Beginning
அனுதின பலிகள்
28 கர்த்தர் மோசேயிடம் பேசினார். அவர், 2 “இஸ்ரவேல் ஜனங்களுக்கு இந்தக் கட்டளையையும் கொடு. எனக்குரிய தானியக் காணிக்கையையும், பலிகளையும் உரிய காலத்தில் கொடுக்க வேண்டும் என்று சொல். அவற்றில் தகனபலியும் ஒன்று. அதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடிக்கும். 3 கர்த்தருக்கு ஜனங்கள் கொடுக்க வேண்டிய பலிகளில் நெருப்பில் இடப்படும் தகன பலியும் ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒரு வயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிட வேண்டும். 4 இவற்றில் ஒன்றைக் காலையிலும், மற்றொன்றைச் சூரியன் அஸ்தமிக்கும் வேளையிலும் பானங்களின் காணிக்கையோடு கொடுக்க வேண்டும். 5 பிறகு தானியக் காணிக்கையும் தரவேண்டும். அதாவது ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கான மெல்லிய மாவை, காற்படி ஒலிவ எண்ணெயிலே பிசைந்து செலுத்த வேண்டும். 6 (சீனாய் மலையில் அவர்கள் இவ்வாறு செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் இதனை நெருப்பில் தனகபலியாகச் செய்தனர். அதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடித்தமாயிருந்தது.) 7 அவர்கள் தகனபலியோடுச் சேர்த்து பானங்களின் காணிக்கையையும் கொடுத்தனர். ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் அவர்கள் காற்படி திராட்சை ரசத்தையும் அளிக்க வேண்டும். பலிபீடத்தின் பரிசுத்தமான இடத்தில் பானங்களின் காணிக்கையை ஊற்ற வேண்டும். இது கர்த்தருக்குத் தரும் அன்பளிப்பாகும். 8 மாலையில் சூரியன் அஸ்தமித்த பிறகு இன்னொரு ஆட்டுக்குட்டியைப் பலியிட வேண்டும். காலையில் செய்தது போலவே மாலையிலும் செய்ய வேண்டும். அதோடு பானங்களின் பலியையும் கொடுக்க வேண்டும். இந்தப் பலியானது நெருப்பின் மூலம் செலுத்தப்பட வேண்டும். இதன் நறுமணம் கர்த்தருக்குப் பிடிக்கும்.”
ஓய்வு நாள் பலிகள்
9 “ஓய்வு நாளுக்கு, நீங்கள் ஒரு வயதான 2 ஆட்டுக்குட்டிகளைக் கொடுக்க வேண்டும். அவை பழுதற்றதாக இருக்க வேண்டும். அதோடு தானியக் காணிக்கையையும் கொடுக்க வேண்டும். மெல்லிய மாவிலே பத்தில் இரண்டு பங்கினை ஒலிவ எண்ணெயிலே பிசைந்து தரவேண்டும். பானங்களின் காணிக்கையையும் தரவேண்டும். 10 இது ஓய்வு நாளுக்குரிய சிறப்பான பலியாகும். இது, வழக்கமான தினப் பலிகளோடு சேர்த்து கொடுக்க வேண்டிய பலியாகும் பானங்களின் காணிக்கையும் இதோடு சேரவேண்டும்.
மாதாந்தர கூட்டங்கள்
11 “ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் கர்த்தருக்கு விசேஷமான ஒரு தகனபலி கொடுக்க வேண்டும். இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதுடைய ஏழு பழுதற்ற ஆட்டுக் குட்டிகளையும் பலி தரவேண்டும். 12 ஒவ்வொரு காளையோடும் தானியக் காணிக்கையும் கொடுக்க வேண்டும். அது பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவை ஒலிவ எண்ணெயிலே பிசைந்து கொடுக்க வேண்டும். ஆட்டுக்கடாவோடு கொடுக்கப்படும் உணவுப் பலியில் பத்தில் இரண்டு பங்கான மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து கொடுக்க வேண்டும். 13 ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் தரப்படும் தானியப்பலியில் பத்திலே ஒரு பங்கான மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து கொடுக்க வேண்டும். இவற்றை நெருப்பில் தகன பலிகயாகக் கொடுக்கவேண்டும். இதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். 14 பானங்களின் காணிக்கையானது ஒவ்வொரு காளையோடு அரைப்படி திராட்சைரசமாக இருக்க வேண்டும். செம்மறி ஆட்டுக்கடாவோடு ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சை ரசத்தையும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும் அரைப்படி திராட்சைரசமும் கொடுக்க வேண்டும். இவை தகன பலியாக ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் அளிக்க வேண்டும். 15 வழக்கமாக நாள் தோறும் தரப்படும் தகன பலியோடும், பானபலியோடும் ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவப்பரிகாரப் பலியாகக் கொடுக்க வேண்டும்.
பஸ்கா
16 “முதல் மாதத்தின் 14வது நாள் கர்த்தருடைய பஸ்கா பண்டிகையாகும். 17 அம்மாதத்தின் 15வது நாளில் புளிப்பில்லா அப்பப் பண்டிகை துவங்குகிறது. இது ஏழு நாட்களுக்கு இருக்கும். இந்த நாட்களில் புளிப்பில்லாத அப்பத்தை மட்டும் சாப்பிட வேண்டும். 18 இதன் முதல் நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. 19 கர்த்தருக்கு தகனபலி தர வேண்டும். அதில் 2 காளைகள், 1 ஆட்டுக்கடா, ஒரு வயதுடைய 7 ஆட்டுக்குட்டிகள் இருக்க வேண்டும். இவற்றில் எந்தக்குறையும் இருக்கக் கூடாது. 20-21 தானியக் காணிக்கையாக ஒவ்வொரு காளையோடும் பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவினை எண்ணெயோடு பிசைந்து தரவேண்டும். ஆட்டுக் கடாவோடு பத்தில் இரண்டு பங்கான மெல்லிய மாவினை எண்ணெயோடு பிசைந்து தர வேண்டும்; ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் பத்தில் ஒரு பங்கான மெல்லிய மாவினை எண்ணெயோடு பிசைந்து தர வேண்டும். 22 அத்தோடு நீங்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் கொடுக்க வேண்டும். அது உங்களை சுத்தப்படுத்தும் பாவப்பரிகாரப் பலியாகும். 23 இதனை நீங்கள் வழக்கமாகக் காலையில் கொடுக்கும் பலியோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
24 “இதுபோலவே, ஏழு நாட்கள் ஒவ்வொரு நாளிலும் இவற்றை நெருப்பில் தகன பலியாகக் கொடுக்க வேண்டும். அதனோடு பானங்களின் காணிக்கையும் சேரும். கர்த்தருக்கு இம்மணம் மிகவும் பிடிக்கும். இப்பலிகள் ஜனங்களுக்கு உணவாகும். நீங்கள் இதனை வழக்கமாக ஒவ்வொரு நாளும் கொடுக்கும் பலியோடு சேர்த்து கொடுக்க வேண்டும்.
25 “இதன் ஏழாவது நாள் இன்னொரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எவ்வித வேலையும் செய்யக்கூடாது.
வாரங்களின் விழா (பெந்தெகோஸ்தே)
26 “முதல் கனிகளைச் செலுத்தும் பண்டிகையின் போதும் (பெந்தெகோஸ்தே என்னும் வாரங்களின் பண்டிகை) புதிய அறுவடையின்போது கர்த்தருக்கு தானியக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அப்போது ஒரு சிறப்புக் கூட்டத்திற்கும் நீங்கள் ஏற்பாடு செய்யவேண்டும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. 27 நீங்கள் ஒரு தகன பலியைக் கொடுக்க வேண்டும். இது நெருப்பின் மூலம் அளிக்கப்பட வேண்டும். இந்த வாசனை கர்த்தருக்கு மிகவும் பிடிக்கும். அப்போது நீங்கள் 2 காளைகளையும், 1 செம்மறி ஆட்டுக்கடாவையும், 7 ஆட்டுக்குட்டிகளையும் பலி தர வேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஓராண்டு வயதுடையதாய் பழுதற்றதாய் இருக்க வேண்டும். 28 ஒவ்வொரு காளையோடும் 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும்; ஒவ்வொரு செம்மறி ஆட்டுக் கடாவோடும், 16 கிண்ணம் மெல்லியமாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 29 ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும், 8 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும். 30 ஒரு வெள்ளாட்டுக் கடாவை உங்களைச் சுத்தப்படுத்த பாவப்பரிகார பலியாகத் தர வேண்டும். 31 நீங்கள் இந்தப் பலிகளை வழக்கமாகத்தரும் தினப் பலிகளோடு சேர்த்துத் தர வேண்டும். மிருகங்களில் எவ்வித குறையும் இல்லாதவாறு எச்சரிக்கையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். பானங்களின் காணிக்கைகளிலும் குறையில்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
எக்காளங்களின் பண்டிகை
29 “ஏழாவது மாதத்தின் முதல் நாளில் ஒரு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. அந்நாளில் எக்காளம் ஊதவேண்டும். 2 அப்போது நீங்கள் தகனபலி தரவேண்டும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதுள்ள எவ்வித குறையும் இல்லாத 7 ஆட்டுக்குட்டிகளையும் பலி தரவேண்டும். 3 அதோடு உணவுபலியும் தரவேண்டும். அதில் காளையோடு 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக்கடாவோடு 16 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும். 4 ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 5 அதோடு பாவப்பிரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் உங்களை சுத்தப்படுத்த கொடுக்க வேண்டும். 6 இப்பலிகள் வழக்கமான மாதப்பிறப்பின் நாளின் சர்வாங்க தகன பலியோடு சேரவேண்டும். அத்துடன் தானியக் காணிக்கையும் தர வேண்டும். இது தினந்தோறும் அளிக்கப்படும் தகனபலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்ந்திருக்க வேண்டும். இப்பலிகள் விதிகளின்படி அமைந்திருக்க வேண்டும். இப்பலிகள் நெருப்பில் தகனம் செய்யப்பட வேண்டும். இந்த நறுமணம் கர்த்தருக்குப் பிரியமானது.
பாவப்பரிகார நாள்
7 “ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அந்த நாளில் எந்த உணைவையும் உண்ணக் கூடாது. அன்று வேறு வேலைகள் எதையும் செய்யக் கூடாது. 8 நீங்கள் அன்றைக்குத் தகனபலி தர வேண்டும். அவற்றின் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 1 காளையையும் 1 ஆட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய 7 ஆட்டுக்குட்டிகளையும் தர வேண்டும். இவை பழுதற்றதாக இருக்கவேண்டும். 9 இத்துடன் உணவுப்பலி தரவேண்டும். காளையோடு 24 கிண்ணம் மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஆட்டுக் கடவோடு 16 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 10 ஒவ்வொரு ஆட்டுக்குட்டியோடும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 11 அத்துடன் உங்களைப் பரிசுத்தப்படுத்த பாவப்பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் பலி தரவேண்டும். இது வழக்கமான தினப் பலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலான ஒன்றாக அமையும்.
அடைக்கல கூடாரப் பண்டிகை
12 “ஏழாவது மாதத்தின் பதினைந்தாவது நாளில் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். இது அடைக்கல கூடாரப் பண்டிகை எனப்படும். அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. கர்த்தருக்காக அந்நேரத்தில் ஏழு நாட்களை சிறப்பு விடுமுறை நாட்களாகக் கொண்டாடவேண்டும். 13 நீங்கள் தகன பலியையும் தரவேண்டும். அவை நெருப்பில் தகனிக்கப்படவேண்டும். அந்த மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 13 காளைகளையும் 2 ஆட்டுக்கடாக்களையும் 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக் குட்டிகள் ஒரு வயதுடையதாக இருப்பதுடன், எவ்வித குறைபாடும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 14 இதோடு உணவுப்பலியும் தரவேண்டும். ஒவ்வொரு காளைக்கும் 24 கிண்ணம் மெல்லிய மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். ஒவ்வொரு ஆட்டுக்கடாவுக்கும் 16 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 15 ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கும் 8 கிண்ணம் மென்மையான மாவை எண்ணெயுடன் பிசைந்து தரவேண்டும். 16 ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் நீங்கள் இவற்றோடு தனியே தரவேண்டும். இவை தினந்தோறும் அளிக்கப்படும் தகனபலி, தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்த்துத் தரவேண்டும்.
17 “இந்த விடுமுறையின் இரண்டாவது நாளில் 12 காளைகளையும், 2 ஆட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், எவ்வித குறையும் இல்லாததாகவும், இருக்கவேண்டும். 18 நீங்கள் இந்த மிருகங்களுக்கு ஏற்ற சரியான தானியக் காணிக்கையையும் தரவேண்டும். அதோடு பானங்களின் காணிக்கையும் காளையோடும், ஆட்டுக்கடாவோடும், ஆட்டுக்குட்டிகளோடும் தரவேண்டும். 19 பாவநிவாரணப் பலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் தரவேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேர்க்கையாக இருக்கவேண்டும்.
20 “இந்த விடுமுறையின் மூன்றாவது நாளில் நீங்கள் 11 காளைகளையும், 2 ஆட்டுக்கடாக்களையும், 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதும் எவ்வித குறையும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 21 நீங்கள் இந்தக் காளை, கடா மற்றும் ஆட்டுக்குட்டிகளோடு சரியான அளவில் தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையும் கொடுக்கவேண்டும். 22 நீங்கள் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் கொடுக்க வேண்டும். இவை தினந்தோறும் கொடுக்கப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு சேரவேண்டும்.
23 “இந்த விடுமுறையின் நான்காவது நாளில் நீங்கள் 10 காளைகளையும், 2 வெள்ளாட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுக் குட்டிகளையும் தர வேண்டும். குட்டிகள் ஒரு வயதும், எவ்விதக்குறையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும். 24 இந்தக் காளைகள், கடாக்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றோடு சரியான அளவில் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையும் கொடுக்கவேண்டும். 25 பாவப்பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தரவேண்டும். இவை தினந்தோறும் கொடுக்கப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையுடன் கூடுதலான ஒன்றாகச் செலுத்த வேண்டும்.
26 “இந்த விமுறையின் ஐந்தாவது நாளில் நீங்கள் 9 காளைகளையும், 2 ஆட்டுக் கடாக்களையும், 14 ஆட்டுகுட்டிகளையும் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகள் ஒரு வயதும், எவ்விதக் குறைகளும் இல்லாததாகவும் இருக்கவேண்டும். 27 நீங்கள் இவற்றுக்குச் சரியான அளவில் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக்கடாக்களோடும் ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும். 28 நீங்கள் இவற்றோடு ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் பாவப்பரிகாரப் பலியாகத் தரவேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலான ஒன்றாக அமையும்.
29 “இந்த விடுமுறையின் ஆறாவது நாளில் நீங்கள் 8 காளைகளையும் 2 ஆட்டுக் கடாக்களையும் 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், எவ்விதக் குறையும் இல்லாததாகவும் இருக்க வேண்டும். 30 நீங்கள் இவற்றுக்குச் சரியான அளவில் தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக்கடாக்களோடும், ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும். 31 நீங்கள் இவற்றில் ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப்பரிகாரப் பலியாக செலுத்த வேண்டும். இவை தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கை மற்றும் பானங்களின் காணிக்கையோடு கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
32 “இந்த விடுமுறையின் ஏழாவது நாளில் நீங்கள் 7 காளைகளையும் 2 ஆட்டுக் கடாக்களையும் 14 ஆட்டுக் குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஒரு வயதுடையதாகவும், குறை இல்லாததாகவும் இருக்க வேண்டும். 33 நீங்கள் இதற்கு ஏற்ற சரியான அளவுடையதாக தானியக் காணிக்கையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும், ஆட்டுக் கடாக்களோடும், ஆட்டுக் குட்டிகளோடும் தர வேண்டும். 34 நீங்கள் ஒரு வெள்ளாட்டுக் கடாவைப் பாவப்பரிகாரப் பலியாகக் கொடுக்கவேண்டும். இது வழக்கமாக தினந்தோறும் தரப்படும் தானியக் காணிக்கையும் மற்றும் பானங்களின் காணிக்கைக்கும் சேர்க்கையாகும்.
35 “இந்த விடுமுறையின் எட்டாவது நாளில் ஒரு மிகச் சிறப்பான கூட்டம் நடைபெறும். அந்நாளில், நீங்கள் எவ்வித வேலையும் செய்ய வேண்டாம். 36 நீங்கள் ஒரு தகன பலி கொடுக்கவேண்டும். இதை நெருப்பில் தகனம் செய்யவேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 1 காளையையும், 1 வெள்ளாட்டுக்கடாவையும், 7 ஆட்டுக் குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஓராண்டு வயதும் எவ்விதக் குறையும் இல்லாததாயும் இருக்க வேண்டும் 37 இவற்றுக்கு ஏற்ற சரியான அளவில் தானியக் காணிக்கையையும் பானங்களின் காணிக்கையையும் காளைகளோடும் ஆட்டுக் கடாக்களோடும் ஆட்டுக் குட்டிகளோடும் கொடுக்க வேண்டும். 38 நீங்கள் பாவப் பரிகாரப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தரவேண்டும். இவை வழக்கமாகத் தினந்தோறும் தரப்படும் தானியம் மற்றும் பானங்களின் காணிக்கைகளோடு கூடுதலான ஒன்றாக அமையும்.
39 “சிறப்பான விடுமுறைகளில் நீங்கள் தகனபலித் தரவேண்டும். அதோடு தானியக் காணிக்கை, பானங்களின் காணிக்கை, மற்றும் சமாதான பலிகளையும் தரவேண்டும். நீங்கள் இவற்றை கர்த்தருக்கு தரவேண்டும். இப்பலிகள் நீங்கள் கொடுக்க விரும்பும் சிறப்பான அன்பளிப்புகளுக்குச் சேர்க்கையாக இருக்கும். இவற்றை விசேஷ வாக்குறுதிகளைச் செய்யும்போதும் கொடுக்கவேண்டும்” என்றார்.
40 இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே கர்த்தர் ஆணையிட்ட அனைத்தையும்பற்றி கூறினான்.
விசேஷ பொருத்தனைகள்
30 இஸ்ரவேல் கோத்திரங்களில் உள்ள தலைவர்களைப் பார்த்து மோசே பேசினான். கர்த்தர் தனக்குச் சொன்ன இக்கட்டளைகளை எல்லாம் மோசே அவர்களிடம் சொன்னான். அவன்,
2 “ஒருவன் கர்த்தருக்கு ஏதாவது விசேஷ பொருத்தனை செய்ய விரும்பினால், அல்லது கர்த்தருக்கு விசேஷமானவற்றைக் கொடுக்க விரும்பினால், அவன் அவ்வாறே செய்யட்டும். ஆனால் அவன் வாக்களித்தபடிக் கொடுக்க வேண்டும்!
3 “ஓர் இளம் பெண் தன் தகப்பன் வீட்டில் இருக்கும்போது சிலவற்றை கொடுப்பதாக அவள் கர்த்தரிடம் ஒரு விசேஷ பொருத்தனை பண்ணியிருக்கலாம். 4 இதைப்பற்றி அவளது தந்தை தெரிந்துகொண்டு அந்த வாக்கை நிறைவேற்ற ஒப்புக்கொண்டால் பிறகு அவள் தன் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும். 5 ஆனால் அவளது வேண்டுதலை அவளது தந்தை அறிந்து அதைத் தடுத்தால், பிறகு அவள் தன் வாக்கில் இருந்து விடுதலை பெறுகிறாள். அவள் தனது பொருத்தனையை நிறைவேற்றத் தேவையில்லை. அவளது தந்தை அவளைத் தடுத்துவிட்டால் அவளை கர்த்தர் மன்னித்துவிடுவார்.
6 “ஒரு பெண் தான் கர்த்தருக்கு சிலவற்றைக் கொடுப்பதாக விசேஷ வாக்கை கர்த்தரிடம் செய்த பிறகு திருமணம் ஆகியிருக்கலாம். 7 அவளது கணவன் அந்த வேண்டுதலை அறிந்து அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டால் அவள் அதை நிறைவேற்ற வேண்டும். 8 ஆனால் அவளது கணவன் அவளது வேண்டுதலை அறிந்து மறுத்துவிட்டால் பிறகு அவள் தன் வாக்கை நிறைவேற்ற வேண்டாம். அவளது கணவன் அந்த வாக்கை முறித்து அதனை நிறைவேற்ற முடியாதபடி செய்துவிட்டதால் கர்த்தர் அவளை மன்னித்துவிடுவார்.
9 “ஒரு விதவை அல்லது விவாகரத்து செய்துகொண்ட பெண் சிறப்பான பொருத்தனை செய்திருக்கலாம். அப்போது அவள் தனது பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும்.
10 “ஒரு திருமணமானப் பெண் கர்த்தருக்கு ஒரு பொருத்தனை செய்திருக்கலாம். 11 இதைப்பற்றி அவளது கணவன் அறிந்து அதை அவன் அனுமதித்துவிட்டால் பிறகு அவள் தன் பொருத்தனையை நிறைவேற்ற வேண்டும். அவள் வாக்கின்படி அனைத்தையும் கொடுக்க வேண்டும். 12 ஆனால் அவளது கணவன் அதனை அறிந்து மறுத்துவிட்டால், அவள் தன் வாக்கை நிறைவேற்ற தேவையில்லை. அவளது வாக்கை அவளது கணவன் முறித்துவிட்டதால் அது பொருட்படுத்தக் கூடியதாக இல்லை. எனவே கர்த்தர் மன்னித்துவிடுவார். 13 ஒரு திருமணமான பெண் கர்த்தருக்குச் சிலவற்றைத் தருவதாக வாக்களித்திருக்கலாம்; அல்லது அவள் தன் ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி ஆணையிட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது விசேஷ வாக்குறுதிகளைச் செய்திருக்கலாம். அவற்றை அவளது கணவன் தடுக்கவோ அல்லது காப்பாற்றவோ செய்யலாம். 14 எவ்வாறு ஒரு கணவன் தன் மனைவியின் வாக்கை நிறைவேற்ற உதவ முடியும்? அவன் அதைப் பற்றி அறிந்ததை ஏற்றுக்கொண்டால் போதும். அவன் மறுக்காத பட்சத்தில் அவள் அதனை முழுமையாகச் செய்து முடித்துவிட வேண்டும். 15 ஆனால் அவளது கணவன் அவளது வாக்கை அறிந்தும் தடுத்துவிட்டால், வாக்குறுதியை உடைத்த பொறுப்பு அவனைச் சார்ந்ததாகும்” என்றான்.
16 இந்தக் கட்டளைகளையே மோசேயிடம் கர்த்தர் கூறினார். இவை, ஒருவனுக்கும் அவன் மனைவிக்கும் உரிய கட்டளைகளாகும். இவை, ஒரு தந்தைக்கும் தந்தை வீட்டில் வாழும் இளம் பெண்ணுக்கும் உரிய கட்டளைகளாகும்.
2008 by World Bible Translation Center