Beginning
பொருத்தனை செய்வதைப்பற்றி எச்சரிக்கையாயிரு
5 நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ளப் போகும்போது கவனமாக இருங்கள். அறிவற்ற ஜனங்களைப் போன்று நீங்கள் தேவனுக்குப் பலிகளைக்கொடுப்பதைவிட அவர் கூறுவதைக் கவனிப்பது நல்லது அறிவற்றவர்கள் தொடர்ந்து தீமைகளைச் செய்வார்கள். அவர்கள் அதைப்பற்றி தெரியாதவர்களாக இருப்பார்கள். 2 தேவனிடம் பொருத்தனை செய்யும்போது கவனமாக இருங்கள். தேவனிடம் சொல்லும் செய்திகளைப்பற்றியும் கவனமாக இருங்கள். நீங்கள் சிந்திக்காமல் பேச உங்கள் உணர்ச்சிகள் காரணமாகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். தேவன் பரலோகத்தில் இருக்கிறார். நீங்கள் பூமியில் இருக்கிறீர்கள். எனவே தேவனிடம் சிலவற்றை பேசுகின்ற அவசியமே உள்ளது. இந்த வார்த்தை உண்மையானது.
3 மிக அதிகமான கவலைகளால் கெட்ட கனவுகள் வருகின்றன.
முட்டாள்களிடமிருந்து மிகுதியான வார்த்தைகள் வருகின்றன.
4 நீ தேவனுக்கு பொருத்தனை செய்தால் அதனைக் காப்பாற்று. நீ பொருத்தனை செய்ததை நிறைவேற்ற தாமதிக்காதே. முட்டாள்களின்மேல் தேவன் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார். தேவனுக்குக்கொடுப்பதாக வாக்களித்தவற்றை அவருக்கு கொடுத்துவிடு. 5 நீ பொருத்தனை செய்து அதனை நிறைவேற்ற முடியாமல் இருப்பதைவிட, பொருத்தனை செய்யாமல் போவதே நல்லது. 6 எனவே உனக்குப் பாவம் ஏற்படும்படி நீ வார்த்தைகளைப் பயன்படுத்தாதே. “நான் சொன்னதை அந்த அர்த்தத்துடன் சொல்லவில்லை” என்று ஆசாரியனிடம் சொல்லாதே. இவ்வாறு நீ செய்தால், தேவன் உன் வார்த்தைகளால் கோபங்கொண்டு, நீ செய்த வேலைகளை எல்லாம் அழித்துவிடுவார். 7 உனது பயனற்ற கனவுகளும் வீண் பேச்சும் உனக்குத் துன்பம் தராதபடி பார்த்துக்கொள். நீ தேவனை மதிக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு அரசன் உண்டு
8 சில நாடுகளில் ஏழைகள் கடினமாக உழைக்கும்படிக் கட்டாயப்படுத்தப்படுவதை நீ காணலாம். இது ஏழைகளுக்குச் செய்யும் நேர்மையல்ல. இது ஏழை ஜனங்களின் உரிமைகளுக்கு எதிரானது, ஆனால் ஆச்சரியப்படாதே. ஜனங்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்குகிற அரசனைக் கட்டாயப்படுத்த ஒரு அரசன் இருப்பான். இவர்கள் இருவரையும் கட்டாயப்படுத்த இன்னொரு அரசன் இருப்பான். 9 ஒருவன் அரசனாக இருந்தாலும் தன் சொந்த நாட்டில் அடிமையாகிவிடுகிறான்.
செல்வத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது
10 செல்வத்தையே விரும்புகிற ஒருவன் தன்னிடமுள்ள செல்வத்தால் மட்டும் திருப்தி அடையமாட்டான். அவன் மேலும் மேலும் செல்வத்தைப் பெற்றாலும் திருப்தி அடையமாட்டான். இதுவும் அர்த்தமற்றது.
11 ஒருவன், மிகுதியான செல்வத்தைப் பெறும்போது அதைச் செலவுசெய்ய உதவும் மிகுதியான “நண்பர்”களைப் பெறுகிறான். எனவே அந்த செல்வந்தன் உண்மையில் ஆதாயமடைவது ஒன்றுமில்லை. அவன் தன் செல்வத்தைப் பார்க்க மட்டுமே முடியும்.
12 ஒருவன், பகல் முழுவதும் கடுமையாக உழைத்தால் இரவில் சமாதானமாகத் தூங்குகிறான். அவனுக்கு உண்பதற்கு மிகுதியாக உள்ளதா குறைவாக உள்ளதா என்பதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் செல்வந்தன் தன் செல்வத்தைப்பற்றிக் கவலைபட்டுக்கொண்டு தூங்காமல் இருக்கிறான்.
13 இந்த வாழ்க்கையில் நிகழும் மிகவும் சோகமான ஒரு காரியத்தை நான் கண்டிருக்கிறேன். ஒருவன் தன் செல்வத்தை எதிர்காலத்திற்காகவே சேமித்து வைக்கிறான். 14 அதன் பிறகு ஏதாவது கெட்ட காரியம் நிகழும்போது எல்லாவற்றையும் இழக்கின்றான். தன் மகனுக்குக்கொடுக்க எதுவும் இல்லாமல் போகிறது.
15 ஒருவன் தன் தாயின் உடலிலிருந்து வெளியே வரும்போது எதுவும் இல்லாமலேயே வருகிறான். அவன் மரிக்கும்போதும் எதுவும் இல்லாமலேயே போகிறான். பொருட்களைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைக்கிறான். ஆனால் மரிக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை. 16 இது மிகவும் சோகமானது. அவன் வந்ததுபோலவே இந்த உலகைவிட்டு விலகியும் போகிறான். “காற்றைப் பிடிக்கும் முயற்சியால்” ஒருவன் பெறப்போவது என்ன? 17 அவனது வாழ்நாட்கள் சோகத்தாலும் துன்பத்தாலும் நிறைந்துபோகும். முடிவில் அவன் சலிப்பும், நோயும், வெறுப்பும், கோபமும் அடைவான்.
வாழ்வின் பணியை அனுபவி
18 உண்டு, குடித்து, இவ்வுலகில் வாழும் குறுகிய வாழ்வில் தான் செய்யும் வேலையில் இன்பம் காண்பதுதான் ஒருவன் செய்யும் சிறப்பான செயல்கள் என்று நான் எண்ணுகிறேன். அவனுக்கு இருப்பதெல்லாம் தேவன் கொடுத்த குறுகிய வாழ்க்கை மட்டுமே. அவனுக்கு வேறெதுவும் இல்லை.
19 தேவன், ஒருவனுக்குச் செல்வத்தையும் சொத்துக்களையும் அவற்றை அனுபவிப்பதற்கான உரிமையையும் கொடுத்திருக்கும்போது அவன் அவற்றை அனுபவித்து மகிழவேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு அவன் தனது வேலையில் இன்பம் காண வேண்டும். இது தேவனால் கொடுக்கப்பட்ட பரிசு. 20 ஒருவனால் நீண்டகாலம் வாழமுடியாது. எனவே அவன் இதனை வாழ்வு முழுவதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். ஒருவன் செய்ய விரும்புகிற வேலைகளில் தேவன் அவனைச் சுறுசுறுப்பாக வைத்துள்ளார்.
செல்வம் மகிழ்ச்சியைக்கொண்டு வராது
6 வாழ்க்கையில் நான் நேர்மையாக இல்லாத இன்னொன்றையும் பார்த்திருக்கிறேன். இதனைப் புரிந்துக்கொள்ளவும் கடினமாக இருக்கிறது. 2 ஒருவனுக்கு தேவன் பெருஞ்செல்வத்தையும், சிறப்பையும், சொத்துக்களையும் கொடுக்கிறார். ஒருவன் தனக்குத் தேவையானவற்றையும் தான் விரும்புகின்றவற்றையும் பெற்றுக்கொள்கிறான். ஆனால் தேவன் அவனை அவற்றை அனுபவிக்கும்படி விடுவதில்லை. எவனோ ஒரு அந்நியன் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போகிறான். இது மிகவும் மோசமான அர்த்தமற்ற ஒன்றாகும்.
3 ஒருவன் நீண்டகாலம் வாழலாம். அவனுக்கு 100 பிள்ளைகள் இருக்கலாம். ஆனால், அவன் நல்லவற்றில் திருப்தி அடையாவிட்டால், அவன் மரித்தப் பிறகு அவனை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளாவிட்டால், அவனைவிட பிறக்கும் முன்பே மரித்துப்போகும் குழந்தை சிறந்தது என்று என்னால் சொல்ல முடியும். 4 ஒரு குழந்தை மரித்தே பிறக்குமானால் அது உண்மையில் பொருளற்றது. அது விரைவில் இருண்ட கல்லறைக்குள்ளே பெயர்கூட இல்லாமல் புதைக்கப்படும். 5 அது சூரியனைப் பார்த்ததில்லை. அது எதையும் அறிந்துக்கொள்வதில்லை. தேவன் கொடுத்தவற்றை அனுபவிக்காத ஒருவனைவிட அது அதிக ஓய்வைப் பெறும். 6 அவன் 2,000 ஆண்டுகள் வாழ்ந்தவனாக இருக்கலாம். எனினும் அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்காவிட்டால், மரித்துப் பிறக்கும் குழந்தை அதே முடிவுக்குச் செல்ல எளிய பாதையைக் கண்டடைகிறது.
7 ஒருவன் மேலும் மேலும் வேலை செய்கிறான். ஏனென்றால், அவன் தனக்கு உணவு தேடிக்கொள்ளவே அவ்வாறு உழைக்கிறான். அதனால் அவன் திருப்தி அடைவதில்லை. 8 இந்த வழியில், ஞானமுள்ள ஒருவன் அறிவற்றைவனைவிடச் சிறந்தவன் இல்லை. வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ஏற்றுக்கொள்வதை அறிந்த ஏழையாக இருப்பது நல்லது. 9 நாம் மேலும் மேலும் பெறவேண்டும் என்று விரும்புவதைவிட இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சி அடைவதே நல்லது. எப்பொழுதும் மேலும் மேலும் விரும்புவது பயனற்றது. அது காற்றைப் பிடிக்கும் முயற்சியைப் போன்றது.
10-11 ஒரு மனிதன் தான் உருவாக்கப்பட்ட வண்ணமே, அதாவது மனிதனாக மாத்திரம் இருக்கிறான். இதைப்பற்றி விவாதம் செய்வது வீணானது. ஒருவன் இதைப்பற்றி தேவனிடம் வாக்குவாதம் செய்ய முடியாது. ஏனென்றால் தேவன் மனிதனைவிட வல்லமை வாய்ந்தவர். நீண்ட விவாதங்கள் உண்மையை மாற்றிவிட முடியாது.
12 பூமியில் ஒருவனது குறுகிய வாழ்நாளில், எது சிறந்தது என்று எவருக்குத் தெரியும்? அவனது வாழ்க்கை நிழலைப்போன்று கடந்துபோனது. பின்னால் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல முடியாது.
ஞான மொழிகளின் ஒரு தொகுப்பு
7 நல்ல மணமிக்கப் பொருட்களைவிட நல்ல பெயரைப் பெறுவது நல்லது.
ஒருவனது பிறந்த நாளைவிட மரித்தநாளும் சிறந்ததுதான்.
2 விருந்துகளுக்குச் செல்வதைவிட கல்லறைக்குச் செல்வது சிறந்தது.
ஏனென்றால் எல்லோரும் மரிக்க வேண்டியவர்களே.
வாழ்கின்ற அனைவரும் இதனை ஒப்புக்கொள்ளவேண்டும்.
3 சிரிப்பைவிடச் சோகம் சிறந்தது.
ஏனென்றால் நமது முகம் சோகமடையும்போது நமது இதயம் நல்லதாகிறது.
4 ஞானமுள்ளவன் மரணத்தைப்பற்றிச் சிந்திக்கிறான்.
ஆனால் அறிவற்றவனோ எப்பொழுதும் நல்ல நேரத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறான்.
5 ஞானமுள்ளவனால் விமர்சிக்கப்படுவது
அறிவற்றவர்களால் புகழப்படுவதைவிட நல்லது.
6 அறிவற்றவர்களின் சிரிப்பு பயனற்றது.
அது பானையின் கீழே எரியும் முட்களைப் போன்றது.
முட்கள் வேகமாக எரியும்,
எனவே பானை சூடாகாது.
7 எவராவது போதுமான பணம் கொடுப்பதானால் ஞானமுள்ளவர்கள் தம் ஞானத்தை மறக்கத் தயார்.
அப்பணம் அவனது புரிந்துகொள்ளுதலை அழித்துவிடும்.
8 ஒன்றைத் துவங்குவதைவிட முடிப்பது நல்லது.
ஒருவன் வீண் பெருமையும், பொறுமையின்மையும் கொள்வதைவிட கனிவும், பொறுமையும் சிறந்தது.
9 விரைவாகக் கோபம் அடையாதே.
ஏனென்றால் கோபம் முட்டாளாக்கும்.
10 “இந்நாட்களைவிட ‘அக்கால நாட்கள்’ நன்றாக இருந்தன என்று சொல்லாதே.
என்ன நடந்தது?” என்று கேட்காதே.
அந்தக் கேள்வியைக் கேட்கும்படி ஞானம் நம்மை வழிநடத்தாது.
11 உன்னிடம் செல்வம் இருக்குமானால் ஞானம் அதைவிடச் சிறந்தது. உண்மையில் ஞானமுள்ளவர்கள் தேவைக்கு மிகுதியாகவே செல்வத்தைப் பெறுகிறார்கள். 12 ஞானமுள்ளவனால் செல்வந்தனாக முடியும். ஞானம் அதன் சொந்தக்காரனைப் பாதுகாக்கும்.
13 தேவனால் படைக்கப்பட்ட பொருட்களைப் பாருங்கள். ஒருவேளை அது தவறு என்று நினைத்தாலும் உன்னால் எதையும் மாற்ற முடியாது. 14 வாழ்க்கை நல்லதாக இருந்தால், அனுபவி. வாழ்க்கை கடினமாக இருக்கும்போது தேவன் நமக்கு நல்ல காலத்தையும் கஷ்டகாலத்தையும் கொடுக்கிறார் என்று நினைத்துக்கொள். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பது எவருக்கும் தெரியாது.
ஜனங்களால் உண்மையில் நல்லவர்களாக முடியாது
15 எனது குறுகிய வாழ்வில் நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். நல்லவர்கள் இளமையிலேயே மரித்துப்போகிறார்கள். தீயவர்கள் நீண்ட காலம் வாழ்வதையும் பார்த்திருக்கிறேன். 16-17 ஏன் நீ உன்னையே கொன்றுகொள்கிறாய். அதிக நல்லவனாகவும் அதிக கெட்டவனாகவும் இராதே. நீ அதிக ஞானமுள்ளவனாகவும் அதிக முட்டாளாகவும் இராதே. உனக்குரிய காலத்திற்கு முன் நீ ஏன் மரிக்கவேண்டும்?
18 இதில் கொஞ்சம் அதில் கொஞ்சமுமாய் இருக்க முயற்சிசெய். தேவனுடைய பக்தர்களும் கூட கொஞ்சம் நல்லவர்களாகவும் கொஞ்சம் தீயவர்களாகவும் இருக்கின்றனர். 19-20 பாவமே செய்யாமல் எப்பொழுதும் நல்லதையே செய்துகொண்டிருக்கிற மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை. ஞானம் ஒருவனுக்குப் பலத்தைக்கொடுக்கிறது. பட்டணத்திலுள்ள பத்து முட்டாள் தலைவர்களைவிட ஒரு ஞானவான் பலமுள்ளவன்.
21 ஜனங்கள் சொல்லுகின்ற அனைத்தையும் நீ கேட்காதே. உனது சொந்த வேலைக்காரனே உனக்கு எதிராகப் பேசுவதை நீ கேட்கலாம். 22 மற்றவர்களைப்பற்றி நீயே பல தடவை அவதூறு சொல்லியிருப்பதை நீ அறியலாம்.
23 நான் எனது ஞானத்தைப் பயன்படுத்தி இவற்றைப்பற்றிச் சிந்தித்தேன். நான் உண்மையில் ஞானமுள்ளவனாக இருக்க விரும்பினேன். ஆனால் அது முடியாமற்போனது. 24 ஏன் பல விஷயங்கள் இவ்வாறு இருக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இதனைப் புரிந்துக்கொள்வது எவருக்கும் கடினம்தான். 25 நான சற்றுக் கடினப்பட்டு முயன்று ஞானத்தைப் பெற்றேன். நான், எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுகொள்ள விரும்பினேன்.
நான் என்ன கற்றுக்கொண்டேன்? கெட்டவனாக இருப்பது முட்டாள்தனம் என்பதைக் கற்றேன். ஒரு அறிவற்றவனைப்போன்று நடிப்பதும் பைத்தியகாரத்தனமானதுதான். 26 சில பெண்கள் கண்ணிகளைப்போன்று ஆபத்தானவர்கள் என்பதை அறிந்துக்கொண்டேன். அவர்களின் இதயம் வலைகளைப் போன்றது, அவர்களது கைகள்
சங்கிலிகளைப் போன்றவை. இத்தகைய பெண்களிடம் அகப்பட்டுக்கொள்வது மரணத்தைவிட பயங்கரமானது. தேவனைப் பின்பற்றுகிற ஒருவன் இத்தகைய பெண்களிடம் இருந்து விலகி ஓடுவான். பாவியோ இவர்களிடம் அகப்பட்டுக்கொள்வான்.
27-28 பிரசங்கி, “என்னால் எத்தகைய பதிலைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதற்காகவே நான் இவற்றையெல்லாம் சேர்க்கிறேன். நான் இன்னும் பதில்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் ஆயிரத்தில் ஒருவனை நல்லவனாகக் கண்டுபிடித்தேன். ஆனாலும் ஒரு நல்ல பெண்ணைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.”
29 “தேவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார். ஆனால் ஜனங்கள் கெட்டுப்போக பல வழிகளைக் கண்டுபிடித்தனர். இதுவும் நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடமாகும்” என்று கூறுகிறான்.
ஞானமும் வல்லமையும்
8 ஒரு ஞானமுள்ளவனைப்போன்று எவராலும் ஒன்றைப் புரிந்துக்கொள்ளவும், விளக்கவும் முடியாது. அவனது ஞானம் அவனை மகிழ்ச்சிப்படுத்துகிறது. இது ஒருவனது சோகமுள்ள முகத்தை மகிழ்ச்சியுள்ளதாக மாற்றும்.
2 நீங்கள் அரசனின் கட்டளைகளுக்கு எப்பொழுதும் கீழ்ப்படிய வேண்டும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீ இதனைச் செய்யவேண்டும். ஏனென்றால் ஏற்கெனவே தேவனுக்கு வாக்களித்து இருக்கிறாய். 3 அரசனுக்கு ஆலோசனை சொல்ல அஞ்சவேண்டாம். தவறான ஒன்றுக்கு ஆதரவு செலுத்தவேண்டாம் அரசன் தனக்குப் பிடித்தமான ஆணைகளையே தருகிறான். 4 அரசனுக்கு ஆணைகளைத் தரும் அதிகாரம் உள்ளது. எதைச் செய்ய வேண்டும் என்று எவரும் அவனுக்குச் சொல்வதில்லை. 5 அரசனது ஆணைகளுக்குக் கீழ்படிந்தால் ஒருவன் பாதுகாப்பாக இருப்பான். இதைச் செய்ய வேண்டிய சரியான கால்த்தை ஞானமுள்ளவன் அறிவான். சரியானவற்றை எப்போது செய்யவேண்டும் என்பதையும் அவன் அறிவான்.
6 எல்லாவற்றையும் செய்ய ஒருவனுக்குச் சரியான காலமும், சரியான வழியும் உள்ளன. எனவே ஒவ்வொருவனும் ஒரு வாய்ப்பை எடுத்துக்கொண்டு எதைச் செய்யவேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதில் குழப்பம் இருந்தாலும், பல துன்பங்களில் உழன்றாலும் ஒருவன் அதனைச் செய்யவேண்டும். 7 ஏனென்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எவரும் அவனிடம் சொல்வதில்லை.
8 எவருக்கும் தன் ஆவியை விடாமல் தங்கவைக்கும் வலிமை இல்லை. எவருக்கும் தன் சாவைத் தடுக்கும் அதிகாரமில்லை. போர்க் காலத்தில் தன் விருப்பப்படி போய்வர ஒரு போர் வீரனுக்கு சுதந்திரம் இல்லை. இதுபோலவே, ஒருவன் பாவம் செய்தால் அது அவனை சுதந்திரம் உள்ளவனாக இருக்கும்படி செய்யாது.
9 நான் அனைத்தையும் பார்த்தேன். உலகில் நடைபெறுகிற அத்தனையையும் பற்றி நான் கடுமையாகச் சிந்தித்தேன். ஜனங்கள் எப்பொழுதும் மற்றவர்களை ஆள்வதற்கான வல்லமையைப் பெறுவதற்காகப் போராடுகிறார்கள் என்பதை நான் பார்த்தேன். இது அவர்களுக்குக் கெட்டது.
10 தீய ஜனங்களுக்கு அழகான சிறந்த சவ அடக்கங்கள் நடைபெறுவதை நான் பார்த்தேன். அடக்கச் சடங்கு முடிந்து ஜனங்கள் வீட்டிற்குப் போனதும் மரித்துப்போன தீயவர்களைப்பற்றி நல்லவற்றைக் கூறினார்கள். இத்தகைய காரியங்கள் தீயவன் வாழ்ந்த அதே நகரத்திலேயே நடந்து வருகின்றன. இது அர்த்தமற்றது.
நியாயம், வெகுமதிகள், தண்டனை
11 சில நேரங்களில் ஜனங்கள் தாம் செய்கிற தீமைக்கு உடனே தண்டிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்கான தண்டனை மெதுவாக வரும். இது மற்றவர்களையும் தீமை செய்யும்படி தூண்டும்.
12 ஒரு பாவி நூற்றுக்கணக்கான தீமைகளைச் செய்யலாம். அவனுக்கு நீண்ட வாழ்க்கையும் இருக்கலாம். ஆனால், தேவனுக்குக் கீழ்ப்படிவதும் மரியாதை செலுத்துவதும் இன்னும் சிறந்ததாக நான் கருதுகிறேன். 13 தீயவர்கள் தேவனுக்கு மரியாதை செலுத்துவதில்லை. எனவே அவர்கள் நல்லவற்றைப் பெறுவதில்லை. அவர்கள் நீண்ட வாழ்க்கையைப் பெறுவதில்லை. சூரியன் அஸ்தமிக்கும்போது நிழல் நீண்டு தோன்றுவதுபோன்று, அவர்களின் வாழ்க்கை வளருவதில்லை.
14 நியாயமாகத் தோன்றாத சில காரியமும் உலகில் நடக்கிறது. கெட்டவைகள் கெட்டவர்களுக்கும், நல்லவைகள் நல்லவர்களுக்கும் நிகழவேண்டும். ஆனால் சில நேரங்களில் நல்லவர்களுக்கு தீயவைகளும் தீயவர்களுக்கு நல்லவைகளும் ஏற்படலாம். எனினும் அவை நல்லதன்று. 15 எனவே நான் வாழ்க்கையை அனுபவிப்பதுதான் நல்லது என்று முடிவு செய்தேன். ஏனென்றால், ஜனங்கள் தம் வாழ்வில் செய்யவேண்டிய நல்ல காரியங்களாவன: உண்பது, குடிப்பது, வாழ்க்கையை அனுபவிப்பதுமேயாகும். தேவன் இவ்வுலகில் தங்களுக்குக்கொடுத்த கடினமான வேலையில் இன்பம் காண்பதற்காகவாவது இவை உதவும்.
தேவன் செய்வதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை
16 இந்த வாழ்வில் ஜனங்கள் செய்வதை எல்லாம் நான் கவனமாகப் படித்திருக்கிறேன். ஜனங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். அவர்கள் இரவும் பகலும் உழைக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தூங்குவதே இல்லை. 17 நானும் தேவன் செய்கிறவற்றைப் பார்த்தேன். உலகில் தேவன் செய்கிறவற்றை ஜனங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒருவன் அதனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் அவனால் முடியாது. ஞானமுள்ள ஒருவன் தேவனுடைய செயல்களைப் புரிந்துகொண்டதாகக் கூறலாம். ஆனால் அதுவும் உண்மையில்லை. இவற்றையெல்லாம் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.
2008 by World Bible Translation Center