Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எஸ்தர் 6-10

மொர்தெகாய் கௌரவிக்கப்படுகிறான்

அதே இரவில், அரசனால் தூங்க முடியவில்லை. எனவே, அவன் ஒரு வேலைக்காரனிடம் வரலாற்று புத்தகத்தைக் கொண்டுவந்து வாசிக்கும்படி கட்டளையிட்டான். ( அரசர்களது வரலாற்று புத்தகத்தில் அரசர்களின் ஆட்சியில் நடைபெற்றவற்றின் பட்டியல் இருந்தது.) வேலைக்காரன் அரசனிடம் அதை வாசித்தான். அவன் அரசன் அகாஸ்வேருவை கொல்வதற்கான தீய திட்டத்தையும் வாசித்தான். அது மொர்தெகாய் கண்டுபிடித்த பிக்தானா மற்றும் தேரேசின் திட்டமாகும். அந்த இரண்டு பேரும் அரசனது வாசல் கதவை காக்கிற அதிகாரிகள். அவர்கள் அரசனைக் கொல்லவேண்டும் எனத் திட்டம் போட்டனர். ஆனால் மொர்தெகாய் அத்திட்டத்தைப்பற்றி அறிந்து அதனை யாரோ ஒருவரிடம் சொன்னான்.

அதற்கு அரசன், “என்ன சிறப்பும், பெருமையும் இதற்காக மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது?” என்ற கேட்டான்.

வேலைக்காரர்கள் அரசனிடம், “மொர்தெகாய்க்கு எதுவும் செய்யப்படவில்லை” என்றனர்.

அப்போது, அரசனது அரண்மனையில் வெளிப் பகுதியில் ஆமான் நுழைந்தான் அவன் தான் கட்டிய தூக்கு மரத்தில் மொர்தெகாய்யைத் தூக்கில் போடுவதற்காக அரசனைக் கேட்க வந்தான். அவன் முற்றத்தில் வரும்போது அரசன், “இப்போது முற்றத்தில் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டான். அரசனது வேலைக்காரர்கள் “முற்றத்தில் ஆமான் நின்றுக்கொண்டிருக்கிறார்” என்றார்கள்.

எனவே அரசன், “அவனை அழைத்து வாருங்கள்” என்றான்.

ஆமான் உள்ளே வந்தபோது, அரசன் அவனிடம், “ஆமான், அரசன் பெருமைப்படுத்த விரும்புகிற ஒருவனுக்கு என்ன செய்யலாம்?” என்று கேள்விக் கேட்டான்.

ஆமான் தனக்குள் இப்படியாக நினைத்துக் கொண்டான், “என்னைவிட அதிகமாக பெருமைப்படுத்தும்படி அரசன் விரும்புகிறவன் யாராக இருக்க முடியும்? அரசன் என்னை பெருமைப் படுத்துவதைப் பற்றியே என்று உறுதியாக நினைத்தான்.”

ஆகையால், ஆமான் அரசனுக்கு, “அரசன் பெருமைப்படுத்தவேண்டும் என விரும்புகிறவனுக்கு இதனைச் செய்யும். அரசன் அணிகிற உயர்ந்த ஆடையைக் கொண்டுவாருங்கள். அரசன் ஏறிச் செல்கிற குதிரையையும் கொண்டு வாருங்கள். அவர் தலையில் வைக்கிற அரசமுடியையும் கொண்டு வாருங்கள். பிறகு அந்த ஆடையையும், குதிரையையும் அரசனது முக்கியமான தலைவனின் கையில் கொடுக்கப்படவேண்டும். அரசன் பெருமைப்படுத்த விரும்புகிற மனிதனை அலங்கரித்து குதிரையின் மேலேற்றி நகர வீதியில் உலா வரும்படி விடவேண்டும். அரசனின் முக்கிய தலைவன் அந்த மனிதனை குதிரை மீது நகர வீதியில் அழைத்து வரும்போது, ‘இதுபோலவே அரசன் பெருமைப்படுத்த விரும்புகிறவன் நடத்தப்படவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்’” என்ற பதில் சொன்னான்.

10 அரசன் ஆமானிடம், “வேகமாகப் போ” என கட்டளையிட்டு, “ஆடையையும், குதிரையையும் கொண்டுவா. இதனை நீ சொன்னபடி யூதனான மொர்தெகாய்க்குச் செய். மொர்தெகாய் அரசனது வாசலருகில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிறான். நீ சொன்னபடி எல்லாவற்றையும் செய்” என்றான்.

11 எனவே ஆமான் ஆடையையும், குதிரையையும் எடுத்தான். ஆடையை மொர்தெகாய்க்கு அணிவித்தான். பிறகு அவனை குதிரையில் உட்கார வைத்து நகர வீதிகளில் உலாகொண்டுபோனான். ஆமான் மொர்தெகாய் பற்றி, “இதுபோல் தான் அரசன் பெருமைப்படுத்த விரும்புகிற மனிதன் நடத்தப்பட வேண்டும்” என்று அறிவித்தான்.

12 பிறகு மொர்தெகாய் அரசனது வாசலுக்குத் திரும்பிப்போனான். ஆனால் ஆமான் வீட்டிற்கு விரைவாகப் போனான். அவன் தன் தலையை மூடிக்கொண்டான். ஏனென்றால், அவன் சஞ்சலமும் அவமானமும் அடைந்தான். 13 பிறகு ஆமான் தன் மனைவி சிரேஷையிடமும் நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு ஏற்பட்டதையெல்லாம் சொன்னான். ஆமானின் மனைவியும், ஆட்களும் அவனுக்கு ஆலோசனைச் சொன்னார்கள். அவர்கள், “மொர்தெகாய் யூதனாக இருப்பின் நீ வெல்ல முடியாது. நீ ஏற்கெனவே வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டாய். உறுதியாக நீ அழிக்கப்படுவாய்” என்றனர்.

14 இவ்வாறு அவர்கள் ஆமானுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அரசனின் பிரதானிகள் ஆமானின் வீட்டிற்கு வந்தார்கள். எஸ்தர் ஏற்பாடு செய்த விருந்துக்கு வரும்படி ஆமானை அவர்கள் விரைவுபடுத்தினார்கள்.

ஆமான் தூக்கிலிடப்படுகிறான்

எனவே அரசனும், ஆமானும் அரசி எஸ்தரோடு விருந்து உண்ணச் சென்றனர். பிறகு இரண்டாம் நாள் விருந்தில் அவர்கள் திராட்சைரசம் குடிக்கும்போது, அரசன் மீண்டும் அரசியிடம் கேள்வி கேட்டான். அவன், “எஸ்தர் அரசியே, நீ என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாய்? எதை வேண்டுமானாலும் கேள். அது உனக்குக் கொடுக்கப்படும். உன்னுடைய விருப்பம் என்ன? எனது நாட்டில் பாதி வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.

பிறகு, எஸ்தர் அரசி, “அரசே, நீர் என்னை விரும்பினால், இது உமக்கு விருப்பமானால் என்னை வாழவிடுங்கள். எனது ஜனங்களையும் வாழவிடுங்கள் என்று கேட்கிறேன். அதுதான் உம்மிடம் வேண்டுகிறேன். ஏனென்றால், நானும் எனது ஜனங்களும் அழியவும், கொல்லப்படவும் விற்கப்பட்டோம். அடிமைகளாக விற்கப்பட்டால் கூட நான் மௌனமாக இருப்பேன். ஏனென்றால் அது அரசனைத் துன்புறத்துகிற ஒரு பிரச்சினையாக இருக்கமுடியாது” என்றாள்.

பிறகு அரசன் அகாஸ்வேரு எஸ்தர் அரசியிடம், “இதனை உனக்குச் செய்தவன் யார்? உனது ஜனங்களுக்கு இத்தகைய கொடுமையைச் செய்ய துணிந்த மனிதன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.

எஸ்தர், “எங்களுக்கு எதிரானவன் எங்கள் பகைவன் இந்த கெட்ட ஆமான்தான்” என்றாள்.

பிறகு, அரசன் மற்றும் அரசி முன்னால் ஆமான் திகில் அடைந்தான். அரசன் மிகவும் கோபம் அடைந்தான். அவன் எழுந்து திராட்சைரசம் விருந்தைவிட்டு, தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் ஆமான் உள்ளே இருந்து எஸ்தர் அரசியிடம் தன் உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சினான். அவன் தன் உயிருக்காக மன்றாடினான். ஏனென்றால், அவனைக் கொல்லுமாறு ஏற்கெனவே அரசன் முடிவுச் செய்துவிட்டதை அவன் அறிந்தான். அரசன் தோட்டத்திலிருந்து திரும்பி விருந்து அறைக்குள்ளே நுழையும்போது, அரசி எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையில் ஆமான் விழுந்து கிடந்தான். அரசன் மிகவும் கோபமான குரலில், “நான் இந்த வீட்டில் இருக்கும்போதே நீ அரசியைத் தாக்குகிறாயோ?” எனக் கேட்டான்.

அரசன் இவ்வாறு சொன்ன உடனேயே வேலைக்காரர்கள் வந்து ஆமானின் முகத்தை மூடினார்கள். பிரதானிகளில் ஒருவனான அரசனுக்கு சேவைச் செய்பவனின் பெயர் அற்போனா. அவன் அரசனிடம், “ஆமானின் வீட்டின் அருகில் 75 அடி உயரத்தில் ஒரு தூக்குமரம் கட்டப்பட்டுள்ளது. அதில் மொர்தெகாயைத் தூக்கிலிடவேண்டும் என்றே ஆமான் அதைக் கட்டினான். மொர்தெகாய் உமக்கு உதவிச் செய்த ஆள், உம்மை கொல்லத் திட்டமிட்டத் தீயர்வர்களைப்பற்றி உமக்குச் சொன்னவன்” என்றான்.

அரசன், “ஆமானை அதே மரத்தில் தூக்கில் போடுங்கள்” என்றான்.

10 எனவே, அவர்கள் ஆமானை அவன் மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் போட்டனர். பிறகு அரசன் தன் கோபத்தை நிறுத்தினான்.

யூதர்களுக்கு உதவும்படியான அரசக் கட்டளை

அதே நாளில், அகாஸ்வேரு அரசன், எஸ்தர் அரசியிடம் யூதரின் எதிரியாக இருந்த ஆமானின் அத்தனை உடமைகளையும் கொடுத்தான். எஸ்தர், அரசனிடம் மொர்தெகாய் தனது உறவினன் என்று சொன்னாள். பிறகு மொர்தெகாய் அரசனைப் பார்க்க வந்தான். அரசன் ஆமானிடமிருந்து தனது மோதிரத்தை வாங்கி வைத்திருந்தான். அவன் தன் விரலிலிருந்து மோதிரத்தை எடுத்து மொர்தெகாயிடம் கொடுத்தான். பிறகு எஸ்தர், ஆமானுக்குச் சொந்தமான அனைத்துக்கும் மொர்தெகாயைப் பொறுப்பாளியாக நியமித்தாள்.

பிறகு எஸ்தர் மீண்டும் அரசனிடம் பேசினாள். அவள் அரசனின் காலில் விழுந்து, அழத்தொடங்கினாள். ஆகாகியான ஆமானின் தீயத்திட்டத்தை நீக்கும்படி அவள் மன்றாடினாள். ஆமான் யூதர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தான்.

பிறகு அரசன் தனது பொற்செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான். எஸ்தர் எழுந்து அரசன் முன்னாள் நின்றாள். பிறகு எஸ்தர், “அரசே, நீர் என்னை விரும்புவதானால், உமக்கும் மகிழ்ச்சியானால் எனக்காக இதனைச் செய்யும். இது நல்ல யோசனை என்று நீர் நினைத்தால் இதனைச் செய்யும். அரசன் என்னோடு சந்தோஷமாக இருக்கிறதானால், ஆமான் அனுப்பிய கட்டளையை விலக்கும்படி ஒரு கட்டளை எழுதி அனுப்பும். அரசனின் அனைத்து நாடுகளிலும் உள்ள யூதர்களை அழித்துவிட வேண்டுமென்று ஆகாகியானான ஆமான் ஒரு திட்டம் வைத்து அதை நடத்திட கட்டளை அனுப்பினான். நான் அரசரை மன்றாடிக் கேட்கிறேன். ஏனெனில் என் ஜனங்களுக்கு இத்தகைய பயங்கரம் ஏற்படுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. எனது குடும்பம் கொல்லப்படுவதை என்னால் பார்க்க முடியாது” என்றாள்.

அகாஸ்வேரு அரசன் எஸ்தர் அரசிக்கும், யூதனான மொர்தெகாய்க்கும் பதில் சொன்னான். அரசன், “ஆமான் யூதர்களுக்கு எதிரியாக இருந்ததால், நான் அவனது சொத்துக்களை எஸ்தருக்கு கொடுத்திருக்கிறேன். என் வீரர்கள் ஆமானைத் தூக்கு மரத்தில் தொங்கப்போட்டனர். இப்பொழுது அரசனது அதிகாரப்படி இன்னொரு கட்டளையை எழுதுங்கள். யூதர்களுக்கு உதவ எது சிறப்பான வழியாகத் தோன்றுகிறதோ அப்படி எழுதி, அந்த கட்டளையை அரசனது சிறப்பு மோதிரத்தில் முத்திரையிடு. அரசனது அதிகாரத்துடன் எழுதப்பட்டு அவனது சிறப்பு மோதிரம் முத்திரை பொறிக்கப்பட்ட எந்தக் கடிதமும் ரத்து செய்யப்படக் கூடாது” என்றான்.

மிக விரைவாக அரசனின் செயலாளர்கள் அழைக்கப்பட்டனர். இது சீவான் என்னும் மூன்றாவது மாதத்தின் 23வது நாளில் நடந்தது அச்செயலாளர்கள் மொர்தெகாயின் அனைத்து கட்டளைகளையும் யூதர்கள், தலைவர்கள், ஆளுநர்கள், 127 மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் என அனைவருக்கும் எழுதினார்கள். அம்மாகாணங்கள் இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்தது. இந்த கட்டளை ஒவ்வொரு மாகாணத்தின் மொழியிலும் எழுதப்பட்டது. ஒவ்வொரு குழு ஜனங்களின் மொழியிலும் இந்த கட்டளை மொழி பெயர்க்கப்பட்டது. இந்த கட்டளை யூதர்களின் சொந்த மொழியிலும் சொந்த எழுத்திலும் எழுதப்பட்டது. 10 மொர்தெகாய் அரசன் அகாஸ்வேருவின் அதிகாரத்தால் கட்டளைகளை எழுதினான். பிறகு அவன் அரசனது முத்திரை மோதிரத்தால் கடிதங்களை முத்திரையிட்டான். பிறகு தூதர்களை குதிரைகளின் மேல் அனுப்பினான். அவர்கள் அரசனுக்காக வளர்க்கப்பட்ட குதிரைகளில் வேகமாக போனார்கள்.

11 அரசனது கட்டளைகளாகக் கடிதங்களில் சொல்லப்பட்டவை இதுதான்: ஒவ்வொரு நகரங்களிலும் உள்ள யூதர்கள் அனைவரும் கூடி சேர்ந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்ற உரிமையுடையவர்கள். அவர்களுக்கு தங்களையோ, தங்கள் பெண்களையோ, பிள்ளைகளையோ தாக்கும் எதிரிகளைத் தாக்கவோ, கொல்லவோ, அழிக்கவோ உரிமை உண்டு. யூதர்களுக்கு தங்கள் பகைவர்களின் சொத்தை அபகரிக்கவோ, அழிக்கவோ உரிமை உண்டு.

12 இதைச் செய்வதற்காக யூதர்களுக்கு பன்னிரண்டாவது மாதமான ஆதார் மாதத்தின் 13வது நாள் நியமிக்கப்பட்டிருந்தது. யூதர்கள் இதனை அகாஸ்வேரு அரசனின் இராஜ்யத்தின் எல்லாப் பகுதிகளிலும் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 13 அரசனின் கட்டளைப் பிரதி ஒன்று அனுப்பப்பட்டு அது சட்டமாயிற்று. எல்லா மாகாணங்களிலும் அது சட்டமானது. இராஜ்யத்திலுள்ள எல்லா நாடுகளின் ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. இது அறிவிக்கப்பட்டதால் யூதர்கள் அந்த சிறப்பு நாளுக்காகத் தயாராக இருந்தனர். யூதர்கள் தம் எதிரிகளுக்குத் திருப்பிக் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். 14 தூதுவர்கள் அரசனது குதிரையில் மிக வேகமாகச் சென்றனர். அரசன் அவர்களிடம் வேகமாகச் செல்லும்படி கட்டளையிட்டான். இந்த கட்டளை, தலைநகரமான சூசானிலும் அறிவிக்கப்பட்டது.

15 மொர்தெகாய் அரசனைவிட்டு போனான். அவன் அரசனிடமிருந்து பெற்ற சிறப்பான ஆடையை அணிந்திருந்தான். அவனது ஆடை வெண்மையும், நீலமுமாய் இருந்தது. பெரிய பொற் கிரீடமும், சிறந்த பட்டும், இரத்தாம்பரமும் அணிந்திருந்தான். சூசானின் சிறப்பு விழா நடைபெற்றது. ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். 16 யூதர்களுக்குத் தனி மகிழ்ச்சியுடைய நாளாக இருந்தது. இது மிகுந்த மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும் உரியநாளாக இருந்தது.

17 அரசனது கட்டளை எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் சென்றனவோ, அங்கெல்லாம் மகிழ்ச்சியும், உற்சாகமும் யூதர்களிடையே ஏற்பட்டன. யூதர் விருந்துடன் அதனைக் கொண்டாடினர். யூதர்களுக்குப் பயந்ததினால் மற்ற குழுவிலுள்ள ஜனங்களும் யூதர்களாகினர்.

யூதர்களுக்கு வெற்றி

ஆதார் என்னும் 12ஆம் மாதத்தின் 13வது நாள், ஜனங்கள் அரசனது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும். அன்றுதான் யூதர்களின் பகைவர்கள் அவர்களைத் தோற்கடிக்க நம்பியிருந்த நாள். இப்பொழுது அந்த நிலைமாறி யூதர்கள் தம்மை வெறுத்த பகைவர்களைவிட பலமுள்ளவர்களானார்கள். யூதர்கள் அகாஸ்வேரு அரசனின் நாடுகளில் எல்லாம் ஒன்று கூடினர். நம்மை அழிக்க நினைத்தவர்களைத் தாக்க போதுமான பலமுடையவர்களாயினர். எனவே, அவர்களுக்கு எதிராக நிற்க எவருக்கும் பலமில்லை. அந்த ஜனங்கள் யூதர்களுக்குப் பயந்தனர். எல்லா மாகாணங்களின் அதிகாரிகளும், தலைவர்களும், ஆளுநர்களும், யூதர்களுக்கு உதவினார்கள். ஏனென்றால் அவர்கள் மொர்தெகாய்க்கும் பயந்தனர். அரசனது அரண்மனையில் மொர்தெகாய் மிக முக்கியமான நபராகிவிட்டான். அரசனது மாகாணங்களிலுள்ள அனைவரும் அவனது பெயரையும், அவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதையும் அறிந்திருந்தனர். மொர்தெகாய் மேலும் மேலும் அதிகாரம் உள்ளவன் ஆனான்.

யூதர்கள் தம் பகைவர்கள் அனைவரையும் தோற்கடித்தனர். அவர்கள் தம் பகைவரைக் கொன்று அழிக்க வாளைப் பயன்படுத்தினார்கள். தம்மை வெறுத்த ஜனங்களைத் தம் விருப்பம்போல் யூதர்கள் செய்தார்கள். யூதர்கள் சூசான் தலைநகரில் 500 பேரை கொன்றழித்தார்கள். யூதர்கள் கீழ்க்கண்டவர்களைக் கொன்றனர்: பர்சர்ன்தாத்தா, தல்போன், அஸ்பாதா, பொராதா, அதலியா, அரிதாத்தா, பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா, 10 இவர்கள் ஆமானின் 10 மகன்கள். அம்மெதாத்தாவின் மகனான ஆமான் யூதர்களின் பகைவன். யூதர்கள் இவர்கள் அனைவரையும் கொன்றனர். ஆனால் அவர்களது பொருட்கள் எதையும் கொள்ளையடிக்கவில்லை.

11 தலைநகரமான சூசானில் எத்தனை பேர் கொன்று அழிக்கப்பட்டனர் என்று அரசன் கேள்விப்பட்டான். 12 எனவே, அரசன் எஸ்தர் அரசியிடம், “யூதர்கள் சூசானில் ஆமானின் 10 மகன்களையும் சேர்த்து 500 பேரை கொன்றுள்ளனர். இப்பொழுது வேறு மாகாணங்களில் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்? எனக்குச் சொல், நான் அதனை நடத்துவேன். சொல் நான் அதனைச் செய்வேன்” என்றான்.

13 எஸ்தர், “அரசருக்கு விருப்பமானால், சூசானில் யூதர்கள் இதைப்போன்றே நாளையும் செய்ய அனுமதி கொடுக்கவேண்டும். ஆமானின் 10 மகன்களின் உடலையும் தூக்கில் தொங்கவிட அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டாள்.

14 எனவே, அரசன் அந்த கட்டளையைக் கொடுத்தான். அந்தச் சட்டம் அடுத்த நாளும் இருந்தது. அவர்கள் ஆமானின் 10 மகன்களின் உடல்களை தொங்கவிட்டனர். 15 சூசானிலுள்ள யூதர்கள் ஆதார் மாதத்தின் 14வது நாளில் ஒன்று கூடினார்கள். அவர்கள் சூசானில் 300 பேரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை.

16 அதே நேரத்தில் வேறு நாடுகளில் வாழ்ந்த யூதர்களும் ஒன்று கூடினார்கள். அதனால் தம்மைக் காத்துக்கொள்ளும் அளவு பலமுள்ளவர்களாக இருந்தனர். எனவே, அவர்கள் பகைவர்களைத் தாக்கமுடிந்தது. யூதர்கள் தம் பகைவரான 75,000 பேரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை. 17 இது ஆதார் மாதத்தின் 13வது நாளில் நடைபெற்றது, 14வது நாள் அவர்கள் ஓய்வு எடுத்தனர். யூதர்கள் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறை நாளாக ஆக்கினார்கள்.

பூரீம் விழா

18 சூசானிலுள்ள யூதர்கள் ஆதார் மாதத்தின் 13 மற்றும் 14ஆம் நாட்களில் ஒன்று கூடினார்கள். 15வது நாள் அவர்கள் ஓய்வெடுத்தனர். அவர்கள் 15வது நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினர். 19 எனவே, நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்ந்த யூதர்கள் 14வது நாளை பூரீம் விழாவாகக் கொண்டாடினார்கள். அதனை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினார்கள். அன்று விருந்தும் ஒருவர்கொருவர் அன்பளிப்பும் கொடுத்து மகிழ்ந்தனர்.

20 மொர்தெகாய் நிகழ்ந்த எல்லாவற்றையும் எழுதினான். பிறகு அவன் அகாஸ்வேரு அரசனின் மாகாணங்களில் உள்ள அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அருகிலும் தொலைவிலும் உள்ள அனைவருக்கும் கடிதம் அனுப்பினான். 21 மொர்தெகாய் அதில் யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆதார் மாதத்தின் 14 மற்றும் 15ஆம் நாட்களில் பூரீம் விழாவை கொண்டாடும்படி எழுதினான். 22 யூதர்கள் அந்நாட்களைக் கொண்டாடினார்கள். ஏனென்றால், அந்நாட்களில் அவர்கள் தம் பகைவர்களை அழித்தனர். அம்மாதத்தில் அவர்களின் துயரமெல்லாம் மகிழ்ச்சியாக மாறியதால் அம்மாதத்தைக் கொண்டாடினார்கள். இம்மாதத்தில் அவர்களது அழுகை மாறி குதூகலமாய் கொண்டாடும் மாதமாக மாறிற்று. மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அவர்களிடம் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாளாக கொண்டாடச் சொன்னான். அவர்கள் ஒருவருக்கொருவர் விருந்தும் அன்பளிப்பும் கொடுத்து, ஏழைகளுக்குப் பரிசு கொடுத்து அந்த நாளை கொண்டாடச் சொன்னான்.

23 எனவே யூதர்கள் மொர்தெகாய் எழுதியவற்றை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தொடங்கிய விழாவை தொடர ஒப்புக்கொண்டனர்.

24 அம்மெதாத்தாவின் மகனான ஆமான் என்னும் ஆகாகியன் யூதர்களின் பகைவன். யூதர்களை அழிக்க அவன் ஒரு தீய திட்டத்தை வைத்திருந்தான். அவன் யூதர்களை அழிக்கும் நாளை குலுக்கல் சீட்டு போட்டு தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அக்காலத்தில் குலுக்கல் சீட்டானது “பூர்” என்று அழைக்கப்பட்டது. எனவே, விடுமுறைநாளும் “பூரீம்” என அழைக்கப்பட்டது. 25 ஆமான் அவற்றைச் செய்தான். ஆனால் எஸ்தர் அரசனிடம் பேசச் சென்றாள். எனவே, அவன் புதிய கட்டளைகளை அனுப்பினான். அந்த கட்டளைகள் ஆமானின் திட்டத்தை அழித்ததோடு, ஆமானுக்கும் அவனது குடும்பத்திற்கும், அதே தீமை ஏற்படும்படியும் ஆயிற்று. எனவே, ஆமானும் அவனது மகன்களும் தூக்கு மரத்தில் தொங்கினார்கள்.

26-27 இப்போது, குலுக்கல் சீட்டு “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. எனவே, இந்த விடுமுறை நாளும் “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. மொர்தெகாய் யூதர்களுக்கு கடிதம் எழுதி இந்நாளைக் கொண்டாடச் சொன்னான். எனவே, யூதர்கள் ஆண்டில் இரண்டு நாளைக் கொண்டாடும் வழக்கத்தைக்கொண்டனர். 28 இது அவர்கள் தங்களுக்கு நேர்ந்ததை நினைவுப்படுத்துவதாக இருந்தது. யூதர்களும் மற்ற ஜனங்களும் சேர்ந்து சரியான காலத்தில் சரியான முறையில் ஒவ்வொரு ஆண்டும் இரு நாட்கள் கொண்டாடினார்கள். ஒவ்வொரு தலைமுறையில் ஒவ்வொரு குடும்பமும் இந்த இரண்டு நாட்களையும் நினைவுபடுத்தினர். அவர்கள் இந்த விடுமுறையை ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு நகரிலும் கொண்டாடினார்கள் யூதர்கள் என்றென்றும் பூரீம் விழாவைக் கொண்டாடுவதை நிறுத்தக் கூடாது. யூதர்களின் சந்ததிகளும் எப்பொழுதும் இவ்விடுமுறையை நினைத்துக்கொள்ள வேண்டும்.

29 எனவே அபியாயேலின் மகளான எஸ்தர் அரசியும், யூதனான மொர்தெகாயும் பூரீம் பற்றிய ஒரு அதிகாரப் பூர்வமான கடிதத்தை எழுதினார்கள். இரண்டாவது கடிதம் உண்மையானது என்பதை நிரூபிக்க அரசனின் முழு அதிகாரத்ததோடு கடிதம் எழுதினார்கள். 30 எனவே, மொர்தெகாய் அகாஸ்வேரு அரசனின் 127 மாகாணங்களுக்கும் கடிதம் அனுப்பினான். அந்த விழா யூதர்களிடம் சமாதானத்தையும், ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையையும் உருவாக்கும் என்று மொர்தெகாய் எழுதினான். 31 மொர்தெகாய் யூதர்களுக்குப் பூரீம் விழாவை கொண்டாட ஆரம்பிக்கும்படி எழுதினான். எப்பொழுது இப்புதிய விடுமுறை நாளை கொண்டாட வேண்டும் என்றும் எழுதினான். யூதனான மொர்தெகாயும் அரசியான எஸ்தரும் யூதர்களுக்கு இக்கட்டளையை இட்டனர். அவர்கள் இவ்விரு நாட்களையும் விடுமுறை கொண்டாட்டமாக தங்களுக்கும், தங்கள் சந்ததிகளுக்கும் எற்படுத்தவேண்டும். அவர்கள் மற்ற விடுமுறை நாட்களில் உபவாசம் இருந்து, அழுது, நடந்த தீமைகளுக்கு இரங்கி நினைப்பதுபோன்று இந்த இரு நாட்களையும் கொண்டாடுவார்கள். 32 எஸ்தரின் கடிதம் பூரீம் விழாவின் விதிகளை அதிகாரப் பூர்வமானதாக ஆக்கிற்று. இவை ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டன.

மொர்தெகாய் கௌரவிக்கப்படுகிறான்

10 அகாஸ்வேரு அரசன் ஜனங்களை வரி செலுத்தும்படி செய்தான். அவனது இராஜ்யத்திலுள்ள அனைத்து ஜனங்களும் தொலை தூரத்தில் கடல் கடந்து வாழும் ஜனங்களும், வரிசெலுத்தி வந்தனர். அரசன் அகாஸ்வேரு செய்த அரும்பெரும் செயல்கள் மேதியா மற்றும் பெரிசியா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டன. அந்த வரலாற்றுப் புத்தகங்களில் மொர்தெகாய் செய்தவையும் எழுதப்பட்டன. அரசன் மொர்தெகாயைப் பெரிய மனிதனாக்கினான். யூதனான மொர்தெகாய் அரசனுக்கு அடுத்த இரண்டாவது முக்கிய மனிதனானான். யூதர்களில் மொர்தெகாய் மிக முக்கிய மனிதன் ஆனான். அவனை மற்ற யூதர்கள் மிகவும் மதித்தனர். அவர்கள் மொர்தெகாயை மதித்தனர். ஏனென்றால், அவன் தன் ஜனங்களின் நன்மைக்காக கடினமான வேலைகளைச் செய்தான். மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center