Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 1-8

புத்தகம் 1

(சங்கீதம் 1-41)

சங்கீதம்

தீய ஜனங்களின் அறிவுரையைக் கேளாமலும், பாவிகளைப்போன்று வாழாமலும்,
    தேவனை மதிக்காத ஜனங்களோடு சேராமலும், இருக்கிற மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பான்.
ஒரு நல்ல மனிதன் கர்த்தருடைய போதனைகளை நேசிக்கிறான்.
    அவற்றைக் குறித்து அவன் இரவும் பகலும் தியானிக்கிறான்.
அம்மனிதன் நீரோடைகளின் கரையில் நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்று வலிமையுள்ளவனாக இருக்கிறான்.
    தக்கசமயத்தில் பலன் தருகிற மரத்தைப்போல் அவன் காணப்படுகிறான்.
உதிராமலிருக்கிற இலைகளைக்கொண்ட மரத்தைப்போல் அவன் இருக்கிறான்.
    அவன் செய்கின்ற செயல்கள் எல்லாவற்றிலும் அவன் வெற்றி பெறுவான்.

ஆனால் தீயோர் அப்படியிரார்கள்.
    அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள்.
ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள்.
    அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
ஏன்? கர்த்தர் நல்ல ஜனங்களைக் காப்பாற்றுகிறார்.
    தீயோரை அவர் அழிக்கிறார்.

யூதரல்லாத மனிதர்கள் ஏன் இவ்வளவு கோபமாயிருக்கிறார்கள்?
    ஏன் அந்தத் தேசங்கள் மதியீனமான திட்டங்களை வகுக்கின்றன?
அவர்களுடைய அரசர்களும், தலைவர்களும் கர்த்தரையும்,
    கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனையும் எதிர்க்க ஒன்றுகூடினார்கள்.
அந்நாடுகளின் தலைவர்கள், “நாம் தேவனையும், அவர் தேர்ந்தெடுத்த அரசனையும் எதிர்த்துக் கலகம் செய்வோம்.
    அவரிடமிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோம்!” என்றார்கள்.

ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் அரசர்,
    அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார்.
5-6 தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி,
    “நான் இம்மனிதனை அரசனாகத் தேர்ந்தெடுத்தேன்!
அவன் சீயோன் மலையில் அரசாளுவான்.
    சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார்.
அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும்.

இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன்.
    கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்!
    நீ எனக்கு மகன்.
நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன்.
    பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்!
இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல
    நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார்.

10 எனவே அரசர்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள்.
    அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
11 மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்.
12 தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார்.
    கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள்.
ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
    கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.

தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு

கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர்,
    பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர்.
பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர்.

ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை.
    கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்!
நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன்.
    அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார்.

நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும்.
    இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!
ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும்.
    ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!

கர்த்தாவே, எழும்பும்!
    எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக!
நீர் வல்லமையுள்ளவர்!
    என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும்.

கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார்.
    கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.

தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது

என் நல்ல தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கையில் ஜெபத்தைக் கேட்டருளும்.
என் விண்ணப்பத்தைக் கேளும், என்னிடம் இரக்கமாயிரும்!
    என் தொல்லைகளிலிருந்து எனக்கு சற்று விடுதலை தாரும்!

ஜனங்களே, எத்தனை நாள் என்னைக் குறித்து அவதூறு பேசுவீர்கள்?
    என்னைப்பற்றிச் சொல்ல புதுப்புதுப் பொய்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
    நீங்கள் அப்பொய்களைச் சொல்ல விரும்புகிறீர்கள்.

கர்த்தர் தம் நல்ல ஜனங்களின் ஜெபத்தைக் கேட்கிறார்.
    கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்போது, எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உங்களை ஏதோ ஒன்று துன்புறுத்துவதினால், நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாதீர்கள்.
    படுக்கைக்குச் செல்கையில் அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள், அப்போது அமைதி அடைவீர்கள்.
தேவனுக்கு நல்ல பலிகளைக் கொடுத்துக்
    கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்!

“நமக்கு தேவனுடைய நன்மையைக் காட்டுவது யார்?
    கர்த்தாவே! பிரகாசமான உமது முகத்தை நாங்கள் காணட்டும்!”
    என்று பலர் கூறுகிறார்கள்.
கர்த்தாவே! நீர் எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கினீர்!
    தானியமும் திராட்சைரசமும் பெருகிய பண்டிகை நாட்களாகிய அறுவடைக் காலத்தைக் காட்டிலும் இப்போது நான் மகிழ்கிறேன்.
நான் படுக்கைக்குச் சென்று சமாதானமாய் உறங்குகிறேன்.
    ஏனெனில், கர்த்தாவே, நீர் என்னைப் பாதுகாப்பாய் தூங்கச் செய்கிறீர்.

புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்

கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும்.
    நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும்.
எனது தேவனாகிய அரசனே,
    என் ஜெபத்தைக் கேளும்.
கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன்.
    உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும்.

தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை.
    தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது.
மூடர் உம்மிடம் வர இயலாது,
    தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர்.
பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர்.
    பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரை கர்த்தர் வெறுக்கிறார்.

கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன்.
    உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலை தாழ்த்தி அச்சத்தோடும், மரியாதையோடும் உம்மை வணங்குவேன்.
கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும்.
    ஜனங்கள் எனது குறைகளைத் தேடுகிறார்கள்.
    எனவே நான் எவ்வாறு வாழ நீர் விரும்புகிறீரோ, அவ்வழியை எனக்குக் காட்டும்.
அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள்.
    அவர்கள் வாய்கள் திறந்த கல்லறைகளைப் போன்றவை.
அவர்கள் பிறரிடம் நயமான மொழிகளைச் சொல்வார்கள்.
    ஆனால், அவர்கள் கண்ணியில் சிக்கவைப்பதற்காகவே அவ்வாறு செய்வார்கள்.
10 தேவனே, அவர்களைத் தண்டியும்.
    அவர்கள் தங்கள் வலையிலேயே விழட்டும்.
அந்த ஜனங்கள் உமக்கெதிராகத் திரும்புகிறார்கள்.
    எனவே அவர்களின் எண்ணிக்கையற்ற குற்றங்களுக்காக அவர்களைத் தண்டியும்.
11 ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும்.
    என்றென்றும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்.
    தேவனே, உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களைப் பாதுகாத்து, பெலனைத் தாரும்.
12 கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால்
    அவர்களைக் காக்கும் பெருங்கேடகமாவீர்.

செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும்.
    என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும்.
கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன்.
    என்னைக் குணமாக்கும்!
    என் எலும்புகள் நடுங்குகின்றன.
என் முழு உடம்பும் நடுங்குகிறது.
    கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்?
கர்த்தாவே, என்னை வலிமையாக்கும்.
    நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும்.
கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள்.
    மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள்.
    எனவே என்னை நீர் குணமாக்கும்!

கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன்.
    என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது.
என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது.
    உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன்.
எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர்.
    வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று.
    தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.

தீயோரே அகன்று போங்கள்!
    ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
    கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.

10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள்.
    ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.

கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடல், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீசின் மகனாகிய சவுலைப்பற்றியது இந்தப் பாடல்

எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
    என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    என்னை மீட்டுக்கொள்ளும்!
நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன்.
    என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது!

எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை.
    நான் தவறிழைக்கவில்லையென்று உறுதியளிக்கிறேன்!
என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை.
    என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை.
ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான்.
    அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான்.
அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான்.

கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்!
    என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம்.
    கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும்.
கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும்.
    உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும்.
கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும்.
    எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும்.
தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும்.
    தேவனே, நீர் நல்லவர்.
    நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர்.

10 நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்கு தேவன் உதவுகிறார்.
    தேவன் என்னைப் பாதுகாப்பார்.
11 தேவன் ஒரு நல்ல நீதிபதி,
    எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.
12 தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை.
13 தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார். [a]

14 சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள்.
    அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள்.
15 அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள்.
    ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள்.
16 அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள்.
    அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர்.
    ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள்.

17 கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன்.
    மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.

கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம்

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது!
    விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.

பிள்ளைகள், குழந்தைகள் வாயிலுமிருந்து உம்மைத் துதிக்கும் பாடல்கள் வெளிப்படும்.
    உம் பகைவரை அமைதிப்படுத்த இவ்வல்லமையான பாடல்களைக் கொடுத்தீர்.

கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன்.
    நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
ஏன் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்?
    ஏன் அவர்களை நீர் நினைவுகூருகிறீர்?
    ஏன் அவர்களைக் கவனிக்கிறீர்?

ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்!
    அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர்.
    மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.
நீர் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவர்களை அதிகாரிகளாக வைத்தீர்.
ஆடுகள்,பசுக்கள், காட்டு மிருகங்கள் அனைத்தையும் மனிதர்கள் ஆண்டனர்.
வானத்துப் பறவைகளையும்
    சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும் மிகவும் அற்புதமானது!

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center