Beginning
வஸ்தி ராணி அரசனுக்கு கீழ்ப்படிய மறுக்கிறாள்
1 அகாஸ்வேரு அரசனாக இருந்த காலத்தில் இது நடைபெற்றது. அகாஸ்வேரு இந்தியா முதல் எத்தியோப்பியா வரையுள்ள 127 நாடுகளை ஆண்டான். 2 அரசன் அகாஸ்வேரு சூசான் என்ற தலைநகரில் சிங்காசனத்திலிருந்து அரசாண்டான்.
3 அகாஸ்வேருவின், மூன்றாவது ஆட்சியாண்டில், அவன் தனது அதிகாரிகளுக்கும், பிரபுக்களுக்கும் விருந்து கொடுத்தான். படை அதிகாரிகளும், பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள முக்கிய தலைவர்களும் அங்கே இருந்தனர். 4 விருந்தானது 180 நாட்களுக்குத் தொடர்ந்தன. அந்தக்காலம் முழுவதும் அகாஸ்வேரு அரசன் தனது இராஜ்யத்தின் செல்வச் சிறப்பைக் காட்டிக்கொண்டிருந்தான். அவன் ஒவ்வொருவரிடமும் தன் அரண்மனையின் கம்பீரமான அழகையும், செல்வத்தையும் காட்டிக் கொண்டிருந்தான். 5 அந்த 180 நாட்களும் முடிந்தபோது, அகாஸ்வேரு அரசன் இன்னொரு விருந்தை ஏழு நாட்கள் தொடர்ந்து கொடுத்தான். அந்த விருந்து அரண்மனை தோட்டத்திற்குள்ளே நடைபெற்றது. சூசான் தலைநகரத்தில் உள்ள அனைத்து முக்கியமானவர்களும், முக்கியமற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனார். 6 அந்த உள்தோட்டத்தில் அறையைச் சுற்றி வெள்ளையும், நீலமுமான மெல்லிய திரைகள் தொங்கின. அத்தொங்கல்கள் வெண்கலத் தூண்களிலே, வெள்ளி வளையங்களில், மெல்லிய நூலும், சிவப்பு நூலுமான கயிறுகளால் கட்டப்பட்டிருந்தன. அங்கே பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட இருக்கைகள் இருந்தன. அவை சிவப்பும், நீலமும், வெள்ளையும், கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின் மேல் வைக்கப்பட்டிருந்தன. 7 பொற்கிண்ணங்களில் திராட்சைரசம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கிண்ணமும் வித்தியாசமாக இருந்தது! அங்கே முதல் தரமான திராட்சைரசம் அரசர்களுக்கு ஏற்ற வகையில் தாராளமாகக் கொடுக்கப்பட்டது. 8 அரசன் தனது வேலைக்காரர்களுக்கு ஒரு கட்டளை இட்டிருந்தான். ஒவ்வொரு விருந்தாளியும் அவரது விருப்பம்போல் திராட்சைரசத்தைக் குடிக்கட்டும் என்று சொல்லியிருந்தான். திராட்சைரசம் பரிமாறுபவன் அரசனுக்குக் கீழ்ப்படிந்தான்.
9 அரசனது அரண்மனையில் இராணி வஸ்தியும் பெண்களுக்கு ஒரு விருந்து கொடுத்தாள்.
10-11 விருந்தின் ஏழாவது நாளில், அகாஸ்வேரு அரசன் திராட்சைரசத்தால் உச்சப் போதையில் இருந்தான். அவன் ஏழு பிரதானிகளுக்குக் கட்டளையிட்டான். அந்த பிரதானிகள், மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகியோர். அவன் இந்த ஏழு பேரிடம் இராணி வஸ்தியை இராஜகிரீடம் அணிவித்து அழைத்துவருமாறு கட்டளையிட்டான். அவள் அழகை முக்கியமான ஜனங்களுக்கும், தலைவர்களுக்கும் காட்டவேண்டும் என்று அரசன் விரும்பினான். ஏனென்றால் அவள் மிகவும் அழகாக இருந்தாள்.
12 ஆனால், அந்த வேலைக்காரர்கள் போய் இராணி வஸ்தியிடம் அரசனின் கட்டளையைச் சொன்னதும் அவள் வரமறுத்தாள். அதனால் அரசன் மிகவும் கோபம்கொண்டான். 13-14 சட்டம் மற்றும் தண்டனையைப்பற்றிய ஆலோசனைகளை தேர்ந்தவர்களிடம் கேட்பது ராஜாவின் வழக்கம். எனவே, அரசன் அகாஸ்வேரு சட்டங்களைப் புரிந்துகொண்ட ஞானிகளிடம் பேசினான். அந்த ஞானிகள் அரசனுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோர். இவர்கள் பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள ஏழு முக்கியமான அதிகாரிகள். அவர்களுக்கு அரசனைப் பார்க்கச் சிறப்பு சலுகைகள் உண்டு. அவர்கள் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தனர். 15 அரசன் அவர்களிடம், “இராணி வஸ்தியை என்ன செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது? அரசன் அகாஸ்வேருவின் கட்டளையை பிரதானிகள் கொண்டுபோனபோது அதற்கு அவள் அடிபணியவில்லை” என்று சொன்னான்.
16 பிறகு, மெமுகான் மற்ற அதிகாரிகள் கவனித்துக்கொண்டிருக்கையில், “இராணி வஸ்தி தவறு செய்தாள். அவள் அரசனுக்கு எதிராகவும், எல்லா தலைவர்களுக்கு எதிராகவும், அகாஸ்வேரு அரசனது அரசாட்சியில் உள்ள எல்லா ஜனங்களுக்கு எதிராகவும் தவறு செய்தாள். 17 மற்ற எல்லாப் பெண்களும் இராணி வஸ்தி செய்ததை கேள்விப்படுவார்கள். பிறகு அவர்கள் தம் கணவர்களுக்கு அடிபணிவதை நிறுத்துவார்கள். அவர்கள் தம் கணவர்களிடம், ‘அரசன் அகாஸ்வேரு இராணி வஸ்தியை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். ஆனால் அவள் வர மறுத்துவிட்டாள்’ என்பார்கள்.
18 “இன்றைக்கு பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள தலைவர்களின் மனைவிகளும் இராணி செய்ததைக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அப்பெண்களும் இராணியின் செயலால் தூண்டப்படுவார்கள். அப்பெண்களும் அரசனது முக்கிய தலைவர்களுக்கு அவ்வாறே செய்வார்கள். அதனால் மிகுதியான மதிப்பின்மையும் கோபமும் பிறக்கும்.
19 “எனவே அரசனுக்கு விருப்பமானால், நான் ஒரு கருத்தைக் கூறுகிறேன். அரசன் ஒரு அரச கட்டளையைக் கொடுக்கலாம். அது பெரிசியா மற்றும் மேதியாவிற்குச் சட்டமாக எழுதப்படலாம். பெர்சியா மற்றும் மேதியாவின் சட்டங்கள் மாற்ற முடியாதவை. வஸ்தி மீணடும் அரசன் அகாஸ்வேருவுக்கு முன்னால் வரக்கூடாது என்பதுதான் அரச கட்டளையாக இருக்கவேண்டும். அதோடு அரசன் அவளைவிடச் சிறந்த பெண்ணுக்கு இராணியின் உயர் இடத்தைக் கொடுக்கவேண்டும். 20 பிறகு அரசனது கட்டளை அவனது பெரிய நாடு முழுவதும் அறிவிக்கப்படும்போது, பெரியோர் முதல் சிறியோர் வரையுள்ள எல்லாப் பெண்களும் தம் கணவர்களை மதிப்பார்கள்” என்று பதில் சொன்னான்.
21 அரசனும் அவனுடைய முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனையால் பெரிதும் மகிழ்ந்தனர். எனவே அகாஸ்வேரு அரசன் மெமுகானின் ஆலோசனையின்படிச் செய்தான். 22 அரசன் அகாஸ்வேரு தனது அரசிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் கடிதம் அனுப்பினான். அவன் அக்கடிதங்களை ஒவ்வொரு பகுதிக்கும் அதன் சொந்த மொழியிலேயே எழுதி அனுப்பினான். அவன் அக்கடிதங்களை ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் மொழியிலேயே எழுதி அனுப்பினான். அக்கடிதங்கள் ஒவ்வொரு மனிதனின் மொழியிலும் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தன் குடும்பத்தை ஆள்பவனாக இருக்க வேண்டும்.
எஸ்தர், இராணி ஆகிறாள்
2 அகாஸ்வேரு அரசன் தன்னுடைய கோபம் தணிந்த பிறகு, வஸ்தி செய்திருந்ததை நினைத்துப் பார்த்தான். அவன் அவளைப் பற்றிய கட்டளையை நினைத்துப் பார்த்தான். 2 பிறகு அரசனின் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கு ஒரு கருத்து இருந்தது. அவர்கள், “அரசனுக்கு அழகான இளம் கன்னிகளைத் தேட வேண்டும். 3 அரசன் தனது அரசின் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு தலைவனும், ஒவ்வொரு அழகான இளம் கன்னிப் பெண்ணை சூசான் தலைநகரத்திற்கு அழைத்துக் கொண்டு வரவேண்டும். அப்பெண்கள் அரசனின் பெண்கள் எனும் குழுவிற்குள் சேர்க்கவேண்டும். அவர்கள் யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட வேண்டும். அவன் அரசனின் பிரதானி. அவனே பெண்களுக்கான அதிகாரி. பிறகு அவர்களுக்கு அலங்காரப் பொருட்களைக் கொடுக்கவேண்டும். 4 பிறகு அரசனின் கண்களுக்கு ஏற்றப் பெண் வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும்” என்றார்கள். அரசனும் இந்தக் கருத்தை விரும்பினான். எனவே, அதனை ஒத்துக்கொண்டான்.
5 இப்பொழுது அங்கே மொர்தெகாய் என்னும் பெயருள்ள பென்யமீன் கோத்திரத்திலுள்ள யூதன் ஒருவன் இருந்தான். அவன் யாவீரின் மகன். யாவீர், கீசின் மகன். மொர்தெகாய், தலைநகரான சூசானில் இருந்தான். 6 மொர்தெகாய் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறை பிடிக்கப்பட்டவன். அவன் யூத அரசனான எகொனியாவைச் சிறைபிடித்தபோது அக்குழுவில் இருந்தவன். 7 மொர்தெகாயிடம் அவனது சிறிய தகப்பன் மகளாகிய அத்சாள் இருந்தாள். அவளுக்கு தந்தையோ அல்லது தாயோ இல்லை. எனவே மொர்தெகாய் அவளைக் கவனித்து வந்தான். அவளது தந்தையும், தாயும் மரித்தபோது, அவன் அவளை மகளாகத் தத்தெடுத்தான். அத்சாள், எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். எஸ்தருக்கு அழகான முகமும், பார்ப்பதற்கு ரூபவதியாகவும் இருந்தாள்.
8 அரசனது கட்டளையை கேட்டபோது பல பெண்கள் தலைநகரமான சூசானுக்குக் கொண்டு வரப்பட்டனர். அப்பெண்கள் யேகாயின் பொறுப்பில் விடப்பட்டனர். எஸ்தரும் அவர்களுள் ஒருத்தி. எஸ்தர் அரசனின் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டு யேகாயின் பொறுப்பில் விடப்பட்டாள். யேகா, அரசனது பெண்களின் பொறுப்பை ஏற்றிருந்தான். 9 யேகாவுக்கு எஸ்தரைப் பிடித்தது. அவள் அவனது விருப்பத்திற்குரியவளானாள். எனவே யேகா விரைவாக எஸ்தருக்கு அலங்கார பொருட்களையும், சிறப்பான உணவையும் கொடுத்தான். அரண்மனையிலிருந்து யேகா ஏழு தாதிப் பெண்களைத் தேர்ந்தெடுத்து எஸ்தருக்குக் கொடுத்தான். அரசனது பெண்கள் வாழ்கிற சிறப்பான இடத்திற்கு எஸ்தரையும், அவளது ஏழு தாதிப் பெண்களையும் இருக்கச் செய்தான். 10 எஸ்தர் யாரிடமும் தான் யூதகுலத்தைச் சேர்ந்தவள் என்று சொல்லவில்லை. அவள் யாரிடமும் தனது குடும்பப் பின்னணியை பற்றிச் சொல்லவில்லை. ஏனென்றால், மொர்தெகாய் அவ்வாறு சொல்லக் கூடாது என்று சொல்லியிருந்தான். 11 ஒவ்வொரு நாளும் அரசனது பெண்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் மொர்தெகாய் உலாவி வந்தான். எஸ்தர் எப்படி இருக்கிறாள்? அவளுக்கு என்ன நடக்கிறது? என்பதை அறிந்துக்கொள்ளவே அவன் அவ்வாறு செய்தான்.
12 அரசன் அகாஸ்வேருவின் முன் போவதற்கு முன்னால், ஒரு பெண் செய்யவேண்டியது இதுதான். அவள் பன்னிரண்டு மாதங்கள் அழகு சிகிக்சை செய்யப்பட்டிருக்கவேண்டும். அதாவது, ஆறு மாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தாலும், ஆறு மாதம் சுகந்தவர்க்கங்களினாலும் பலவகை அலங்காரங்களாலும் அழகு செய்யப்பட்டிருக்க வேண்டும். 13 ஒரு பெண் இப்படி அலங்கரிக்கப்பட்டு, அரசனிடம் போவாள். கன்னிமாடத்திலிருந்து தன்னுடன் அரசனின் அரண்மனைக்கு போக தனக்கு வேண்டுமென்று கேட்டவை எல்லாம் கொடுக்கப்படும். 14 மாலையில், அப்பெண் அரசனின் அரண்மனைக்குச் செல்லவேண்டும். காலையில் அவள் இன்னொரு பகுதிக்குத் திரும்பவேண்டும். பிறகு, அவள் சாஸ்காசுடைய பொறுப்பில் வைக்கப்படுவாள். சாஸ்காஸ் அரசனுடைய பிரதானி. அவன் அரசனது ஆசைப் பெண்களின் அதிகாரி. அரசன் விரும்பி அழைத்தால் தவிர எந்த ஒரு பெண்ணும் மீண்டும் அரசனிடம் செல்லக் கூடாது. பிறகு அரசன் அவளது பேரைச் சொல்லி திரும்ப வரும்படி அழைக்கலாம்.
15 எஸ்தருக்கு அரசனிடம் போக வேண்டியமுறை வந்தபோது, அவள் எதையும் கேட்கவில்லை. அவள் யேகா தன்னிடம் எதை எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறினானோ அவற்றை மட்டும் கேட்டாள். அவன் அரசனின் பிரதானி. அரசனது பெண்களின் பொறுப்பான அதிகாரி. (எஸ்தர் மொர்தெகாயின் வளர்ப்பு மகள். அவனது சிறிய தகப்பனான அபியாயேலின் மகள்) எஸ்தரைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவளை விரும்பினார்கள். 16 எனவே, எஸ்தர் அரண்மனைக்கு அரசன் அகாஸ்வேருவிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். இது, அவனது ஏழாம் ஆட்சியாண்டில் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்தில் நிகழ்ந்தது.
17 அரசன், மற்றப் பெண்களை விட எஸ்தரை மிகுதியாக நேசித்தான். அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவன் மற்ற பெண்களைவிட அவளை மிகுதியாக ஏற்றுக்கொண்டான். எனவே, அகாஸ்வேரு அரசன் எஸ்தரின் தலையில் கிரீடத்தை அணிவித்து வஸ்தியின் இடத்தில் அவளைப் புதிய அரசியாகச் செய்தான். 18 அரசன் எஸ்தருக்காக ஒரு பெரிய விருந்தைக் கொடுத்தான். இது அவனது முக்கிய தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்குமாக இருந்தது. எல்லா நாடுகளுக்கும் அவன் அன்று விடுமுறை வழங்கினான். அவன் ஜனங்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தான். ஏனென்றால், அவன் ஒரு தாராளமான குணமுடைய அரசன்.
மொர்தெகாய் ஒரு தீய திட்டத்தைப் பற்றி அறிகிறான்
19 மொர்தெகாய் அரசனது வாசலுக்கு அடுத்து, பெண்கள் இரண்டாவது முறை கூடியபோது உட்கார்ந்திருந்தான். 20 எஸ்தர் தான் யூதகுலத்தை சேர்ந்தவள் என்பதை அதுவரை இரகசியமாக வைத்திருந்தாள். அவள் தனது குடும்பத்தைப் பற்றி யாரிடமும் கூறவில்லை. அவ்வாறு செய்யும்படி மொர்தெகாய் அவளுக்குச் சொல்லியிருந்தான். அவள் மொர்தெகாய்க்குக் கீழ்ப்படிந்தாள்.
21 மொர்தெகாய் அரசனது வாசலை அடுத்து உட்கார்ந்திருந்தபோது, இது நடந்தது. பிக்தான், தேரேசு எனும் இரண்டு அரசனது வாசல் காவல் அதிகாரிகள் அரசன் மீது கோபங்கொண்டனர். அவர்கள் அரசன் அகாஸ்வேருவை கொல்ல சதித் திட்டமிட ஆரம்பித்தனர். 22 ஆனால், மொர்தெகாய் அவர்களது திட்டத்தை அறிந்துக்கொண்டு எஸ்தர் அரசியிடம் கூறினான். பிறகு, அரசி எஸ்தர் அதனை அரசனிடம் கூறினாள். அவள் இத்தீய திட்டத்தை அறிந்து சொன்னவன் மொர்தெகாய் என்றும் கூறினாள். 23 பிறகு இந்த காரியம் சோதிக்கப்பட்டது. மொர்தெகாய் சொன்னது உண்மையென அறியப்பட்டது. அரசனைக் கொல்ல சதித்திட்டமிட்ட இரு காவலர்களும் கம்பத்தில் தூக்கிலிடப்பட்டனர். இவை அனைத்தும் அரசனுக்கு முன்பாக அரசனது வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டது.
யூதர்களை அழிப்பதற்கான ஆமானின் திட்டம்
3 இவை நிகழ்ந்த பிறகு, அகாஸ்வேரு அரசன் ஆமானைக் கௌரவித்தான். ஆமான், அம்மெதாத்தாவின் மகன். இவன் ஆகாகியன். அரசன் ஆமானுக்குப் பதவி உயர்வு கொடுத்து மற்ற அதிகாரிகளைவிட உயர் அதிகாரியாகச் செய்தான். 2 அரசனின் வாசலில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஆமானுக்குப் பணிந்து வணங்கி மரியாதைச் செய்தனர். அவ்வாறுதான் செய்யவேண்டும் என்று அரசன் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். ஆனால் மொர்தெகாய் அவனுக்குப் பணிந்து மரியாதை அளிக்க மறுத்துவிட்டான். 3 பிறகு, அரச வாசலில் உள்ள அரசனின் அதிகாரிகள் அவனிடம், “நீ ஏன் அரச கட்டளைபடி ஆமானுக்குப் பணிந்து கீழ்ப்படிவதில்லை?” என்று கேட்டனர்.
4 நாளுக்கு நாள் அந்த அரச அதிகாரிகள் மொர்தெகாயிடம் பேசினார்கள். ஆனால் மொர்தெகாய் கட்டளையின்படி ஆமானை வணங்க மறுத்துவிட்டான். எனவே, அந்த அதிகாரிகள் இதைப்பற்றி ஆமானிடம் சொன்னார்கள். ஆமான், மொர்தெகாய் விஷயத்தில் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய அவர்கள் விரும்பினார்கள். மொர்தெகாய் அவர்களிடம் நான் ஒரு யூதன் என்று சொல்லியிருந்தான். 5 மொர்தெகாய் தனக்கு பணிந்து வணங்குவதில்லை என்பதையும், மரியாதை கொடுப்பதில்லை என்பதையும், ஆமான் அறிந்தபோது அவன் மிகவும் கோபங்கொண்டான். 6 மொர்தெகாய் ஒரு யூதன் என்பதை ஆமான் அறிந்திருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை மட்டும் கொன்றுவிடுவதில் திருப்தியடையவில்லை. ஆமான், மொர்தெகாயின் ஆட்களையும், அகாஸ்வேருவின் இராஜ்ஜியம் முழுவதுமுள்ள யூதர்களையும் அழிக்க ஒரு வழிவேண்டும் என்று விரும்பினான்.
7 அகாஸ்வேருவின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டின் முதல் மாதமான நிசானில் ஆமான் ஒரு சிறப்பு மாதத்தையும், நாளையும் சீட்டு குலுக்கி எடுத்தான். பன்னிரண்டாவது மாதமான ஆதார் தேர்ந்தெடுக்கப்பட்டது. (அக்காலத்தில் சீட்டுக் குலுக்கல் “பூர்” என்று அழைக்கப்பட்டது). 8 பிறகு, ஆமான் அகாஸ்வேரு அரசனிடம் வந்தான். அவன், “அகாஸ்வேரு அரசே, உமது ஆட்சியிலுள்ள நாடுகளில் எல்லாம் ஒருவித ஜனங்கள் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்கள் மற்ற ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்துள்ளனர். அவர்களது பழக்கவழக்கங்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக உள்ளன. அவர்கள் அரசனது சட்டங்களுக்கு கீழ்ப்படிவதில்லை. அவர்கள் உமது அரசாட்சியில் வாழ அனுமதிப்பது அரசனாகிய உமக்கு நல்லதல்ல.
9 “இது அரசனுக்கு விருப்பமானதாக இருந்தால், நான் ஒரு கருத்து சொல்கிறேன். அந்த ஜனங்களை அழிப்பதற்கு எனக்கு ஒரு கட்டளைகொடும். நான் 10,000 வெள்ளிக் காசுகளை அரசனின் பொக்கிஷதாரரிடம் செலுத்திவிடுகிறேன். அப்பணத்தை இவ்வேலையைச் செய்பவர்களுக்குக் கொடுக்கலாம்” என்றான்.
10 எனவே, அரசன் தனது விரலில் உள்ள முத்திரை மோதிரத்தைக் கழற்றி ஆமானிடம் கொடுத்தான். ஆமான் ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகன். ஆமான் யூதர்களின் எதிரி. 11 பிறகு அரசன் ஆமானிடம், “பணத்தை வைத்துக்கொள். அந்த ஜனங்களை என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்” என்றான்.
12 பிறகு முதல் மாதத்தின் 13வது நாள் அரசனின் செயலாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள மொழிகளில் ஆமானின் கட்டளைகளை எழுதினார்கள். அவர்கள் அரசனது நாட்டு அதிகாரிகளுக்கும், பல்வேறு மாகாண ஆளுநர்களுக்கும், பல்வகை ஜனங்களின் தலைவர்களுக்கும் எழுதினார்கள். அரசன் அகாஸ்வேருவின் அதிகாரத்தின்படியும், அவனது சொந்த மோதிரத்தின் முத்திரையிட்டும் அவர்கள் கடிதம் எழுதினார்கள்.
13 தூதுவர்கள் அரசனது அனைத்து மாகாணங்களுக்கும் கடிதங்களைக் கொண்டுசென்றனர். அக்கடிதத்தில் யூதர்கள் அனைவரையும் முழுமையாக அழிக்கவும், கொல்லவும் அரசனது கட்டளை இருந்தது. அதாவது இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், சிறுபிள்ளைகள் அனைவரையும் அழிக்க வேண்டும். ஒரே நாளில் யூதர்கள் அனைவரையும் கொல்லவேண்டும் என்று கட்டளை இருந்தது. அந்நாளும் ஆதார் எனும் பன்னிரண்டாவது மாதத்தின் 13வது நாளாக இருக்கவேண்டும். யூதர்களுக்குரிய உடமைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை இருந்தது.
14 கடிதத்தின் ஒரு பிரதி சட்டமாக்கப்படுவதற்குக் கொடுக்கப்பட்டு, அவனது ஆட்சிக்குள்ளிருந்த அனைத்து மாகாணங்களிலும் சட்டமாக்கப்பட்டது. அனைத்து ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. பிறகு அந்நாளுக்காக ஜனங்கள் அனைவரும் தயாராக இருப்பார்கள். 15 அரசனது கட்டளையோடு தூதுவர்கள் விரைந்துக்கொண்டிருந்தனர். அந்த கட்டளை தலைநகரமான சூசானில் கொடுக்கப்பட்டது. அரசனும், ஆமானும் குடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சூசான் நகரம் குழம்பிக்கொண்டிருந்தது.
மொர்தெகாய் உதவிக்காக எஸ்தரை தூண்டுகிறான்
4 நடந்த அனைத்தையும் மொர்தெகாய் கேள்விப்பட்டான். யூதர்களுக்கு எதிரான அரசனது கட்டளையைக் கேட்டதும் அவன் தனது ஆடையைக் கிழித்தான். துக்கத்திற்கு அடையாளமான ஆடையை அணிந்து தலையில் சாம்பலை போட்டுக்கொண்டான். பிறகு அவன் நகரத்திற்குள் உரத்தக்குரலில் அழுதவண்ணம் சென்றான். 2 ஆனால் மொர்தெகாய் அரசனது வாசல் வரைதான் போனான். துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருந்த எவரையும் வாசலில் நுழைய அனுமதிக்கமாட்டார்கள். 3 எல்லா நாடுகளிலும் அரசனது கட்டளை போய்ச் சேர்ந்தது. அதனால் யூதர்களிடம் அழுகையும், துக்கமும், அதிகரித்தன. அவர்கள் உரத்த அழுகையுடன் உபவாசத்தை கடைப்பிடித்தனர். பல யூதர்கள் துக்கத்திற்கான ஆடையை அணிந்தும் தலைகளில் சாம்பலைப் போட்டுக்கொண்டும் தரையில் விழுந்துகிடந்தனர்.
4 எஸ்தரின் பெண் வேலைக்காரிகளும், பிரதானிகளும் வந்து அவளிடம் மொர்தெகாயைப் பற்றிச் சொன்னார்கள். அது எஸ்தர் அரசியைக் கலங்கவும் துக்கப்படவும் வைத்தது. அவள் அவனுக்கு துக்கத்திற்குரிய ஆடையை எடுத்துவிட்டு அணிந்துகொள்ள வேறு ஆடைகளைக் கொடுத்து அனுப்பினாள். ஆனால் அவன் அந்த ஆடைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 5 பிறகு, எஸ்தர் ஆத்தாகை அழைத்தாள். ஆத்தாகு அரசனின் பிரதானிகளுள் ஒருவன். அவன் அவளுக்கு சேவைச் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். மொர்தெகாயை அழவைத்து துக்கப்படுத்தியது எதுவென அறிந்து வரும்படி அவள் அவனுக்கு கட்டளையிட்டாள். 6 எனவே, அவன் வெளியே போய் வாசலுக்கு முன்னால் திறந்த வெளியில் மொர்தெகாய் இருக்கும் இடத்தை அடைந்தான். 7 பிறகு, மொர்தெகாய் ஆத்தாகிடம் அவனுக்கு ஏற்பட்டதைப்பற்றி சொன்னான். அதோடு அவன் ஆத்தாகிடம் ஆமான் யூதர்களைக் கொல்வதற்கு எவ்வளவு பணம் அரசின் பொக்கிஷ சாலைக்குக் கொடுப்பதாக வாக்களித்துள்ளான் என்பதையும் சொன்னான். 8 மொர்தெகாய் ஆத்தாகிடம் யூதர்களைக் கொல்வதற்குரிய அரசனது கட்டளைப் பிரதிகளையும் கொடுத்தான். அக்கட்டளை சூசான் தலைநகரம் முழுவதும் போயிருந்தது. அவன் ஆத்தாகிடம், அதனை எஸ்தருக்குக் காட்டி எல்லாவற்றையும் சொல்லும்படி கூறினான். எஸ்தர் அரசனிடம் சென்று, அரசனிடம் மொர்தெகாய்க்கும், அவளது ஜனங்களுக்கும் இரக்கம் காட்டிக் காக்குமாறு வேண்டிக்கொள்ளச் சொன்னான்.
9 ஆத்தாகு எஸ்தரிடம் போய் மொர்தெகாய் சொன்னவற்றையெல்லாம் சொன்னான்.
10 பிறகு எஸ்தர் ஆத்தாகிடம், மொர்தெகாயிடம் சொல்லுமாறு சொல்லியனுப்பினது இதுவே: 11 “மொர்தெகாய் அரசனின் தலைவர்கள் அனைவரும் அரசனது நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் இதனை அறிவார்கள். அரசனிடம் ஒரு சட்டம் உள்ளது. அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ அழைக்கப்படாமல் அரசனிடம் போகக்கூடாது. போனால், அவன் மரணத்திற்குள்ளாவான். அந்த ஆள் மீது அரசனது பொற் செங்கோல் நீட்டப்பட்டால் ஒழிய அவன் அச்சட்டத்திலிருந்து தப்பமுடியாது. அரசன் அவ்வாறு செய்தால், பிறகு அவனது உயிர் காப்பாற்றப்படும். 30 நாட்களாக நான் அரசனைப் போய் பார்க்க அழைக்கப்படவில்லை” என்று சொல்லச்சொன்னாள்.
12-13 எஸ்தரின் செய்தி மொர்தெகாய்க்குக் கொடுக்கப்பட்டது. மொர்தெகாய் அவளது செய்தியைப் படித்து விட்டு, அவன் அவளுக்குப் பதில் அனுப்பினான். அதில், “எஸ்தர், நீ அரசனது அரண்மனையில் வாழ்வதால் யூத பெண்ணாகிய நீ மட்டும் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்காதே. 14 நீ இப்போது அமைதியாக இருந்தால், யூதர்களுக்கான உதவியும் விடுதலையும் வேறு இடத்திலிருந்து வரும், ஆனால் நீயும் உனது தந்தையின் குடும்பமும் அழியும். யாருக்குத் தெரியும்? ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவுவதற்காகவே இராணியாகத் தோந்தெடுக்கப்பட்டிருக்கலாம்” என்று எழுதியிருந்தான்.
15-16 பிறகு, எஸ்தர் மொர்தெகாய்க்கு இந்த பதிலை அனுப்பினாள்: “மொர்தெகாய் சூசானிலுள்ள எல்லா யூதர்களையும் ஒன்றுசேர்த்து எனக்காக உபவாசம் இருங்கள். மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமலும் குடிக்காமலும் இருங்கள். நானும் உங்களைப் போன்றே உபவாசம் இருப்பேன். என் வேலைக்காரப் பெண்களும் உபவாசம் இருப்பார்கள். நான் உபவாசம் இருந்த பிறகு அரசனிடம் செல்வேன். அரசன் அழைக்காமல் போவது என்பது சட்டத்திற்கு எதிரானது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் எவ்வாறாகிலும் செய்வேன். நான் மரித்தால் மரிக்கிறேன்.”
17 எனவே மொர்தெகாய் வெளியே போனான். அவன் எஸ்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்தான்.
எஸ்தர் அரசனிடம் பேசுகிறாள்
5 மூன்றாவது நாள், எஸ்தர் அவளுக்குரிய அரச உடைகளை அணிந்துக்கொண்டாள். பிறகு, அவள் அரசனது அரண்மனை உட்பகுதிக்குள் போய் நின்றாள். அப்பகுதி அரசனது சபைக்கு முன்னால் இருந்தது. அரசன் தனது சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் அரண்மனை வாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் இருந்தான். 2 பிறகு, அரசன் எஸ்தர் அரசி முற்றத்தில் நிற்பதைப் பார்த்தான். அவன் அவளைப் பார்த்தபோது மகிழ்ச்சிடைந்தான். அதனால் அவன் அவளை நோக்கி தனது கையிலுள்ள செங்கோலை நீட்டினான். எனவே, எஸ்தர் அந்த அறைக்குள் சென்று அரசன் அருகில் போனாள். பிறகு அவள் அரசனது பொற் செங்கோலின் முனையைத் தொட்டாள்.
3 பிறகு அரசன், “எஸ்தர் அரசியே, நீ விரும்புகிறது என்ன? நீ என்னிடம் என்ன வேண்டுமென கேட்கிறாய்? நீ என்ன கேட்டாலும் நான் உனக்குத் தருவேன். எனது பாதி இராஜ்யம் கேட்டாலும் தருவேன்” என்றான்.
4 அதற்கு எஸ்தர், “நான் உங்களுக்கும் ஆமானுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்று அந்த விருந்துக்கு நீங்களும் ஆமானும் வரமுடியுமா?” என்று கேட்டாள்.
5 பிறகு அரசன், “ஆமானை விரைவாக அழைத்து வா. எனவே எஸ்தர் என்ன கேட்கிறாளோ, அதன்படிச் செய்வோம்” என்றான்.
எனவே, அரசனும், ஆமானும் எஸ்தர் தயார் செய்த விருந்துக்குப் போனார்கள். 6 அவர்கள் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போது அரசன் மீண்டும் எஸ்தரிடம், “இப்போது எஸ்தரே, என்னிடம் நீ என்ன கேட்க விருப்புகிறாய்.? நான் அதனை உனக்கு கொடுப்பேன். நீ என்ன விரும்புகிறாய்? நீ என்ன விரும்பினாலும் அதனை நான் உனக்குக் கொடுப்பேன். நான் எனது பாதி இராஜ்யம்வரை கொடுப்பேன்.” என்றான். 7 எஸ்தர், “இதுதான் நான் உம்மிடம் கேட்க விரும்பியது. 8 அரசன், எனக்கு ஆதரவு கொடுத்தால், அரசன் என்னிடம் தயவாக இருந்தால், அரசனும் ஆமானும் நாளையும் வரவேண்டும். நாளை அரசனுக்கும், ஆமானுக்கும் இன்னொரு விருந்து ஏற்பாடு செய்வேன். அப்பொழுது, நான் உண்மையில் என்ன விரும்புகிறேன் என்று சொல்வேன்” எனப் பதிலுரைத்தாள்.
மொர்தெகாய் மீது ஆமானின் கோபம்
9 அவனது வீட்டைவிட்டு ஆமான் மிகவும் மகிழ்ச்சியோடு சென்றான். அவன் நல்ல மனநிலையில் இருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை அரசனது வாசலில் பார்த்ததும் அவனுக்கு மொர்தெகாய் மீது கோபம் வந்தது. ஆமான் மொர்தெகாய் மீது மிகுந்த கோபமடைந்தான். ஏனென்றால், அவன் ஆமான் நடந்து வரும்போது எவ்வித மரியாதையையும் தரவில்லை. மொர்தெகாய் ஆமானைக் கண்டு பயப்படவில்லை. அது அவனை மேலும் கோபத்திற்குள்ளாக்கிற்று. 10 ஆனால் ஆமான் தனது கோபத்தைக் அடக்கிக்கொண்டு வீட்டிற்குப் போனான். பிறகு ஆமான் தனது நண்பர்களையும், மனைவி சிரேஷையும் அழைத்தான். 11 தான் எவ்வளவு செல்வமுடையவன் என்ற பெருமையோடு பேச ஆரம்பித்தான். அவன் தனது பல மகன்களைப் பற்றியும் அரசன் எவ்வழியில் எல்லாம் தன்னை பெருமைபடுத்துக்கிறான் என்பதைப் பற்றியும் பெருமையோடு பேசினான். மற்ற அதிகாரிகளைவிட தன்னை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருக்கிறான் என்பதையும் பெருமையோடு பேசினான். 12 ஆமான், “அதுமட்டுமல்ல, அரசி எஸ்தர் அரசனுக்குக் கொடுத்த விருந்தில் என்னை மட்டுமே அழைத்திருந்தாள். அவள் நாளை மீண்டும் விருந்துக்கு வருமாறு அழைத்தாள். 13 ஆனால் இவை யாவும் என்னை மகிழ்ச்சியடைய செய்யவில்லை. அந்த யூதனான மொர்தெகாய் அரசனின் வாசலில் உட்கார்ந்திருப்பதைக் காணும்போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்று சொன்னான்.
14 பிறகு ஆமானின் மனைவி சிரேஷ் மற்றும் நண்பர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அவர்கள், “யாராவது ஒருவரை, அவனைத் தூக்கிலிட கம்பம் கட்டச் சொல். அதனை 75 அடி உயரமுள்ளதாகச் செய். பிறகு, காலையில் மொர்தெகாயை அதில் தூக்கில் போடுமாறு அரசனை கேள். பிறகு, அரசனோடு விருந்துக்குப் போ. அப்போது உன்னால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியும்” என்றனர்.
ஆமான் இக்கருத்தை விரும்பினான். எனவே, அவன் சிலரிடம் தூக்கு மரக் கம்பம் செய்யுமாறு கட்டளையிட்டான்.
2008 by World Bible Translation Center