Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 32-34

எலிகூ விவாதத்தில் பங்குக்கொள்கிறான்

32 அப்போது யோபுவின் நண்பர்கள் மூவரும் யோபுவுக்குப் பதில் கூற முயல்வதை விட்டுவிட்டார்கள். தான் உண்மையாகவே களங்கமற்றவன் என யோபு உறுதியாக இருந்ததால், அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டார்கள். ஆனால், அங்கு எலிகூ என்னும் பெயருள்ள ஒரு இளைஞன் இருந்தான். அவன் பரகெயேலின் மகன். அவன் பூசு என்னும் பெயருள்ள ஒரு மனிதனின் சந்ததியில் வந்தவன். எலிகூ ராம் குடும்பத்தினன். எலிகூ யோபுவிடம் மிகுந்தக் கோபமடைந்தான். ஏனெனில், யோபு தானே சரியாக நடந்துக் கொண்டான் எனச் சொல்லிக் கொண்டிருந்தான். தேவனைக் காட்டிலும் தானே நியாயமானவன் என்று யோபு சொல்லிக் கொண்டிருந்தான். யோபுவின் நண்பர்கள் மூவரிடமும் எலிகூ கோபங்கொண்டான். ஏனெனில், யோபுவின் கேள்விகளுக்கு அம்மூவரும் பதில் கூற முடியவில்லை. யோபு தவறு செய்தானென அவர்களால் நிறுவமுடியவில்லை. எலிகூ அங்கிருந்தவர்களில் வயதில் இளையவனாயிருந்தான். அதனால், பிறர் ஒவ்வொருவரும் பேசி முடிக்கும்வரை காத்திருந்தான். அப்போது அவன் பேசத் தொடங்கலாம் என உணர்ந்தான். யோபுவின் மூன்று நண்பர்களும் சொல்வதற்கு இனி ஏதும் இல்லை என அப்போது எலிகூ கண்டான். அதனால் அவன் கோபமடைந்தான். எனவே, அவன் பேசத்தொடங்கினான். அவன்:

“நான் இளைஞன், நீங்கள் முதியவர்கள்.
    ஆகவேதான் நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்ல அஞ்சினேன்.
நான் எனக்குள், ‘முதியோர் முதலில் பேச வேண்டும்.
    முதியோர் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.
    எனவே அவர்கள் பல காரியங்களைக் கற்றிருக்கிறார்கள்’ என்று சிந்தித்தேன்.
ஆனால் தேவனுடைய ஆவி ஒருவனை ஞான முள்ளவனாக்குகிறது.
    சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மூச்சு ஜனங்களைப் புரிய வைக்கிறது.
முதியோர் மட்டுமே ஞானவான்கள் அல்லர்.
    சரியானதைப் புரிந்துகொள்வோர் முதியோர் மட்டுமல்லர்.

10 “எனவே தயவுசெய்து எனக்குச் செவி கொடுங்கள்!
    நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்வேன்.
11 நீங்கள் பேசும்போது நான் பொறுமையாகக் காத்திருந்தேன்.
    யோபுவுக்கு நீங்கள் கூறிய பதில்களைக் கேட்டேன்.
12 நீங்கள் கூறியவற்றை நான் கவனமாகக் கேட்டேன்.
    உங்களில் ஒருவரும் யோபுவை குற்றம் கூறவில்லை.
    அவனுடைய விவாதத்திற்கு உங்களில் ஒருவரும் பதில் கூறவில்லை.
13 நீங்கள் மூவரும் ஞானத்தைத் கண்டடைந்ததாகக் கூறமுடியாது.
    மனிதரல்ல, தேவன் யோபுவின் விவாதங்களுக்குப் பதில் கூறவேண்டும்.
14 யோபு அவனது விவாதங்களை என்னிடம் முன் வைக்கவில்லை.
    எனவே நீங்கள் மூவரும் பயன்படுத்திய விவாதங்களை நான் பயன்படுத்தமாட்டேன்.

15 “யோபுவே, இம்மனிதர்கள் தங்கள் விவாதத்தில் தோற்றார்கள்.
    அவர்கள் மேலும் கூற எதுவுமில்லை.
    அவர்களிடம் வேறு பதில்கள் இல்லை.
16 யோபுவே, இம்மனிதர்கள் உமக்குப் பதில் கூறும்படி நான் காத்திருந்தேன்.
    ஆனால் இப்போது அவர்கள் அமைதியாயிருக்கிறார்கள்.
    அவர்கள் உம்மோடு விவாதிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள்.
17 எனவே இப்போது என் பதிலை நான் உமக்குச் சொல்வேன்.
    ஆம், நான் நினைப்பதை உமக்குக் கூறுவேன்.
18 நான் சொல்வதற்கு நிரம்ப இருக்கிறது.
    நான் அவற்றைக் கொட்டிவிடப் போகிறேன்.
19 திறக்கப்படாத புது திராட்சைரசம் நிரம்பிய புட்டியைப் போலிருக்கிறேன்.
    உடைத்துத் திறப்பதற்கு தயாராயிருக்கிற புது திராட்சைரசம் உடைய தோல்பையை போலிருக்கிறேன்.
20 எனவே நான் பேசவேண்டும், அப்போது நான் நலமடைவேன்.
    நான் பேசவேண்டும், நான் யோபுவின் விவாதத்திற்குப் பதில் கூறவேண்டும்.
21 பிறரை நடத்துவதைப்போல், நான் யோபுவையும் நடத்தவேண்டும்.
    அவனிடம் நல்லவற்றைச் சொல்ல நான் முயலமாட்டேன்.
    நான் சொல்ல வேண்டியதைச் சொல்வேன்.
22 நான் ஒருவனை மற்றொருவனைக் காட்டிலும் சிறப்பாக நடத்தமுடியாது.
    நான் அவ்வாறு செய்தால், அப்போது தேவன் என்னைத் தண்டிப்பார்!

33 “இப்போது, யோபுவே, என்னைக் கவனித்துக் கேளும்:
    நான் சொல்கிறவற்றிற்குச் செவிகொடும்.
நான் பேச தயாராயிருக்கிறேன்.
என் இருதயம் நேர்மையானது, எனவே நேர்மையான வார்த்தைகளைப் பேசுவேன்.
    எனக்குத் தெரிந்தவற்றைக் குறித்து நான் உண்மையாக பேசுவேன்.
தேவனுடைய ஆவி என்னை உண்டாக்கிற்று.
    என் உயிர் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து வந்தது.
யோபுவே, நான் சொல்வதைக் கேளும், முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்.
    உனது பதிலைத் தயாராக வைத்திரும், அப்போது நீ என்னோடு விவாதிக்க முடியும்.
தேவனுக்கு முன்பாக நீயும் நானும் சமமானவர்களே.
    தேவன் மண்ணைப் பயன்படுத்தி நம்மிருவரையும் உண்டாக்கினார்.
யோபுவே, எனக்கு அஞ்சாமல் இரும்.
    நான் உன்னிடம் கடினமாயிருக்கமாட்டேன்.

“ஆனால் யோபுவே, நீ சொன்னதை நான் கேட்டேன்.
நீ, ‘நான் பரிசுத்தமானவன் நான் களங்கமற்றவன்.
    நான் தவறேதும் செய்யவில்லை.
    நான் குற்றமற்றவன்.
10 நான் தவறேதும் செய்யவில்லை.
    ஆனால் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார்.
    தேவன் என்னை ஒரு பகைவனைப்போல் நடத்தினார்.
11 தேவன் என் கால்களில் விலங்கிட்டார்.
    நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் கண்ணோக்குகிறார்’ என்று சொன்னாய்.

12 “ஆனால் யோபுவே, நீ இவ்விஷயத்தில் தவறியிருக்கிறாய்.
    நீ தவறு செய்கிறாய் என்பதை நான் நிரூபிப்பேன்.
    ஏனெனில் தேவன் எல்லா மனிதர்களையும்விட அதிகமாக அறிந்திருக்கிறார்.
13 யோபுவே, நீ தேவனோடு விவாதிக்கிறாய்.
    தேவன் எல்லாவற்றையும் உனக்கு விளக்கவேண்டுமென நீ நினைக்கிறாய்.
14 தேவன் தாம் செய்கிற எல்லாவற்றையும் விளக்கலாம்.
    வெவ்வேறு வகைகளில் தேவன் பேசலாம், ஆனால் ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
15-16 தேவன் கனவில் ஜனங்களோடு பேசலாம், அல்லது இரவில் அவர்கள் ஆழ்ந்த நித்திரைக் கொள்ளும்போது தரிசனம் தந்து பேசலாம்,
    அவர்கள் தேவனுடைய எச்சரிக்கையைக் கேட்கும்போது மிகவும் அச்சம்கொள்ளலாம்.
17 ஜனங்கள் தவறு செய்வதை நிறுத்தவும்
    பெருமைகொள்வதை விடவும் தேவன் எச்சரிக்கை செய்கிறார்.
18 மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி அவர்களைக் காப்பதற்காக தேவன் ஜனங்களை எச்சரிக்கிறார்.
    ஒருவன் அழியாதபடி காப்பதற்கு தேவன் அவ்வாறு செய்கிறார்.

19 “அல்லது ஒருவன் படுக்கையில் கிடந்து தேவனுடைய தண்டனையை அனுபவிக்கும்போது ஒருவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்கக்கூடும்.
    வேதனையால் அம்மனிதனை தேவன் எச்சரிக்கிறார்.
    எலும்பெல்லாம் நொறுங்கும்படி அம்மனிதன் நோவை அனுபவிக்கிறான்.
20 அப்போது அம்மனிதன் உண்ணமுடியாது.
    மிகச் சிறந்த உணவையும் வெறுக்கும்படி அவன் மிகுந்த நோவை அனுபவிக்கிறான்.
21 அவன் மிகவும் மெலிந்து எலும்புகள் வெளித் தோன்றும்வரை
    அவன் உடம்பு மெலிந்து போகும்.
22 அம்மனிதன் மரணத்தின் இடத்திற்கு அருகே இருக்கிறான்.
    அவன் வாழ்க்கை மரணத்திற்கு அருகாமையில் உள்ளது.
23 தேவனிடம் ஆயிரக்கணக்காக தூதர்கள் இருப்பார்கள்.
    அத்தூதர்களுள் ஒருவன் அம்மனிதனைக் கண்ணோக்கிக் கொண்டிருக்கலாம். அந்த தூதன் அம்மனிதனுக்காகப் பரிந்துபேசி அவன் செய்த நற்செயல்களை எடுத்துரைக்கலாம்.
24 அந்த தூதன் அம்மனிதனிடம் இரக்கம் காட்டலாம்.
    அத்தூதன் தேவனிடம், ‘மரணத்தின் இடத்திலிருந்து அம்மனிதனைக் காப்பாற்றும்.
    அவன் பாவத்திற்குப் பரிகாரமாக நான் ஒரு வழியைக் கண்டு பிடித்திருக்கிறேன்’ எனலாம்.
25 அப்போது அம்மனிதனின் உடல் மீண்டும் இளமையும், வலிமையும் பெறும்.
    அவன் இளமையிலிருந்தாற்போன்று இருப்பான்.
26 தேவனிடம் ஜெபிப்பான், தேவன் அவனுடைய ஜெபத்திற்குப் பதில் தருவார்.
    அம்மனிதன் களிப்பால் ஆரவாரித்து, தேவனைத் தொழுதுகொள்வான்.
    அப்போது அம்மனிதன் மீண்டும் நல்வாழ்க்கை வாழ்வான்.
27 அப்போது அம்மனிதன் ஜனங்களிடம் அறிக்கையிடுவான்.
    அவன், ‘நான் பாவம் செய்தேன்.
    நான் நல்லதைக் கெட்டதாக்கினேன்.
    ஆனால் தேவன் என்னைத் தண்டிக்க வேண்டிய அளவு தண்டிக்கவில்லை.
28 மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி, தேவன் என் ஆத்துமாவைக் காப்பாற்றினார்.
    இப்போது மீண்டும் என் வாழ்க்கையை நான் அனுபவிக்க முடியும்’ என்பான்.

29 “அம்மனிதனுக்காக மீண்டும், மீண்டும் தேவன் எல்லாவற்றையும் செய்கிறார்.
30 ஏனென்றால், அம்மனிதனை எச்சரித்து, அவனது ஆத்துமாவை மரணத்தின் இடத்திலிருந்து காப்பதால்
    அம்மனிதன் வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதற்காக இதைச் செய்கிறார்.

31 “யோபுவே, என்னை கவனியும்.
    நான் கூறுவதைக் கேளும்.
    அமைதியாக இரும், என்னை பேசவிடும்.
32 ஆனால் யோபுவே, நீர் என்னோடு கருத்து வேறுபாடு கொள்ளவிரும்பினால், அப்போது நீர் பேசத் தொடங்கும்.
    உமது விவாதத்தைக் கூறும், ஏனெனில், நான் உம்மைத் திருத்த விரும்புகிறேன்.
33 ஆனால் யோபுவே, நீர் கூற எதுவுமில்லையெனில், நான் சொல்வதைக் கேளும்.
    அமைதியாக இரும், உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.

34 பின்பு எலிகூ தொடர்ந்து பேசினான். அவன்:

“நான் கூறுபவற்றை கேளுங்கள், ஞானிகளே,
    நான் சொல்வதைக் கவனியுங்கள், அறிஞர்களே.
உங்கள் நாவு, அது தொடுகிற உணவை ருசிக்கிறது.
    உங்களது காது, அது கேட்கிறவார்த்தைகளைச் சோதிக்கிறது.
எனவே நாம் அந்த விவாதங்களைச் சோதிப்போம், எது சரியென நாமே முடிவு செய்வோம்.
    எது நல்லதென நாம் ஒருமித்திருந்து கற்போம்.
யோபு, ‘யோபாகிய நான் களங்கமற்றவன்,
    தேவன் என்னிடம் நியாயமுடையவராயிருக்கவில்லை.
நான் களங்கமற்றவன், ஆனால் நீதி எனக்கெதிராக வழங்கப்பட்டது, அது நான் பொய்யனெனக் கூறுகிறது.
    நான் களங்கமற்றவன், ஆனால் மிக மோசமாகக் காயமுற்றேன்’ என்கிறான்.

“யோபைப்போல வேறெவனாகிலும் இருக்கிறானா?
    நீங்கள் அவமானப்படுத்தினால் யோபு அதைப் பொருட்படுத்துவதில்லை.
யோபு தீயோரோடு நட்புடையவனாயிருந்தான்.
    யோபு கெட்ட ஜனங்களோடிருக்க விரும்புகிறான்.
ஏன் நான் அவ்வாறு சொல்கிறேன்?
    ஏனெனில் யோபு, ‘ஒருவன் தேவனைத் தவறான வழிகளில் சந்தோஷப்படுத்த முயற்சி செய்தால் அதனால் அவனுக்கு நன்மையேதும் வாய்க்காது’ என்கிறான்.

10 “உங்களால் புரிந்துகொள்ள முடியும், எனவே நான் சொல்வதைக் கேளுங்கள்.
    தேவன் தீயவற்றை ஒருபோதும் செய்யமாட்டார்!
    சர்வ வல்லமையுள்ள தேவன் தவறிழைக்கமாட்டார்!
11 ஒருவன் செய்யும் காரியங்களுக் கேற்றபடியே தேவன் பலனளிப்பார்.
    ஒருவனுக்கு உரியதை தேவன் அவனுக்குக் கொடுக்கிறார்.
12 இதுவே உண்மை, தேவன் தவறிழைக்கமாட்டார்,
    சர்வ வல்லமையுள்ள தேவன் எப்போதும் நியாயந்தீர்ப்பார்.
13 பூமிக்குப் பொறுப்பாக இருக்கும்படி தேவனை எந்த மனிதனும் தேர்ந்தெடுக்கவில்லை,
    உலகம் முழுவதற்கும் பொறுப்பை தேவனுக்கு ஒருவனும் கொடுக்கவில்லை.
    தேவன் எல்லாவற்றையும் படைத்தார்.
    எல்லாம் அவரது ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றன.
14 தேவன் மனிதனது ஆவியை எடுக்க முடிவெடுத்தால்,
    அவனது மூச்சை நீக்கிவிட முடிவெடுத்தால்,
15 அப்போது பூமியின் ஜனங்கள் எல்லோரும் மரிப்பார்கள்.
    எல்லா ஜனங்களும் மீண்டும் மண்ணாவார்கள்.

16 “நீங்கள் ஞானிகளாயிருந்தால்,
    நான் சொல்வதற்குச் செவிகொடுப்பீர்கள்.
17 ஒருவன் நியாயஞ்செய்வதை வெறுத்தால், அவன் அரசனாக இருக்கமுடியாது.
    யோபுவே, தேவன் வல்லவரும் நல்லவருமானவர்.
    அவரைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
18 தேவனே அரசர்களிடம், ‘நீங்கள் தகுதியற்றவர்கள்’ என்கிறார்.
    தேவனே தலைவர்களிடம் ‘நீங்கள் தீயவர்கள்’ என்கிறார்!
19 தேவன் ஜனங்களைக் காட்டிலும் தலைவர்களை நேசிப்பதில்லை.
    தேவன் ஏழைகளைக் காட்டிலும் செல்வந்தரை நேசிப்பதில்லை.
    ஏனெனில், தேவனே ஒவ்வொருவரையும் உண்டாக்கினார்.
20 ஜனங்கள் நள்ளிரவில் திடீரென மரிக்க முடியும்.
    ஜனங்கள் நோயுற்று மடிவார்கள்.
    தெளிவான காரணமின்றி வலிமையான ஜனங்களும்கூட மரிப்பார்கள்.

21 “ஜனங்கள் செய்வதை தேவன் கண்ணோக்குகிறார்.
    ஒருவன் வைக்கிற ஒவ்வோர் அடியையும் தேவன் அறிகிறார்.
22 தேவனிடமிருந்து ஒளிப்பதற்கேற்ற இருள் நிரம்பிய இடம்
    எதுவும் தீயோருக்குக் கிடைப்பதில்லை.
23 ஜனங்களைச் சோதித்துப் பார்க்கும் நேரத்தை தேவன் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.
    தேவன், நியாயந்தீர்ப்பதற்குத் தனக்கு முன்னிலையில் ஜனங்களைக் கொண்டுவர தேவையில்லை.
24 வல்லமையுள்ள ஜனங்கள் தீய காரியங்களைச் செய்யும்போது, தேவன் கேள்விகளைக் கேட்கத் தேவையில்லை.
    தேவன் அந்த ஜனங்களை அழித்துவிடுவார், வேறு ஜனங்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுப்பார்.
25 எனவே ஜனங்கள் செய்வது என்ன என்பதை தேவன் அறிகிறார்.
    அதனால் விரைவில் தேவன் தீயோரைத் தோற்கடித்து அவர்களை ஒரே இரவில் அழித்துவிடுவார்.
26 கெட்ட ஜனங்கள் செய்த தீய காரியங்களுக்காக, தேவன் அவர்களைத் தண்டிப்பார்.
    பிற ஜனங்கள் காணும்படியாக அந்த ஜனங்களை தேவன் தண்டிப்பார்.
27 ஏனெனில், கெட்ட ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள்.
    தேவன் விரும்புகிறபடியே செய்வதற்கும் அந்த ஜனங்கள் கவலைப்படுவதில்லை.
28 அந்தக் கெட்ட ஜனங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறார்கள்.
    தேவனை நோக்கி அவர்கள் உதவி வேண்டி அழும்படிச் செய்கிறார்கள். ஏழைகள் உதவி கேட்டு அழுவதை தேவன் கேட்கிறார்.
29 ஆனால் ஏழைகளுக்கு உதவ வேண்டாமென்று தேவன் முடிவுச் செய்தால், ஒருவரும் தேவனைக் குற்றவாளியாக நியாயந்தீர்க்க முடியாது.
    தேவன் ஜனங்களிடமிருந்து தன்னை மறைத்து கொண்டாரானால் அப்போது அவரை ஒருவரும் பார்க்க முடியாது.
    தேவனே ஜனங்களுக்கும் தேசங்களுக்கும் அரசர்.
30 ஒரு அரசன் தீயவனாக இருந்து பிறர் பாவம் செய்யும்படி பண்ணினால், அப்போது, தேவன் அவனை அரசாளும்படி அனுமதிக்கமாட்டார்.

31 “ஒரு மனிதன் தேவனிடம்,
    ‘நான் குற்றவாளி, இனிமேல் பாவம் செய்யமாட்டேன்.
32 தேவனே, நான் உம்மைப் பார்க்க முடியாவிட்டாலும் தக்க நெறியில் வாழும் வகையைத் தயவு செய்து எனக்குப் போதியும்.
    நான் தவறு செய்திருந்தால், மீண்டும் அதைச் செய்யமாட்டேன்’ என்று கூறலாம்.
33 யோபுவே, தேவன் உனக்குப் பரிசளிக்க (பலன்தர) வேண்டுமென நீ விரும்புகிறாய்.
    ஆனால் நீயோ உன்னை மாற்றிக்கொள்ள மறுக்கிறாய்.
யோபுவே, இது உம் முடிவு, என்னுடையதல்ல,
    நீ நினைப்பதை எனக்குச் சொல்லு.
34 ஒரு ஞானி நான் சொல்வதைக் கேட்பான்.
    ஒரு ஞானி,
35 ‘யோபு அறியாமையுடையவனைப் போலப் பேசுகிறான்.
    யோபு சொல்கின்றவை பொருள்தருவன அல்ல,’ என்பான்.
36 யோபு இன்னும் அதிகமாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.
    ஏனெனில் ஒரு தீயவன் பதில் சொல்கிறாற்போல, யோபுவும் எங்களுக்குப் பதில் சொல்கிறான்.
37 யோபு தனது பிற பாவங்களோடு இன்னும் பாவங்களை அதிகமாக்கினான்.
    எங்களுக்கு முன்பாக யோபு அமர்ந்திருக்கிறான், அவன் எங்களை அவமானப்படுத்துகிறான், தேவனைக் கேலிச்செய்கிறான்!” என்றான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center