Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோபு 21-23

யோபு பதில் கூறுகிறான்

21 அப்போது யோபு பதிலாக:

“நான் சொல்வதற்குச் செவிகொடும்.
    அதுவே, நீர் எனக்கு ஆறுதல் கூறும் வகையாயிருக்கும்.
நான் பேசும்போது பொறுமையாயிரும்.
    நான் பேசி முடித்தபின்பு, நீங்கள் என்னைக் கேலிச்செய்யலாம்.

“நான் ஜனங்களைப்பற்றிக் குறை கூறவில்லை.
    நான் பொறுமையாயிராததற்குத் தக்க காரணம் இருக்கிறது.
என்னைக் கண்டு அதிர்ச்சியடையும்,
    உம் கையை வாயில் வைத்து, அதிர்ச்சியால் என்னைப் பாரும்!
எனக்கு நேர்ந்ததைப்பற்றி நான் எண்ணும் போது,
    நான் அஞ்சுகிறேன், என் உடம்பு நடுங்குகிறது!
தீயோர் ஏன் நீண்ட ஆயுளோடு வாழ்கிறார்கள்?
    அவர்கள் ஏன் நீண்ட ஆயுளுடையவர்களாகவும் வெற்றிபெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்?
அவர்கள் பிள்ளைகள் தங்களோடு வளர்வதைத் தீயோர் பார்க்கிறார்கள்.
    அவர்களின் பேரப்பிள்ளைகளைப் பார்க்கும்படித் தீயோர் வாழ்கிறார்கள்.
அவர்கள் வீடுகள் பாதுகாப்பாக உள்ளது, அவர்கள் பயப்படுவதில்லை.
    தீயோரைத் தண்டிப்பதற்கு தேவன் ஒரு கோலையும் பயன்படுத்துவதில்லை.
10 அவர்களின் காளைகள் புணரத் தவறுவதில்லை.
    அவர்களின் பசுக்கள் கன்றுகளை ஈனுகின்றன. அக்கன்றுகள் பிறக்கும்போது மடிவதில்லை.
11 ஆட்டுக்குட்டிகளைப்போல் விளையாடுவதற்குத் தீயோர் அவர்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள்.
    அவர்கள் குழந்தைகள் சுற்றிலும் நடனமாடுகிறார்கள்.
12 தம்புறா, யாழ், குழல் ஆகியவற்றின் ஓசைக் கேற்ப அவர்கள் பாடி, நடனமாடுகிறார்கள்.
13 தீயோர் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிக் காண்கிறார்கள்.
    பின்பு, அவர்கள் மடிந்து துன்பமின்றி அவர்களின் கல்லறைக்குப் போகிறார்கள்.
14 ஆனால் தீயோர் தேவனை நோக்கி, ‘எங்களை விட்டுவிடும்!
    நாங்கள் செய்வதற்கென நீர் விரும்புவதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை!’ என்கிறார்கள்.
15 தீயோர், ‘சர்வ வல்லமையுள்ள தேவன் யார்?
    நாம் அவருக்கு சேவை செய்யத் தேவையில்லை!
    அவரிடம் ஜெபிப்பது உதவாது,’ என்கிறார்கள்!

16 “அது உண்மையே, தீயோர் அவர்களாக வெற்றிக் காண்பதில்லை.
    அவர்கள் அறிவுரையை நான் பின்பற்ற முடியாது.
17 ஆனால், தேவன் தீயோரின் ஒளியை எத்தனை முறை அணைக்கிறார்?
    எத்தனை முறை தீயோருக்குத் துன்பம் நேர்கிறது?
    எப்போது தேவன் அவர்களிடம் கோபங்கொண்டு அவர்களைத் தண்டித்தார்?
18 காற்று புல்லைப் பறக்கடிப்பதைப் போலவும்,
    பெருங்காற்று தானியத்தின் உமியைப் பறக்கடிப்பதைப்போலவும், தேவன் தீயோரைப் பறக்கடிக்கிறாரா?
19 ஆனால் நீங்கள், ‘தந்தையின் பாவத்திற்கென்று தேவன் ஒரு பிள்ளையைத் தண்டிக்கிறார்’ என்கிறீர்கள்.
    இல்லை! தேவன் தாமே தீயோனைத் தண்டிக்கட்டும். அப்போது அத்தீயோன், அவன் செய்த பாவங்களுக்குத் தண்டனை பெற்றதை அறிவான்!
20 பாவம் செய்தவன் தான் பெற்ற தண்டனையைப் பார்க்கட்டும்.
    சர்வ வல்லமையுள்ள தேவனின் கோபத்தை அவன் உணரட்டும்.
21 தீயவனின் வாழ்க்கை முடியும்போது, அவன் மடிகிறான்,
    அவன் தன் பின்னே விட்டுச் செல்லும் குடும்பத்தைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

22 “ஒருவனும் தேவனுக்கு அறிவைப் போதிக்க முடியாது.
    உயர்ந்த இடங்களிலிருக்கிற ஜனங்களையும் கூட தேவன் நியாயந்தீர்க்கிறார்.
23 ஒரு முழுமையும் வெற்றிகரமுமான வாழ்க்கைக்குப் பின் ஒருவன் மரிக்கிறான்.
    அவன் முழுக்க பாதுகாப்பான, சுகமான வாழ்க்கை வாழ்கிறான்.
24 அவன் உடல் போஷாக்குடையதாக உள்ளது.
    அவன் எலும்புகள் இன்னும் வலிவோடு காணப்படுகின்றன.
25 ஆனால், மற்றொருவன் கடின வாழ்க்கை வாழ்ந்து, கசப்பான ஆன்மாவோடு மரிக்கிறான்.
    அவன் நல்லவற்றில் களிப்படைந்ததில்லை.
26 இறுதியில், இருவரும் ஒருமித்து மண்ணில் கிடப்பார்கள்.
    அவர்கள் இருவரையும் பூச்சிகள் சூழ்ந்துக்கொள்ளும்.

27 “ஆனால், நீங்கள் நினைப்பதை நான் அறிவேன்,
    என்னைத் துன்புறுத்த நீங்கள் விரும்புகிறீர்கள் என அறிவேன்.
28 நீங்கள், ‘நல்லவன் ஒருவனின் வீட்டை எனக்குக் காட்டுங்கள்’
    இப்போது, தீயோர் வாழுமிடத்தை எனக்குக் காட்டுங்கள் என்கிறீர்கள்.

29 “நீங்கள் நிச்சயமாக பயணிகளிடம் பேசியிருக்கலாம்.
    நிச்சயமாக நீங்கள் அவர்களின் கதைகளை ஏற்கலாம்.
30 அழிவு வரும்போது தீயோர் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.
    தேவன் தமது கோபத்தைக் காட்டும்போது, அவர்கள் அதற்குத் தப்பியிருக்கிறார்கள்.
31 யாரும் தீயவனை அவன் செய்த தவறுகளுக்காக அவனெதிரே விமர்சிக்கிறதில்லை.
    அவன் செய்த தீமைகளுக்காக ஒருவரும் அவனைத் தண்டிக்கிறதில்லை.
32 அத்தீயவனைக் கல்லறைக்குச் சுமந்துச் செல்லும்போது,
    அவன் கல்லறையருகே ஒரு காவலாளி நிற்கிறான்.
33 எனவே பள்ளத்தாக்கின் மண்ணும் அத்தீயவனுக்கு இன்பமாயிருக்கும்.
    அவன் கல்லறையின் அடக்கத்திற்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் செல்வார்கள்.

34 “நீங்கள் உங்கள் வெறுமையான வார்த்தைகளால் எனக்கு ஆறுதல் கூறமுடியாது.
    உங்கள் பதில்கள் எனக்கு உதவமாட்டாது!” என்றான்.

எலிப்பாஸ் பதில் கூறுகிறான்

22 அப்போது தேமானின் எலிப்பாஸ் பதிலாக,

“தேவனுக்கு நமது உதவி தேவையா?
இல்லை!
    மிகுந்த ஞானவானும் உண்மையாகவே தேவனுக்குப் பயன்படுவதில்லை.
நீ தக்க நெறியில் வாழ்ந்தது தேவனுக்கு உதவுமா?
    இல்லை! நீ தேவனைப் பின்பற்றுவதால் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஏதேனும் கிடைக்குமா? இல்லை!
யோபுவே, ஏன் தேவன் உன்னைத் தண்டித்து, உன்னில் குறை காண்கிறார்?
    நீ அவரை தொழுது கொள்வதாலா?
இல்லை! நீ மிகுதியாகப் பாவம் செய்திருப்பதால்தான்.
    யோபுவே, நீ பாவம் செய்வதை நிறுத்துவதில்லை!
நீ உன் சகோதரன் ஒருவனுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுத்து,
    அவன் உனக்குத் திருப்பித் தருவதற்கு அடையாளமாக எதையேனும் கொடுக்க வற்புறுத்தியிருக்கலாம்.
    நீ கடனுக்கு ஈடாக ஏதேனும் ஏழை மனிதனின் ஆடைகளை எடுத்திருக்கலாம்.
    இல்லையெனில், எக்காரணமுமின்றி அவ்வாறு செய்திருக்கலாம்.
சோர்ந்த, பசித்த ஜனங்களுக்கு நீ தண்ணீரும், உணவும் கொடாது இருந்திருக்கலாம்.
யோபுவே, உனக்கு மிகுதியான விளை நிலங்கள் உண்டு,
    ஜனங்கள் உன்னை மதிக்கிறார்கள்.
விதவைகளுக்கு எதுவும் கொடாது அவர்களை நீ துரத்தியிருக்கலாம்.
    யோபுவே, நீ அநாதைகளை ஏமாற்றியிருக்கலாம்.
10 ஆகவே, உன்னைச் சுற்றிலும் கண்ணிகள் அமைந்துள்ளன,
    திடீர்பயம் உன்னை அஞ்சவைக்கிறது.
11 ஆகவே, நீ பார்க்க முடியாதபடி மிகுந்த இருள் சூழ்ந்திருக்கிறது,
    வெள்ளப்பெருக்கு உன்னை மூடுகிறது.

12 “தேவன் பரலேகத்தின் மிக உயர்ந்த இடத்தில் வாழ்கிறார்.
    விண்மீன்கள் எத்தனை உயரத்தில் உள்ளன எனப்பாருங்கள்.
    மிக உயர்ந்த நட்சத்திரத்தை தேவன் கிழே நோக்கிப்பார்க்கிறார்.
13 ஆனால் யோபுவே, நீ சொல்லலாம் ‘தேவன் என்ன அறிவார்?
    இருண்ட மேகங்கள் வழியாகப் பார்த்து, தேவன் நம்மை நியாயந்தீர்க்கக் கூடுமா?
14 அடர்த்தியான மேகங்கள் அவரை நம்மிடமிருந்து மறைக்கின்றன,
    எனவே, அவர் வானத்தின் விளிம்பைத் தாண்டி நடக்கிறபோது நம்மைப் பார்க்க முடிவதில்லை’ எனக் கூறுவாய்.

15 “யோபுவே, பல காலம் முன்பு தீயோர் நடந்த அந்தப் பழைய பாதையில்
    நீ நடந்துக்கொண்டிருக்கிறாய்.
16 அவர்கள் இறக்கவேண்டிய காலத்திற்கு முன்னரே, அத்தீயோர் அழிக்கப்பட்டார்கள்.
    அவர்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
17 அவர்கள் தேவனைப் பார்த்து, ‘எங்களைத் தனித்து விட்டுவிடும்!
    சர்வ வல்லமையுள்ள தேவன் எங்களை என்னச் செய்யமுடியும்!’ என்பார்கள்.
18 நற்காரியங்களால் அவர்கள் வீடுகளை நிரப்பியவர் தேவனே!
    இல்லை, என்னால் தீயோரின் அறிவுரையைப் பின்பற்ற முடியாது.
19 அழிவதை நல்லோர் காண்பார்கள்.
    அந்த நல்ல ஜனங்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
    களங்கமற்ற ஜனங்கள் தீயோரைக் கண்டு நகைப்பார்கள்,
20 ‘உண்மையாகவே நம் பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
    நெருப்பு அவர்களின் செல்வத்தைத் கொளுத்துகிறது!’

21 “இப்போது, யோபுவே, உன்னை தேவனுக்குக் கொடுத்து அவரோடு சமாதானம் செய்துக்கொள்.
    இதைச் செய், உனக்கு நல்லவை பல வாய்க்கும்.
22 அவரது போதனையை ஏற்றுக்கொள்.
    அவர் சொல்வதைக் கவனமாகக் கேள்.
23 யோபுவே, சர்வ வல்லமையுள்ள தேவனிடம் திரும்பி வா, உன் பழைய நிலைக்கு அழைத்துச் செல்லப்படுவாய்.
    ஆனால், நீ உனது வீட்டிலிருந்து தீமையை அகற்ற வேண்டும்.
24 உனது பொன்னை நீ தூசியாகக் கருதவேண்டும்.
    பள்ளத்தாக்கின் பாறைகளைப் போல, உனது உயர்ந்த பொன்னைக் கருதவேண்டும்.
25 சர்வ வல்லமையுள்ள தேவனே, உனக்குப் பொன்னாகட்டும்.
    அவரே உனக்கு வெள்ளிக் குவியல் ஆகட்டும்.
26 அப்போது நீ சர்வ வல்லமையுள்ள தேவனில் களிகூருவாய்.
    அப்போது நீ தேவனை நோக்கிப் பார்ப்பாய்.
27 நீ அவரிடம் ஜெபிப்பாய், அவர் உன்னைக் கேட்பார்.
    நீ செய்வதாக உறுதியளித்த காரியங்களை, அப்போது நீ செய்யமுடியும்.
28 நீ ஏதேனும் செய்யத் தீர்மானித்தால், அது வெற்றியடையும்,
    உனது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்.
29 பெருமையுள்ளோரை வெட்கமடையச் செய்கிறார்.
    ஆனால் தேவன் எளியோருக்கு உதவுகிறார்.
30 அப்போது நீ தவறு செய்யும் ஜனங்களுக்கு உதவ முடியும்.
    நீ தேவனிடம் ஜெபிப்பாய். அவர் அந்த ஜனங்களுக்கு மன்னிப்பார்.
    ஏனெனில் நீ அத்தனை பரிசுத்தமாக இருப்பாய்” என்றான்.

யோபு பதில் கூறுகிறான்

23 அப்போது யோபு பதிலாக:

“நான் இன்றைக்கு இன்னும் மனங்கசந்து முறையிடுகிறேன்.
    ஏனெனில் நான் இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன்.
எங்கே தேவனைப் பார்க்கக் கூடுமென நான் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
    தேவனிடம் போகும் வழியை அறிய விரும்புகிறேன்.
நான் தேவனிடம் என் நியாயத்தை விளக்குவேன்.
    நான் களங்கமற்றவனெனக் காட்டும் விவாதங்களால் என் வாய் நிரம்பியிருக்கும்.
என் விவாதங்களுக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார் என்று அறிவேன்.
    தேவனுடைய பதில்களைப் புரிந்துகொள்வேன்.
தேவன் எனக்கெதிராக அவரது வல்லமையைப் பயன்படுத்துவாரா?
    இல்லை அவர் எனக்குச் செவிகொடுப்பார்!
நான் ஒரு நேர்மையான மனிதன்.
    என் கதையை நான் கூற, தேவன் அனுமதிப்பார்.
    அப்போது என் நீதிபதி என்னை விடுதலையாக்குவார்!

“ஆனால் நான் கிழக்கே போனால், அங்கே தேவன் இல்லை.
    நான் மேற்கே போனால், அங்கும் நான் தேவனைக் காணேன்.
தேவன் வடக்கே பணி செய்யும்போது, நான் அவரைப் பார்க்க முடியவில்லை.
    தேவன் தெற்கே திரும்பும்போதும், நான் அவரைக் காணவில்லை.
10 ஆனால் தேவன் என்னை அறிவார்.
    அவர் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார், நான் பொன்னைப்போன்று தூயவனெனக் காண்பார்.
11 தேவன் விரும்புகிறபடியே நான் எப்போதும் வாழ்ந்திருக்கிறேன்.
    நான் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தியதேயில்லை.
12 நான் தேவனுடைய கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகிறேன்.
    என் உணவைக் காட்டிலும் அதிகமாக தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நான் நேசிக்கிறேன்.

13 “ஆனால் தேவன் மாறுகிறதில்லை.
    ஒருவனும் தேவனுக்கெதிராக நிற்கமுடியாது.
    தேவன் தான் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
14 தேவன் எனக்கென்று அவர் திட்டமிட்டவற்றைச் செய்வார்.
    எனக்காக வேறு பல திட்டங்களையும் அவர் வைத்திருக்கிறார்.
15 அதனாலே நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன்.
    இக்காரியங்களை நான் புரிந்துக்கொள்கிறேன்.
    ஆகையால் நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன்.
16 தேவன் என் இருதயத்தை இளைக்கச் (சோர்வடைய) செய்கிறார், நான் என் தைரியத்தை இழக்கிறேன்.
    சர்வ வல்லமையுள்ள தேவன் என்னை அஞ்சச் செய்கிறார்.
17 என் முகத்தை மூடும் கருமேகத்தைப் போன்று எனக்கு நேர்ந்த தீயகாரியங்கள் உள்ளன.
    ஆனால் அந்த இருள் என்னை அடக்காது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center