Beginning
சவுல் அமலேக்கியரை அழித்துப்போடுகிறான்
15 ஒரு நாள் சாமுவேல் சவுலிடம், “உன்னை அபிஷேகித்து அவருடைய ஜனங்கள் இஸ்ரவேலருக்கு அரசனாக்கும்படி கர்த்தர் என்னை அனுப்பினார். இப்போது கர்த்தருடைய செய்தியைக் கேள். 2 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வரும்போது கானானுக்குப் போகாமல் அமலேக்கியர்கள் தடுத்தனர். அவர்கள் செய்தவற்றை நான் பார்த்தேன். 3 இப்போது அவர்களோடு போரிடு, அவர்களையும் அவர்கள் உடமையையும் முழுவதுமாக அழி, எதையும் உயிரோடு விடாதே. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள், பசுக்கள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் எதையும் விடாதே என்கிறார்’” என்றான்.
4 சவுல் தன் படையை தெலாயிமில் கூட்டினான். 2,00,000 காலாட்படையும் யூதாவிலுள்ள 10,000 சேனையாட்களும் இருந்தனர். 5 பிறகு சவுல் அமலேக்கு நகருக்குப் போய் பள்ளத்தாக்கில் காத்திருந்தான். 6 அங்கு கேனியரிடம், “அமலேக்கியரை விட்டுப் போங்கள், நான் உங்களை அழிக்கமாட்டேன். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறும்போது நீங்கள் கருணை காட்டினீர்கள்” என்றான். எனவே கேனியர் அமலேக்கியரை விட்டு வெளியேறினார்கள்.
7 சவுல் அமலேக்கியரைத் தோற்கடித்தான். அவர்களை, ஆவிலாவில் இருந்து சூர் வரை துரத்தியடித்தான். 8 ஆகாக் அமலேக்கியரின் அரசன். சவுல், அவனை உயிருடன் பிடித்தான். மற்றவர்களைக் கொன்றான். 9 எல்லாவற்றையும் அழிக்க சவுலும் வீரர்களும் தயங்கினார்கள். ஆகாக் என்பவனை உயிருடன்விட்டனர். மேலும் கொழுத்த பசுக்களையும் நல்ல ஆடுகளையும் சிறந்த பொருட்களையும் கூட அழிக்காமல் விட்டுவிட்டனர். பயனுள்ள எல்லாவற்றையும் வைத்துக் கொண்டனர். அவற்றை அழிக்க அவர்கள் விரும்பவில்லை, பயனற்றவற்றையே அவர்கள் அழித்தார்கள்.
சவுலின் பாவத்தைப்பற்றி சாமுவேல் சொன்னது
10 பிறகு சாமுவேல், கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். 11 அதற்கு கர்த்தர், “சவுல் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டான், அவனை அரசனாக்கியதற்காக வருந்துகிறேன். நான் சொல்வதை அவன் செய்வதில்லை” என்றார். சாமுவேலும் கோபங்கொண்டு இரவு முழுவதும் அழுது கர்த்தரை நினைத்து ஜெபம் செய்தான்.
12 சாமுவேல் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து சவுலை சந்திக்க சென்றான். ஆனால் ஜனங்கள் அவனிடம், “கர்மேல் என்ற பேருள்ள யூதேயாவின் நகருக்கு சவுல் போயிருக்கிறான். அங்கே தன்னை பெருமைப்படுத்தும் நினைவு கல்லை எழுப்புகிறான். அவன் பல இடங்களை சுற்றிவிட்டு கில்காலுக்கு வருவான்” என்றனர்.
எனவே சாமுவேல் அவனிருக்கும் இடத்துக்கே சென்று சவுலைத் தேடிப் பிடித்தான். சவுல் அப்போதுதான் கர்த்தருக்கு அமலேக்கியரிடம் இருந்து எடுத்த முதல் பாகங்களை தகனபலி செலுத்திக்கொண்டிருந்தான். 13 சவுல் சாமுவேலை வரவேற்றான், “கர்த்தர் உம்மை ஆசீர்வதிக்கிறார்! கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்றினேன்” என்றான்.
14 ஆனால் சாமுவேலோ, “அப்படியானால் நான் கேட்ட சத்தம் எத்தகையது? ஆடுகளின் சத்தத்தையும், மாடுகளின் சத்தத்தையும் நான் எதற்காகக் கேட்டேன்?” என்று கேட்டான்.
15 அதற்கு சவுல், “இவை அமலேக்கியரிடமிருந்து வீரர்கள் எடுத்தவை. உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும் பொருட்டு சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் பிடித்து வந்தனர். மற்றபடி நாங்கள் அனைத்தையும் அழித்துவிட்டோம்” என்றான்.
16 சாமுவேலோ, “நிறுத்து! நேற்று இரவு கர்த்தர் சொன்னதை நான் சொல்லட்டுமா” என சவுலிடம் கேட்டான்.
சவுல், “நல்லது சொல்லுங்கள்” என்றான்.
17 சாமுவேல், “முக்கியமானவன் இல்லை என்று கடந்த காலத்தில் நீ உன்னை நினைத்திருந்தாய். பின்பு இஸ்ரவேல் ஜனங்களின் தலைவன் ஆனாய். கர்த்தர் உன்னை அரசனாக்கினார். 18 கர்த்தருக்கு உன்னை சிறப்பான கடமை நிறைவேற்ற அனுப்பினார். கர்த்தர் சொன்னார், ‘போய் அமலேக்கியரை முழுமையாக அழி! அவர்கள் தீயவர்கள். எல்லோரும் கொல்லப்படும்வரை போரிடு!’ என்றார். 19 ஆனால் நீ கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை! ஏன்? தீயவை என்று கர்த்தர் எதை ஒதுக்கினாரோ அவற்றை சேகரித்துக்கொள்ள நீ விரும்பிவிட்டாய்!” என்றான்.
20 சவுலோ, “கர்த்தருக்கு நான் கீழ்ப்படிந்தேன். அவர் சொன்ன இடத்திற்குப் போனேன். அமலேக்கியரை எல்லாம் அழித்தேன்! அவர்களின் அரசன் ஆகாக்கை மட்டுமே கொண்டுவந்தேன். 21 வீரர்கள் நல்ல ஆட்டையும், மாட்டையும் கொண்டு வந்தனர். அவை கில்காலில் உள்ள உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிட காத்திருக்கின்றன!” என்றான்.
22 ஆனால் சாமுவேல், “கர்த்தருக்குப் பிடித்தமானது எது? தகனபலியா? அன்பளிப்பா? அல்லது கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதா? கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுதான் அனைத்திலும் சிறந்தது. 23 கீழ்ப்படிய மறுப்பது தவறு, அது பில்லிசூனியத்திற்கு இணையான பெரும் பாவம். நீ கீழ்ப்படிய மறுப்பது பிடிவாதமாக பிற விக்கிரகங்களை தொழுதுகொள்வதற்கு சமம் ஆகும். நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தாய். அதனால் கர்த்தர் உன்னை அரசனாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான்.
24 அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். நான் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. நீர் சொன்னதையும் செய்யவில்லை. ஜனங்களுக்கு பயந்தேன். அவர்கள் சொன்னபடி செய்தேன். 25 இப்போது கெஞ்சுகிறேன். என் பாவத்தை மன்னியுங்கள். என்னுடன் மீண்டும் வாருங்கள் எனவே கர்த்தரை நான் தொழுதுக்கொள்வேன்” என்றான்.
26 ஆனால் சாமுவேலோ, “நான் உன்னோடு வரமாட்டேன். நீ கர்த்தருடைய கட்டளையை ஒதுக்கிவிட்டாய். இப்போது கர்த்தர் உன்னை அரசனாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான்.
27 சாமுவேல் திரும்பியபோது சவுல் அவரது சால்வை நுனியைப் பிடித்தான். அது கிழிந்தது. 28 சாமுவேலோ, “என் சால்வையைக் கிழித்துவிட்டாய். இதுபோல் இன்று கர்த்தர் உன்னிடமிருந்து இஸ்ரவேலின் இராஜ்யத்தைக் கிழிப்பார். உன் நண்பன் ஒருவனுக்கு கர்த்தர் அரசைக் கொடுப்பார். அவன் உன்னைவிட நல்லவனாக இருப்பான். 29 கர்த்தரே இஸ்ரவேலரின் தேவன். கர்த்தர் என்றென்றும் ஜீவிப்பவர். கர்த்தர் பொய் சொல்லவோ மனதை மாற்றவோமாட்டார். அவர் மனிதனைப் போன்று மனதை மாற்றுபவர் அல்ல” என்றான்.
30 சவுலோ, “சரி நான் பாவம் செய்தேன்! எனினும் என்னுடன் திரும்பி வாருங்கள். இஸ்ரவேலின் தலைவர்கள் மற்றும் ஜனங்களின் முன்னால் எனக்கு மரியாதைக் காட்டுங்கள். என்னுடன் திரும்பி வாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நான் தொழுதுகொள்வேன்” என்றான். 31 சாமுவேல் சவுலோடு திரும்பிப் போனான். சவுல் கர்த்தரை தொழுதுகொண்டான். 32 “அமலேக்கியரின் அரசனான ஆகாகை என்னிடம் கொண்டு வா” என்றான் சாமுவேல்.
ஆகாக் சாமுவேலிடம் வந்தான். அவன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான். “நிச்சயம் நம்மை இவர் கொல்லமாட்டார்” என்று ஆகாக் எண்ணினான்.
33 ஆனால் சாமுவேலோ, “உனது வாள் குழந்தைகளை தாயிடமிருந்து எடுத்துக் கொண்டது. எனவே இப்போது உன் தாய் பிள்ளையற்றவள் ஆவாள்” எனக் கூறி அவன் ஆகாகை கில்காலில் கர்த்தருக்கு முன்பாக துண்டுகளாக வெட்டிப்போட்டான்.
34 பிறகு சாமுவேல் ராமாவிற்குத் திரும்பிப் போனான். சவுல் கிபியாவிலுள்ள தன் வீட்டிற்குப் போனான். 35 இதற்குப் பின் சாமுவேல் தன் வாழ்நாளில் சவுலைப் பார்க்கவில்லை. சவுலுக்காக வருத்தப்பட்டான். சவுலை அரசனாக்கியதற்கு கர்த்தரும் வருத்தப்பட்டார்.
சாமுவேல் பெத்லேகேம் போகிறான்
16 கர்த்தர் சாமுவேலிடம், “நீ எவ்வளவு காலம் சவுலுக்காக வருந்துவாய்? நான் அரச பதவியிலிருந்து புறக்கணித்த பின்னும் வருந்துகிறாயே. உனது கொம்பை எண்ணெயால் நிரப்பு. பெத்லேகேமிற்குச் செல். உன்னை ஈசாயினிடம் அனுப்புகிறேன். அவன் அங்கே இருக்கிறான். அவனது மகன்களில் ஒருவனையே புதிய அரசனாக நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்” என்றார்.
2 சாமுவேலோ, “நான் போனால், அதனை சவுல் அறிவான். என்னைக் கொல்ல முயல்வான்” என்றான்.
கர்த்தர், “பெத்லேகேமிற்கு ஒரு இளம் கன்றுக்குட்டியை எடுத்துக்கொண்டு போ, ‘கர்த்தருக்கு பலி கொடுக்க வந்திருக்கிறேன்’ என்று சொல். 3 ஈசாயையும் பலிக்கு அழைத்தனுப்பு. பிறகு செய்ய வேண்டியது என்ன என்பதைக் காட்டுவேன். நான் காட்டுகிறவனை அரசனாக அபிஷேகம் செய்” என்றார்.
4 சாமுவேல் கர்த்தர் சொன்னபடி செய்தான். சாமுவேல் பெத்லேகேம் சென்றதும் அங்குள்ள மூப்பர்கள் நடுங்கினார்கள். அவர்கள் சாமுவேலை சந்தித்து, “சமாதானத்தோடு வந்துள்ளீரா?” என்று கேட்டனர்.
5 அதற்கு சாமுவேல், “ஆமாம், நான் சமாதானத்தோடு வருகிறேன். நான் கர்த்தருக்கு பலிகொடுக்க வந்துள்ளேன். உங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு என்னோடு பலி செலுத்த வாருங்கள்” என்றான். சாமுவேல் ஈசாயையும் அவனது மகன்களையும் ஆயத்தம் செய்துப் பலியில் பங்குகொள்ள அழைத்தான்.
6 அவர்கள் சாமுவேலிடம் வந்து சேர்ந்ததும் எலியாபைப் பார்த்தான். சாமுவேல் “நிச்சயமாக இவன்தான் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்!” என எண்ணினான்.
7 ஆனால் கர்த்தர் சாமுவேலிடம், “எலியாப் உயரமானவன், அழகானவன். ஆனால் அப்படி சிந்திக்க வேண்டாம். ஜனங்கள் பார்க்கிறபடி தேவன் கவனிக்கிறதில்லை. ஜனங்கள் ஒருவனின் வெளித் தோற்றத்தைப் பார்க்கிறார்கள். கர்த்தரோ அவன் இருதயத்தைப் பார்க்கிறார். எலியாப் சரியானவன் அல்ல” என்றார்.
8 பிறகு ஈசாய் இரண்டாவது மகனான, அபினதாபை அழைத்தான். அவன் சாமுவேலினருகில் நடந்து வந்தபோது சாமுவேல் பார்த்து, “இல்லை, கர்த்தர் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை” எனக் கூறினான்.
9 பிறகு ஈசாய் இன்னொரு மகனான சம்மாவை அழைத்தான். அவனைப் பார்த்து, “கர்த்தர் இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான்.
10 ஈசாய் 7 மகன்களையும் காட்டினான். சாமுவேல் ஈசாயிடம், “இவர்களில் யாரையும் கர்த்தர் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான்.
11 சாமுவேல், “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” எனக் கேட்டான்.
அதற்கு ஈசாய், “இல்லை கடைசி மகன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்” என்றான்.
சாமுவேலோ, “அவனை அழைத்து வா, அவன் வரும்வரை நாம் சாப்பிடக்கூடாது” என்றான்.
12 ஈசாய் ஒருவனை அனுப்பி தன் இளைய மகனை அழைப்பித்தான். இந்த மகன் அழகாய் சிவந்த மயிரோடு நல்ல சொளந்தரிய தோற்றமுடையவனாக இருந்தான்.
கர்த்தர் சாமுவேலிடம், “எழுந்து அவனை அபிஷேகம் செய், இவன்தான்” என்றார்.
13 சாமுவேல் எண்ணெய் நிரம்பிய கொம்பை எடுத்து சிறப்பு எண்ணெயை ஈசாயின் கடைசி மகன் மேல் அவனுடைய சகோதரரின் முன்னிலையில் ஊற்றினான். கர்த்தருடைய ஆவியானவர் அன்று முதல் தாவீது மீது பெரும் வல்லமையோடு வந்தார். சாமுவேல் ராமாவிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்பினான்.
சவுலை ஒரு கெட்ட ஆவி துன்புறுத்துகிறது
14 கர்த்தருடைய ஆவியானவர் சவுலை விட்டு விலகினார். கர்த்தர் ஒரு கெட்ட ஆவியை சவுலுக்கு அனுப்பினார். அது மிகத் தொல்லை கொடுத்தது. 15 சவுலின் வேலைக்காரர்களோ, “தேவனிடமிருந்து கெட்ட ஆவி ஒன்று உங்களைத் தொந்தரவு செய்கிறது. 16 ஆணையிடுங்கள், நாங்கள் சுரமண்டலம் வாசிக்கும் ஒருவனைத் தேடிப்பிடிப்போம். ஒருவேளை கர்த்தரிடமிருந்து கெட்ட ஆவி உங்கள் மீது வருமானால், உமக்காக அவன் இசை மீட்டுவான். அப்போது நீங்கள் நலம் பெறுவீர்கள்” என்றனர்.
17 எனவே சவுல், “நன்றாக இசை மீட்டுபவனைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்றான்.
18 ஒரு வேலையாள், “ஈசாய் என்று ஒருவன் பெத்லேகேமில் இருக்கிறான். அவனது மகனுக்கு நன்றாக சுரமண்டலம் வாசிக்கத் தெரியும், தைரியமாக நன்றாக சண்டை இடுவான். அழகானவனும் சுறுசுறுப்பானவனும் கூட, மேலும் கர்த்தர் அவனுடன் இருக்கிறார்” என்றான்.
19 எனவே சவுலின் ஆட்கள் ஈசாயிடம் சென்றனர். அவர்கள் ஈசாயிடம், “ஆட்டைக் காக்கிற உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்புங்கள்” என்று சொன்னார்கள்.
20 எனவே ஈசாய் சில அன்பளிப்புகளாக கழுதை, அப்பம், திராட்சைரசம், இளம் வெள்ளாட்டுக்குட்டி ஆகியவற்றை தாவீதுக்கு கொடுத்து சவுலிடம் அனுப்பினான். 21 தாவீது சவுல் முன்பு போய் நின்றான். சவுலுக்கு தாவீதை மிகவும் பிடித்தது. அவன் சவுலின் ஆயுதங்களைச் சுமக்கும் உதவியாளனானான். 22 அவன் ஈசாய்க்கு, “நான் தாவீதை மிகவும் விரும்புகிறேன். அவன் என்னோடு இருந்து எனக்குச் சேவை புரியட்டும்” என்ற செய்தி சொல்லி அனுப்பினான்.
23 எப்பொழுதாவது தேவனிடத்திலிருந்து சவுல் மேல் கெட்ட ஆவி வந்தால், தாவீது தன் சுரமண்டலத்தை மீட்டுவான். அப்போது அந்த கெட்ட ஆவி சவுலை விட்டு போய்விடும், சவுலும் நலம் பெறுவான்.
இஸ்ரவேலருக்கு கோலியாத்தின் சவால்
17 பெலிஸ்தர் போரிடும் பொருட்டு படையாட்களைக் கூட்டினார்கள். அவர்கள் யூதாவிலுள்ள சோக்கோவில் கூடினார்கள். அவர்கள் கூடிய எபேஸ்தம்மீம் எனும் இடம் சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் இடையில் இருந்தது.
2 சவுலும், இஸ்ரவேல் வீரர்களும் ஒன்று கூடினார்கள். இவர்களின் முகாம் ஏலாவிலிருந்தது. வீரர்கள் சண்டையிடத் தயாராக இருந்தனர். 3 பெலிஸ்தியர் மலையின் மேல் இருந்தனர். அடுத்த மலையில் இஸ்ரவேலர் இருந்தனர். இடையில் பள்ளத்தாக்கு இருந்தது.
4 பெலிஸ்தியரிடம் கோலியாத் என்னும் வீரன் இருந்தான். அவன் காத் என்னும் ஊரினன். 9 அடி உயரமாக இருந்தான். 5 ஒரு வெண்கல கிரீடமும், போர்க் கவசமும் தரித்திருந்தான். அது 5,000 சேக்கல் வெண்கலம் எடையுள்ளதாயிருந்தது. 6 அவன் கால்களில் வெண்கல கவசத்தையும், தோள்களில் வெண்கல கேடகத்தையும் அணிந்திருந்தான். 7 அவனது ஈட்டியின் பிடி நெசவுக்காரரின் படைமரம் போல் இருக்கும். ஈட்டியின் அலகு 600 சேக்கல் இரும்பு எடையுள்ளதாக இருந்தது. கோலியாத்தின் கேடயம் சுமந்த வீரன், அவனுக்கு முன்னால் நடப்பான்.
8 தினந்தோறும் அவன் வெளியே வந்து இஸ்ரவேலரைப் பார்த்து, சத்தமாக சண்டைக்கு சவால்விடுவான். அவன், “உங்களுடைய எல்லா வீரர்களும் போருக்குத் தயாராக ஏன் அணிவகுத்து நிற்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் சவுலின் வேலைக்காரர்கள். நான் பெலிஸ்தன். யாரேனும் ஒருவனைத் தேர்தெடுத்து என்னோடு சண்டையிட அனுப்புங்கள். 9 அவன் என்னைக் கொன்றுவிட்டால் நாங்கள் (பெலிஸ்தர்) அனைவரும் உங்களது அடிமை. நான் அவனைக் கொன்றுவிட்டால் நீங்கள் எங்கள் அடிமை! நீங்கள் எங்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்றான்.
10 மேலும் அவன், “நான் இன்று இஸ்ரவேல் சேனையை கேலிச்செய்தேன்! உங்களில் ஒருவனுக்குத் தைரியமிருந்தால் என்னிடம் அனுப்பி சண்டையிட்டுப் பாருங்கள்!” என்றான்.
11 சவுலும் அவனது வீரர்களும் கோலியாத் சொன்னதைக் கேட்டு மிகவும் நடுங்கினார்கள்.
தாவீது போர் முனைக்குச் செல்கிறான்
12 தாவீது ஈசாயின் மகன், யூதாவிலுள்ள பெத்லேகேமில் எப்பிராத்தா குடும்பத்தைச் சேர்ந்தவன். ஈசாயிக்கு 8 மகன்கள். சவுலின் காலத்தில் ஈசாய் முதிர் வயதாக இருந்தான். 13 ஈசாயின் 3 பெரிய மகன்கள் சவுலுடன் போருக்குச் சென்றிருந்தனர். எலியாப் முதல் மகன். அபினதாப் இரண்டாவது மகன். சம்மா மூன்றவாது மகன். 14 தாவீது கடைசி மகன். பெரிய மூன்று மகன்களும் சவுலின் படையில் இருந்தனர். 15 தாவீது சவுலை விட்டு விலகி அவ்வப்போது பெத்லேகேமில் தன் தந்தையின் ஆடுகளைக் மேய்க்கப் போவான்.
16 கோலியாத் தினமும் காலையில் வந்து இவ்வாறு 40 நாட்கள் இஸ்ரவேல் சேனையைக் கேலிச் செய்தான்.
17 ஒருநாள் ஈசாய் தாவீதிடம், “கூடையில் வறுத்த பயிரையும், 10 அப்பங்களையும் கொண்டு போய் முகாமில் உள்ள உன் சகோதரர்களுக்கு கொடு. 18 இந்த 10 பாலாடைக் கட்டிகளையும் உன் சகோதரர் குழுவின் 1,000 வீரருக்கு அதிபதியினிடம் கொடு. உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் பார். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக ஏதேனும் வாங்கி வா! 19 ஏலா பள்ளத்தாக்கில் உன் சகோதரர்கள் சவுலின் சேனையில் பெலிஸ்தருக்கு எதிராகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்” என்றான்.
20 அதிகாலையில் தாவீது வேறு ஒரு மேய்ப்பவனிடம் ஆடுகளை ஒப்படைத்தான். தாவீது உணவை எடுத்துக்கொண்டு ஈசாய் சொன்னபடி புறப்பட்டான். தாவீது தனது வண்டியை முகாமுக்குச் செலுத்தினான். தாவீது வந்து சேர்ந்தபோது வீரர்கள் தங்கள் போர்புரியும் நிலைக்குச் சென்று கொண்டிருந்தனர். வீரர்கள் தங்கள் போர் முழக்கங்களை எழுப்ப துவங்கினார்கள். 21 இஸ்ரவேலரும் பெலிஸ்தியரும் அணிவகுத்து போருக்குத் தயாரானார்கள்.
22 தாவீது தான் கொண்டு போனதை, பொருட்களின் காப்பாளனிடம் கொடுத்தான். பின் இஸ்ரவேல் வீரர்களின் அணிக்கு ஓடி, தன் சகோதரர்களைக் குறித்து விசாரித்தான். 23 தன் சகோதரர்களோடு பேச ஆரம்பித்தான். அப்போது, கோலியாத் பெலிஸ்தர் முகாமிலிருந்து வெளியே வந்து, வழக்கம்போல கேலிச் செய்தான். அவன் சொன்னதையெல்லாம் தாவீது கேட்டான்.
24 அவனைக் கண்டு இஸ்ரவேலர் பயந்து ஓடிப்போனார்கள். அவர்களுக்கு அவன் மீது பெரிய பயமிருந்தது. 25 இஸ்ரவேலர், “கோலியாத் வெளியில் வந்து இஸ்ரவேலரை மீண்டும் மீண்டும் கேலிக்குள்ளாக்கினதைப் பார்த்தீர்களா! அவனை யார் கொன்றாலும் சவுல் அரசன் அவனுக்கு நிறையப் பணம் கொடுத்து, தனது மகளை அவனுக்கு மணம் செய்து கொடுப்பான். சவுல் அவனது குடும்பத்திற்கு இஸ்ரவேலின் மத்தியில் சுதந்திரம் அளிப்பான்” என்றார்கள்.
26 தாவீதோ அவர்களிடம், “அவன் என்ன சொல்லுவது? அவனைக் கொன்று இஸ்ரவேலில் இருந்து அவமானத்தை களைபவனுக்கு விருது என்ன வேண்டிக்கிடக்கிறது? இஸ்ரவேலர் இந்த நிந்தையைச் சுமக்க வேண்டுமா? இத்தனைக்கும் யார் இந்த கோலியாத்? இவன் யாரோ அந்நியன் [a] சாதாரண பெலிஸ்தியன். ஜீவனுள்ள தேவனுடைய சேனைக்கு எதிராகப் பேச அவன் எப்படி நினைக்கலாம்?” என்று கேட்டான்.
27 அதற்கு இஸ்ரவேலன், கோலியாத்தைக் கொன்றால் கிடைக்கும் மேன்மையைப் பற்றி சொன்னான். 28 தாவீதின் மூத்த அண்ணனான எலியாப் தனது தம்பி, வீரர்களிடம் சொன்னதைக் கேட்டு கோபத்தோடு, “இங்கு ஏன் வந்தாய்? ஆடுகளைக் காட்டில் யாரிடம் விட்டு வந்தாய்? நீ எதற்காக இங்கு வந்தாய் என்று எனக்குத் தெரியும்! உனக்கு சொல்லப்பட்டதைச் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. யுத்தத்தை வேடிக்கை பார்க்கவே நீ இங்கு வந்தாய்!” என்றான்.
29 அதற்கு தாவீது, “நான் இப்போது என்ன செய்துவிட்டேன்? நான் ஒரு தவறும் செய்யவில்லை! வெறுமனே பேசிக்கொண்டிருந்தேன்” என்றான். 30 தாவீது வேறு சிலரிடம் அதே கேள்விகளைத் திரும்ப கேட்டான். அவர்களும் அதே பதில் சொன்னார்கள்.
31 தாவீது சொல்வதைச் சிலர் கேட்டு அவனைச் சவுலிடம் அழைத்துச் சென்றார்கள். 32 தாவீது சவுலிடம், “கோலியாத்துக்காக யாரும் நடுங்க வேண்டாம். நான் உங்கள் சேவகன். நான் போய் அவனோடு போரிடுகிறேன்!” என்றான்.
33 “உன்னால் வெளியே போய் அந்த பெலிஸ்தியனாகிய கோலியாத்துடன் சண்டைபோட முடியாது. நீ ஒரு படைவீரன் அல்ல! அவனோ சிறுவயது முதல் போரிட்டு வருகிறான்” என்றான்.
34 ஆனால் தாவீது சவுலிடம், “நான் ஒரு இடையன், ஆடுகளை மேய்த்து வருபவன். இரு தடவை ஒரு சிங்கமும், மற்றொரு தடவை கரடியும் ஆடுகளைத் தூக்கியபோது, 35 அவற்றைக் கொன்று அவற்றின் வாயிலிருந்து ஆட்டை மீட்டேன். அவை என் மேல் பாய்ந்தன. எனினும் அவற்றின் வாயின் அடிப்பகுதியைப் பிடித்து கிழித்துக் கொன்றேன். 36 சிங்கத்தையும் கரடியையும் கொன்ற என்னால், இந்த அந்நியனையும் விலங்குகளைப்போல் கொல்லமுடியும்! அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனையைக் கேலி செய்ததால் அவன் கொல்லப்படுவான். 37 கர்த்தர் என்னை சிங்கம் மற்றும் கரடியிடமிருந்து காப்பாற்றியது போலவே பெலிஸ்தனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்” என்றான்.
சவுல் தாவீதிடம், “கர்த்தர் உன்னோடு இருப்பாராக, நீ போ” என்றான். 38 சவுல் தன் சொந்த ஆடையை தாவீதுக்கு அணிவித்தான். தலையில் வெண்கல தலைச் சீராவை, பிற யுத்த சீருடையும் போடுவித்தான். 39 தாவீது வாளை எடுத்துக்கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான். சவுலின் சீருடையை அணிந்து பார்த்தான். ஆனால் அவ்வளவு பாரமான யுத்த சீருடை அணிந்து கொள்ளும் பயிற்சி அவனுக்கு இருக்கவில்லை.
தாவீது சவுலிடம், “இவற்றை அணிந்து என்னால் சண்டை போட முடியாது. அணிந்து பழக்கமில்லை” என்றான். எனவே தாவீது எல்லாவற்றையும் கழற்றினான். 40 தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு 5 கூழங்கற்கள் கிடைக்குமா என்று பார்க்கச் சென்றான். தேடியெடுத்த 5 கூழாங்கற்களையும் தான் வைத்திருந்த இடையர் தோல் பையில் போட்டுக் கொண்டான். கையில் வில் கவணை வைத்துக்கொண்டான். பிறகு கோலியாத்தை நோக்கி நடந்தான்.
தாவீது கோலியாத்தைக் கொல்கிறான்
41 கோலியாத் மெதுவாக நடந்து தாவீதை நெருங்கினான். கேடயத்தை ஏந்திய உதவியாள் முன்னே நடந்தான். 42 கோலியாத் தாவீதைப் பார்த்து, அவன் யுத்த பயிற்சி இல்லாத சிவந்த முகத்தையுடைய இளைஞன் என்று கண்டு நகைத்தான். 43 “ஏன் இந்த கைத்தடி? ஒரு நாயை விரட்டுவது போல் நீ என்னை விரட்டப் போகிறாயா?” என்று கோலியாத் கேட்டான். அதற்கு பின் கோலியாத் தன் தெய்வங்களின் பெயரைச் சொல்லி தாவீதை நிந்தித்தான். 44 கோலியாத் தாவீதிடம் “இங்கே வா, உனது உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாகப் போடுகிறேன்!” என்றான்.
45 தாவீது அவனிடம், “நீ உனது பட்டயம், ஈட்டியைப் பிடித்துகொண்டு வந்துள்ளாய். நானோ இஸ்ரவேல் சேனைகளின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் வந்துள்ளேன். அவரைத் தூஷித்து நீ நிந்தித்தாய். 46 இன்று உன்னைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார். இன்று உன் தலையை வெட்டி உன் உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாக்குவேன். மற்ற பெலிஸ்தரையும் இவ்வாறே செய்வோம்! அப்போது இஸ்ரவேலில் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று உலகம் அறிந்துக்கொள்ளும்! 47 ஜனங்களை மீட்கும்படி கர்த்தருக்குப் பட்டயமும் ஈட்டியும் தேவையில்லை என்பதை இங்குள்ளவர்களும் அறிவார்கள். யுத்தம் கர்த்தருடையது! பெலிஸ்தியர்களாகிய உங்களெல்லாரையும் வெல்ல கர்த்தர் உதவுவார்” என்றான்.
48 கோலியாத் தாவீதை தாக்கும்படி சீறி எழுந்து நெருங்கி வந்தான். தாவீதும் நெருங்கி ஓடி,
49 தனது தோல் பையிலிருந்து கூழாங்கல்லை எடுத்து கவணில் வைத்து சுழற்றி வீசினான். அது கோலியாத்தின் நெற்றியில் இரு கண்களுக்கும் நடுவில்பட்டது. அவன் நெற்றிக்குள் அது புகவே அவன் முகங்குப்புற விழுந்தான்.
50 இவ்வாறு தாவீது கோலியாத்தை ஒரே கவண் கல்லால் சாகடித்தான். தாவீதிடம் பட்டயம் இருக்கவில்லை. 51 அதனால் ஓடிப்போய் அந்த பெலிஸ்தியன் அருகில் நின்று, கோலியாத்தின் பட்டயத்தை அவனது உறையில் இருந்து உருவி அதைக் கொண்டே அவனது தலையை சீவினான். இவ்விதமாகத்தான் தாவீது பெலிஸ்தியனான கோலியாத்தை கொன்றான்.
மற்ற பெலிஸ்தியர் தங்களது மாவீரன் மரித்ததைப் பார்த்து பின்வாங்கி ஓடினார்கள். 52 இஸ்ரவேல் வீரர் அவர்களைத் துரத்தி, காத் மற்றும் எக்ரோன் எல்லைவரை விரட்டினார்கள். சாராயீமின் சாலையோரங்களில் காத் மற்றும் எக்ரோன்வரை பலரைக் கொன்று குவித்தனர். 53 பின்னர் பெலிஸ்தியரின் முகாமிற்குள் சென்று பொருட்களை எடுத்து வந்தனர்.
54 தாவீது கோவியாத்தின் தலையை எருசலேமிற்கு எடுத்துச் சென்றான். கோலியாத்தின் ஆயுதங்களை தன் சொந்த கூடாரத்தில் வைத்தான்.
சவுல் தாவீதுக்கு அஞ்சத் தொடங்குகிறான்
55 தாவீது சண்டைக்குப் போவதைப் பார்த்தான். சவுல் தன் தளபதியான அப்னேரிடம், “இவனது தந்தை யார்?” எனக் கேட்டான்.
அப்னேரும், “எனக்குத் தெரியாது ஐயா” என்றான்.
56 சவுலோ, “இவனது தந்தையைப்பற்றி தெரிந்து வா” என்றான்.
57 தாவீது கோலியாத்தைக் கொன்றுவிட்டு திரும்பும்போது அப்னேர் அவனைச் சவுலிடம் அழைத்து வந்தான். தாவீது இன்னும் கோலியாத்தின் தலையைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
58 சவுல் அவனிடம், “உன் தந்தை யார்?” எனக் கேட்டான்.
அதற்கு தாவீது, “நான் உங்கள் வேலைக்காரனான, பெத்லேகேமில் உள்ள ஈசாயின் மகன்” என்றான்.
2008 by World Bible Translation Center