Beginning
வெள்ளப் பெருக்கின் முடிவு
8 ஆனால் தேவன் நோவாவை மறக்கவில்லை. தேவன் அவனையும் அவனது குடும்பத்தினரையும் அவனோடு கப்பலிலுள்ள விலங்குகளையும் நினைவுகூர்ந்தார். பூமியின்மீது காற்று வீசுமாறு செய்தார். தண்ணீரெல்லாம் மறையத்தொடங்கியது.
2 வானிலிருந்து பெய்த மழை நின்றது. 3-4 பூமியின் மீதிருந்த தண்ணீர் கீழே செல்லத் துவங்கியது. 150 நாட்கள் ஆனதும் மீண்டும் கப்பல் பூமியைத் தொடுகிற அளவிற்குக் குறைந்து போனது. கப்பல் அரராத் என்ற மலைமீது அமர்ந்தது. அது ஏழாவது மாதத்தின் 17வது நாள். 5 வெள்ளமானது மேலும் மேலும் கீழே போயிற்று. பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அனைத்து மலைகளின் மேல்பாகமெல்லாம் தெரிய ஆரம்பித்தது.
6 நாற்பது நாட்களுக்குப் பிறகு நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து, 7 ஒரு காகத்தை வெளியே அனுப்பினான். அது பூமியிலுள்ள தண்ணீர் வற்றிப்போகும்வரை போவதும் வருவதுமாக இருந்தது. 8 நோவா ஒரு புறாவையும் வெளியே அனுப்பினான். அது தான் தங்கிட ஒரு வறண்ட இடத்தைக் கண்டுக்கொள்ளும் என எண்ணினான். இதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை அறிந்துகொள்ளலாம் என நினைத்தான்.
9 ஆனால் தண்ணீர் இன்னும் பூமியில் பரவியிருந்தது. எனவே புறா மீண்டும் கப்பலுக்கே திரும்பி வந்தது. நோவா அதனைத் தன் கையை நீட்டிப் பிடித்து கப்பலுக்குள் சேர்த்துக்கொண்டான்.
10 ஏழு நாட்களானதும் நோவா மீண்டும் புறாவை அனுப்பினான். 11 அன்று மாலையில் அப்புறா மீண்டும் திரும்பி வந்தது. அதன் வாயில் ஒலிவ மரத்தின் புதிய இலை இருந்தது. இதன் மூலம் அவன் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டான். 12 மேலும் 7 நாட்கள் ஆனதும் மீண்டும் புறாவை வெளியே அனுப்பினான். ஆனால் அது திரும்பி வரவே இல்லை.
13 அதன் பிறகு நோவா கப்பலின் கதவைத் திறந்தான். தரை காய்ந்துபோனதை நோவா தெரிந்துகொண்டான். இதுதான் அந்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று. நோவா 601 வயதுடையவன் ஆனான். 14 இரண்டாவது மாதத்தின் 27வது நாளில் தரை முழுவதும் நன்றாகக் காய்ந்துவிட்டது.
15 பிறகு தேவன் நோவாவிடம், 16 “நீயும் உன் மனைவியும் உன் மகன்களும் அவர்களின் மனைவியரும் இப்போது கப்பலை விட்டு வெளியே வாருங்கள். 17 உங்களோடுள்ள அனைத்தையும் வெளியே கொண்டு வாருங்கள். பறவைகள், விலங்குகள், ஊர்வன அனைத்தும் மீண்டும் குட்டிகளும் குஞ்சுகளும் இட்டு பூமியை நிரப்பட்டும்” என்றார்.
18 எனவே நோவா தன் மனைவி, மகன்கள், மருமகள்கள் ஆகியோரோடு வெளியே வந்தான். 19 கப்பலிலுள்ள அனைத்து மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும் எல்லா விலங்கினங்களும் கப்பலை விட்டு ஜோடிகளாக வெளியே வந்தன.
20 பிறகு நோவா கர்த்தருக்கு ஓர் பலிபீடத்தைக் கட்டினான். அவன் பலிக்குரிய சுத்தமான மிருகங்களையும், பறவைகளையும் தேர்ந்தெடுத்து தேவனுக்குப் பலியிட்டான்.
21 கர்த்தர் அதன் வாசனையை முகர்ந்தார். அது அவருக்கு விருப்பமாக இருந்தது. கர்த்தர் தமக்குள், “மனிதர்களைத் தண்டிக்க நான் மீண்டும் இது போன்று பூமியைச் சபிக்கமாட்டேன். ஜனங்கள் இளமை முதலாகவே பாவத்தில் இருக்கிறார்கள். நான் செய்ததுபோல, மீண்டும் ஒருமுறை உயிர்களை அழிக்கமாட்டேன். 22 பூமி தொடர்ந்து இருக்கும் காலம்வரை நடுவதற்கென்று ஒரு காலமும், அறுவடைக்கென்று ஒரு காலமும் இருக்கும். பூமியில் குளிரும் வெப்பமும், கோடையும் வசந்தமும், இரவும் பகலும் இருக்கும்” என்றார்.
புதிய துவக்கம்
9 தேவன் நோவாவையும் அவனது பிள்ளைகளையும் ஆசீர்வதித்தார். தேவன் அவர்களிடம், “குழந்தைகளைப் பெற்று, ஜனங்களால் இப்பூமியை நிரப்புங்கள். 2 பூமியிலுள்ள அனைத்து மிருகங்களும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தண்ணீரிலுள்ள அனைத்து மீன்களும், பிற அனைத்து ஊர்வனவும் உங்களைக் கண்டு அஞ்சும், அவை உங்கள் அதிகாரத்திற்குள் இருக்கும். 3 கடந்த காலத்தில் பச்சையான தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்தேன். இப்போது அனைத்து மிருகங்களும் உங்களுக்கு உணவாகட்டும். உலகிலுள்ள அனைத்தும் உங்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4 ஆனால் உங்களுக்கு ஒரு ஆணை இடுகிறேன். இறைச்சியை அதின் உயிராகிய இரத்தத்துடன் உண்ணாதீர்கள். 5 நான் உங்களது உயிருக்காக உங்களது இரத்தத்தைக் கேட்பேன். அதாவது ஒரு மனிதனைக் கொல்லுகிற விலங்கின் இரத்தத்தைக் கேட்பேன். மேலும் மற்றொரு மனிதனைக் கொல்லுகிற மனிதனின் இரத்தத்தைக் கேட்பேன்.
6 “தேவன் மனிதனைத் தமது சாயலாகவேப் படைத்தார்.
எனவே மற்றவனைக் கொல்லுகிற எவனும் இன்னொருவரால் கொல்லப்பட வேண்டும்.
7 “நோவா, நீயும் உன் மகன்களும் குழந்தைகளைப் பெற்று, உங்கள் ஜனங்களால் பூமியை நிரப்புங்கள்” என்றார்.
8 பிறகு தேவன் நோவாவிடமும் அவனது பிள்ளைகளிடமும், 9 “நான் உங்களோடும் உங்களுக்குப் பின்னுள்ள வாரிசுகளோடும், 10 உங்களோடு கப்பலிலே இருந்த பறவைகளோடும் மிருகங்களோடும் ஊர்வனவற்றோடும் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் எனது உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்கிறேன். 11 வெள்ளப்பெருக்கால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்பட்டன. ஆனால் மீண்டும் இது போல் நடைபெறாது. இன்னொரு வெள்ளப் பெருக்கு பூமியில் உள்ள உயிர்களை அழிக்காது” என்றார்.
12 மேலும் தேவன், “உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு அடையாளமாக ஒன்றை உங்களுக்குத் தருகிறேன். உன்னோடும் பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரோடும் நான் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அது அத்தாட்சியாக இருக்கும். இந்த உடன்படிக்கை இனிவரும் எல்லாக் காலத்துக்கும் உரியதாக இருக்கும். இதுவே அந்த அத்தாட்சி. 13 மேகங்களுக்கு இடையே ஒரு வானவில்லை உருவாக்கி உள்ளேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி. 14 பூமிக்கு மேலாய் மேகங்களைக் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் அதில் வானவில்லைப் பார்க்கலாம். 15 வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் நான் எனக்கும் உங்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன். அந்த உடன்படிக்கை இனி ஒரு வெள்ளப் பெருக்கு உலகில் தோன்றி இங்குள்ள உயிர்களை அழிக்காது என்று கூறுகிறது. 16 மேகங்களுக்கிடையில் நான் வானவில்லைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பூமியின் மீதுள்ள அனைத்து உயிர்களுக்குமிடையிலான நிரந்தரமான உடன்படிக்கையை நினைத்துக்கொள்வேன்.”
17 “நான் பூமியில் உள்ள அனைத்து உயிர்களோடும் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு அத்தாட்சியாக வானவில் விளங்குகிறது” என்றார்.
பிரச்சனைகள் மீண்டும் தோன்றுதல்
18 நோவாவின் மகன்கள் கப்பலைவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் பெயர் சேம், காம், யாப்பேத் ஆகும். காம், கானானின் தந்தை. 19 இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களும் அவர்களது வம்சமேயாகும்.
20 நோவா ஒரு விவசாயி ஆனான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தைப் பயிர் செய்தான். 21 நோவா அதில் திராட்சை ரசத்தைச் செய்து குடித்தான். அவன் போதையில் தன் கூடாரத்தில் ஆடையில்லாமல் விழுந்து கிடந்தான். 22 கானானின் தந்தையான காம் ஆடையற்ற தனது தந்தையைப் பார்த்து அதைக் கூடாரத்திற்கு வெளியே இருந்த தன் சகோதரர்களிடம் சொன்னான். 23 சேமும் யாப்பேத்தும் ஒரு ஆடையை எடுத்து தங்கள் முதுகின் மேல் போட்டுக்கொண்டு பின்னால் நடந்து கூடாரத்திற்குள் நுழைந்து அதைத் தங்கள் தகப்பன் மேல் போட்டார்கள். இவ்வாறு தந்தையின் நிர்வாணத்தைப் பார்க்காமல் தவிர்த்தார்கள்.
24 திராட்சை ரசத்தைக் குடித்ததினால் தூங்கிய நோவா எழுந்ததும் தனது இளைய மகனான காம் செய்தது அவனுக்குத் தெரியவந்தது. 25 எனவே அவன்,
“கானான் சபிக்கப்பட்டவன்.
அவன் தன் சகோதரர்களுக்கு அடிமையிலும் அடிமையாக இருப்பான்” என்றான்.
26 மேலும்,
“சேமுடைய தேவனாகிய கர்த்தர் துதிக்கப்படுவாராக.
கானான் சேமுடைய அடிமையாய் இருப்பான்.
27 தேவன் யாப்பேத்துக்கு மேலும் நிலங்களைக் கொடுப்பார்.
தேவன் சேமுடைய கூடாரத்தில் இருப்பார்.
இவர்களின் அடிமையாகக் கானான் இருப்பான்” என்றான்.
28 வெள்ளப் பெருக்குக்குப் பிறகு நோவா 350 ஆண்டுகள் வாழ்ந்தான். 29 அவன் மொத்தம் 950 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான்.
நாடுகளின் வளர்ச்சியும் பரவலும்
10 சேம், காம், யாப்பேத் ஆகியோர் நோவாவின் மகன்கள். வெள்ளப் பெருக்குக்குப் பின் இவர்கள் மேலும் பல பிள்ளைகளுக்குத் தந்தை ஆனார்கள். இங்கே அவர்களின் பிள்ளைகள் பற்றிய பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
யாப்பேத்தின் சந்ததி
2 கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் ஆகியோர் யாப்பேத்தின் மகன்கள்.
3 அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா ஆகியோர் கோமரின் மகன்கள்.
4 எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் ஆகியோர் யாவானின் மகன்கள்.
5 மத்தியத்தரைக் கடல் பகுதியில் வாழ்ந்த ஜனங்கள் யாப்பேத்தின் வழி வந்தவர்கள். ஒவ்வொரு மகனும் தனக்குரிய சொந்த நிலத்தைப் பெற்றிருந்தான். ஒவ்வொரு குடும்பமும் பெருகி வெவ்வேறு நாடுகளாயின. ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தனி மொழியைப் பெற்றது.
காமின் சந்ததி
6 கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் ஆகியோர் காமின் பிள்ளைகள்.
7 சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா, ஆகியோர் கூஷின் பிள்ளைகள்.
சேபா, திதான் ஆகியோர் ராமாவின் பிள்ளைகள்.
8 கூஷ் நிம்ரோத்தை பெற்றான். நிம்ரோத் பூமியில் மிக வல்லமை மிக்க வீரன் ஆனான். 9 இவன் கர்த்தருக்கு முன்னால் பெரிய வேட்டைக்காரனாக இருந்தான். இதனால் “கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோத்தைப்போல” என்ற வழக்குச்சொல் உண்டானது.
10 நிம்ரோத்தின் அரசாட்சி பாபேலிலிருந்து ஏரேக், அக்காத், சிநெயார் நாட்டிலுள்ள கல்னேவரை பரவியிருந்தது. 11 நிம்ரோத் அசீரியாவுக்குப் போனான், அங்கு நினிவே, ரெகொபோத், காலாகு, ரெசேன் ஆகிய நகரங்களைக் கட்டினான். 12 (ரெசேன் நகரமானது நினிவேக்கும் காலாகுக்கும் இடைப்பட்ட பெரிய நகரம்)
13 லூதி, ஆனாமீ, லெகாபீ, நப்தூகீம், 14 பத்ருசீம், பெலிஸ்தர், கஸ்லூ, கப்தொர் ஆகியோரின் தந்தை மிஸ்ராயீம்.
15 கானான் சீதோனின் தந்தையானான். இவன் கானானின் மூத்தமகன். கானான் கேத்துக்கும் தந்தை. கேத் கேத்தியர்களின் தந்தை ஆனான். 16 எபூசியர், எமோரியர், கிர்காசியர், 17 ஈவியர், அர்க்கீரியர், சீநியர், 18 அர்வாதியர், செமாரியர், காமாத்தியர், ஆகியோருக்கும் கானான் தந்தை ஆனான்.
இவனது சந்ததியினர் உலகின் பல பாகங்களிலும் பரவினர். 19 கானான் தேசத்தில் இருந்தவர்களுக்கு தம் எல்லையாக சீதோன் முதல் கேரார் வழியாய் காசா மட்டும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசா மட்டும் இருந்தது.
20 இவர்கள் அனைவரும் காமுடைய சந்ததியார்கள். இக்குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்கென்று சொந்த மொழியும் சொந்த பூமியும் உடையவர்களாய் இருந்தனர். அவர்கள் தனித்தனி நாட்டினராயும் ஆயினர்.
சேமின் சந்ததி
21 சேம், யாப்பேத்தின் மூத்த சகோதரன். அவனது சந்ததியில் ஒருவனே ஏபேர். எபேரே எபிரெய ஜனங்கள் அனைவருக்கும் தந்தையானான். [a]
22 ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் ஆகியோர் சேமின் பிள்ளைகள்.
23 ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் ஆகியோர் ஆராமின் பிள்ளைகள்.
24 அர்பக்சாத்தின் மகன் சாலா.
சாலாவின் மகன் ஏபேர்.
25 ஏபேருக்கு இரு மகன்கள். ஒருவன் பேர் பேலேகு. அவனுடைய நாட்களில்தான் பூமி பகுக்கப்பட்டது. யொக்தான் இன்னொரு மகன்.
26 அல்மோதாத், சாலேப் அசர்மாவேத், யேராகை, 27 அதோராம், ஊசால், திக்லா, 28 ஓபால், அபிமாவேல், சேபா, 29 ஒப்பீர், ஆவிலா, யோபா ஆகியோரை யொக்தான் பிள்ளைகளாகப் பெற்றான். 30 இவர்களின் பகுதிகள் மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழி மட்டும் இருந்தது.
31 இவர்கள் அனைவரும் சேமுடைய வாரிசுகள். இவர்கள் அனைவரும் தம் குடும்பங்கள், மொழிகள், நாடுகள், தேசங்கள், வழியாக வரிசைப்படுத்தப்பட்டவர்கள்.
32 நோவாவின் பிள்ளைகளால் உருவான குடும்பப்பட்டியல் இதுதான். இவர்கள் தங்கள் நாடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்குக்குப் பிறகு இக்குடும்பங்கள் தோன்றி பூமி முழுவதும் பரவினர்.
உலகம் பிரிக்கப்பட்டது
11 வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர். 2 ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநெயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர். 3 ஜனங்கள், “நாம் செங்கற்களைச் செய்து, நெருப்பில் அவற்றைச் சுடுவோம். அது பலமுடையதாகும்” என்றனர். எனவே ஜனங்கள் கற்களைப் பயன்படுத்தாமல் செங்கற்களைப் பயன்படுத்தி வீடு கட்டினர். சாந்துக்கு பதிலாக தாரைப் பயன்படுத்தினர்.
4 மேலும் ஜனங்கள், “நமக்காக நாம் ஒரு நகரத்தை நிர்மாணிக்க வேண்டும். ஒரு பெரிய கோபுரத்தை வானத்தை எட்டுமளவு கட்ட வேண்டும். நாம் புகழ் பெறுவோம். அது நம்மை ஒன்றுபடுத்தும். பூமி எங்கும் பரவிப் போகாமல் இருக்கலாம்” என்றனர்.
5 கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார். 6 கர்த்தர், “இந்த ஜனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். 7 எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார்.
8 அவ்வாறே, கர்த்தர் ஜனங்களை பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று. 9 உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார்.
சேம் குடும்பத்தின் வரலாறு
10 இது சேமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேமுக்கு 100 வயதானபோது அர்பக்சாத் என்னும் மகன் பிறந்தான். 11 அதன் பிறகு அவன் 500 ஆண்டுகள் வாழ்ந்தான். அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் இருந்தனர்.
12 அர்பக்சாத்துக்கு 35 வயதானபோது சாலா என்னும் மகன் பிறந்தான். 13 சாலா பிறந்த பின் அர்பக்சாத் 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
14 சாலாவுக்கு 30 வயதானபோது ஏபேர் பிறந்தான். 15 ஏபேர் பிறந்தபின் சாலா 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
16 ஏபேருக்கு 34 வயதானபோது பேலேகைப் பெற்றான். 17 பேலேக் பிறந்த பின் ஏபேர் 430 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
18 பேலேக்குக்கு 30 வயதானபோது அவனது மகன் ரெகூ பிறந்தான். 19 ரெகூ பிறந்த பின் பேலேகு 209 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
20 ரெகூவுக்கு 32 வயது ஆனதும் அவனது மகன் செரூகைப் பெற்றான். 21 செரூகு பிறந்தபின் ரெகூ 207 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
22 செரூகுக்கு 30 வயது ஆனதும் நாகோர் பிறந்தான். 23 நாகோர் பிறந்தபின் செரூகு 200 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
24 நாகோருக்கு 29 வயது ஆனதும் அவனது மகன் தேராகைப் பெற்றான். 25 தேராகு பிறந்ததும் நாகோர் 119 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர்.
26 தேராகுக்கு 70 வயதானபோது அவனது மகன்கள் ஆபிராம், நாகோர், ஆரான் பிறந்தார்கள்.
தேராகு குடும்பத்தின் வரலாறு
27 இது தேராகு குடும்பத்தின் வரலாறு ஆகும். தேராகு என்பவன் ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோரின் தந்தையானவன். ஆரான் லோத்தின் தந்தையானவன். 28 ஆரான் தனது பிறந்த நகரமான பாபிலோனியாவில் உள்ள ஊர் என்ற இடத்தில் மரணமடைந்தான். அப்போது அவனது தந்தையான தேராகு உயிரோடு இருந்தான். 29 ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்துகொண்டனர். ஆபிராமின் மனைவியின் பெயர் சாராய். நாகோரின் மனைவியின் பெயர் மில்காள். இவள் ஆரானுடைய மகள். ஆரான் மில்காளுக்கும் இஸ்காளுக்கும் தந்தை. 30 சாராய் பிள்ளைகள் இல்லாமல் மலடியாய் இருந்தாள்.
31 தேராகு தனது குடும்பத்தோடு பாபிலோனியாவில் உள்ள ஊர் எனும் இடத்தை விட்டுப் போனான். அவர்கள் கானானுக்குப் போகத் திட்டமிட்டனர். தேராகு தனது மகன் ஆபிராமையும் பேரன் லோத்தையும், மருமகள் சாராவையும் தன்னோடு அழைத்துச் சென்றான். அவர்கள் ஆரான் நகரத்துக்கு போய் அங்கே தங்கிவிட முடிவு செய்தனர். 32 தேராகு 205 ஆண்டுகள் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்தான்.
2008 by World Bible Translation Center