Beginning
லாசருவின் இறப்பு
11 லாசரு என்ற பெயருள்ள ஒரு மனிதன் நோயுற்றிருந்தான். அவன் பெத்தானியா என்ற நகரத்தில் வாழ்ந்து வந்தான். இந்நகரத்தில்தான் மரியாளும் அவளது சகோதரி மார்த்தாளும் வாழ்ந்தனர். 2 (இந்த மரியாள்தான் பின்பு இயேசுவிற்கு வாசனைத் தைலம் பூசித் தன் கூந்தலால் அவரது கால்களைத் துடைத்தவள்) மரியாளின் சகோதரன்தான் லாசரு. அவன் இப்போது நோயுற்றிருந்தான். 3 ஆகையால் மரியாளும் மார்த்தாளும் இயேசுவிடம் செய்தி அனுப்பி “ஆண்டவரே, உங்கள் அன்பான நண்பன் லாசரு நோயுற்றிருக்கிறான்” என்று சொன்னார்கள்.
4 இயேசு இதனைக் கேட்டு “நோயின் முடிவு மரணம் அன்று. இந்த நோய் தேவனை மகிமைப்படுத்துவதற்காக ஏற்பட்டது. இது, தேவனின் குமாரனுக்குப் புகழைக் கொண்டுவருவதற்காகவே உண்டானது” என்றார். 5 (மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய மூவரையும் இயேசு நேசித்து வந்தார்) 6 இயேசு லாசருவின் நோயைப்பற்றி அறிந்தபோது மேலும் இரண்டு நாட்கள் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே தங்கினார். 7 பிறகு இயேசு தன் சீஷர்களிடம் “நாம் மறுபடியும் யூதேயாவுக்குத் திரும்பிப் போவோம்” என்றார்.
8 அவரது சீஷர்கள், “ஆண்டவரே, யூதேயாவில் உள்ள யூதர்கள் உம்மைக் கல்லெறிந்து கொல்ல முயற்சித்தார்கள். அது நடந்தது சமீபகாலத்தில்தான். எனவே, இப்பொழுது அங்கே திரும்பிப் போக வேண்டுமா?” என்று கேட்டனர்.
9 இயேசுவோ, “பகலில் பன்னிரண்டு மணிநேரம் வெளிச்சம் இருக்கும். சரிதானே. ஒருவன் பகலில் நடந்தால், அவன் தடுமாறி விழமாட்டான். ஏனென்றால், அவனால் உலகின் வெளிச்சத்தைப் பார்க்க முடியும். 10 ஆனால் ஒருவன் இரவிலே நடந்தால் அவன் தடுமாறுவான். ஏனென்றால் அவனுக்கு உதவி செய்ய வெளிச்சம் இல்லை” என்றார்.
11 அவர் மேலும், “நமது நண்பன் லாசரு இப்பொழுது தூங்கிக்கொண்டிருக்கிறான். ஆனால் நான் அவனை எழுப்பப்போகிறேன்” என்றார்.
12 அவரது சீஷர்களோ, “ஆண்டவரே, அவன் தூங்கிக்கொண்டிருந்தால் நிச்சயம் குணமாவான்” என்றார்கள். 13 லாசரு இறந்து போனான் என்பதைக்குறித்தே இயேசு அவ்வாறு சொன்னார். ஆனால் அவரது சீஷர்களோ லாசரு உண்மையில் தூங்குவதாக நினைத்துக்கொண்டனர்.
14 பிறகு இயேசு தெளிவாக, “லாசரு இறந்துபோனான். 15 அங்கே அப்பொழுது நான் இல்லை என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது என்னை நீங்கள் நம்புவீர்கள். அதனால்தான் மகிழ்கிறேன். நாம் அவனிடம் போவோம்” என்றார்.
16 பிறகு தோமா என்று அழைக்கப்படும் சீஷன், ஏனைய சீஷர்களைப் பார்த்து, “நாமும் அவரோடு போவோம். யூதேயாவில் இயேசுவோடு நாமும் சாவோம்” என்றான்.
பெத்தானியாவில் இயேசு
17 இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கு வந்ததும் லாசரு இறந்துபோனாதாகவும் அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனதாகவும் அறிந்தார். 18 எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் பெத்தானியா உள்ளது. 19 யூதர்கள் பலர் மார்த்தாளிடமும் மரியாளிடமும் வந்திருந்தனர். அவர்களின் சகோதரன் லாசருவின் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க வந்தனர்.
20 இயேசு வந்துகொண்டிருப்பதாக மார்த்தாள் கேள்விப்பட்டாள். அவரை வரவேற்க அவள் போனாள். ஆனால் மரியாள் வீட்டிலேயே தங்கிக்கொண்டாள். 21 மார்த்தாள் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். 22 ஆனால் இப்பொழுதுகூட நீர் கேட்பவற்றை தேவன் உமக்குத் தருவார்” என்றாள்.
23 இயேசுவோ, “உன் சகோதரன் எழுவான், மீண்டும் உயிர்வாழ்வான்” என்றார்.
24 மார்த்தாளோ, “உயிர்த்தெழுதல் நடைபெறும் கடைசிநாளில் அவன் மீண்டும் எழுந்து உயிர் வாழ்வான் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
25 இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் தான் இறந்த பிறகும் எழுந்து வாழ்வு பெறுவான். 26 என்னில் வாழ்ந்து நம்பிக்கை வைக்கிற எவனும் உண்மையிலேயே இறப்பதில்லை. மார்த்தாளே, இதை நீ நம்புகிறாயா?” எனக் கேட்டார்.
27 “ஆம், ஆண்டவரே. நீர்தான் கிறிஸ்து என்று நம்புகிறேன். நீர்தான் தேவனின் குமாரன். நீரே உலகத்திற்கு வரவிருந்தவர்” என்றாள் மார்த்தாள்.
இயேசு அழுதல்
28 மார்த்தாள் இவ்வாறு சொன்ன பிறகு அவள் தன் சகோதரி மரியாளிடம் திரும்பிச் சென்றாள். அவள் தனியாக அவளிடம் பேசினாள். “இயேசு இங்கே இருக்கிறார். அவர் உன்னை அழைத்தார்” என்றாள் மார்த்தாள். 29 இதைக் கேட்டதும் மரியாள் எழுந்து இயேசுவிடம் விரைவாகப் போனாள். 30 இயேசு இன்னும் அக்கிராமத்துக்கு வந்து சேரவில்லை. மார்த்தாள் சந்தித்த இடத்திலேயே அவர் இருந்தார். 31 யூதர்கள் பலர் மரியாளோடு அவளது வீட்டில் இருந்தனர். அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். மரியாள் எழுந்து வேகமாகச் செல்வதைப் பார்த்து அவள் லாசருவின் கல்லறைக்குப் போகக்கூடும் என எண்ணினர். அவள் அங்கு அழப்போகலாம் என்று கருதி அவளோடு அவர்களும் சென்றனர். 32 இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் சென்றாள். அவள் இயேசுவைப் பார்த்ததும் குனிந்து அவரை வணங்கினாள். “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என்னுடைய சகோதரன் இறந்துபோயிருக்கமாட்டான்” என்று சொன்னாள்.
33 மரியாள் அழுவதை இயேசு பார்த்தார். அவளோடு வந்த யூதர்களையும் அவர் கவனித்தார். அவர்களும் அழுதனர். இயேசு மனப்பூர்வமாக வருந்தி, ஆழமாக வேதனைப்பட்டார். 34 “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று அவளிடம் கேட்டார்.
அவர்கள் அவரிடம், “கர்த்தரே, வந்து பாரும்” என்றனர். 35 இயேசு அழுதார்.
36 இதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இயேசு லாசருவை மிகவும் நேசித்திருக்கிறார்” என்றனர்.
37 ஆனால் சில யூதர்களோ, “இயேசு குருடனின் கண்களைக் குணப்படுத்தினார். லாசருவுக்கு உதவிசெய்ய. அவனை ஏன் சாகாமலிருக்கச் செய்திருக்கக் கூடாது?” என்று கேட்டனர்.
லாசருவை உயிர்ப்பித்தல்
38 மீண்டும் இயேசு மனதில் மிகவும் வருத்தம் அடைந்தார். பிறகு லாசரு வைக்கப்பட்ட கல்லைறைக்கு வந்தார். அக்கல்லறை பெரிய பாறையால் அடைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருந்தது. 39 இயேசு, “அந்தப் பாறையை அகற்றுங்கள்” என்றார்.
மார்த்தாளோ, “ஆண்டவரே, லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அதில் கெட்ட நாற்றம் வீசுமே” என்றாள். அவள் இறந்துபோன லாசருவின் சகோதரி.
40 இயேசு மார்த்தாளிடம், “நான் சொன்னவற்றை நினைத்துப்பார். நீ என்னை நம்புகிறதானால் தேவனின் மகிமையை அறியலாம் எனச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.
41 ஆகையால் அவர்கள் அந்தப் பாறையை குகையின் வாசலில் இருந்து அகற்றினார்கள். இயேசு மேலே ஏறிட்டுப் பார்த்து “பிதாவே! நான் சொல்வதை நீர் கேட்டதற்காக நன்றி கூறுகிறேன். 42 எப்பொழுதும் நான் சொல்வதை நீர் கேட்கிறீர் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் நான் இங்கே கூடியிருக்கிற இம்மக்களுக்காகவே இவற்றைக் கூறுகிறேன். நீர்தான் என்னை அனுப்பினீர் என்று இவர்கள் நம்பவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார். 43 இவ்விதம் சொன்னபிறகு இயேசு உரத்த குரலில், “லாசருவே, வெளியே வா” என்று அழைத்தார். 44 இறந்தவன் வெளியே வந்தான். அவனது கைகளிலும் கால்களிலும் துணிகள் சுற்றப்பட்டிருந்தன. அவன் முகத்தை ஒரு துண்டுத் துணி மூடியிருந்தது.
இயேசு மக்களிடம், “துணிகளை அப்புறப்படுத்தி அவனை விடுவியுங்கள்” என்றார்.
யூதத்தலைவர்களின் சதித்திட்டம்(A)
45 மரியாளைப் பார்ப்பதற்காக ஏராளமான யூதர்கள் வந்திருந்தனர். இயேசு செய்ததை அவர்கள் பார்த்தார்கள். அவர்களில் பலர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். 46 ஆனால், சிலர் பரிசேயர்களிடம் சென்றனர். இயேசு செய்ததை அவர்கள் பரிசேயர்களிடம் சொன்னார்கள். 47 பிறகு ஆசாரியர்களும் பரிசேயர்களும் யூதர்களின் ஆலோசனைச் சபையைக் கூட்டினர். “இனி என்ன செய்யலாம்? இயேசு பல அற்புதங்களைச் செய்து வருகிறான். 48 அவனை இவ்வாறு தொடர்ந்து செய்ய அனுமதித்தால் பிறகு மக்கள் அனைவரும் அவனை நம்ப ஆரம்பித்துவிடுவார்கள். பின் ரோமானியர்கள் வந்து நமது ஆலயத்தையும், நாட்டையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று பேசிக்கொண்டனர்.
49 அங்கே அவர்களில் ஒருவன் காய்பா. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். அவன் “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. 50 நாடு முழுவதும் அழிவதைவிட மக்களுக்காக ஒருவன் இறந்துபோவது நல்லது அல்லவா? இதை ஏன் நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லை?” என்று சொன்னான்.
51 காய்பா இவற்றைச் சொந்தமாகச் சிந்தித்துச் சொல்லவில்லை. அவன் அந்த ஆண்டின் தலைமை ஆசாரியன். இயேசு யூத நாட்டுக்காக மரிக்கப்போகிறார் என்பதை அவன் உண்மையில் தீர்க்கதரிசனமாகவே கூறினான். 52 ஆம். இயேசு யூதர்களுக்காகவே மரிக்கப் போகிறார். உலகில் சிதறிக் கிடக்கிற மக்களையெல்லாம் ஒன்று திரட்டி, அவர்களை ஒரே மக்களாக்க அவர் மரிக்கப் போகிறார்.
53 அன்றிலிருந்து யூதத்தலைவர்கள் இயேசுவைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டினர். 54 ஆகையால் இயேசு யூதர்களின் மத்தியில் வெளிப்படையாக நடமாடுவதை நிறுத்தினார். இயேசு எருசலேமை விட்டு வனாந்தரத்திற்கு அருகிலுள்ள இடத்துக்கு சென்றார். இயேசு எப்பிராயீம் என்று அழைக்கப்படுகிற நகரத்துக்குச் சென்றார். அங்கே அவர் தம் சீஷர்களோடு தங்கினார்.
55 யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. பஸ்கா பண்டிகைக்கு முன்பே நாட்டிலுள்ள மக்களில் பலர் எருசலேமிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் தம்மை சுத்தப்படுத்திக்கொள்வதற்கான சடங்குகளைச் செய்வர். 56 மக்கள் இயேசுவை எதிர்ப்பார்த்தனர். அவர்கள் ஆலயத்தில் நின்றுகொண்டு “இயேசு பண்டிகைக்கு வரமாட்டாரா? நீ என்ன நினைக்கிறாய்?” என ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொண்டனர். 57 ஆனால் தலைமை ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவைப்பற்றிய ஒரு புதிய கட்டளையைக் கொடுத்திருந்தனர். எவராவது இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால் உடனே வந்து தெரிவிக்க வேண்டும். பிறகு, தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்ய முடியும்.
பெத்தானியாவில் இயேசு(B)
12 பஸ்கா பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்கள் இருந்தன. இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே லாசரு வாழ்ந்து வந்தான். (இவன் இறந்த பின்னரும் இயேசுவால் உயிர் பெற்று எழுந்தவன்) 2 பெத்தானியாவில் இயேசுவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்தனர். மார்த்தாள் உணவு பரிமாறினாள். இயேசுவோடு லாசருவும் இன்னும் பலரும் விருந்தில் கலந்துகொண்டனர். 3 மரியாள் சுத்தமான நளதம் என்னும் விலை உயர்ந்த வாசனைத் தைலத்தை ஒரு இராத்தல் கொண்டு வந்தாள். அவள் அதனை இயேசுவின் பாதங்களில் ஊற்றினாள். பிறகு அதனைத் தன் தலை மயிரால் துடைத்தாள். வீடு முழுவதும் தைலத்தின் வாசனை நிறைந்துவிட்டது.
4 யூதாஸ்காரியோத்தும் அங்கிருந்தான். (யூதாஸ் இயேசுவின் சீஷரில் ஒருவன். இவன்தான் பிறகு இயேசுவிற்கு எதிரானவன்.) மரியாள் செய்தவற்றை இவன் விரும்பவில்லை. 5 அவன் “இத்தைலம் முந்நூறு வெள்ளிகாசுகள் மதிப்பு உடையது. இதனை விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்” என்றான். 6 ஆனால் உண்மையில் அவனுக்கு ஏழைகளின்மீது அக்கறையில்லை. அவன் ஒரு திருடனானபடியால் இவ்வாறு சொன்னான். இவன்தான் இயேசுவின் சீஷர்களுள் பணப்பையை வைத்திருந்தவன். இவன் அவ்வப்போது பணப்பையிலிருந்து பணம் திருடி வந்தான்.
7 இயேசு அவனிடம், “அவளைத் தடை செய்யாதீர்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதைச் சேமித்து வைத்திருந்தாள். 8 ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நானோ எப்பொழுதும் உங்களோடு இருப்பதில்லை” என்றார்.
லாசருவுக்கு எதிரான சதி
9 யூதர்களில் பலர், இயேசு பெத்தானியாவில் இருப்பதாக அறிந்தனர். ஆகையால் அவர்கள் அங்கே சென்றனர். அவர்கள் இயேசுவை மட்டுமல்லாமல் லாசருவையும் பார்க்க எண்ணினர். லாசரு இயேசுவால் மரணத்துக்குப் பின்னும் உயிரோடு எழுப்பப்பட்டவன். 10 ஆகவே, தலைமை ஆசாரியர்களும் இயேசுவோடு லாசருவையும் கொல்லத் திட்டமிட்டார்கள். 11 ஏனென்றால் லாசருவின் நிமித்தம் ஏராளமான யூதர்கள் தங்கள் தலைவர்களை விட்டுவிட்டு இயேசுவை நம்பத் தொடங்கினர். அதனால்தான் யூதத் தலைவர்கள் லாசருவையும் கொலைசெய்ய விரும்பினர்.
எருசலேமில் இயேசு(C)
12 மறுநாள் இயேசு வருவதாக எருசலேமிலுள்ள பெருங்கூட்ட மக்கள் கேள்விப்பட்டனர். இம்மக்கள் பஸ்கா பண்டிகைக்காக வந்தவர்கள். 13 அந்த மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள்:
“‘அவரைப் புகழ்வோம்! வருக!’
‘தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே கர்த்தரின் பேரால் வருகிறவரே!’ (D)
“தேவன் இஸ்ரவேலின் இராஜாவை ஆசீர்வதிப்பாராக!”
என்று முழங்கினர்.
14 இயேசு ஒரு கழுதையைக் கண்டு அதன் மேல் ஏறிக்கொண்டார்.
15 “சீயோன் [a] நகரமே அஞ்சவேண்டாம். பார்.
உன் அரசர் வந்துகொண்டிருக்கிறார்.
அவர் இளங்கழுதைமேல் சவாரி செய்து வருகிறார்” (E)
என்றும் மக்கள் ஆரவாரம் செய்தனர்.
16 இயேசுவின் சீஷர்கள் இவற்றை முதலில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இயேசு மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்கள் இவை ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறதே என்று உணர்ந்துகொண்டனர். அத்துடன் அவருக்காகத் தாங்கள் செய்த செய்கைகளையும் நினைவுகூர்ந்தனர்.
இயேசுவைப்பற்றி மக்கள் பேசுதல்
17 மரணத்திலிருந்து லாசருவை இயேசு எழுப்பி “கல்லறையை விட்டு வெளியே வா” என்று சொன்னபோது இயேசுவுடன் பலர் இருந்தனர். இப்பொழுது அவர்கள் மற்றவர்களிடம் இயேசு செய்தவற்றைப்பற்றிக் கூறினர். 18 இயேசு இந்த அற்புதத்தைச் செய்ததைக் கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் இயேசுவை வரவேற்பதற்காகத் திரண்டனர். 19 அதனால் பரிசேயர்கள் தங்களுக்குள், “பாருங்கள், நமது திட்டம் நன்மையைத் தரவில்லை. எல்லா மக்களும் அவரைப் பின்தொடர்கிறார்கள்” என்று பேசிக்கொண்டனர்.
ஜீவன்-மரணம்
20 அங்கே கிரேக்க நாட்டு மக்களில் சிலரும் இருந்தனர். இவர்கள் பஸ்கா பண்டிகையில் வழிபாடு செய்ய எருசலேமுக்கு வந்திருந்தனர். 21 இவர்கள் பிலிப்புவிடம் சென்று (கலிலேயாவிலுள்ள பெத்சாய்தாவில் இருந்து வந்தவன் பிலிப்பு) “ஐயா, நாங்கள் இயேசுவைச் சந்திக்க விரும்புகிறோம்” என்றனர். 22 பிலிப்பு அந்திரேயாவிடம் சொன்னான். பிறகு இருவரும் இயேசுவிடம் சொன்னார்கள்.
23 இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் மகிமை பெறுகிற நேரம் வந்துவிட்டது. 24 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு கோதுமை விதை தரையில் விழுந்து (இறக்க) அழிய வேண்டும். பிறகுதான் அது வளர்ந்து ஏராளமாகக் கோதுமையைத் தரும். ஆனால் அது அழியாவிட்டால், அது தனி விதையாகவே இருக்கும். 25 தனக்குச் சொந்தமான வாழ்வை நேசிக்கிறவன் அதனை இழப்பான். இவ்வுலகில் தன் வாழ்வின்மீது வெறுப்புகொண்டவன் என்றென்றைக்கும் அதைக் காத்துக்கொள்வான். அவன் நிரந்தர வாழ்வைப் பெறுவான். 26 எனக்குப் பணிவிடை செய்கிறவன் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கெங்கே இருக்கிறேனோ அங்கெல்லாம் என் பணியாளனும் இருப்பான். எனக்குப் பணி செய்கிறவர்களை என் பிதாவும் பெருமைப்படுத்துவார்.”
இயேசு தன் மரணத்தைப்பற்றிப் பேசியது
27 “நான் இப்போது கலக்கத்தில் இருக்கிறேன். நான் என்ன சொல்வது? ‘பிதாவே, என்னை இந்தத் துன்ப காலத்தில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று சொல்லலாமா? இல்லை, துன்பப்படுவதற்காகவே இத்தருணத்தில் வந்தேன். 28 பிதாவே, உங்கள் பெயருக்கே மகிமையை தேடித்தருக!” என்றார்.
அப்போது வானில் இருந்து ஒரு குரல் வந்து, “நான் என் பெயருக்கு மகிமை கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை மீண்டும் செய்வேன்” என்றது.
29 அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர்.
வேறு சிலரோ “ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான்” என்றனர்.
30 மக்களிடம் இயேசு, “இந்தக் குரல் எனக்காக அல்ல. உங்களுக்காக. 31 உலகம் நியாயம் தீர்க்கப்படுவதற்கான தருணம் இதுதான். இப்பொழுது உலகை ஆண்டுகொண்டிருக்கும் சாத்தான் தூக்கி எறியப்படுவான். 32 நான் பூமியில் இருந்து உயர்த்தப்படுவேன். இது நடைபெறும்போது எல்லா மக்களையும் என்னோடு சேர்த்துக்கொள்வேன்” என்றார். 33 தான் எவ்வாறு இறந்துபோவேன் என்பதைக் காட்டவே இவ்வாறு கூறினார்.
34 ஆனால் மக்களோ, “கிறிஸ்து என்றென்றும் வாழ்வார் என்று நமது சட்டங்கள் கூறுகின்றனவே. அப்படியிருக்க ‘மனித குமாரன் உயர்த்தப்படுவார்’ என்று ஏன் கூறுகின்றீர்? யார் இந்த ‘மனித குமாரன்?’” எனக் கேட்டனர்.
35 பிறகு இயேசு, “இன்னும் சிறிது காலம் உங்களோடு ஒளி இருக்கும். எனவே, ஒளி இருக்கும்போதே நடந்துவிடுங்கள். அப்போதுதான் இருட்டாகிய பாவம் உங்களைப் பிடித்துக்கொள்ளாது. இருட்டிலே நடந்துபோகிறவனுக்குத் தான் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் இருக்கும். 36 ஆகவே, ஒளி இருக்கும்போதே அதன்மீது நம்பிக்கை வையுங்கள். அப்பொழுது நீங்கள் ஒளியின் பிள்ளைகள் ஆவீர்கள்” என்றார். இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின் அவ்விடத்தை விட்டுப் போனார். அவர் போய் அவர்களிடமிருந்து தன்னை மறைத்துக்கொண்டார்.
இயேசுவை நம்பாத யூதர்கள்
37 இயேசு இவ்வாறு ஏராளமான அற்புதங்களைச் செய்தார். மக்கள் அவற்றைப் பார்த்தனர். எனினும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. 38 தீர்க்கதரிசி ஏசாயா சொன்னது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.
“கர்த்தாவே, நாங்கள் சொன்னதைக் கேட்டு நம்பிக்கை வைத்தவர்கள் யார்?
தேவனின் வல்லமையைக் கண்டுகொண்டவர்கள் யார்?” (F)
39 இதனால்தான் மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஏசாயா மேலும்,
40 “தேவன் மக்களைக் குருடாக்கினார்.
தேவன் அவர்களின் மனதை மூடினார்.
அவர்கள் கண்களினால் பாராமலும் மனதின் மூலம் அறியாமலும் இருக்கவேண்டும் என்றே தேவன் இதைச் செய்தார்.
அதன்பின் அவர்களை நான் குணப்படுத்துவேன்.” (G)
41 இயேசுவின் மகிமையை ஏசாயா அறிந்திருந்தபடியால் அவர் இவ்வாறு சொன்னார். எனவே ஏசாயா இயேசுவைப்பற்றிப் பேசினார்.
42 ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவை நம்பினார்கள். ஏராளமான யூதத்தலைவர்கள் கூட இயேசுவை நம்பினார்கள். ஆனால் அவர்கள் பரிசேயர்களுக்குப் பயந்தனர். எனவே, அவர்கள் இயேசுவை நம்புவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. தாம் ஜெப ஆலயத்திற்குப் புறம்பாக்கப்படுவோமோ என்று அவர்கள் பயந்தனர். 43 அவர்கள் தேவனால் வரும் பாராட்டைவிட மனிதரால் வரும் பாராட்டை விரும்பினர்.
தீர்ப்பளிக்கும் வசனங்கள்
44 பிறகு இயேசு உரத்த குரலில், “என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன், என்னை அனுப்பிய தேவனிடமும் விசுவாசம் வைப்பான். 45 என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான். 46 நானே ஒளி, நான் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறேன். ஆகவே, என்னில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் இருளில் தங்கமாட்டான்.
47 “நான் மக்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக இந்த உலகத்துக்கு வரவில்லை. உலகத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறேன். எனவே, என் வார்த்தைகளைக் கேட்டும் என்னை நம்பாமல் போகிறவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை. 48 என்னை நம்ப மறுக்கிறவர்களையும் நான் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்க ஒரு நீதிபதி உண்டு. அதுதான் நான் சொன்ன உபதேசங்கள். அவை இறுதி நாளில் அவர்களை நியாயம்தீர்க்கும். 49 ஏனென்றால் நான் சொன்ன உபதேசங்கள் என்னிடமிருந்து வந்தவையல்ல. நான் சொன்னவையும் உபதேசித்தவையும் என்னை அனுப்பிய என் பிதாவாகிய தேவன் எனக்குச் சொன்னவையாகும். 50 என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன்” என்றார்.
2008 by World Bible Translation Center