Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
லேவியராகமம் 14-15

தொழுநோயாளியைச் சுத்தப்படுத்துவதற்கான விதிகள்

14 மேலும் கர்த்தர் மோசேயிடம், “இவை தொழுநோயாளிகள் குணமாவதற்கும், அவர்களைச் சுத்தப்படுத்துவதற்குமுரிய விதி முறைகளாகும்.

“தொழுநோயுள்ள ஒருவனை ஆசாரியன் சோதித்துப் பார்க்க வேண்டும். ஆசாரியன் கூடாரத்திற்கு வெளியே போய் அவன் நோய் குணமாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். அவனது நோய் குணமாகியிருந்தால் அவனிடம் கீழ்க்கண்டவற்றை செய்யும்படி கூறவேண்டும். முதலில் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டைகளையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வரவேண்டும். பின்னர், ஆசாரியன் அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும். அடுத்து ஆசாரியன், உயிருள்ள குருவியையும் அதோடு கேதுரு கட்டையையும் சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து அதில் கொல்லப்பட்டக் குருவியின் இரத்தத்தைத் தோய்க்க வேண்டும். பின் ஆசாரியன் நோய் நீங்கப்பட்டவனின் மேல் ஏழுதரம் தெளித்து அவனைச் சுத்தப்படுத்த வேண்டும். பிறகு ஆசாரியன் அவனைத் தீட்டில்லாதவன் என அறிவிக்க வேண்டும். பின் ஆசாரியன் திறந்த நிலப்பரப்பிற்கு சென்று உயிருள்ள குருவியை விட்டுவிட வேண்டும்.

“பிறகு அவன் தன் ஆடைகளை துவைத்து, தன் முடியை மழித்துக்கொண்டு, தண்ணீரில் குளிக்க வேண்டும். பின்னரே அவன் சுத்தமாவான். அதன் பின் அவன் கூடாரத்திற்குள் செல்லலாம். ஆனால் அவன் ஏழு நாட்கள் கூடாரத்திற்கு வெளியிலேயே தங்கவேண்டும். ஏழாவது நாள் அவன் தன் தலை முடி, தாடி, புருவம் என அனைத்து முடியையும் மழித்துவிட வேண்டும். பின் தன் ஆடைகளைத் துவைத்துக் குளிக்க வேண்டும். இதன்பின் அவன் சுத்தமாவான்.

10 “எட்டாவது நாள், எவ்விதமான குறையுமற்ற இரண்டு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு வயதான எக்குறையுமில்லாத பெண் ஆட்டுக்குட்டியையும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவன் தானியக் காணிக்கைக்காக கொண்டு வரவேண்டும். இருபத்து நான்கு கிண்ணங்கள் எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவையும், ஆழாக்கு ஒலிவ எண்ணெயையும் கொண்டு வரவேண்டும். 11 அவனை தீட்டில்லாதவன் என்று அறிவித்த அதே ஆசாரியன் நோயுற்றவனையும் அவனது பலிப் பொருட்களையும் கர்த்தருக்கு முன்னால் ஆசரிப்புக் கூடாரத்திற்கு கொண்டு வர வேண்டும். 12 ஆசாரியன் ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை குற்ற பரிகார பலியாக செலுத்த வேண்டும். அவன் அதனையும் சிறிது எண்ணெயையும் அசைவாட்டும் பலியாகப் பயன்படுத்த வேண்டும். 13 பிறகு ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை பாவப் பரிகார பலியையும் தகனபலியையும் கொல்லுகிற பரிசுத்த இடத்தில் கொல்ல வேண்டும். குற்ற நிவாரண பலியானது பாவப்பரிகார பலி போன்றதாகும். அது ஆசாரியனுக்குரியது. அது மிகவும் பரிசுத்தமானது.

14 “ஆசாரியன் குற்ற பரிகார பலியின் இரத்தத்தில் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைச் சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காது நுனியில் தடவ வேண்டும். அது அவனைச் சுத்தமாக்கும். பிறகு கொஞ்சம் இரத்தத்தை அவனது வலது கையின் பெருவிரலிலும், வலதுகால் பெரு விரலிலும் தடவ வேண்டும். 15 மேலும் ஆசாரியன் எண்ணெயை எடுத்து தனது இடது உள்ளங்கையில் ஊற்றி 16 வலது கை விரலில் தொட்டு ஏழுமுறை கர்த்தரின் சந்நிதியில் தெளிக்க வேண்டும். 17 பிறகு ஆசாரியன் தன் உள்ளங்கையில் உள்ள மீதி எண்ணெயை எடுத்து சுத்திகரிக்கப்படவேண்டியவனின் வலது காது நுனியிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவ வேண்டும். 18 மேலும் மீதியுள்ள எண்ணெயை அவனது தலையிலே தடவ வேண்டும். இவ்வாறு, ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அவனைச் சுத்தப்படுத்தி விடுகிறான்.

19 “பின் ஆசாரியன் பாவப்பரிகார பலியைச் செலுத்தி சுத்திகரிக்கப்படவேண்டியவனின் தீட்டு நீங்க அவனுக்குப் பாவப்பரிகாரம் செய்துவிட வேண்டும். 20 பின்பு தகன பலிக்குரிய மிருகத்தைக் கொன்று அதனோடு தானியக் காணிக்கையையும் பலிபீடத்தின்மேல் வைத்து அவனுக்காகப் பாவப்பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது அவன் சுத்தமாவான்.

21 “ஆனால் ஒரு ஏழையால் இத்தகைய பலியைக் கொடுக்க இயலாது. அப்போது அவன் ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை மட்டும் கொண்டு வந்தால் போதும். அது அசைவாட்டும் பலியாகும். ஆசாரியன் இதன் மூலம் அவனைச் சுத்தப்படுத்தலாம். இதற்கு ஆசாரியன் எண்ணெயுடன் கலந்த மிருதுவான மாவிலே 8 கிண்ணம் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தானியக் காணிக்கைக்காக உபயோகப்படுத்தப்படும். 22 இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரு புறாக் குஞ்சுகளையாவது கொடுக்க வேண்டும். இவற்றில் ஒன்று பாவப்பரிகார பலிக்கும் இன்னொன்று தகன பலிக்கும் உரியது.

23 “எட்டாவது நாளில் மேற்கண்ட எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு அவன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஆசாரியனிடம் வர வேண்டும். அவை கர்த்தருக்கு முன்பு அளிக்கப்பட வேண்டும். அதனால் அவன் சுத்தமாவான். 24 ஆசாரியன் ஆண் ஆட்டுக்குட்டியைக் குற்றப்பரிகார பலிக்காக எடுத்துக்கொள்வான். இதையும் ஆழாக்கு எண்ணெயையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக செலுத்துவான். 25 பிறகு அந்த ஆண் ஆட்டுக்குட்டியை குற்றப்பரிகார பலிக்காகக் கொல்லுவான். அதன் இரத்தத்தைக் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காதின் நுனியிலும், வலதுகை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவுவான். 26 ஆசாரியன் தனது இடது உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு 27 பின் வலது கை விரலால் தொட்டு கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிப்பான். 28 மிச்சமிருக்கிற எண்ணெயைத் தொட்டு இரத்தத்தை தடவிய இடங்களில் எல்லாம் தடவுவான். அதனை அவனின் வலது காதின் நுனியிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவுவான். 29 உள்ளங்கையில் மேலும் மிச்சமிருக்கிற எண்ணெயை அவனது தலையில் தடவுவான். இவ்வாறு ஆசாரியன் அவனை கர்த்தருக்கு முன்பு சுத்தப்படுத்த வேண்டும்.

30 “பிறகு ஆசாரியன் ஒரு காட்டுப் புறாவையாவது, புறாக்குஞ்சையாவது பலியிட வேண்டும். (ஒருவன் எவற்றைக் கொடுக்க முடியுமோ அவற்றையே காணிக்கையாக அளிக்க வேண்டும்.) 31 இவற்றில் ஒன்றை பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். தானியக் காணிக்கையோடு இதனைச் சேர்த்துச் செலுத்த வேண்டும். இவ்வாறு ஆசாரியன் அவனை கர்த்தருக்கு முன்பு சுத்திகரிப்பு செய்யவேண்டும். அவனும் சுத்திகரிக்கப்படுவான்” என்றார்.

32 தொழுநோயுற்றவன் குணம் அடைந்தபின் சுத்திகரிப்புச் செய்யவேண்டிய விதிகள் இவையாகும். முறையான பலிகளைத் தரமுடியாதவர்கள் இவ்வாறு சில விதிகளைக் கடைப்பிடிக்கலாம் என்று கூறினார்.

வீட்டில் உள்ள நோய்க்கான விதிகள்

33 மேலும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் பார்த்து, 34 “நான் உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் அங்கு போய்ச் சேர்ந்த பின்பு உங்களில் சிலரது வீட்டிலே தொழுநோய் ஏற்படும்படி செய்தால் 35 அப்போது அந்த வீட்டிற்கு உரியவன் ஆசாரியனிடம் வந்து, ‘என் வீட்டில் தொழுநோய் போன்று ஒன்று இருப்பதைப் பார்த்தேன்’ என்று சொல்ல வேண்டும்.

36 “பிறகு அந்த ஆசாரியன், வீட்டில் உள்ள யாவற்றையும் வெளியே எடுத்துச் செல்ல ஜனங்களிடம் கூறவேண்டும். ஆசாரியன் அந்த வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தீட்டுக்குரியவை என்று சொல்லத் தேவை இருக்காது. வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வெளியே வைத்த பிறகுதான் ஆசாரியன் வீட்டிற்குள் நுழைய வேண்டும். 37 ஆசாரியன் அந்த வீட்டிற்குள் நுழைந்து தொழுநோயுள்ள இடங்களைக் கவனித்து பார்க்க வேண்டும். அப்போது சுவரில் கொஞ்சம் பச்சையும், சிவப்புமான குழிகள் சுவற்றின் மற்ற பகுதிகளைவிடப் பள்ளமாக இருப்பதைக் கண்டால், 38 ஆசாரியன் வெளியே வந்து அவ்வீட்டை ஏழு நாட்கள் பூட்டிவைக்க வேண்டும்.

39 “ஏழாம் நாள் ஆசாரியன் திரும்பப் போய், சோதித்துப் பார்க்க வேண்டும். தோஷம் வீட்டுச் சுவர்களில் பரவியிருந்தால் 40 ஆசாரியன் தோஷம் படிந்த கற்களைச் சுவற்றிலிருந்து பெயர்த்தெடுத்துப் பட்டணத்துக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட அசுத்தமான இடத்திலே கொண்டு போய் போடச் சொல்ல வேண்டும். 41 வீட்டினுள்ளே தரையைப் பெயர்த்து, அதையும் வெளியே அசுத்தமான இடத்தில் போட்டுவிட வேண்டும். 42 பிறகு சுவரில் புதிய கற்களை வைத்துப் பூசவேண்டும்.

43 “கற்களைப் பெயர்த்து வீட்டைச் செதுக்கி புதிதாய்ப் பூசின பிறகும் நோய் திரும்பவும் வந்தால், 44 ஆசாரியன் போய் அந்த வீட்டைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்த நோய் மேலும் சுவரில் பரவி இருந்தால் அதனை வீட்டை அரிக்கிற தொழுநோயாகக் கருதவேண்டும். அது தீட்டுள்ளதாக இருக்கும். 45 எனவே வீடு முழுவதையும் இடித்து அதன் கற்களையும் மரங்களையும் காரையையும் ஊருக்கு வெளியே அசுத்தமான தனி இடத்தில் கொட்டிவிட வேண்டும். 46 அந்த வீட்டிற்குள் நுழைகிற எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 47 அந்த வீட்டில் எவனாவது உண்டாலோ, உறங்கினாலோ, அவனும் தனது ஆடையைத் துவைக்க வேண்டும்.

48 “புதிய கற்களும் பூச்சும் முடிந்தபிறகு அவ்வீட்டை ஆசாரியன் சோதிக்கும்போது நோய் பரவியதற்கான அறிகுறி எதுவும் இல்லாவிட்டால் அவ்வீடு தீட்டு இல்லாததாய் ஆயிற்று என்று அறிவிக்க வேண்டும்.

49 “பிறகு அந்த வீட்டை சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அதற்கு ஆசாரியன் இரண்டு குருவிகளையும், கேதுரு கட்டையையும், ஒரு துண்டு சிவப்புத் துணியையும், ஈசோப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 50 அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும். 51 பிறகு கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்தில் இவற்றை மூழ்க வைக்க வேண்டும். பிறகு அந்த இரத்தத்தை ஆசாரியன் வீட்டின்மேல் ஏழுதரம் தெளிக்கவேண்டும். 52 குருவியின் இரத்தம், ஊற்று தண்ணீர், உயிருள்ள குருவி, ஈசோப்பு, கேதுருக் கட்டை, சிவப்பு நூல் போன்றவற்றால் வீட்டின் தீட்டினைக் கழிக்க வேண்டும். 53 பின் உயிருள்ள குருவியை நகருக்கு வெளியே விட்டுவிட வேண்டும். இம்முறையில் ஆசாரியன் வீட்டைச் சுத்தம் செய்வான். பிறகு வீடு சுத்தமாகும்” என்று கூறினார்.

54-55 துணிகளிலோ அல்லது வீட்டிலோ தோஷம் பிடித்தல், தொழுநோய், ஆகியன உண்டாகும்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே. 56 வீக்கம், அசறு, தோலில் வெள்ளைப் புள்ளிகள் உண்டாகுதல் ஆகியவற்றின்போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே. 57 பொருட்கள் எப்பொழுது சுத்தமாயுள்ளன, எப்பொழுது சுத்தமற்றவையாக உள்ளன எனக் கற்பிப்பதற்குரிய விதிகள் இவைகளே.

உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களுக்கான விதிகள்

15 பிறகு கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் பார்த்து, “நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: ஒருவனுக்கு உடற்கழிவுகள் ஏற்பட்டால் அதனாலும் தீட்டு உண்டாகும். இக்கழிவுகள் அவன் உடம்பிலிருந்து சரளமாக வெளியேறுகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை.

“உடற்கழிவு ஏற்பட்டவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும். அவன் எதன் மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும். அவனது படுக்கையைத் தொடுகிறவன் தனது ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவன் தீட்டுள்ளவனாக இருப்பான். உடற்கழிவு ஏற்பட்டவன் உட்காருகிற இடத்தில் உட்காருகிறவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை இவனும் தீட்டு உள்ளவனாக இருப்பான். உடற்கழிவு ஏற்படுகிறவனைத் தொடுபவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்கவேண்டும். மாலைவரை இவனுக்கும் தீட்டு இருக்கும். உடற்கழிவு உள்ளவனின் எச்சில் மேலேபட்டாலும் ஒருவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்கவேண்டும். மாலைவரை அவனுக்குத் தீட்டு இருக்கும். இத்தகையவன் ஏறுகிற எந்த சேணமும் தீட்டாகும். 10 இத்தகையவனுக்குக் கீழ் இருக்கிற எந்தப் பொருளையும் தொடுகிறவன் மாலைவரை தீட்டாயிருப்பான். அப்பொருளை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டு உள்ளவனாக இருப்பான். 11 சிற்சில இடங்களில் உடற்கழிவு உள்ளவன் தண்ணீரில் தன் கைகளைக் கழுவாமலே அடுத்தவனைத் தொட்டுவிட்டால், தொடப்பட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து குளிக்க வேண்டும். மாலைவரை அவன் தீட்டாக இருப்பான்.

12 “உடற்கழிவு ஏற்பட்டவன் ஏதேனும் மண் பாண்டத்தைத் தொட்டால் அம்மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். மரத்தாலான பாத்திரத்தை அவன் தொடநேர்ந்தால், அதைத் தண்ணீரால் கழுவ வேண்டும்.

13 “உடற்கழிவு உள்ளவன் அது நீங்கி சுத்தமானதும் அதற்குச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அதற்காக ஏழு நாட்கள் காத்திருந்து, தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அப்போதுதான் அவன் சுத்தமாவான். 14 எட்டாவது நாள் அவன் இரண்டு காட்டுப் புறாக்களையாவது, புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவற்றை கர்த்தருக்கு முன் கொண்டுவந்து ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 15 அவற்றுள் ஒன்று பாவப்பரிகார பலியாகவும் இன்னொன்று தகன பலியாகவும் ஆசாரியன் கர்த்தருக்கு செலுத்துவான். இம்முறையில் ஆசாரியன் கர்த்தருக்கு முன் அவனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும்.

ஆண்களுக்கான விதிகள்

16 “ஒருவனுக்கு விந்து வெளிப்பட்டால், அவன் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 17 தோல் ஆடையிலும், துணியிலும் விந்துபட்டிருந்தால் அவற்றை தண்ணீரால் கழுவவேண்டும். அது மாலைவரை தீட்டுள்ளதாக இருக்கும். 18 விந்து கழிந்தவனோடு ஒரு பெண் படுத்திருந்தால் இருவரும் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவர்கள் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.

பெண்களுக்கான விதிமுறைகள்

19 “இரத்தப் போக்குடைய மாதவிலக்கான பெண், ஏழு நாட்கள் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 20 அவள் மாத விலக்காக இருக்கும்போது எதன் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதன் மீது உட்காருகிறாளோ அவை தீட்டாகும். 21 அவளது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவனும் தீட்டுள்ளவனாக இருப்பான். 22 அவள் அமர்ந்த இருக்கையைத் தொட்டவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 23 அவள் படுக்கையையோ இருக்கையையோ தொட்டவன் மாலைவரை தீட்டு உடையவனாக இருப்பான்.

24 “அவளோடு ஒருவன் படுத்துக்கொண்டால் அவள் தீட்டு அவன்மேல் படும். அதனால் அவன் ஏழு நாள் தீட்டாய் இருப்பான். அவன் படுக்கிற படுக்கையும் தீட்டாகும்.

25 “ஒருத்திக்கு மாதவிலக்கு அல்லாத நாட்களிலும் அவளிடம் இரத்தம் கசிந்தால் அப்போதும் அவள் விலக்கானவள் போலவே கருதப்பட வேண்டும். 26 அந்த நாட்களிலும் அவள் படுக்கும் படுக்கையும் விலக்கான நாட்களுக்குரிய படுக்கை போன்று தீட்டாகும். அவள் அமரும் இருக்கையும் விலக்கத் தீட்டைப் போன்றே கருதப்படும். 27 இத்தகையவற்றைத் தொடுகிற எவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலை வரை தீட்டாய் இருப்பான். 28 அவளது தீட்டு நின்றதும் ஏழு நாட்கள் அவள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே அவள் சுத்தமாகிறாள். 29 எட்டாவது நாளில் அவள் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து அவற்றை ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 30 ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில் அவளை இவ்வாறு ஆசாரியன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

31 “இஸ்ரவேல் ஜனங்கள் தீட்டு இல்லாதவர்களாக இருக்க எச்சரிக்கை செய்யுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் எனது ஆராதனை கூடாரத்தைத் தீட்டுள்ளதாக்குவதுடன், அவர்கள் அழிந்தும் போவார்கள்” என்று கூறினார்.

32 இவையே, உடற்கழிவு உள்ளவர்களுக்கான விதிகள். விந்து கழிவினால் தீட்டான ஆண்களுக்கும், 33 மாதவிலக்கால் தீட்டான பெண்களுக்கும், தீட்டானவளோடு படுத்துக்கொண்டவனுக்குமுரிய விதிகள் இவைகளேயாகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center