Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 51-57

இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்ற காலத்தில் இது பாடப்பட்டது.

51 தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும்.
    என் பாவங்களை அழித்துவிடும்.
தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும்.
    என் பாவங்களைக் கழுவிவிடும்.
    என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்!
நான் பாவம் செய்தேனென அறிவேன்.
    அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன்.
நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன்.
    தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன்.
நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன்.
    உமது முடிவுகள் நியாயமானவை.
நான் பாவத்தில் பிறந்தேன்.
    என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள்.
தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால்
    உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும்.
ஈசோப்பு செடியால் என்னைத் தூய்மையாக்கும்.
    பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்!
என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையைக் கூறும்.
    நீர் நொறுக்கின என் எலும்புகள் மீண்டும் மகிழ்ச்சியடையட்டும்.
எனது பாவங்களைப் பாராதேயும்!
    அவற்றை யெல்லாம் நீக்கிவிடும்
10 தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்!
    எனது ஆவியை மீண்டும் பலமாக்கும்.
11 என்னைத் தூரத் தள்ளாதேயும்!
    என்னிடமிருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடாதேயும்!
12 உமது உதவி என்னை மகிழ்விக்கிறது!
    மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும்.
    எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப்படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும்.
13 நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன்,
    அவர்கள் உம்மிடம் திரும்புவார்கள்.
14 தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக்காதேயும்.
    என் தேவனே, நீரே எனது மீட்பர்.
நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும்.
15     என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்!
16 நீர் பலிகளை விரும்பவில்லை.
    நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை!
17 தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே.
    தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருதயத்தோடு உம்மிடம் வருபவரை நீர் தள்ளிவிடமாட்டீர்.

18 தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்கமுடையவராகவும் இரும்.
    எருசலேமின் சுவர்களை எழுப்பும்.
19 அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும்.
    ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள்.

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அபிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறிய சமயத்தில் பாடப்பட்ட பாடல்.

52 பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்?
    நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய்.
நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய்.
நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய்.
    உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது.
    நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய்.
நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய்.
    உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.

நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும்.
எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்!
    அவர் உன்னை உனது வீட்டிலிருந்து [a] இழுத்து எறிவார்.
    அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.
நல்லோர் இதனைக் காண்பார்கள்.
    தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள்.
அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து,
    “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள்.
    அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.

ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன்.
    தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன்.
தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன்.
    நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன்.
    ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.

மகலாத் என்னும் கருவியை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு மஸ்கீல் என்னும் பாடல்.

53 தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான்.
    அத்தகைய மனிதர்கள் கெட்டவர்களாகவும் தீயவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருக்கிறார்கள்.
    அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதில்லை.
தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று
    பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள்.
    ஒவ்வொரு மனிதனும் தீயவன்.
நன்மையான காரியத்தைச் செய்பவன்
    ஒருவன் கூட இல்லை.

தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்!
    ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப்பதில்லை.
    தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார்.
ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள்.
    அத்தீயோர் இஸ்ரவேலரின் பகைவர்கள்.
அத்தீயோரை தேவன் தள்ளிவிட்டார்.
    எனவே தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள்.
அத்தீயோரின் எலும்புகளை தேவன் சிதறடிப்பார்.

சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக.
    தேவன், அவர்கள் வெற்றிபெற உதவுவார்.
அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது ஜனங்களை மீட்கும்போது யாக்கோபு களிகூருவான்.
    இஸ்ரவேல் மிகுந்த மகிழ்ச்சிகொள்வான்.

இசைக் கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்களுள் ஒன்று. சீப்பூரார் சவுலிடம் வந்து, “எங்கள் ஜனங்கள் மத்தியில் தாவீது ஒளிந்திருக்கிறார்” எனக் கூறிய காலத்தில் பாடியது.

54 தேவனே, உமது வல்லமையான நாமத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றும்.
    உமது வல்லமையை பயன்படுத்தி என்னை விடுதலையாக்கும்.
தேவன், என் ஜெபத்தைக்கேளும்.
    நான் கூறும் காரியங்களைக் கேளும்.
தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர்கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள்.
    அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.

பாருங்கள், என் தேவன் எனக்கு உதவுவார்.
    என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார்.
எனக்கு எதிராகத் திரும்பியுள்ள ஜனங்களை என் தேவன் தண்டிப்பார்.
    தேவன் எனக்கு உண்மையானவராக இருப்பார்.
    அவர் அந்த ஜனங்களை அறவே அழிப்பார்.

தேவனே, நான் மனவிருப்பத்தின்படி காணிக்கைகளை உமக்குத் தருவேன்.
    கர்த்தாவே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண்டுகிறேன்.
    எனது பகைவர்கள் தோற்கடிக்கப்படுவதை நான் பார்க்கட்டும்.

இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்குத் தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்.

55 தேவனே, என் ஜெபத்தைக் கேளும்.
    இரக்கத்திற்கான என் ஜெபத்தை ஒதுக்காதிரும்.
தேவனே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்.
    என் குறைகளை உம்மிடம் நான் முறையிடுவேன்.
என் பகைவன் என்னிடம் தீய காரியங்களைக் கூறினான்.
    கெட்ட மனிதர்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டார்கள்.
என் பகைவர்கள் கோபங்கொண்டு என்னைத் தாக்கினார்கள்.
    என்னை வீழ்த்தும்படி தொல்லைகளை எனக்குச் செய்தார்கள்.
என் இருதயம் எனக்குள் நடுங்கித் துன்புறுகிறது.
    நான் மரணபயம் அடைந்தேன்.
நான் அஞ்சி நடுங்கினேன்.
    பயத்தால் தாக்குண்டேன்.
ஒரு புறாவைப்போல் சிறகுகள் எனக்கு வேண்டுமென விரும்பினேன்.
    அப்போது நான் பறந்துபோய் ஓய்வுகொள்ளும் இடத்தைத் தேடியிருப்பேன்.
    நான் தூரத்திற்குப் போய், பாலைவனத்திற்குச் செல்வேன்.

நான் ஓடி தப்பித்துக்கொள்வேன்.
    துன்பங்களாகிய புயலிலிருந்து ஓடிவிடுவேன்.
9-10 என் ஆண்டவரே, அவர்கள் பொய்களை நிறுத்தும்.
    இந்நகரில் அதிகமான கொடுமைகளையும், சண்டைகளையும் நான் காண்கிறேன்.
என்னைச் சுற்றிலும் இரவும் பகலும் ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் குற்றங்களும், கொடுமைகளும் நிரம்பியுள்ளன.
    இந்த ஊரில் பயங்கரமான காரியங்கள் நிகழ்கின்றன.
11 தெருக்களில் பெருங்குற்றங்கள் நேரிடுகின்றன.
    ஜனங்கள் பொய்களைக்கூறி, எங்கும் ஏமாற்றுகிறார்கள்.

12 ஒரு பகைவன் என்னைத் தாக்கினால் நான் பொறுத்துக்கொள்வேன்.
    என் பகைவர்கள் என்னைத் தாக்கினால் நான் ஒளிந்துக்கொள்வேன்.
13 ஆனால் எனக்குச் சமமானவனும், என்னுடன் வாழ்பவனும்,
    என் நண்பனுமாகிய நீயே எனக்குத் தொல்லைகளைத் தந்துகொண்டிருக்கிறாய்.
14 நாங்கள் எங்கள் இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம்.
    தேவனுடைய ஆலயத்தில் நாங்கள் ஒருமித்து வழிப்பட்டோம்.

15 என் பகைவர்கள் அவர்கள் காலத்திற்கு முன்னே மரிப்பார்கள் என நம்புகிறேன்.
    அவர்கள் உயிரோடே புதைக்கப்படுவார்கள் என நம்புகிறேன்!
    ஏனெனில் அவர்கள் தங்கள் வீடுகளில் மிகப் பயங்கரமான காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.

16 உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன்.
    கர்த்தர் எனக்குப் பதில் தருவார்.
17 நான் தேவனோடு மாலை, காலை, நடுப்பகல் வேளைகளில் பேசுவேன்.
    என் முறையீடுகளை தேவனுக்குச் சொல்வேன். அவர் நான் கூறுபவற்றைக் கேட்கிறார்!
18 நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன்.
    ஆனால் தேவன் எல்லாவற்றிலும் என்னைக் காப்பாற்றி, என்னைப் பத்திரமாகத் திரும்பவும் அழைத்து வந்தார்.
19 தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார்.
    நித்திய அரசர் எனக்கு உதவுவார்.

20 என் பகைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றமாட்டார்கள்.
    அவர்கள் தேவனுக்குப் பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டார்கள்.
21 என் பகைவர்கள் தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள்.
    அவர்கள் செய்வதாக ஒப்புக்கொள்ளும் காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
என் பகைவர்கள் மென்மையாகப் பேசுகிறார்கள்.
    அவர்கள் சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார்கள்.
ஆனால் உண்மையில் யுத்தங்களுக்குத் திட்டமிடுகிறார்கள்.
    அவர்கள் சொற்கள் எண்ணெயைப் போல் மிருதுவானவை.
    ஆனால் அவை கத்தியைப்போல் ஊடுருவக் கூடியவை.

22 உங்கள் கவலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
    அவர் உங்களை ஆதரிப்பார். நல்ல ஜனங்கள் தோல்வி காண்பதற்கு கர்த்தர் அனுமதியார்.
23 உடன்படிக்கையின் உமது பங்காக, தேவனே அந்தப் பொய்யர்களையும், கொலைக்காரர்களையும் அவர்களின் பாதி வாழ்க்கை கழியும் முன்பே அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிடும்!
    உடன்படிக்கையின் எனது பங்காக நான் உம்மேல் நம்பிக்கை வைப்பேன்.

“தூரத்து ஓக் மரத்தின் புறா” என்னும் இசையில் வாசிக்க இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்ற பாடல். பெலிஸ்தர் தாவீதை காத் என்னும் இடத்தில் பிடித்தபோது பாடியது.

56 தேவனே, ஜனங்கள் என்னைத் தாக்குகிறார்கள், நீர் என்மேல் இரக்கமாயிரும்.
    அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்து பகலும் இரவும் என்னோடு போரிடுகிறார்கள்.
என் பகைவர்கள் தொடர்ந்து என்னைத் தாக்குகிறார்கள்.
    என்னோடு போரிடுபவர்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்கள்.
நான் அஞ்சும்போது,
    உம்மிடம் நம்பிக்கை வைத்தேன்.
நான் தேவனை நம்புகிறேன், எனவே அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது!
    தேவன் எனக்குத் தந்த வாக்குறுதிக்காக தேவனைத் துதிப்பேன்.
என் பகைவர்களோ என் வார்த்தைகளை எப்போதும் புரட்டுகிறார்கள்.
    அவர்கள் எப்போதும் எனக்கெதிராகத் திட்டங்களை வகுக்கிறார்கள்.
என்னைக் கொல்லும் வகைதேடி,
    அவர்கள் ஒருமித்து ஒளிந்திருந்து என் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறார்கள்.
தேவனே, அவர்களைத் தப்பவிடாதேயும்.
    அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களை அந்நிய தேசத்தாரிடம் அனுப்பி அவர்களின் கோபத்தால் துன்புறச் செய்யும்.
என் வருத்தத்தை நீர் அறிகிறீர்.
    என் ஓயாத அழுகையை நீர் அறிகிறீர்.
    என் கண்ணீரை நீர் நிச்சயமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறீர்.

எனவே நான் உம்மிடம் உதவி வேண்டும்போது, என் பகைவர்களைத் தோல்வியடையச் செய்யும்.
    நீர் அதைச் செய்யக்கூடுமென்பதை அறிவேன். நீரே தேவன்!
10 தேவன் தந்த வாக்குறுதிக்காக நான் அவரைத் துதிப்பேன்.
    கர்த்தர் எனக்களித்த வாக்குறுதிக்காக நான் அவரைத் துதிப்பேன்.
11 நான் தேவனை நம்பியிருப்பதால் அஞ்சேன்.
    ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது!

12 தேவனே, நான் உமக்கு விசேஷ பொருத்தனைகளைப் பண்ணினேன்.
    நான் சொன்ன பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
    என் ஸ்தோத்திரபலியை உமக்குச் செலுத்துவேன்.
13 ஏனெனில் நீர் என்னை மரணத்தினின்று காத்தீர்.
    பிறரிடம் நான் தோல்வியடையாதவாறு செய்தீர்.
எனவே நான் தேவனை ஒளியில் தொழுதுகொள்வேன்.
    அதை ஜீவனுள்ளோர் மட்டும் பார்க்க முடியும்.

“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் பாடல். சவுலிடமிருந்து தப்பி தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது பாடியது.

57 தேவனே, என்னிடம் இரக்கமாயிரும்.
    என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும்.
துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில்,
    பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.
மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன்.
    தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார்.
பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார்.
    எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார்.
    தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார்.
என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது.
    என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் மனிதரை உண்ணும் சிங்கங்களைப் போலிருக்கிறார்கள்.
    அவர்கள் பற்கள் ஈட்டிகளைப் போலவும்,
    அம்புகளைப் போலவும் கூர்மையானவை.
    அவர்கள் நாவுகள் வாளைப் போன்று கூரியவை.

தேவனே, நீர் வானங்களின்மேல் மிக உயரத்தில் இருக்கிறீர்.
    உமது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர்.
    நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள்.
    ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள்.

ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார்.
    அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார்.
    நான் அவரைத் துதித்துப் பாடுவேன்.
என் ஆத்துமாவே, எழுந்திரு.
    வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக!
என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன்.
    ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.
10 உமது உண்மையான அன்பு
    வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
11 தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார்.
    அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center