Beginning
35 எலிகூ பேசுவதைத் தொடர்ந்தான் அவன்,
2 “‘யோபுவே, நான் தேவனைக் காட்டிலும் நியாயமானவன்’ எனக் கூறுவது சரியல்ல.
3 யோபுவே, நீ தேவனை, ‘ஒருவன் தேவனைச் சந்தோஷப்படுத்த விரும்பினால் அவனுக்கு லாபம் என்ன?
நான் பாவம் செய்யாதிருந்தால், அது எனக்கு என்ன நம்மையைத் தரும்?’ என்று கேளும்.
4 “யோபுவே, நான் (எலிகூ) உனக்கும், உன்னோடு இங்கிருக்கும் உமது நண்பர்களுக்கும் பதில் கூற விரும்புகிறேன்.
5 யோபுவே, வானத்தை நோக்கிப்பாரும்,
உனக்கும் மேல் உயர்ந்திருக்கிற மேகங்களை அண்ணாந்து பாரும்.
6 யோபுவே, நீ பாவஞ்செய்தால், அது தேவனைத் துன்புறுத்தாது.
யோபுவே உன்னிடம் பாவங்கள் மிகுதியாயிருந்தால், அது தேவனை ஒன்றும் செய்யாது.
7 யோபுவே, நீ நல்லவனாக இருந்தால், அது தேவனுக்கு உதவாது.
தேவன் உன்னிடமிருந்து எதையும் பெறமாட்டார்.
8 யோபுவே, நீ செய்யும் நல்ல காரியங்களோ, தீயகாரியங்களோ உன்னைப் போன்ற பிறரை மட்டுமே பாதிக்கும்.
அவை தேவனுக்கு உதவவோ, அவரைத் துன்புறுத்தவோ செய்யாது.
9 “தீயோர் துன்புறுத்தப்பட்டால், அவர்கள் உதவிக்காக கூக்குரலிடுவார்கள்.
அவர்கள் வல்லமையுள்ள ஜனங்களிடம் சென்று உதவிக்காக கெஞ்சி கேட்பார்கள்.
10 ஆனால் அத்தீயோர் தேவனிடம் உதவிக் கேட்கமாட்டார்கள்.
அவர்கள், ‘என்னை உண்டாக்கின தேவன் எங்கே? ஜனங்கள் மனக்கவலையோடிருக்கையில் தேவன் அவர்களுக்கு உதவுவார்.
எனவே அவர் எங்கிருக்கிறார்?
11 தேவன் நம்மை பறவைகள், மிருகங்களைக் காட்டிலும் ஞானமுள்ளவராக்குகிறார்.
எனவே அவர் எங்கிருக்கிறார்?’ என்று கேட்பார்கள்.
12 “அல்லது, அத்தீயோர் தேவனிடம் உதவிவேண்டினால் தேவன் அவர்களுக்குப் பதிலளிக்கமாட்டார்.
ஏனெனில் அவர்கள் மிகவும் பெருமை (அகந்தை) உடையவர்கள்.
அவர்கள் மிகவும் முக்கியமானவர்களென்று இன்னமும் நினைக்கிறார்கள்.
13 தேவன் அவர்களின் தகுதியற்ற கெஞ்சுதலுக்குச் செவிசாய்க்கமாட்டார் என்பது உண்மை.
சர்வ வல்லமையுள்ள தேவன் அவர்களைக் கவனிக்கமாட்டார்.
14 எனவே யோபுவே, நீ தேவனைப் பார்க்கவில்லை என்று கூறும்போது தேவன் உனக்குச் செவிசாய்க்கமாட்டார்.
தேவனைச் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து நீ களங்கமற்றவனென்று நிரூபிக்கக் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறாய்.
15 “யோபுவே, தேவன் தீயோரைத் தண்டிப்பதில்லை எனவும்,
தேவன் பாவங்களைக் கவனிப்பதில்லை எனவும் நீ நினைக்கிறாய்.
16 எனவே யோபு அவனது தகுதியற்ற பேச்சைத் தொடருகிறான்.
யோபு தான் முக்கியமானவனாக பாவித்துக்கெண்டிருக்கிறான்.
யோபு தான் பேசிக் கொண்டிருப்பதைப்பற்றி அறியான் என்பதை எளிதாகக் காணமுடியும்” என்றான்.
36 எலிகூ தன் பேச்சைத் தொடர்ந்தான். அவன்,
2 “என்னோடு இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரும்.
இன்னும் சில வார்த்தைகளைக் கூட நான் பேச தேவன் விரும்புகிறார்.
3 நான் எனது அறிவை எல்லோரோடும் பகிர்ந்துக்கொள்வேன், தேவன் என்னை உண்டாக்கினார்,
தேவன் நியாயமானவரென நான் நிரூபிப்பேன்.
4 யோபுவே, நான் உண்மையைக் கூறிக் கொண்டிருக்கிறேன்.
நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்று நான் அறிவேன்.
5 “தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் ஜனங்களை வெறுப்பதில்லை.
தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் மிகுந்த ஞானமுள்ளவர்.
6 தேவன் தீய ஜனங்களை வாழவிடமாட்டார்,
தேவன் ஏழைகளை எப்போதும் நியாயமாக நடத்துகிறார்.
7 தக்க வழியில் நடப்போரைத் தேவன் கண்ணோக்குகிறார்.
அவர் நல்லோரை அரசர்களாயிருக்க அனுமதிக்கிறார்.
தேவன் நல்லோருக்கு என்றென்றும் மகிமையைக் கொடுக்கிறார்.
8 எனவே ஜனங்கள் தண்டிக்கப்பட்டால், அவர்கள் விலங்குகளினாலும் கயிறுகளினாலும் கட்டப்பட்டால்,
அப்போது அவர்கள் தவறு செய்தவர்களாயிருப்பார்கள்.
9 அவர்கள் செய்தது என்னவென்பதை தேவன் சொல்வார்.
அவர்கள் பாவம் செய்தார்கள் என்பதை தேவன் சொல்வார்.
அவர்கள் பெருமையாயிருந்தார்கள் என்பதை தேவன் சொல்வார்.
10 தேவன் தனது எச்சரிக்கைக்குச் செவிசாய்க்குமாறு அந்த ஜனங்களைக் கட்டாயப்படுத்துவார்.
அவர்கள் பாவம் செய்வதை நிறுத்துமாறு தேவன் கட்டளையிடுவார்.
11 அந்த ஜனங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவருக்குக் கீழ்ப்படிந்தால், தேவன் அவர்கள் வெற்றிக் காணச் செய்வார்.
அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.
12 ஆனால் அந்த ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், அப்போது அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்கள், அறியாமையுடையவர்களாக மரித்துப்போவார்கள்.
13 “தேவனைப்பற்றிக் கவலைப்படாத ஜனங்கள் எப்போதும் கசப்பானவர்கள்,
தேவன் அவர்களைத் தண்டிக்கிறபோதும் கூட, அவர்கள் தேவனிடம் உதவிக்காக ஜெபம் செய்ய மறுக்கிறார்கள்.
14 அவர்கள் ஆண் விபசாரிகளைப்போல
இளமையிலேயே மரித்துப்போவார்கள்.
15 ஆனால் தேவன் ஜனங்கள் பெறும் தொல்லைகளால் அவர்களைத் தாழ்மையானவர்களாக்குவார்.
ஜனங்கள் எழுந்து அவருக்குச் செவிகொடுப்பதற்காக தேவன் அத்தொல்லைகளைப் பயன்படுத்துகிறார்.
16 “யோபுவே, தேவன் உனக்கு உதவ விரும்புகிறார்.
தொல்லைகளிலிருந்து உன்னை விடுவிக்க தேவன் விரும்புகிறார்.
உனக்கு வாழ்க்கையை எளிதாக்க தேவன் விரும்புகிறார்.
உன் மேசையில் மிகுதியான உணவு இருக்கும்படியாகச் செய்ய தேவன் விரும்புகிறார்.
17 ஆனால் இப்போது யோபுவே, நீ குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டாய்.
எனவே ஒரு தீயவனைப்போன்று நீ தண்டிக்கப்பட்டாய்.
18 யோபுவே, செல்வங்கள் உன்னை மூடனாக்கவிடாதேயும்.
பணம் உனது மனதை மாற்றவிடாதேயும்.
19 உனது பணம் இப்போது உனக்கு உதவாது.
வல்லமையுள்ளோர் உமக்கு உதவவும் முடியாது.
20 இரவின் வருகையை விரும்பாதேயும்.
ஜனங்கள் இரவில் மறைந்துபோக முயல்கிறார்கள்.
அவர்கள் தேவனிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள்.
21 யோபுவே, நீ மிகவும் துன்புற்றிருக்கிறாய்.
ஆனால் தீமையைத் தேர்ந்துகொள்ளாதேயும்.
தவறு செய்யாதபடி எச்சரிக்கையாயிரும்.
22 “தேவன் தமது வல்லமையினால் மேன்மையுற்றிருக்கிறார்.
தேவன் எல்லோரினும் மிகவும் சிறந்த போதகர்!
23 தேவன் செய்ய வேண்டுவதென்ன என்று ஒருவனும் தேவனுக்குக் கூற முடியாது.
‘தேவனே, நீர் தவறு செய்கிறீர்’ என்று ஒருவனும் தேவனிடம் கூற முடியாது!
24 தேவன் செய்த காரியங்களுக்காக அவரைத் துதிக்க வேண்டுமென நினைவுகூருங்கள்.
தேவனைத் துதிக்கும் பல பாடல்களை ஜனங்கள் எழுதியிருக்கிறார்கள்.
25 தேவன் செய்தவற்றை ஒவ்வொருவனும் காண முடியும்.
தூரத்து நாடுகளின் ஜனங்களும் அவற்றைப் பார்க்க இயலும்.
26 ஆம், தேவன் மேன்னைமயானவர்.
ஆனால் அவரது மேன்மையை நாம் புரிந்து கொள்ள முடியாது, எத்தனை காலமாக தேவன் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் நாம் அறியமுடியாது.
27 “தேவன் பூமியிலிருந்து தண்ணீரை, மேலே எடுத்து,
அதைப் பனியாகவும் மழையாகவும் மாற்றுகிறார்.
28 ஆகையால் மேகங்கள் தண்ணீரைப் பொழிகின்றன.
மழை பலர் மீது பெய்கிறது.
29 தேவன் மேகங்களை எவ்வாறு பரப்புகிறார் என்பதையும்
வானத்தில் இடி முழக்கம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதையும் ஒருவனும் புரிந்து கொள்ள முடியாது.
30 பாரும்! தேவன் பூமியின் மீது மின்னலைப் பரப்பி,
சமுத்திரங்களின் ஆழமான பகுதிகளை மூடினார்.
31 தேசங்களை அடக்கியாள்வதற்கும்
அங்கு மிகுதியான உணவுப் பொருட்களைக் கொடுப்பதற்கும், தேவன் அவற்றைப் பயன்படுத்துகிறார்.
32 தேவன் அவரது கைகளால் மின்னலைப் பிடிக்கிறார்,
அவருக்கு விருப்பமான இடங்களில் தாக்குமாறு அதற்குக் கட்டளையிடுகிறார்.
33 புயல் வந்துகொண்டிருப்பதை இடி எச்சரிக்கிறது.
அது வந்துகொண்டிருப்பதை ஆடு, மாடுகள் கூட அறிகின்றன” என்றான்.
37 “இடியும், மின்னலும் என்னை அச்சுறுத்துகின்றன.
இதயம் என் நெஞ்சத்தில் துடிக்கிறது.
2 ஒவ்வொருவரும் செவிகொடுங்கள்!
தேவனுடைய சத்தம் இடியைப்போல முழங்குகிறது.
தேவனுடைய வாயிலிருந்து வரும் இடியைப்போன்ற சத்தத்திற்குச் செவிகொடுங்கள்.
3 முழுவானத்திற்கும் குறுக்காக மின்னும்படி, தேவன் அவரது மின்னலை அனுப்புகிறார்.
அது பூமி ழுழுவதும் ஒளிர்ந்தது.
4 மின்னல் ஒளிவீசி மறைந்த பிறகு, தேவனுடைய முழங்கும் சத்தத்தைக் கேட்கமுடியும்.
தேவன் அவரது அற்புதமான சத்தத்தால் முழங்குகிறார்!
மின்னல் மின்னும்போது, தேவனுடைய சத்தம் முழங்குகிறது.
5 தேவனுடைய முழங்கும் சத்தம் அற்புதமானது!
நாம் புரிந்துகொள்ள முடியாத, மேன்மையான காரியங்களை அவர் செய்கிறார்.
6 தேவன் பனியிடம், ‘பூமியின் மேல் பெய்’ என்கிறார்.
மேலும் தேவன் மழையிடம், ‘பூமியின் மேல் பொழி’ என்கிறார்.
7 தேவன் உண்டாக்கின எல்லா மனிதர்களும்
அவர் என்ன செய்யமுடியும் என்பதை அறியுமாறு தேவன் அதைச் செய்கிறார்.
அது அவரது சான்று.
8 மிருகங்கள் அவற்றின் குகைகளுக்குள் புகுந்து அங்கேயே தங்கும்.
9 தெற்கேயிருந்து சூறாவளி வரும்.
வடக்கேயிருந்து குளிர் காற்று வரும்.
10 தேவனுடைய மூச்சு பனிக்கட்டியை உண்டாக்கும்,
அது சமுத்திரங்களை உறையச் செய்யும்.
11 தேவன் மேகங்களை தண்ணீரினால் நிரப்புகிறார்,
அவர் இடிமேகங்களைச் சிதறடிக்கிறார்.
12 பூமியில் எங்கும் சிதறிப்போகும்படி தேவன் மேகங்களுக்குக் கட்டளையிடுகிறார்.
தேவன் கட்டளையிடுகின்றவற்றை மேகங்கள் செய்யும்.
13 பெருவெள்ளத்தை வரச்செய்து ஜனங்களைத் தண்டிக்கவோ,
அல்லது வெள்ளத்தை வருவித்து அவரது அன்பை வெளிப்படுத்தவோ, தேவன் மேகங்களை உருவாக்குகிறார்.
14 “யோபுவே, ஒரு நிமிடம் நின்று கவனித்துக்கேள்.
தேவன் செய்கிற அற்புதமான காரியங்களைக் குறித்துச் சற்று நின்று எண்ணிப்பார்.
15 யோபுவே, தேவன் எவ்வாறு மேகங்களை அடக்கியாள்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?
அவரது மின்னலை எவ்வாறு தேவன் ஒளிவிட வைக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?
16 மேகங்கள் வானில் எவ்வாறு தொங்குகின்றன என்பது உனக்குத் தெரியுமா?
தேவன் செய்த அற்புதமான காரியங்களுக்கு மேகங்கள் ஒரு எடுத்து காட்டு மட்டுமேயாகும்!
அவற்றைப்பற்றிய யாவும் தேவனுக்குத் தெரியும்.
17 ஆனால் யோபுவே, உனக்கு இக்காரியங்கள் தெரியாது.
நீ வியர்க்கிறாய் என்பதும், உன் ஆடைகள் உடம்பில் ஒட்டிக்கொள்கின்றன என்பதும், தெற்கிலிருந்து வெப்பமான காற்று வீசும்போது, எல்லாம் அசையாமல் இருக்கின்றன என்பது மட்டுமே உனக்குத் தெரியும்.
18 யோபுவே, வானைப் பரப்புவதற்கு நீ தேவனுக்கு உதவமுடியுமா?
தேய்த்த பளபளப்பான கண்ணாடியைப்போல அது ஒளிரும்படி செய்யக் கூடுமா?
19 “யோபுவே, நாங்கள் தேவனுக்கு என்ன சொல்லவேண்டும் என்று கூறு!
எங்களுக்குச் சரிவரத் தெரியாததால் சொல்வது குறித்து எண்ண இயலாமலிருக்கிறோம்.
20 நான் அவரிடம் பேசவேண்டும் என்று தேவனிடம் கூறமாட்டேன்.
அழிவு வேண்டும் என்று கேட்கமாட்டேன்.
21 ஒரு மனிதன் சூரியனை ஏறெடுத்துப் பார்க்க முடியாது.
காற்று மேகங்களை அடித்துச் சென்றபின் அது வானில் மிகப் பிரகாசமாக ஒளி தருகிறது.
22 தேவனும் அவ்வாறே இருக்கிறார்!
பரிசுத்த மலையிலிருந்து தேவனுடைய பொன்னான மகிமை பிரகாசிக்கிறது. தேவனைச் சுற்றிலும் பிரகாசமான ஒளி இருக்கிறது.
23 சர்வ வல்லமையுள்ள தேவன் மேன்மையானவர்!
நாம் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது!
தேவன் மிகுந்த வல்லமை உள்ளவர்.
ஆனால் அவர் நமக்கு நல்லவரும் நியாயமானவரும் ஆவார்.
தேவன் நம்மைத் துன்புறுத்த விரும்பமாட்டார்.
24 ஆகவேதான் ஜனங்கள் தேவனை மதிக்கிறார்கள்.
ஆனால் தங்களை ஞானிகளாக நினைக்கிற அகங்காரம் உள்ளவர்களை தேவன் மதிக்கமாட்டார்” என்றான்.
2008 by World Bible Translation Center