Beginning
13 பிறகு கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேலில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் குழந்தையும், முதலில் பிறந்த ஒவ்வொரு விலங்கும் எனக்குரியதாகும்” என்றார்.
3 அப்போது மோசே ஜனங்களிடம், “இந்த நாளை நினைவுகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் இந்த நாளில் கர்த்தர் அவரது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி உங்களை விடுதலை செய்தார். நீங்கள் புளிப்புள்ள ரொட்டியை உண்ணக்கூடாது. 4 ஆபீப் மாதத்தின் இந்த நாளில் நீங்கள் எகிப்தை விட்டுச் செல்கிறீர்கள். 5 கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு ஒரு விசேஷமான வாக்குறுதியை அளித்தார். கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் ஜனங்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்தார். நல்ல பொருட்களால் நிரப்பப்பட்ட நாட்டிற்கு கர்த்தர் உங்களை வழிநடத்திய பிறகும் நீங்கள் இந்த நாளை நினைவுகூர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதல் மாதத்தின் இந்த நாளை வழிபாட்டிற்குரிய விசேஷ தினமாகக் கொள்ளவேண்டும்.
6 “புளிப்பு இல்லாத ரொட்டியையே ஏழு நாட்களுக்கு நீங்கள் உண்ண வேண்டும். ஏழாவது நாளில் ஒரு பெரிய விருந்து கர்த்தரை மகிமைப்படுத்துவதற்காக நடைபெறும். 7 எனவே ஏழு நாட்கள் புளிப்புள்ள ரொட்டியை நீங்கள் உண்ணவே கூடாது. உங்கள் தேசத்தில் எப்பக்கத்திலும் புளிப்புள்ள ரொட்டி இருக்கவே கூடாது. 8 இந்த நாளில் உங்கள் பிள்ளைகளுக்கு, ‘கர்த்தர் நம்மை எகிப்திலிருந்து வழிநடத்தியதால் இந்த விருந்து நடைப்பெறுகிறது’ என்று சொல்ல வேண்டும்.
9 “உங்கள் கண்களின் முன்னால் இது அடையாளமாக இருக்கும். இந்த பண்டிகை நாள் கர்த்தரின் போதனைகளை நினைவுபடுத்தவும், உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர கர்த்தர் தமது பெரும் வல்லமையைப் பயன்படுத்தினார் என்பதை நினைவுபடுத்தவும் இது உதவும். 10 எனவே ஒவ்வொரு ஆண்டும் அதன் காலத்தில் இந்த விடுமுறை நாளை நினைவு கூருங்கள்.
11 “உங்களுக்குக் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்த தேசத்திற்கு அவர் உங்களை வழிநடத்துவார். கானானிய ஜனங்கள் இப்போது அங்கு வாழ்கிறார்கள். இத்தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக தேவன் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தார்.” தேவன் இந்நாட்டை உங்களுக்குக் கொடுத்தபிறகு, 12 நீங்கள் உங்கள் முதல் மகனை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவு கூருங்கள். முதலில் பிறந்த எந்த ஆண் மிருகத்தையும் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். 13 முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் கழுதையையும் கர்த்தரிடமிருந்து திரும்பப்பெற்று, அதற்குப் பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுக்கவேண்டும். கர்த்தரிடமிருந்து கழுதையை வாங்க உங்களுக்கு விருப்பமில்லையென்றால், அதனைக் கொன்றுவிடுங்கள். அது ஒரு பலியாகும். நீங்கள் அதன் கழுத்தை முறிக்க வேண்டும். முதலில் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெற வேண்டும்.
14 “வருங்காலத்தில் நீங்கள் இதைச் செய்வதன் காரணத்தை அறியும்படி உங்கள் பிள்ளைகள், ‘இதன் பொருள் என்ன?’ என்று கேட்பார்கள். நீங்கள் அவர்களிடம்: ‘கர்த்தர் தமது மகா வல்லமையைப் பயன்படுத்தி நம்மை எகிப்திலிருந்து மீட்டார். நாம் அந் நாட்டில் அடிமைகளாக இருந்தோம். ஆனால் கர்த்தர் நம்மை இங்கு வழிநடத்தினார். 15 எகிப்தில், பார்வோன் பிடிவாதமாக இருந்தான். நாம் புறப்படுவதற்கு அவன் அனுமதி கொடுக்வில்லை. எனவே கர்த்தர் அந்நாட்டின் முதலாவதாகப் பிறந்த எல்லா உயிரினங்களையும் கொன்றார். (கர்த்தர் முதலில் பிறந்த மகன்களையும், முதலில் பிறந்த மிருகங்களையும் கொன்றார்.) எனவே நான் முதலில் பிறந்த ஆண் மிருகத்தை கர்த்தருக்குக் கொடுக்கிறேன், எல்லா முதலில் பிறந்த ஆண் பிள்ளைகளையும் கர்த்தரிடமிருந்து திரும்பப் பெறுகிறேன்!’ என்று நீங்கள் பதில் கூறுவீர்கள். 16 இது உங்கள் கையில் கட்டப்பட்ட ஒரு குறியீடு போலவும், உங்கள் கண்களுக்கு நடுவில் தொங்கும் ஒரு அடையாளமாகவும் காணப்படும். கர்த்தர் தமது அளவில்லா வல்லமையினால் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார் என்பதை நீங்கள் நினைவுகூர இது உதவும்” என்றான்.
எகிப்திலிருந்து வெளியேறும் பயணம்
17 பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியேற்றினான். பெலிஸ்தரின் நாட்டின் வழியாக ஜனங்கள் பயணம் செய்வதை கர்த்தர் அனுமதிக்கவில்லை. கடலின் ஓரமாக உள்ள அந்த சாலை குறுக்கு சாலையாக இருந்தது. ஆனால் கர்த்தர், “அவ்வழியே ஜனங்கள் பயணத்தை மேற்கொண்டால் அவர்கள் போரிட வேண்டியிருக்கும். அதனால் தங்கள் எண்ணத்தை மாற்றி, எகிப்திற்குத் திரும்பிப் போகக்கூடும்” என்றார். 18 ஆகவே கர்த்தர் அவர்களை வேறு வழியாக நடத்திச் சென்றார். செங்கடல் அருகே பாலைவனத்தின் நடுவே அவர்களை வழிநடத்தினார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது சண்டைக்கு ஆயத்தமான ஆடைகளை அணிந்திருந்தனர்.
யோசேப்பு தாயகத்திற்குத் திரும்புதல்
19 யோசேப்பின் எலும்புகளை மோசே தன்னோடு எடுத்துச் சென்றான். (யோசேப்பு மரிக்கும் முன்னர் இஸ்ரவேலின் ஜனங்களிடம் இதைச் செய்ய வேண்டுமென வாக்குறுதி பெற்றிருந்தான். யோசேப்பு, “தேவன் உங்களை மீட்கும்போது, எனது எலும்புகளை எகிப்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள்” என்று கூறியிருந்தான்.)
கர்த்தர் தமது ஜனங்களை வழிநடத்துகிறார்
20 இஸ்ரவேல் ஜனங்கள் சுக்கோத்தை விட்டு நீங்கி ஏத்தாமில் தங்கினார்கள். ஏத்தாம் பாலைவனத்தினருகே இருந்தது. 21 கர்த்தர் பாதை காட்டினார். பகலில், கர்த்தர் ஜனங்களை வழிநடத்த உயரமான ஒரு மேகத்தையும், இரவு வேளையில் வழிநடத்த உயரமான ஒரு நெருப்புதூணையும் பயன்படுத்தினார். அவர்கள் இரவிலும் பயணம் செய்வதற்கேதுவாக இந்த நெருப்பு வெளிச்சம் தந்தது. 22 உயர்ந்த மேகம் பகல் முழுவதும், உயர்ந்த நெருப்பு தூண் இரவு முழுவதும் அவர்களோடிருந்தது.
14 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “ஜனங்களிடம் ஈரோத்துக்கு திரும்பிப் போகும்படியாகக் கூறு. பாகால் செபோனுக்கு அருகேயுள்ள மிக்தோலுக்கும் செங்கடலுக்கும் மத்தியில் அவர்கள் இரவில் தங்கட்டும். 3 இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தில் காணாமற்போனார்கள் என்று பார்வோன் எண்ணுவான். ஜனங்களுக்குப் போகத்தக்க இடம் எதுவுமில்லை என்று அவன் நினைப்பான். 4 பார்வோனுக்குத் தைரியம் தந்து, அவன் உங்களைத் துரத்தும்படியாகச் செய்வேன். ஆனால் நான் பார்வோனையும் அவனது சேனையையும் தோற்கடிப்பேன். அது எனக்கு கனத்தைக் கொண்டுவரும். அப்போது எகிப்திய ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்” என்றார். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவர் கூறினபடியே அவர்கள் செய்தார்கள்.
பார்வோன் இஸ்ரவேலரைத் துரத்துதல்
5 இஸ்ரவேல் ஜனங்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி பார்வோனுக்குக் கிடைத்தது. இதைக் கேட்டபோது அவனும், அவனது அதிகாரிகளும் மனம்மாறி முன்பு செய்த தங்கள் செயல்களை மறு பரிசீலனை செய்தனர். பார்வோன், “இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்கு ஏன் அனுமதித்தோம்? அவர்கள் ஓடிப்போவதற்கு ஏன் வகை செய்தோம்? இப்போது நாம் நமது அடிமைகளை இழந்துபோனோம்!” என்றான்.
6 எனவே, பார்வோன் தனது ஆட்களோடு தேரையும் தயார்ப்படுத்தினான். 7 பார்வோன் அவனது சிறந்த 600 ஆட்களையும், அவனது இரதங்கள் அனைத்தையும் கூட்டிச் சென்றான். ஒவ்வொரு தேரிலும் ஒரு அதிகாரி இருந்தான். 8 வெற்றிக் களிப்போடு தங்கள் கைகளை உயர்த்தியவர்களாய் இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் எகிப்திய அரசனாகிய பார்வோன் தைரியம் கொள்ளும்படியாக கர்த்தர் செய்தார். பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களைத் துரத்தினான்.
9 எகிப்திய படையில் இரதங்களோடு கூடிய பல குதிரை வீரர்கள் இருந்தனர். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களைப் பின் தொடர்ந்து அவர்கள் செங்கடலின் அருகேயுள்ள பாகால் செபோனுக்குக் கிழக்கேயிருக்கிற ஈரோத்தில் இருக்கும்போது நெருங்கி வந்தனர்.
10 பார்வோனும் அவனது படையினரும் தங்களை நோக்கி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டு மிகவும் பயந்தனர். அவர்கள் கர்த்தரிடம் உதவி வேண்டினர். 11 அவர்கள் மோசேயை நோக்கி, “நீர் ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? பாலைவனத்தில் சாகும்படியாக ஏன் எங்களை அழைத்துக் கொண்டு வந்தீர்? எகிப்தில் நிம்மதியாக மரித்திருப்போம். எகிப்தில் நிறைய கல்லறைகள் இருந்தன. 12 இவ்வாறு நடக்குமென நாங்கள் உங்களிடம் கூறினோம். எகிப்தில் இருந்தபோது நாங்கள், ‘எங்களைத் தொல்லைப்படுத்தாதீர்கள். நாங்கள் தங்கியிருந்து எகிப்தியருக்கு அடிமை வேலை செய்வோம்’ என்றோம். அங்கிருந்து வெளியேறி பாலைவனத்தில் இங்கு மடிவதைக் காட்டிலும் அங்கு தங்கி அடிமைகளாக இருப்பதே நலமாக இருந்திருக்கும்” என்றனர்.
13 ஆனால் மோசே, “பயப்படாதீர்கள்! ஓடிப் போகாதீர்கள்! சும்மா இருந்து, கர்த்தர் இன்றைக்கு உங்களை மீட்பதைப் பாருங்கள். இந்த எகிப்தியர்களை இனிமேல் பார்க்கமாட்டீர்கள்! 14 நீங்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தால் போதும், கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார்” என்றான்.
15 கர்த்தர் மோசேயை நோக்கி, “ஏன் இன்னும் நீ என்னிடம் அழுகிறாய்? இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பயணத்தைத் தொடருமாறு கூறு. 16 செங்கடலுக்கு மேலாக உன் கைத்தடியை உயர்த்து. கடல் பிளக்கும். அப்போது ஜனங்கள் அதிலுள்ள உலர்ந்த தரை வழியே நடந்து செல்லலாம். 17 உங்களைத் துரத்தும்படியாக நானே எகிப்தியருக்குத் தைரியம் அளித்தேன். ஆனால் நானே பார்வோனையும், அவனது குதிரைகள் இரதங்களைக் காட்டிலும் வல்லமை பொருந்தியவர் என்று உணரச் செய்வேன். 18 அப்போது எகிப்தியர் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். பார்வோனையும் அவனது இரதம் குதிரை வீரர்களையும் நான் மேற்கொள்ளும்போது அவர்கள் என்னை மதிப்பார்கள்” என்றார்.
கர்த்தர் எகிப்திய சேனைகளை முறியடித்தல்
19 அப்போது கர்த்தருடைய தூதன் ஜனங்களுக்குப் பின்னாகப் போனான். (கர்த்தருடைய தூதன் எப்போதும் ஜனங்களுக்கு முன்னே, அவர்களை வழிநடத்தியபடியே சென்று கொண்டிருந்தான்). அந்த உயரமான மேகம் ஜனங்களுக்கு முன்னே செல்லாமல் அவர்களுக்கு பின்னே சென்றது. 20 இவ்வாறு அம்மேகம் எகிப்தியருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே சென்று நின்றது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு வெளிச்சம் இருந்தது. ஆனால் எகிப்தியர்களையோ இருள் சூழ்ந்தது. எனவே அந்த இரவில் எகிப்தியர்கள் இஸ்ரவேல் ஜனங்களை நெருங்கிவர முடியவில்லை.
21 மோசே தனது கரங்களைச் செங்கடலுக்கு நேராக உயர்த்தினான். கர்த்தர் கிழக்கிலிருந்து ஒரு காற்று வீசும்படியாகச் செய்தார். இரவு முழுவதும் காற்று வீசிற்று, கடல் பிளந்தது. காற்று நிலத்தை உலரச் செய்தது. 22 இஸ்ரவேல் ஜனங்கள் உலர்ந்த தலையின் மேல் கடலினூடே போனார்கள். அவர்களுக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தண்ணீர் சுவர்போல் உயர்ந்து நின்றது. 23 அப்போது பார்வோனின் குதிரை வீரர்கள் தங்கள் இரதங்களுடன் கடலினுள் இஸ்ரவேலரைப் பின்தொடர ஆரம்பித்தனர். 24 அதிகாலையில் கர்த்தர் உயர்ந்த மேகத்திலிருந்தும், நெருப்புத் தூணிலிருந்தும் எகிப்திய படையை நோக்கிப் பார்த்து அவர்களைத் தோற்கடித்தார். 25 இரதங்களின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டன. இரதங்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. எகிப்தியர்கள், “இங்கிருந்து தப்பிப் போவோம்! இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தர் நம்மை எதிர்த்து போர் செய்கிறார்” என்றார்கள்.
26 அப்போது கர்த்தர் மோசேயிடம், “உன் கைகளைக் கடலுக்கு மேலாக உயர்த்து, தண்ணீர் புரண்டு எகிப்தியரின் இரதங்களையும் குதிரை வீரர்களையும் மூழ்கடிக்கும்” என்றார்.
27 எனவே விடிவதற்குச் சற்றுமுன் மோசே கடலுக்கு மேலாகத் தன் கரங்களை உயர்த்தினான். தண்ணீர் முன்புபோல் சமமாக வந்து நின்றது. எகிப்தியர்கள் தங்களால் முடிந்த அளவு தண்ணீரிலிருந்து தப்பி ஓட முயன்றார்கள். ஆனால் கர்த்தர் அவர்களைக் கடலில் மூழ்கடித்துவிட்டார். 28 தண்ணீர் முன்பு போல் சமமாக வந்ததால் இரதங்களையும், குதிரை வீரர்களையும் மூழ்கடித்து விட்டது. பார்வோனின் படையினர் இஸ்ரவேல் ஜனங்களைத் துரத்தினர், ஆனால் அப்படையோ அழிக்கப்பட்டது, ஒருவரும் பிழைக்கவில்லை!
29 இஸ்ரவேல் ஜனங்கள் உலர்ந்த தரையில் கடலைக் கடந்தனர். அவர்களது வலது, இடது புறங்களில் மாத்திரம் தண்ணீர் சுவரைப்போல நின்றது. 30 எனவே, அந்நாளில் எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் மீட்டார். செங் கடலின் கரையில் எகிப்தியரின் பிணங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டனர். 31 கர்த்தர் எகிப்தியர்களை வென்றபோது, இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் மிகுந்த வல்லமையைக் கண்டார்கள். எனவே ஜனங்கள் பயந்து கர்த்தரை மதித்தார்கள். அவர்கள் கர்த்தரையும் அவரது தாசனாகிய மோசேயையும் நம்ப ஆரம்பித்தனர்.
மோசேயின் பாட்டு
15 அப்போது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தரை நோக்கி பின்வரும் பாடலைப் பாடினார்கள்:
“நான் கர்த்தரைப் பாடுவேன்!
அவர் பெருமைமிக்க செயல்களைச் செய்தார்,
அவர் குதிரையையும், குதிரை வீரனையும் கடலில் தள்ளினார்.
2 கர்த்தரே எனது பலம். அவர் என்னை மீட்கிறார்.
நான் அவரைத் துதித்துப்பாடுவேன் கர்த்தரே எனது தேவன், நான் அவரைத் துதிப்பேன்.
கர்த்தர் எனது முற்பிதாக்களின் தேவன்.
நான் அவரை மதிப்பேன்.
3 கர்த்தர் யுத்தத்தில் சிறந்தவர்,
கர்த்தர் என்பது அவரது பெயர்.
4 பார்வோனின் இரதங்களையும், வீரர்களையும் அவர் கடலில் தள்ளினார்.
பார்வோனின் சிறந்த வீரர்கள் செங்கடலில் அமிழ்ந்தனர்.
5 ஆழியின் தண்ணீர் அவர்களை மூடிக்கொண்டது.
அவர்கள் கடலினடியில் பாறைகளைப்போல் மூழ்கிப்போயினர்.
6-7 “உமது வலது கரம் வியக்கத்தகும் வல்லமை உடையது.
கர்த்தாவே, உமது வலது கரம் பகைவர்களைச் சிதறடித்தது.
உமது பெருமையால் உமக்கு எதிராக நின்ற ஜனங்களை நீர் அழித்தீர்.
உமது கோபம் அவர்களை வைக்கோலில் பற்றும் நெருப்பைப் போல அழித்தது.
8 உமது உக்கிரத்தின் பெருமூச்சால் தண்ணீர் மேலெழும்பிற்று, ஒழுகும் தண்ணீர் திடமான சுவராயிற்று.
ஆழத்தின் அஸ்திபாரம்வரைக்கும் கடல் தண்ணீர் திடன் கொண்டது.
9 “நான் தொடர்ந்து பிடிப்பேன், ‘நான் அவர்கள் செல்வத்தைப் பறிப்பேன்.
எனது வாளால் அவற்றை அபகரிப்பேன்.
நான் எல்லாவற்றையும் எனக்காக எடுப்பேன்’ என்று பகைவன் சொன்னான்.
10 ஆனால் நீர் அவர்கள் மேல் ஊதி, கடலால் அவர்களை மூடினீர்.
ஆழ்கடலில் அவர்கள் ஈயத்தைப் போல மூழ்கினார்கள்.
11 “கர்த்தரைப்போன்ற தேவர்கள் உள்ளனரோ?
இல்லை! உம்மைப்போன்ற தேவர்கள் எவருமில்லை!
நீர் மேலான பரிசுத்தமானவர்!
நீர் வியக்கத்தக்க ஆற்றல் வாய்ந்தவர்!
நீர் மாபெரும் அற்புதங்கள் செய்பவர்!
12 வலதுகரத்தை உயர்த்தி உலகத்தை அழிக்க உம்மால் முடியும்.
13 ஆனால் உமது இரக்கத்தால்
நீர் மீட்ட ஜனங்களை வழிநடத்துகிறீர்.
உமது வல்லமையால் அவர்களைப் பரிசுத்தமும்,
இன்பமுமான நாட்டிற்குள் நடத்துகிறீர்.
14 “பிற ஜாதிகள் இதைக் கேட்டு, பயந்து நடுங்குவார்கள்.
பெலிஸ்தியர் பயத்தால் நடுங்குவார்கள்.
15 ஏதோமின் தலைவர்கள் பயத்தால் நடுங்குவார்கள்.
மோவாபின் தலைவர் பயத்தால் நடுங்குவார்கள்.
கானானின் ஜனங்கள் துணிவிழப்பார்கள்.
16 அவர்கள் உமது ஆற்றலைக் காண்கையில் அச்சத்தால் நிரம்புவார்கள்.
கர்த்தரின் ஜனங்கள் செல்லும்மட்டும், உம்மால் உண்டாக்கப்பட்ட உமது ஜனங்கள் கடந்து செல்லும்மட்டும் அவர்கள் உறுதியான பாறையைப் போல ஸ்தம்பித்து நிற்பார்கள்.
17 கர்த்தாவே நீர் உம்முடைய ஜனங்களை உம்முடைய மலைக்கு வழிநடத்துவீர்.
உமது சிங்காசனத்திற்காக நீர் தேர்ந்தெடுத்த இடத்தினருகே அவர்களை வாழச்செய்வீர். ஆண்டவரே,
நீர் உமது ஆலயத்தைக் கட்டுவீர்!
18 “கர்த்தாவே நீர் என்றென்றும் ஆளுகை செய்வீர்!”
19 ஆம், அது உண்மையாகவே நிகழ்ந்தது! பார்வோனின் குதிரைகளும், வீரர்களும், இரதங்களும் கடலுக்குள் அமிழ்ந்தன. கடலின் ஆழத்து தண்ணீரை அவர்களுக்கு மேலாக கர்த்தர் கொண்டு வந்தார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ கடலினூடே உலர்ந்த தரையில் நடந்தனர்.
20 அப்போது, தீர்க்கதரிசினியும், ஆரோனின் சகோதரியுமாகிய மிரியாம் ஒரு தம்புருவை எடுத்தாள். மிரியாமுடன் பெண்கள் பாடவும் நடனம் ஆடவும் செய்தனர். மிரியாம்,
21 “கர்த்தரைப் பாடுங்கள்!
அவர் பெரிய செயல்களைச் செய்தார்.
அவர் குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்தினார்” என்று பாடினாள்.
இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்திற்குள் செல்லுதல்
22 செங்கடலை விட்டு சூர் பாலைவனத்திற்குள் மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் சென்றான். அவர்கள் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செய்தனர். ஜனங்களுக்குக் குடிப்பதற்கு அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை. 23 மூன்று நாட்களுக்குப் பின் ஜனங்கள் மாராவிற்கு வந்தனர். மாராவில் தண்ணீர் இருந்தது. ஆனால் குடிக்க முடியாதபடி கசப்பாக இருந்தது. (இதனால் அந்த இடம் மாரா என்று அழைக்கப்பட்டது)
24 மோசேயிடம் வந்து ஜனங்கள், “நாங்கள் இப்போது எதைக் குடிப்போம்?” என்று முறையிட ஆரம்பித்தனர்.
25 மோசே கர்த்தரை வேண்டினான், கர்த்தர் அவனுக்கு ஒரு மரத்தைக் காட்டினார். மோசே அம்மரத்தை தண்ணீருக்குள் போட்டான். அவன் அவ்வாறு செய்தபோது, அது நல்ல குடிதண்ணீராக மாறிற்று.
அவ்விடத்தில், கர்த்தர் ஜனங்களை நியாயந்தீர்த்து அவர்களுக்கு ஒரு சட்டத்தைக் கொடுத்தார். ஜனங்களின் நம்பிக்கையையும் சோதித்துப் பார்த்தார். 26 கர்த்தர், “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் சரியெனக் கூறும் காரியங்களை நீங்கள் செய்யவேண்டும். கர்த்தரின் எல்லாக் கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் நீங்கள் கீழ்ப்படிந்தால், எகிப்தியர்களைப்போல நோயுறமாட்டீர்கள். கர்த்தராகிய நான் எகிப்தியருக்கு கொடுத்த எந்த நோயையும் உங்களுக்கு வரவிடமாட்டேன். நானே கர்த்தர். உங்களைக் குணப்படுத்துகிறவர் நான் ஒருவரே” என்றார்.
27 பின்பு ஜனங்கள் ஏலிமுக்குப் பயணமாயினர். ஏலிமில் பன்னிரண்டு நீரூற்றுக்களும், எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. எனவே தண்ணீர் இருந்த இடத்தினருகே ஜனங்கள் கூடாரமிட்டுத் தங்கினார்கள்.
2008 by World Bible Translation Center