Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 3-5

இஸ்ரவேலரின் தேசத்தை விட்டுப் போகும்படி கர்த்தர் பிற நாட்டினரை வற்புறுத்தவில்லை. கர்த்தர் இஸ்ரவேலரைச் சோதிக்க விரும்பினார். கானான் தேசத்தை எடுத்துக்கொள்ள இக்காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர் எவரும் போர் செய்யவில்லை. எனவே கர்த்தர் பிறஜனத்தார் அத்தேசத்தில் வாழ அனுமதித்தார். (ஏற்கெனவே போர் அனுபவமற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்குப் போர் முறையைக் கற்பிக்க கர்த்தர் இதைச் செய்தார்.) கர்த்தர் அந்த தேசத்தில் விட்டு வைத்த ஜனங்களின் பெயர்கள்: பெலிஸ்தியரின் ஐந்து அரசர்கள், கானானியர், சீதோனின் ஜனங்கள், பாகால் எர்மோன் மலையிலிருந்து லெபோ ஆமாத் வரைக்குமுள்ள லீபனோனின் மலைகளில் வாழ்ந்த ஏவியர்கள் ஆகியோர். இஸ்ரவேலரைச் சோதிப்பதற்கென்று கர்த்தர் இந்த ஜனங்களை அந்த தேசத்தில் விட்டு வைத்தார். மோசேயின் மூலமாக அவர்களின் முற்பிதாக்களுக்கு கொடுத்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிகிறார்களா என்று பார்க்க கர்த்தர் விரும்பினார்.

கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஜனங்களோடு இஸ்ரவேலர் வாழ்ந்தனர். அந்த ஜனங்களின் பெண்களை இஸ்ரவேலர் மணந்துகொள்ள ஆரம்பித்தனர். தங்களது மகள்களை மணந்துகொள்ள அவர்களது ஆண்களையும் அனுமதித்தனர். இஸ்ரவேலர் அந்த ஜனங்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்ளவும் ஆரம்பித்தனர்.

முதல் நியாயாதிபதியாகிய ஒத்னியேல்

இஸ்ரவேலர் தீயக்காரியங்களில் ஈடுபடுவதை கர்த்தர் கண்டார். இஸ்ரவேலர் தமது தேவனாகிய கர்த்தரை மறந்து பொய்த் தெய்வங்களாகிய பாகாலையும், அசேராவையும் தொழத்தொடங்கினர். இஸ்ரவேலர்கள் மீது கர்த்தர் கோபங்கொண்டார். மெசொ பொத்தாமியாவின் அரசனாகிய கூசான்ரிஷதாயீம் என்பவன் இஸ்ரவேலரைத் தோற்கடித்து அவர்களை ஆள்வதற்கு கர்த்தர் அனுமதித்தார். அம்மன்னனின் ஆட்சியின் கீழ் இஸ்ரவேலர் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தனர். ஆனால் இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக அழுது வேண்டினார்கள். அவர்களை மீட்பதற்காக கர்த்தர் ஒரு மனிதனை அனுப்பினார். அம்மனிதனின் பெயர் ஒத்னியேல். அவன் கேனாஸ் என்னும் மனிதனின் மகன். கேனாஸ் காலேபின் இளைய சகோதரன். ஒத்னியேல் இஸ்ரவேலரைக் காப்பாற்றினான். 10 கர்த்தருடைய ஆவி ஒத்னியேல் மீது வந்தது. அவன் இஸ்ரவேலருக்கு நியாயாதிபதி ஆனான். ஒத்னியேல் இஸ்ரவேலரைப் போருக்கு வழிநடத்தினான். மெசொப்பொத்தாமியாவின், அரசனாகிய கூஷான்ரிஷதாயீமை வெல்வதற்கு கர்த்தர் ஒத்னியேலுக்கு உதவினார். 11 எனவே கேனாசின் மகனாகிய ஒத்னியேல் மரிக்கும்வரைக்கும் 40 ஆண்டுகள் தேசம் அமைதியாக இருந்தது.

நியாயாதிபதியாகிய ஏகூத்

12 மீண்டும் இஸ்ரவேலர் தீயகாரியங்களைச் செய்வதை கர்த்தர் கவனித்தார். எனவே மோவாபின் அரசனாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலரைத் தோற்கடிக்கும் ஆற்றலை அளித்தார். 13 அம்மோனியரும், அமலேக்கியரும் எக்லோனுக்கு உதவினார்கள். அவர்கள் அவனோடு சேர்ந்து இஸ்ரவேலரைத் தாக்கி ஈச்சமரங்களின் நகரமாகிய எரிகோவை விட்டு அவர்கள் போகுமாறு செய்தனர். 14 மோவாபின் அரசனாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலர்கள் 18 ஆண்டுகள் அடிபணிந்து இருந்தார்கள்.

15 பின் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடம் வந்து அழுதார்கள். இஸ்ரவேலரை மீட்பதற்கு கர்த்தர் ஒரு மனிதனை அனுப்பினார். அம்மனிதனின் பெயர் ஏகூத். அவன் இடது கைப் பழக்கமுடையவனாயிருந்தான். ஏகூத் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கேரா என்பவனின் மகன். மோவாபின் அரசனாகிய எக்லோனுக்கு கப்பம் செலுத்தி வருமாறு இஸ்ரவேலர் ஏகூதை அனுப்பினார்கள். 16 ஏகூத் தனக்காக ஒரு வாளைச் செய்து கொண்டான். அது இருபுறமும் கருக்குள்ளதாகவும் 12 அங்குல நீளமுடையதாகவும் இருந்தது. ஏகூத் தன் வலது தொடையில் வாளைக் கட்டிக்கொண்டு தனது ஆடைகளினுள் அதை மறைத்துக்கொண்டான்.

17 இவ்வாறு ஏகூத் மோவாபின் அரசன் எக்லோனுக்குக் கப்பம் கொண்டு வந்தான். எக்லோன் பருத்த உடல் உடையவன். 18 ஏகூத் எக்லோனுக்கு கப்பம் கொடுத்தபின், கப்பம் கொண்டுவந்த மனிதர்களை ஊருக்குத் திரும்பிச் செல்லுமாறு கூறினான். 19 கில்காலில் தெய்வங்களின் சிலைகளிலிருந்த இடத்திலிருந்து எக்லோன் திரும்பியபொழுது, ஏகூத் எக்லோனிடம், “அரசே, நான் உமக்காக ஒரு இரகசியச் செய்தி வைத்திருக்கிறேன்” என்றான்.

அரசன், “அமைதியாக இருங்கள்!” என்று சொல்லி அறையிலிருந்த பணியாட்களை வெளியே அனுப்பினான். 20 அரசனான எக்லோனுடன் ஏகூத் சென்றான். கோடைக் கால அரண்மனையிலுள்ள மேல் அறையில் எக்லோன் இப்போது தனித்தவனாய் உட்கார்ந்திருந்தான்.

ஏகூத், “தேவனிடமிருந்து ஒரு செய்தியை உமக்குக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான். அரசன் சிங்காசனத்திலிருந்து எழுந்து நின்றான். அவன் ஏகூத்திற்கு மிக அருகில் இருந்தான்.

21 அரசன் சிங்காசனத்திலிருந்து எழுந்த போது, ஏகூத் தனது இடது கையை நீட்டி வலது தொடையில் கட்டப்பட்டிருந்த வாளை எடுத்து அவ்வாளை அரசனின் வயிற்றில் செருகினான்.

22 வாளின் பிடிகூட வெளியே தெரியாதபடி வாள் எக்லோனின் வயிற்றினுள் நுழைந்தது. அரசனின் பருத்த உடல் வாளை மறைத்தது. எனவே ஏகூத் வாளை எக்லோனின் உடம்பிலேயே விட்டுவிட்டான்.

23 ஏகூத் அறையிலிருந்து வெளியே வந்து கதவுகளை மூடிப் பூட்டிவிட்டான். 24 ஏகூத் புறப்பட்ட சற்று நேரத்தில் வேலையாட்கள் திரும்பிவந்து, அறையின் கதவுகள் மூடப்பட்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “அரசன் கழிவறைக்குப் போயிருக்க வேண்டும்” என்று எண்ணினார்கள். 25 எனவே அவர்கள் அதிக நேரம் காத்திருந்தனர். இறுதியில் அவர்கள் கவலை அடைந்து கதவுகளைத் திறந்தனர். பணியாட்கள் உள்ளே நுழைந்தபோது அரசன் மரணமடைந்து, தரையில் கிடப்பதைப் பார்த்தனர்.

26 பணியாட்கள், அரசனுக்காகக் காத்திருந்தபோது, ஏகூத்திற்குத் தப்பிச்செல்ல போதுமான நேரம் இருந்தது. ஏகூத் விக்கிரகங்கள் இருந்த வழியே கடந்துசென்று சேயிரா என்னும் இடத்திற்குச் சென்றான். 27 சேயிராவை அடைந்ததும், அந்த எப்பிராயீம் மலைநாடுகளில் எக்காளம் ஊதினான். இஸ்ரவேலர் அதனைக் கேட்டு, ஏகூத்தின் பின்செல்ல மலைகளிலிருந்து இறங்கி வந்தனர். 28 ஏகூத் இஸ்ரவேலரிடம், “என்னைப் பின்பற்றுங்கள்! நமது பகைவராகிய மோவாபியரை வெல்வதற்கு கர்த்தர் எனக்கு உதவினார்” என்றான்.

எனவே இஸ்ரவேலர் ஏகூதைப் பின்பற்றினார்கள். யோர்தான் நதியை எளிதாகக் கடக்கக்கூடிய இடங்களுக்கெல்லாம் ஏகூதைப் பின்பற்றி அவற்றைக் கைப்பற்றுவதற்காகக் சென்றனர். ஒருவரும் யோர்தான் நதியைக் கடந்து செல்வதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அனுமதிக்கவில்லை. 29 மோவாபில் வலிமையும் துணிவும் உள்ள மனிதர்களில் சுமார் 10,000 பேரை இஸ்ரவேலர் கொன்றனர். மோவாபியரில் ஒருவனும் தப்பிச் செல்லவில்லை. 30 அன்றையதினம் இஸ்ரவேலர் மோவாபியரை ஆளத் தொடங்கினார்கள். அத்தேசத்தில் 80 ஆண்டுகள் அமைதி நிலவிற்று.

நியாயாதிபதியாகிய சம்கார்

31 ஏகூத் இஸ்ரவேலரை மீட்டுக் காத்த பின்பு, மற்றொரு மனிதன் இஸ்ரவேலரைக் காத்தான். அவன் ஆனாத்தின் மகனாகிய சம்கார். 600 பெலிஸ்தியர்களைச் சம்கார் தாற்றுக்கோலால் கொன்றான்.

பெண் நியாயாதிபதியும் தீர்க்கதரிசியுமான தெபோராள்

ஏகூத் மரித்த பின்பு, தீயவை என கர்த்தரால் குறிக்கப்பட்டச் செயல்களை மீண்டும் ஜனங்கள் செய்ய ஆரம்பித்தனர். எனவே கர்த்தர் கானானின் அரசனாகிய யாபீன் என்பவன் இஸ்ரவேலரைத் தோற்கடிக்க அனுமதித்தார். யாபீன் ஆத்சோர் பட்டணத்தில் ஆண்டு வந்தான். யாபீனின் சேனைக்குச் சிசெரா என்பவன் தலைவனாக இருந்தான். அரோசேத் ஆகோயிம் என்ற நகரில் சிசெரா வசித்து வந்தான். சிசெராவிற்கு 900 இரும்பு இரதங்கள் இருந்தன, 20 ஆண்டுகள் அவன் இஸ்ரவேலரைக் கொடுமையாக ஆண்டுவந்தான். எனவே அவர்கள் கர்த்தரிடம் முறையிட்டனர்.

அங்கு தெபோராள் என்ற பெண் தீர்க்கதரிசி இருந்தாள். அவள் லபிதோத்தின் மனைவி. அவள் அக்காலத்தில் இஸ்ரவேலின் பெண் தீர்க்கதரிசியாக இருந்தாள். ஒரு நாள், தன் பேரீச்சமரத்தின் கீழ் தெபோராள் உட்கார்ந்திருந்தாள். எப்பிராயீம் மலைநாட்டில் ராமா, பெத்தேல் ஆகிய நகரங்களின் நடுவே அம்மரம் இருந்தது. சிசெராவை என்ன செய்வதென்று அவளிடம் கேட்டறிவதற்காக இஸ்ரவேலர் கூடி வந்தனர். தெபோராள் பாராக் என்பவன் தன்னை வந்து சந்திக்குமாறு அவனுக்கு செய்தியை சொல்லி அனுப்பினாள். பாராக் அபினோகாமின் மகன். பாராக் நப்தலியிலுள்ள, கேதேஷ் நகரில் வசித்தான். தெபோராள் பாராக்கை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டு: ‘நப்தலி, செபுலோன் கோத்திரத்தில் இருந்து 10,000 ஆட்களைத் திரட்டு. அவர்களைத் தாபோர் மலைக்கு வழி நடத்து. நான் யாபீனின் படைத்தலைவனாகிய சிசெராவை உன்னிடம் வரச்செய்வேன். சிசெராவையும், அவனது இரதங்களையும், படைகளையும் கீசோன் நதிக்கு வரச்செய்வேன். அங்கு சிசெராவைத் தோற்கடிப்பதற்கு உனக்கு உதவுவேன்’ என்றார்” என்று சொன்னாள்.

பாராக் தெபோராவிடம், “நீ என்னோடு வருவதாக இருந்தால் நான் போய், இதைச் செய்வேன். நீ என்னோடு வராவிட்டால் நான் போகமாட்டேன்” என்றான்.

அதற்கு தெபோராள், “கண்டிப்பாக நான் உன்னோடு வருவேன், ஆனால் உன் மனப்பான்மையால் சிசெரா தோற்கடிக்கப்படும்போது உனக்கு அந்தப் புகழ் சேராது. கர்த்தர், ஒரு பெண் சிசெராவைத் தோற்கடிக்க அனுமதிப்பார்” என்று பதிலுரைத்தாள்.

எனவே, கேதேஸ் நகரத்திற்குத் தெபோராள் பாராக்குடன் சென்றாள். 10 கேதேஷ் நகரத்தில் பாராக் நப்தலி, செபுலோன் கோத்திரத்தினரை வரவழைத்தான். அக்கோத்திரத்திலிருந்து தன்னைப் பின்தொடர்ந்து செல்வதற்கு 10,000 ஆட்களைத் தெரிந்துகொண்டான். தெபோராளும் பாராக்கோடு சென்றாள்.

11 கேனியரில் ஒருவனான ஏபேர் என்பவன் இருந்தான், அவன் கேனியரை விட்டு பிரிந்து சென்றான். (கேனியர் மோசேயின் மாமனாரான ஓபாபின் சந்ததியார்.) கேதேஸ் நகருக்கருகில் சானானீம் என்னுமிடத்திலுள்ள கர்வாலி மரத்தினருகே அவன் தங்கியிருந்தான்.

12 அபினோகாமின் மகனாகிய பாராக்தாபோர் மலையிலிருக்கிறான் என்று சிலர் சிசெராவுக்குக் கூறினார்கள். 13 எனவே சிசெரா அவனது 900 இரும்பு ரதங்களையும் ஒருமித்து வரச்செய்ததுடன், தனது போர் வீரர்களையும் ஒன்று திரட்டினான். அவர்கள் அரோசேத் நகரத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கு வரைக்கும் அணிவகுத்துச் சென்றார்கள்.

14 அப்போது தெபோராள் பாராக்கிடம், “இன்று சிசெராவைத் தோற்கடிக்க கர்த்தர் உனக்கு உதவுவார். கர்த்தர் உனக்காக வழியை ஏற்கெனவே ஆயத்தமாக வைத்திருக்கிறார் என்பதை அறிவாய்” என்றாள். எனவே பாராக் 10,000 ஆட்களையும் தாபோர் மலையிலிருந்து கீழே வழிநடத்திச் சென்றான். 15 பாராக்கும் அவனது ஆட்களும் சிசெராவைத் தாக்கினார்கள். யுத்தத்தின் போது, கர்த்தர் சிசெராவையும் அவனது படைகளையும், இரதங்களையும் குழப்பமடையச் செய்தார். அவர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. பாராக்கும் அவனது ஆட்களும் சிசெராவின் படையைத் தோற்கடித்தனர். சிசெரா அவனது இரதத்தை விட்டுக் கீழிறங்கி ஓட ஆரம்பித்தான். 16 பாராக் சிசெராவின் படையோடு போரிடுவதைத் தொடர்ந்தான். பாராக்கும் அவனது ஆட்களும் சிசெராவின் படைகளை அரோசேத் வரைக்கும் துரத்திச் சென்று சிசெராவின் ஆட்களை வாளால் கொன்றார்கள். சிசெராவின் ஆட்களில் ஒருவனும் உயிரோடு விடப்படவில்லை.

17 ஆனால் சிசெரா தப்பி ஓடிவிட்டான். அவன் ஏபேர் என்பவனின் மனைவி யாகேல் இருந்த கூடாரத்தை வந்தடைந்தான். ஏபேர் கேனியர்களில் ஒருவன். ஆசோரின் அரசனாகிய யாபீனோடு ஏபேரின் குடும்பம் அமைதியான உறவு கொண்டிருந்தது, எனவே சிசெரா யாகேலின் கூடாரத்திற்கு ஓடினான். 18 யாகேல் சிசெரா வருவதைக் கண்டாள். எனவே அவனைச் சந்திப்பதற்காக வெளியே வந்தாள். யாகேல் சிசெராவைப் பார்த்து, “ஐயா, கூடாரத்திற்கு உள்ளே வாருங்கள், அஞ்சவேண்டாம். வாருங்கள்” என்றாள். எனவே சிசெரா யாகேலின் கூடாரத்திற்குள் சென்றான். அவள் அவனை ஒரு விரிப்பால் மூடினாள்.

19 சிசெரா யாகேலிடம், “நான் தாகமாயிருக்கிறேன். குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று கேட்டான். மிருகத்தின் தோலினாலாகிய பை ஒன்று யாகேலிடம் இருந்தது. அவள் அதில் பால் வைத்திருந்தாள். யாகேல் சிசெராவுக்குக் குடிப்பதற்கு அந்தப் பாலைக் கொடுத்தாள். பின் சிசெராவைத் துணியால் மூடிவிட்டாள்.

20 பின் சிசெரா யாகேலை நோக்கி, “கூடாரத்தின் வாசலில் நின்றுகொள். யாரேனும் வந்து உன்னிடம், ‘உள்ளே யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டால், ‘இல்லை’ என்று பதில் சொல்” என்றான்.

21 ஆனால் யாகேல் ஒரு கூடார ஆணியையும் சுத்தியலையும் எடுத்தாள். சத்தமெழுப்பாது சிசெராவிடம் சென்றாள். சிசெரா மிகவும் களைப்புற்றிருந்ததால், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். யாகேல் கூடார ஆணியைச் சிசெராவின் தலையின் ஒரு பக்கத்தில் வைத்துச் சுத்தியால் ஓங்கி அடித்தாள். கூடார ஆணி சிசெராவின் தலைப் பக்கத்தில் புகுந்து நிலத்தினுள் இறங்கியது! சிசெரா மரித்துப் போனான்.

22 அப்போது பாராக் சிசெராவைத் தேடியபடி யாகேலின் கூடாரத்தை வந்தடைந்தான். பாராக்கைச் சந்திப்பதற்கு யாகேல் வெளியே வந்து, “உள்ளே வாருங்கள், நீங்கள் தேடும் மனிதனை நான் காட்டுகிறேன்” என்றாள். பாராக் யாகேலோடு கூடாரத்தினுள் நுழைந்தான். தலைப்பக்கத்தில் ஆணி செருகப்பட்ட நிலையில் நிலத்தில் மரித்துக் கிடந்த சிசெராவைப் பாராக் பார்த்தான்.

23 அன்று இஸ்ரவேலருக்காக தேவன் கானானிய அரசனாகிய யாபீனைத் தோற்கடித்தார். 24 அவர்கள் கானானிய அரசனான யாபீனைத் தோற்கடிக்கும் மட்டும் பெலன் பெற்று அவனை அழித்தார்கள்.

தெபோராளின் பாடல்

சிசெராவை இஸ்ரவேலர் தோற்கடித்த நாளில், தெபோராளும், அபினோகாமின் மகனாகிய பாராக்கும் பாடிய பாடல் இது:

“இஸ்ரவேலர் போருக்குத் தயாராயினர்.
    அவர்கள் போருக்குச் செல்ல தாமாகவே முன் வந்தனர்!
கர்த்தரை வாழ்த்துங்கள்!

“அரசர்களே, கேளுங்கள்.
    ஆளுவோரே, கேளுங்கள். நான் பாடுவேன்.
நான் கர்த்தருக்குப் பாடுவேன்.
    இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பாட்டு இசைப்பேன்.

“கர்த்தாவே, முன்பு சேயீரிலிருந்து வந்தீர். ஏதோமிலிருந்து அணிவகுத்துச் சென்றீர்.
    நீர் அணிவகுத்துச் சென்றபோது, பூமி அதிர்ந்தது. வானம் பொழிந்தது. மேகம் தண்ணீர் தந்தது.
மலைகள் கர்த்தருக்குமுன் நடுங்கின,
    சீனாய் மலையின், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் முன்னிலையில் நடுங்கின.

“ஆனாத்தின் மகனாகிய சம்காரின் காலத்தில்
    யாகேலின் நாட்களில் பெருஞ்சாலைகள் வெறுமையாய் கிடந்தன.
    வணிகரும் வழி நடப்போரும் பக்கவழியாய்ச் சென்றார்கள்.

“அங்கு வீரர்கள் இல்லை.
    தெபோராள், நீ வரும்வரைக்கும் அங்கு வீரர்கள் இல்லை.
    இஸ்ரவேலின் தாயாக நீ திகழும்வரைக்கும் இஸ்ரவேலின் வீரர்கள் இருந்ததில்லை.

“நகரத்தின் வாசல்களில் போர் புரிவதற்கே
    தேவன் புது தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
இஸ்ரவேலில் 40,000 வீரர்களில் ஒருவனிடத்திலும் கேடயத்தையோ,
    ஈட்டியையோ யாரும் காணவில்லை.

“இஸ்ரவேலின் படைத்தலைவர்களை என் நெஞ்சம் நினைக்கிறது.
    அவர்கள் போருக்குத் தாமாகவே முன்வந்தார்கள்.
கர்த்தரை வாழ்த்துங்கள்!

10 “வெள்ளைக் கழுதைகளின்மேல் சவாரி செய்வோரும்,
    சேண விரிப்பில் அமர்ந்திருப்போரும், பாதை வழியே நடப்போரும் கவனமாய்க் கேளுங்கள்!
11 கால்நடைகள் தண்ணீர் பருகும் இடங்களிலே,
    கைத்தாளங்களின் இசையைக் கேட்கிறோம்.
கர்த்தரும், அவரது போர் வீரரும் பெற்ற வெற்றிகளை
    ஜனங்கள் பாடுகின்றனர்.
நகரவாசல்களினருகே கர்த்தருடைய ஜனங்கள் போரிட்டனர்.
    அவர்களே வென்றனர்!

12 “எழுக, எழுக, தெபோராளே!
    எழுக, எழுக, பாடலைப் பாடுக!
எழுந்திரு, பாராக்!
    அபினோகாமின் மகனே, உன் பகைவரை நீ மேற்கொள்!

13 “இப்போதும், மீதியாயிருக்கும் ஜனங்களே, தலைவர்களிடம் செல்லுங்கள்.
    கர்த்தருடைய ஜனங்களே! எனக்காக வீரரோடு செல்லுங்கள்!

14 “எப்பிராயீமின் மனிதர்கள் அமலேக்கின் மலை நாட்டினின்று வந்தனர்.
    பென்யமீனே, அவர்கள் உன்னையும் உன் ஜனங்களையும் பின்தொடர்ந்தனர்.
மாகீரின் குடும்பத்தில் படைத்தலைவர்கள் இருந்தனர்.
    வெண்கலக் கைத்தடியேந்திய தலைவர்கள் செபுலோன் கோத்திரத்திலிருந்து வந்தனர்.
15 இசக்காரின் தலைவர்கள் தெபோராளோடிருந்தனர்.
    இசக்காரின் குடும்பம் பாராக்கிற்கு உண்மையாய் நடந்தது. பள்ளத்தாக்கிற்கு அவர்கள் கால்நடையாய் நடந்தனர்.

“ரூபனே உனது படைகளின் கூட்டத்தில் துணிவுமிக்க வீரர்கள் பலருண்டு.
16     தொழுவங்களின் சுவரருகே நீ எதற்காக அமர்ந்திருக்கிறாய்?
ரூபனின் துணிவான வீரர்கள் போரைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தனர்.
    அவர்கள் வீட்டில் அமர்ந்து மந்தைகளுக்காய் இசைத்த இசையைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
17 யோர்தான் நதியின் மறுகரையில் கீலேயாத்தின் ஜனங்கள் தம் முகாம்களில் தங்கி இருந்தனர்.
    தாணின் ஜனங்களே, நீங்கள் கப்பல்களில் தங்கியிருந்ததேன்?
ஆசேர் குடும்பம் கடற்கரையில்
    பாதுகாப்பான துறைமுகத்தில் முகாமிட்டு தங்கினர்.

18 “ஆனால் செபுலோனின் ஆட்களும், நப்தலியின் ஆட்களும் தம் உயிர்களைப் பணயம் வைத்து
    மலைகளின் மேல் போரிட்டனர்.
19 அரசர்கள் போரிட வந்தனர்.
    கானானின் அரசர்கள் தானாக் நகரத்தில்
மெகிதோவின் கரையில் போரிட்டனர்.
    ஆனால், பொக்கிஷத்தைத் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை!
20 வானிலிருந்து நட்சத்திரங்கள் போரிட்டன.
    அவைகள் வான வீதியிலிருந்து சிசெராவோடு போர் செய்தன.
21 பழைய நதியாகிய கீசோன்,
    சிசெராவின் ஆட்களை அடித்துச் சென்றது.
எனது ஆத்துமாவே, ஆற்றலோடு புறப்படு!
22 குதிரையின் குளம்புகள் பூமியில் மோதின.
    சிசெராவின் பலமான குதிரைகள் ஓடின, மேலும் ஓடின.

23 “கர்த்தருடைய தூதன், ‘மேரோஸ் நகரை சபியுங்கள்.
    அதன் குடிகளை சபியுங்கள்!
கர்த்தருக்கு உதவுவதற்காக அவர்கள் வீரரோடு சேரவில்லை’ என்றான்.
24 கேனியனாகிய ஏபேரின் மனைவி யாகேல்.
    அவள் பெண்களெல்லாரிலும் ஆசீர்வதிக்கப்பட்டவள்.
25 சிசெரா தண்ணீரைக் கேட்டான்.
    யாகேல் பாலைக் கொடுத்தாள்.
அரசனுக்கான கிண்ணத்தில்
    அவள் பாலாடையைக் கொண்டு வந்தாள்.
26 யாகேல் தன் கையில் ஒரு கூடார ஆணியை எடுத்தாள்.
    வேலையாள் பயன்படுத்தும் சுத்தியை அவள் வலதுகையில் பிடித்தாள்.
பின் சிசெராவின் தலைமீது சுத்தியால் அடித்தாள்!
    அவன் நெற்றிப் பொட்டின் உள்ளே துளையிட்டாள்!
27 அவன் யாகேலின் பாதங்களினிடையே வீழ்ந்தான்.
    அவன் மடிந்தான்.
    அங்கு கிடந்தான்.
அவன் அவள் பாதங்களினிடையே வீழ்ந்தான்.
    அவன் மடிந்தான்.
சிசெரா வீழ்ந்த இடத்திலேயே மடிந்தான்.
    அங்கு மரித்து கிடந்தான்!

28 “சிசெராவின் தாய் ஜன்னலினூடே பார்த்து அழுதாள்.
    சிசெராவின் தாய் திரைச் சீலைகளினூடே பார்த்தாள்.
‘ஏன் சிசெராவின் இரதம் தாமதிக்கிறது?
    அவன் இரத ஒலியை நான் கேளாதது ஏன்?’ என்று புலம்பினாள்.

29 “அவளின் புத்திசாலியான வேலைக்காரப் பெண் அவளுக்கு பதில் அளித்தாள்.
    ஆம், பணிப்பெண் அவளுக்குப் பதில் சொன்னாள்.
30 ‘அவர்கள் போரில் வென்றிருப்பார்கள்.
    தோற்கடித்த ஜனங்களிடமிருந்து பொருள்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவற்றைத் தம்மிடையே பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
    ஒவ்வொரு வீரனும் ஓரிரு பெண்களை எடுத்துக்கொள்கிறான்.
சிசெரா சாயம்தீர்த்த ஆடையைக் கண்டெடுத்தான்.
    அதுவே அவன் முடிவாயிற்று!
சிசெரா அழகான ஆடை ஒன்றைக் கண்டெடுத்தான்.
    வெற்றி வேந்தன் சிசெரா தான் அணிவதற்காக இரண்டு ஆடைகளையும் தேர்ந்தெடுத்திருக்கலாம்.’

31 “கர்த்தாவே, உமது பகைவர்கள் அனைவரும் இவ்வாறு மடியட்டும்.
    உமது அன்பான ஜனங்கள் உதய சூரியனைப்போல வலிமை பெறட்டும்!”

இதன் பின்பு 40 ஆண்டுக் காலத்திற்கு தேசத்தில் அமைதி நிலவியது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center