Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எரேமியா 4-6

“இஸ்ரவேலே, நீ திரும்பி வர வேண்டுமென்று விரும்பினால் என்னிடம் திரும்பி வா.
    உனது விக்கிரகங்களைத் தூர எறி.
என்னை விட்டுத் தூரமாக அலையாதே.
நீ அவற்றைச் செய்தால்,
    பிறகு நீ எனது நாமத்தைப் பயன்படுத்தி, வாக்குகொடுக்க வல்லமை பெறுவாய்,
‘கர்த்தர் வாழ்கிறதுபோல’
    என்று நீ சொல்லும் வல்லமை பெறுவாய்.
அந்த வார்த்தைகளை உண்மையோடும்,
    நியாயத்தோடும், நீதியோடும், பயன்படுத்தும் வல்லமைபெறுவாய்:
நீ இவற்றைச் செய்தால்,
    பிறகு கர்த்தரால் தேசங்கள் ஆசீர்வதிக்கப்படும்.
அவர்கள் கர்த்தர் செய்திருக்கிறவற்றைப்பற்றி,
    மேன்மை பாரட்டுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எருசலேம் மற்றும் யூதாவின் மனிதருக்கு, கர்த்தர் சொல்லுகிறது இதுதான்:

“உங்கள் வயல்கள் உழப்படவில்லை,
    அவற்றை உழுங்கள்,
    முட்களுக்கு இடையில் விதைகளை தூவாதீர்கள்.
கர்த்தருடைய ஜனங்களாயிருங்கள்.
    உங்கள் இதயங்களை மாற்றுங்கள்!
யூதா ஜனங்களே, எருசலேம் ஜனங்களே!
    நீங்கள் மாற்றாவிட்டால் பிறகு நான் மிகவும் கோபம் அடைவேன்.
எனது கோபம் நெருப்பைப் போன்று வேகமாகப் பரவும்.
    எனது கோபம் உங்களை எரித்துப்போடும்.
எவராலும் அந்த நெருப்பை அணைக்கமுடியாது.
    இது ஏன் நிகழும் என்றால், நீங்கள் தீங்கான செயல்கள் செய்திருக்கிறீர்கள்.”

வடக்கிலிருந்து வரும் அழிவு

“யூதா ஜனங்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுங்கள்.
    எருசலேம் நகரத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் சொல்,
‘நாடு முழுவதும் எக்காளம் ஊதுங்கள்.’ உரக்கச் சத்தமிட்டு,
    ‘ஒன்றுசேர்ந்து வாருங்கள்! நாம் அனைவரும் பாதுகாப்புக்காக உறுதியான நகரங்களுக்குத் தப்புவோம்.’ என்று சொல்லுங்கள்.
சீயோனை நோக்கி அடையாளக் கொடியை ஏற்றுங்கள்.
    உங்கள் வாழ்வுக்காக ஓடுங்கள்! காத்திருக்காதீர்கள்.
இதனைச் செய்யுங்கள்.
ஏனென்றால், நான் வடக்கிலிருந்து பேரழிவைக் கொண்டு வந்துக்கொண்டிருக்கிறேன்.
    நான் பயங்கரமான பேரழிவைக் கொண்டுவருகிறேன்.”
ஒரு சிங்கம் அதன் குகையை விட்டு வெளியே வந்திருக்கிறது.
    தேசங்களை அழிப்பவன் நடைபோடத் தொடங்கியிருக்கிறான்.
அவன் உங்கள் நாட்டை அழிக்க அவனது வீட்டை விட்டு புறப்பட்டிருக்கிறான்.
உங்கள் நகரங்கள் அழிக்கப்படும்,
    அவற்றில் ஒருவன் கூட உயிர்வாழும்படி விடப்படமாட்டான்.
எனவே, சாக்குத் துணியைக் கட்டிக்கொள்ளுங்கள்.
    சத்தமாய் அழுது புலம்புங்கள். ஏனென்றால், கர்த்தர் நம்மிடம் கோபமாக இருக்கிறார்.
கர்த்தர் இவ்வாறு சொல்கிறார், “இது நிகழும் காலத்தில் அரசனும், அவனது அதிகாரிகளும், தம் தைரியத்தை இழப்பார்கள்.
    ஆசாரியர்கள் அஞ்சுவார்கள், தீர்க்கதரிசிகள் அதிர்ச்சியடைவார்கள்.”

10 பிறகு எரேமியாவாகிய நான், “எனது கர்த்தராகிய ஆண்டவரே! நீர் உண்மையிலேயே எருசலேம் மற்றும் யூதா ஜனங்களிடம் தந்திரம் செய்திருக்கிறீர். நீர் அவர்களிடம், ‘நீங்கள் சமாதானம் பெறுவீர்கள்’ எனச் சொன்னீர், ஆனால் இப்போது அவர்களின் கழுத்துக்கு நேராக வாள் குறிபார்த்துக் கொண்டிருக்கிறது” என்று சொன்னேன்.

11 அந்த நேரத்தில், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கப்படும்.
    “வறண்ட மலைகளிலிருந்து,
ஒரு சூடான காற்று வீசுகிறது.
    இது எனது ஜனங்களிடம் வனாந்தரத்திலிருந்து வருகிறது.
இது, உழவர்கள் தமது தானியங்களைப் பதரிலிருந்து,
    பிரித்தெடுக்கப் பயன்படுத்தும் காற்றைப் போன்றில்லை.
12 இது அதனைவிட பலமுடையதாக இருக்கிறது.
    இது என்னிடமிருந்து வருகிறது.
இப்பொழுது, யூதாவின் ஜனங்களுக்கு எதிரான எனது தீர்ப்பை நான் அறிவிப்பேன்.”
13 பாருங்கள்! பகைவன் மேகத்தைப்போன்று எழும்பியிருக்கிறான்.
    அவனது இரதங்கள் புயல் காற்றைப்போன்று தோன்றுகின்றன.
    அவனது குதிரைகள் கழுகுகளைவிட வேகமுடையதாயுள்ளன.
இது நமக்கு மிகவும் கேடாயிருக்கும்.
    நாம் அழிக்கப்படுகிறோம்.

14 எருசலேம் ஜனங்களே, உங்கள் இருதயங்களிலிருந்து, தீமையானவற்றைக் கழுவுங்கள்.
உங்கள், இருதயங்களைச் சுத்தப்படுத்துங்கள்.
அதனால் காப்பாற்றப்படுவீர்கள்.
    தீய திட்டங்களைத் தீட்டுவதைத் தொடராதீர்கள்.
15 கவனியுங்கள்! தாண் நாட்டிலிருந்து வந்த
    தூதுவனின் குரல் பேசிக்கொண்டிருக்கிறது.
எப்பிராயீம், என்ற மலை நாட்டிலிருந்து
    ஒருவன் கெட்ட செய்திகளைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறான்.
16 “இந்த நாட்டு ஜனங்களிடம், இதனைச் சொல்லுங்கள்.
    எருசலேமிலுள்ள ஜனங்களிடம் இந்தச் செய்தியைப் பரப்புங்கள்.
பகைவர்கள் தூர நாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.
அந்தப் பகைவர்கள், யூதாவின் நகரங்களுக்கு எதிராகப் போர் செய்வதுப்பற்றி
    சத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
17 எருசலேமைச் சுற்றிலும் பகைவர் வயலைக் காவல் செய்யும் மனிதனைப்போன்று,
    வளைத்துக்கொண்டனர்.
யூதாவே, நீ எனக்கு எதிராகத் திரும்பிவிட்டாய்!
    எனவே, உனக்கு எதிராகப் பகைவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

18 “நீங்கள் வாழ்ந்த வழியும் நீங்கள் செய்த செயல்களும்,
    உங்களுக்கு இந்தத் தொல்லையைக் கொண்டுவந்துள்ளது,
உங்களது தீமையானது, உங்கள் வாழ்க்கையைக் கடினமாக்கியிருக்கிறது.
உங்கள் தீமை கொடிய ஆபத்தைக் கொண்டுவந்தது.
    இது உங்கள் இதயத்தை ஆழமாகக் காயப்படுத்திவிட்டது.”

எரேமியாவின் அழுகை

19 எனது துக்கமும், கவலையும், எனது வயிற்றைத் தாக்கிக்கொண்டிருக்கிறது.
    நான் வலியால் வேதனையடைந்துவிட்டேன்.
நான் மிகவும் பயப்படுகிறேன்.
    எனது இதயம் எனக்குள் வேதனைப்படுகிறது.
என்னால் சும்மா இருக்கமுடியாது, ஏனென்றால் நான் எக்காள சத்தத்தைக் கேட்டிருக்கிறேன்,
    எக்காளமானது போருக்காகப் படையை அழைத்துக்கொண்டிருக்கிறது.
20 அழிவைத் தொடர்ந்து பேரழிவு வருகிறது.
    நாடு முழுவதும் அழிக்கப்படுகிறது.
எனது கூடாரங்கள் திடீரென்று அழிக்கப்படுகின்றன.
    எனது திரைச் சீலைகள் கிழிக்கப்படுகின்றன.
21 என் கர்த்தாவே எவ்வளவு காலமாக நான் போர்க் கொடிகளைப் பார்க்கவேண்டும்!
    எவ்வளவு காலமாக நான், போர் எக்காளத்தைக் கேட்க வேண்டும்?

22 தேவன், “என்னுடைய ஜனங்கள் அறிவுகெட்டவர்கள்.
    அவர்கள் என்னை அறிந்துகொள்ளவில்லை.
அவர்கள் அறிவில்லாதப் பிள்ளைகள்.
    அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
அவர்கள் தீமை செய்வதில் வல்லவர்கள்.
    ஆனால் அவர்களுக்கு நன்மையை எப்படி செய்யவேண்டும் என்று தெரியாது” என்று சொன்னார்.

அழிவு வந்துகொண்டிருக்கிறது

23 நான் பூமியை நோக்கிப் பார்த்தேன்.
    பூமி வெறுமையாய் இருந்தது.
    பூமியின்மேல் ஒன்றுமில்லாமலிருந்தது.
நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன்.
    அதன் ஒளி போய்விட்டது.
24 நான் மலைகளைப் பார்த்தேன்,
    அவை நடுங்கிக்கொண்டிருந்தன.
    மலைகள் எல்லாம் அசைந்தன.
25 நான் பார்க்கும்போது அங்கே ஜனங்கள் இல்லை.
    வானத்துப் பறவைகள் எல்லாம் பறந்து போய்விட்டன.
26 நான் பார்க்கும்போது நல்ல நிலம் வனாந்தரமாகிவிட்டிருந்தது.
    அந்த நாட்டிலுள்ள நகரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன.
கர்த்தர் இதனைச் செய்தார்.
    கர்த்தரும் அவரது பெருங்கோபமும்தான் இதனைச் செய்தது.

27 “தேசம் முழுவதும் அழிக்கப்படும்
    (ஆனால் நான் நாட்டை முழுவதுமாக அழிக்கமாட்டேன்).
28 எனவே, இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் மரித்துப்போன ஜனங்களுக்காகக் கதறுவார்கள்.
    வானம் இருண்டுப்போகும் நான் சொல்லியிருக்கிறேன்.
அதனை மாற்றமாட்டேன்.
    நான் ஏற்கனவே முடிவு செய்திருக்கிறேன்.
நான் எனது மனதை மாற்றமாட்டேன்”
    என்று கர்த்தர் சொல்லுகிறார்.

29 யூதாவின் ஜனங்கள் குதிரை வீரர்களின் சத்தத்தையும்
    வில் வீரர்களின் சத்தத்தையும் கேட்பார்கள்.
    ஜனங்கள் ஓடிப்போவார்கள்!
சில ஜனங்கள் குகைகளுக்குள் ஒளிந்துக்கொள்வார்கள்.
    சில ஜனங்கள் புதர்களுக்குள் ஒளிந்துக்கொள்வார்கள்.
    சில ஜனங்கள் பாறைகளுக்கு மேல் ஏறிக்கொள்வார்கள்.
யூதா நகரங்கள் எல்லாம் காலியாகிப் போகும்.
    அவற்றில் எவரும் வாழமாட்டார்கள்.

30 யூதாவே! நீ அழிக்கப்பட்டிருக்கிறாய்.
    எனவே, நீ இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
நீ அழகான சிவப்பு ஆடைகளை,
ஏன் அணிந்துக்கொண்டிருக்கிறாய்?
நீ தங்க நகைகளை ஏன் அணிந்துகொண்டிருக்கிறாய்?
நீ கண்ணுக்கு மையிட்டு ஏன் அழகுபடுத்திக்கொண்டிருக்கிறாய்.
நீ உன்னை அழகு செய்கிறாய்.
    ஆனால் இது வீணாகும்.
உனது நேசர்கள் உன்னை வெறுக்கின்றனர்.
    அவர்கள் உன்னைக் கொலை செய்ய முயல்கின்றனர்.
31 பிரசவ வேதனைப்படும் பெண்ணின் குரலைப் போன்ற கதறலைக் கேட்கிறேன்.
    அது முதல் குழந்தையைப் பிரசவிக்கும் பெண்ணின் கதறல் போன்றிருந்தது. சீயோனின் மகளின் கதறலாய் இது இருக்கிறது.
அவள் தனது கைகளை விரித்து,
    “ஓ! நான் எதிர்த்து போரிட முடியாமல், மயங்கி விழப்போகிறேன்.
    என்னைச் சுற்றிலும் கொலைக்காரர்கள் இருக்கிறார்கள்!” என்று ஜெபிக்கிறாள்.

யூதாவின் ஜனங்களின் தீமை

“எருசலேம் தெருக்களில் நடவுங்கள். சுற்றிப் பார்த்து இவற்றைப்பற்றி எண்ணுங்கள். நகரத்தின் பொது சதுக்கங்களைத் தேடுங்கள். உங்களால் ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடிக்க முடியுமானால் பாருங்கள். அவன் நேர்மையான காரியங்களைச் செய்கிறவனாகவும் உண்மையைத் தேடுகிறவனாகவும் இருக்கவேண்டும். உங்களால் ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடிக்க முடியுமானால் நான் எருசலேமை மன்னிப்பேன்! ஜனங்கள் வாக்குறுதிச் செய்து ‘ஜீவனுள்ள கர்த்தரைக் கொண்டுசொல்லுகிறோம்’ என்கிறார்கள், ஆனால் நடைமுறையில் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் எண்ணம் அவர்களிடம் இல்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தாவே! உமது ஜனங்கள் உமக்கு உண்மையாக இருக்கவேண்டும்
    என்று நீர் விரும்புவதை நான் அறிகிறேன்.
நீர் யூதா ஜனங்களைத் தாக்குகிறீர்.
    ஆனால், அவர்கள் எவ்வித வலியையும் உணர்ந்துக்கொள்வதில்லை.
அவர்களை நீர் அழித்தீர்.
    ஆனால் அவர்கள் தங்கள் பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை.
அவர்கள் மிகவும் பிடிவாதமாகிவிட்டனர்.
    அவர்கள் தாம் செய்த கெட்ட செயல்களுக்கு, வருத்தப்பட மறுத்தனர்.

ஆனால் நான் (எரேமியா) எனக்குள் சொன்னேன்.
“ஏழைகள் மட்டுமே முட்டாளாக இருக்க வேண்டும்.
    கர்த்தருடைய வழியை ஏழை ஜனங்கள் கற்றுக்கொண்டிருக்கவில்லை.
    ஏழை ஜனங்கள் அவர்களது தேவனுடைய போதனைகளை அறியாமல் இருக்கிறார்கள்.
ஆகவே நான் யூதாவின் தலைவர்களிடம் போவேன்.
    நான் அவர்களோடு பேசுவேன்.
அந்தத் தலைவர்களுக்கு நிச்சயமாக கர்த்தருடைய வழி தெரியும்.
    அவர்களுக்கு தமது தேவனுடைய சட்டங்கள் தெரியும், என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”
ஆனால், அந்தத் தலைவர்கள், அனைவரும் கர்த்தருக்கு
    சேவைசெய்வதிலிருந்து விடுபட ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள்.
    எனவே காட்டிலிருந்து ஒரு சிங்கம் வந்து அவர்களைத் தாக்கும்.
வனாந்தரத்திலிருந்து ஒரு நரி வந்து அவர்களைக் கொல்லும்.
    அவர்களின் நகரங்களுக்கு அருகில், சிறுத்தை ஒளிந்துக்கொண்டிருக்கிறது.
நகரத்திலிருந்து வெளியே வரும் எவரையும்
    அந்த சிறுத்தை துண்டுத் துண்டாகக் கிழித்துப்போடும்.
இது நிகழும் ஏனென்றால், யூதா ஜனங்கள் மீண்டும், மீண்டும், பாவம் செய்திருக்கிறார்கள்.
    அவர்கள் பலமுறை கர்த்தரிடமிருந்து விலகி, அலைந்திருக்கிறார்கள்.

“யூதாவே! உன்னை நான் எதற்காக மன்னிக்க வேண்டும்? என்று ஒரு நல்ல காரணத்தை எனக்குக் கொடு,
    உனது பிள்ளைகள் என்னை விட்டுவிட்டார்கள்.
    அவர்கள் விக்கிரகங்களுக்கு, வாக்குறுதி செய்தனர்.
    அந்த விக்கிரகங்கள் உண்மையில் தெய்வங்கள் அல்ல!
நான் உனது பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்தேன்.
    ஆனால் அவர்கள் இன்னும் எனக்கு உண்மையில்லாதவர்களாக இருக்கிறார்கள்!
    அவர்கள் வேசிகளோடு மிகுதியான காலத்தைச் செலவழிக்கிறார்கள்.
அவர்கள் குதிரைகளைப்போன்று இருக்கிறார்கள்.
அவர்கள் மிகுதியாக உணவு உண்கின்றனர்.
துணையோடு உறவுகொள்ள தயாராகின்றனர்.
    அவர்கள் அயலானின் மனைவியை இச்சையோடு அழைக்கிற குதிரைகளைப்போன்று, இருக்கிறார்கள்.
இவற்றைச் செய்வதற்காக யூதா ஜனங்களை நான் தண்டிக்கவேண்டாமா?”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“ஆம்! இதுபோல வாழ்கிற ஒரு நாட்டை நான் தண்டிக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
    நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையையே கொடுப்பேன்.

10 “யூதாவின் திராட்சைத் தோட்ட வரிசைகளுக்குச் செல்லுங்கள்,
    கொடிகளை வெட்டிப் போடுங்கள், (ஆனால் முழுவதுமாக அவற்றை அழிக்காதீர்கள்)
    அவற்றின் கிளைகளையெல்லாம் வெட்டுங்கள்.
    ஏனென்றால், இந்தக் கிளைகள் கர்த்தருக்கு உரிமை உடையவை அல்ல.
11 ஒவ்வொரு வழியிலும் இஸ்ரவேல் குடும்பமும் யூதா குடும்பமும்
    எனக்கு உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

12 “அந்த ஜனங்கள் கர்த்தரைப்பற்றி பொய்யுரைத்திருக்கின்றனர்.
அவர்கள், ‘கர்த்தர் எங்களுக்கு எதுவும் செய்யமாட்டார்.
    தீமை எதுவும் நமக்கு ஏற்படாது.
    ஒரு படை நம்மைத் தாக்குவதை நாம் எப்பொழுதும் காண்பதில்லை.
    நாம் எப்பொழுதும் பட்டினியாக இருப்பதில்லை.’
13 கள்ளத்தீர்க்கதரிசிகள் வெறுமையான காற்றைப் போன்றவர்கள்.
    தேவனுடைய வார்த்தை அவர்களில் இல்லை.
    அவர்களுக்குத் தீயவை ஏற்படும்.”

14 அந்த ஜனங்கள், “நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன் என்று கூறினார்கள்.
ஆகையால் எரேமியாவே, நான் உனக்குக் கொடுத்த வார்த்தைகள் நெருப்பைப் போன்றிருக்கும்.
    அந்த ஜனங்கள் மரத்துண்டுகளைப் போன்றிருப்பார்கள்.
அந்த நெருப்பு அவர்களை முழுமையாக எரித்துப் போடும்!”
என்று சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
15 இஸ்ரவேல் குடும்பத்தாரே!
“நான் உங்களைத் தாக்குவதற்காகத், தொலை தூரத்திலிருந்து, விரைவில் ஒரு தேசத்தைக் கொண்டுவருவேன்.
அது ஒரு வல்லமை மிக்க ஜனமாக இருக்கிறது.
    இது பழமையான தேசமாக இருக்கிறது.
அந்தத் தேசத்தின் ஜனங்கள் நீங்கள் அறியாத ஒரு மொழியைப் பேசுகிறார்கள்.
    அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது.
16 அவர்களின் அம்புப் பைகள் திறந்த சவக்குழிகளைப் போன்றிருக்கும்.
    அவர்களது ஆண்கள் எல்லாம் வலிமையான வீரர்களாக இருக்கிறார்கள்.
17 நீங்கள் சேகரித்து வைத்த விளைச்சலை எல்லாம் அந்தப் படைவீரர்கள் உண்பார்கள்.
    உங்கள் உணவு முழுவதையும் அவர்கள் உண்பார்கள்.
    அவர்கள் உங்களது மகன்களையும் மகள்களையும் உண்பார்கள் (அழிப்பார்கள்).
அவர்கள் உங்கள் ஆடுகளையும் உங்கள் மாடுகளையும் உண்பார்கள்.
    அவர்கள் உங்கள் திராட்சைப் பழங்களையும், அத்திப் பழங்களையும் உண்பார்கள்.
அவர்கள் தமது வாள்களால் உங்களது பலமான நகரங்களை அழிப்பார்கள்.
    நீங்கள் நம்பிக்கை வைத்த உங்களது பலமான நகரங்களை அவர்கள் அழிப்பார்கள்!”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

18 “ஆனால் அந்தப் பயங்கரமான நாட்கள் வரும்போது யூதாவே, நான் உன்னை முழுவதுமாக அழிக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். 19 “யூதாவிலுள்ள ஜனங்கள் உன்னிடம், ‘நமது தேவனாகிய கர்த்தர் இந்தத் தீயச்செயல்களை நமக்கு ஏன் செய்திருக்கிறார்?’ என்று கேட்டால், நீ அவர்களிடம், ‘யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரை விட்டு விலகினீர்கள். உங்கள் சொந்த நாட்டில், அந்நிய நாட்டு விக்கிரகங்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். நீங்கள் அச்செயல்களைச் செய்தபடியால், இப்பொழுதும், உங்களுக்கு சொந்தமில்லாத நாட்டில் அந்நியருக்கு சேவைசெய்வீர்கள்’” என்று சொல்.

20 கர்த்தர் என்னிடம், “யாக்கோபின் குடும்பத்தாரையும்,
    யூதா நாட்டினரையும் நோக்கி:
21 நீங்கள் மதிகேடர்கள்,
    உங்களுக்குக் கண்கள் இருக்கின்றன,
    ஆனால் நீங்கள் பார்க்கிறதில்லை!
    உங்களுக்குக் காதுகள் இருக்கின்றன ஆனால் நீங்கள் கேட்கிறதில்லை!
22 நிச்சயமாக நீங்கள் எனக்குப் பயப்படுகிறீர்கள்” என சொல் என்றார்.
“எனக்கு முன்னால் நீங்கள் பயத்தால் நடுங்கவேண்டும்.
கடலுக்குக் கரைகளை எல்லையாக உண்டாக்கியவர் நானே.
    இந்த வழியில் என்றென்றைக்கும் தண்ணீரானது அதனுடைய இடத்தில் இருக்குமாறு செய்தேன்.
    கரையை அலைகள் தாக்கலாம்.
    ஆனால் அவை அதனை அழிக்க முடியாது.
    அலைகள் இரைந்துக்கொண்டு வரலாம்.
    ஆனால் அது கரையைக் கடந்து போக முடியாது.
23 மறுபடியும் யூதாவின் ஜனங்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
    எனக்கு எதிராகத் திரும்ப அவர்கள் எப்பொழுதும் திட்டம் தீட்டுகிறார்கள்.
    அவர்கள் என்னிடமிருந்து திரும்பி என்னை விட்டு விலகிவிட்டார்கள்.
24 யூதாவின் ஜனங்கள் தங்களுக்குள் இவ்வாறு சொல்லமாட்டார்கள்.
    ‘எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பயப்படுவோம், மரியாதை செய்வோம்.
    நமக்கு அவர் சரியான காலங்களில் மழையையும், முன்மாரியையும், பின்மாரியையும் கொடுக்கிறார்.
    நாம் சரியான காலத்தில் அறுவடையைப் பெறுவோம்’ என்று அவர் உறுதி செய்கிறார்.
25 யூதாவின் ஜனங்களே! நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள்.
    எனவே மழையும் அறுவடையும் வரவில்லை.
    கர்த்தரிடமிருந்து வரும் அந்த நன்மையை அனுபவிக்க உங்கள் பாவங்கள் தடுத்துவிட்டன.
26 என்னுடைய ஜனங்களிடையில் கெட்ட மனிதரும் இருக்கின்றனர்.
    அந்தக் கெட்ட மனிதர்கள் பறவைகளைப் பிடிக்க வலைகளைச் செய்பவர்களை போன்றவர்கள்.
இந்த மனிதர்கள் தமது கண்ணிகளை வைப்பார்கள்.
    ஆனால் அவர்கள் பறவைகளுக்குப் பதிலாக மனிதர்களைப் பிடிப்பார்கள்.
27 கூண்டுக்குள்ளே பறவைகள் இருப்பதுபோன்று,
    இத்தீய ஜனங்களின் வீடுகளில் கபடங்கள் நிறைந்திருக்கும்.
அவர்களின் கபடங்கள் அவர்களை செல்வந்தர்களாகவும், வலிமையுள்ளவர்களாகவும் ஆக்கின.
28     அவர்கள் தாம் செய்த தீமைகளால் பெரிதாக வளர்ந்து கொழுத்துப்போயிருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் தீமைகளுக்கு முடிவே இல்லை.
    பெற்றோர்கள் இல்லாதிருக்கிற பிள்ளைகளின் வழக்கில் பரிந்து பேசுவதில்லை.
    அந்த அனாதைகளுக்கு அவர்கள் உதவுவதில்லை.
    ஏழை ஜனங்கள் நியாயமான தீர்ப்புப்பெற விடுவதில்லை.
29 இவற்றையெல்லாம் செய்துக்கொண்டிருக்கிற யூதாவின் ஜனங்களை நான் தண்டிக்கவேண்டுமா?”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“இது போன்ற ஒரு தேசத்தாரை நான் தண்டிக்கவேண்டும், என்று உங்களுக்குத் தெரியும்.
    அவர்களுக்குப் பொருத்தமான தண்டனைகளையே நான் தரவேண்டும்.”

30 கர்த்தர், “யூதா நாட்டிலே ஒரு பயங்கரமான
    நடுங்கத்தக்க செயல் நடந்திருக்கிறது.
31 தீர்க்கதரிசிகள், பொய்களைக் கூறுகிறார்கள்.
ஆசாரியர்கள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அச்செயல்களைச் செய்வதில்லை.
    என்னுடைய ஜனங்கள் இந்நிலையை விரும்புகிறார்கள்!
ஆனால், உங்கள் தண்டனை வரும்போது
    நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று சொல்லுகிறார்.

பகைவர் எருசலேமை சுற்றிவளைத்தனர்

பென்யமீன் ஜனங்களே! உங்கள் உயிருக்காக ஓடுங்கள்.
    எருசலேம் நகரத்தை விட்டுத் தூர ஓடுங்கள்!
தெக்கோவா நகரில் போர் எக்காளத்தை ஊதுங்கள்!
    பெத்கேரேம் நகரில் எச்சரிக்கை கொடியை ஏற்றுங்கள்!
நீங்கள் இவற்றை செய்யுங்கள்.
ஏனென்றால், வடக்கிலிருந்து பேரழிவானது வந்துகொண்டிருக்கிறது.
பயங்கரமான பேரழிவு உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது.
சீயோனின் மகளே, நீ ஒரு அழகான மென்மையான
    பெண் போன்றுள்ளாய்.
மேய்ப்பர்கள் எருசலேமிற்கு வருகிறார்கள்,
    அவர்கள் தம் ஆட்டு மந்தையைக் கொண்டுவருகிறார்கள்.
எருசலேமைச் சுற்றி தங்கள் கூடாரங்களை அமைத்தனர்.
    ஒவ்வொரு மேய்ப்பனும், அவனது சொந்த மந்தையைக் கவனிக்கின்றனர்.

“எருசலேமிற்கு எதிராகப் போராடத் தயாராகுங்கள்.
    எழுந்திருங்கள்! நாம் மதிய நேரத்தில் நகரத்தைத் தாக்குவோம்;
ஆனால் ஏற்கனவே தாமதமாகிவிட்டது.
    மாலை நிழல் நீளமாக வளர்ந்துக்கொண்டிருக்கின்றது.
எனவே, புறப்படுங்கள்! இரவில் நகரத்தை நாம் தாக்குவோம்!
    எருசலேமைச் சுற்றியிருக்கின்ற உறுதியான சுவர்களை அழிப்போம்.”

சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
    “எருசலேமை சுற்றியுள்ள மரங்களை வெட்டிப்போடுங்கள், அதன் சுவருக்கு எதிராக எடுசுவரை எழுப்புங்கள்.
இந்த நகரம் தண்டிக்கப்படவேண்டும்!
    இந்த நகரத்தின் உட்பகுதியில் கொடுமையைத் தவிர வேறு எதுவுமில்லை.
ஒரு கிணறு தனது தண்ணீரைப் புதிதாக சுரக்கிறது,
    இதுபோலவே எருசலேமும் தனது தீங்கை சுரக்கபண்ணுகிறது,
நகரத்திற்குள் எல்லா நேரத்திலும், கொடுமையும், வன்முறையும் நிகழ்வதை நான் கேள்விப்படுகிறேன்.
    எருசலேமிற்குள் எப்பொழுதும் துன்பமும், நோயும் இருப்பதைப் பார்க்கிறேன்.
எருசலேமே! இந்த எச்சரிக்கையை கவனி!
    நீ கவனிக்காவிட்டால், பிறகு நான் உனக்கு எனது முதுகைத் திருப்புவேன்,
உனது நாட்டை ஒரு வெறும் வனாந்தரமாக நான் செய்வேன்.
    அங்கு எவரும் வாழமுடியாமல் போகும்” என்று கூறுகிறார்.

சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“தங்கள் தேசத்தில் விடப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேருங்கள்,
    நீங்கள் திராட்சைத் தோட்டத்தில் இறுதியில்
பழுத்த பழங்களை சேகரிப்பதுபோன்று
    அவர்களை ஒன்று சேருங்கள்.
ஒரு வேலைக்காரன் ஒவ்வொரு திராட்சைப் பழத்தையும் பறிக்குமுன்
    சோதிப்பதுபோன்று சோதியுங்கள்” என்று கூறுகிறார்.
10 நான் யாரோடு பேசுவேன்?
    நான் யாரை எச்சரிக்க முடியும்?
    நான் சொல்வதை யார் கேட்பார்கள்?
இஸ்ரவேல் ஜனங்கள் தம் காதுகளை மூடிக்கொண்டார்கள்.
    எனவே, எனது எச்சரிக்கைகளை அவர்களால் கேட்கமுடியாது.
ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளை விரும்புகிறதில்லை,
    அவரது செய்தியை அவர்கள் கேட்க விரும்பவில்லை.
11 ஆனால் நான், (எரேமியா) கர்த்தருடைய கோபத்தால் முழுமையாக நிறைந்திருக்கிறேன்!
    நான் அதனைத் தாங்குவதில் சோர்ந்துபோனேன்.
“தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் மீது கர்த்தருடைய கோபத்தை ஊற்றுங்கள்.
    கூடுகின்ற இளைஞர் மேல் கர்த்தருடைய கோபத்தை ஊற்றுங்கள்.
ஒரு ஆணும் அவனது மனைவியும் சேர்த்து கைபற்றப்படுவார்கள்.
வயதான ஜனங்கள் அனைவரும் கைபற்றப்படுவார்கள்.
12 அவர்களின் வீடுகள் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.
    அவர்களின் வயல்களும் மனைவிகளும் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.
நான் என்னுடைய கையை உயர்த்தி யூதாவின் ஜனங்களைத் தண்டிப்பேன்”

என்று கர்த்தர் சொல்லுகிறார்.

13 “இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர்.
    முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள்வரை அனைத்து ஜனங்களும், இதுபோலவே இருக்கின்றனர்.
    தீர்க்கதரிசிகளிலிருந்து ஆசாரியர்கள்வரை, அனைத்து ஜனங்களும் பொய்களைக் கூறுகின்றனர்.
14 என்னுடைய ஜனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
    தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், அந்தக் காயங்களுக்குக் கட்டுப் போடவேண்டும்.
அவர்கள் சிறிய காயங்களுக்கு, சிகிச்சை செய்வதுபோன்று, அவர்கள் புண்களுக்கு சிகிச்சை செய்கின்றனர்.
    ‘இது சரியாக இருக்கிறது, எல்லாம் சரியாக இருக்கிறது!’
    என்று கூறுகிறார்கள்.
ஆனால் அது சரியாக இல்லை!
15 தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், தாங்கள் செய்கிற தீயச்செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும்.
    ஆனால், அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை.
தங்கள் பாவங்களுக்காக வெட்கப்படும் அளவிற்கு அவர்களுக்கு போதிய அறிவில்லை;
    எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவார்கள்.
    நான் ஜனங்களைத் தண்டிக்கும்போது, அவர்கள் தரையில் வீசியெறியப்படுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

16 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“வழிகளில் நின்று கவனி.
பழையசாலை எங்கே என்று கேள்.
    நல்ல சாலை எங்கே என்று கேள்.
    அந்தச் சாலையில் நட.
    நீ செய்தால், உனக்குள் நீ ஓய்வைக் கண்டுபிடிப்பாய்.
ஆனால் நீங்களோ, ‘நாங்கள் நல்ல சாலைகளில் நடக்கமாட்டோம்!’ என்று கூறினீர்கள்.
17 உங்களை கவனிக்க காவல்காரர்களைத் தேர்ந்தெடுத்தேன்.
    நான் அவர்களிடம், ‘போர் எக்காள சத்தத்தை கவனியுங்கள்’ என்று கூறினேன்.
    ஆனால் அவர்களோ, ‘நாங்கள் கவனிக்கமாட்டோம்!’ என்று கூறினார்கள்.
18 எனவே, தேசத்திலுள்ளவர்களே!
    கேளுங்கள் சபையே,
19 பூமியின் ஜனங்களே,
    யூதா ஜனங்களுக்கு நான் பேரழிவைக் கொண்டுவருவேன்.
    ஏனென்றால், அவர்கள் எல்லா தீயச்செயல்களுக்கும் திட்டமிடுகிறார்கள்.
    அவர்கள் என் வார்த்தையை உதாசினப்படுத்தினார்கள்.
    அந்த ஜனங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர்.”

20 கர்த்தர் அவர்களிடம், “ஏன் நீங்கள் சேபா நாட்டிலுள்ள நறுமணப் பொருட்களையும்,
    தொலை நாடுகளிலுள்ள சுகந்தப் பட்டைகளையும் எனக்குக் கொண்டு வருகிறீர்கள்?
உங்களது சர்வாங்கத் தகன பலிகள் எனக்கு மகிழ்ச்சியளிப்பதில்லை,
    உங்களது பலிகள் எனக்கு இன்பமாயிராது” என்று கூறினார்.

21 எனவே இதுதான் கர்த்தர் கூறுவது:
“யூதாவிலுள்ள ஜனங்களுக்கு நான் சிக்கல்களை கொண்டு வருவேன்.
    அவை ஜனங்களை விழச் செய்யும் கற்களைப்போன்று இருக்கும்.
தந்தைகளும் மகன்களும் ஒருவர் மேல் ஒருவர் இடறி விழுவார்கள்.
    நண்பர்களும் அருகில் உள்ளவர்களும் மரித்துப்போவார்கள்.”

22 கர்த்தர் சொல்லுகிறதாவது:
“ஒரு படையானது வடக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
    பூமியிலுள்ள, தொலைதூர இடங்களிலிருந்து ஒரு பெரிய தேசம் வந்துகொண்டிருக்கிறது.
23 வீரர்கள் வில்லையும் ஈட்டியையும் கொண்டு வருகின்றனர்.
    அவர்கள் கொடுமையானவர்கள்.
அவர்களிடம் இரக்கம் இல்லை.
    அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்,
அவர்கள், குதிரைகள் மேல் சவாரி செய்து வரும்போது,
    இரைகின்ற கடலைப்போன்று சத்தம் எழுப்புகிறார்கள்.
சண்டை செய்வதற்கு தயாராக அப்படை வந்துக்கொண்டிருக்கிறது.
    சீயோனின் குமாரத்தியே! அந்தப் படை உங்களை தாக்கிட வந்துகொண்டிருக்கிறது.”
24 அந்தப் படையைப் பற்றியச் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
    எங்களின் துன்ப வலையில் மாட்டிக்கொண்டதாக உணர்கிறோம்.
பயத்தினால் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம்.
    பிரசவிக்கும் பெண்ணைப்போன்று வேதனையில் இருக்கிறோம்.
25 வெளியே வயல்களுக்குப் போகாதீர்கள்.
    சாலைகளில் போகாதீர்கள்,
ஏனென்றால் பகைவர்கள் வாள் வைத்திருக்கின்றனர்.
    எல்லா இடங்களிலும் ஆபத்து இருக்கிறது.
26 என் சாக்கு ஆடையை அணிந்துக்கொள்ளுங்கள்.
    சாம்பலில் புரளுங்கள்.
மரித்த ஜனங்களுக்காக உரக்க அழுங்கள்.
    ஒரே மகனை இழந்ததைப்போன்று அழுங்கள்,
இவற்றையெல்லாம் செய்யுங்கள்;
    ஏனென்றால், நமக்கு எதிரியான, அழிவுக்காரன் மிகவேகமாக வந்துக்கொண்டிருக்கிறான்.

27 “எரேமியா! நான், (கர்த்தர்) உன்னை உலோகத்தை
    சோதித்துப்பார்க்கும் வேலையாளாக வைத்தேன்,
நீ எனது ஜனங்களை சோதிப்பாய்;
    அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று கவனிப்பாய்.
28 என்னுடைய ஜனங்களே, எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர்,
    அவர்கள் மிகவும் கடினமானவர்கள்.
    அவர்கள் ஜனங்களைப்பற்றி தவறானவற்றைச் சொல்கிறார்கள், ஜனங்களைப்பற்றி கெட்டவற்றைச் சொல்கிறார்கள்.
துருவும் கறையும் கொண்ட அவர்கள் எல்லோரும் தீயவர்கள்.
    அவர்கள் வெண்கலத்தைப்போன்றும் இரும்பைப் போன்றும் இருக்கின்றனர்.
29 அவர்கள் வெள்ளியை சுத்தப்படுத்த முயலும் வேலைக்காரர்களைப் போன்றுள்ளனர்.
துருத்திகள் பலமாக ஊதப்படுகின்றன.
நெருப்பு மேலும் சூடாகின்றது.
    ஆனால் நெருப்பிலிருந்து ஈயம்மட்டும் வருகின்றது.
அந்த வெள்ளியை சுத்தப்படுத்துவதில் வேலையாள் தனது காலத்தை வீணாக்கிவிட்டான்.
இதுபோலவே, எனது ஜனங்களிடமிருந்து தீயவை விலக்கப்படவில்லை.
30 என்னுடைய ஜனங்கள் ‘தள்ளுபடியான வெள்ளி’ என்று அழைக்கப்படுவார்கள், அவர்களுக்கு அந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
    ஏனென்றால், கர்த்தர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center