Beginning
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்
46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
2 எனவே பூமி நடுங்கினாலும்,
மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
3 கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.
4 உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
5 அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
6 தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
7 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
8 கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
9 பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.
10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.
11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.
கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்
47 சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள்,
தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள்.
2 உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர்.
பூமியெங்கும் அவர் பேரரசர்.
3 பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார்.
அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார்.
4 தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந்தெடுத்தார்.
தான் நேசித்த யாக்கோபிற்காக அந்த அதிசய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார்.
5 எக்காளமும் கொம்பும் முழங்க,
கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார்.
6 தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
7 அகில உலகத்திற்கும் தேவனே அரசர்.
துதிப் பாடல்களைப் பாடுங்கள்.
8 பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார்.
எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார்.
9 ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத்
தேசங்களின் தலைவர்கள் சந்திப்பார்கள்.
எல்லாத் தேசங்களின் எல்லாத் தலைவர்களும் தேவனுக்குரியவர்கள்.
தேவனே எல்லோரிலும் மேன்மையானவர்.
கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்
48 கர்த்தர் மேன்மையானவர்.
தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர்.
2 தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது.
அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும்.
சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை.
அதுவே பேரரசரின் நகரமாகும்.
3 அந்நகரத்து அரண்மனைகளில்
தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார்.
4 ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து,
இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள்.
அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.
5 அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள்.
6 அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
7 தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால்
பெருங்கப்பல்களை உடைத்தீர்.
8 ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம்.
ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம்.
தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.
9 தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம்.
10 தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர்,
பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர்.
நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.
11 தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது.
யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன.
12 சீயோனைச் சுற்றி நட.
நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார்.
13 அந்த உயர்ந்த சுவர்களைப் பார்.
சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார்.
வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.
14 இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன்.
அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.
கோராகின் புத்திரரின், இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்
49 எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள்.
பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள்.
2 ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும்.
3 ஞானமும் புத்திசாலித்தனமுமான சில செய்திகளை நான் உங்களுக்குக் கூறுவேன்.
4 நான் உவமையான கதைகளைக் கேட்டேன்.
இப்போது என் சுரமண்டலத்தை இசைத்து அக்கதைகளின் பாடல்களை உங்களுக்குப் பாடுவேன்.
5 தொல்லைகள் வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்?
தீயோர் என்னைச் சூழ்ந்து அகப்படுத்த முயலும்போது நான் ஏன் அஞ்சவேண்டும்?
6 பலமும் செல்வமும் தங்களைப் பாதுகாக்கு மென்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் மூடர்களே.
7 மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது.
நீ தேவனுக்கு லஞ்சம் தர முடியாது.
8 ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை
ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது.
9 என்றென்றும் வாழும் உரிமையைப் பெறவும்,
கல்லறையில் தன் உடல் அழியாமல் காக்கவும், தேவையான பணத்தை ஒருவன் ஒருபோதும் அடைய முடியாது.
10 பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள்.
பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள்.
11 கல்லறையே என்றென்றும் ஒருவனது புது வீடாகும்.
அவர்களுக்குச் சொந்தமான பல நிலங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
12 சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது.
எல்லோரும் மிருகங்களைப்போலவே மடிவார்கள்.
13 மூடரான மனிதருக்கும்,
தங்கள் செல்வங்களினால் திருப்தியடைந்திருக்கிற அனைவருக்கும் இதுவே சம்பவிக்கிறது.
14 எல்லா ஜனங்களும் ஆட்டு மந்தையைப் போன்றே இருக்கின்றனர்.
கல்லறையே அவர்கள் வாசஸ்தலம், மரணமே அவர்கள் மேய்ப்பன்.
அவர்கள் சரீரங்கள் அழிந்து கல்லறைக்குள் நாறும்.
15 ஆனால் தேவன் எனக்காக விலையைக் கொடுத்து என் உயிரை மீட்பார்.
கல்லறையின் வலிமையிலிருந்து என்னை அவர் மீட்பார்!
16 சிலர் செல்வந்தராயிருப்பதினால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
சிலர் பெரிய அழகிய மாளிகைகளில் வசிப்பதால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
17 அவர்கள் இறக்கும்போது தங்களோடு எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லமாட்டார்கள்.
அந்த அழகிய பொருட்களில் எதையும் அவர்கள் எடுத்துச் செல்லமுடியாது.
18 மனிதர்கள் வாழ்நாளின்போது தேவனை வாழ்த்தவேண்டும்.
தேவன் மனிதருக்கு நல்லவற்றைச் செய்கையில் அவர்கள் தேவனை வாழ்த்தவேண்டும்.
19 அந்த ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களோடு சென்று அடையுங்காலம் வரும்.
அவர்கள் மீண்டும் பகலின் ஒளியைக் காண்பதில்லை.
20 ஜனங்கள் செல்வத்தைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள முடியாது.
மிருகங்களைப் போலவே ஒவ்வொருவனும் மரிப்பான்.
ஆசாபின் பாடல்களில் ஒன்று
50 தெய்வங்களுக்கெல்லாம் தேவனாகிய கர்த்தர் பேசுகிறார்.
சூரியன் உதிக்குமிடத்திலிருந்து அது மறைகிற இடம் வரைக்குமுள்ள பூமியின் எல்லா ஜனங்களையும் அழைக்கிறார்.
2 சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவன் அழகானவர்.
3 நம் தேவன் வருகிறார், அவர் அமைதியாக இரார்.
அவருக்கு முன்னே நெருப்பு எரியும். அவரைச் சூழ்ந்து புயல் வீசும்.
4 தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு
நமது தேவன் பூமியையும் வானத்தையும் அழைக்கிறார்.
5 தேவன் கூறுகிறதாவது, “என்னைப் பின்பற்றுகிறவர்களே,
என்னைச் சூழ்ந்து நில்லுங்கள், என்னைச் சூழ்ந்து நில்லுங்கள்.
என்னை வணங்குகிறவர்களே, வாருங்கள்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம்.”
6 தேவனே நியாயாதிபதி,
வானங்கள் அவரது நன்மைகளைக் கூறும்.
7 “எனது ஜனங்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்!
இஸ்ரவேலின் ஜனங்களே, உங்களுக்கு எதிரான எனது சாட்சியைக் காட்டுவேன்.
நானே உங்கள் தேவன்.
8 உங்கள் பலிகளைக் குறித்து நான் குறை கூறமாட்டேன்.
எப்போதும் இஸ்ரவேலராகிய நீங்கள் உங்கள் தகனபலிகளை என்னிடம் கொண்டுவந்தீர்கள்.
ஒவ்வொரு நாளும் அவற்றை எனக்கு கொடுக்கிறீர்கள்.
9 உங்கள் வீட்டின் எருதுகளையோ
உங்கள் மந்தையின் ஆடுகளையோ நான் எடுத்துக்கொள்வதில்லை.
10 எனக்கு அம்மிருகங்கள் தேவையில்லை.
காட்டின் மிருகங்கள் எனக்குச் சொந்தமானவை.
மலைகளிலுள்ள பல்லாயிரம் மிருகங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமானவை.
11 உயர்ந்த மலையின் ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்.
மலையின்மேல் அசையும் பொருட்களெல்லாம் என்னுடையவை.
12 எனக்குப் பசியில்லை! எனக்குப் பசித்தாலும் உணவுக்காக உன்னைக் கேட்கமாட்டேன்.
உலகமும் அதன் அனைத்துப் பொருள்களும் எனக்குச் சொந்தமானவை.
13 எருதுகளின் மாமிசத்தை நான் புசிப்பதில்லை.
ஆடுகளின் இரத்தத்தை நான் குடிக்கமாட்டேன்” என்று தேவன் கூறுகிறார்.
14 எனவே ஸ்தோத்திர பலிகளை தேவனுக்குக் கொண்டுவந்து அவரோடு இருக்கும்படி வாருங்கள்.
நீங்கள் மிக உன்னதமான தேவனுக்கு வாக்குறுதி பண்ணினீர்கள்.
எனவே வாக்களித்த பொருள்களை அவருக்குக் கொடுங்கள்.
15 தேவன், “இஸ்ரவேலரே, துன்பம் நேர்கையில் என்னிடம் விண்ணப்பம் செய்யுங்கள்!
நான் உங்களுக்கு உதவுவேன்.
நீங்கள் அப்போது என்னை மகிமைப்படுத்த முடியும்” என்று கூறுகிறார்.
16 தேவன் தீயோரைப் பார்த்து, “நீங்கள் எனது சட்டங்களைக் குறித்துப் பேசுகிறீர்கள்.
எனது உடன்படிக்கையைக் குறித்துப் பேசுகிறீர்கள்.
17 ஆனால் நான் உங்களைத் திருத்தும்போது அதை ஏன் வெறுக்கிறீர்கள்?
நான் கூறும் காரியங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
18 நீங்கள் ஒரு திருடனைப் பார்க்கிறீர்கள், அவனோடு சேர்வதற்காக ஓடுகிறீர்கள்.
விபச்சாரமாகிய பாவத்தைச் செய்கிறவர்களோடு நீங்களும் படுக்கையில் குதிக்கிறீர்கள்.
19 நீங்கள் தீயவற்றைப் பேசிப் பொய்களைச் சொல்கிறீர்கள்.
20 உங்கள் சொந்த சகோதரரையும் பிறரையும் குறித்து எப்போதும் தீயவற்றையே சொல்கிறீர்கள்.
21 நீங்கள் இத்தீய செயல்களைச் செய்கிறீர்கள், நான் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.
நீங்கள் எதையும் சொல்லாதிருக்கிறீர்கள், நானும் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.
ஆனால் நான் அமைதியாக இரேன்!
நீங்கள் அதைத் தெளிவாக உணரும்படி நான் செய்வேன்.
உங்கள் முகத்திற்கெதிராக உங்களை விமர்சிப்பேன்!
22 நீங்கள் தேவனை மறந்திருக்கிறீர்கள்.
உங்களைக் கிழித்தெறியும் முன்னர்
நீங்கள் அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்!
அது நிகழ்ந்தால் உங்களை மீட்பவர் எவருமில்லை!
23 எனவே ஒருவன் ஸ்தோத்திர காணிக்கை செலுத்தினால் அவன் என்னை உண்மையிலேயே மகிமைப்படுத்துகிறான்.
ஒருவன் அவனது வாழ்க்கையை மாற்றியமைத்தால் அப்போது நான் அவனுக்கு தேவனுடைய காக்கும் வல்லமையைக் காட்டுவேன்” என்கிறார்.
2008 by World Bible Translation Center