Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 17-20

குறையற்ற மிருகங்களையே பலிகொடுக்க பயன்படுத்துதல்

17 “குறையுள்ள அல்லது ஏதேனும் ஊனமுற்ற மாட்டையோ, ஆட்டையோ, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி கொடுக்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை வெறுக்கிறார்!

விக்கிரகங்களை தொழுதுகொள்வதினால் அடையும் தண்டனைகள்

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற நகரங்கள் ஏதேனும் ஒன்றில் அக்கிரமமான செயல் கர்த்தருக்கு எதிராக நடந்ததைக்குறித்து நீங்கள் கேள்விப்படலாம். கர்த்தருக்கு எதிராக அந்த அக்கிரமச் செயலை உங்களைச் சார்ந்த ஆணோ, அல்லது பெண்ணோ செய்திருக்கலாம். கர்த்தருடைய உடன்படிக்கையை மீறி அவர்கள் நடந்திருப்பார்கள். அதாவது, அவர்கள் அந்நிய தெய்வங்களையோ அல்லது சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்ற வான சேனைகளையோ தொழுதுகொள்வதை நீங்கள் கேள்விப்பட்டால், அவைகளெல்லாம் நான் உங்களுக்கு வழங்கிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான செயல்களாகும். இது போன்ற தீயசெய்திகளை நீங்கள் கேள்விப்பட்டால், நீங்கள் அதைக் குறித்து விசாரிக்க வேண்டும். நீங்கள் அதை நன்றாகத் தீர ஆராய்ந்து அது உண்மையென்று கண்டறிந்தால், இஸ்ரவேலில் இப்படிப்பட்ட ஒரு அருவருக்கத்தக்க நிகழ்ச்சி நடந்தது உண்மையாகும்போது, நீங்கள் அந்தத் தீயசெயலைச் செய்தவனைத் தண்டிக்க வேண்டும். நீங்கள் அத்தகைய தீயச் செயலைச் செய்த அந்த ஆணையோ, அல்லது பெண்ணையோ, வெளியே இழுத்துவந்து நகர எல்லையின் பொது இடத்தில் கற்களால் அடித்து அவர்களைக் கொன்றுவிடுங்கள். ஆனால் ஒரே ஒரு சாட்சியின் கூற்றைக் கேட்டு நீங்கள் அவனுக்குக் கொலைத் தண்டனையை கொடுத்து விடாதீர்கள். இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் அவன் இந்த தீயச் செயல்களை செய்தது உண்மைதான் என்று கூறினால், பின் நீங்கள் அந்தத் துரோகியை கொன்றுவிடலாம். தீமை செய்தவன் கொல்லப்படும்படி சாட்சிகளே முதலில் அவன்மீது கற்களை எறியவேண்டும். பின்னரே மற்ற ஜனங்கள் அனைவரும் அவன் மரிக்கும்வரை கற்களால் அடிக்க வேண்டும். இதன் மூலமே நீங்கள் உங்களிடமிருந்து அந்தத் தீமையை விலக்கிட முடியும்.

சிக்கலான நீதிமன்ற முடிவுகள்

“உங்கள் நீதிமன்றங்களால் தீர்ப்புக்கூற முடியாமல் போகும் அளவிற்கு சில பிரச்சினைகள் உங்களிடம் இருக்கலாம், அவை கொலைக் குற்றமாகவோ, அல்லது இரண்டு நபர்களின் வாக்கு வாதங்களோ, அல்லது சண்டையில் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த சேதங்களையோ குறித்த வழக்குகளாக இருக்கலாம். உங்கள் ஊர்களிலுள்ள உங்களது நீதிபதிகளால் இத்தகைய வழக்குகளுக்குச் சரியான தீர்ப்பைக் கூற இயலாமல் இருந்தால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் சிறப்பாக தேர்ந்தெடுத்த இடத்திற்குச் செல்ல வேண்டும். லேவிக் கோத்திரத்திலிருந்து வந்த ஆசாரியர்கள் அங்கே இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் சென்று அன்றைய பொறுப்பில் இருக்கின்ற நியாயாதிபதியினிடத்தில் அந்தப் பிரச்சினைக்கான முடிவுகளைப் பெறலாம். 10 கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்தில் இருக்கின்ற அவர்கள், உங்களுக்கு அளிக்கின்ற தீப்புகளுக்கு இணங்கி, அவர்கள் உங்களுக்கு விதிக்கின்றபடி செய்யக் கவனமாய் இருப்பீர்களாக. 11 நீங்கள் அவர்கள் கூறும் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அவர்கள் விதிக்கின்றபடியே அவர்களது நியாயத்தீர்ப்புகளைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் சொன்ன எதையும் மாற்றாமல் அப்படியே செய்யவேண்டும்!

12 “அச்சமயத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஆசாரியனின் வார்த்தைகளையோ, அல்லது நீதிபதியின் தீர்ப்பையோ ஏற்காமலும், கீழ்ப்படியாமலும் இருக்கிறவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும். அவன் கண்டிப்பாக மரிக்க வேண்டும். இஸ்ரவேலில் இருந்து அந்தத் தீயவனை நீங்கள் அகற்றிவிடவேண்டும். 13 இந்தத் தண்டனையைக் கேட்கும் அனைத்து ஜனங்களும் அதைத் கண்டு பயந்து இதுபோன்ற தவறினைச் செய்யாதிருப்பார்கள்.

இராஜாவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது

14 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப்போல நாங்களும் எங்களுக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று கூறுவீர்கள் என்றால், 15 அவ்வாறு நடக்க வேண்டுமென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அரசனையே நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் அரசனாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜனங்கள் அல்லாத அந்நியனை நீங்கள் அரசனாக்கக் கூடாது. 16 அந்த அரசன் தனக்காக அதிகமான குதிரைகளை வைத்துக்கொள்ளக் கூடாது. அதுமட்டுமின்றி அதிகமான குதிரைகளுக்காக ஜனங்களை எகிப்திற்கு அனுப்பக் கூடாது. ஏனென்றால், ‘நீங்கள் திரும்பவும் அந்த வழியாக போகவே வேண்டாம்’ என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லி உள்ளார். 17 மேலும், அரசன் அதிகமான மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், அது அவனை கர்த்தரிடமிருந்து வேறு திசைக்கு அழைத்துச் சென்றுவிடும். மேலும். அந்த அரசன் அவனுக்காகப் பொன்னையும், வெள்ளியையும், மிகுதியாக சேர்த்துக்கொள்ளக் கூடாது.

18 “அரசன் தன் அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும்முன் தனக்கான சட்டங்களைப் புத்தகமாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். அவன் அந்த நீதி புத்தகத்தை, லேவியரும் ஆசாரியர்களும் வைத்துள்ள புத்தகத்திலிருந்து உருவாக்கி தன்னிடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 19 அரசன் அந்த புத்தகத்தை தன்னிடம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அந்தப் புத்தகத்தைப் படித்தறிய வேண்டும். ஏனென்றால், அவனது தேவனாகிய கர்த்தருக்கு மதிப்பளிக்க வேண்டும். அதிலுள்ள எல்லா சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் அரசன் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். 20 அரசன் தன் சகோதரர்களாகிய ஜனங்களைவிட தான் மேன்மையானவன் என்று எண்ணிவிடக் கூடாது. மேலும் அவன் ஒரு போதும் இந்த சட்டங்களிலிருந்து விலகிவிடக்கூடாது. ஆனால் அவன் இவற்றைச் சரியானபடி முழுமையாகப் பின்பற்றினால், பின் அந்த அரசனும் அவன் சந்ததியினரும் நீண்ட காலம் இஸ்ரவேல் நாட்டை ஆளலாம்.

ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் ஆதரவு அளித்தல்

18 “லேவியின் கோத்திரம் இஸ்ரவேலில் எவ்வித சொத்தும், நிலமும் பெறுவதில்லை. அவர்கள் ஆசாரியர்களாக சேவை செய்வார்கள். தகன பலியாக கர்த்தருக்குச் செலுத்தும் உணவுப் பொருட்களே இவர்களுக்கு பிழைப்பூட்டும் சுதந்திர வீதமாக இருக்கிறது. அதுவே லேவியர்களின் பங்கு ஆகும். இந்த லேவியர்கள், மற்ற கோத்திரங்கள் வைத்திருப்பதைப்போன்று எவ்வித பங்கும், சுதந்திரமும் பெற்றிருப்பவர்கள் அல்ல. கர்த்தர் அவர்களுக்குக் கூறியதுபோல் கர்த்தரே அவர்களது சொத்து.

“நீங்கள் மாட்டையோ, ஆட்டையோ, பலியிட்டால் அவற்றின் சில பகுதியினை ஆசாரியர்களுக்குக் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுக்கும் பகுதிகள் எதுவென்றால் அந்த ஆடு மாடுகளின் முன் தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் அறுவடை செய்த முதல் பலன்களின் ஒரு பகுதியையும் ஆசாரியர்களுக்குக் கொடுக்க வேண்டும். உங்கள் தானியங்கள், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றின் முதல் பலன்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். உங்கள் ஆடுகளில் கத்தரிக்கும் முதல் பங்கான ஆட்டு ரோமங்களை லேவியருக்குக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் எல்லாக் கோத்திரங்களையும் பார்த்து அவர்களிலிருந்து, லேவியரையும் அவர்களது சந்ததியினரையும் என்றென்றும் ஆசாரிய சேவை செய்ய தேர்ந்தெடுத்துள்ளார்.

“உங்களில் வசிக்கின்ற ஒவ்வாரு லேவியனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் பணி செய்வான். ஆனால், அவன் மேலும் அதிக நேரம் அங்குப் பணியாற்ற விரும்பினால் அவன் எப்பொழுது வேண்டுமானாலும் பணி செய்யலாம். இஸ்ரவேலில் எந்த ஊர்களிலும், எந்தப் பகுதிகளிலும் வசித்து வருகின்ற யாதொரு லேவியனும் அவன் வசிக்கிக்கின்ற வீட்டிலிருந்து தேவாலயத்திற்கு வரலாம். எந்த நேரத்திலும் அங்கு வந்து சேவை செய்யலாம். அங்கே தேவாலயத்தில் பணியாற்றுகின்ற மற்ற லேவியரான சகோதரனைப்போல் இந்த லேவியனும், அவனது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அங்கே சேவை செய்யலாம். இந்த லேவியன் தனது குடும்பம் வழக்கமாகப் பெறுகின்ற பங்குடன் மற்ற லேவியரின் சமபங்கையும் பெற்றுக்கொள்வான்.

இஸ்ரவேல் ஜனங்கள் மற்ற இனத்தவர்கள் போன்று வாழக்கூடாது

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்திற்குள் நீங்கள் போய்ச் சேரும்போது, மற்ற இனத்தவர்கள் செய்கின்ற அருவருக்கத்தக்கச் செயல்களை நீங்களும் செய்யக் கற்றுக்கொள்ளாதீர்கள். 10 உங்கள் மகன்களையோ, மகள்களையோ பலிபீடங்களின் தீயிலிட்டு பலியிடக்கூடாது. குறி சொல்கிறவன், நாள் பார்ப்பவன், மை போட்டு பார்ப்பவன், மந்திரவாதி, அல்லது சூன்யக்காரன் ஆகியவர்களுடன் சென்று அவர்களது வித்தைகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காதீர்கள். 11 மற்றவர்கள் மீது மாயவித்தை வித்தைகளைச் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள். உங்களில் யாரையும் மரித்தவர்களுடன் அல்லது தீய ஆவிகளுடன் குறி கேட்க அனுமதிக்காதீர்கள். அதுமட்டுமின்றி உங்களில் யாரும் மரித்த எவரிடமும் பேச முயற்சிக்கக் கூடாது. 12 உங்கள் தேவனாகிய கர்த்தர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்கின்ற ஜனங்களை வெறுக்கின்றார். அதனால்தான் உங்களுக்காக அந்த இன ஜனங்களை இந்த தேசத்தை விட்டே துரத்துகின்றார். 13 நீங்கள் அனைவரும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.

கர்த்தருடைய விசேஷ தீர்க்கதரிசி

14 “நீங்கள் அந்த மற்ற இன ஜனங்களை உங்கள் தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும். அந்த இன ஜனங்கள் மாயவித்தை செய்கிறவர்களையும் குறி சொல்லுபவர்களையும் நம்புகிறார்கள். ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் அவற்றைச் செய்வதை அனுமதிக்கமாட்டார். 15 உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவார். அந்தத் தீர்க்கதரிசியை உங்கள் சொந்த ஜனங்களிடமிருந்தே வரச் செய்வார். அவர் என்னைப்போன்ற ஒருவராய் இருப்பார். நீங்கள் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். 16 தேவன் இந்தத் தீர்க்கதரிசியை உங்களிடம் அனுப்புவது எதற்கென்றால், நீங்கள் இதைத்தான் தேவனிடம் கேட்டுக்கொண்டீர்கள். ஒரேப் மலையிலே நீங்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிய நாளில் நீங்கள் தேவனுடைய சத்தத்தைக்கேட்டும், மலையின்மீது நீங்கள் பார்த்த நெருப்பினைக் கண்டும், பயந்தீர்கள். ஆதலால் நீங்கள்: ‘நமது தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை நாங்கள் கேட்க அனுமதிக்க வேண்டாம்! நாங்கள் மரிக்கின்ற அளவிற்கு ஏற்படக் கூடிய மிகப்பெரிய அந்த அக்கினியை நாங்கள் பார்த்திட அனுமதிக்க வேண்டாம்!’ என்றீர்கள். அதற்காகவே, இந்தத் தீர்க்கதரிசியை அனுப்புகிறார்.

17 “கர்த்தர் என்னிடம், ‘அவர்கள் கேட்டுக்கொண்டது சரியே. 18 நான் உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்புவேன். அந்தத் தீர்க்கதரிசி அவர்களின் சொந்த ஜனங்களில் ஒருவனாக இருப்பான். நான் அவன் பேசவேண்டியதை எல்லாம் அவனுக்குச் சொல்லுவேன். அதை அவன் அந்த ஜனங்களிடம் சொல்லுவான். நான் அவனுக்கு கட்டளையிட்டதையெல்லாம் அவன் அந்த ஜனங்களுக்குக் கூறுவான். 19 அந்தத் தீர்க்கதரிசி எனக்காகப் பேசுவான். அவன் அப்படி எனக்காகப் பேசும்போதும், என்னுடையக் கட்டளைகளைக் கூறும்போதும், யாராவது அதைக் கேட்க மறுத்தால், நான் அந்த நபரைத் தண்டிப்பேன்’ என்று கூறினார்.

பொய்த் தீர்க்கதரிசிகளை அறிவது எப்படி

20 “ஆனால் நான் உங்களிடம் சொல்லும்படி சொல்லாத சிலவற்றை ஒரு தீர்க்கதரிசி கூறலாம். அதுமட்டுமின்றி, அந்தத் தீர்க்கதரிசி நான் தேவனுக்காகப் பேசுகிறேன் என்று சொல்லலாம். அப்படி ஏதும் நடந்தால் பின் அந்தத் தீர்க்கதரிசி கொல்லப்பட வேண்டும். ஒரு தீர்க்கதரிசி பொய்த் தெய்வங்களுக்காகப் பேச வந்திருக்கலாம். அப்படிப்பட்ட தீர்க்கதரிசி கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். 21 ‘கர்த்தர் சொல்லாத சிலவற்றை இந்தத் தீர்க்கதரிசிக் கூறுகிறான் என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?’ என்று நீங்கள் சிந்திப்பீர்களானால், 22 கர்த்தருக்காக நான் பேசுகிறேன், என்று கூறும் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் நடக்காமல் போனால், பின் நீங்கள் கர்த்தர் இவற்றை கூறவில்லையென்று அறிந்துகொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசி பேசியது, அவனது சொந்தக் கருத்துக்களே என்று நீங்கள் அறிந்து கொண்டால், நீங்கள் அவனைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை.

அடைக்கலப் பட்டணங்கள்

19 “மற்ற இன ஜனங்களை அழித்துவிட்டு உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களது தேசத்தை உங்களுக்குத் தருகின்றார். அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே நீங்கள் வாழப்போகிறீர்கள். நீங்கள் அவர்களது நகரங்களையும், வீடுகளையும் எடுத்துக்கொண்டு அனுபவிக்கப் போகிறீர்கள். அப்படி நடக்கும்போது, 2-3 நீங்கள் அந்த தேசத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு பிரிவிலும் எல்லாருக்கும் மையமான ஒரு நகரத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களுக்குச் சாலைகளையும், வீதிகளையும் அமைத்துக்கொள்ளுங்கள். அப்போது தற்செயலாக மற்றவர்களைக் கொலை செய்திடும் நபர் பாதுகாப்பாய் அந்நகருக்குள் ஓடிப்போகலாம்.

“கொலை செய்தவன் எவனும் அம்மூன்று நகரங்களில் ஒன்றில் ஓடிப்போய் இருக்க வேண்டுவதற்கான நியாயம் என்னவென்றால்: அந்த நபர் மற்றவனைக் கொன்றது எதிர்ப்பாராத விதமாக நடந்திருக்க வேண்டும். தான் மனதறியாது எவ்வித முன் வெறுப்பும் இல்லாது கொன்றிருக்க வேண்டும். இங்கு உதாரணமாகச் சொன்னால், ஒருவன் மற்றவனோடு விறகு வெட்ட காட்டிற்குச் சென்று மரத்தை வெட்டும்படி தன் கையிலிருக்கும் கோடரியை ஓங்கும்போது, அதிலிருந்த இரும்பானது கைப்பிடியை விட்டு கழன்று மற்றவன்மேல் விழுந்ததினால் அவன் மரித்துப்போனால், அந்தக் கோடரியை ஓங்கியவன், அம்மூன்று பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் பாதுகாப்படைந்து கொள்ளலாம். ஆனால், இந்தப் பட்டணம் வெகு தூரத்தில் இருப்பதினால் போதுமான வேகத்திற்கு அவனால் ஓடமுடியாமல் போகலாம். அப்போது கொலையுண்டவனின் நெருங்கிய உறவினன் பழிவாங்கும் நோக்கத்தோடு அவனை விரட்டக்கூடும். அவன் கோபாவேசம் நிறைந்தவனாய் கொலை செய்தவனை நெருங்கியவுடன் அவனைக் கொன்று போடக்கூடும். இப்படி அவன் மரிக்க வேண்டியவனல்ல. ஏனெனில், அவன் முன் விரோதமின்றி கொலை செய்தவனாவான். இந்த மூன்று நகரங்களும் அவைகளைச் சுற்றியுள்ள ஜனங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும். அதனால்தான், நீங்கள் விசேஷமான அந்த மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுக்கக் கட்டளையிட்டேன்.

“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு வாக்களித்தபடி உங்கள் தேசத்தை விரிவுபடுத்தி, உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கின்படி உங்களுக்கு இந்த தேசம் முழுவதையும் தருவார். தேவன் இதை உங்களுக்குச் செய்ய வேண்டுமென்றால், நான் இன்று உங்களுக்குத் தருகின்ற கட்டளைகளுக்கெல்லாம் நீங்கள் கீழ்ப்படிந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது நீங்கள் அன்பு செலுத்தும்பொருட்டு அவர் விரும்பியபடி நீங்கள் வாழவேண்டும். பின் கர்த்தர், உங்கள் தேசத்தை விரிவாக்கித் தருவதோடு, உங்கள் அடைக்கலத்திற்காக மூன்று பட்டணங்களை நீங்கள் அமைத்துக்கொள்ளச் செய்வார். 10 பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்குகின்ற தேசத்தில் கள்ளம் கபடில்லாத அப்பாவி ஜனங்கள் கொல்லப்படமாட்டார்கள். அது மட்டுமின்றி, உங்கள் மீது எவ்வித கொலைக் குற்றமும் சுமத்தப்படாது.

11 “ஒருவன் வேறொருவன் மீது வெறுப்படைந்து அவனைப் பழிவாங்கும் விரோதத்தோடு காத்திருந்து அவன் மரிக்கும்படி அடித்துவிட்டு, இந்த நகரங்களுக்குள் ஒன்றில் ஓடிப்போய், தன்னைக் காத்துக்கொள்வான் என்றால், 12 அந்த நகரத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அவன் தன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் வீட்டிற்குச் சென்று அவனைக் கொண்டுவந்து, அவனைப் பழிவாங்கத் துடிக்கும் மரித்தவனின் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். கொலை செய்தவன் கண்டிப்பாக மரிக்க வேண்டும். 13 நீங்கள் அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். அவன் ஏதுமறியாத ஒரு அப்பாவியை கொன்ற குற்றவாளி. நீங்கள் அந்தக் குற்றத்தை இஸ்ரவேலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அப்போது, எல்லாம் உங்களுக்கு நல்லதாக அமையும்.

சொத்திற்கான எல்லை

14 “உங்களது அயலாரின் சொத்திற்கான எல்லைக் கல்லை நீங்கள் நகர்த்த கூடாது. உங்களது தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தந்த நிலத்தில் உங்களது முன்னோர் இட்ட எல்லைக் கோடுகளையே நீங்களும், அவரவரது சொத்திற்கான எல்லைக் கற்களாக அடையாளமிட்டு வையுங்கள்.

சாட்சிகள்

15 “சட்டத்திற்கு எதிராக ஏதாவது குற்றத்தைச் செய்த நபரை, ஒரே ஒரு சாட்சியை வைத்து ‘அவன் குற்றவாளி’ என்று நிரூபிக்காதீர்கள். அவன் அக்குற்றத்தைச் செய்தானா இல்லையா என்பதை, இரண்டு அல்லது மூன்று சாட்சிகளை வைத்து நிரூபிக்க வேண்டும்.

16 “ஒருவன் குற்றத்தைச் செய்தான் என்று மற்றொருவன் அவன் மேல் பொய் சொல்லக்கூடும். 17 பின், அவ்விருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று நீதியைப் பெற, அங்கு பணியில் இருக்கும் ஆசாரியர் மற்றும் நீதிபதிகளிடம் நிற்கவேண்டும். 18 நீதிபதிகள், நன்றாக விசாரிப்பதன் மூலம் அந்த நபருக்கு எதிராக பொய்சாட்சி கூறியதாகக் கண்டறிந்தால், அவன் பொய்சாட்சி என்று நிரூபிக்கப்பட்டால், 19 நீங்கள் அவனைத் தண்டிக்கவேண்டும். அவன் மற்றவர்களுக்குச் செய்ய விரும்பியதையே நீங்கள் அவனுக்கு செய்யவேண்டும். இந்த வித மாக, இந்தத் தீமையை உங்கள் சமுதாயத்திலிருந்து அகற்றிவிட வேண்டும். 20 மற்ற ஜனங்கள் அனைவரும் இதைக் கேட்டும் கண்டும் பயப்படுவார்கள். அதுமட்டுமின்றி, மீண்டும் இத்தகைய தீயச் செயலைச் செய்யாதிருப்பார்கள்.

21 “குற்றங்களுக்குத் தகுந்தாற்போல் தண்டனைகளும் கடுமையாக இருக்கவேண்டும். ஒருவன் செய்த குற்றத்திற்காக அவனைத் தண்டிக்கின்றபோது, அதற்காக நீங்கள் வருத்தம் கொள்ளாதீர்கள். ஒருவன் ஒரு உயிரை எடுத்தான் என்றால் அவன் கண்டிப்பாக அவனது உயிரை இழப்பான். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், என்பதே சட்டமாகும்.

போருக்கான விதிகள்

20 “நீங்கள் உங்கள் எதிரிகளை எதிர்த்து, போருக்காகக் செல்லும்போது குதிரைகளையும், இரதங்ளையும், உங்களிடமிருப்பவர்களைவிட மிகுதியான ஜனங்களையும் அவர்களிடம் கண்டால், அவற்றைக் கண்டு பயப்படாதிருங்கள். ஏனென்றால் எகிப்து தேசத்திலிருந்து வெளியே அழைத்து வந்த உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு கூடவே இருக்கின்றார்.

“நீங்கள் போருக்குச் செல்கின்றபோது, ஆசாரியன் போர் வீரர்களுடன் சேர்ந்து வந்து அவர்களுடன் பேசவேண்டும். ஆசாரியன் உங்களிடம், ‘இஸ்ரவேல் ஜனங்களே நான் கூறுவதை கேளுங்கள், நீங்கள் இன்று போரில் உங்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடப் போகின்றீர்கள். நீங்கள் மனந்தளர்ந்துவிடாதீர்கள்! நீங்கள் அவர்களைக் கண்டு கலக்கமோ, விரக்தியோ அடைந்து விடாதீர்கள்! உங்கள் எதிரிகளைக் கண்டு பயந்துவிடாதீர்கள்! ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு வருகின்றார். அவர் உங்கள் எதிரிகளை எதிர்த்து நீங்கள் போரிட துணைசெய்வார். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வெற்றிப் பெற துணைபுரிவார்!’ என்று கூறவேண்டும்.

“அந்த லேவிய அதிகாரிகள் வீரர்களிடம்: ‘இங்கே யாராவது புது வீட்டைக்கட்டி இன்னும் அவ்வீட்டைப் பிரதிஷ்டை செய்யாமல் இங்கு போருக்காக வந்திருப்பீர்கள் என்றால், அவன் அவ்வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். ஏனென்றால் போரில் அவன் கொல்லப்பட்டால் அவனது வீட்டினை மற்றொருவன் பிரதிஷ்டை பண்ண நேரிடும். தன் தோட்டத்தில் திராட்சையைப் பயிரிட்டு, அதன் பலனை அனுபவிக்காதவர் யாரும் இங்கே இருந்தால், அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். ஏனெனில் யுத்தத்தில் அவன் மரித்துவிட்டால், பின் வேறொருவன் அவன் தோட்டத்துத் திராட்சையை அனுபவிக்க நேரிடும். திருமணம் நிச்சயிக்கப்பட்டவன் யாரேனும் இங்கு இருந்தால் அவன் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். போரில் அவன் மரித்துவிட்டால், பின் வேறொருவன் இவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொள்ள நேரிடும்’ என்று சொல்வார்கள்.

“மேலும் அவ்வதிகாரிகள் ஜனங்களிடம் கண்டிப்பாகக் கூறவேண்டியது, ‘இங்கே தன்னம்பிக்கை இழந்து, பயந்துகொண்டு இருக்கின்ற தைரியமற்றவர்கள் யாராவது இருந்தால் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அப்போதுதான் மற்ற வீரர்கள் மனந்தளர்ந்திட இவன் காரணமாக இருக்கமாட்டான்.’ பின்பு, அந்த அதிகாரிகள் படை வீரர்களுடன் பேசி முடித்த பின்பு, வீரர்களைத் தலைமை ஏற்றுச்செல்ல தளபதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

10 “நீங்கள் ஒரு நகரத்தைத் தாக்கச் செல்லும்போது, முதலில் அந்த நகர ஜனங்களுக்கு சமாதானம் கூறவேண்டும். 11 அவர்கள் உங்களது சமாதானத்தை ஏற்றுக்கொண்டால், அவர்களது வாசல்களைத் திறந்திடுவார்கள். பின், அந்நகரத்தின் எல்லா ஜனங்களும் உங்களது அடிமைகளாகிவிடுவதுடன், உங்களுக்காக ஊழியம் செய்ய முன் வருவார்கள். 12 ஆனால், அந்த நகர ஜனங்கள் உங்களோடு சமாதானம் செய்ய மறுத்து உங்களை எதிர்த்து சண்டையிட்டால், நீங்கள் அந்த நகரத்தை முற்றுகையிடுங்கள். 13 உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்நகரைக் கைப்பற்ற உங்களை அனுமதிக்கும்போது, நீங்கள் அங்குள்ள ஆண்கள் அனைவரையும் கொல்லவேண்டும். 14 ஆனால் நீங்கள் அங்குள்ள பெண்கள், குழந்தைகள், மாடுகள் ஆகியவற்றைக் கொல்லாமல் உங்களுக்காக அந்நகரிலுள்ள எல்லாப் பொருட்களையும் எடுத்து அனுபவிப்பீர்களாக. இந்த எல்லாப் பொருட்களையும், நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகவே இவற்றையெல்லாம் கொடுத்துள்ளார். 15 நீங்கள் வசிக்கின்ற நகரங்களையுடைய இந்த தேசத்தை விட்டு வெகுதூரத்திலுள்ள எல்லா நகரங்களிலும் இவ்வாறே செய்வீர்களாக.

16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இதைச் செய்யக் கட்டளையிட்டுள்ளார். 18 ஏனென்றால் அவர்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக உங்களை எந்தவொரு பாவத்தையும் செய்யக் கற்றுக்கொடுக்க முடியாது. அவர்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொண்ட அந்த அருவருப்பான செயல்களில் எந்த ஒன்றையும் உங்களை செய்யுமாறு கற்றுக்கொடுக்க இயலாத வண்ணம் அவர்களை அழிக்கவேண்டும்.

19 “நீங்கள் ஒரு நகரத்தை எதிர்த்துப் போர் செய்யும்போது, அந்நகரத்தை நீண்ட காலம் முற்றுகையிடுகின்ற நிலையில் அந்நகரைச் சுற்றிலும் உள்ள எந்தவொரு பழங்கள் தரக்கூடிய மரத்தையும் நீங்கள் வெட்டக் கூடாது, நீங்கள் அவற்றை வெட்டாமல் இருந்தால்தான், அந்த மரங்களிலிருந்து நீங்கள் உண்ணுவதற்காகப் பழங்களைப் பெறலாம். அந்த மரங்கள் எல்லாம் உங்களுக்கு எதிரி அல்ல. ஆகையால், அவைகளுக்கு எதிராக நீங்கள் போரிட வேண்டாம். 20 ஆனால் உண்ணுவதற்கேற்ற பழங்களைத் தராத மரங்கள் என்று நீங்கள் அறிந்தபின் மரங்களை வெட்டிக்கொள்ளலாம். நீங்கள், அந்த மரங்களை எடுத்து அந்த நகரத்தை முற்றுகையிடவும், அந்நகருக்கு எதிராக நடத்தும் போரில் தேவையான படைக்கருவிகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு அந்நகரம் வீழ்ச்சி அடையும்வரை, நீங்கள் அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center