Beginning
மிகாயா ஆகாப் அரசனை எச்சரிக்கிறான்
18 யோசபாத்துக்கு மிகுந்த செல்வமும், சிறப்பும் இருந்தது. இவன் ஆகாப் அரசனோடு ஒரு திருமண ஒப்பந்தம் செய்துகொண்டான். 2 சில ஆண்டுகளுக்குப் பிறகு யோசபாத் ஆகாபைப் பார்க்க சமாரியா நகரத்திற்குச் சென்றான். ஆகாப் பல ஆடுகளையும் பசுக்களையும் பலி கொடுத்தான். யோசபாத்துக்கும் அவனோடு உள்ள ஜனங்களுக்கும் அவற்றைக் கொடுத்தான். ஆகாப் யோசபாத்திடம் ராமோத் கிலியாத்தைத் தாக்கும்படி உற்சாகப்படுத்தினான். 3 ஆகாப் யோசபாத்திடம், “கிலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடு வருகின்றீரா?” என்று கேட்டான். ஆகாப் இஸ்ரவேலின் அரசன். யோசபாத் யூதாவின் அரசன். யோசபாத் ஆகாபிடம், “நான் உன்னைப் போன்றவன். என் ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்களே. நாங்கள் உங்களோடு போரிலே சேர்ந்துக்கொள்வோம்” என்றான். 4 யோசபாத் மேலும் ஆகாபிடம், “ஆனால் முதலில், நாம் நமது கர்த்தரிடமிருந்து செய்தியை எதிர்ப்பார்ப்போம்” என்றான்.
5 எனவே அரசன் ஆகாப் 400 தீர்க்கதரிசிகளை அணிதிரட்டினான். ஆகாப் அவர்களிடம், “நம்மால் ராமோத் கீலேயாத்துக்கு எதிராகப் போக முடியுமா அல்லது முடியாதா?” என்று கேட்டான்.
தீர்க்கதரிசிகளோ, “போக முடியும், ராமோத் கீலேயாத்தைத் தோற்கடிக்க தேவன் உதவுவார்” என்றனர்.
6 ஆனால் யோசபாத், “கர்த்தருடைய தீர்க்கதரிசி யாராவது இங்கே இருக்கிறார்களா? கர்த்தருடைய விருப்பத்தை அவர்கள் மூலம் கேட்க விரும்புகிறேன்” என்றான்.
7 பிறகு அரசன் ஆகாப், யோசபாத்திடம், “இன்னும் ஒருவன் இங்கே இருக்கிறான். அவன் மூலமாக நாம் கர்த்தரிடம் கேட்கலாம். ஆனால் நான் அந்த மனிதனை வெறுக்கிறேன். ஏனென்றால் அவன் எனக்காக கர்த்தரிடமிருந்து எந்த நல்லச் செய்தியையும் சொல்லமாட்டான். எப்பொழுதும் அவன் எனக்காகக் கெட்ட செய்திகளையே வைத்திருப்பான். அவனது பெயர் மிகாயா, அவன் இம்லாவின் மகன்” என்றான். ஆனால்
யோசபாத்தோ, “ஆகாப், நீ அப்படிச் சொல்லக்கூடாது!” என்றான்.
8 பிறகு அரசன் ஆகாப் தனது ஒரு அதிகாரியை அழைத்து, “வேகமாகப் போய், இம்லாவின் மகனான மிகாயாவை அழைத்து வா” என்றான்.
9 இஸ்ரவேலின் அரசனான ஆகாபும், யூதாவின் அரசனான யோசபாத்தும் அரச உடை அணிந்து கொண்டனர். அவர்கள் தம் சிங்காசனங்களில் சமாரியாவின் ஒலிமுக வாசலுக்கு அருகே உள்ள களத்தில் அமர்ந்திருந்தனர். அந்த 400 தீர்க்கதரிசிகளும் இரு அரசர்களின் முன் தங்கள் செய்தியைச் சொன்னார்கள். 10 கெனானாவின் மகனான சிதேக்கியா தனக்கு இரும்பு கொம்புகளைச் செய்தான். அவன், “இதுதான் கர்த்தர் சொன்னது: நீ இந்த இரும்பு கொம்புகளை அணிந்துக் கொண்டு அராமியரை அழிந்துபோகும்வரை தாக்குவாய்” என்றான். 11 அனைத்து தீர்க்கதரிசிகளும் இதனையே சொன்னார்கள். அவர்கள், “ராமோத் கீலேயாத் நகரத்திற்கு செல். நீ வெற்றி பெறுவாய். அராமிய ஜனங்களை வெல்லும்படி கர்த்தர் உதவுவார்” என்றனர்.
12 மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம் போய், “மிகாயா! கவனி. அனைத்து தீர்க்கதரிசிகளும் ஒரே மாதிரி கூறுகின்றனர். அரசன் வெற்றிபெற முடியும் என அவர்கள் கூறுகின்றனர். எனவே அவர்கள் சொல்வதையே நீயும் கூறு. நீயும் நல்ல செய்தியைக் கூறவேண்டும்” என்றான்.
13 ஆனால் மிகாயா, “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன். எனது தேவன் சொல்வதையே நான் சொல்ல முடியும்” என்று பதிலளித்தான்.
14 பிறகு மிகாயா ஆகாப் அரசனிடம் வந்தான். அரசன் அவனிடம், “மிகாயா நாங்கள் ராமோத் கீலேயாத் நகரத்திற்குப் போரிடப் போகலாமா வேண்டாமா?” என்று கேட்டான்.
அதற்கு மிகாயா, “போ அவர்களோடு போர் செய். அந்த ஜனங்களை வெல்ல கர்த்தர் துணைசெய்வார்” என்றான்.
15 அரசன் ஆகாப் மிகாயாவிடம், “கர்த்தருடைய நாமத்தால் என்னிடம் உண்மையை மட்டுமே கூற வேண்டுமென்று பலமுறை உன்னை நான் சத்தியம் செய்ய வைத்தேன்” என்றான்.
16 பிறகு மிகாயா, “இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மலைப்பகுதியில் சிதறி ஓடுவதை நான் பார்த்தேன். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் உள்ளனர். கர்த்தர், ‘அவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் பத்திரமாக வீட்டிற்குப் போகட்டும்’ என்று கூறினார்” என்றான்.
17 இஸ்ரவேல் அரசனான ஆகாப் யோசபாத்திடம், “கர்த்தரிடமிருந்து எனக்கு மிகாயா நல்ல செய்தியைச் சொல்லமாட்டான் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அவன் எனக்கு கெட்டச் செய்திகளை மட்டுமே கூறுவான்” என்றான்.
18 அதற்கு மிகாயா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேள்: கர்த்தர் தன் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன். பரலோகத்தின் படை அவரது வலதுபுறமும் இடதுபுறமும் உள்ளன. அனைத்து படைகளும் அவரைச் சுற்றிலும் நின்றுக்கொண்டிருக்கிறது. 19 கர்த்தர், ‘ராமோத் கீலேயாத் நகரின் மேல் படையெடுக்குமாறு செய்து அப்போரில் ஆகாப் மரிக்குமாறு செய்ய, யாரால் தந்திரமாய்ச் செயல்பட முடியும்?’ என்று கேட்டார். அதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறானதைக் கூறினார்கள். 20 பிறகு ஒரு ஆவி வந்து கர்த்தருக்கு முன்பாக நின்றது. அந்த ஆவி ‘நான் ஆகாபிடம் தந்திரமாய்ச் செயல்படுகிறேன்’ என்று கூறியது. அதனிடம், ‘எப்படி?’ என்று கர்த்தர் கேட்டார். 21 அதற்கு அது, ‘நான் போய் ஆகாபின் தீர்க்கதரிசிகளின் வாயில் பொய் சொல்லும் ஆவியாக இருப்பேன்’ என்றது. அதற்குக் கர்த்தர், ‘நீ ஆகாபை ஏமாற்றுவதில் வெற்றி பெறுவாய். எனவே போய் அவ்வாறே செய்’ என்றார்.
22 “இப்போது ஆகாப் கவனி. பொய் சொல்லும் ஆவியை உன் தீர்க்கதரிசிகளின் வாயில் கர்த்தர் இருக்கச் செய்துள்ளார். எனவே கர்த்தர் சொன்னபடி உனக்கு தீமையே ஏற்படும்” என்றான்.
23 பிறகு சிதேக்கியா மிகாயாவின் அருகில் சென்று அவனது முகத்திலே அறைந்தான். சிதேக்கியாவின் தந்தை கெனானா. சிதேக்கியா, “மிகாயா, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னிடம் வந்து இவ்வாறு பேச வைத்தது?” என்று கேட்டான்.
24 அதற்கு மிகாயா, “சிதேக்கியா! நீ உள்ளறைக்குள்ளே ஓடி பதுங்கும் நாளிலே அதனைக் காண்பாய்” என்றான்.
25 பிறகு ஆகாப் அரசன், “மிகாயாவை அழைத்துக் கொண்டு நகர ஆளுநராகிய ஆமோனிடத்திலும் அரச குமாரனாகிய யோவாசிடத்திலும் செல்லுங்கள். 26 அவர்களிடம், இதுதான் அரசன் சொன்னது: ‘மிகாயாவைச் சிறையிலே அடையுங்கள். நான் போரிலிருந்து திரும்பி வரும்வரை சிறிது அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறு எதையும் தராதீர்கள்’ எனக் கூறுங்கள்” என்றான்.
27 அதற்கு மிகாயா, “ஆகாப்! நீ போர்களத்திலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்தால், பிறகு கர்த்தர் என் மூலமாகப் பேசவில்லை. ஜனங்களே! நான் சொல்வதைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” என்றான்.
ராமோத் கீலேயாத்தில் ஆகாப் கொல்லப்படுகிறான்
28 இஸ்ரவேல் அரசனான ஆகாபும் யூதாவின் அரசனான யோசபாத்தும் ராமோத் கீலேயாத்தைத் தாக்கினார்கள். 29 ஆகாப் அரசன் யோசபாத்திடம், “நான் போர்க்களத்திற்குள் நுழையுமுன் என் தோற்றத்தை மாற்றிக்கொள்வேன். ஆனால் நீ உனது உடையையே அணிந்துகொள்” என்றான். எனவே இஸ்ரவேலின் அரசனாகிய ஆகாப் தன் ஆடையை மாற்றிக்கொண்டான். இருவரும் போர்க்களத்துக்குச் சென்றார்கள்.
30 ஆராம் அரசன் தனது இரதப்படைத் தளபதியிடம் ஒரு கட்டளையிட்டான். அவன் அவர்களிடம், “எவரோடும் சண்டையிடவேண்டாம். அவன் பெரியவனாயினும் சரி, சிறியவனாயினும் சரியே. ஆனால் இஸ்ரவேலின் அரசனான ஆகாபிடம் மட்டும் சண்டையிடுங்கள்” என்றான். 31 இரதப்படைத் தளபதிகள் யோசபாத்தைக் கண்டதும் “இஸ்ரவேலின் அரசனான ஆகாப் அங்கே இருக்கிறான்!” என்று எண்ணினார்கள். எனவே யோசபாத்தைத் தாக்க அவர்கள் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் சத்தமிட்டு வேண்டினபடியால் கர்த்தர் அவனுக்கு உதவினார். தேவன் இரதப்படைத் தளபதிகளை யோசபாத்தை விட்டு விலகும்படி செய்தார். 32 அவர்களுக்கு இவன் இஸ்ரவேல் அரசனான ஆகாப் இல்லை என்று தெரிந்ததும் துரத்துவதை விட்டுவிட்டனர்.
33 ஆனால் ஒரு வீரன் எந்தவித குறியும் இல்லாமல் ஒரு அம்பை விட்டான், அது இஸ்ரவேல் அரசனான ஆகாபின் மீது பாய்ந்தது. அது ஆகாபின் உடலில் கவசம் இல்லாத பகுதியின் மேல் பாய்ந்தது. ஆகாப் தன் இரதவோட்டியிடம், “இரதத்தைத் திருப்பிக் கொள். நான் காயப்பட்டிருக்கிறேன். என்னை போர்களத்துக்கு வெளியே கொண்டு செல்!” என்றான்.
34 அன்று போர் மிகவும் மோசமாக நடை பெற்றது. அன்று மாலைவரை ஆகாப் ஆராமியருக்கு எதிராக இரதத்தில் நின்றுக்கொண்டிருந்தான். சூரியன் மறைந்ததும் அவன் மரித்தான்.
19 யூதாவின் அரசனான யோசபாத் எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தான். 2 யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் யோசபாத்தை சந்திக்க வந்தான். அவனது தந்தையின் பெயர் அனானி. அவன் அரசனிடம், “ஏன் கெட்டவர்களுக்கு உதவினாய்? கர்த்தரை வெறுப்பவர்கள் மேல் ஏன் அன்பு செலுத்தினாய். அதனால் தான் கர்த்தர் உன் மீது கோபமாக இருக்கிறார். 3 ஆனால் உனது வாழ்வில் சில நன்மைகளும் உள்ளன. நீ விக்கிரகங்களை அழித்தாய். நீ மனப்பூர்வமாகத் தேவனைப் பின்பற்றவேண்டும் என்று எண்ணினாய்” என்றான்.
யோசபாத் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கிறான்
4 யோசபாத் எருசலேமில் வாழ்ந்தான். பெயர்செபா நகரம் முதல் எப்பிராயீம் மலை நாடுவரை வாழும் ஜனங்களுடன் சேர்ந்து வாழும் பொருட்டு, மீண்டும் யோசபாத் வெளியேறினான். அந்த ஜனங்களை அவன் அவர்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பக் கொண்டுவந்தான். 5 யோசபாத் யூதாவில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தான். அவன் தேர்ந்தெடுத்த நீதிபதிகளை ஒவ்வொரு கோட்டையிலும் இருக்கச் செய்தான். 6 யோசபாத் நீதிபதிகளிடம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் நீங்கள் ஜனங்களுக்காக நியாயந்தீர்க்கவில்லை. கர்த்தருக்காக நியாயந்தீர்க்கிறீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுக்கும்போது கர்த்தர் உங்களோடு இருக்கிறார். 7 இப்போது உங்களில் ஒவ்வொருவரும் கர்த்தருக்குப் பயப்படவேண்டும். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் நமது தேவனாகிய கர்த்தர் நியாயமானவர். அவர் அநீதியானவற்றை யாருக்கும் செய்யமாட்டார். மேலும் தனது நியாயத்தீர்ப்புகளை மாற்றிக்கொள்ள பணத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டார்” என்றான்.
8 எருசலேமில், யோசபாத் சில லேவியர்களையும் ஆசாரியர்களையும், இஸ்ரவேல் கோத்திர தலைவர்களில் சிலரையும் நீதிபதிகளாகத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் எருசலேமில் உள்ள ஜனங்களின் சிக்கல்களை தேவனுடைய சட்டத்தால் சரி செய்யவேண்டும். 9 யோசபாத் அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவன், “நீங்கள் உங்கள் மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் சேவைச் செய்யவேண்டும். நீங்கள் கர்த்தருக்கு பயப்படவேண்டும். 10 உங்களிடம் கொலை, சட்டப்பிரச்சனைகள், கட்டளை, விதிமுறை அல்லது வேறு சில சட்டங்கள் பற்றிய வழக்குகள் வரும், அனைத்து வழக்குகளிலும் நீங்கள் ஜனங்களைக் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யாதபடிக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். நீங்கள் உண்மையாக சேவை செய்யாவிட்டால் கர்த்தருடைய கோபம் உங்கள் மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் ஏற்படும். நீங்கள் இப்படி செய்தால் குற்றவாளிகளாகமாட்டீர்கள்.
11 “அமரியா தலைமை ஆசாரியன். கர்த்தரைப் பற்றிய காரியங்களில் அவன் உங்களுக்கு மேலாக இருப்பான். அரசனைப் பற்றிய விவகாரங்களில் செபதியா உங்களுக்கு உயர்ந்தவனாக இருப்பான். செபதியாவின் தந்தையின் பெயர் இஸ்மவேல். செபதியா யூதா கோத்திரத்தின் தலைவனாக இருக்கிறான். லேவியர்கள் உங்களுக்கு எழுத்தாளர்களாக சேவை செய்வார்கள். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் உறுதியாக இருங்கள். சரியானவற்றைச் செய்கின்ற ஜனங்களோடு கர்த்தர் துணை இருப்பாராக” என்றான்.
யோசபாத் போரை எதிர் நோக்கியிருக்கிறான்
20 பிறகு மோவாபிய ஜனங்களும், அம்மோன் ஜனங்களும், சில மியூனிய ஜனங்களும் யோசபாத்துக்கு எதிராகப் போரிடத் தொடங்கினார்கள். 2 சிலர் யோசபாத்திடம் வந்து, “உங்களுக்கு எதிராகப் போரிட ஏதோமிலிருந்து ஒரு பெரும்படை வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் மரணக் கடலின் மறுகரையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே ஆசாசோன் தாமாரில் உள்ளார்கள்!” என்றனர். (ஆசாசோன் தாமார் எங்கேதி என்றும் அழைக்கப்படுகிறது.) 3 யோசபாத்துக்குப் பயம் ஏற்பட்டது. என்ன செய்யவேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கத் தீர்மானித்தான். யூதாவிலுள்ள எல்லோரும் உபவாசம் இருக்க ஒரு நேரத்தைக் குறித்தான். 4 யூதாவிலுள்ள ஜனங்கள் ஒன்று கூடி கர்த்தரிடம் உதவி கேட்டனர். யூதாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கர்த்தருடைய உதவியை வேண்டினார்கள். 5 யோசபாத் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தான். அங்கு புதுப்பிரகாரத்திற்கு முன்னால் இருந்தான். யூதாவிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்த ஜனங்கள் கூட்டத்தின் முன்னர் நின்று பேசினான். 6 அவன் சொன்னதாவது:
“எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே நீர் பரலோகத்திலிருக்கிற தேவன். அனைத்து நாடுகளிலும் உள்ள அரசுகளை நீர் ஆண்டுவருகிறீர். உமக்கு அதிகாரமும் பலமும் உள்ளது. உமக்கு எதிராக எவராலும் நிற்க முடியாது. 7 நீரே எங்களுடைய தேவன். இந்த நிலத்திலிருந்து ஜனங்கள் வெளியேறுமாறு நீர் கட்டாயப்படுத்தினீர். இதனை உம்முடைய இஸ்ரவேல் ஜனங்களின் முன்னிலையிலேயே நீர் செய்தீர். நீர் இந்த நிலத்தை ஆபிரகாமின் சந்ததியினருக்கு எக்காலத்திற்கும் உரியதாக்கினீர். ஆபிரகாம் உமது நண்பர். 8 ஆபிரகாமின் சந்ததியினர் இந்த நிலத்தில் வாழ்ந்தார்கள். உமது நாமத்தால் ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். 9 அவர்கள், ‘எங்களுக்கு வாளாலோ, தண்டனையாலோ, நோயாலோ, பஞ்சத்தாலோ துன்பங்கள் வந்தால் நாங்கள் உமது ஆலயத்தின் முன்னால் உமக்கு முன் நிற்போம். உம்முடைய நாமம் இவ்வாலயத்தின் மேல் உள்ளது. நாங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நோக்கிச் சத்தமிடுவோம். பின் நீர் அதைக் கேட்டு எங்களைக் காப்பாற்றுவீர்.’
10 “ஆனால் இப்போது, இங்கே அம்மோன், மோவாப், சேயீர் மலை ஆகிய ஜனங்கள் இருக்கின்றனர். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது அவர்களது நிலத்தின் வழியாகச் செல்ல நீர் அனுமதிக்கவில்லை. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் இவர்களை விட்டு விலகி, அழிக்காமல் போனார்கள். 11 ஆனால் பாரும், நாங்கள் அவர்களை அழிக்காமல் விட்டதற்கு அவர்கள் எங்களுக்குத் தரும் வெகுமதியைப் பாரும். அவர்கள் உம்முடைய நாட்டை விட்டு வெளியேறுமாறு எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த நாட்டை நீர் எங்களுக்கு கொடுத்தீர். 12 எங்களுடைய தேவனே, அந்த ஜனங்களைத் தண்டியும். எங்களுக்கு எதிராக வந்திருக்கும் இப்பெரும் படையை எதிர்க்க எங்களிடம் பலம் இல்லை. என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனால் நாங்கள் உம்மிடம் உதவியை வேண்டுகிறோம்!” என்றான்.
13 யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் தங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் பிள்ளைகளுடன் கர்த்தருக்கு முன்னால் நின்றார்கள். 14 பிறகு கர்த்தருடைய ஆவி யகாசியேல் என்பவன் மீது வந்தது. யகாசியேல் சகரியாவின் மகன். சகரியா பெனாயாவின் மகன். பெனாயா ஏயெலின் மகன். ஏயேல் மத்தனியாவின் மகன். யகாசியேல் ஒரு லேவியன். இவன் ஆசாபின் சந்ததியான். கூட்டத்தின் நடுவில் 15 யகாசியேல், “நான் சொல்வதைக் கேளுங்கள். யோசபாத் அரசனே, யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே, கர்த்தர் உங்களுக்கு இதனைக் கூறுகிறார்: ‘இப்பெரும் படையைக்கண்டு அஞ்சவோ, கவலைப்படவோ வேண்டாம். ஏனென்றால் இது உங்களுடைய போரல்ல. இது தேவனுடைய போர். 16 நாளை கீழே இறங்கிப்போய் அவர்களோடு சண்டையிடுங்கள். அவர்கள் சிஸ் என்ற மேட்டு வழியாக வருகிறார்கள். அவர்களை நீங்கள் யெருவேல் எனும் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் முடிவில் சந்திப்பீர்கள். 17 இப்போரில் நீங்கள் சண்டையிடவே வேண்டாம். உங்கள் இடங்களில் உறுதியாக நில்லுங்கள். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவதைக் காண்பீர்கள். யூதா நாட்டினரே! எருசலேமியர்களே! அஞ்சாதீர்கள். கவலைப்படாதீர்கள்! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். எனவே நாளை அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள்’ என்றார்” என்று சொன்னான்.
18 யோசபாத் குனிந்து வணங்கினான். அவனது முகம் தரையைத் தொட்டது. யூதாவில் வாழும் ஜனங்களும் எருசலேமில் வாழும் ஜனங்களும் கர்த்தருக்கு முன்பாக தரையில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தரை தொழுதுகொண்டனர். 19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை, கோகாத் மற்றும் கேரா ஆகிய கோத்திரத்தில் உள்ள லேவியர்கள் எழுந்து நின்று துதித்தனர். அவர்கள் கர்த்தரை மிகச் சத்தமாகத் துதித்தனர்.
20 அதிகாலையில் யோசபாத்தின் படையானது தெக்கோவா வனாந்தரத்திற்குப் போனது. அவர்கள் புறப்படும்போது யோசபாத் நின்ற வண்ணம், “யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள். விசுவாசத்தில் உறுதியாயிருங்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள். அதனால் வெற்றி பெறுவீர்கள்” என்றான்.
21 பிறகு யோசபாத் ஜனங்களை அறிவுரைகளால் உற்சாகப்படுத்தினான். பின்னர் கர்த்தரைத் துதித்துப் பாடப் பாடகர்களைத் தேர்ந்தெடுத்தான். கர்த்தர் பரிசுத்தமும், அற்புதமும் கொண்டவர். இவரைத் துதித்துப் பாடிக் கொண்டே பாடகர்கள் படைக்கு முன்னால் சென்றார்கள். அவர்கள்,
“கர்த்தரைத் துதியுங்கள்,
ஏனென்றால் அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்!” என்று பாடினார்கள்.
22 தேவனை இவர்கள் பாடித் துதிக்கத் தொடங்கியதும், கர்த்தர் அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் மீது ஒரு மறைமுகத் தாக்குதல் நடத்தினார். இவர்களே யூதா நகரின் மேல் போர் தொடுத்து வந்தவர்கள். அவர்கள் அடிக்கப்பட்டார்கள். 23 அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேர்ந்து சேயீர் மலை நாட்டினர் மீது போரிடத் தொடங்கினார்கள். அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேயீர் மலை நாட்டினரைக் கொன்று அழித்தார்கள். சேயீர் மலை நாட்டினரைக் கொன்று முடித்த பிறகு தமக்குள்ளாகவே போரிட்டுக் கொல்லத் தொடங்கினார்கள்.
24 யூதா ஜனங்கள் வனாந்தரத்தில் பார்ப்பதற்கு வசதியான ஒரு இடத்திற்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள் பெரும் படையைக் கவனித்தனர். அவர்கள் செத்துப்போன பிணங்களைத்தான் பார்க்க முடிந்தது. எவரும் அங்கு உயிரோடு இல்லை. 25 யோசபாத்தும் அவனது படையும் வந்து மரித்துப் போனவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச்சென்றார்கள். அவர்கள் பல மிருகங்களையும், செல்வங்களையும், ஆடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றினார்கள். அவர்கள் அவற்றைத் தமக்கு எடுத்துக்கொண்டனர். அவர்கள் இவ்வாறு விலையுயர்ந்த பொருட்களை மூன்று நாட்களாக கொள்ளையிட்டனர். ஏனென்றால் அவற்றின் அளவு அவ்வளவு மிகுதியாயிருந்தது. 26 நான்காவது நாள் யோசபாத்தும் அவனது படைகளும் பெராக்கா பள்ளத்தாக்கில் கூடினார்கள். அந்த இடத்தில் அவர்கள் கர்த்தரைத் துதித்தனர். எனவே அந்த இடம், “பெராக்கா பள்ளத்தாக்கு” என்று இதுவரையிலும் அழைக்கப்படுகிறது.
27 பிறகு யோசபாத் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை எருசலேமிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போனான். அவர்களின் பகைவர்கள் அழிக்கப்பட்டதால் அவர்களைக் கர்த்தர் மிகவும் மகிழ்ச்சியோடு வைத்தார். 28 அவர்கள் எருசலேமிற்குத் தம்புருக்களோடும், சுரமண்டலங்களோடும், எக்காளங்களோடும் வந்து கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர்.
29 அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து அரசுகளும் கர்த்தருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் அவை இஸ்ரவேலின் எதிரிகளோடு கர்த்தர் போரிட்டதைப் பற்றி கேள்விப்பட்டனர். 30 அதனால் யோசபாத்தின் அரசாங்கம் சமாதானமாக இருந்தது. யோசபாத்தின் தேவன் அவனைச் சுற்றிலும் சமாதானத்தைத் தந்தார்.
யோசபாத் ஆட்சியின் முடிவு
31 யோசபாத் யூதா நாடு முழுவதையும் அரசாண்டான். இவன் ஆளத்தொடங்கும்போது இவனுக்கு வயது 35, இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாயின் பெயர் அசுபாள். இவள் சில்கியின் மகள். 32 யோசபாத் தனது தந்தை ஆசாவைப் போன்று சரியான வழியில் வாழ்ந்தான். அவன் ஆசாவின் வழியைப் பின்பற்றுவதில் இருந்து மாறவில்லை. கர்த்தருடைய பார்வையில் நல்லவற்றையேச் செய்தான். 33 ஆனால் மேடைகள் அகற்றப்படவில்லை. தம் முற்பிதாக்கள் பின்பற்றிய தேவனைப் பின்பற்றுவதற்காக ஜனங்கள் தங்களுடைய இருதயத்தைத் திருப்பவில்லை. 34 யோசபாத் செய்த மற்ற செயல்களைப் பற்றி தொடக்கம் முதல் இறுதிவரை உள்ளவற்றைப் பற்றி ஆனானியின் மகனாகிய யெகூவின் ஆவணங்களில் எழுதப்பட்டுள்ளன. பிரதி செய்யப்பட்டு, இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்னும் புத்தகத்தில் இவை சேர்க்கப்பட்டன.
35 பிறகு யூதாவின் அரசனான யோசபாத் இஸ்ரவேல் அரசனான அகசியாவோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். அகசியா தீமைச் செய்தான். 36 யோசபாத் அகசியோவோடு சேர்ந்து கொண்டு தர்ஷீசுக்குச் செல்ல கப்பல் கட்டினான். அவர்கள் கப்பல்களை எசியோன் கேபேரிலே கட்டினார்கள். 37 பிறகு எலியேசர் யோசபாத்துக்கு எதிராகப் பேசினான். எலியேசரின் தந்தை பெயர் தொதொவா. எலியேசர் மரேசா ஊரினன். அவன், “யோசபாத், நீ அகசியாவோடு சேர்ந்துவிட்டாய். அதனால்தான் கர்த்தர் உனது வேலைகளை அழிப்பார்” என்றான். கப்பல்கள் நொறுங்கிப்போயின. அதனால் யோசபாத்தும், அகசியாவும் தம் ஆட்களை தர்ஷீசுக்கு அனுப்பமுடியாமல் போயிற்று.
2008 by World Bible Translation Center