Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 43-45

யாக்கோபு பென்யமீனை எகிப்துக்கு அனுப்ப சம்மதித்தல்

43 நாட்டில் பஞ்சம் மிகக் கொடியதாய் இருந்தது.

அவர்கள் எகிப்திலிருந்து வாங்கி வந்த தானியங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது. யாக்கோபு தன் மகன்களிடம், “எகிப்துக்குப் போய் இன்னும் கொஞ்சம் தானியங்களை வாங்கி வாருங்கள்” என்றான்.

ஆனால் யூதாவோ யாக்கோபிடம், “அந்நாட்டின் ஆளுநர் எங்களை எச்சரித்திருக்கிறார். ‘உங்கள் இளைய சகோதரனை அழைத்துக்கொண்டு வராவிட்டால் உங்களோடு பேசமாட்டேன்’ என்றார். நீங்கள் பென்யமீனை எங்களோடு அனுப்பினால் நாங்கள் போய் தானியங்களை வாங்கி வருவோம். ஆனால் நீங்கள் பென்யமீனை அனுப்ப மறுத்தால் நாங்கள் போகமாட்டோம். அந்த மனிதன் இவன் இல்லாமல் வரவேண்டாம் என்று எச்சரித்துள்ளான்” என்றான்.

இஸ்ரவேல் (யாக்கோபு) “அவனிடம் ஏன் உங்கள் இளைய சகோதரனைப்பற்றி சொன்னீர்கள்? ஏன் இதுபோல் ஒரு கெட்டச் செயலை எனக்குச் செய்தீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு சகோதரர்கள், “அந்த மனிதன் ஏராளமான கேள்விகளைக் கேட்டான். அவன் எங்களைப்பற்றியும் நமது குடும்பத்தைப்பற்றியும் கேட்டான். அவன் எங்களிடம், ‘உங்கள் தந்தை உயிரோடு இருக்கிறாரா? இன்னொரு தம்பி வீட்டில் இருக்கிறானா?’ என்று கேட்டான். நாங்கள் பதிலை மட்டும் சொன்னோம். அவன் இளைய சகோதரனையும் அழைத்துக்கொண்டு வரச்சொல்லுவான் என்பதை நாங்கள் அறியோம்” என்றார்கள்.

பிறகு யூதா தன் தந்தையாகிய இஸ்ரவேலிடம், “பென்யமீனை என்னோடு அனுப்பி வையுங்கள் அவனுக்கு நான் பொறுப்பு. உணவுப் பொருட்களுக்காக எகிப்துக்குப் போகவே வேண்டும். நாம் போகாவிட்டால் நீரும், நமது குழந்தைகளும் மரித்து போவோம். அவனைப் பாதுகாப்பாக அழைத்து வருவோம் என்று உறுதி கூறுகிறேன். அவனை நாங்கள் திருப்பி அழைத்து வாராவிட்டால் நீங்கள் என்னை எப்பொழுதும் பழிகூறுங்கள். 10 நீங்கள் முன்னமே போகவிட்டிருந்தால் இதற்குள் இரண்டுமுறை போய் வந்திருக்கலாம்” என்று சொன்னான்.

11 பிறகு அவர்கள் தந்தை இஸ்ரவேல், “இது உண்மை என்றால் பென்யமீனை உங்களோடு அழைத்துப்போங்கள். ஆனால் ஆளுநருக்குச் சில அன்பளிப்புகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். நம் நாட்டில் சேகரிக்கத்தக்கவற்றைச் சேகரியுங்கள். தேன், பிசின்தைலம், கந்தவர்க்கம், வெள்ளைப்போளம், தொபிந்துகொட்டைகள், வாதுமைக் கொட்டைகள் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள். 12 பணத்தை இரட்டிப்பாய் எடுத்துப்போங்கள். கடந்த முறை நீங்கள் கொடுத்த பணம் தவறி உங்களிடமே வந்துவிட்டது ஆளுநர் தவறு செய்திருக்கலாம். 13 பென்யமீனையும் அழைத்துக்கொண்டு அவரிடம் போங்கள். 14 நீங்கள் ஆளுநர் முன்னால் நிற்கும்போது சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களுக்கு உதவுவார். அவர் சிமியோனையும், பென்யமீனையும் திருப்பி அனுப்பும்படி பிரார்த்தனை செய்கிறேன். இல்லாவிட்டால் நான் மீண்டும் மகனை இழந்த துக்கத்துக்கு ஆளாவேன்” என்றான்.

15 எனவே, சகோதரர்கள் காணிக்கைப் பொருட்களோடும் இரண்டு மடங்கு பணத் தோடும் எகிப்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். இப்போது பென்யமீனும் அவர்களோடு போனான்.

சகோதரர்கள் யோசேப்பின் வீட்டிற்கு அழைக்கப்படுகிறார்கள்

16 எகிப்தில், அவர்களோடு பென்யமீனை பார்த்த யோசேப்பு வேலைக்காரனிடம், “இவர்களை என் வீட்டிற்கு அழைத்து வாருங்கள். ஒரு மிருகத்தைக் கொன்று சமையுங்கள். இன்று மத்தியானம் அவர்கள் என்னோடு சாப்பிடுவார்கள்” என்றான். 17 வேலைக்காரன் யோசேப்பு சொன்னபடி செய்தான். அவர்களை யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துப் போனார்கள்.

18 அவர்கள் யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பயந்தனர். “சென்ற முறை பணத்தை பைக்குள்ளே போட்டுவிட்டதால் இப்போது தனது வீட்டிற்கு அழைக்கிறார். அது நமக்கு எதிரான சாட்சியாகப் பயன்படுத்தப்படும். நமது கழுதைகளைப் பறித்துக்கொண்டு நம்மை அடிமைகளாக்கிவிடுவார்கள்” என்று பேசிக்கொண்டார்கள்.

19 ஆகவே அவர்கள் அனைவரும் யோசேப்பின் வீட்டின் பொறுப்பாளனாகிய வேலைக்காரனிடம் வந்தனர். 20 அவர்கள் அவனிடம், “ஐயா, இதுதான் உண்மை என்று வாக்குறுதிச் செய்கிறோம். சென்றமுறை தானியம் வாங்க வந்தோம். 21-22 வீட்டிற்குத் திரும்பும்போது வழியில் பைக்குள் பணம் இருப்பதைப் பார்த்தோம். அதற்குள் எவ்வாறு வந்தது என்று எங்களுக்குப் புரியவில்லை. ஆனால் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க கொண்டு வந்திருக்கிறோம். இந்த முறை உணவுப் பொருள் வாங்குவதற்கு அதிகப்படியான பணமும் கொண்டு வந்திருக்கிறோம்” என்றனர்.

23 ஆனால் வேலைக்காரனோ, “பயப்பட வேண்டாம், நம்புங்கள் உங்கள் தேவனும் உங்கள் தந்தையின் தேவனும் அந்தப் பணத்தை உங்கள் பைகளில் போட்டிருக்கலாம். கடந்த முறை தானியத்துக்கான பணத்தைக் கொடுத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்” என்றான்.

பிறகு அவன் சிமியோனைச் சிறையிலிருந்து விடுவித்தான். 24 அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வேலைக்காரன் வீட்டிற்குள் போனான். அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தான். அவர்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டனர். அவர்களின் கழுதைகளுக்கும் உணவு கொடுத்தான்.

25 அவர்கள் ஆளுநரோடு உண்ணப் போகிறோம் என்பதை அறிந்தனர். எனவே, அவனுக்குக் கொடுக்க வேண்டிய காணிக்கைகளை எடுத்து தயார் செய்தனர்.

26 மதியம் ஆனபோது யோசேப்பு வீட்டிற்கு வந்தான். அவர்கள் அவனுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தனர். பிறகு அவனுக்கு முன்னால் பணிந்து வணங்கினார்கள்.

27 யோசேப்பு அவர்களிடம் நடந்ததை எல்லாம் கேட்டான், “உங்கள் வயதான தந்தை எப்படி இருக்கிறார். இப்போதும் அவர் உயிரோடும் நலமாகவும் இருக்கிறாரா?” என்று கேட்டான்.

28 சகோதரர்கள் அனைவரும், “ஆமாம் ஐயா, அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்” என்றனர். மீண்டும் அவனைப் பணிந்து வணங்கினார்கள்.

யோசேப்பு தன் தம்பி பென்யமீனைப் பார்க்கிறான்

29 பிறகு யோசேப்பு தன் தம்பியைப் பார்த்தான். (இருவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள்.) “இதுதான் எனக்கு நீங்கள் சொன்ன உங்கள் இளைய சகோதரனா?” என்று கேட்டான். பிறகு யோசேப்பு, “என் மகனே தேவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்று பென்யமீனிடம் சொன்னான்.

30 பிறகு அவன் அந்த அறையை விட்டு வெளியே ஓடினான். தன் சகோதரன் பென்யமீனைத் தான் மிகவும் விரும்புவதை அவனுக்கு உணர்த்தப் பெரிதும் விரும்பினான். அவனுக்கு அழவேண்டும்போல இருந்தது. ஆனால் தான் அழுவதைத் தன் சகோதரர்கள் பார்த்துவிடக் கூடாதே என்று அஞ்சினான். இதனால்தன் அறைக்குச் சென்று அழுதான். 31 பிறகு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தான். அவன் தன்னைத் தானே அடக்கிக்கொண்டு, “இது உணவு உண்ணும் நேரம்” என்றான்.

32 அவனுக்கும் அவர்களுக்கும் மற்ற எகிப்தியர்களுக்கும் தனித்தனியாக மேஜை போடப்பட்டிருந்தது. அவர்களும் தனித் தனியாக அமர்ந்தார்கள். எகிப்தியர்கள் எபிரெயர்களோடு சேர்ந்து சாப்பிடுவதில்லை. 33 யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்கு முன்னால் அமர்ந்தார்கள். மூத்தவன் முதல் இளையவன் வரை வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள் நடப்பதைப்பற்றி வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். 34 வேலைக்காரர்கள் யோசேப்பின் மேஜையிலிருந்து உணவை எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்தார்கள். அவர்கள் பென்யமீனுக்கு மற்றவர்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக உணவு கொடுத்தனர். சகோதரர்கள் யோசேப்போடு சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

யோசேப்பின் தந்திரமான திட்டம்

44 பிறகு யோசேப்பு வேலைக்காரர்களிடம்:

“இவர்களின் பைகளில் எவ்வளவு தானியம் போட முடியுமோ அவ்வளவு போடுங்கள். அவர்களால் கொண்டுபோக முடிகிறவரை போடுங்கள். தானியத்தோடு அவர்களின் பணத்தையும் போட்டுவிடுங்கள். இளைய சகோதரனின் பைக்குள் பணத்தோடு குறிப்பாக எனது வெள்ளிக் கோப்பையையும் போடுங்கள்” என்றான். வேலைக்காரர்களும் அவ்வாறே செய்தார்கள்.

மறுநாள் அதிகாலையில் சகோதரர்களும் அவர்களின் கழுதைகளும் அவர்களின் நாட்டுக்குத் திரும்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் புறப்பட்டுப் போனதும் அவன் வேலைக்காரர்களிடம் “போய் அவர்களைப் பின் தொடருங்கள். அவர்களை நிறுத்தி, ‘நாங்கள் நல்லபடியாக நடந்துகொண்டோம். நீங்கள் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறீர்கள், எங்கள் எஜமானின் வெள்ளிக் கோப்பையை ஏன் திருடினீர்கள்? எங்கள் எஜமானர் அந்தக் கோப்பையில்தான் திராட்சைரசம் குடிப்பார். அவர் இதனைக் குறிகூறவும் பயன்படுத்துவார். நீங்கள் என்ன செய்தீர்களோ அது தவறு என்று கேளுங்கள்’” என்றான்.

வேலைக்காரர்களும் அவ்வாறே செய்து, யோசேப்பு சொல்லச் சொன்னதைச் சொன்னார்கள்.

ஆனால் சகோதரர்களோ வேலைக்காரர்களிடம், “ஏன் இவ்வாறு ஆளுநர் சொன்னார்? நாங்கள் எதுவும் அவ்வாறு செய்யவில்லையே. எங்கள் பைகளில் கண்டுபிடித்த பணத்தைத் திரும்பக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் ஏன் உங்கள் எஜமானரின் வெள்ளியையும் தங்கத்தையும் திருடுகிறோம்? எங்களில் எவராவது ஒருவரது பையில் அந்த வெள்ளிக் கோப்பை இருக்குமானால் அவன் சாகட்டும். நீங்கள் அவனைக் கொல்லுங்கள். நாங்கள் உங்கள் அடிமையாகிறோம்” என்றனர்.

10 வேலைக்காரனோ, “நீங்கள் சொல்வது போலவே செய்வோம். ஆனால் அந்த மனிதனை நான் கொல்லமாட்டேன். அந்த வெள்ளிக் கோப்பை யாரிடம் உள்ளதோ அவன் எங்கள் அடிமையாவான். மற்றவர்களை விட்டுவிடுவேன்” என்றான்.

பென்யமீன் சிக்கிக்கொள்ளுதல்

11 ஒவ்வொருவரும் தங்கள் பையை விரைவாக அவிழ்த்து தானியத்தைத் தரையில் கொட்டினர். 12 வேலைக்காரன் ஒவ்வொரு பையிலும் தேடினான். மூத்தவனிலிருந்து இளையவன் வரை என வரிசையாகத் தேடினான். அவன் பென்யமீனின் பையில் கோப்பையைக் கண்டு பிடித்தான். 13 சகோதரர்கள் மிகவும் துக்கப்பட்டனர். தம் துயரத்தை வெளிப்படுத்தும்படி தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர். தங்கள் பைகளைக் கழுதைகளின்மீது வைத்துக்கொண்டு நகரத்திற்குத் திரும்பினார்கள்.

14 யூதாவும் பிற சகோதரர்களும் யோசேப்பின் வீட்டிற்கு வந்தனர். யோசேப்பு அங்கேயே இருந்தான். அவர்கள் அவனுக்கு முன்னால் விழுந்து வணங்கினார்கள். 15 யோசேப்பு, “ஏன் இவ்வாறு செய்தீர்கள்? நான் இரகசியங்களை அறிந்துகொள்ள சிறப்பான வழிகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியாதா? என்னைத் தவிர வேறு எவராலும் சிறப்பாகச் செய்ய முடியாது!” என்றான்.

16 யூதா, ஐயா, “நாங்கள் சொல்வதற்கு எதுவுமில்லை. விளக்கிச் சொல்லவும் வழியில்லை. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க முடியவில்லை. நாங்கள் எப்போதோ செய்த தவறுக்கு இப்போது தேவன் தண்டிக்கிறார். நாங்களும் பென்யமீனும் இனி உங்கள் அடிமைகள்” என்றான்.

17 ஆனால் யோசேப்போ, “உங்கள் அனைவரையும் அடிமையாக்க நான் விரும்பவில்லை. என் கோப்பையைத் திருடியவனை மட்டுமே அடிமையாக்குவேன். உங்கள் தந்தையிடம் நீங்கள் அனைவரும் சமாதானமாகத் திரும்பிப் போகலாம்” என்றான்.

யூதா பென்யமீனுக்காக வாதாடுதல்

18 யூதா யோசேப்பிடம் போய், “ஐயா! எங்களை வெளிப்படையாகப் பேச விடுங்கள். எங்களிடம் கோபப்படாதீர்கள். நீங்கள் பார்வோன் மன்னரைப் போன்றவர் என்பதை அறிவோம். 19 முன்பு இங்கு வந்தபோது ‘உங்களுக்குத் தந்தையோ சகோதரரோ இருக்கிறார்களா’ என்று கேட்டீர்கள். 20 நாங்கள் எங்களுக்குத் தந்தை இருக்கிறார், அவர் முதியவர். இளைய சகோதரன் இருக்கிறான். அவன் எங்கள் தந்தையின் முதிய வயதில் பிறந்ததால் அவனைப் பெரிதும் நேசிக்கிறார். அவனோடு கூடப்பிறந்தவன் மரித்துப் போனான். இவன் ஒருவன் தான் அத்தாயின் மகன்களில் உயிரோடு இருக்கிறான். எனவே எங்கள் தந்தை இவனைப் பெரிதும் நேசிக்கிறார் என்றோம். 21 பிறகு நீங்கள், ‘அவனையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். நான் அவனைப் பார்க்க விரும்புகிறேன்’ என்றீர்கள். 22 அதற்கு நாங்கள், ‘அவனால் வரமுடியாது அவனைத் தந்தை விடமாட்டார். அவனைப் பிரிந்தால் எங்கள் தந்தை மரித்துபோவார்’ என்றோம். 23 ஆனால் நீங்களோ எங்களிடம், ‘நீங்கள் அவனை அழைத்துக்கொண்டு வரவேண்டும் இல்லாவிட்டால் இனிமேல் தானியம் தரமுடியாது’ என்றீர்கள். 24 அதனால் நாங்கள் எங்கள் தந்தையிடம் போய் நீங்கள் சொன்னதையெல்லாம் சொன்னோம்.

25 “இறுதியில் எங்கள் தந்தை, ‘போய் இன்னும் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்’ என்றார். 26 நாங்கள் எங்கள் தந்தையிடம் ‘நாங்கள் எங்கள் இளைய சகோதரன் இல்லாமல் போகமாட்டோம். ஆளுநர் இவனைப் பார்க்காவிட்டால் தானியம் தர முடியாது என்று கூறியிருக்கிறார்’ என்றோம். 27 பிறகு என் தந்தை, ‘என் மனைவி ராகேல் எனக்கு இரண்டு மகன்களைக் கொடுத்தாள். 28 ஒரு மகனை வெளியே அனுப்பினேன். அவனைக் காட்டு மிருகங்கள் கொன்றுவிட்டன. அவனை இன்றுவரை காணவில்லை. 29 அடுத்த மகனையும் நீங்கள் அழைத்துப் போய் அவனுக்கு ஏதாவது நடந்தால் நான் மரணமடையுமளவுக்கு வருத்தமடைவேன்’ என்றார். 30 இப்போதும் எங்களின் இளைய சகோதரன் இல்லாமல் நாங்கள் போகும்பொழுது என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்யுங்கள். அவனே எங்கள் தந்தையின் வாழ்வில் மிக முக்கியமானவன். 31 அவன் எங்களுடன் இல்லை என்பதை எங்கள் தந்தை அறிந்தால் அவர் மரித்துவிடுவார். மேலும் அது எங்களுடைய தவறாகும். நாங்கள் எங்கள் தந்தையை மிகக் கவலைகொண்ட மனிதராக அவரது கல்லறைக்கு அனுப்புவோம்!

32 “நான் என் தந்தையிடம் இவனுக்காக பொறுப்பேற்று வந்துள்ளேன். ‘நான் இவனைத் திரும்ப அழைத்துக்கொண்டு வராவிட்டால் என் வாழ்க்கை முழுவதும் என்னைப் பழிக்கலாம்’ என்றேன். 33 எனவே நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இவனை இவர்களோடு அனுப்பி வையுங்கள். நான் இங்கே உங்களுக்கு அடிமையாக இருக்கிறேன். 34 இவன் இல்லாமல் நான் என் தந்தையிடம் போகமாட்டேன். என் தந்தைக்கு என்ன நேருமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான்.

தான் யாரென்று யோசேப்பு சொல்கிறான்

45 யோசேப்பு அதிக நேரம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அங்கிருந்தவர்களின் முன்னால் அவன் உள்ளம் உடைந்து கண்ணீர் சிந்தினான். யோசேப்பு “எல்லோரையும் வெளியே போகச்சொல்” என்று கட்டளையிட்டான். அனைவரும் வெளியேறினர். அச்சகோதரர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். பிறகு அவன் தன்னை யாரென்று சொன்னான். யோசேப்பு தொடர்ந்து அழுதான். அந்த வீட்டில் உள்ள எகிப்தியர்கள் அனைவரும் அதைக் கேட்டனர். யோசேப்பு தனது சகோதரர்களிடம், “நான் உங்களின் சகோதரன் யோசேப்பு. என் தந்தை உயிரோடு நலமாக இருக்கிறாரா?” என்று கேட்டான். சகோதரர்கள் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அவர்கள் குழப்பமும் பயமும் கொண்டனர்.

யோசேப்பு மீண்டும், “என்னருகே வாருங்கள். கெஞ்சி கேட்கிறேன், வாருங்கள்” என்றான். சகோதரர்கள் அவனருகே வந்தனர். அவர்களிடம், “நான் உங்கள் சகோதரன் யோசேப்பு. எகிப்திய வியாபாரிகளிடம் உங்களால் விற்கப்பட்டவன். இப்போது அதற்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் செய்தவற்றுக்காக உங்களையே கோபித்துக்கொள்ளாதீர்கள். இங்கே நான் வரவேண்டும் என்பது தேவனின் திட்டம். உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றவே இங்கே இருக்கிறேன். இந்தப் பஞ்சம் இரண்டு ஆண்டுகளாக இருக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கும். ஆகவே தேவன் என்னை உங்களுக்கு முன்னதாக அனுப்பி இருக்கிறார். அதனால் உங்களை காப்பாற்றமுடியும். என்னை இங்கே அனுப்பியது உங்களது தவறு அல்ல. இது தேவனின் திட்டம். பார்வோன் மன்னருக்கே தந்தை போன்று நான் இங்கே இருக்கிறேன். நான் அரண்மனைக்கும் இந்த நாட்டிற்கும் ஆளுநராக இருக்கிறேன்” என்றான்.

இஸ்ரவேல் எகிப்திற்கு அழைக்கப்படுதல்

யோசேப்பு அவர்களிடம், “வேகமாக என் தந்தையிடம் போங்கள். அவரது மகன் யோசேப்பு இந்தச் செய்தியை அனுப்பியதாகக் கூறுங்கள்: ‘தேவன் என்னை எகிப்தின் ஆளுநராக ஆக்கினார். எனவே என்னிடம் வாருங்கள். காத்திருக்க வேண்டாம். இப்போதே வாருங்கள். 10 என்னருகில் கோசேன் நிலப்பகுதியில் வாழலாம். நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், மிருகங்களும் இங்கே வரவேற்கப்படுகிறீர்கள். 11 இனிவரும் ஐந்தாண்டு பஞ்சத்திலும் உங்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்வேன். எனவே, நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களுக்குரிய எதையும் இழக்கமாட்டீர்கள்’ என்று கூறுங்கள்” என்றான்.

12 யோசேப்பு தன் சகோதரர்களிடம், “நன்றாக உறுதி செய்துகொள்ளுங்கள். நான் தான் யோசேப்பு. உங்கள் சகோதரனாகிய எனது வாய்தான் பேசுகிறது என்பதை நீங்களும் பென்யமீனும் கண்களால் காண்கிறீர்கள். 13 எகிப்திலே எனக்குள்ள மரியாதையையும் இங்கே நீங்கள் பார்க்கின்றவற்றையும் தந்தையிடம் சொல்லுங்கள். வேகமாகப் போய் தந்தையை அழைத்து வாருங்கள்” என்று சொன்னான். 14 பிறகு தன் தம்பி பென்யமீனை அணைத்துக்கொண்டான். இருவரும் அழுதார்கள். 15 பிறகு அவன் சகோதரர்கள் அனைவரையும் முத்தமிட்டான். அவர்களுக்காக அழுதான். இதற்குப் பிறகு அவர்கள் அவனோடு பேசத் தொடங்கினார்கள்.

16 யோசேப்பின் சகோதரர்கள் வந்த செய்தியை பார்வோன் அறிந்துகொண்டான். பார்வோன் அரண்மனை முழுக்க அச்செய்தி பரவியது. அரசனும் அவனது வேலைக்காரர்களும் மகிழ்ச்சியடைந்தனர். 17 அரசன் யோசேப்பிடம் வந்து, “உங்கள் சகோதரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு கானான் பகுதிக்குப் போகட்டும். 18 உனது குடும்பத்தையும் தந்தையையும் என்னிடம் அழைத்து வருமாறு கூறு. உங்களுக்கு வாழ நல்ல நிலத்தைக் கொடுக்கிறேன். இங்குள்ள சிறந்த உணவை அவர்கள் உண்ணலாம்” என்றான். 19 “அதோடு இங்குள்ள சிறந்த வண்டிகளை உன் சகோதரர்களுக்கு கொடு. அவர்கள் கானான் பகுதிக்குச் சென்று உன் தந்தையையும், பெண்களையும், குழந்தைகளையும் ஏற்றிக்கொண்டு வரட்டும். 20 அங்கிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வருவதைக் குறித்துக் கவலைகொள்ள வேண்டாம். எகிப்திலுள்ளவற்றில் சிறந்தவற்றை அவர்களுக்குக் கொடுக்கலாம்” என்றான்.

21 எனவே இஸ்ரவேலின் பிள்ளைகளும் அவ்வாறே செய்தனர். பார்வோன் மன்னன் சொன்னது போல் நல்ல வண்டிகளையும், பயணத்திற்கு வேண்டிய உணவையும் யோசேப்பு கொடுத்து அனுப்பினான். 22 சகோதரர் அனைவருக்கும் யோசேப்பு அழகான ஆடைகளைக் கொடுத்தான். ஆனால் யோசேப்பு பென்யமீனுக்கு மட்டும் ஐந்து ஜோடி ஆடைகளையும், 300 வெள்ளிக் காசுகளையும் கொடுத்தான். 23 யோசேப்பு தன் தந்தைக்கும் அன்பளிப்புகளைக் கொடுத்து அனுப்பினான். 10 கழுதைகள் சுமக்குமளவு எகிப்திலுள்ள சிறந்த பொருட்களையெல்லாம் கொடுத்தான். 10 பெண் கழுதைகள் சுமக்கும்படி உணவுப் பொருட்களும், ரொட்டியும் பிற பொருட்களும் தன் தந்தையார் திரும்பிவரும் பயணத்திற்குப் பயன்பட கொடுத்தான். 24 பிறகு சகோதரர்களை அனுப்பினான். அவர்கள் பிரிந்து போகும்போது “நேராக வீட்டிற்குப் போங்கள், வழியில் சண்டை போடாதீர்கள்” என்றான்.

25 எனவே, சகோதரர்கள் எகிப்தை விட்டு கானான் பகுதிக்குத் தந்தையிடம் போனார்கள். 26 அவர்கள் அவரிடம், “யோசேப்பு உயிரோடு இருக்கிறான் அவன் எகிப்து நாடு முழுவதிற்கும் ஆளுநராக இருக்கிறான்” என்றனர்.

இந்தச் செய்தியைக் கேட்டதும் யாக்கோபு புரியாமலிருந்தான். முதலில் அவனால் நம்ப முடியவில்லை. 27 ஆனால் அவர்கள் யோசேப்பு சொன்னதை எல்லாம் சொன்னார்கள். தன்னை அழைத்துப் போவதற்காக யோசேப்பு அனுப்பியிருந்த வண்டிகளையெல்லாம் பார்த்தான். பிறகு யாக்கோபு புத்துணர்வு பெற்று மிக்க சந்தோஷமடைந்தான். 28 “இப்போது உங்களை நம்புகிறேன், என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடு இருக்கிறான். மரிப்பதற்கு முன்னால் அவனைப் பார்க்கப் போவேன்” என்று இஸ்ரவேல் கூறினான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center