Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 30-32

தூபபீடம்

30 மேலும் தேவன் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடத்தை தயார் செய்து, நறுமணப்புகை எரிக்கும்படியான தூபபீடமாக அதைப் பயன்படுத்து. பலிபீடம் 1 முழம் நீளமும் 1 முழம் அகலமும் உடைய சதுர வடிவில் இருக்க வேண்டும். அது 2 முழம் உயரம் இருக்கட்டும். நான்கு மூலைகளிலும் கொம்புகள் இருக்கும். இந்த கொம்புகள் ஒரே துண்டாக தூபபீடத்தோடு இணைக்கப்பட வேண்டும். பீடத்தின் மேல் புறத்தையும் பக்கங்களையும் கொம்புகளையும் பொன்னால் மூட வேண்டும். பீடத்தைச் சுற்றிலும் பொன் சட்டத்தைப் பதிக்க வேண்டும். அதன் கீழ் இரண்டு பொன் வளையங்கள் இருக்கட்டும். பீடத்தின் எதிர்ப்பக்கங்களில் இரண்டு பொன் வளையங்கள் இருக்க வேண்டும். பீடத்தைத் தண்டுகளால் சுமப்பதற்கு இவ்வளையங்கள் பயன்படுத்தப்படும். தண்டுகளை சீத்திம் மரத்தால் செய்து பொன்னால் மூடு. விசேஷ திரைக்கு முன்னால் தூபபீடத்தை நிறுத்து. அத்திரைக்குப் பின் உடன்படிக்கைப் பெட்டி இருக்கும். உடன்படிக்கைக்குமேல் இருக்கும் கிருபாசனத்துக்கு முன்னால் பீடம் அமையும். இவ்விடத்தில்தான் நான் உன்னைச் சந்திப்பேன்.

“ஆரோன் தினந்தோறும் அதிகாலையில் தூபபீடத்தின்மேல் இனிய நறுமணப் புகையை எரிக்க வேண்டும். விளக்குகளை பராமரிக்க வரும்போது அவன் இதைச் செய்வான். மீண்டும் மாலையிலும் அவன் நறுமணப்புகையை எரிப்பான். அதுவும் மாலையில் விளக்கைப் பராமரிப்பதற்கு அவன் வரும் நேரமேயாகும். ஒவ்வொரு நாளும் என்றென்றும் கர்த்தரின் முன் நறுமணப் புகை எரிக்கப்பட வேண்டும். வேறு எந்த நறுமணப் பொருட்களை எரிப்பதற்கோ, வேறு தகனபலிகளை எரிப்பதற்கோ இந்தத் தூபபீடத்தைப் பயன்படுத்தக் கூடாது. தானிய காணிக்கையையோ, பானங்களின் காணிக்கையையோ எரிப்பதற்கு இப்பீடத்தைப் பயன்படுத்தலாகாது.

10 “ஆண்டிற்கொருமுறை கர்த்தருக்கு ஒரு விசேஷ பலியை ஆரோன் செலுத்த வேண்டும். ஜனங்களின் பாவத்தைப் போக்குவதற்கு பாவப்பரிகார பலியின் இரத்தத்தை ஆரோன் பயன்படுத்த வேண்டும். பீடத்தின் கொம்புகளினருகே ஆரோன் இதனைச் செய்வான். இது பாவப்பரிகார நாள் எனப்படும். இது கர்த்தருக்கு மிகவும் பரிசுத்த நாள்” என்றார்.

ஆலய வரி

11 கர்த்தர் மோசேயை நோக்கி, 12 “இஸ்ரவேல் ஜனங்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள். நீ இதைச் செய்தபிறகு ஒவ்வொருவனும் கர்த்தருக்கென ஒரு தொகை கொடுக்க வேண்டும். ஒவ்வொருவனும் இதைச் செய்தால் அவர்களுக்குத் தீங்கு நேராது. 13 எண்ணப்பட்ட ஒவ்வொருவனும் 1/2 சேக்கல் வீதம் கொடுக்க வேண்டும். (அதாவது அதிகாரப்பூர்வமான அளவுப்படி 1/2 சேக்கல்.) 1 சேக்கலுக்கு 20 கேரா 1/2 சேக்கல் கர்த்தருக்குரிய காணிக்கை. 14 குறைந்தபட்சம் இருபது வயது நிம்பியவர்கள் எல்லோரையும் கணக்கெடுக்க வேண்டும். கணக்கெடுத்து கொள்ளப்பட்ட ஒவ்வொருவரும் கர்த்தருக்கு இந்தக் காணிக்கையைக் கொடுக்க வேண்டும். 15 செல்வந்தர்கள் 1/2 சேக்கலுக்கு அதிகமாக கொடுக்கக் கூடாது. ஏழைகளும் 1/2 சேக்கலுக்குக் குறைவாகக் கொடுக்கக்கூடாது. எல்லோரும் கர்த்தருக்கு ஒரே அளவு காணிக்கை தரவேண்டும். இது உங்கள் வாழ்க்கையின் இரட்சிப்பிற்கான பணம். 16 இப்பணத்தை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து திரட்டு. அதை ஆசாரிப்புக் கூடாரத்தின் பணிவிடைக்காகப் பயன்படுத்து. கர்த்தர் தமது ஜனங்களை நினைவுகூருவதற்காக இது அமையும். அவர்களின் சொந்த வாழ்க்கையின் பாதுகாப்புக்காக ஜனங்கள் கொடுக்கும் பணம் இது” என்றார்.

கழுவும் தொட்டி

17 கர்த்தர் மோசேயை நோக்கி, 18 “வெண்கலத்தால் ஒரு பெரிய தொட்டியைச் செய்து அதை வெண்கலப் பீடத்தில் வை. இதைக் கைகளையும், கால்களையும் கழுவுவதற்குப் பயன்படுத்து. அதை ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் நடுவில் வை. வெண்கலத் தொட்டியைத் தண்ணீரால் நிரப்பு. 19 ஆரோனும், அவனது மகன்களும் அவர்கள் கைகளையும் கால்களையும் இந்த தொட்டித் தண்ணீரில் கழுவ வேண்டும். 20 ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் நுழையும்போதும் கர்த்தருக்குக் காணிக்கையைப் படைக்க பலிபீடத்தை நெருங்கும்போதும் ஒவ்வொரு முறையும் அவர்கள் தண்ணீரால் கழுவிக்கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் மரிக்கமாட்டார்கள். 21 அவர்கள் மரிக்காமலிருக்கும்படிக்குத் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவி சுத்தமாக இருக்க வேண்டும். இது ஆரோனும், அவனது ஜனங்களும் என்றென்றும் பின்பற்ற வேண்டிய சட்டமாகும். எதிர் காலத்தில் வாழவிருக்கும் ஆரோனின் ஜனங்களுக்கும் இது நித்திய கட்டளையாயிருக்கும்” என்றார்.

அபிஷேக எண்ணெய்

22 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, 23 “தரத்தில் உயர்ந்த நறுமணப் பொருட்களை அரசாங்க அளவின்படி வாங்கு. வெள்ளைப் போள தைலம் 12 பவுண்டும், நறுமணப் பட்டை 6 பவுண்டும், வசம்பு 6 பவுண்டும் 24 இலவங்கம் 12 பவுண்டும் வாங்கிக்கொள். அதிகாரப்பூர்வமான அளவின்படி பார்த்து வாங்குவதோடு ஒரு கேலன் தரமான ஒலிவ எண்ணெயையும் வாங்கிக்கொள்.

25 “எல்லாவற்றையும் கூட்டிக் கலந்து சுகந்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்துக்கொள். 26 ஆசாரிப்புக் கூடாரத்தின் மேலும் உடன்படிக்கைப் பெட்டியின் மேலும் இந்த எண்ணெயைத் தெளி. அவை விசேஷமானவை என்பதை இது உணர்த்தும். 27 எண்ணெயை மேசைமீதும் அதன் மீதுள்ள எல்லாப் பாத்திரங்களின்மீதும் ஊற்று. குத்துவிளக்குத் தண்டின்மீதும், அதன் உபகரணங்களின்மீதும், தூபபீடத்தின்மீதும் ஊற்று.

28 “தேவனுக்கு பலிகளை எரிப்பதற்கான பலிபீடத்திலும் எண்ணெயை ஊற்று. இதன் பாத்திரத்திலும் அதன் அடித்தளத்திலும் ஊற்று. 29 இவற்றையெல்லாம் நீ பரிசுத்தமாக்குவாய். அவை கர்த்தருக்கு மிகவும் விசேஷமானவை. அவற்றைத் தொடும் எவையும் பரிசுத்தமாகும்.

30 “ஆரோன்மீதும், அவனது மகன்கள் மீதும் அபிஷேக எண்ணெயை ஊற்று. அவர்கள் எனக்கு விசேஷ பணிவிடை செய்வதை அது காட்டும். அப்பொழுது அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு சேவை செய்யலாம். 31 அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது என்பதை இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல். அது எனக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 32 சாதாரண நறுமணப் பொருளாக அதைப் பயன்படுத்தக் கூடாது. இந்த விசேஷ எண்ணெயைத் தயாரிக்கும் முறையில் சாதாரண நறுமண தைலத்தை தயாரிக்கக் கூடாது. இந்த அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது. இது உங்களுக்கு மிகவும் விசேஷமானதாகும். 33 இந்தப் பரிசுத்த எண்ணெயைப் போல யாரேனும் நறுமண தைலத்தை உண்டாக்கி அதை அந்நியருக்குக் கொடுத்தால் அவன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்” என்றார்.

நறுமணப்பொருள்

34 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “இந்த நறுமணப் பொருட்களை வாங்கிக்கொள். அவை வெள்ளைப் போளம், குங்கிலியம், அல்பான் பிசின், கந்தவர்க்கம், சாம்பிராணி ஆகியன எல்லாவற்றையும் ஒரே அளவில் எடுத்துக்கொள். 35 இவற்றைச் சேர்த்து நறுமணமுள்ள தூபவர்க்கம் செய். அபிஷேக எண்ணெய் தயாரிப்பதுபோல, இதைத் தயாரிக்க வேண்டும். உப்பையும் அதனோடு சேர்க்கும்போது அது சுத்தமானதாகவும், விசேஷமானதாகவும் இருக்கும். 36 அதில் கொஞ்சம் தூபவர்க்கத்தைத் தூளாக்கு. ஆசாரிப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைக்கு முன்னால் நறுமணப் பொடியை வை. அந்த இடத்தில் நான் உன்னைச் சந்திப்பேன். விசேஷ காரியத்துக்காக மட்டுமே அந்த நறுமணப் பொடியை நீ பயன்படுத்த வேண்டும். 37 இப்படியாக இந்த நறுமணப்பொருளை கர்த்தருக்கென்று சிறந்த முறையில் தயாரிக்கவேண்டும். அதேவிதமாக வேறு நறுமணப் பொருளைத் தயாரிக்கக் கூடாது. 38 ஒருவன் நறுமணத்திற்கென்று தனது உபயோகத்திற்காக நறுமணப் பொருளை இதே முறையில் தயாரிக்க விரும்பலாம். ஆனால் அவன் அவ்வாறு செய்தால், எனது ஜனங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவான்” என்றார்.

பெசலெயேலும் அகோலியாபும்

31 கர்த்தர் மோசேயை நோக்கி, “யூதாவின் கோத்திரத்திலிருந்து ஒரு மனிதனை எனது விசேஷ பணிக்காகத் தெரிந்தெடுத்துள்ளேன். அவன் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேல். தேவ ஆவியால் நான் பெசலெயேலை நிரப்பியுள்ளேன். எல்லாவிதமான கைவேலைகளையும் செய்யக்கூடிய திறமையையும், அறிவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். பெசலெயேல் கலைப் பொருட்களை வடிப்பதில் வல்லவன். பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றால் பொருட்களைச் செய்ய அவனுக்கு இயலும். பெசலெயேலால் அழகான அணிகலன்களை வெட்டி உருவாக்க முடியும். மரவேலைகளிலும் அவன் கை தேர்ந்தவன். அவன் எல்லாவிதமான வேலைகளையும் செய்யும் ஆற்றல்மிக்கவன். அவனுக்கு உதவி செய்வதற்கு தாண் கோத்திரத்திலிருந்து அகிசாமாக்கின் மகன் அகோலியாபை தெரிந்தெடுத்துள்ளேன். நான் உனக்குக் கூறிய எல்லாப் பொருட்களையும் செய்யும் திறமையை எல்லாப் பணியாட்களுக்கும் கொடுத்துள்ளேன். நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.

ஆசாரிப்புக் கூடாரம், உடன்படிக்கைப் பெட்டி, கிருபாசனம், கூடாரத்தின் பணி முட்டுகளும்,

மேசையும் அதற்குத் தேவையான பொருட்களும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் கருவிகளும், நறுமணப் பொருளை எரிக்கும் பீடம்,

காணிக்கைகளை எரிக்கும் பலிபீடம், பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தொட்டியும் அதன் பீடமும்,

10 ஆசாரியனாகிய ஆரோனின் விசேஷ ஆடைகள், ஆரோனின் மகன்கள் ஆசாரியராக சேவை செய்ய அவர்களுக்கான உடைகள்,

11 நறுமணம் மிக்க அபிஷேக எண்ணெய், மகா பரிசுத்த இடத்தின் நறுமணப்பொருள் அனைத்தையும்

நான் உனக்குக் கூறிய விதத்திலேயே பணியாளர்கள் செய்ய வேண்டும்” என்றார்.

ஓய்வு நாள்

12 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, 13 “இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதைக் கூறு: ‘ஓய்வுக்குரிய விசேஷ தினங்களின் விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். எல்லாத் தலைமுறைகளிலும் அது உங்களுக்கும் எனக்கும் மத்தியிலுள்ள அடையாளமாக விளங்கும். உங்களை எனது விசேஷமான ஜனங்களாக கர்த்தராகிய நான் ஏற்றுக்கொண்டதை இது உணர்த்தும்.

14 “‘ஒய்வு நாளை ஒரு விசேஷ நாளாக எண்ணுவாயாக. பிறநாட்களுக்கு சமமாக ஓய்வு நாளையும் ஒருவன் எண்ணினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். ஓய்வு நாளில் வேலை செய்கிறவனை அவனது ஜனங்களிடமிருந்து ஒதுக்கிவிட வேண்டும். 15 வேலை நாட்களாக வாரத்தில் ஆறு நாட்கள் உள்ளன. ஏழாவது நாள் ஓய்வுக்குரிய விசேஷ நாளாகும். கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாள் அது. ஓய்வு நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும். 16 இஸ்ரவேல் ஜனங்கள் ஓய்வு நாளை நினைவுகூர்ந்து அதை விசேஷ நாளாக்க வேண்டும். என்றென்றும் தொடர்ந்து இதைச் செய்துவர வேண்டும். என்றென்றும் எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் தொடர்கிற உடன்படிக்கையாக அது விளங்கும். 17 ஓய்வு நாள் எனக்கும் இஸ்ரவேலருக்கும் மத்தியில் ஒரு அடையாளமாக எப்போதும் இருக்கும். கர்த்தர் ஆறு நாட்கள் உழைத்து வானையும் பூமியையும் உண்டாக்கினார். அவர் ஏழாம் நாளில் ஓய்வாகவும் அமைதியாகவும் இருந்தார்’” என்றார்.

18 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம் பேசி முடித்தார். உடன்படிக்கை பதித்த இரண்டு கற்பலகைகளை கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். தேவன் தமது விரல்களால் அக்கற்பலகைகளில் எழுதினார்.

பொன் கன்றுக்குட்டி

32 மோசே மலையிலிருந்து இறங்கிவர மிகுந்த தாமதமானதை ஜனங்கள் உணர்ந்தனர். அவர்கள் ஆரோனைச் சூழ்ந்து, அவனை நோக்கி, “பாரும், மோசே எங்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே வழி நடத்தி வந்தான். இப்போது அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. ஆகவே எங்களுக்கு முன்பாகச் சென்று வழி நடத்துவதற்குச் சில தேவர்களை உருவாக்கும்” என்றனர்.

ஆரோன் ஜனங்களிடம், “உங்கள் மனைவி, பிள்ளைகளுக்குச் சொந்தமான பொன் காதணிகளை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றான்.

எல்லா ஜனங்களும் தங்கள் பொன் காதணிகளைச் சேர்த்து ஆரோனிடம் கொடுத்தனர். ஆரோன் ஜனங்களிடமிருந்து அவற்றை வாங்கி, அதைப் பயன்படுத்தி ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தை வார்த்தான். பின்பு ஒரு உளியைப் பயன்படுத்தி, அந்த சிலையைச் செதுக்கினான். பின் அதை பொன் தகட்டால் மூடினான்.

அப்போது ஜனங்கள், “இஸ்ரவேலரே, இந்த தெய்வங்களே உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தன!” என்றனர்.

ஆரோன் இவற்றையெல்லாம் பார்த்தான். கன்றுக்குட்டியின் எதிரில் ஒரு பலிபீடம் அமைத்தான். பின்பு ஜனங்களை நோக்கி, “கர்த்தரைக் கனப்படுத்துவதற்கு நாளை ஒரு பண்டிகை நடத்துவோம்” என்றான்.

மறுநாள் காலையில் ஜனங்கள் வெகு சீக்கிரமாக எழுந்தனர். அவர்கள் மிருகங்களைக் கொன்று தகன பலிகளையும், சமாதானபலிகளையும் படைத்தனர். ஜனங்கள் தின்று, குடித்துக் களிக்க உட்கார்ந்தனர். பின்பு எழுந்து மிகுதியான அநாகரீகத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கர்த்தர் மோசேயிடம், “இந்த மலையைவிட்டு சீக்கிரமாய் கீழே இறங்கிப் போ. எகிப்திலிருந்து நீ வெளியே அழைத்து வந்த, உனது ஜனங்கள் மிகவும் சீர்கேடான பாவத்தைச் செய்திருக்கிறார்கள். செய்யும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்டவைகளினின்று மிக வேகமாய் சோரம் போனார்கள். பொன்னை உருக்கி கன்றுக்குட்டியை வார்த்தார்கள். அவர்கள் அதைத் தொழுது அதற்குப் பலி செலுத்துகிறார்கள். அதனிடம், ‘எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தின தெய்வங்கள் இவையே’ என்றனர்” என்றார்.

மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் இந்த ஜனங்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பிடிவாத குணமுடையோர் என்பதையும் அறிவேன். அவர்கள் எப்போதும் எனக்கெதிராகத் திரும்புவார்கள். 10 எனவே என் கோபத்தால் அவர்களை அழிப்பேன். பின் உன் மூலமாக ஒரு பெரிய ஜனத்தை உருவாக்குவேன்” என்றார்.

11 ஆனால் மோசே தேவனாகிய கர்த்தரை மிகவும் கெஞ்சி, “கர்த்தாவே, உமது கோபத்தால் உமது ஜனங்களை அழித்துவிடாதேயும். உமது மிகுந்த ஆற்றலினாலும் வல்லமையாலும் நீர் இந்த ஜனங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தீர். 12 ஆனால் நீர் உமது ஜனங்களை அழித்துவிட்டால் எகிப்தியர்கள், ‘கர்த்தர் அந்த ஜனங்களுக்குத் தீமை செய்யத் திட்டமிட்டார். எனவே அவர்களை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார். அவர்களை மலைகளில் கொல்ல விரும்பினார். அவர்களைப் பூமியிலிருந்து நிர்மூலமாக்க எண்ணினார், என்று சொல்வார்கள்.’ எனவே, உமது ஜனங்களிடம் கோபம் கொள்ளாதிரும். உமது எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்! உமது ஜனங்களை அழித்துவிடாதிரும். 13 ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் (யாக்கோபு) ஆகியோரை நினைவுகூரும். அவர்கள் உமக்குப் பணிவிடை செய்தனர். உமது பெயரால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர். ‘நான் உன் ஜனங்களை வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகச் செய்வேன். நான் உன் ஜனங்களுக்கு வாக்குறுதி அளித்த தேசத்தைக் கொடுப்பேன். அத்தேசம் என்றும் அவர்களுக்குரியதாகும்’ என்று நீர் வாக்குறுதி தந்தீர்” என்றான்.

14 எனவே, கர்த்தர் ஜனங்களுக்காக மனஸ்தாபப்பட்டார். தான் செய்வதாகக் கூறிய செயலை கர்த்தர் செய்யவில்லை, அவர் ஜனங்களை அழிக்கவில்லை.

15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான். உடன்படிக்கை எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை அவன் கையில் ஏந்திவந்தான். கற்பலகைகளின் முன்புறமும், பின்புறமும் அந்தக் கட்டளைகள் எழுதப்பட்டிருந்தன. 16 தேவனே அக்கற்களை உண்டாக்கி, அக்கற்களின் மீது கட்டளைகளை எழுதியிருந்தார்.

17 மலையிலிருந்து இறங்கியபோது பாளையத்திலிருந்து பெரும் சத்தத்தை யோசுவா கேட்டான். யோசுவா மோசேயை நோக்கி: “நம் பாளையத்தில் யுத்த சத்தம் எழும்புகிறது” என்றான்.

18 மோசே பதிலாக, “இது வெற்றியால் ஒரு படை எழுப்பும் சத்தமல்ல. தோல்வியால் ஒரு படை எழுப்பும் கூக்குரலும் அல்ல. நான் கேட்டது இசையின் சத்தமே” என்றான்.

19 மோசே பாளையத்திற்கு அருகே வந்தான். அவன் பொன் கன்றுக்குட்டியையும் ஜனங்கள் நடனமாடுவதையும் கண்டு, மிகுந்த கோபங்கொண்டான். அவன் கற்பல கைகளை தரையில் வீசி எறிந்தான். மலை அடிவாரத்தில் அவை சுக்கு நூறாக உடைந்து சிதறின. 20 பின்பு மோசே ஜனங்கள் செய்த கன்றுக்குட்டியை உடைத்து, அதை நெருப்பில் போட்டு உருக்கினான். பொன்னைத் தூளாகுமட்டும் அரைத்து அதைத் தண்ணீரில் கரைத்தான். அந்த தண்ணீரை பருகும்படி இஸ்ரவேல் ஜனங்களை வற்புறுத்தினான்.

21 மோசே ஆரோனை நோக்கி, “இந்த ஜனங்கள் உனக்குச் செய்ததென்ன? ஏன் இந்த மாபெரும் கேடான பாவத்தைச் செய்யும்படியாக அவர்களை வழி நடத்தினாய்?” என்று கேட்டான்.

22 ஆரோன், “கோபம் கொள்ளாதிரும், இந்த ஜனங்கள் எப்போதுமே பாவம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது உமக்குத் தெரியும் அல்லவா. 23 ஜனங்கள் என்னிடம், ‘மோசே எங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினான். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, எங்களை வழிநடத்துவதற்கு தெய்வங்களைச் செய்’ என்றார்கள். 24 நான் அவர்களிடம், ‘உங்களிடம் பொன் காதணிகள் இருந்தால், அவற்றை என்னிடம் கொடுங்கள்’ என்றேன். ஜனங்கள் பொன்னை என்னிடம் கொடுத்தார்கள். நான் பொன்னை நெருப்பில் போட்டேன். நெருப்பிலிருந்து கன்றுகுட்டி வந்தது!” என்று பதிலுரைத்தான்.

25 ஜனங்கள் கட்டுப்பாட்டை மீறி அநாகரீகமாக நடக்கும்படியாக ஆரோன் அவர்களை அனுமதித்ததை மோசே கண்டான். ஜனங்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டதை அவர்களின் பகைவர்கள் கண்டனர். 26 எனவே, பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்றான். மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள்.

27 பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்’” என்றான்.

28 லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். அன்றையதினம் சுமார் 3,000 இஸ்ரவேல் ஜனங்கள் செத்தனர். 29 மோசே, “தமக்குப் பணிவிடை செய்ய கர்த்தர் இன்று உங்களைத் தெரிந்தெடுத்தார். ஏனென்றால், இன்றைக்கு உங்களில் ஒவ்வொருவரும் அவனது மகனுக்கு எதிராகவும், சகோதரனுக்கு எதிராகவும் இருந்தீர்கள். எனவே இன்று அவர் உங்கள் மேல் ஆசீர்வாதம் பொழிவார்” என்றான்.

30 மறுநாள் காலையில் மோசே ஜனங்களை நோக்கி, “நீங்கள் கொடிய பாவம் செய்துள்ளீர்கள்! நான் கர்த்தரிடம் மேலே போவேன். உங்கள் பாவத்தை அவர் மன்னிப்பதற்காக நான் ஏதாவது செய்யக்கூடுமா எனப் பார்ப்பேன்” என்றான். 31 எனவே மோசே கர்த்தரிடம் மீண்டும் சென்று, “தயவு செய்து நான் கூறுவதைக் கேளும்! இந்த ஜனங்கள் பெரும்பாவம் செய்தனர். அவர்கள் பொன்னால் ஒரு தேவனைச் செய்தனர். 32 இப்போது அவர்களின் இப்பாவத்தை மன்னித்துவிடும்! நீர் அவர்களை மன்னிக்காவிட்டால், உமது புத்தகத்திலிருந்து எனது பெயரை கிறுக்கி விடும்” என்றான்.

33 ஆனால் கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கெதிராக பாவம் செய்தோரின் பெயர்களை மட்டுமே நான் அழிப்பேன். 34 எனவே நீ கீழே போய் நான் சொல்கிற இடத்திற்கு ஜனங்களை வழிநடத்து. எனது தூதன் உங்களுக்கு முன்பாகச் சென்று வழிநடத்துவார். பாவம் செய்கிற மனிதர்கள் தண்டிக்கப்படும் காலம் வரும்போது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். 35 எனவே கர்த்தர் ஒரு கொடிய நோய் ஜனங்களை வாதிக்கும்படியாகச் செய்தார். ஆரோனிடம் பொன் கன்றுக்குட்டியைச் செய்யுமாறு கேட்டதால் அவர் இவ்வாறு செய்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center