Beginning
கர்த்தருடைய துதிகளைப் பாடும் தாவீதின் பாட்டு
22 கர்த்தர் தாவீதை சவுல் மற்றும்
பகைவர்களிடமிருந்து பாதுகாத்த போது, தாவீது கர்த்தரைப் புகழ்ந்து பாடிய பாட்டு.
2 கர்த்தர் என் கன்மலை என் கோட்டை என் பாதுகாப்பிடம்.
3 அவர் எனது தேவன்.
நான் பாதுகாப்பைத் தேடி ஓடும் கன்மலை.
தேவன் எனது கேடயம்.
அவரது ஆற்றல் என்னைக் காக்கிறது.
மலைகளின் உச்சியில் நான் மறைந்துக் கொள்ள ஏதுவான என் பாதுகாப்பிடம் கர்த்தர் ஆவார்.
கொடிய பகைவரிடமிருந்து
அவர் என்னைக் காக்கிறார்.
4 அவர்கள் என்னைக் கேலிச் செய்தனர்.
ஆனால் நான் கர்த்தரை உதவிக்கு அழைத்தேன்.
என் பகைவரிடமிருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்!
5 என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தனர்!
மரணத்தின் அலைகள் என்னைச் சூழ்ந்தன.
மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
6 மயானக் கயிறுகள் என்னைச் சுற்றிக் கட்டின.
மரணத்தின் கண்ணி எனக்கு முன் இருந்தது.
7 மாட்டிக்கொண்ட நான் கர்த்தரிடம் உதவிக் கேட்டேன்.
ஆம், எனது தேவனை அழைத்தேன்.
தேவன் தமது ஆலயத்தில் இருந்து என் குரலைக் கேட்டார்.
அவர் என் அழுகையைக் கேட்டார்.
8 பின்பு பூமி அசைந்து நடுங்கியது, பரலோகத்தின் அடித்தளம் ஆடியது.
ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார்.
9 தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்தது.
எரியும் தழல் அவரின் வாயிலிருந்து வந்தது.
எரியும் பொறிகள் அவரிடமிருந்து பறந்தன.
10 கர்த்தர் ஆகாயத்தைக் கீறி கீழிறங்கி வந்தார்!
அவர் கட்டியான கறுப்பு மேகத்தில் நின்றார்!
11 அவர் பறந்துக்கொண்டிருந்தார், கேருபீன்கள் மீது பறந்து வந்தார்.
காற்றின் மீது பயணம் வந்தார்.
12 கர்த்தர் கருமேகத்தைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரம்போல் அணிந்தார்.
அவர் கட்டியான இடி மேகங்களில் தண்ணீரைச் சேகரித்தார்.
13 அவரது ஒளி நிலக்கரியைக் கூட எரிய வைக்கும் பிரகாசத்தைக் கொண்டது!
14 வானிலிருந்து இடியைப்போல கர்த்தர் முழங்கினார்!
உன்னதமான தேவன் தனது குரலை எல்லோரும் கேட்கும்படி செய்தார்.
15 கர்த்தர் தனது அம்புகளை எய்து
பகைவர்களைப் பயந்தோடச் செய்தார்.
கர்த்தர் மின்னலை அனுப்பினார்
ஜனங்கள் குழம்பிச் சிதறியோடினார்கள்.
16 கர்த்தாவே நீர் பலமாகப் பேசினீர்.
பலமுள்ள காற்று உங்கள் வாயிலிருந்து அடித்தது.
தண்ணீர் விலகிற்று.
எங்களால் கடலின் அடிப்பாகத்தைப் பார்க்கமுடிந்தது.
பூமியின் அடித்தளத்தையும் எங்களால் பார்க்க முடிந்தது.
17 கர்த்தர் எனக்கும் உதவினார்!
கர்த்தர் மேலிருந்து கீழே வந்தார். கர்த்தர் என்னை துன்பத்திலிருந்துக் காப்பாற்றினார்.
18 என் பகைவர்கள் என்னைவிட பலமானவர்கள்.
அவர்கள் என்னை வெறுத்தார்கள்.
என் பகைவர்கள் என்னை வெல்லக் கூடியவர்கள்!
எனவே தேவன் தாமே என்னை பாதுகாத்தார்.
19 நான் தொல்லையில் இருந்தேன்.
என் பகைவர்கள் என்னை தாக்கினார்கள். ஆனால் எனக்கு உதவிச்செய்ய கர்த்தர் இருந்தார்!
20 கர்த்தர் என்மேல் பிரியமாயிருக்கிறார்.
எனவே என்னைக் காத்தார்.
பாதுகாப்பான இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
21 கர்த்தர் எனக்கான வெகுமதியை எனக்குத் தருவார்.
ஏனெனில் நான் சரியானவற்றையே செய்தேன்.
நான் தவறிழைக்கவில்லை.
எனவே அவர் எனக்கு நல்லதைச் செய்வார்.
22 ஏனென்றால் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்!
எனது தேவனுக்கு எதிரான பாவத்தைச் செய்யவில்லை.
23 நான் கர்த்தருடைய தீர்மானங்களை நினைவில் வைத்திருந்தேன்,
அவரது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்!
24 நான் பரிசுத்தமானவனாகவும் களங்கமற்றவனாகவும் அவர் முன்னிலையில் இருந்தேன்.
25 எனவே கர்த்தர் எனக்கு வெகுமதியைத் தருவார்!
ஏனெனில் சரியானதையே நான் செய்தேன்!
அவர் எதிர்பார்ப்பதையே நான் செய்கிறேன்.
நான் தவறு செய்யவில்லை.
எனவே அவர் எனக்கு நலமானதைச் செய்வார்.
26 ஒருவன் உண்மையிலேயே உம்மை விரும்பினால் அவனுக்கு உண்மையான அன்பை நீர் காட்டுவீர்.
ஒருவன் உம்மிடம் உண்மையாக இருந்தால் நீர் அவனிடம் உண்மையாக இருப்பீர்.
27 கர்த்தாவே, யார் நல்லவராகவும் பரிசுத்தமானவராகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீர் நல்லவராகவும், பரிசுத்தமானவராகவும் இருக்கிறீர்.
உம்மிடம் மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் நடந்துகொள்வீர்.
28 கர்த்தாவே, சிறுமைப்பட்ட ஜனங்களுக்கு உதவுகிறீர்.
மேட்டிமையானவர்களை நாணமுற வைக்கிறீர்.
29 கர்த்தாவே, நீர் என்னுடைய விளக்கு.
கர்த்தர் என்னைச் சுற்றியுள்ள இருளைப் போக்கி ஒளி தருகிறார்!
30 கர்த்தாவே, உம்முடைய உதவியால் நான் வீரர்களுடன் பாயமுடியும்.
தேவனுடைய உதவியால் பகைவர்களின் சுவர்களில் என்னால் ஏறமுடியும்.
31 தேவனுடைய ஆற்றல் முழுமையானது.
கர்த்தருடைய சொல் சோதித்துப்பார்க்கப்பட்டது.
அவரை நம்புகிறவர்களை அவர் பாதுகாக்கிறார்.
32 கர்த்தரைத் தவிர வேறு தேவன் கிடையாது.
நமது தேவனைத் தவிர வேறு கன்மலை இல்லை.
33 தேவன் என் அரண்.
அவர் தூயவர்களைச் சரியாக வாழவைக்கிறார்.
34 தேவன் நான் ஒரு மானைப்போல வேகமாக ஓடும்படி செய்கிறார்!
உயரமான இடங்களில் நான் நிலையாக நிற்கும்படி செய்கிறார்.
35 தேவன் என்னைப் போருக்குப் பயிற்சி தருகிறார்.
அதனால் என் கைகள் சக்தி வாய்ந்த அம்புகளைச் செலுத்த முடியும்.
36 தேவனே, நீர் என்னைப் பாதுகாத்தீர்.
எனக்கு வெற்றி அளித்தீர்.
என் பகைவரை நான் வெல்ல உதவினீர்.
37 என் கால்களையும் மூட்டுகளையும் பலப்படுத்தினீர்.
எனவே நான் தடுமாறாமல் வேகமாக நடக்க முடியும்.
38 நான் பகைவர்களை விரட்ட வேண்டும்.
அவர்களை இறுதியில் அழிக்கும்வரை!
அவர்களை முற்றிலும் அழிக்கும்வரை நான் திரும்பி வரமாட்டேன்.
39 என் பகைவர்களைத் தோற்கடித்தேன்.
அவர்களை வென்றேன்!
அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.
ஆம், என் பகைவர்கள் என் பாதத்தில் விழுந்தார்கள்.
40 தேவனே நீர் என்னை போரில் வலிமையுடையவன் ஆக்கினீர்.
என் பகைவர்கள் என் முன்னே வந்து விழும்படி செய்தீர்.
41 என் பகைவர்களைத் தலைக்குனிய வைப்பதில் நீர் உதவினீர்,
என் பகைவர்களின் கழுத்தை வெட்டும்படியாக அவர்கள் கழுத்தை என் முன் ஒப்புவித்தீர்!
42 என் பகைவர்கள் உதவிக்கு ஆள் தேடினார்கள்.
ஆனால் யாரும் அவர்கள் உதவிக்கு வரவில்லை.
அவர்கள் கர்த்தரிடம் கூட கேட்டார்கள்.
ஆனால் அவர் அவர்களுக்குப் பதில் அளிக்கவில்லை.
43 என் பகைவர்களைத் துண்டு துண்டாக்கினேன்.
அவர்கள் நிலத்தின் மீது புழுதியானார்கள்.
என் பகைவர்களை நான் சிதறடித்தேன்.
அவர்கள் மீது தெருப்புழுதியென நினைத்து நடந்தேன்.
44 நீர் எனக்கு எதிராக போரிட்டவரிடமிருந்து என்னைக் காத்தீர்.
நீர் அந்தத் தேசங்களை ஆள்பவனாக என்னை ஆக்கினீர்.
எனக்குத் தெரியாதவர்கள் இப்போது எனக்குப் பணி செய்கிறார்கள்!
45 பிற தேசத்தவர் எனக்கு கீழ்ப்படிகின்றார்கள்!
என்னுடைய கட்டளையைக் கேட்கும்போது விரைந்து பணிவிடை செய்கிறார்கள், அயல் நாட்டவர்கள் எனக்குப் பயப்படுகிறார்கள்!
46 அந்த அயல்நாட்டினர் பயத்தால் நடுங்குகிறார்கள்.
பயந்துகொண்டே அவர்களின் மறைவிடங்களிலிருந்து வெளியில் வருகிறார்கள்.
47 கர்த்தர் உயிரோடிருக்கிறார்.
எனது கன்மலையான அவரைத் துதிப்பேன்!
தேவன் உயர்ந்தவர்!
என்னைப் பாதுகாக்கும் ஒரு கன்மலை அவர்.
48 என் பகைவர்களை எனக்காகத் தண்டிக்கும் தேவன் அவர்.
ஜனங்களை என் ஆட்சியின் கீழ் அவர் வைக்கிறார்.
49 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காத்தீர்!
என்னை எதிர்த்தவர்களைத் தோற்றோடச் செய்தீர்.
கொடியவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தீர்!
50 கர்த்தாவே, ஆகையால் எல்லா தேசங்களும் அறியும்படி நாம் உம்மைத் துதிப்பேன்.
எனவே உமது பேரில் நான் பாடல்கள் பாடுகிறேன்.
51 கர்த்தர், தன் அரசன் போரில் வெல்லும்படி செய்கிறார்!
கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு உண்மையான அன்பைக் காட்டுகிறார்.
அவர் தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் எப்போதும் உண்மையாக இருப்பார்!
தாவீதின் கடைசி வார்த்தைகள்
23 இவையே தாவீதின் கடைசி வார்த்தைகள்:
“இச்செய்தி ஈசாயின் மகன் தாவீதினுடையது.
தேவனால் உயர்த்தப்பட்ட மனிதனுடையது.
யாக்கோபின் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன்,
இஸ்ரவேலின் இனியப் பாடகன்.
2 கர்த்தருடைய ஆவி என் மூலமாகப் பேசினார்.
என் நாவில் அவரது வார்த்தைகள் இருந்தன.
3 இஸ்ரவேலின் தேவன் பேசினார்.
இஸ்ரவேலின் கன்மலையானவர் என்னிடம்,
‘நேர்மையாய் ஆளும் மனிதன்,
தேவனை மதித்து ஆளும் மனிதன்,
4 உதயகால ஒளியைப் போன்றிருப்பான்:
மேகங்கள் அற்ற அதிகாலையைப்போல இருப்பான்.
மழையைத் தொடர்ந்து தோன்றும் வெளிச்சத்தைப் போன்றிருப்பான்.
அம்மழை நிலத்திலிருந்து பசும்புல்லை எழச்செய்யும்’ என்று சொன்னார்.
5 “கர்த்தர் என் குடும்பத்தை பலமுள்ளதாகவும் பாதுகாப்புள்ளதாகவும் மாற்றினார்.
தேவன் என்னோடு ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்தார்!
எல்லா வழிகளிலும் இந்த உடன்படிக்கை
நல்லதே என்று தேவன் உறுதி செய்தார்.
உறுதியாக அவர் எனக்கு எல்லா வெற்றியையும் தருவார்.
எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் அவர் தருவார்.
6 “ஆனால் தீயோர் முட்களைப் போன்றவர்கள்.
ஜனங்கள் முட்களை வைத்திருப்பதில்லை.
அவர்கள் அவற்றை வீசிவிடுவார்கள்.
7 ஒருவன் அவற்றைத் தொட்டால்
அவை மரத்தாலும் வெண்கலத்தாலுமான ஈட்டியால் குத்துவது போலிருக்கும்.
ஆம், அம்மக்கள் முட்களைப் போன்றவர்கள்.
அவர்கள் தீயில் வீசப்படுவார்கள்.
அவர்கள் முற்றிலும் எரிக்கப்படுவார்கள்!”
மூன்று புகழ்வாய்ந்த வீரர்கள்
8 இவை தாவீதின் பலம்பொருந்திய வீரர்களின் பெயர்கள்:
தேர்ப்படை அதிகாரிகளின் தலைவன் தக்கெமோனியின் மகனாகிய யோசேப்பாசெபெத். அவன் அதீனோஏஸ்னி எனவும் அழைக்கப்பட்டான். யோசேப்பாசெபெத் 800 பேரை ஒரே நேரத்தில் கொன்றவன்.
9 இவனுக்குப் பின் அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார் குறிப்பிடத்தக்கவன். பெலிஸ்தரை எதிர்த்தபோது தாவீதோடிருந்த மூன்று பெரும் வீரர்களில் எலெயாசாரும் ஒருவன். அவர்கள் போருக்கு ஓரிடத்தில் குழுமியிருந்தனர். ஆனால் இஸ்ரவேல் வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். 10 மிகவும் சோர்ந்துபோகும்வரைக்கும் எலெயாசார் பெலிஸ்தரோடு போரிட்டான். ஆனால் அவன் வாளை இறுகப் பிடித்துக்கொண்டு போர் செய்வதைத் தொடர்ந்தான். கர்த்தர் அன்று இஸ்ரவேலருக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார். எலெயாசார் போரில் வென்ற பிறகு பிற வீரர்கள் திரும்பி வந்தனர். மரித்த பகைவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட அவர்கள் வந்தனர்.
11 இவனுக்குப் பிறகு சொல்லத்தக்கவன் ஆராரிலுள்ள ஆகேயின் மகன் சம்மா. பெலிஸ்தர் போரிட ஒன்றாகத் திரண்டு வந்தனர். சிறு பயிறு நிரம்பிய களத்தில் அவர்கள் போர் செய்தனர். பெலிஸ்தரிடமிருந்து வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். 12 ஆனால் சம்மா போர்களத்தின் நடுவில் நின்று தாங்கிக்கொண்டான். அவன் பெலிஸ்தரை வென்றான். அன்று கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார்.
மூன்று பெரும் வீரர்கள்
13 ஒரு முறை, தாவீது அதுல்லாம் குகையில் இருந்தான். பெலிஸ்தரின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இருந்தது. முப்பது பெரும் வீரர்களில் [a] மூன்று பேர் நிலத்தில் தவழ்ந்தவாறே சென்று தாவீது இருக்குமிடத்தை அடைந்தனர்.
14 மற்றொரு முறை தாவீது அரணுக்குள் பாதுகாப்பான இடத்தில் இருந்தான். பெலிஸ்திய வீரர்களின் ஒரு கூட்டத்தினர் பெத்லேகேமில் இருந்தனர். 15 தாவீது தனது சொந்த ஊரின் தண்ணீரைப் பருகும் தாகங்கொண்டிருந்தான். தாவீது, “பெத்லகேமின் நகர வாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து யாரேனும் எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தருவார்களா என்று விரும்புகிறேன்!” என்றான். தாவீதுக்கு உண்மையில் அது தேவைப்படவில்லை. வெறுமனே அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.
16 ஆனால் அந்த மூன்று பெரும் வீரர்களும் பெலிஸ்தரின் படைக்குள் புகுந்து சென்றனர். பெத்லகேமின் நகரவாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து வந்தனர். அம்முப்பெரும் வீரர்களும் அந்த தண்ணீரை தாவீதிடம் கொண்டு வந்தனர். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். கர்த்தருக்குக் காணிக்கையாக அதை நிலத்தில் ஊற்றிவிட்டான். 17 தாவீது, “கர்த்தாவே, நான் இந்த தண்ணீரைப் பருகமுடியாது. எனக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற மனிதரின் இரத்தத்தைக் குடிப்பதற்கு அது சமமாகும்” என்றான். இதனாலேயே தாவீது தண்ணீரைப் பருகவில்லை. இதைப்போன்ற பல துணிவான காரியங்களை முப்பெரும் வீரர்களும் செய்தார்கள்.
மற்ற தைரியமான வீரர்கள்
18 அபிசாயி யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனும் ஆவான். முப்பெரும் வீரர்களின் தலைவன், 300 வீரர்களைத் தனது ஈட்டியால் கொன்றவன் இந்த அபிசாயி. 19 இவன் முப்பெரும் வீரர்களைப் போன்ற புகழ் பெற்றவன். அவன் அவர்களில் ஒருவனாக இல்லாதிருந்தும், அவர்களுக்குத் தலைவனாக இருந்தான்.
20 பின்பு யோய்தாவின் மகன் பெனாயா இருந்தான். இவன் வலிமைக்கொண்ட ஒருவனின் மகன். அவன் கப்செயேல் ஊரான். பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். மோவாபிலுள்ள ஏரியேலின் இரண்டு மகன்களை பெனாயா கொன்றான். ஒரு நாள் பனிபெய்துக்கொண்டிருக்கையில் பெனாயா நிலத்திலிருந்த ஒரு குழியில் இறங்கிச் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான். 21 பெனாயா ஒரு மிகப் பெரிய எகிப்திய வீரனையும் கொன்றான். எகிப்தியனின் கையில் ஒரு ஈட்டி இருந்தது. பெனாயா கையில் ஒரு தடி மட்டுமே இருந்தது. ஆனால் பெனாயா எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து எடுத்தான். எகிப்தியனின் ஈட்டியாலேயே பெனாயா அவனைக் கொன்றான். 22 யோய்தாவின் மகன் பெனாயா அத்தகைய பல துணிவான செயல்களைச் செய்தான். முப்பெரும் வீரர்களைப் போன்று பெனாயா புகழ் பெற்றவன். 23 பெனாயா முப்பெரும் வீரர்களைக் காட்டிலும் மிகவும் புகழ் பெற்றவன். ஆனால் அவன் முப்பெரும் வீரர்களின் குழுவைச் சார்ந்தவன் அல்லன். தாவீது தனது மெய்க்காப்பாளர்களின் தலைவனாக பெனாயாவை நியமித்தான்.
முப்பது வீரர்கள்
24 முப்பது வீரர்களின் பெயர்ப் பட்டியல்:
யோவாபின் சகோதரனாகிய ஆசகேல்;
பெத்லகேமின் தோதோவின் மகன் எல்க்கானான்;
25 ஆரோதியனாகிய சம்மா;
ஆரோதியனாகிய எலிக்கா;
26 பல்தியனாகிய ஏலெஸ்;
தெக்கோவின் இக்கேசின் மகன் ஈரா;
27 ஆனதோத் தியனாகிய அபியேசர்;
ஊசாத்தியனாகிய மெபுன்னாயி;
28 அகோகியனாகிய சல்மோன்;
தெந்தோபாத் தியனாகிய மகராயி;
29 பானாவின் மகன் ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன்;
பென்யமீனியரின் கிபியா ஊரைச் சார்ந்தரிபாயின் மகன் இத்தாயி;
30 பிரத்தோனியனாகிய பெனாயா;
காகாஸ் நீரோடைகளின் நாட்டிலுள்ள ஈத்தாயி;
31 அர்பாத்தியன் ஆகிய அபி அல்பொன்;
பருமியன் ஆகிய அஸ்மாவேத்;
32 சால்போனியன் ஆகிய எலி யூபா; யாசேனின் மகனாகிய யோனத்தான்; 33 ஆராரியனாகிய சம்மா; ஆராரியனாகிய சாராரின் மகனாகிய அகியாம்;
34 மாகாத்தியன் ஆகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத்;
கீலோனியன் ஆகிய அகித்தோப்பேலின் மகன் எலியாம்;
35 கர்மேலியன் ஆகிய எஸ்ராயி;
அர்பியனாகிய பாராயி;
36 சோபாவில் உள்ள நாத்தானின் மகன் ஈகால்;
காதியனாகிய பானி;
37 அம்மோனியனாகிய சேலேக் பெரோத்தியனாகிய நகராய், (செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுதங்களை நகராய் சுமந்துச் சென்றான்)
38 இத்ரியனாகிய ஈரா;
இத்ரியனாகிய காரேப்;
39 ஏத்தியனாகிய உரியா.
மொத்தத்தில் அவர்கள் எண்ணிக்கை 37 பேர் ஆகும்.
தாவீது தன் படையை கணக்கெடுக்க முடிவெடுக்கிறான்
24 இஸ்ரவேல் மீது மீண்டும் கர்த்தர் கோபம் அடைந்தார். இஸ்ரவேலருக்கு எதிராகக் திரும்பும்படி கர்த்தர் தாவீதை மாற்றினார். தாவீது, “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுங்கள்” என்றான்.
2 தாவீது அரசன் படைத் தலைவனாகிய யோவாபை நோக்கி, “தாணிலிருந்து பெயெர்செபா வரைக்கும் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிடமும் நீ போய் ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடு. அப்போது நான் மொத்த ஜனங்கள் தொகையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள முடியும்” என்றான்.
3 ஆனால் யோவாப் அரசனிடம், “எத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் என்பது முக்கிய மன்று. உன் தேவனாகிய கர்த்தர், உங்களுக்கு நூறு மடங்கு ஆட்களைத் தருவார், உங்கள் கண்கள் அவ்வாறு நடப்பதைப் பார்க்கும்! ஆனால் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்?” என்று கேட்டான்.
4 தாவீது அரசன் உறுதியாக யோவாபுக்கும் படைத் தலைவர்களுக்கும் ஜனங்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார். எனவே யோவாபும் படைத் தலைவர்களும் இஸ்ரவேலின் ஜனங்கள் தொகையைக் கணக்கெடுக்க அரசனிடமிருந்து சென்றனர். 5 அவர்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். அவர்கள் ஆரோவேரில் முகாமிட்டுத் தங்கினார்கள். நகரின் வலது புறத்தில் அவர்கள் முகாம் இருந்தது.
(காத் பள்ளத்தாக்கின் நடுவில் நகரம் இருந்தது. யாசேருக்குப் போகும் வழியில் அந்த நகரம் இருந்தது.)
6 பின்பு அவர்கள் கீலேயாத்திற்கும் தாதீம் ஓத்சிக்கும் போனார்கள். அங்கேயிருந்து தாண்யானுக்கும் சீதோனைச் சூழ்ந்த பகுதிகளுக்கும் சென்றார்கள். 7 அவர்கள் தீரு என்னும் கோட்டைக்கு போனார்கள். அவர்கள் கானானியர் மற்றும் ஏவியரின் நகரங்களுக்கெல்லாம் சென்றார்கள். அவர்கள் யூதாவின் தெற்கிலுள்ள பெயெர்செபாவிற்குப் போனார்கள். 8 ஒன்பது மாதங்களும் 20 நாட்களும் கழிந்த பிறகு அவர்கள் தேசம் முழுவதும் சுற்றிவந்திருந்தார்கள். 9 மாதங்கள் 20 நாட்களுக்குப் பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தனர்.
9 யோவாப் அரசனுக்குரிய ஜனங்களின் பட்டியலைக் கொடுத்தான். இஸ்ரவேலில் 8,00,000 ஆண்கள் வாளைப் பயன்படுத்தக் கூடியவர்கள். யூதாவிலும் 5,00,000 ஆண்கள் இருந்தனர்.
கர்த்தர் தாவீதைத் தண்டிக்கிறார்
10 ஜனங்கள் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது வெட்கமடைந்தான். தாவீது கர்த்தரை நோக்கி, “நான் செய்த இக்காரியத்தில் பெரும் பாவம் செய்தேன்! கர்த்தாவே! என் பாவத்தை மன்னிக்கும்படி நான் கெஞ்சுகிறேன். நான் மிகவும் மூடனாகிவிட்டேன்” என்றான்.
11 காலையில் தாவீது எழுந்தபோது, கர்த்தருடைய வார்த்தை தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்திற்கு வந்தது. 12 கர்த்தர் காத்தை நோக்கி, “போய் தாவீதிடம் கூறு, ‘இதுவே கர்த்தர் கூறுவது: நான் மூன்று காரியங்களை முன் வைக்கிறேன். நான் உனக்குச் செய்வதற்கு ஏதேனும் ஒன்றைத் தெரிந்துக்கொள் என்கிறார்’ என்று சொல்” என்றார்.
13 காத் தாவீதிடம், போய் அவ்வாறே கூறினான். அவன் தாவீதிடம், “இம்மூன்று காரியங்களிலும் ஒன்றைத் தெரிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கும் இத்தேசத்திற்கும் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரவேண்டுமா? மூன்று மாதங்கள் உங்கள் பகைவர்கள் உங்களைத் துரத்தவேண்டுமா? அல்லது மூன்று நாட்கள் உங்கள் தேசத்தாரை நோய் பாதிக்கட்டுமா? இதைக் குறித்து யோசித்துப் பாருங்கள், இவற்றில் எதை முடிவு செய்கிறீர்கள் என்பதை நான் என்னை அனுப்பிய கர்த்தருக்குக் கூற வேண்டும்” என்றான்.
14 தாவீது காத்தை நோக்கி “உண்மையிலேயே நான் துன்பத்துக்குள்ளானேன்! ஆனால் கர்த்தர் இரக்கமுள்ளவர். எனவே கர்த்தர் நம்மைத் தண்டிக்கட்டும். ஜனங்களிடமிருந்து எனக்குத் தண்டனை கிடைக்க வேண்டாம்” என்றான்.
15 எனவே கர்த்தர் இஸ்ரவேலில் நோயை அனுப்பினார். அது, காலையில் ஆரம்பித்துக் குறிப்பிட்ட காலம் மட்டும் நீடித்தது. தாணிலிருந்து பெயெர் செபாவரைக்கும் 70,000 பேர் மடிந்தனர். 16 தேவ தூதன் எருசலேமை அழிக்கும்படி அதற்கு நேராக தன் கரங்களை உயர்த்தினான். ஆனால் நடந்த தீய காரியங்களுக்காக கர்த்தர் மனம் வருந்தினார். ஜனங்களை அழித்த தூதனை கர்த்தர் நோக்கி, “போதும்! உனது கரங்களைத் தாழ்த்து” என்றார். எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு அருகே கர்த்தருடைய தூதன் நின்றுக்கொண்டிருந்தான்.
அர்வனாவின் போரடிக்கிற களத்தைத் தாவீது வாங்குகிறான்
17 ஜனங்களைக் கொன்ற தூதனை தாவீது பார்த்தான். தாவீது கர்த்தரிடம் பேசினான். தாவீது, “நான் பாவம் செய்தேன்! நான் தவறிழைத்தேன். இந்த ஜனங்கள் ஆடுகளைப் போன்று என்னைப் பின் பற்றினார்கள். அவர்கள் தவறேதும் செய்யவில்லை. என்னையும் எனது தந்தையின் குடும்பத்தையும் நீங்கள் தண்டியுங்கள்” என்றான்.
18 அன்றைய தினம் காத் தாவீதிடம் வந்தான். காத் தாவீதைப் பர்ர்த்து, “எபூசியனாகிய அர்வனாவின் களத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பு” என்றான். 19 காத் கூறியபடியே தாவீது செய்தான். கர்த்தர் விரும்பியபடியே தாவீது செய்தான். அர்வனாவைப் பார்க்க தாவீது சென்றான். 20 அரசனான தாவீதும் அவனது அதிகாரிகளும் தன்னிடம் வருவதை அர்வனா பார்த்தார். அர்வனா நிலத்தில் தலைதாழ்த்தி வணங்கினார். 21 பின் அர்வனா, “எனது ஆண்டவனும் அரசருமாகிய நீங்கள் ஏன் என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டான்.
தாவீது அவனுக்கு, “உன்னிடமிருந்து போரடிக்கிற களத்தை வாங்குவதற்கு வந்தேன். அதில் கர்த்தருக்குப் பலிபீடம் அமைக்கமுடியும். அப்படி செய்து நோய் பரவாமல் தடுக்க முடியும்” என்றான்.
22 அர்வனா, தாவீதிடம், “எனது அரசனாகிய ஆண்டவன் தாங்கள் பலிகொடுக்க எதையும் என்னிடமிருந்து எடுக்கலாம். இந்தப் பசுக்களைத் தகனபலிக்காகவும், போரடிக்கிற உருளைகளையும், நுகத்தடிகளையும் விறகுக்காகவும் பயன்படுத்துங்கள். 23 அரசனே! நான் எல்லாவற்றையும் உங்களுக்கு தருவேன்!” என்றான் அர்வனா மீண்டும் அரசனுக்கு, “உங்கள் தேவனாகிய கர்த்தர் இதைக் கண்டு மகிழட்டும்” என்றான்.
24 ஆனால் அரசன் அர்வனாவுக்கு, “நான் உனக்கு உண்மையைச் சொல்வேன், உன் நிலத்தை ஒரு விலை கொடுத்துப் பெறுவேன். ஆனால் எனது தேவனாகிய கர்த்தருக்கு இலவசமாக கிடைத்த எந்த தகன பலியையும் செலுத்தமாட்டேன்” எனக் கூறினான்.
ஆகையால் தாவீது போரடிக்கிற களத்தையும் பசுக்களையும் 50 சேக்கல் வெள்ளிக்கு வாங்கினான். 25 பின்பு தாவீது ஒரு பலிபீடத்தை கர்த்தருக்காக கட்டினான். தாவீது அதில் தகனபலியையும் சமாதானபலியையும் அளித்தான். தேசத்திற்காகச் செய்யப்பட்ட தாவீதின் ஜெபத்திற்கு கர்த்தர் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலிலிருந்த நோய்களைப் பரவாமல் தடுத்தார்.
2008 by World Bible Translation Center