்களின் தலைவன் அவனைக் கைது செய்தான். தளபதியின் பெயர் யெரியா. யெரியா செலேமியாவின் மகன். செலேமியா அனானியாவின் மகன். எனவே தளபதி யெரியா எரேமியாவைக் கைது செய்தான். அவன், “எரேமியா நீ பாபிலோனியர் பக்கம் சேரும்படி விலகிக்கொண்டிருக்கிறாய்” என்று சொன்னான்.
14 எரேமியா யெரியாவிடம், “அது உண்மையன்று. பாபிலோனியரிடம் சேருவதற்காக நான் விலகிப் போகவில்லை” என்றான். ஆனால் யெரியா எரேமியா சொல்வதைக் கேட்க மறுத்தான். யெரியா எரேமியாவைக் கைது செய்து, எருசலேமில் உள்ள அரச அதிகாரிகளிடம் கொண்டு போனான். 15 அந்த அதிகாரிகள் எரேமியாவிடம் மிகவும் கோபமாக இருந்தனர். எரேமியாவை அடிக்கும்படி அவர்கள் கட்டளை கொடுத்தனர். பிறகு அவர்கள் எரேமியாவைச் சிறைக்குள்போட்டனர். சிறையானது யோனத்தான் என்ற பெயருடையவன் வீட்டில் இருந்தது. யூதாவின் அரசனுக்கு யோனத்தான் ஒரு எழுத்தாளனாக இருந்தான். யோனத்தான் வீடு சிறையாக ஆக்கப்பட்டிருந்தது. 16 அந்த ஜனங்கள் எரேமியாவை யோனத்தானின் வீட்டின் அடியிலுள்ள பள்ளத்திலே போட்டனர். அந்த அறை ஆழமான பள்ளத்திலே இருந்தது. எரேமியா அங்கே நீண்ட காலம் இருந்தான்.
17 பிறகு சிதேக்கியா அரசன் ஒரு ஆளை அனுப்பி அரசனின் வீட்டிற்கு எரேமியாவை அழைத்து வரச் செய்தான். சிதேக்கியா எரேமியாவிடம், தனியாக பேசினான். அவன் எரேமியாவிடம், “கர்த்தரிடமிருந்து ஏதாவது வார்த்தை வந்திருக்கிறதா?” என்று கேட்டான்.
18 எரேமியா, “ஆம். கர்த்தரிடமிருந்து ஒரு வார்த்தை வந்திருக்கிறது. சிதேக்கியா, பாபிலோன் அரசனிடம் நீ கொடுக்கப்படுவாய்” என்று பதில் சொன்னான். பிறகு எரேமியா அரசன் சிதேக்கியாவிடம், “நான் என்ன தவறு செய்தேன்? உனக்கு எதிராக நான் என்ன குற்றம் செய்தேன்? அல்லது உனது அதிகாரிகளுக்கு அல்லது எருசலேம் ஜனங்களுக்கு எதிராக என்ன குற்றம் செய்தேன்? என்னை எதற்காகச் சிறையிலிட்டாய்? 19 சிதேக்கியா அரசனே, உனது தீர்க்கதரிசிகள் இப்பொழுது எங்கே? அந்தத் தீர்க்கதரிசிகள் உன்னிடம் பொய்யைச் சொன்னார்கள். அவர்கள், ‘பாபிலோன் அரசன் உன்னையோ இந்த யூதா தேசத்தையோ தாக்கமாட்டான்’ என்றார்கள். 20 ஆனால், இப்பொழுது யூதாவின் அரசனே நான் சொல்வதைக் கேள். என் விண்ணப்பத்தை தயவுசெய்து கேள். இதுதான் நான் கேட்பது. என்னைத் திரும்ப எழுத்தாளனான யோனாத்தானின் வீட்டிற்கு அனுப்பவேண்டாம். நீர் என்னை அங்கு அனுப்பினால் நான் அங்கே மரிப்பேன்” என்று சொன்னான்.
21 எனவே சிதேக்கியா அரசன் எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே வைக்குமாறு கட்டளையிட்டான். அவனுக்குத் தெருவிலே அப்பஞ்சுடுகிறவர்களிடமிருந்து அப்பத்தை வாங்கிக் கொடுக்கச் சொன்னான். நகரத்திலே அப்பம் இருக்கும்வரை எரேமியாவிற்கு வாங்கிக் கொடுக்கப்பட்டது. எனவே அப்படியே எரேமியா காவற் சாலையின் முற்றத்திலே இருந்தான்.
2008 by World Bible Translation Center