Beginning
14 யோபு, “நாமெல்லோரும் மனித ஜீவிகளே.
நம் வாழ்க்கை குறுகியதும் தொல்லைகள் நிரம்பியதுமாகும்.
2 மனிதனின் வாழ்க்கை ஒரு மலரைப் போன்றது.
அவன் விரைவாக வளருகிறான், பின்பு மடிந்துப் போகிறான்.
மனிதனின் வாழ்க்கை ஒரு நிழலைப் போன்றது.
அது குறுகிய காலம் இருந்து, பின்பு மறைந்துப்போகும்.
3 அது உண்மையே, ஆனால் ஒரு மனிதனாகிய என்னை தேவன் நோக்கிப்பார்ப்பாரா?
நீர் என்னோடு நியாய சபைக்கு வருவீரா?
அங்கு நாம் இருவரும் நம் விவாதங்களை முன் வைப்போம்.
4 “ஆனால் அழுக்குப்படிந்த ஒரு பொருளுக்கும்
தூய்மையான ஒரு பொருளுக்குமிடையே இருக்கும் ஒற்றுமை என்ன? ஒன்றுமில்லை!
5 மனிதனின் வாழ்க்கை ஒரு எல்லை உடையது.
தேவனே, ஒரு மனிதன் எத்தனைக் காலம் வாழ்கிறான் என்பதை நீர் முடிவு செய்கிறீர்.
ஒரு மனிதனுக்கு அந்த எல்லைகளை நீர் முடிவெடுக்கிறீர், எதுவும் அதை மாற்றமுடியாது.
6 எனவே, தேவனே எங்களைக் கவனிப்பதை நிறுத்தும்.
எங்களைத் தனித்துவிடும்.
எங்கள் காலம் முடியும் வரைக்கும் எங்கள் கடின வாழ்க்கையை நாங்கள் வாழவிடும்.
7 “ஒரு மரத்திற்கும் நம்பிக்கை உண்டு.
அது வெட்டப்பட்டால், மீண்டும் வளரக்கூடும்.
அது புது கிளைகளைப் பரப்பியபடி நிற்கும்.
8 அதன் வேர்கள் பலகாலம் மண்ணிற்குள் வளரும்,
அதன் அடிப்பகுதி புழுதியில் மடியும்.
9 ஆனால் தண்ணீரினால் அது மீண்டும் வளரும்.
புதுச்செடியைப்போன்று அதில் கிளைகள் தோன்றும்.
10 ஆனால் மனிதன் மரிக்கும்போது, அவன் அழிந்து போகிறான்.
மனிதன் மரிக்கும்போது, அவன் காணமற்போகிறான்.
11 நதிகள் வற்றிப்போகும்படியாகவும் கடல் தண்ணீர் முழுவதும் வற்றிப்போகும்படியாக தண்ணீர் இறைத்தாலும்
மனிதன் மரித்தவனாகவேகிடப்பான்.
12 ஒருவன் மரிக்கும்போது அவன் படுத்திருக்கிறான், மீண்டும் எழுகிறதில்லை.
அவர்கள் எழும்முன்னே வானங்கள் எல்லாம் மறைந்துபோகும்.
ஜனங்கள் அந்த உறக்கத்திலிருந்து எழுவதேயில்லை.
13 “நீர் என் கல்லறையில் என்னை ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன்.
நீர் உமது கோபம் ஆறும்வரை என்னை அங்கு ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன்.
பின்பு என்னை நினைவுகூரும் காலத்தை நீர் தேர்ந்தெடுக்கலாம்.
14 ஒருவன் இறந்தால், அவன் மீண்டும் வாழ்வானா?
நான் விடுதலையாகும்வரை எத்தனை காலமாயினும் காத்திருந்தேயாக வேண்டும்!
15 தேவனே, நீர் என்னைக் கூப்பிடுவீர்,
நான் உமக்குப் பதில் தருவேன்,
நீர் என்னை சிருஷ்டித்தீர்,
நான் உமக்கு முக்கியமானவன்.
16 நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர்.
ஆனால், நீர் என் பாவங்களை நினைவுக்கூர்வதில்லை.
17 நீர் என் பாவங்களை ஒரு பையில் கட்டி வைப்பீர்.
அதை முத்திரையிடும், அதை வீசியெறிந்துபோடும்!
18 “நொறுங்கிப்போகும்.
பெரும் பாறைகள் தளர்ந்து உடைந்துவிழும்.
19 கற்களின் மீது பாயும் வெள்ளம் அவற்றைக் குடையும்.
பெருவெள்ளம் நிலத்தின் மேற்பரப்புத்துகளை அடித்துச் (இழுத்து) செல்லும்.
தேவனே, அவ்வாறே ஒருவனின் நம்பிக்கையை நீர் அழிக்கிறீர்.
20 அவனை முற்றிலும் தோற்கடித்து, பின்பு விலகிப் போகிறீர்.
அவனைத் துயரங்கொள்ளச் செய்து, மரணத்தின் இடத்திற்கு என்றென்றைக்கும் அனுப்புகிறீர்.
21 அவன் மகன்கள் பெருமையடையும்போது, அவன் அதை அறியான்.
அவன் மகன்கள் தவறுசெய்யும்போது, அவன் அதைக் காணான்.
22 அம்மனிதன் தனது உடம்பின் வலியை மட்டுமே உணருகிறான்,
அவன் தனக்காக மட்டுமே உரக்க அழுகிறான்” என்றான்.
எலிப்பாஸ் யோபுக்குப் பதில் கூறுகிறான்
15 அப்போது தேமானைச் சார்ந்த எலிப்பாஸ் யோபுக்குப் பதிலாக,
2 “யோபுவே, நீ உண்மையாகவே ஞான முள்ளவனாக இருந்தால், நீ பிரயோஜனமற்ற வெறும் வார்த்தைகளால் பதில் கூறமாட்டாய்.
வெப்பக் காற்று நிரம்பியவனாக ஞானவான் இருக்கமாட்டான்.
3 பொருளற்ற பேச்சுக்களாலும்
தகுதியற்ற வார்த்தைகளாலும் ஒரு ஞானவான் விவாதிப்பானென்று நீ நினைக்கிறாயா?
4 யோபுவே, நீ கூறும்படி நடந்தால்,
ஒருவனும் தேவனை மதித்து, அவரிடம் ஜெபிக்கமாட்டான்.
5 நீ கூறும் காரியங்கள் உனது பாவத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன.
யோபுவே, உனது புத்திசாலித்தனமான சொற்களால் உனது பாவங்களை நீ மறைக்க முயன்றுக்கொண்டிருக்கிறாய்.
6 நீ செய்வது தவறென நான் உன்னிடம் நிரூபிக்கத் தேவையில்லை.
உனது வாயினால் கூறும் சொற்களே உனது தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றன.
உனது சொந்த உதடுகளே உனக்கு எதிராகப் பேசுகின்றன.
7 “யோபுவே, பிறந்தவர்களில் நீதான் முதல் மனிதன் என எண்ணுகிறாயா?
மலைகள் தோன்றும் முன்னே நீ பிறந்தாயா?
8 நீ தேவனுடைய இரகசிய திட்டங்களுக்குச் செவிசாய்த்தாயா?
நீ மட்டுமே ஞானமுள்ளவனென நினைக்கிறாயா?
9 யோபுவே, உன்னைக் காட்டிலும் நாங்கள் மிகுதியாக அறிவோம்.
உனக்குப் புரிகின்றக் காரியங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
10 நரைமயிருள்ளோரும் வயது முதிர்ந்தோரும் எங்களோடு ஒத்திருக்கிறார்கள்.
ஆம், உனது தந்தையைக் காட்டிலும் வயது முதிர்ந்தோரும் எங்கள் பக்கத்தில் இருக்கிறார்கள்.
11 தேவன் உனக்கு ஆறுதல் கூற முயற்சிக்கிறார், ஆனால் அது உனக்குப் போதவில்லை.
தேவனுடைய செய்தியை நயமாக நாங்கள் உனக்குக் கூறினோம்.
12 யோபுவே, ஏன் நீ புரிந்துகொள்ளவில்லை?
ஏன் நீ உண்மையைக் காண இயலவில்லை?
13 நீ கோபமான இந்தச் சொற்களைப் பேசும்போது
நீ தேவனுக்கு எதிராக இருக்கிறாய்.
14 “ஒரு மனிதன் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது.
பெண் வயிற்றில் பிறந்த ஒருவன் நியாயமுள்ளவனாக இருக்க முடியாது.
15 தேவன் அவரது தூதர்களைக்கூட [a] நம்புகிறதில்லை.
வானங்களும் அவரது பார்வையில் துய்மையானவை அல்ல.
16 மனிதன் இன்னும் கேவலமானவன்,
மனிதன் அழுக்கானவனும் அழியக்கூடியவனும் ஆவான்.
தண்ணீரைப்போன்று அவன் கொடுமையைப் பருகுகிறான்.
17 “யோபுவே, எனக்குச் செவிகொடு, நான் உனக்கு விவரிப்பேன்.
எனக்குத் தெரிந்ததை நான் உனக்குக் கூறுவேன்.
18 ஞானவான்கள் எனக்குக் கூறியவற்றை நான் உனக்குச் சொல்வேன்.
ஞானவான்களின் முற்பிதாக்கள் அவர்களுக்கு இவற்றைக் கூறினார்கள்.
அவர்கள் எந்த இரகசியங்களையும் என்னிடமிருந்து மறைக்கவில்லை.
19 அவர்கள் மட்டுமே அவர்களின் நாட்டில் வாழ்ந்தார்கள்.
கடந்து செல்லும்போது அந்நியர்கள் அங்கு இருக்கவில்லை.
எனவே ஒருவரும் அவர்களுக்கு வேடிக்கையான கருத்துக்களைச் சொல்லவில்லை.
20 தீயவன் வாழ்க்கை முழுவதும் துன்புறுகிறான்.
கொடியவன் வரையறுக்கப்பட்ட அவன் ஆயுள் முழுவதும் துன்புறுகிறான்.
21 ஒவ்வொரு சத்தமும் அவனை அச்சுறுத்துகிறது,
அவன் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணும்போது அவனது பகைவன் அவனைத் தாக்குவான்.
22 தீயவன் நம்பிக்கையற்றுக் கலங்குகிறான்,
மரண இருளிலிருந்து தப்புவதற்கு அவனுக்கு எந்த நம்பிக்கையுமில்லை.
அவனைக் கொல்லக் காத்துக் கொண்டிருக்கும் வாள் ஒன்று எங்கோ உள்ளது.
23 அவன் அங்குமிங்கும் அலைந்துத் திரிகிறான்,
ஆனால் அவன் உடல் பருந்துகளுக்கு இரையாகும்.
அவனது மரணம் மிக அருகாமையிலுள்ளது என்பதை அவன் அறிகிறான்.
24 கவலையும் துன்பமும் அவனை அச்சுறுத்தும்.
அவனை அழிக்கத் தயாராயிருக்கிற அரசனைப் போன்று அவை அவனைத் தாக்கும்.
25 ஏனெனில், தீயவன் தேவனுக்குக் கீழ்ப்படியமறுக்கிறான்.
அவன் தனது கை முட்டியைத் தேவனுக்கு எதிராக உயர்த்தி, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு எதிராகச் செயல்படுகின்றான். தோற்கடிக்க முயல்கிறான்.
26 தீயவன் மிகவும் அடம்பிடிப்பவன்.
அவன் கெட்டியான, வலிமையான கேடயத்தால் தேவனைத் தாக்க முயல்கிறான்.
27 அவன் செல்வந்தனும் கொழுத்தவனாகவும் இருப்பான்,
28 ஆனால் அவன் ஊர் அழிக்கப்படும், அவன் வீடு பாழாகும்,
அவன் வீடு வெறுமையாகும்,
29 தீயவன் பலகாலம் செல்வனாக இருக்கமாட்டான்.
அவன் செல்வம் நிலைக்காது.
அவனது பயிர்கள் செழிப்பாக வளராது.
30 தீயவன் இருளிலிருந்து தப்பமாட்டான்.
நோயினால் மடியும் இலைகளையும்
காற்றினால் பறக்கடிக்கப்படும் இலைகளையும் கொண்ட மரத்தைப் போலிருப்பான்.
31 தீயவன் தகுதியற்றவற்றை நம்பி தன்னை மூடனாக்கிக்கொள்ளக் கூடாது.
ஏனெனில் அவன் எதையும் அடையமாட்டான்.
32 அவன் வாழ்க்கை முடியும் முன்பே, தீயவன் வயதாகி வாடிப்போவான்.
என்றும் பசுமையுற முடியாத, உலர்ந்த கிளையைப் போல அவன் இருப்பான்.
33 இன்னும் பழுக்காத திராட்சைக் கனிகளை இழக்கின்ற திராட்சைக் கொடியைப்போன்று தீயவன் இருப்பான்.
மொட்டுக்களை இழக்கும் ஒலிவ மரத்தைப் போன்று அம்மனிதன் இருப்பான்.
34 ஏனெனில் தேவனற்ற மனிதர்களுக்கு எதுவுமில்லை (ஒன்றுமில்லை).
பணத்தை நேசிப்போரின் வீடுகள் நெருப்பால் அழியும்.
35 தீயனச் செய்து, தொல்லை விளைவிப்பதற்குத் தீயோர் வழிகளைத் திட்டமிடுகிறார்கள்.
ஜனங்களை ஏமாற்றும் வழிகளை அவர்கள் எப்போதும் திட்டமிடுகிறார்கள்” என்று கூறினான்.
யோபு எலிப்பாசுக்குப் பதிலளிக்கிறான்
16 அப்போது யோபு பதிலாக,
2 “நான் இவற்றையெல்லாம் முன்பே கேட்டிருக்கிறேன்.
நீங்கள் மூவரும் எனக்குத் தொல்லையை அல்லாமல் ஆறுதலைத் தரவில்லை.
3 உங்கள் நீண்ட பேச்சுகளுக்கு முடிவேயில்லை!
ஏன் தொடர்ந்து விவாதிக்கிறீர்கள்?
4 எனக்கு வந்த தொல்லைகள் உங்களுக்கு ஏற்பட்டால்
நீங்கள் சொல்வதையே நானும் சொல்லக் கூடும்.
நானும் ஞானமுள்ள காரியங்களை உங்களுக்குச் சொல்லி,
என் தலையை உங்களுக்கு நேர் அசைக்கக்கூடும்.
5 நான் கூறும் காரணங்களால் உங்களுக்கு உற்சாகமூட்டி
உங்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும்.
6 “ஆனால் நான் கூறுபவை எதுவும் என் வேதனையை அகற்ற முடியாது!
ஆயினும் மௌனமாய் இருப்பதிலும் பயன் இல்லை.
7 தேவனே, உண்மையாகவே என் பலத்தை எடுத்துப்போட்டீர்.
என் குடும்பம் முழுவதையும் அழித்தீர்.
8 நீர் என்னை இணைத்து பலவீனமாக்கினீர்.
அதனால் நான் குற்றவாளியே என ஜனங்கள் நினைக்கிறார்கள்.
9 “தேவன், என்னைத் தாக்குகிறார்,
அவர் என் மீது கோபங்கொண்டு, என் உடம்பைக் கிழித்தெறிகிறார்.
தேவன் எனக்கெதிராக அவரது பற்களைக் கடிக்கிறார்.
என் பகைவனின் கண்கள் என்னை வெறுப்போடு (பகையோடு) பார்க்கின்றன.
10 ஜனங்கள் என்னைச் சூழ்ந்து ஒன்றுக் கூடி, என்னை பார்த்து நகைத்து,
என் முகத்தில் அறைகிறார்கள்.
11 தேவன் என்னைத் தீய ஜனங்களிடம் ஒப்படைத்தார்.
அத்தீயர் என்னைக் காயப்படுத்தும்படிவிட்டார்.
12 எனக்கு எல்லாம் நல்லபடியாக இருந்தன, ஆனால், பின்பு தேவன் என்னை நசுக்கினார்!
ஆம், அவர் என்னைக் கழுத்தில் பிடித்து, என்னைத் துண்டுகளாக நொறுக்கினார்!
தேவன் என்னை இலக்காகப் பயன்படுத்தினார்.
13 தேவனுடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்து நிற்கிறார்கள்.
அவர் என் சிறுநீரகங்கள்மேல் அம்புகளை எய்கிறார்.
அவர் இரக்கம் காட்டவில்லை.
என் ஈரலின் பித்த தண்ணீரைத் தரையில் சிந்தச் செய்கிறார்.
14 மீண்டும், மீண்டும் தேவன் என்னைத் தாக்குகிறார்.
யுத்தம் செய்யும் வீரனைப் போல் அவர் என் மேல் பாய்கிறார்.
15 “நான் மிகவும் துயரமுற்றிருக்கிறேன், எனவே துயரத்தைக் காட்டும் இந்த ஆடைகளை அணிந்திருக்கிறேன்.
நான் இங்குத் துகளிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, நான் தோற்கடிக்கப்பட்டதாய் உணருகிறேன்.
16 அழுது என் முகம் சிவந்திருக்கிறது.
கருவளையங்கள் என் கண்ணைச் சுற்றிலும் காணப்படுகின்றன.
17 நான் யாரிடமும் கொடுமையாக நடந்துக்கொண்டதில்லை, ஆனால் இத்தீய காரியங்கள் எனக்கு நேரிட்டுள்ளன.
என் ஜெபங்கள் தூய்மையும் நேர்மையுமானவை.
18 “பூமியே, எனக்குச் செய்யப்பட்ட அநீதிகளை மறைக்காதே.
நியாயத்திற்கான என் வேண்டுதல் (நிறுத்த) தடுக்கப்படாமல் இருக்கட்டும்.
19 இப்போதும் பரலோகத்தில் யாரேனும் இருந்தால், அவர்கள் எனக்காக பேசுவார்கள்,
மேலிருந்து யாராவது எனக்காக சாட்சி கூறுவார்கள்.
20 என் கண்கள் தேவனுக்கு முன்னால் கண்ணீரைச் சொரிகையில்
என் நண்பர்கள் எனக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
21 நண்பனுக்காக வாதாடுகின்ற ஒரு மனிதனைப் போன்று
எனக்காக தேவனை வேண்டுகிற ஒருவன் எனக்கு வேண்டும்!
22 “இன்னும் சில ஆண்டுகளில்
திரும்பமுடியாத அந்த இடத்திற்கு, (மரணம்) நான் போவேன்.”
2008 by World Bible Translation Center