Beginning
யூதாவும் தாமாரும்
38 அந்த நேரத்தில் யூதா தன் சகோதரர்களை விட்டுவிட்டு ஈரா என்ற பெயருடைய மனிதனோடு இருந்தான். ஈரா அதுல்லாம் என்ற நகரிலிருந்து வந்தவன். 2 யூதா ஒரு கானானிய பெண்ணைச் சந்தித்து அவளை மணந்துகொண்டான். அவளது தந்தையின் பெயர் சூவா. 3 அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ஏர் என்று பெயர் வைத்தனர். 4 அவள் இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஓனான் என்று பேர் வைத்தார்கள். 5 இன்னொரு மகன் அவளுக்கு பிறந்தான். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தார்கள். அவன் பிறந்தபோது அவர்கள் கெசீபிலே வாழ்ந்தனர்.
6 யூதா தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்கு மணம் முடிக்க ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். அந்த பெண்ணின் பெயர் தாமார். 7 ஆனால் ஏர் பல தீய செயல்களைச் செய்தான். கர்த்தர் அவனைப்பற்றி சந்தோஷமடையாததால், கர்த்தர் அவனை அழித்துவிட்டார். 8 பிறகு யூதா, ஏரின் சகோதரனான ஓனானிடம், “போய் உன் சகோதரனின் மனைவியச் சேர்த்துக்கொண்டு அவளுக்குக் கணவனாகு. அவளுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவை உன் சகோதரன் ஏருக்கு உரியதாகும்” என்றான்.
9 இந்தச் சேர்க்கையினால் பிறக்கும் குழந்தைகள் தன்னுடையதாக இருக்காது என்பதை ஓனான் அறிந்தான். ஓனான் தாமாருடன் பாலின உறவுகொள்ளும்போது தனது சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதிருக்கத் தனது வித்துவைத் தரையில் விழச் செய்தான். 10 இது கர்த்தருக்கு மிகவும் கோபம் மூட்டியது. எனவே கர்த்தர் ஓனானையும் அழித்தார். 11 பிறகு யூதா தன் மருமகளான தாமாரிடம், “உன் தந்தை வீட்டிற்குப் போ. என் இளைய மகன் வளர்ந்து ஆளாகிற வரை நீ அவனுக்காகக் காத்திரு” என்றான். சேலாவும் அழிந்து போவானோ என்று யூதா அஞ்சினான். தாமார் தன் தந்தை வீட்டிற்குப் போனாள்.
12 பின்னர் சூவாவின் மகளான யூதாவின் மனைவி மரித்துப் போனாள். யூதாவின் துக்க காலத்தில் அதுல்லாம் நகரைச் சேர்ந்த தன் நண்பன் ஈராவோடு தன் ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்க திம்னாவுக்குப் போனான். 13 தன் மாமனாராகிய யூதா ஆடுகளின் மயிரைக் கத்தரிக்கும்படி திம்னாவை நோக்கிச் செல்கிறார் என்பதை தாமார் அறிந்துகொண்டாள். அவள் எப்போதும் விதவைக்குரிய ஆடைகளையே அணிந்து வந்தாள். 14 எனவே இப்போது வேறு ஆடைகளை அணிந்து, தன் முகத்தை மூடிக்கொண்டு திம்னா நகருக்கு அருகில் உள்ள ஏனாயிம் என்னும் இடத்துக்குச் செல்லும் பாதைக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள். யூதாவின் இளைய மகனான சேலா அப்பொழுது வளர்ந்துவிட்டான் என்பதை தாமார் அறிந்தாள். ஆனால் தாமார் அவனை மணப்பதற்கானத் திட்டத்தை யூதா செய்யமாட்டான் என்று அவள் உணர்ந்துகொண்டாள்.
15 யூதா அவ்வழியாகப் போனபோது அவளைப் பார்த்தான். அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால் அவளை வேசி என்று நினைத்துக்கொண்டான். 16 யூதா அவளிடம் போய், “நான் உன்னோடு பாலின உறவு கொள்ளலாமா” என்று கேட்டான். (அவனுக்கு அவள் தன் மருமகளான தாமார் என்பது தெரியாது) அவளோ, “எனக்கு எவ்வளவு கொடுப்பீர்?” என்று கேட்டாள்.
17 அவனோ, “என் மந்தையிலிருந்து ஓர் இளம் ஆட்டை அனுப்புவேன்” என்றான்.
அவள் அதற்கு, “நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முதலில் ஆடு வரும்வரை அடமானமாக ஏதாவது கொடுத்துவிட்டுப் போகவேண்டும்” என்று கேட்டாள்.
18 அவன், “என்னிடமிருந்து அடமானமாக என்ன பொருளை விரும்புகிறாய்” என்று கேட்டான்.
அவள், “உம்முடைய முத்திரை மோதிரமும், ஆரமும், கைக்கோலும் வேண்டும்” என்று கேட்டாள். யூதாவும் அவ்வாறே கொடுத்துவிட்டு அவளோடு பாலின உறவு கொண்டான். அதனால் அவள் கர்ப்பமானாள். 19 தாமார் தன் வீட்டிற்குப் போய் முக்காட்டை எடுத்துவிட்டாள். பின் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள்.
20 யூதா தான் வாக்களித்தபடி வேசியிடம் ஆட்டுக் குட்டியைக் கொடுக்க தன் நண்பன் ஈராவை அனுப்பினான். அவளிடம் கொடுத்த அடமானப் பொருட்களையும் வாங்கி வருமாறு சொன்னான். ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 21 ஈரா அந்நகர ஜனங்கள் பலரிடம் அந்த வேசியைப்பற்றி விசாரித்தான்.
அவர்கள், “அத்தகைய வேசி இங்கு இல்லை” என்றனர்.
22 எனவே அவன் யூதாவிடமே திரும்பி வந்தான். “என்னால் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்குள்ளவர்கள் அத்தகைய வேசி அங்கில்லை எனக் கூறுகின்றனர்” என்றான்.
23 அதனால் யூதா, “அவள் எனது பொருட்களை வைத்திருக்கட்டும். ஜனங்கள் எங்களை நகையாடுவதை நான் விரும்பவில்லை. ஆட்டுக்குட்டியை அவளுக்குக் கொடுக்க முயன்றேன். அங்கே அவளோ இல்லை, இதுபோதும்” என்றான்.
தாமார் கர்ப்பமாகுதல்
24 மூன்று மாதங்கள் ஆனதும் சிலர் யூதாவிடம், “உன் மருமகள் தாமார் ஒரு வேசியைப்போல பாவம் செய்துவிட்டாள். இப்போது அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” என்றனர்.
யூதாவோ, “அவளை அழைத்துப் போய் எரித்துவிடுவோம்” என்றான்.
25 அந்த மனிதர்கள் தாமாரைக் கொல்வதற்காக அவளிடம் சென்றார்கள். ஆனால் அவள் தன் மாமனாருக்கு ஒரு செய்தியை அனுப்பினாள், “என்னைக் கர்ப்பவதியாக்கிய மனிதருக்குரிய பொருட்கள் சில என்னிடம் உள்ளன. இப்பொருட்களைப் பாருங்கள், அவர் யார்? யாருடைய முத்திரையும், ஆரமும் இது? யாருடைய கோல் இது?” என்று கேட்டிருந்தாள்.
26 யூதாவுக்கு எல்லாம் புரிந்து போயிற்று, “அவள் சொல்வது சரி, நானே தவறு செய்து விட்டேன். நான் சொன்னபடி என் மகன் சேலாவை நான் அவளுக்குக் கொடுக்கவில்லை” என்று உணர்ந்தான். அவன் மீண்டும் தாமாரோடு பாலின உறவு கொள்ளவில்லை.
27 தாமார் குழந்தைபெறும் காலம் வந்தது. அவளுக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என்றார்கள். 28 முதலில் ஒரு குழந்தை கையை நீட்டியதும் அதன் கையில் சிவப்புக் கயிற்றைக்கட்டி “அது மூத்த குழந்தை” என்றாள் தாதி. 29 ஆனால் அக்குழந்தை கைகளை உள்ளே இழுத்துக்கொண்ட போது இன்னொரு குழந்தை பிறந்தது. எனவே தாதி, “நீ மீறிக்கொண்டு வந்தாய். அதனால் மீறுதல் உன்னிடம் நிற்கும்” என்று அதற்கு பாரேஸ் என்று பேரிட்டாள். 30 பின்னரே அடுத்த குழந்தை பிறந்தது. அதன் கையில் சிவப்புக் கயிறு இருந்ததால் சேரா என்று பெயரிட்டனர்.
யோசேப்பு போத்திபாரிடம் விற்கப்படுகிறான்
39 யோசேப்பை வாங்கிய வியாபாரிகள் அவனை எகிப்தில் பார்வோனின் படைத் தலைவன் போத்திபாரிடம் விற்றார்கள். 2 ஆனால் கர்த்தர் அவனுக்கு உதவினார். யோசேப்பு ஒரு வெற்றியுள்ள மனிதன் ஆனான். அவன் தன் எஜமானனின் வீட்டில் வசித்தான்.
3 கர்த்தர் யோசேப்போடு இருப்பதையும், அவன் செய்கிற எல்லாவற்றிலும் கர்த்தரின் உதவியால் வெற்றி பெறுவதையும் பார்த்தான். 4 அதனால் யோசேப்பைப்பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். எனவே, தனக்காக யோசேப்பு வேலை செய்வதை அனுமதித்ததுடன், தன் வீட்டைக் கவனித்துக்கொள்ளவும் வைத்தான். போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யோசேப்பு ஆளுகை செய்தான். 5 யோசேப்பைத் தனது வீடு முழுவதற்கும் அதிகாரியாக்கியதும் கர்த்தர் அந்த வீட்டையும், போத்திபாருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். இவை அனைத்தையும் கர்த்தர் யோசேப்புக்காகச் செய்தார். போத்திப்பாருக்குரிய வீடு மற்றும் வயல்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். 6 ஆகவே போத்திபார் யோசேப்பிற்கு வீட்டிலுள்ள எல்லா பொறுப்புகளையும் கொடுத்துவிட்டான். அவன் உண்ணும் உணவைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.
யோசேப்பு போத்திபாரின் மனைவியுடன் பாவம் செய்ய மறுத்தல்
யோசேப்பு கம்பீரமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தான். 7 கொஞ்சக் காலம் ஆனதும், யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பு மீது ஆசைப்பட ஆரம்பித்தாள். ஒரு நாள் அவனிடம், “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள்.
8 ஆனால் யோசேப்பு மறுத்துவிட்டான். “என் எஜமானன் என்னை நம்பி வீட்டிலுள்ள எல்லாவற்றையும் ஒப்படைத்திருக்கிறார். 9 என் எஜமானன் இந்த வீட்டில் ஏறக்குறைய என்னைத் தனக்குச் சமமாக வைத்திருக்கிறார். நான் அவரது மனைவியோடு பாலின உறவுகொள்ளக் கூடாது. இது தவறு, தேவனுக்கு விரோதமான பாவம்” என்று கூறினான்.
10 அவள் ஒவ்வொரு நாளும் யோசேப்போடு பேசி அவனை அழைத்தாள். அவனோ அவளோடு பாவத்தில் ஈடுபட மறுத்துவிட்டான். 11 ஒரு நாள் அவன் வீட்டிற்குள் வேலை செய்வதற்காகப் போனான். அப்போது வீட்டில் அவன் மட்டும் தான் இருந்தான். 12 அவனது எஜமானனின் மனைவி அவனது அங்கியை பற்றிப் பிடித்து, “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள். எனவே அவன் வேகமாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டான். அப்போது அவனது அங்கி அவளது கையில் சிக்கிக்கொண்டது.
13 அவள் அதனைக் கவனித்தாள். நடந்ததைப்பற்றி அவள் பொய்யாகச் சொல்லத் திட்டமிட்டாள். 14 அவள் வீட்டிலுள்ள வேலைக்காரர்களை அழைத்து “பாருங்கள், நம்மை அவமானம் செய்வதற்காக இந்த எபிரெய அடிமை கொண்டு வரப்பட்டுள்ளான். அவன் வந்து என்னோடு படுக்க முயன்றான். 15 நான் சத்தமிட்டதால் அவன் ஓடிப் போய்விட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்று முறையிட்டாள். 16 அவள் அந்த அங்கியை அவள் புருஷன் வரும் வரை வைத்திருந்து, 17 அவனிடமும் அதே கதையைக் கூறினாள். “நீங்கள் கொண்டுவந்த எபிரெய அடிமை என்னைக் கெடுக்கப் பார்த்தான். 18 அவன் என்னருகில் வந்ததும் நான் சத்தமிட்டேன், அவன் ஓடிவிட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்றாள்.
19 யோசேப்பின் எஜமானன் அவனது மனைவி சொன்னதைக் கேட்டு கோபம் கொண்டான். 20 அரசனுடைய பகைவர்களைப் போடுவதற்கென்றிருந்த சிறையிலே போத்திபார் யோசேப்பைப் போட்டுவிட்டான். யோசேப்பு அங்கேயே தங்கினான்.
சிறையில் யோசேப்பு
21 ஆனால் கர்த்தர் யோசேப்போடு இருந்தார். அவர் தொடர்ந்து தனது இரக்கத்தை அவன்மீது காட்டி வந்தார். சிறையதிகாரி யோசேப்பை விரும்ப ஆரம்பித்தான். 22 யோசேப்பை கைதிகளைக் கண்காணிப்பவனாக நியமித்தான். அங்கு நடப்பவற்றுக்கு அவன் பொறுப்பாளியாக்கப்பட்டான். 23 அந்த அதிகாரி அவனை முழுமையாக நம்பினான். கர்த்தர் யோசேப்போடு இருந்ததால் இது இவ்வாறு நடந்தது. அவன் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் வெற்றிகரமாக்க கர்த்தர் உதவினார்.
யோசேப்பு இரண்டு கனவுகளுக்கு விளக்கம் கூறுதல்
40 பிறகு, பார்வோனுக்கு எதிராக ரொட்டி சுடுபவனும், திராட்சைரசம் கொடுப்பவனுமான இரண்டு வேலைக்காரர்கள் தவறு செய்தனர். 2 அவர்கள் மீது பார்வோனுக்கு மிகுந்த கோபம் இருந்தது. 3 அரசன் அவர்களை யோசேப்பு இருந்த சிறையிலேயே அடைத்துவிட்டான். போத்திபார் இந்தச் சிறையின் பொறுப்பாளன். 4 அதிகாரி, இந்த இருவரையும் யோசேப்பின் கண்காணிப்பில் வைத்தார். இருவரும் சிறையில் கொஞ்சக் காலம் தொடர்ந்து இருந்தனர். 5 ஓரிரவு, இருவருக்கும் கனவு வந்தது. இருவரும் வெவ்வேறு கனவுகளைக் கண்டனர். இருவரும் எகிப்திய அரசனின் வேலைக்காரர்கள். ஒருவன் ரொட்டி சுடுபவன், மற்றொருவன் திராட்சைரசம் கொடுப்பவன். ஒவ்வொன்றுக்கும் தனிதனிப் பொருள் இருந்தது. 6 மறுநாள் காலையில் யோசேப்பு அவர்களிடம் சென்றான். அவர்கள் இருவரும் கவலையாயிருப்பதைக் கண்டான். 7 அவர்களிடம், “ஏன் இவ்வாறு இன்று கவலையோடு இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
8 அவர்கள், “நேற்று நாங்கள் இருவரும் கனவு கண்டோம். அதன் பொருள் புரியவில்லை. அதின் பொருளையோ, விளக்கத்தையோ சொல்பவர்கள் யாரும் எங்களுக்கு இல்லை” என்றனர்.
யோசேப்பு அவர்களிடம், “தேவன் ஒருவரே நமது கனவுகளைப் புரிந்துகொண்டு விளக்க வல்லவர். என்னிடம் உங்கள் கனவுகளைக் கூறுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றான்.
திராட்சைரசம் பரிமாறுபவனின் கனவு
9 திராட்சைரசம் கொடுப்பவன் தன் கனவை யோசேப்பிடம் கூறினான். “என் கனவில் நான் ஒரு திராட்சைக் கொடியைக் கண்டேன். 10 அதில் மூன்று கிளைகள் இருந்தன. அவை வளர்ந்து பூக்கள் விட்டு கனிவதைக் கண்டேன். 11 நான் பார்வோனின் கோப்பையை ஏந்தியிருந்தேன். எனவே அந்தத் திராட்சையைப் பிழிந்து சாறு எடுத்தேன். பிறகு அதனைப் பார்வோனுக்குக் கொடுத்தேன்” என்றான்.
12 பிறகு யோசேப்பு, “இந்தக் கனவை உனக்கு விளக்குவேன். மூன்று கிளைகள் என்பது மூன்று நாட்கள். 13 இன்னும் மூன்று நாளில் பார்வோன் உன்னை மன்னித்து, உன்னை விடுதலை செய்து, முன்பு அவரது கிண்ணம் ஏந்துபவனாக இருந்தது போல் உன்னை ஏற்றுக்கொள்வார். 14 ஆனால் நீ விடுதலையானதும் என்னை நினைத்துக்கொள். எனக்கும் உதவி செய். பார்வோனிடம் என்னைப்பற்றிக் கூறு. அவர் என்னை விடுதலை செய்வார். 15 நான் என் சொந்த எபிரெய நாட்டைவிட்டு இங்கு பலவந்தமாக கொண்டு வரப்பட்டேன். இங்கேயும் நான் தவறு செய்யவில்லை. நான் சிறையில் இருக்க வேண்டியவன் அல்ல” என்றான்.
ரொட்டிச் சுடுபவனின் கனவு
16 ரொட்டி சுடுபவன் மற்றவனின் கனவுக்கு நல்ல பொருள் இருப்பதை அறிந்தான். தன் கனவையும் யோசேப்பிடம் கூறினான். “நானும் ஒரு கனவு கண்டேன். என் தலையில் மூன்று ரொட்டிக் கூடைகள் இருந்தன. 17 மேல் கூடையில் எல்லா வகையான சமைத்த உணவுகளும் இருந்தது. அது பார்வோனுக்கு உரியது. ஆனால் பறவைகள் அவற்றைத் தின்றுகொண்டிருந்தன” என்றான்.
18 யோசேப்பு, “நான் உனக்கு அக்கனவின் பொருளைச் சொல்கிறேன். மூன்று கூடைகள் மூன்று நாட்களைக் குறிக்கும். 19 மூன்று நாள் முடிவதற்குள் நீ வெளியே செல்வாய். அரசன் உன் தலையை வெட்டிவிடுவான். உனது உடலைக் கம்பத்தில் தொங்கவிடுவான். பறவைகள் உன் உடலைத் தின்னும்” என்று சொன்னான்.
யோசேப்பு மறக்கப்படுதல்
20 மூன்று நாளானதும் பார்வோனுடைய பிறந்த நாள் வந்தது. அவன் தன் வேலைக்காரர்களுக்கெல்லாம் விருந்து கொடுத்தான். அதனால் ரொட்டி சுடுபவனையும் திராட்சைரசம் கொடுப்பவனையும் விடுதலை செய்தான். 21 பார்வோன் திராட்சைரசம் கொடுப்பவனுக்கு மீண்டும் வேலை கொடுத்தான். அவனும் பார்வோனிடம் ஒரு கோப்பை திராட்சை ரசத்தை கொடுத்தான். 22 ஆனால் பார்வோன் ரொட்டி சுடுபவனைக் கொன்றுவிட்டான். யோசேப்பு சொன்னதுபோலவே அனைத்தும் நிகழ்ந்தது. 23 ஆனால் திராட்சைரசம் வழங்குபவன் உதவிசெய்ய மறந்துவிட்டான். அவன் யோசேப்பைப்பற்றி பார்வோனிடம் எதுவும் சொல்லவில்லை.
2008 by World Bible Translation Center