Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 30-31

30 ராகேல், தன்னால் யாக்கோபுக்குக் குழந்தைகளைக் கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டாள். அவளுக்கு தன் சகோதரி லேயாள் மீது பொறாமை வந்தது. அவள் யாக்கோபிடம் “எனக்குக் குழந்தையைக் கொடும் அல்லது நான் மரித்துப் போவேன்” என்றாள்.

அவனுக்கு அவள் மீது கோபம் வந்தது. அவன், “நான் தேவன் இல்லை. நீ குழந்தை பெற முடியாததற்கு தேவனே காரணம்” என்றான்.

பிறகு ராகேல் அவனிடம், “நீர் என் வேலைக்காரி பில்காளோடு பாலின உறவு கொண்டால், எனக்காக அவள் ஒரு குழந்தையைப் பெற்றுத் தருவாள். அவள் மூலம் நான் தாயாக விரும்புகிறேன்” என்றாள்.

பின் தனது வேலைக்காரி பில்காளை யாக்கோபிற்குக் கொடுத்தாள். அவன் அவளோடு பாலின உறவு கொண்டான். பில்காள் கருவுற்று ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றாள்.

ராகேல் மகிழ்ந்து, “தேவன் என் பிரார்த்தனையைக் கேட்டு, எனக்கு ஒரு மகனை கொடுத்தார்” என்று கூறி அவனுக்கு தாண் என்று பெயர் வைத்தாள்.

பில்காள் மீண்டும் கர்ப்பமுற்று இன்னொரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ராகேல் நப்தலி என்று பெயரிட்டு, “எனது சகோதரியோடு போராட நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். நான் வென்றுவிட்டேன்” என்றாள்.

லேயாள் தனக்கு மேலும் குழந்தை இல்லாததைக் கவனித்தாள். மேலும் குழந்தை வேண்டும் என்று தன் வேலைக்காரி சில்பாளை யாக்கோபுக்குக் கொடுத்தாள். 10 பிறகு சில்பாளுக்கும் ஒரு மகன் பிறந்தான். 11 “நான் பாக்கியசாலி” என்று லேயாள் மகிழ்ந்தாள். பின் அவனுக்கு காத் என்று பெயரிட்டாள். 12 சில்பாள் மேலும் ஒரு மகனைப் பெற்றாள். 13 லேயாள் “நான் மேலும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பார்க்கும் பெண்களும் மகிழ்ச்சியுடன் அழைப்பார்கள்” என்று எண்ணினாள். எனவே அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.

14 கோதுமை அறுவடைக் காலத்தில் ரூபன் வயலுக்குப் போனான். அங்கு சில புதுவகை மலர்களைக் [a] கண்டான். அதனைப் பறித்துக்கொண்டு தன் தாயான லேயாளிடம் வந்தான். ராகேல் இதனைப் பார்த்து, “உன் மகன் கொண்டுவந்த மலர்களில் சிலவற்றை எனக்குக் கொடு” என்று கேட்டாள்.

15 அதற்கு லேயாள், “ஏற்கெனவே என் கணவனை எடுத்துக்கொண்டிருக்கிறாய். இப்போது என் மகன் கொண்டு வந்த மலர்களையும் எடுக்கப் பார்க்கிறாயா?” என்று மறுத்தாள்.

ஆனால் ராகேலோ, “நீ அந்த மலர்களைக் கொடுத்தால் இன்று இரவு நீ யாக்கோபோடு பாலின உறவுகொள்ளலாம்” என்று சொன்னாள்.

16 யாக்கோபு அன்று இரவு வயலில் இருந்து திரும்பினான். அவனை லேயாள் போய் சந்தித்து, “இன்று இரவு நீங்கள் என்னோடு தூங்கவேண்டும். நான் அதற்காக என் மகன் கொண்டு வந்த மலர்களைக் கொடுத்திருக்கிறேன்” என்றாள். அவன் அன்று இரவு அவளோடு இருந்தான்.

17 தேவன் லேயாளை மீண்டும் கர்ப்பவதியாக அனுமதித்தார். அவள் ஐந்தாவது மகனைப் பெற்றாள். 18 லேயாள், “நான் என் கணவனுக்கு வேலைக்காரியை கொடுத்ததால் தேவன் எனக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்” என்று மகிழ்ந்தாள். தன் மகனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.

19 லேயாள் மீண்டும் கர்ப்பமாகி ஆறாவது மகனைப் பெற்றாள். 20 லேயாள் “தேவன் எனக்கு அற்புதமான பரிசு கொடுத்திருக்கிறார். இப்போது யாக்கோபு என்னை நிச்சயம் ஏற்றுக்கொள்வார். நான் அவருக்கு ஆறு மகன்களைக் கொடுத்திருக்கிறேன்” என்று மகிழ்ச்சி அடைந்தாள். அவனுக்கு செபுலோன் என்று பெயர் வைத்தாள்.

21 பிறகு அவள் ஒரு மகளைப் பெற்றாள். அவளுக்கு தீனாள் என்று பெயர் வைத்தாள்.

22 பிறகு தேவன் ராகேலின் பிரார்த்தனையைக் கேட்டு, அவளும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். 23-24 அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றாள். “தேவன் எனது அவமானத்தை அகற்றி ஒரு மகனைத் தந்துவிட்டார்” என்று மகிழ்ச்சியடைந்தாள். அவள் தன் மகனுக்கு யோசேப்பு என்று பெயர் வைத்தாள்.

லாபானுடன் யாக்கோபின் தந்திரம்

25 யோசேப்பு பிறந்த பிறகு யாக்கோபு லாபானிடம், “இப்போது என்னை என் சொந்த நாட்டிற்குப் போக அனுமதிக்க வேண்டும். 26 எனக்கு எனது மனைவிகளையும் குழந்தைகளையும் தாருங்கள். நான் 14 ஆண்டுகளாக அவர்களுக்காக உழைத்திருக்கிறேன். நான் நன்றாக உழைத்தேன் என்பதும் உங்களுக்குத் தெரியுமே” என்றான்.

27 லாபான், “என்னையும் ஏதாவது சொல்லவிடு. உன்னால் கர்த்தர் என்னை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நான் அறிவேன். 28 நான் உனக்கு என்ன தரவேண்டும் என்று சொல், நான் தருவேன்” என்றான்.

29 “நான் உங்களுக்காக கடினமாக உழைத்ததை நீங்கள் அறிவீர்கள். நான் கவனித்ததால் உங்கள் மந்தைகள் பெருகியுள்ளன. 30 நான் வந்து சேர்ந்தபோது உங்களிடம் குறைவான எண்ணிக்கையிலேயே மந்தைகள் இருந்தன. இப்போது ஏராளமாக உள்ளன. எப்பொழுதும் உங்களுக்காக ஏதாவது வேலை செய்தேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்தார். இப்போது நான் எனக்காக உழைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள வேண்டும்” என்றான்.

31 அதற்கு லாபான், “நான் என்ன தர வேண்டும்” என்று கூறு எனக் கேட்டான்.

யாக்கோபு அவனிடம், “நீங்கள் எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம். நான் செய்த வேலைக்கு மட்டும் சம்பளம் கொடுங்கள். இந்தக் காரியம் மட்டும் செய்யுங்கள். நான் திரும்பிப் போய் உங்கள் மந்தையைக் கவனித்துக்கொள்கிறேன். 32 அவற்றில் புள்ளியும் வரியும் கறுப்பும் உள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் இன்று பிரித்துவிடுகிறேன். ஒவ்வொரு கறுப்பு இன ஆட்டையும் நான் எடுத்துக்கொள்கிறேன். புள்ளியும் வரியும் உடைய ஒவ்வொரு பெண் ஆட்டையும் எடுத்துக்கொள்கிறேன். இதுவே என் சம்பளமாய் இருக்கும். 33 நான் நேர்மையானவனாக இருக்கிறேனா இல்லையா என்பதை எதிர்காலத்தில் எளிதில் கண்டுகொள்ளலாம். அப்போது நீங்கள் எனது மந்தையை வந்து காணலாம். புள்ளியும் வரியுமில்லாத ஆடுகளைக் கண்டால் அவை என்னால் திருடப்பட்டதாகக்கொள்ளலாம்” என்றான்.

34 “நான் இதற்கு ஒத்துக்கொள்கிறேன். நீ கேட்டபடியே தருகிறேன்” என்று லாபான் கூறினான். 35 அன்று லாபான் புள்ளி உள்ள ஆட்டுக்கடாக்களையும், ஆடுகளையும் பிரித்து மறைத்துவிட்டான். கறுப்பு ஆடுகளையும் தனியாகப் பிரித்து மறைத்தான். அவற்றைத் தன் மகன்களிடம் கொடுத்து கவனிக்கும்படி சொன்னான். 36 அவர்கள் புள்ளி ஆடுகளையெல்லாம் மூன்று நாள் பயண தூரத்திற்குத் தனியாகக் கொண்டு போனார்கள். மிஞ்சியவற்றை யாக்கோபு கவனித்துக்கொண்டான். புள்ளியோ, வரிகளோ கொண்ட ஆடுகள் எதுவும் யாக்கோபிடம் இல்லை.

37 எனவே அவன் பச்சையாக உள்ள புன்னை, வாதுமை, அர்மோன் மரக் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்தான். 38 அவற்றை அவன் ஆடுகள் தண்ணீர் குடிக்கும் இடங்களில் போட்டு வைத்தான். அவை தண்ணீர் குடிக்கும்போது கடாவும் ஆடும் இணைந்தன. 39 ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்னால் இணைந்ததினால் அவை கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டன.

40 யாக்கோபு மந்தையில் இருந்து புள்ளிகளும் கறுப்பும் உள்ள ஆடுகளைத் தனியாகப் பிரித்தான். அவற்றை லாபானின் ஆட்டிலிருந்து தனிப்படுத்தினான். 41 பலமுள்ள ஆடுகள் இணையும்போது அவற்றின் கண்களில் படுமாறு மரக்கிளைகளைக் கால்வாய்க் கரையில் போட்டு வைத்தான். 42 ஆனால் பலவீனமுள்ள ஆடுகள் இணையும்போது போடமாட்டான். அதன் குட்டிகள் எல்லாம் லாபானுக்கு உரியதாயிற்று. பலமுள்ள ஆடுகளின் குட்டிகள் எல்லாம் யாக்கோபுக்கு உரியதாயிற்று. 43 இவ்வாறு யாக்கோபு பெரும் பணக்காரன் ஆனான். அவனிடம் பெரிய மந்தை இருந்தது. அதோடு வேலைக்காரர்களும், ஒட்டகங்களும் கழுதைகளும் சொந்தமாயின.

யாக்கோபு பிரிந்து செல்லுதல்

31 ஒரு நாள், லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேட்டான். அவர்கள், “நம் தந்தைக்குரிய அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். அதனால் பணக்காரனாகிவிட்டான். நம் தந்தையிடம் இருந்தே இச்செல்வத்தை எடுத்துக்கொண்டான்” என்றனர். யாக்கோபு, முன்புபோல் லாபான் அன்போடு இல்லை என்பதையும் கவனித்தான். கர்த்தர் யாக்கோபிடம், “உனது சொந்த நாடான, உன் முற்பிதாக்களின் நாட்டுக்கு திரும்பிப் போ. நான் உன்னோடு இருப்பேன்” என்றார்.

அதனால் யாக்கோபு லேயாளிடமும் ராகேலிடமும் தன்னை மந்தைகள் உள்ள வயலில் சந்திக்குமாறு கூறினான். அங்கு அவர்களிடம், “உங்கள் தந்தை என்மீது கோபமாய் இருப்பதாகத் தெரிகிறது. முன்பு என்னிடம் மிகவும் அன்பாய் இருந்தார். இப்போது அப்படி இல்லை. நான் உங்கள் தந்தைக்காக எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன் என்று உங்கள் இருவருக்குமே தெரியும். ஆனால் உங்கள் தந்தை என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என் சம்பளத்தைப் பத்து முறை மாற்றிவிட்டார். எனினும் லாபானின் எல்லாத் தந்திரங்களிலிருந்தும் தேவன் என்னைக் காப்பாற்றினார்.

“அவர் ஒருமுறை, ‘புள்ளியுள்ள ஆடுகளையெல்லாம் நீயே வைத்துக்கொள்’ அதுவே உனக்கு சம்பளம் என்றார். ஆனால் அப்போது எல்லா ஆடுகளும் புள்ளி உள்ளவையாக இருந்ததால் எல்லாம் எனக்கு உரியதாயிற்று. எனவே இப்போது, ‘புள்ளி உள்ள ஆடுகள் எல்லாம் எனக்கு வேண்டும்.’ கலப்பு நிறம் உள்ள ஆடுகளை நீ வைத்துக்கொள்” என்கிறார். இதன் பிறகு எல்லா ஆடுகளும் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டன. ஆகையால் தேவன் உங்கள் தந்தையிடமுள்ள ஆடுகளையெல்லாம் எடுத்து எனக்குக் கொடுத்துவிட்டார்.

10 “ஆடுகள் எல்லாம் இணையும்போது நான் கனவு கண்டேன். அதில் இணைகிற ஆண் ஆடுகள் மட்டுமே புள்ளியும் வரியும் உடையவையாக இருக்கக் கண்டேன். 11 அதோடு கனவில் ‘யாக்கோபே’ என்று தேவதூதன் ஒருவர் அழைத்தார்.

“‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று பதில் சொன்னேன்.

12 “தேவதூதன் என்னிடம் ‘பார், புள்ளிகளும் வரிகளும் உடைய கடாக்களே இணைகின்றன. இவற்றை நானே ஏற்படுத்தினேன், லாபான் உனக்கு எதிராக செய்யும் எல்லாக் காரியங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எல்லா புதிய ஆட்டுக் குட்டிகளையும் நீ பெறவேண்டும் என்பதற்காக இதைச் செய்துகொண்டிருக்கிறேன். 13 நான் பெத்தேலில் உனக்கு வெளிப்பட்ட அதே தேவன். அங்கு எனக்குப் பலிபீடம் அமைத்தாய். பலிபீடத்தின்மேல் ஒலிவ எண்ணெயை ஊற்றினாய். அங்கு ஒரு பொருத்தனையும் செய்தாய். இப்போதும் நீ உன் பிறந்த நாட்டிற்குப் போகத் தயாராக இருக்க வேண்டும், என்று சொன்னார்’” என்றான்.

14-15 ராகேலும் லேயாளும் யாக்கோபுக்குப் பதிலளித்தார்கள், “எங்கள் தந்தை மரிக்கும்பொழுது எங்களுக்குக் கொடுக்க அவரிடம் ஏதுமில்லை. அவர் எங்களை அந்நியர்களாகவே நடத்தினார். எங்களை உங்களுக்கு விற்றுவிட்டார். எங்களுடையதாயிருக்க வேண்டிய பணம் முழுவதையும் அவர் செலவழித்துவிட்டார். 16 எனவே தேவன் எங்கள் தந்தையிடமிருந்து எடுத்த இந்தச் செல்வமெல்லாம் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உரியது. எனவே தேவன் உமக்குச் சொன்னபடி செய்யும்” என்றார்கள்.

17 எனவே, யாக்கோபு பயணத்துக்குத் தயாரானான். தன் மனைவிகளையும் பிள்ளைகளையும் ஒட்டகத்தில் ஏற்றினான். 18 பின் அவர்கள் அவனது தந்தை இருக்கும் கானான் தேசத்துக்குப் பயணம் செய்தனர். அவர்களுக்கு முன்னால் அவர்களது மந்தையும் கொண்டு செல்லப்பட்டது. பதான் அராமிலிருக்கும்போது அவன் வாங்கிய பொருட்களையெல்லாம் அவன் எடுத்துக்கொண்டான்.

19 அந்த நேரத்தில் லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கப் போயிருந்தான். ராகேல் வீட்டிற்குள் போய் தந்தையினுடைய பொய்த் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டாள்.

20 யாக்கோபு தந்திரமாக லாபானிடம் தான் போவதைப்பற்றிக் கூறாமல் புறப்பட்டுப் போய்விட்டான். 21 யாக்கோபு தன் குடும்பத்தோடும் தனக்குரியவற்றோடும் வேகமாகச் சென்று ஐபிராத்து ஆற்றைக் கடந்து கீலேயாத் மலையை நோக்கிப் போனார்கள்.

22 மூன்று நாள் ஆனதும் லாபான் யாக்கோபு ஓடிவிட்டதை அறிந்துகொண்டான். 23 உடனே தன் ஆட்களைச் சேகரித்துக்கொண்டு யாக்கோபைத் துரத்திக்கொண்டு போனான். ஏழு நாட்கள் ஆனபிறகு லாபான் யாக்கோபை கீலேயாத் மலை நகரம் ஒன்றில் கண்டு பிடித்தான். 24 அன்று இரவு தேவன் லாபானின் கனவில் தோன்றி, “எச்சரிக்கையாய் இரு. யாக்கோபிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் எச்சரிக்கையோடு பேசு” என்றார்.

திருடப்பட்ட தேவர்களின் உருவங்களைத் தேடுதல்

25 மறுநாள் காலையில் லாபான் யாக்கோபைப் பிடித்தான். யாக்கோபு மலைமீது தன் கூடாரத்தைப் போட்டிருந்தான். எனவே லாபானும் அவனது ஆட்களும் கீலேயாத்தின் மலை நகரத்தில் இருந்தனர்.

26 லாபான் யாக்கோபிடம், “என்னை ஏன் ஏமாற்றினாய். ஏன் என் மகள்களைப் போரில் கைப்பற்றிய பெண்களைப் போன்று கவர்ந்துகொண்டு போகிறாய். 27 என்னிடம் சொல்லாமல் கூட ஏன் ஓடிப்போகிறாய்? என்னிடம் நீ சொல்லியிருந்தால் உனக்கு ஒரு விருந்து கொடுத்திருப்பேனே. அவ்விருந்தில் ஆடலும் பாடலும் இசையும் இருந்திருக்கும். 28 நான் என் மகள்களையும் பேரப்பிள்ளைகளையும் முத்தமிட்டு வழியனுப்பவும் வாய்ப்பு கொடுக்கவில்லையே. இதனை நீ முட்டாள்தனமாகச் செய்துவிட்டாய். 29 உன்னைத் துன்புறுத்தும் அளவுக்கு எனக்கு வல்லமை இருக்கிறது. ஆனால் நேற்று இரவு கனவில் உன் தந்தையின் தேவன் என்னிடம் வந்தார். உன்னை எந்த விதத்திலும் துன்புறுத்த வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்துவிட்டார். 30 நீ உன் தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறாய் என்று அறிகிறேன். அதனால் தான் நீ விலகிப் போகிறாய். ஆனால் ஏன் என் தேவர்களைத் திருடிக்கொண்டு போகிறாய்?” என்று கேட்டான்.

31 அதற்கு யாக்கோபு, “நான் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஏனென்றால் எனக்குப் பயமாக இருந்தது. ஒரு வேளை நீங்கள் உங்கள் பெண்களை என்னிடமிருந்து பிரித்துவிடலாம் என்று நினைத்தேன். 32 ஆனால் நான் உங்கள் தேவர்களைத் திருடவில்லை. அதைத் திருடியவர்கள் யாராவது என்னோடு இருந்தால் அவரை நான் கொல்லுவேன். உங்கள் மனிதர்களே இதற்குச் சாட்சி. உங்களுக்குரிய எந்தப் பொருளும் இங்கிருக்கிறதா என்று நீர் பார்த்து, இருந்தால் எடுத்துக்கொள்ளலாம்” என்றான். (ராகேல் தன் தந்தையின் தெய்வங்களின் உருவங்களைத் திருடிக்கொண்டு வந்தது யாக்கோபுக்குத் தெரியாது.)

33 எனவே, லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள் போய் தேடிப் பார்த்தான். பிறகு லேயாளின் கூடாரத்தில் தேடினான். இரு அடிமைப் பெண்கள் இருந்த கூடாரங்களிலும் தேடினான். ஆனால் திருட்டுப்போன தேவர்களின் சிலைகள் கிடைக்கவில்லை. பிறகு ராகேலின் கூடாரத்திற்குள் சென்றான். 34 ராகேல் அச்சிலைகளை ஒட்டகத்தின் சேணத்திற்குள் ஒளித்து வைத்து அதன் மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் முழுவதையும் பார்த்தான். ஆனால் அவனால் தேவர்களைக் காண முடியவில்லை.

35 ராகேல் தன் தந்தையிடம், “அப்பா என்னிடம் கோபப்படாதீர்கள். உங்கள் முன்னால் என்னால் நிற்க முடியவில்லை. நான் மாத விலக்காக இருக்கிறேன்” என்று கூறிவிட்டாள். கூடாரம் எங்கும் தேடிப் பார்த்தும் தன் தேவர்களின் சிலைகளை லாபானால் கண்டுபிடிக்க முடியவில்லை.

36 யாக்கோபுக்குக் கோபம் வந்தது. “நான் செய்த தவறு என்ன? எந்தச் சட்டத்தை உடைத்துவிட்டேன்? எதற்கு என்னைப் பின் தொடர்ந்து வந்து தடுத்து நிறுத்த வேண்டும். 37 எனக்குரிய எல்லாவற்றையும் சோதித்துவிட்டீர். உமக்குரிய பொருள் இவற்றில் எதுவுமில்லை. இருந்தால் நம் மனிதர்கள் காணும்படி அதை இங்கே வையுங்கள். நம் இருவரில் யாரிடம் தவறு உள்ளது என்று நம் மனிதர்களே தீர்மானிக்கட்டும். 38 நான் உமக்காக 20 வருடங்கள் உழைத்திருக்கிறேன். அப்போது எந்தக் குட்டியும் பிறக்கும்போது மரிக்கவில்லை. எந்தக் கடாவையும் உமது மந்தையிலிருந்து எடுத்து நான் உண்டதில்லை. 39 காட்டு மிருகங்களால் ஏதாவது ஆடுகள் அடிபட்டு மரித்திருக்குமானால் அதற்குரிய விலையை நானே தந்திருக்கிறேன். மரித்த ஆடுகளைக்கொண்டு வந்து உமக்கு முன் காட்டி இதற்குக் காரணம் நானில்லை என்று சொன்னதில்லை. ஆனால் நானோ பகலிலும் இரவிலும் திருடப்பட்டேன். 40 பகல் பொழுது என் பலத்தை எடுத்துக்கொண்டது. இரவு குளிர் என் கண்களிலிருந்து உறக்கத்தைத் திருடிக்கொண்டது. 41 ஒரு அடிமையைப் போன்று 20 வருடங்களாக உமக்காக உழைத்திருக்கிறேன். முதல் 14 ஆண்டுகளும் உமது மகள்களை மணந்துகொள்வதற்காக உழைத்தேன். இறுதி ஆறு ஆண்டுகளும் உமது மிருகங்களை காப்பாற்றுவதற்கு உழைத்தேன். இந்நாட்களில் எனது சம்பளத்தைப் பத்து முறை மாற்றி இருக்கிறீர். 42 ஆனால் என் முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரிய [b] தேவனுமானவர் என்னோடு இருந்தார். தேவன் என்னோடு இல்லாமற் போயிருந்தால் நீர் என்னை ஒன்றும் இல்லாதவனாக ஆக்கி அனுப்பி இருப்பீர். ஆனால் என் துன்பங்களையும், எனது உழைப்பையும் கண்ட தேவன் நேற்று இரவு நான் நியாயமானவன் என்பதை நிரூபித்துவிட்டார்” என்றான்.

யாக்கோபும் லாபானும் செய்த ஒப்பந்தம்

43 லாபான் யாக்கோபிடம், “இந்தப் பெண்கள் என் மகள்கள். இந்தக் குழந்தைகள் என்னைச் சேர்ந்தவர்கள். இந்த மிருகங்கள் எல்லாம் என்னுடையவை. நான் இங்கு காண்கிற அனைத்தும் என்னுடையவை. ஆனால் எனது மகள்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் என்னால் தீமை செய்ய முடியாது. 44 எனவே நான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். நாம் இங்கே ஒரு கற்குவியலை அமைத்து அதை நமது ஒப்பந்தத்திற்கு நினைவு சின்னமாகக் கருதுவோம்” என்றான்.

45 அதை யாக்கோபும் ஒப்புக்கொண்டு ஒரு பெரிய கல்லை ஒப்பந்தத்துக்கு அடையாளமாக நட்டு வைத்தான். 46 மேலும் கற்களைத் தேடி எடுத்து வந்து குவியலாக்குங்கள் என தன் ஆட்களிடம் சொன்னான். பிறகு அதன் அருகில் இருந்து இருவரும் உணவு உண்டனர். 47 லாபான் அந்த இடத்திற்கு ஜெகர்சகதூதா என்றும், யாக்கோபு கலயெத் என்றும் பெயரிட்டனர்.

48 லாபான் யாக்கோபிடம், “இக்கற்குவியல் நமது ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும்” என்றான். இதனால் தான் யாக்கோபு அந்த இடத்துக்கு கலயெத் என்று பெயரிட்டான்.

49 பிறகு லாபான், “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்திருந்தாலும் கர்த்தர் நம்மைக் கண்காணிக்கட்டும்” என்றான். எனவே இந்த இடம் மிஸ்பா என்றும் அழைக்கப்பட்டது.

50 மேலும் லாபான், “நீ என் பெண்களைத் துன்புறுத்தினால் தேவன் உன்னைத் தண்டிப்பார். நீ வேறு பெண்களை மணந்துகொண்டாலும் தேவன் உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பார். 51 நம் இருவருக்கும் இடையில் இங்கே நான் நட்ட கற்கள் உள்ளன. இந்த விசேஷ கல்லானது நம் ஒப்பந்தத்தை நினைவுப்படுத்துகிறது. 52 நம் இருவருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை என்றென்றும் ஞாபகப்படுத்தும் இந்தக் கல்லைத் தாண்டி வந்து நான் உன்னோடு போரிடமாட்டேன். நீயும் இதைக் கடந்து வந்து என்னோடு போரிடக் கூடாது. 53 ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்களது முற்பிதாக்களின் தேவனுமானவர், நாம் இந்த ஒப்பந்தத்தை உடைத்தால், குற்றவாளி யாரென்று நியாயந்தீர்க்கட்டும்” என்றான்.

யாக்கோபின் தந்தையான ஈசாக்கு தேவனை “பயபக்திக்குரியவர்” என்று அழைத்தார். யாக்கோபு அந்தப் பெயரிலேயே வாக்குறுதி செய்தான். 54 பிறகு, யாக்கோபு ஒரு ஆட்டைப் பலியிட்டு மலையில் வழிபாடு செய்தான். தன் மனிதர்களை அழைத்து உணவு உண்ணுமாறு வேண்டினான். உணவு முடிந்தபின் அந்த இரவை மலையின் மேலேயே கழித்தனர். 55 மறு நாள் அதிகாலையில், லாபான் எழுந்து தன் மகள்களையும் பேரப் பிள்ளைகளையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தான். பின் தன் ஊருக்குத் திரும்பிப் போனான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center