Beginning
ஆலயத்தையும் அரண்மனையையும் கட்ட சாலொமோன் திட்டமிடுகிறான்
2 கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாக்க சாலொமோன் ஆலயம் கட்ட திட்டமிட்டான். மேலும் தனக்காக ஒரு அரண்மனை கட்டிக்கொள்ளவும் சாலொமோன் திட்டமிட்டான். 2 மேலும் மலையில் கல் உடைக்கும் பொருட்டு சாலொமோனிடம் 70,000 தொழிலாளர்களும் 80,000 கல் தச்சர்களும் இருந்தார்கள். மேற்பார்வை செய்யும்பொருட்டு 3,600 பேரைத் தேர்ந்தெடுத்தான்.
3 பிறகு சாலொமோன் ஈராம் என்பவனுக்கு தூது அனுப்பினான். ஈராம் தீரு என்னும் நாட்டின் அரசன். சாலொமோன்,
“என் தந்தையான தாவீதிற்கு உதவிச் செய்தது போன்று எனக்கும் உதவிச் செய்யுங்கள். நீங்கள் கேதுருமரக்கட்டைகளை அனுப்பினீர்கள். அதனால் அவர் தனக்கு அரண்மனை கட்டிக்கொண்டார். 4 நான் எனது தேவனாகிய கர்த்தருடைய பெயரை மகிமைப்படுத்துவதற்காக ஒரு ஆலயம் கட்டப்போகிறேன். ஆலயத்தில் கர்த்தருக்கு முன்பாக நாங்கள் நறுமணப் பொருட்களை எரிக்கப்போகிறோம். சிறப்புக்குரிய மேஜையில் பரிசுத்த அப்பத்தை வைக்கப்போகிறோம். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் தகனபலிகளை செலுத்தப் போகிறோம். ஓய்வுநாட்களிலும், பிறைச்சந்திர நாட்களிலும் நமது தேவனாகிய கர்த்தர் கொண்டாடச் சொன்ன பண்டிகை நாட்களிலும் தகனபலிகளை செலுத்தப்போகிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் எக்காலத்திற்கும் கீழ்ப்படியவேண்டிய சட்டம் இது.
5 “நமது தேவன் மற்ற எல்லாத் தெய்வங்களை விட பெரியவர். எனவே நான் அவருக்காகப் பெரிய ஆலயத்தைக் கட்டுவேன். 6 உண்மையில் எவராலும் நம் தேவனுக்கு ஆலயம் கட்டமுடியாது. வானமும் வானாதி வானமும் கூட அவரைத் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே என்னாலும் நமது தேவனுக்கு ஆலயம் கட்டமுடியாது. என்னால் முடிந்ததெல்லாம் அவரை மகிமைப்படுத்த அவருக்கு நறுமணப் பொருட்களை எரிக்க ஒரு இடத்தை அமைப்பதுதான்.
7 “இப்போது நான் உங்களிடம் ஒரு மனிதனை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அவனுக்குப் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு போன்ற வேலைகளில் திறமை இருக்கவேண்டும் அவனுக்கு இரத்தாம்பர நூலிலும், சிவப்பு நூலிலும், இளநீல நூலிலும் வேலைச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அவன் இங்கு யூதாவிலும் எருசலேமிலும் இருக்கின்றவர்களோடும் என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோடும் வேலைச்செய்ய வேண்டும். 8 லீபனோனில் உள்ள கேதுரு, தேவதாரு, வாசனை மரங்கள் போன்றவற்றின் பலகைகளையும் அனுப்பவேண்டும். உனது வேலைக்காரர்கள் லீபனோனில் உள்ள மரங்களை வெட்டத் தெரிந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனது வேலைக்காரர்கள் உனது வேலைக்காரர்களுக்கு உதவுவார்கள். 9 எனக்கு ஏராளமான மரப்பலகைகள் தேவை. ஏனென்றால் நான் கட்டப்போகும் ஆலயமானது பெரியதாகவும் அழகானதாகவும் இருக்கும். 10 பலகைகளுக்காக மரத்தை வெட்டப்போகும் உன்னுடைய வேலைக்காரர்களுக்கு நான் கொடுக்கப்போகும் கூலி இதுதான். நான் அவர்களின் உணவுக்காக 20,000 மரக்கால் கோதுமையையும், 20,000 மரக்கால் வாற் கோதுமையையும், 20,000 குடம் திராட்சைரசத்தையும், 20,000 குடம் எண்ணெயையும் கொடுப்பேன்” என்று சொல்லி அனுப்பினான்.
11 பிறகு ஈராம் சாலொமோனுக்குப் பதில் அனுப்பினான். ஈராம் அனுப்பிய செய்தியில் அவன்,
“சாலொமோன், கர்த்தர் தமது ஜனங்களை நேசிக்கிறார். அதனால்தான் அவர்களுக்கு அரசனாக உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டான். 12 ஈராம் மேலும், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்! அவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார். அவர் தாவீதிற்கு ஞானமுடைய மகனைக் கொடுத்தார். சாலொமோன், உன்னிடம் ஞானமும் அறிவும் உள்ளது. நீ கர்த்தருக்காக ஆலயம் கட்டிக் கொண்டிருக்கிறாய். நீ உனக்காக ஒரு அரண்மனையும் கட்டுகிறாய். 13 நான் உன்னிடம் ஈராம் அபி என்னும் கைதேர்ந்த நிபுணனை அனுப்புவேன். 14 அவனது தாய் தாண் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்தவள். அவனது தந்தை தீரு என்னும் நாட்டிலிருந்து வந்தவன். ஈராம்அபி பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மரம் போன்றவற்றில் திறமையாக வேலைச் செய்பவன். மேலும் அவன் கருஞ் சிவப்பு, நீலம், சிவப்புத் துணிகள் மற்றும் மென்பட்டுத்துணி போன்றவற்றில் வேலைச்செய்யும் திறமையும்கொண்டவன். அவனால் வரைபடம் அமைக்கவும் நீ சொல்வதுபோல கட்டவும் முடியும். அவன் உனது கைத்தொழில் வல்லுநர்களோடும் உனது தந்தையான அரசன் தாவீதின் கைத் தொழில் வல்லுநர்களோடும் பணியாற்றுவான்.
15 “இப்போது ஐயா, எங்களுக்கு கோதுமையையும், வாற்கோதுமையையும், திராட்சைரசமும், எண்ணெயும் தருவதாக நீங்கள் கூறினீர்கள். அவை அனைத்தையும் என் வேலைக்காரர்களிடம் கொடுங்கள். 16 நாங்கள் லீபனோன் நாட்டிலிருந்து மரங்களை வெட்டுவோம். நாங்கள் தேவையான அளவிற்கு மரங்களை வெட்டுவோம். நாங்கள் மரப் பலகைகளைக் கட்டி தெப்பங்களைப் போன்று கடல் வழியாக யோப்பாவரை கொண்டுவருவோம். பிறகு நீங்கள் எருசலேமிற்கு அவற்றை எடுத்துச் செல்லலாம்” என்றான்.
17 பிறகு, சாலொமோன் இஸ்ரவேல் நாட்டில் வாழும் அந்நியர்களின் தொகையைக் கணக்கெடுத்தான். இதுபோல ஏற்கெனவே தாவீது அரசனும் கணக்கெடுத்திருக்கிறான். தாவீது சாலொமோனின் தந்தையாகும். அவர்கள் 1,53,600 அந்நியர்கள் இருப்பதை அறிந்தனர். 18 அவர்களில் 70,000 பேரைப் பொருட்களைத் தூக்கிச்செல்ல தேர்ந்தெடுத்தான். 80,000 பேரை, மலையில் கல்லை வெட்டத் தேர்ந்தெடுத்தான். 3,600 பேரை, மேற்பார்வை செய்யத் தேர்ந்தெடுத்தான்.
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான்
3 எருசலேமில் உள்ள மோரியா என்னும் மலை மீது கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும் வேலையை சாலொமோன் ஆரம்பித்தான். மோரியா மலையில்தான் கர்த்தர் சாலொமோனின் தந்தையான தாவீதிற்கு காட்சியளித்தார். தாவீது தயார்செய்து வைத்திருந்த இடத்திலேயே சாலொமோன் ஆலயம் கட்டினான். இந்த இடம் எபூசியனாகிய ஒர்னானின் களத்தில் இருந்தது. 2 சாலொமோன் இஸ்ரவேலின் அரசனான நான்காவது ஆண்டின் இரண்டாவது மாதத்தில் ஆலய வேலையைத் தொடங்கினான்.
3 தேவாலயத்தின் அடித்தளத்திற்கு சாலொமோன் பயன்படுத்திய அளவு முறைகள் வருமாறு: அடித்தளமானது 90 அடி நீளமும், 30 அடி அகலமும் உடையது. சாலொமோன் ஆலயத்தை அளந்தபொழுது பழைய அளவு முறையையே பயன்படுத்தினான். 4 முகப்பு மண்டபமானது ஆலயத்திற்கு முன்பாய் இருபது முழ நீளமும் 180 அடி உயரமுமாய் இருந்தது. சாலொமோன் முகப்பு மண்டபத்தின் உட்பாகத்தை சுத்தமான தங்கத் தகட்டால் மூடினான். 5 ஆலயத்தின் பெரிய மாளிகை சுவர்களைத் தேவதாரு மரப்பலகைகளால் செய்தான். அவற்றைப் பசும்பொன்னால் இழைத்தான். அதன் மேல் பேரீச்சு வேலைகளையும், சங்கிலி வேலைகளையும் சித்தரித்தான். 6 அந்த மாளிகையை இரத்தினங்களால் அலங்கரித்தான். இவன் பயன்படுத்திய தங்கமானது பர்வாயீமினுடையது. 7 அந்த ஆலயத்தின் உத்திரங்கள், நிலைகள், சுவர்கள், கதவுகள் போன்றவற்றைப் பொன் தகட்டால் மூடினான். சுவர்களிலே கேருபீன்களைச் செய்து வைத்தான்.
8 பிறகு, சாலொமோன் மகாபரிசுத்தமான இடத்தையும் கட்டினான். இது 20 முழ நீளமும், 20 முழ அகலமும் உடையதாய் இருந்தது. இதன் அகலம் ஆலயத்தைப் போன்றதே. இதன் சுவர்களைப் பசும் பொன்னால் இழைத்தான். இப்பொன்னின் எடை 600 தாலமாகும். 9 தங்க ஆணிகள் 50 சேக்கல் எடையுள்ளது. மேல் அறைகளையும் பொன்னால் இழைத்தான். 10 சாலொமோன் இரண்டு கேருபீன்களைச் செய்து மகாபரிசுத்தமான இடத்தில் வைத்தான். அவற்றையும் பொன் தகட்டால் மூடினான். 11 கேருபீன்களின் ஒவ்வொரு சிறகும் 5 முழ நீளமுடையது. ஆக மொத்தம் சிறகுகளின் நீளம் 20 முழ நீளமாயிருந்தது. முதல் கேருபீனின் ஒரு சிறகு அந்த அறையின் ஒரு சுவரைத் தொட்டது. அதன் இன்னொரு சிறகு இன்னொரு கேருபீனின் சிறகைத் தொட்டது. 12 இரண்டாவது கேருபீனின் இன்னொரு சிறகானது அவ்வறையின் இன்னொரு சுவரைத் தொட்டது. 13 கேருபீன்களின் சிறகுகள் மொத்தமாக 30 அடி நீளத்தில் பரவியிருந்தன. கேருபீன்கள் பரிசுத்த இடத்தை நோக்கிய வண்ணம் நின்றன.
14 சாலொமோன் திரையை இளநீலம், சிவப்பு, இரத்தாம்பரம், மெல்லிய லினன் போன்ற நூல்களால் செய்தான். அதன்மேல் கேருபீன் வடிவங்களையும் அமைத்தான்.
15 சாலொமோன் ஆலயத்திற்கு முன்னால் இரண்டு தூண்களை அமைத்தான். அவற்றின் உயரம் 35 முழமாகும். அவற்றின் மேல் முனையில் 5 முழ உயர கும்பங்களையும் வைத்தான். 16 சாலொமோன் சங்கிலிகளையும் செய்தான். அவற்றைத் தூண்களின் மேல் முனையில் பொருத்தினான். அச்சங்கிலிகளில் 100 மாதளம் பழங்களைச் செய்து தொங்கவிட்டான். 17 பிறகு சாலொமோன் அத்தூண்களை ஆலயத்திற்கு முன்னர் தூக்கி நிறுத்தினான். ஒரு தூண் வலது பக்கத்திலும் இன்னொரு தூண் இடது பக்கத்திலும் நிறுத்தினான். வலது பக்கமுள்ள தூணுக்கு சாலொமோன் “யாகீன்” என்றும் இடது பக்கமுள்ள தூணுக்கு “போவாஸ்” என்றும் பெயரிட்டான்.
ஆலயத்திற்கானப் பொருட்கள்
4 சாலொமோன் ஒரு பலிபீடத்தை வெண்கலத்தால் செய்தான். அது 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்டது. 2 பிறகு ஒரு பெரிய தொட்டியைச் செய்ய சாலொமோன் உருக்கிய வெண்கலத்தைப் பயன்படுத்தினான். இது வட்ட வடிவத்தில் ஒரு விளிம்பிலிருந்து மறுவிளிம்புவரை 18 அடி அகலம் கொண்டதாக இருந்தது. 7 1/2 அடி உயரமும், 45 அடி சுற்றளவும் கொண்டிருந்தது. 3 தொட்டியின் கீழ்ப்புறமாய் காளைகளின் உருவங்கள் வெண்கலத்தால் வார்க்கப்பட்டு 18 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு வரிசைகளில் காளையின் உருவங்கள் தொட்டியோடு வார்க்கப்பட்டன. 4 இத்தொட்டி 12 காளை உருவங்களின் மேல் வைக்கப்பட்டது. அவற்றில் 3 காளைகள் வடக்கு நோக்கியும், 3 காளைகள் மேற்கு நோக்கியும், 3 காளைகள் கிழக்கு நோக்கியும், 3 காளைகள் தெற்கு நோக்கியும் இருந்தன. பெரிய தொட்டியானது இக்காளைகளின் மேல் இருந்தது. அவற்றின் பின்பக்கம் உட்புறமாய் இருந்தது. 5 பெரிய வெண்கலத் தொட்டியின் கனம் 4 விரல்கடை அளவுள்ளது. தொட்டியின் விளிம்பானது கப்பின் விளிம்புபோல் இருந்தது. அவ்விளிம்பானது லீலி பூ போலவும் இருந்தது. இது 3,000 குடம் தண்ணீர் கொள்ளளவு கொண்டது.
6 சாலொமோன் 10 குழாய்கள் பொருத்தப்பட்ட கிண்ணங்களைச் செய்தான். இவற்றில் 5 கிண்ணங்களைத் தொட்டியின் வலது பக்கத்திலும், 5 கிண்ணங்களை இடது பக்கத்திலும் வைத்தான். தகனபலிக்கான பொருட்களைச் சுத்தப்படுத்த இக்கோப்பைகள் பயன்பட்டன. பலிகளைக் கொடுக்கும் முன்பு குளித்து பரிசுத்தமாகும் பொருட்டு ஆசாரியர்களால் வெண்கலத் தொட்டி பயன்படுத்தப்பட்டது.
7 சாலொமோன் 10 விளக்குத் தண்டுகளைத் தங்கத்தில் செய்தான். அவன் விளக்குத் தண்டுகளைச் செய்வதற்கான விதிமுறைகளைப் பயன்படுத்தினான். அவன் அவ்விளக்குத் தண்டுகளை ஆலயத்தில் வைத்தான். 5 விளக்குத் தண்டுகளை வலது பக்கத்திலும், 5 விளக்குத் தண்டுகளை இடது பக்கத்திலும் வைத்தான். 8 சாலொமோன் 10 மேஜைகளைச் செய்து ஆலயத்தில் வைத்தான். அவற்றில் 5 மேஜைகளை வலது பக்கத்திலும், 5 மேஜைகளை இடது பக்கத்திலும் வைத்தான். சாலொமோன் 100 குழாய் பொருத்தப்பட்ட கிண்ணங்களைத் தங்கத்தால் செய்தான். 9 சாலொமோன் ஆசாரியர்களின் பிரகாரத்தையும், பெரிய பிரகாரத்தையும், மற்ற பிரகாரங்களையும் வாசலோடு அமைத்தான். அவன் பிரகாரக் கதவுகளை வெண்கலத் தகடுகளால் மூடினான். 10 தொட்டியை ஆலயத்தின் வலதுபுறத்தில் தென்கிழக்காக வைத்தான்.
11 ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், கலங்களையும் செய்தான். பிறகு அவன் கர்த்தருடைய ஆலயத்திற்காக சாலொமோன் அரசனுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்தான்.
12 அதுவரை அவன் இரண்டு தூண்களையும், தூண்களின் மேல் உள்ள கும்பங்களையும் குமிழ்களையும் இவற்றை மூடுவதற்கான வலைகளையும் செய்திருந்தான்.
13 இரண்டு வலைகளையும் அலங்கரிப்பதற்காக 400 மாதளம் பழங்களையும் செய்தான். ஒவ்வொரு வலையிலும் இருவரிசையாக மாதளம் பழங்களைத் தொங்கவிட்டான். இவ்வலைகள் இரண்டு தூண்களின் மேலுள்ள கும்பங்களை மூடிக்கொண்டிருந்தன.
14 தாங்கிகளையும் தாங்கிகளின் மேலுள்ள பாத்திரங்களையும் ஈராம் செய்தான்.
15 ஈராம் ஒரு பெரிய வெண்கலத் தொட்டியையும் அதற்கடியில் 12 காளைகளையும் செய்துமுடித்தான்.
16 ஈராம் செப்புச் சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள் துறடுகள் போன்ற பணிமூட்டுகள் போன்றவற்றையும் அரசன் சாலொமோனுக்கு கர்த்தருடைய ஆலயத்திற்காகச் செய்தான்.
இவை பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தால் செய்யப்பட்டன. 17 அரசன் சாலொமோன் முதலில் இவற்றைக் களிமண் வார்ப்படங்களில் வடித்தான். அக்களிமண் வார்ப்படங்கள் யோர்தான் பள்ளத்தாக்கில் சுக்கோத் மற்றும் சரேத்தா ஆகிய ஊர்களுக்கு இடையில் செய்யப்பட்டன. 18 இதுபோல் ஏராளமான பொருட்களை சாலொமோன் செய்தான். இதற்குரிய வெண்கலத்தின் எடையை அளக்க யாரும் முயற்சி செய்யவில்லை.
19 தேவனுடைய ஆலயத்திற்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் சாலொமோன் செய்தான். அவன் தங்கத்தாலான பலிபீடத்தைச் செய்தான். சமூகத்து அப்பங்களை வைக்கும் மேஜைகளையும் அவன் செய்தான். 20 சாலொமோன் விளக்குத் தண்டுகளையும் அதன்மேல் வைக்க விளக்குகளையும் சுத்தமான தங்கத்தால் செய்தான். உள்புறமிருந்த பரிசுத்த இடத்தில் சன்னதிக்கு முன்பு முறைப்படி விளக்கு ஏற்றுவதற்காக இவைச் செய்யப்பட்டன. 21 பூக்களையும், விளக்குகளையும், இடுக்கிகளையும், 22 கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் செய்ய சாலொமோன் தூய பொன்னையே பயன்படுத்தினான். மகா பரிசுத்தமான இடத்தின் உட்கதவுகளையும் ஆலயத்தின் கதவுகளையும் வாசல் கதவுகளையும் பொன்னால் செய்வித்தான்.
5 பிறகு கர்த்தருடைய ஆலயத்திற்காக சாலொமோன் செய்யவேண்டிய வேலையெல்லாம் முடிக்கப்பட்டது. ஆலயத்திற்காக தாவீது தந்த பொருட்களையெல்லாம் சாலொமோன் கொண்டு வந்தான். பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களையும் மேஜை நாற்காலிகளையும் கொண்டுவந்து தேவனுடைய ஆலயத்தில் கருவூலத்தின் அறைகளில் வைத்தான்.
பரிசுத்தப் பெட்டி ஆலயத்திற்குள் கொண்டு வரப்படுகிறது
2 இஸ்ரவேலில் இருக்கிற மூத்தவர்களையும், எல்லாக் கோத்திரங்களின் தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும் சாலொமோன் எருசலேமில் ஒன்றாகக் கூட்டினான். தாவீதின் நகரிலிருந்து கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவரவே இவ்வாறு செய்தான். சீயோன் தாவீதின் நகரமாகும். 3 இஸ்ரவேலின் அனைத்து ஆட்களும் சாலொமோனுடன் அடைக்கல கூடாரப் பண்டிகை விருந்தில் கூடினார்கள். இவ்விருந்து ஏழாவது மாதத்தில் (செப்டம்பர்) நடைபெற்றது.
4 இஸ்ரவேலின் மூப்பர்கள் அனைவரும் கூடியதும் லேவியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கினார்கள். 5 உடனே ஆசாரியர்களும் லேவியர்களும் எருசலேமுக்கு உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தனர். மேலும் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திற்குள் இருந்த பரிசுத்தமானப் பொருட்களையும் கூட எருசலேமுக்குக் கொண்டுவந்தனர். 6 சாலொமோன் அரசனும் இஸ்ரவேல் ஜனங்களும் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஒன்றாகக் கூடினார்கள். அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களையும் காளைகளையும் பலிகொடுத்தனர். எவராலும் எண்ணி கணக்கிட முடியாத செம்மறியாட்டுக் கடாக்கள், மற்றும் காளைகளின் எண்ணிக்கை மிகுதியாக இருந்தது. 7 பிறகு ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை அதனை வைப்பதற்காகச் செய்யப்பட்ட மகா பரிசுத்தமான இடத்திற்கு ஆலயத்திற்குள் கொண்டுவந்தார்கள். அவர்கள் அதனைக் கேருபீன்களின் சிறகுகளுக்கு அடியில் வைத்தனர். 8 உடன்படிக்கைப் பெட்டிக்கு மேலே கேருபீன்கள் தமது சிறகுகளை விரித்து அதனை மூடியவண்ணம் இருந்தது. இச்சிறகுகள் அப்பெட்டியைத் தூக்கப் பயன்படும் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன. 9 மகா பரிசுத்த இடத்தின் முன்பிருந்து காணத்தக்கவையாகப் பெட்டியிலிருந்த தண்டுகள் மிகவும் நீளமானவையாக இருந்தன. அதனை எவராலும் ஆலயத்திற்கு வெளியே இருந்து காணமுடியவில்லை. ஆனால் அத்தண்டுகள் இன்றும் கூட அங்கேயே உள்ளன. 10 அந்த உடன்படிக்கை பெட்டிக்குள் இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. மோசே ஒரேப் மலையில் வைத்து இந்த இரண்டு கற்பலகைகளையும் பெட்டிக்குள் வைத்தான். ஒரேபில்தான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு ஒரு உடன்படிக்கைச் செய்துகொண்டார். இது இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்த பிறகு நடந்தது.
11 அங்கிருந்த ஆசாரியர்கள் எல்லாம் தங்களை பரிசுத்தமாக்கிக்கொள்ள சடங்குகளைச் செய்தார்கள். அவர்கள் அனைவரும் பரிசுத்த இடத்தை விட்டு வெளியே வந்ததும் தங்களுடைய விசேஷ குழுக்களின்படியில்லாமல் ஒன்றாக சேர்ந்து நின்றார்கள். 12 லேவியப் பாடகர்கள் அனைவரும் பலிபீடத்தின் கிழக்குப்பகுதியில் நின்றுகொண்டனர். ஆசாப், எமான் மற்றும் எதுத்தூனிய பாடல் குழுவினர் அனைவரும் தமது மகன்களுடனும் உறவினர்களுடனும் அங்கு இருந்தார்கள். அவர்கள் வெண்ணிற மென்மையான ஆடையை அணிந்திருந்தனர். அவர்களிடம் கைத்தாளங்களும் சுரமண்டலங்களும் தம்புருக்களும் இருந்தன. லேவியப் பாடகர்களோடு 120 ஆசாரியர்களும் இருந்தனர். இந்த 120 ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதினார்கள். 13 எக்காளங்களை ஊதியவர்களும் பாடல்களைப் பாடியவர்களும் ஒரே ஆளைப்போல இருந்தார்கள். அவர்கள் கர்த்தரைப் புகழ்ந்தும் கர்த்தருக்கு நன்றி சொல்லியும் ஒரே குரலில் ஒருமித்துப் பாடினார்கள். வாத்தியக்கருவிகளையும், இசைக்கருவிகளையும், தாளக் கருவிகளையும் ஒன்றாக மீட்டி பெருத்த ஓசையை அவர்கள் எழுப்பினார்கள். அவர்கள் பாடிய பாட்டு இதுதான்:
"கர்த்தரைத் துதியுங்கள் ஏனென்றால் கர்த்தர் நல்லவர்.
கர்த்தருடைய கருணை என்றென்றும் நிலைத்திருக்கிறது."
பிறகு கர்த்தருடைய ஆலயமானது மேகங்களால் மூடப்பட்டது. 14 மேகத்தின் இடையூறால் ஆசாரியர்களால் தொடர்ந்து பணிச்செய்ய முடியவில்லை. கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.
2008 by World Bible Translation Center