Beginning
தாவீதின் விண்ணப்பம்
86 நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன்.
கர்த்தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும்.
2 கர்த்தாவே, நான் உம்மைப் பின்பற்றுபவன்.
தயவாய் என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்! நான் உமது பணியாள்.
நீரே என் தேவன். நான் உம்மை நம்புகிறேன்.
எனவே என்னைக் காப்பாற்றும்.
3 என் ஆண்டவரே, என்னிடம் தயவாயிரும்.
நாள் முழுவதும் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
4 ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன்.
என்னை மகிழ்ச்சியாக்கும். நான் உமது பணியாள்.
5 ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர்.
உமது ஜனங்கள் உதவிக்காக உம்மைக் கூப்பிடுவார்கள்.
நீர் உண்மையாகவே அந்த ஜனங்களை நேசிக்கிறீர்.
6 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
இரக்கத்திற்கான ஜெபத்திற்குச் செவிகொடும்.
7 கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
நீர் பதிலளிப்பீர் என்பதை நான் அறிவேன்.
8 தேவனே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
நீர் செய்தவற்றை வேறெவரும் செய்ய முடியாது.
9 ஆண்டவரே, நீர் ஒவ்வொருவரையும் உண்டாக்கினீர்.
அவர்கள் எல்லோரும் வந்து உம்மை தொழுதுகொள்வார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் உமது நாமத்தை பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
10 தேவனே, நீர் மேன்மையானவர்!
நீர் அற்புதமான காரியங்களைச் செய்கிறீர்.
நீரே, நீர் மட்டுமே தேவன்!
11 கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும்.
நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன்.
உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே
என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும்.
12 என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன்.
13 தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர்.
கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது.
அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை.
15 ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன்.
நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர்.
16 தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும்.
நான் உமது பணியாள்.
எனக்குப் பெலனைத் தாரும்.
நான் உமது பணியாள்.
என்னைக் காப்பாற்றும்.
17 தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும்.
என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள்.
நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும்.
கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்
87 எருசலேமின் பரிசுத்த மலைகளில் தேவன் தமது ஆலயத்தைக் கட்டினார்.
2 இஸ்ரவேலின் வேறெந்த இடத்தைக் காட்டிலும் சீயோனின் வாசற்கதவுகளை கர்த்தர் நேசிக்கிறார்.
3 தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
4 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
அவர்களுள் சிலர் எகிப்திலும் பாபிலோனிலும் வசிக்கிறார்கள்.
அவர்களுள் சிலர் பெலிஸ்தியாவிலும், தீருவிலும், எத்தியோப்பியாவிலும் பிறந்தார்கள்.
5 சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார்.
மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
6 தேவன் தமது எல்லா ஜனங்களின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.
ஒவ்வொருவனும் எங்கே பிறந்தான் என்பதையும் தேவன் அறிகிறார்.
7 விசேஷ ஓய்வு நாட்களைக் கொண்டாடுவதற்கு தேவனுடைய ஜனங்கள் எருசலேமுக்குப் போகிறார்கள்.
அவர்கள் மிக மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்.
அவர்கள், “எல்லா நல்லவையும் எருசலேமிலிருந்து வருகின்றன” என்றார்கள்.
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.
88 தேவனாகிய கர்த்தாவே, நீரே எனது மீட்பர்.
இரவும் பகலும் நான் உம்மை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
2 தயவாய் என் ஜெபங்களைக் கவனித்துக் கேளும்.
இரக்கத்திற்காய் வேண்டும் என் ஜெபங்களுக்குச் செவிகொடும்.
3 இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது,
நான் விரைவில் மரிப்பேன்.
4 ஏற்கெனவே ஜனங்கள் என்னை மரித்தவனைப் போன்றும்
வாழ பெலனற்ற மனிதனைப் போன்றும் கருதி நடத்துகிறார்கள்.
5 மரித்தோரிடம் என்னைத் தேடிப்பாருங்கள்.
உங்களிடமிருந்தும் உங்கள் பாதுகாப்பிலிருந்தும் தொடர்பிழந்த நீங்கள் மறந்து போன மரித்த ஜனங்களில் ஒருவனைப் போலவும், கல்லறையில் கிடக்கும் பிணத்தைப்போலவும் நான் இருக்கிறேன்.
6 பூமியிலுள்ள அந்தத் துவாரத்தில் நீர் என்னை வைத்தீர்.
ஆம், நீர் என்னை இருண்ட இடத்தில் வைத்தீர்.
7 தேவனே, நீர் என்னிடம் கோபமாயிருந்தீர், என்னைத் தண்டித்தீர்.
8 என் நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தார்கள்.
யாரும் தொடவிரும்பாத ஒருவனைப் போன்றும் அவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்.
நான் வீட்டில் அடைக்கப்பட்டேன், நான் வெளியே செல்ல முடியவில்லை.
9 என் எல்லாத் துன்பங்களுக்காகவும் அழுவதால் என் கண்கள் புண்படுகின்றன.
தேவனே, உம்மிடம் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன்!
ஜெபத்தில் என் கரங்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன்.
10 கர்த்தாவே, மரித்தவர்களுக்காக அற்புதங்கள் நிகழ்த்துவீரா?
ஆவிகள் எழுந்து உம்மைத் துதிக்குமா? இல்லை!
11 கல்லறைகளில் இருக்கும் மரித்தோர் உமது அன்பைக் குறித்துப் பேசமுடியாது.
மரித்தோரின் உலகத்திலுள்ளவர்கள் உமது உண்மையைக் குறித்துப் பேசமுடியாது.
12 இருளில் கிடக்கும் மரித்தோர் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப் பார்க்க முடியாது.
மறக்கப்பட்டோரின் உலகிலுள்ள மரித்தோர் உமது நன்மையைக் குறித்துச் சொல்ல முடியாது.
13 கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டுமென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
14 கர்த்தாவே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
ஏன் எனக்குச் செவிகொடுக்க மறுக்கிறீர்?
15 என் இளமைப் பருவத்திலிருந்தே நான் சோர்ந்து நோயாளியாயிருக்கிறேன்.
உமது கோபத்தால் துன்புற்றேன், நான் திக்கற்றவன்.
16 கர்த்தாவே, நீர் என்னிடம் கோபம் கொண்டிருந்தீர்.
உமது தண்டனை என்னைக் கொன்று கொண்டிருக்கிறது.
17 வலியும் நோயும் எப்போதும் என்னை வருத்துகின்றன.
என் வலியிலும் நோயிலும் நான் அமிழ்ந்துகொண்டிருப்பதாக உணருகிறேன்.
18 கர்த்தாவே, என் நண்பர்களையும், அன்பர்களையும், என்னை விட்டு விலகுமாறு செய்தீர்.
இருள் மட்டுமே என்னிடம் நிலைகொண்டது.
எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல்
89 கர்த்தருடைய அன்பைக்குறித்து என்றைக்கும் நான் பாடுவேன்.
என்றென்றுமுள்ள அவரது உண்மையைப்பற்றி நான் பாடுவேன்.
2 கர்த்தாவே, உமது அன்பு என்றென்றும் நிலைக்கும் என்று உண்மையாகவே நான் நம்புகிறேன்.
உமது உண்மை வானத்தைப்போலத் தொடர்கிறது.
3 தேவன், “நான் தேர்ந்தெடுத்த அரசனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.
4 தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன்.
என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.
5 கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர்.
வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும்.
ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும்.
பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.
6 பரலோகத்தில் கர்த்தருக்கு நிகரானவர் எவருமில்லை.
“தெய்வங்களில்” எவரையும் கர்த்தரோடு ஒப்பிட முடியாது.
7 தேவன் பரிசுத்தமானவரைச் சந்திக்கிறார்.
அவருடைய தூதர்கள் அவரைச் சுற்றியிருப்பார்கள்.
அவர்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிப்பார்கள்.
அவரைக் கண்டு பயபக்தியோடு நிற்பார்கள்.
8 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
உம்மை நாங்கள் முழுமையாக நம்பமுடியும்.
9 நீர் பெருமிதத்தோடு கடலை ஆளுகிறீர்.
அதன் கோபமான அலைகளை நீர் அமைதிப்படுத்த முடியும்.
10 தேவனே, நீர் ராகாபைத் தோற்கடித்தீர்.
உமது சொந்த வல்லமைமைமிக்க கரங்களால் நீர் உமது பகைவர்களைச் சிதறடித்தீர்.
11 தேவனே, பரலோகத்திலும், பூமியிலுமுள்ள அனைத்தும் உமக்குரியவை.
உலகையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே உண்டாக்கினீர்.
12 வடக்கு, தெற்கு, அனைத்தையும் நீர் படைத்தீர்.
தாபோர் மலையும் எர்மோன் மலையும் உமது நாமத்தைத் துதித்துப் பாடும்.
13 தேவனே, உமக்கு வல்லமை உண்டு!
உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே!
14 உண்மையிலும் நீதியிலும் உமது அரசு கட்டப்பட்டது.
அன்பும் நம்பிக்கையும் உமது சிங்காசனத்திற்கு முன்பு நிற்கும் பணியாட்கள்.
15 தேவனே, உம்மை நேர்மையாகப் பின்பற்றுவோர் உண்மையிலேயே மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் உமது தயவின் ஒளியில் வாழ்கிறார்கள்.
16 உமது நாமம் அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக்கும்.
அவர்கள் உமது நன்மையைத் துதிக்கிறார்கள்.
17 நீரே அவர்களின் வியக்கத்தக்க பெலன்.
அவர்களுடைய வல்லமை உம்மிடமிருந்து வரும்.
18 கர்த்தாவே, நீரே எமது பாதுகாவலர்.
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரே எங்கள் ராஜா.
19 உம்மைப் பின்பற்றுவோருக்குத் தரிசனம் தந்த நீர், “கூட்டத்திலிருந்து ஒரு இளைஞனை நான் தேர்ந்தெடுத்தேன்.
அந்த இளைஞனை முக்கியமானவனாக்கினேன். அந்த இளம் வீரனை ஆற்றலுடையவனாக்கினேன்.
20 நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன்.
விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன்.
எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன்.
22 தேர்ந்தெடுத்த அந்த அரசனைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று.
தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
23 அவனது பகைவர்களை நான் அழித்தேன்.
நான் தேர்ந்தெடுத்த அரசனைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.
24 நான் தேர்ந்தெடுத்த அரசனை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன்.
அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
25 நான் தேர்ந்தெடுத்த அரசனைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன்.
அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான்.
26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை.
நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான்.
27 நான் அவனை என் முதற்பேறான மகனாக்குவேன்.
அவன் பூமியின் முதன்மையான அரசனாக இருப்பான்.
28 நான் தேர்ந்தெடுத்த அரசனை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும்.
அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29 அவன் குடும்பம் என்றென்றும் தொடரும்,
அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும்.
30 அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும்,
அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
31 நான் தேர்ந்தெடுத்த அரசனின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி,
என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால்,
32 அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.
33 ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன்.
நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.
34 நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன்.
நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன்.
35 எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன்.
நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்!
36 தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும்.
37 சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும்.
வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று.
அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.
38 ஆனால் தேவனே, நீர் தேர்ந்தெடுத்த அரசனிடம் கோபங்கொண்டு,
அவனைத் தன்னந்தனியாகவிட்டீர்.
39 நீர் உமது உடன்படிக்கையைத் தள்ளினீர்.
நீர் அரசனின் கிரீடத்தைத் தரையிலே வீசினீர்.
40 அரசனின் நகரத்தின் சுவர்களை நீர் கீழே வீழ்த்தினீர்.
அவனது கோட்டைகளையெல்லாம் அழித்தீர்.
41 கடந்து செல்லும் ஜனங்கள் அவனிடமிருந்த பொருட்களைத் திருடினார்கள்.
அவனது அயலார் அவனைக் கண்டு நகைத்தனர்.
42 நீர் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர்.
அவனது பகைவர்கள் போரில் அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர்.
43 தேவனே, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உதவினீர்.
உமது அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை.
44 நீர் அவனை வெல்ல விடவில்லை.
நீர் அவனது சிங்காசனத்தை தரையில் வீசினீர்.
45 நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர்.
நீர் அவனை அவமானப்படுத்தினீர்.
46 கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்?
எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்?
என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா?
47 என் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும்.
குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படி நீர் எங்களைப் படைத்தீர்.
48 ஒருவனும் வாழ்ந்து, பின் மடியாமல் இருப்பதில்லை.
ஒருவனும் கல்லறைக்குத் தப்புவதில்லை.
49 தேவனே, கடந்த காலத்தில் நீர் காட்டிய அன்பு எங்கே?
நீர் தாவீதின் குடும்பத்திற்கு நேர்மையாக இருப்பதாக அவனுக்கு வாக்குப்பண்ணினீர்.
50-51 ஆண்டவரே, உமது பணியாளை எவ்வாறு ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதைத் தயவாய் நினைவு கூரும்.
கர்த்தாவே, உமது பகைவரின் எல்லா அவமானச் சொற்களுக்கும் நான் செவிகொடுக்க நேரிட்டது.
நீர் தேர்ந்தெடுத்த அரசனை அந்த ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள்.
52 கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்!
ஆமென், ஆமென்!
2008 by World Bible Translation Center