Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 19-21

இஸ்ரவேலோடு தேவனின் உடன்படிக்கை

19 எகிப்திலிருந்து புறப்பட்ட மூன்றாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் பாலைவனத்தை அடைந்தனர். அவர்கள் ரெவிதீமிலிருந்து சீனாய் பாலை வனத்திற்குப் பிரயாணம் செய்திருந்தனர். மலைக்கருகே (ஓரேப் மலை) இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரமிட்டனர். பின் மோசே தேவனைச் சந்திக்கும்பொருட்டு மலைமீது ஏறினான். மலையின் மேல் தேவன் அவனோடு பேசினார். அவனிடம், “யாக்கோபின் பெரிய குடும்பத்தினராகிய இஸ்ரவேலின் ஜனங்களுக்கு இவ்விஷயங்களைக் கூறு: ‘என் எதிரிகளுக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்த்தீர்கள். எகிப்தின் ஜனங்களுக்கு நான் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள். கழுகைப்போல நான் உங்களை எகிப்திலிருந்து சுமந்து வந்து, இங்கு என்னிடம் அழைத்து வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். எனவே என் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டுமென உங்களுக்குக் கூறுகிறேன். எனது உடன்படிக்கையை மீறாதீர்கள். நான் கூறுகிறபடி நீங்கள் நடந்தால், என் விசேஷமான ஜனங்களாயிருப்பீர்கள். உலகம் முழுவதும் எனக்குச் சொந்தமானது. ஆனால் எனது விசேஷ ஜனங்களாக இருக்கும்படி, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். ராஜரீக ஆசாரிய கூட்டமான, ஒரு பரிசுத்த ஜனமாக நீங்கள் இருப்பீர்கள்.’ மோசே, நான் கூறியதை நீ இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்றார்.

மோசே மலையிருந்து கீழே இறங்கினான். ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்கள்) வரவழைத்து அவர்களிடம் கூறும்படியாக கர்த்தர் கட்டளையிட்டவற்றை மோசே கூறினான். எல்லா ஜனங்களும் சேர்ந்து ஒரே குரலில், “கர்த்தர் கூறுகின்றவற்றிற்கு நாங்கள் கீழ்ப்படிவோம்” என்றார்கள்.

மோசே மீண்டும் மலையின் மேலேறி தேவனிடம் சென்றான். மோசே தேவனிடம் ஜனங்கள் அவருக்குக் கீழ்ப்படிவதாகக் கூறியதைச் சொன்னான். கர்த்தர் மோசேயிடம், “கார்மேகத்தினூடே நான் உன்னிடம் வருவேன், உன்னோடு பேசுவேன்! நான் உன்னோடு பேசுவதை எல்லா ஜனங்களும் கேட்பார்கள். நீ அவர்களுக்குக் கூறுவதை ஜனங்கள் எப்போதும் நம்புவதற்காக நான் இதைச் செய்வேன்” என்றார்.

ஜனங்கள் கூறிய அனைத்தையும் மோசே தேவனுக்குச் சொன்னான்.

10 கர்த்தர் மோசேயை நோக்கி, “ஒரு விசேஷ கூட்டத்திற்காக இன்றும், நாளையும் நீ ஜனங்களை ஆயத்தப்படுத்த வேண்டும். ஜனங்கள் அவர்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். 11 மூன்றாம் நாளில் எனக்காகக் காத்திருக்க வேண்டும். மூன்றாவது நாள் கர்த்தர் சீனாய் மலைக்கு இறங்கி வருவார், எல்லா ஜனங்களும் என்னைக் காண்பார்கள். 12-13 எல்லா ஜனங்களும் மலையை நெருங்காதிருக்கும்படி அவர்களுக்கு நீ கூறவேண்டும். ஒரு எல்லையை வரைந்து, ஜனங்கள் அதைத் தாண்டிச் செல்லாதபடி பார்த்துக்கொள். மலையைத் தொடும் மனிதனோ, மிருகமோ கொல்லப்பட வேண்டும். அவனைக் கற்களால் தாக்கியோ, அம்புகளை எய்தோ கொல்ல வேண்டும். கொல்லப்பட்டவனைப் பிறர் தொடக்கூடாது. எக்காளம் தொனிக்கும் வரைக்கும் ஜனங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே அவர்கள் மலைக்கு சமீபம் செல்லலாம்” என்றார்.

14 மோசே மலையை விட்டிறங்கி, ஜனங்களிடம் சென்று, விசேஷ கூட்டத்திற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து பரிசுத்தமாக்கினார்கள்.

15 மோசே ஜனங்களை நோக்கி, “மூன்று நாட்களில் தேவனைத் தரிசிப்பதற்குத் தயாராகுங்கள். அதுவரைக்கும் ஆண்கள், பெண்களைத் தொடக்கூடாது” என்றான்.

16 மூன்றாம் நாள் காலையில், மலையின் மேல் மேகமொன்று திரண்டு வந்தது. இடியும் மின்னலும் எக்காளத்தின் பேரொலியும் இருந்தன. கூடாரத்திலிருந்த ஜனங்கள் அனைவரும் பயந்தனர். 17 அப்போது மோசே, ஜனங்களைக் கூடாரத்திலிருந்து மலையருகேயுள்ள ஓரிடத்திற்கு தேவனைச் சந்திப்பதற்காக வழிநடத்திச் சென்றான். 18 சீனாய் மலை புகையால் நிரம்பிற்று. சூளையிலிருந்து புகை வருவதுபோல் மலையின் மேல் புகை எழுந்தது. கர்த்தர் மலைக்கு நெருப்பில் இறங்கி வந்ததால் இப்படி ஆயிற்று. மலையும் அதிரத்தொடங்கிற்று. 19 எக்காள சத்தம் உரத்து தொனிக்க ஆரம்பித்தது. மோசே தேவனிடம் பேசியபோதெல்லாம், தேவன் இடிபோன்ற குரலில் பதிலளித்தார்.

20 கர்த்தர் சீனாய் மலையின்மேல் இறங்கினார். பரலோகத்திலிருந்து கர்த்தர் மலையின் உச்சியில் இறங்கினார். பின் கர்த்தர் மோசேயை மலையின் உச்சிக்கு தன்னிடத்தில் வருமாறு கூறினார். அவ்வாறே மோசேயும் மலையின் மீது ஏறினான்.

21 கர்த்தர், மோசேயை நோக்கி, “ஜனங்கள் என்னைப் பார்கும்படி நெருங்கிவராதபடி அவர்களை எச்சரி. இதை மீறினால் அவர்களில் பலர் மரிக்க நேரிடும். 22 என்னிடம் வர வேண்டிய ஆசாரியர்களை இந்த சிறப்புச் சந்திப்புக்கு ஆயத்தமாகி வரும்படி கூறு. அவர்கள் சரியான ஆயத்தம் செய்யவில்லையென்றால், நான் அவர்களைத் தண்டிப்பேன்” என்றார்.

23 மோசே கர்த்தரை நோக்கி, “ஜனங்கள் மலை உச்சிக்கு வரமுடியாது. பரிசுத்த எல்லையை நெருங்காதபடி செய்யுமாறு நீர் தானே எங்களிடம் கூறியுள்ளீர்” என்றான்.

24 கர்த்தர் அவனிடம், “ஜனங்களிடம் இறங்கிச் செல். ஆரோனை உன்னோடு அழைத்து வா, ஆசாரியர்களோ, ஜனங்களோ என்னை அணுகவிடாதே. அவர்கள் என்னை நெருங்கினால் நான் அவர்களை தண்டிப்பேன்” என்றார்.

25 எனவே மோசே ஜனங்களிடம் போய் இச்செய்தியைக் கூறினான்.

பத்துக் கட்டளைகள்

20 பின்பு தேவன்,

“நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அடிமைகளாயிருந்த எகிப்து தேசத்திலிருந்து நான் உங்களை வழிநடத்தி வந்தேன். எனவே, நீங்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

“என்னைத் தவிர வேறு தேவர்களை நீங்கள் தொழக்கூடாது.

“நீங்கள் எந்த விக்கிரகங்களையோ, படங்களையோ, சிலைகளையோ செய்யக்கூடாது. வானிலும், பூமியிலும் தண்ணீரிலுமுள்ள எந்தப் பொருளின் வடிவத்திலும் அவற்றைச் செய்யக்கூடாது. எந்த விதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வோர் எனது பகைவர்களாவார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் அப்பேரர்களின் குழந்தைகளையும் தண்டிப்பேன். என்னிடம் அன்போடிருந்து எனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களிடம் நான் இரக்கம் காட்டுவேன். ஆயிரம் தலைமுறை வரைக்கும் அவர்கள் குடும்பங்களிடம் கருணையோடு இருப்பேன்.

“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெயரைத் தகாத வழியில் பயன்படுத்தக்கூடாது. ஒருவன் அவ்வாறு பயன்படுத்தினால், அவன் குற்றவாளியாவான். கர்த்தர் அவனது குற்றத்திற்காக அவனை தண்டிப்பார்.

“ஓய்வுநாளை விசேஷ நாளாகக் கருதும்படி நீங்கள் நினைவுகூருங்கள். உங்கள் வேலையை வாரத்தின் ஆறு நாட்களும் செய்யுங்கள். 10 ஆனால் ஏழாம் நாள் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தும்படி ஓய்வெடுக்க வேண்டிய நாள். எனவே அந்நாளில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் வேலை செய்யக்கூடாது. உங்கள் மிருகங்களையோ, உங்கள் நகரங்களில் வாழும் அந்நியர்களையோ வேலை வாங்கக்கூடாது. 11 ஏனெனில் கர்த்தர் ஆறு நாட்கள் வேலை செய்து வானம், பூமி, கடல் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். ஏழாம் நாளில் கர்த்தர் ஓய்வெடுத்தார். இவ்வாறு கர்த்தர் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளை ஆசீர்வதித்தார். கர்த்தர் அதை ஒரு மிக விசேஷமான நாளாக்கினார்.

12 “உங்கள் தந்தை, தாயாரை மதிக்க வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் தரும் நாட்டில் நீண்டஆயுள் வாய்ப்பதற்கு இதைச் செய்தல் வேண்டும்.

13 “நீங்கள் யாரையும் கொல்லாதிருப்பீர்களாக.

14 “நீங்கள் விபச்சாரம், செய்யாதிருப்பீர்களாக.

15 “நீங்கள் எதையும் திருடாதிருப்பீர்களாக.

16 “பிற ஜனங்களைக் குறித்துப் பொய் சாட்சி பேசவேண்டாம்.

17 “அயலானின் வீட்டை இச்சிக்கக்கூடாது. அவனது மனைவியை விரும்பவேண்டாம். அவனது வேலைக்காரனையோ வேலைக்காரியையோ, ஆடு மாடுகளையோ, கழுதைகளையோ எடுக்க வேண்டாம். இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது!” என்றார்.

ஜனங்கள் தேவனுக்கு பயப்படுதல்

18 இதுவரை, பள்ளத்தாக்கிலிருந்த ஜனங்கள் இடி முழக்கத்தைக் கேட்டார்கள், மலையின் மீது மின்னலைப் பார்த்தார்கள். மலையினின்று புகையெழும்பக் கண்டனர். ஜனங்கள் அச்சத்தால் நடுங்கினார்கள். மலையை விட்டு தூரத்தில் நின்று கவனித்தனர். 19 பின்பு ஜனங்கள் மோசேயிடம், “நீர் எங்களோடு பேசினால் நாங்கள் கேட்போம். ஆனால் தேவன் எங்களோடு நேரில் பேசவிடாதிரும். அவ்வாறு நடந்தால், நாங்கள் மரித்துப்போவோம்” என்றனர்.

20 மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள்! கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படியாக வந்திருக்கிறார். நீங்கள் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதினிமித்தமாக நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்கள்” என்றான்.

21 தேவன் இருந்த கார்மேகத்திற்குள் மோசே போனபோது ஜனங்கள் மலையை விட்டு விலகி நின்றார்கள். 22 இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறுமாறு கர்த்தர் மோசேக்கு பின்வருமாறு கூறினார்: “பரலோகத்திலிருந்து உங்களோடு பேசினதை நீங்கள் கண்டீர்கள். 23 எனவே, பொன் அல்லது வெள்ளியால் எனக்கு இணையாக நீங்கள் விக்கிரகங்களை உண்டாக்க வேண்டாம். இந்த போலியான தெய்வங்களை நீங்கள் செய்யக்கூடாது.

24 “எனக்கென்று விசேஷ பலிபீடம் செய்யுங்கள். அதைக் கட்டும்போது மண்ணைப் பயன்படுத்துங்கள். அதன்மேல், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் பலியாகச் செலுத்துங்கள். உங்கள் ஆடு மாடுகளை இதற்கென்று பயன்படுத்துங்கள். என்னை நினைவு கூரும்படியாக நான் சொல்கிற இடங்களிலெல்லாம் இதைச் செய்யுங்கள். அப்போது நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன். 25 பலிபீடத்தை அமைப்பதற்கு நீங்கள் கற்களைப் பயன்படுத்தினால், இரும்புக் கருவியால் பிளக்கப்பட்ட கற்களைப் பயன்படுத்தவேண்டாம். அப்பலிபீடம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 26 பலிபீடத்திற்குப் படிகளைச் செய்யாதீர்கள். படிகள் இருந்தால் ஜனங்கள் பலிபீடத்தை ஏறிட்டு நோக்கும்போது உங்கள் நிர்வாணத்தை ஆடைகளின் கீழே அவர்கள் பார்க்கநேரிடும்” என்றார்.

பிற சட்டங்களும், கட்டளைகளும்

21 அப்போது தேவன் மோசேயிடம், “ஜனங்களுக்கு நீ கொடுக்க வேண்டிய பிற சட்டங்கள் இவையாகும்.

“நீங்கள் ஒரு எபிரெய அடிமையை வாங்கினால், அவன் ஆறு ஆண்டுகள் மட்டுமே உங்களுக்காக உழைப்பான். ஆறு ஆண்டுகளுக்குப்பின் அவன் விடுதலை பெறுவான். கட்டணமாக எதையும் அவன் செலுத்தத் தேவையில்லை. ஒருவன் உங்கள் அடிமையாகும்போது மணமாகாதவனாக இருந்தால், விடுதலையாகும்போது தனியனாகப் போவான். ஒருவன் அடிமையாகும்போது திருமணமானவனாக இருந்தால், அவன் விடுதலை பெறும்போது மனைவியை அழைத்துச் செல்லலாம். அடிமை மணமாகாதவனாக இருந்தால், எஜமான் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுக்கலாம். அவள் மகன்களையோ, மகள்களையோ பெற்றெடுத்தால் அவளும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கு உரிமையாவார்கள். அடிமையின் வேலையாண்டுகள் முடிந்தபின், அவன் மட்டும் விடுதலை பெறுவான்.

“ஆனால் அடிமை எஜமானோடு நீடித்து இருப்பதாக முடிவு செய்தால் அவன், ‘நான் என் எஜமானை நேசிக்கிறேன். நான் எனது மனைவியையும், என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். நான் விடுதலை பெறமாட்டேன். நான் இங்கேயே தங்குவேன்’ என்று சொல்லவேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால், எஜமான் அடிமையை தேவனுடைய சந்நிதானத்தில் கொண்டுவரவேண்டும். எஜமான் அடிமையை ஒரு வாசலருகே அல்லது வாசலின் நிலைக்காலின் அருகே அழைத்துச் சென்று, அடிமையின் காதில் கூர்மையான கருவியால் ஒரு துளை போடவேண்டும். அப்போது அடிமை தன் வாழ்க்கை முழுவதும் எஜமானுக்கு தொண்டு செய்வான்.

“ஒரு மனிதன் தன் மகளை அடிமையாக விற்க முடிவு செய்தால், அவளை விடுதலை செய்வதற்குரிய விதிகள் ஆண் அடிமையை விடுவிப்பதற்கான விதிமுறைகளில் இருந்து மாறுப்பட்டவை. எஜமானுக்கு அப்பெண்ணிடம் விருப்பம் இல்லை என்றால், அப்பெண்ணை அவள் தந்தைக்கு மீண்டும் விற்றுவிடலாம். எஜமான் அப்பெண்ணை மணப்பதாக வாக்குறுதி அளித்தால் அப்பெண்ணை வேறு யாருக்கும் விற்கும் உரிமையை இழந்துவிடுவான். அடிமைப் பெண் எஜமானின் மகனை மணப்பதற்கு எஜமான் சம்மதித்தால் அவளை அடிமையாக நடத்தக்கூடாது. அவளை ஒரு மகளைப் போல் நடத்தவேண்டும்.

10 “எஜமான் மற்றொரு பெண்ணை மணந்தால் முதல் மனைவிக்குக் குறைவான ஆடையோ, உணவோ கொடுக்கக்கூடாது. அவன் அவளோடு தூங்குவதை நிறுத்தக் கூடாது. விவாகத்தில் அவளுக்கு உரிமையான எல்லாப் பொருட்களையும் அவன் கொடுத்து வர வேண்டும். 11 அவன் அவளுக்கு இந்த மூன்று காரியங்களையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால், அப்பெண் விடுவிக்கப்படுவாள். அவள் செலுத்தவேண்டிய கடன் எதுவுமிராது.

12 “ஒரு மனிதன் இன்னொருவனை திட்டமிட்டு அடித்துக் கொன்றால், அப்போது அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். 13 ஆனால் ஒருவன் மற்றொருவனைத் திட்டமிடாமல் கொன்றால், தேவன் அந்த விபத்தை அனுமதித்தார் என்று எண்ணலாம். குறிப்பிட்ட சில இடங்களை பாதுகாப்பிற்காக ஓடி உயிர்தப்பும்படி நியமிப்பேன். அதனால் இத்தகைய ஒருவன் அங்கே ஓடலாம். 14 ஒருவன் மற்றொருவனைச் சினந்து அல்லது வெறுத்துக் கொல்லத் திட்டமிட்டால், கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும். அவனை எனது பலிபீடத்திற்குத் தொலைவில் அழைத்துச் சென்று கொல்லவேண்டும்.

15 “தந்தையையோ, தாயையோ அடிக்கிற எந்த மனிதனும் கொல்லப்படவேண்டும்.

16 “ஒருவனை அடிமையாக்கவோ, அடிமையாக விற்பதற்கோ திருடிச் சென்றால், அவ்வாறு திருடிச் சென்றவன் கொல்லப்பட வேண்டும்.

17 “தந்தையையோ, தாயையோ சபிக்கிற எந்த மனிதனும் கொல்லப்பட வேண்டும்.

18 “இருவர் வாக்குவாதம் செய்து, ஒருவனை மற்றொருவன் கல்லால் அல்லது கையால் தாக்கினால் எவ்வாறு அம்மனிதனைத் தண்டிக்க வேண்டும்? தாக்கப்பட்ட மனிதன் மரிக்கவில்லையென்றால் அவனைத் தாக்கிய மனிதனும் கொல்லப்படக் கூடாது. 19 தாக்கப்பட்ட மனிதன் படுக்கையில் சில காலம் இருக்க நேர்ந்தால், அவனைத் தாக்கிய மனிதன் அவன் குணமாகும்வரை அவனை ஆதரிக்க வேண்டும். அவன் சம்பாதிப்பதற்குரிய நாட்களை வீணாக்கியதற்குப் பணம் கொடுக்க வேண்டும். அம்மனிதன் அவன் முழுமையாக குணமாகும் வரை உதவி செய்ய வேண்டும்.

20 “சில வேளைகளில் ஜனங்கள் தங்கள் ஆண் அல்லது பெண் அடிமைகளை அடிப்பார்கள். அடிபட்டு அடிமை மரிக்க நேர்ந்தால், அவனைக் கொன்றவன் தண்டிக்கப்படவேண்டும். 21 அடிமை மரிக்காமல் சில நாட்களுக்குப் பின் குணமடைந்தால், அம்மனிதனைத் தண்டிக்க வேண்டாம். ஏனெனில் எஜமானன் அடிமையைப் பணம் கொடுத்து வாங்கியிருந்ததால் அந்த அடிமை அவனுக்குரியவன்.

22 “இரு மனிதர் சண்டையிடும்போது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கிவிடக் கூடும். அதனால் உரிய காலத்திற்கு முன்னாலேயே அவள் குழந்தையை பெறலாம். அப்பெண் அதிகமான காயமடையவில்லையென்றால், அவளைக் காயப்படுத்திய மனிதன் அபராதம் செலுத்த வேண்டும். அபராதத் தொகை எவ்வளவு என்பதை அப்பெண்ணின் கணவன் தீர்மானிப்பான். அபராதத் தொகையின் அளவைத் தீர்மானிக்க நீதிபதிகள் அவனுக்கு உதவுவார்கள். 23 ஆனால் அப்பெண் மிகுதியாகக் காயமுற்றால் அவளைக் காயப்படுத்திய மனிதன் தண்டனை பெற வேண்டும். ஒருவன் கொல்லப்பட்டால் அக்கொலைக்குக் காரணமானவனும் கொல்லப்படவேண்டும். ஒரு உயிருக்கு மற்றொரு உயிர் வாங்கப்பட வேண்டும். 24 கண்ணுக்குக் கண்ணையும், பல்லுக்குப் பல்லையும், கைக்குக் கையையும், காலுக்குக் காலையும், 25 சூட்டுக்கு சூடும், காயத்துக்குக் காயமும், வெட்டுக்கு வெட்டும் தண்டனையாகக் கொடுக்கவேண்டும்.

26 “ஒரு மனிதன் அடிமையைக் கண்ணில் அடித்ததால் அவன் குருடனாக நேர்ந்தால், அடிமை விடுதலைபெற வேண்டும். விடுதலைக்குரிய விலை அவன் இழந்த கண்ணேயாகும். இது ஆண் அடிமைக்கும், பெண்ணடிமைக்கும் பொதுவாகும். 27 ஒரு எஜமானன் தன் அடிமையை வாயில் அடித்து, அடிமை பல்லை இழக்க நேர்ந்தால் அடிமையை விடுதலை செய்யவேண்டும். அவன் விடுதலைக்கு அவன் பல்லே விலையாக அமையும். இது ஆண் அல்லது பெண் அடிமைக்கும் பொருந்தும்.

28 “ஒரு மனிதனின் மாடு ஒரு ஆணையோ, பெண்ணையோ கொன்றால், அந்த மாட்டைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அதை உணவாக உட்கொள்ளக் கூடாது. அதன் உரிமையாளன் குற்றவாளி அல்ல. 29 அது முன்பு பலரைத் தாக்கியபோது உரிமையாளன் எச்சரிக்கப்பட்டும், அவன் ஓரிடத்தில் அதைக் கட்டியோ, அடைத்தோ வைக்காமலிருந்ததால் அவன் குற்றவாளியாவான். ஏன்? அது வெளியே தனித்துச் சென்று, யாரையேனும் கொன்றால் அப்போது அதன் எஜமானன் குற்றவாளியாகக் கருதப்படுவான். மாட்டையும் அதன் உரிமையாளனையும் நீ கல்லெறிந்து கொல்ல வேண்டும். 30 மரித்த மனிதனின் குடும்பத்தினர் ஈடாகப் பணத்தைப் பெறலாம், அவர்கள் பணத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மாட்டின் உரிமையாளனைக் கொல்லத் தேவையில்லை. ஆனால் நீதிபதி கூறும் ஈடுப் பணத்தை அவன் செலுத்தவேண்டும்.

31 “ஒருவனின் மகன் அல்லது மகளை மாடு கொன்றாலும் அதே விதி பின்பற்றப்பட வேண்டும். 32 ஆனால் ஒரு அடிமையை மாடு கொன்றால், அந்த அடிமையின் எஜமானனுக்கு மாட்டின் எஜமானன் 30 வெள்ளிப்பணம் கொடுக்கவேண்டும். மாட்டைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஆண் அல்லது பெண் அடிமைக்கும் சட்டம் பொதுவானதே.

33 “ஒரு மனிதன் கிணற்றின் மூடியை அகற்றினதாலோ அல்லது ஒரு குழியைத்தோண்டி மூடாமல் விட்டதாலோ, இன்னொருவனின் மிருகம் அக்குழியில் விழுந்தால், அக்குழியைத் தோண்டியவன் குற்றவாளியாவான். 34 அவன் மிருகத்தின் விலையைக் கொடுத்து அம்மிருகத்தின் உடலைப் பெற்றுக்கொள்ளலாம்.

35 “ஒருவனின் மாடு மற்றொருவனின் மிருகத்தைக் கொன்றால் உயிருள்ள மாட்டை விற்றுவிட வேண்டும். அப்பணத்தை இருவரும் சரிபாதியாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். கொல்லப்பட்ட மாட்டையும் அவர்கள் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். 36 அம்மனிதனின் மாடு அதற்கும் முன்னர் பிற மிருகங்களைத் தாக்கி காயப்படுத்தியிருந்தால் அதன் உரிமையாளனே மாட்டின் பொறுப்பேற்க வேண்டும். அவன் மாடு மற்ற மாட்டைக் கொன்றிருந்தால் அந்த மாட்டை அவிழ்த்து விட்டபடியால் அதன் உரிமையாளன் குற்றவாளியாவான். அவன் செத்துப்போன மாட்டுக்கு ஈடாக இன்னொரு மாட்டைக் கொடுக்க வேண்டும். அவனது செத்துப்போன மாட்டின் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center