Beginning
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று
133 சகோதரர்கள் ஒருமித்து உட்கார்ந்து உண்மையாகவே ஒன்றுபடுவது
மிகவும் நல்லதும் இன்பமுமானது.
2 அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு,
கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும்
வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது.
3 எர்மோன் மலையிலிருந்து சீயோன் மலையில் வீழும் மென்மையான மழையைப்போன்றுமிருக்கும்.
ஏனெனில் சீயோனில் இருந்துதான் நித்திய வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தை கர்த்தர் தந்தருளினார்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
134 கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்!
இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.
2 ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி
கர்த்தரைப் போற்றுங்கள்.
3 கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக.
கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
135 கர்த்தரைத் துதிப்போம்! கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்!
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
2 தேவனுடைய ஆலய முற்றத்தில்,
கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
3 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.
4 கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.
இஸ்ரவேல் தேவனுக்கு உரியது.
5 கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்!
நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!
6 பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான.
சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.
7 பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார்.
தேவன் மின்னலையும் மழையையும் உண்டாக்குகிறார்.
தேவன் காற்றையும் உண்டாக்குகிறார்.
8 எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும்,
எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார்.
9 எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார்.
பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார்.
10 தேவன் பல தேசங்களை முறியடித்தார்.
தேவன் வல்லமையுடைய அரசர்களைக் கொன்றார்.
11 எமோரியரின் அரசனாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார்.
பாஷானின் அரசனாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார்.
கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார்.
12 தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார்.
அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
13 கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும்.
கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.
14 கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார்.
ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார்.
15 பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே.
அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே.
16 சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை.
சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.
17 சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை.
சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை.
18 அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள்.
19 இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
ஆரோனின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
20 லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
21 கர்த்தர் சீயோனிலிருந்தும்,
அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார்.
கர்த்தரைத் துதியுங்கள்!
136 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
2 தேவாதி தேவனைத் துதியங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
3 கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
4 ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
5 வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
6 தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
7 தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
8 தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
9 தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
10 எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
11 தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
12 தேவன் அவரது மிகுந்த வல்லமையையும், பெலத்தையும் காட்டினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
13 தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
14 தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
15 தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
16 தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
17 தேவன் வல்லமையுள்ள அரசர்களைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
18 தேவன் பலமுள்ள அரசர்களைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
19 தேவன் எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
20 தேவன் பாஷானின் அரசனாகிய ஓகைத் தோற்கடித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
21 தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
22 இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
23 நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
24 தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
25 தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார்.
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்!
அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
137 பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து
சீயோனை நினைத்தவாறே அழுதோம்.
2 அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள்
கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.
3 பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள்.
அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
4 ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய
பாடல்களைப் பாட முடியவில்லை!
5 எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால்,
நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன்.
6 எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால்,
நான் என்றும் பாடேன்.
நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன்.
7 ஆண்டவரே ஏதோமியர்களை நினையும்.
எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், “அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்”
என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
8 பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்!
நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
எங்களை நீ துன்புறுத்தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
9 உனது குழந்தைகளை இழுத்துச்சென்று,
அவர்களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
தாவீதின் ஒரு பாடல்
138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர்.
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று
139 கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர்.
என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
2 நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர்.
வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.
3 கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர்.
நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.
4 கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள்
என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.
5 கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன்புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர்.
நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.
6 நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.
நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.
7 நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது.
கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.
8 கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர்.
மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.
9 கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர்.
நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.
10 அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும்,
என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.
11 கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும்,
பகல் இரவாக மாறிப்போயிற்று.
“இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.
12 ஆனால் கர்த்தாவே,
இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை.
இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.
13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர்.
என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.
14 கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர்.
நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!
15 நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர்.
என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர்.
16 என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர்.
உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர்.
நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.
17 உமது எண்ணங்கள் எனக்கு
முக்கியமானவை.
தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.
18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும்.
நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.
19 தேவனே, கெட்ட ஜனங்களைக் கொல்லும்.
அக்கொலைக்காரரை என்னிடமிருந்து அகற்றிவிடும்.
20 அத்தீயோர் உம்மைக் குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
அவர்கள் உம் நாமத்தை குறித்துத் தீயவற்றைக் கூறுகிறார்கள்.
21 கர்த்தாவே, உம்மை வெறுப்போரை நான் வெறுக்கிறேன்.
உமக்கெதிராகத் திரும்புவோரை நான் வெறுக்கிறேன்.
22 அவர்களை முற்றிலும் நான் வெறுக்கிறேன்.
உம்மைப் பகைப்பவர்கள் எனக்கும் பகைவர்களே.
23 கர்த்தாவே, என்னைப் பார்த்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்.
என்னைச் சோதித்து என் நினைவுகளை அறிந்துகொள்ளும்.
24 என்னிடம் கொடிய எண்ணங்கள் உள்ளனவா எனப்பாரும்.
நித்தியத்திற்குரிய பாதையில் என்னை வழிநடத்தும்.
2008 by World Bible Translation Center