Beginning
பில்தாத் யோபுவிடம் பேசுகிறான்
8 அப்போது சூகியனான பில்தாத் பதிலாக,
2 “எத்தனை காலம் இவ்வாறு பேசுவீர்?
பலத்த காற்றைப்போன்று உமது சொற்கள் வெளிப்படுகின்றன.
3 தேவன் நியாயத்தை மாற்றுவாரோ?
சர்வ வல்லமையுள்ள தேவன் சரியானவற்றை மாற்றுவாரோ?
4 உமது பிள்ளைகள் தேவனுக்கெதிராகப் பாவம் செய்தபோது அவர் அவர்களை தண்டித்தார்.
அவர்கள் தங்கள் பாவங்களுக்காகத் தண்டனைப் பெற்றார்கள்.
5 ஆனால் இப்போது யோபுவே, தேவனைப் பார்த்து
சர்வ வல்லமையுள்ள அவரிடம் ஜெபம் செய்யும்.
6 நீர் தூய்மையும் உத்தமனாகவும் இருந்தால்,
அவர் விரைந்து உமக்கு உதவ வருவார்.
உமது குடும்பத்தை மீண்டும் உமக்குத் தருவார்.
7 தொடக்கம் அற்பமாக இருந்தாலும்
உமது எதிர்காலம் ஆசீர்வாதமானதாக இருக்கும்.
8 “வயது முதிர்ந்தோரைக் கேளும்,
அவர்கள் முற்பிதாக்கள் அறிந்துகொண்டதைத் தெரிந்துகொள்ளும்.
9 ஏனெனில் நாம் நேற்றுப் பிறந்தோம்.
ஒன்றும் நாம் அறியோம், ஏனெனில் பூமியில் நம் நாட்கள் நிழலைப்போன்று மிகவும் குறுகியவை.
10 முதிர்ந்தோர் உமக்குக் கற்பிக்கக்கூடும்.
அவர்கள் அறிந்துக்கொண்டவற்றை உமக்குச் சொல்லக் கூடும்” என்று கூறினான்.
11 பில்தாத் மேலும், “பாப்பிரஸ் உலர்ந்த பூமியில் ஓங்கி வளருமோ?
தண்ணீரின்றி கோரைப் புற்கள் வளரக்கூடுமோ?
12 இல்லை, தண்ணீர் வற்றிப்போகும்போது அவை உலர்ந்துபோகும்.
அவற்றை வெட்டிப் பயன்படுத்த முடியாதபடி சிறியனவாக இருக்கும்.
13 தேவனை மறப்போரும் அப்புற்களைப் போலிருக்கிறார்கள்.
தேவனை மறக்கும் மனிதனுக்கு எத்தகைய நம்பிக்கையும் அழிந்துப்போகும்.
14 அம்மனிதன் சாய்ந்து நிற்க எதுவுமில்லை.
அவன் பாதுகாவல் ஒரு சிலந்தி வலையைப் போன்றது.
15 சிலந்தி வலையில் ஒருவன் சாய்ந்தால், அந்த வலை அறுந்துப்போகும்.
அவன் வலையைப் பற்றிக்கொள்வான், ஆனால் அது அவனைத் தாங்கிக்கொள்ளாது.
16 அந்த மனிதனோ சூரிய ஒளி உதிக்கும் முன் இருக்கிற பச்சை செடியைப் போலிருக்கிறான்.
தோட்டம் முழுவதும் அதன் கிளைகள் பரவி நிற்கும்.
17 பாறைகளைச் சுற்றிலும் அதன் வேர்கள் படர்ந்திருக்கும்.
பாறைகளினூடே வளர்வதற்கு அது ஓர் இடம் தேடும்.
18 ஆனால் அத்தாவரத்தை அவ்விடத்திலிருந்து அகற்றினால் அது வாடிப்போகும்,
அது அங்கிருந்தது என்பதையும் ஒருவரும் அறியமாட்டார்கள்.
19 ஆனால், அத்தாவரம் மகிழ்ச்சியடைந்தது.
அது இருந்த இடத்தில் மற்றொரு தாவரம் முளைத்தது.
20 தேவன் களங்கமற்றோரைக் கைவிடமாட்டார்.
அவர் கொடியோருக்கு உதவமாட்டார்.
21 தேவன் இன்னும் உமது வாயை நகைப்பினாலும்
உதடுகளை மகிழ்ச்சி ஆரவாரங்களினாலும் நிரப்புவார்.
22 ஆனால் உனது பகைவர்கள் வெட்கத்தை ஆடையாக அணிந்துகொள்வார்கள்.
தீய ஜனங்களின் வீடுகள் அழிக்கப்படும்” என்றான்.
யோபு பில்தாத்திற்குப் பதில் கூறுகிறான்.
9 அப்போது யோபு,
2 “ஆம் நீர் கூறுவது உண்மையென அறிவேன்.
ஆனால் ஒரு மனிதன் எப்படி தேவனுக்கு முன் நீதிமானாயிருக்க முடியும்?
3 ஒருவன் தேவனிடம் வாதாட முடியாது!
தேவன் 1,000 கேள்விகளைக் கேட்கமுடியும், ஒருவனும் ஒரு கேள்விக்குக்கூட பதில் கூற முடியாது!
4 தேவன் மிகுந்த ஞானமுள்ளவர், அவரது வல்லமை மிகப்பெரியது!
ஒருவனும் தேவனோடு போராடி, காயமுறாமலிருக்க முடியாது.
5 தேவன் கோபமாயிருக்கும்போது பர்வதங்களை அசைக்கிறார்,
அவை அதனை அறியாது.
6 பூமியை அசைக்கும்படி தேவன் பூமியதிர்ச்சியை அனுப்புகிறார்.
தேவன் பூமியின் அஸ்திபாரங்களை அசைக்கிறார்.
7 தேவன் சூரியனிடம் பேசமுடியும், அதை உதயமாகாமல் செய்யமுடியும்.
அவர் விண்மீன்களை ஒளிவிடாதபடி பூட்டமுடியும்.
8 தேவன் மட்டுமே வானங்களை உண்டாக்கினார்,
அவர் சமுத்திரத்தின் அலைகளின் மேல் நடக்கிறார்.
9 “அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருக சீரிஷத்தையும், அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினார்.
10 மனிதர் புரிந்துகொள்ள முடியாத அற்புதமான காரியங்களை தேவன் செய்கிறார்.
தேவனுடைய எண்ணிமுடியாத அதிசங்களுக்கு முடிவேயில்லை!
11 தேவன் என்னைக் கடந்துச் செல்கையில் நான் அவரைப் பார்க்க முடியாது.
தேவன் என்னைக் கடந்துச் செல்கையில் நான் அவரைக் கவனிப்பதில்லை.
12 தேவன் எதையாவது எடுத்துக்கொண்டால் அவரை யாரும் தடுக்க முடியாது.
‘நீர் என்ன செய்கிறீர்?’
என்று யாரும் அவரைக் கேட்கமுடியாது.
13 தேவன் தமது கோபத்தை அடக்கிக்கொள்ளமாட்டார்.
ராகாபின் [a] உதவியாளருங்கூட தேவனுக்குப் பயந்திருக்கிறார்கள்.
14 எனவே நான் தேவனுக்கு பதில் கொடுக்க முடியாது.
அவரிடம் என்ன சொல்வேனென்பதை நான் அறியேன்.
15 நான் களங்கமற்றவன், ஆனால் என்னால் அவருக்குப் பதில் கூறமுடியாது.
என் நீதிபதியிடம் (தேவனிடம்) இரக்கத்திற்காக மன்றாடமட்டுமே என்னாலாகும்.
16 நான் கூப்பிட்டு அவர் பதில் தந்தாலும்,
அவர் உண்மையாகவே எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நான் நம்ப முடியாது.
17 தேவன் என்னை நசுக்குவதற்குப் புயல்களை அனுப்புகிறார்.
எக்காரணமுமின்றி எனக்கு இன்னுமதிகமான காயங்களைத் தருகிறார்.
18 மீண்டும் இன்னொரு முறை சுவாசிக்க தேவன் என்னை அனுமதிக்கமாட்டார்.
அவர் எனக்கு இன்னும் தெல்லைகளைத் தருகிறார்.
19 தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர்!
யார் தேவனை நியாயசபைக்கு அழைத்து வந்து, நியாயம் வழங்கும்படி சொல்ல முடியும்?
20 நான் களங்கமற்றவன், ஆனால் நான் கூறுபவை என்னைக் குற்றவாளியாகக் காட்டக்கூடும்.
நான் உத்தமன், ஆனால் நான் பேசினால் என் வாய் என்னைக் குற்றவாளியாக நிரூபிக்கிறது.
21 நான் களங்க மற்றவன், நான் எதைச் சிந்திப்பதென அறியேன்.
நான் என் சொந்த வாழ்க்கையையே வெறுக்கிறேன்.
22 நான் எனக்குள்ளே, ‘இதே மாதிரி எல்லோருக்கும் நிகழ்கிறது’
களங்கமற்றவர்களும் குற்றவாளிகளும் முடிவை காண்பார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன்.
23 கொடிய செயலொன்று நிகழ்ந்து களங்கமற்றவன் கொல்லப்பட்டால்
தேவன் அவரைப் பார்த்து நகைப்பாரா?
24 தீயவன் ஒருவன் ஒரு நிலத்தைத் தன தாக்கிக்கொள்ளும்போது,
நிகழ்வனவற்றைத் தலைவர்கள் காணாதபடி தேவன் செய்கிறாரா?அது உண்மையானால் தேவன் யார்?
25 “ஓர் ஓட்டக்காரனைக் காட்டிலும் என் நாட்கள் வேகமாகக் கழிகின்றன.
என் நாட்கள் பறக்கின்றன, அவற்றில் சந்தோஷமில்லை.
26 வேகமாய் ஓடுகின்ற கப்பல்களைப் போலவும்
இரையைப் பிடிக்க பாய்கின்ற கழுகுகளைப் போலவும் என் நாட்கள் கடந்துச்செல்கின்றன.
27 “நான் முறையிடுவதில்லை, ‘என் வேதனையை மறப்பேன்,
என் முகத்தில் புன்னகை பொலிவேன்!’
என்று நான் கூறினால்,
28 அது எந்த மாற்றத்தையும் உண்மையாக ஏற்படுத்துவதில்லை!
துன்பங்கள் என்னை அச்சுறுத்துகின்றன.
29 நான் ஏற்கெனவே குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டேன்.
எனவே, நான் ஏன் முயன்றுகொண்டிருக்க வேண்டும்?
‘அதை மறந்துவிடு!’
என நான் சொல்கிறேன்.
30 பனியால் என்னைக் கழுவினாலும்,
சவுக்காரத்தினால் (சோப்பினால்) என் கைகளைச் சுத்தம் செய்தாலும்,
31 தேவன் என்னைச் சேற்றுக் குழியில் தள்ளுவார்.
அப்போது என் உடைகளும் என்னை வெறுக்கும்.
32 தேவன் கூறும் குற்றங்களுக்கு பதில் கூற என்னைப் போன்று மனிதன் அல்ல,
நியாய சபையில் நாங்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாது.
33 இரு பக்கங்களிலும் நியாயம் கேட்க ஒருவர் இருந்தால், நல்லதென நான் விரும்புகிறேன்.
எங்களை நியாயமாக (தக்க முறையில்) நியாயந்தீர்க்க வல்லவர் ஒருவர் இருக்கமாட்டாரா என நான் விரும்புகிறேன்.
34 தேவனுடைய தண்டிக்கும் கோலை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடுபவர் ஒருவர் இருக்கமாட்டாரா என விரும்புகிறேன்.
அப்போது அவருடைய பயமுறுத்துதல்கள் என்னை அச்சுறுத்தாது.
35 அப்போது தேவனைப்பற்றிப் பயப்படாமல், நான் சொல்ல விரும்புவனவற்றைக் கூற முடியும்.
ஆனால் இப்போது நான் அவ்வாறு செய்ய முடியாது” என்றான்.
10 “நான் என் சொந்த வாழ்க்கையை வெறுக்கிறேன்.
எனவே நான் தாராளமாக முறையிடுவேன்.
என் ஆத்துமா கசந்துபோயிற்று, எனவே நான் இப்போது பேசுவேன்.
2 நான் தேவனிடம், ‘என்னைக் குற்றம்சாட்டாதேயும்!
நான் செய்தவற்றை எனக்குக் கூறும், எனக்கெதிராக உமது காரியம் என்ன?’ என்பேன்.
3 ‘தேவனே, என்னைத் துன்புறுத்துவது உமக்கு மகிழ்ச்சித் தருகிறதா?
நீர் உண்டாக்கினதைக் குறித்து நீர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது தீயோர் செய்த திட்டங்களில் நீர் மகிழ்ச்சிக்கொள்கிறீரா?
4 தேவனே, உமக்கு மனிதரின் கண்கள் உண்டா?
மனிதர் காண்பதுபோல் நீர் காரியங்களைப் பார்க்கிறீரா?
5 எங்களைப்போல உமது வாழ்க்கையும் குறுகியதா?
மனிதனின் வாழ்க்கையைப் போல் உமது வாழ்க்கையும் குறுகியதா? இல்லை!
எனவே அது எப்படிப்பட்டது என்பதை எவ்வாறு அறிவீர்?
6 எனது தவறுகளைப் பார்க்கிறீர்,
என் பாவங்களைத் தேடுகிறீர்.
7 நான் களங்கமற்றவன் என்பதை நீர் அறிந்திருந்தும்
உமது ஆற்றலிலிருந்து தப்பித்துக்கொள்ள வழியில்லை!
8 தேவனே, உமது கைகள் என்னை உண்டாக்கி, என் உடலுக்கு வடிவளித்தன.
இப்போது அவை என்னை மூடிக்கொண்டு அழிக்கின்றன.
9 தேவனே, என்னைக் களிமண்ணைப் போல உருவாக்கினீர் என நினைத்துப்பாரும்
என்னை மீண்டும் களிமண்ணாக மாற்றுவீரா?
10 என்னைப் பாலைப்போன்று வெளியே ஊற்றினீர்.
தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பவனைப் போன்று என்னைக் கடைந்து உருமாற்றினீர்.
11 எலும்புகளாலும் தசைகளாலும் எனக்கு உருவளித்தீர்.
பின்னர் தோலாலும் தசையாலும் உடுத்தினீர்.
12 எனக்கு உயிரளித்தீர், என்னிடம் இரக்கமாயிருந்தீர்.
நீர் என்னை பராமரித்தீர், என் ஆவியைப் பாதுகாத்தீர்.
13 ஆனால் நீர் இதை உமது இருதயத்தில் மறைத்த வைத்திருக்கிறீர்.
நீர் இரகசியமாக உமது இருதயத்தில் திட்டமிட்டது இது என்பதை நான் அறிவேன்.
14 நான் பாவம் செய்தால், நீர் அதைக் கவனித்துக் கொண்டிருந்தீர்,
எனவே நீர் என் தவறுகளுக்கு என்னைத் தண்டிக்க முடியும்.
15 நான் பாவம் செய்யும்போது குற்றவாளியாகிறேன், அது எனக்குத் தீமையானது.
ஆனால் நான் களங்கமற்றவனாயிருக்கும் போதும், என் தலையை உயர்த்திப்பார்க்க முடியவில்லை!
நான் வெட்கப்பட்டு அவமானமடைந்திருக்கிறேன்.
16 எனக்கு வெற்றி கிடைத்து நான் பெருமைப்பட்டால்,
ஒருவன் சிங்கத்தை வேட்டையாடுவதைப் போல என்னை வேட்டையாடுகிறீர்.
எனக்கெதிராக உமது ஆற்றலை மீண்டும் காட்டுகிறீர்.
17 நான் தவறு செய்தேன் என்று நிறுவ உமக்கு எப்போதும் யாரேனும் கிடைப்பர்.
பல வழிகளில் உமது கோபத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவீர்.
அவை எனக்கெதிராக ஒன்றன்பின் ஒன்றாக படைகளை அனுப்புவது போன்றிருக்கும்.
18 எனவே, தேவனே, ஏன் என்னைப் பிறக்க அனுமதித்தீர்?
யாரேனும் என்னைக் காணும் முன்பே நான் மரித்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
19 நான் ஒருபோதும் வாழ்ந்திருக்க வேண்டாமென விரும்புகிறேன்.
தாயின் கருவிலிருந்து நேரே கல்லறைக்கு என்னைச் சுமந்துப் போயிருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
20 என் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது.
எனவே என்னைத் தனித்து விடுங்கள்!
21 யாரும் திரும்பிவராத, இரளும் மரணமுமுள்ள இடத்திற்கு நான் போகும் முன்பு,
மிஞ்சியுள்ள சில காலத்தை நான் சந்தோஷமாய் அனுபவிக்க அனுமதியுங்கள்.
22 யாரும் பார்க்கமுடியாத, இருளும் நிழல்களும் குழப்பமும் நிரம்பிய இடத்திற்கு நான் போகும் முன்பு,
மிஞ்சியுள்ள சிலகாலத்தை நான் மகிழ்ந்திருக்க அனுமதியுங்கள்.
அங்கு ஒளியும் கூட இருளாகும்’” என்றான்.
2008 by World Bible Translation Center