Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆதியாகமம் 35-37

பெத்தேலில் யாக்கோபு

35 தேவன் யாக்கோபிடம், “பெத்தேல் நகரத்திற்குப் போய், அங்கே வாசம் செய். தொழுதுகொள்ள எனக்கொரு பலிபீடம் கட்டு. நீ உன் சகோதரனாகிய ஏசாவிற்குப் பயந்து ஓடிப்போனபோது உனக்குக் காட்சி தந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை அமைத்து அங்கு தேவனைத் தொழுதுகொள்” என்றார்.

எனவே, யாக்கோபு தன் குடும்பத்தார் வேலைக்காரர்கள் அனைவரிடமும், “உங்களிடம் உள்ள மரத்தாலும் உலோகங்களாலும் செய்யப்பட்ட அந்நிய தெய்வங்களையெல்லாம் அழித்துப்போடுங்கள். உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, சுத்தமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். நாம் இந்த இடத்தைவிட்டு பெத்தேலுக்குப் போகிறோம். அங்கே எனக்குத் துன்பத்தில் உதவிய தேவனுக்கு நான் பலிபீடம் கட்டப்போகிறேன். அந்த தேவன் நான் எங்கு போனாலும் என்னோடு இருக்கிறார்” என்றான்.

எனவே, ஜனங்கள் தம்மிடம் இருந்த அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதுகளில் அணிந்திருந்த வளையங்களையும் யாக்கோபிடம் கொடுத்தார்கள். அவற்றை சீகேம் நகருக்கருகில் இருந்த ஒரு கர்வாலி மரத்தின் அடியிலே புதைத்துவிட்டான்.

யாக்கோபும் அவனது குமாரர்களும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போனபோது, அப்பகுதியில் உள்ள ஜனங்கள் அவர்களைப் பின் தொடர்ந்து போய் அவர்களைக் கொலைசெய்ய விரும்பினார்கள். ஆனால் தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பயம் அவர்களுக்கு ஏற்பட்டபடியால் அவர்கள் யாக்கோபைப் பின்தொடரவில்லை. எனவே, யாக்கோபும் அவனைச் சேர்ந்தவர்களும் கானானிலுள்ள லூசை அடைந்தனர். லூஸ் இப்போது பெத்தேல் என்று அழைக்கப்பட்டது. யாக்கோபு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அதற்கு “ஏல் பெத்தேல்” என்று பெயரிட்டான். காரணம் அவன் சகோதரனுக்குப் பயந்து ஓடியபோது தேவன் அந்த இடத்தில் தான் அவனுக்கு முதலில் காட்சியளித்தார்.

தெபோராள் எனும் ரெபெக்காளின் தாதி அங்கு மரித்துபோனாள். பெத்தேலில் கர்வாலி மரத்தின் அடியில் அவளை அடக்கம் செய்தனர். அந்த இடத்திற்கு அல்லோன் பாகூத் என்று பெயர் வைத்தனர்.

யாக்கோபின் புதிய பெயர்

பதான் அராமிலிருந்து யாக்கோபு திரும்பி வந்தபோது தேவன் மீண்டும் அவனுக்குக் காட்சியளித்தார், தேவன் யாக்கோபை ஆசீர்வதித்தார். 10 தேவன், யாக்கோபிடம், “உன் பெயர் யாக்கோபு, உன் பெயர் இனி யாக்கோபு என அழைக்கப்படாது. உன் பெயர் இஸ்ரவேல் எனப்படும்” என்று கூறி அவனுக்கு “இஸ்ரவேல்” என்று பெயரிட்டார்.

11 தேவன் அவனிடம், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன். உனக்கு இந்த ஆசீர்வாதத்தைத் தருவேன். நீ நிறைய குழந்தைகளைப் பெற்று ஒரு நாட்டை உருவாக்குவாய். வேறு ஜாதிகளின் கூட்டமும், ராஜாக்களும் உன்னிடமிருந்து தோன்றுவார்கள். 12 நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் சிறந்த இடங்களைக் கொடுத்திருந்தேன். இப்போது அதனை உனக்குக் கொடுக்கிறேன். உனக்குப் பின்னால் வரும் உன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன்” என்றார். 13 பிறகு தேவன் அந்த இடத்தை விட்டு எழுந்தருளிப் போனார். 14-15 யாக்கோபு தேவன் தன்னோடு பேசின அந்த இடத்தில் ஒரு ஞாபகக் கல் நிறுத்தி அதில் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் ஊற்றினான். இது ஒரு சிறப்பான இடம். ஏனென்றால் அதுதான் தேவன் அவனிடம் பேசிய இடம். எனவே யாக்கோபு அதற்கு “பெத்தேல்” என்று பெயரிட்டான்.

ராகேல் மரணமடைதல்

16 யாக்கோபும் அவனது கூட்டமும் பெத்தேலை விட்டுப் புறப்பட்டது. எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்ச தூரம் இருந்தது. அப்போது ராகேல் பிள்ளை பெற்றாள். 17 ஆனால் பிரசவ வேதனை அதிகமாக இருந்தது. தாதியோ, “பயப்படாதே நீ இன்னொரு குழந்தையையும் பெறுவாய்” என்றாள்.

18 ஆனால் அவள் ஆண் குழந்தை பெறும்போதே மரித்துபோனாள். மரிக்கும் முன்னால் தன் குமாரனுக்குப் பெனோனி என்று பெயர் சூட்டினாள். ஆனால் யாக்கோபு அவனைப் பென்யமீன் என்று அழைத்தான்.

19 ராகேல் எப்பிராத்தாவுக்குப் போகும் சாலை ஓரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டாள். (எப்பிராத்தா என்பது பெத்லேகம் ஆகும்) 20 யாக்கோபு அதில் ஒரு சிறப்பான கல்தூணை நட்டு ராகேலின் கல்லறையைப் பெருமைப்படுத்தினான். இன்றும் அக்கல் (தூண்) உள்ளது. 21 இஸ்ரவேல் (யாக்கோபு) தன் பயணத்தைத் தொடர்ந்தான். ஏதேர் கோபுரத்திற்குத் தென் பகுதியில் கூடாரமிட்டான்.

22 இஸ்ரவேல் அங்கு கொஞ்சக்காலமே தங்கினான். அப்போது ரூபன், தன் தந்தையின் வேலைக்காரியான பில்காளோடு பாலின உறவு கொண்டதை அறிந்து இஸ்ரவேல் கடுங்கோபம் கொண்டான்.

இஸ்ரவேலின் குடும்பம்

யாக்கோபிற்கு (இஸ்ரவேலுக்கு) 12 குமாரர்கள் இருந்தார்கள்.

23 ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் ஆகியோர் யாக்கோபுக்கும் லேயாளுக்கும் முதலில் பிறந்தவர்கள்.

24 யோசேப்பும் பென்யமீனும் யாக்கோபுக்கும் ராகேலுக்கும் பிறந்தவர்கள்.

25 தாண், நப்தலி ஆகிய இருவரும் யாக்கோபுக்கும் பில்காளுக்கும் பிறந்தவர்கள்.

26 காத், ஆசேர் இருவரும் யாக்கோபுக்கும் சில்பாளுக்கும் பிறந்தவர்கள்.

இவர்கள் அனைவரும் பதான் அராமில் யாக்கோபிற்குப் (இஸ்ரவேலுக்கு) பிறந்தவர்கள்.

27 யாக்கோபு தனது தந்தை ஈசாக்கு இருந்த கீரியாத் அர்பாவிலிருந்த மம்ரேக்கு சென்றான். அங்கேதான் ஆபிரகாமும் வாழ்ந்தான். 28 ஈசாக்கு 180 ஆண்டுகள் வாழ்ந்தான். 29 பிறகு ஈசாக்கு பலவீனமாகி மரித்துப் போனான். அவன் நீண்ட முழுமையான வாழ்க்கை வாழ்ந்தான். ஏசாவும் யாக்கோபும் ஆபிரகாமை அடக்கம் செய்த இடத்திலேயே ஈசாக்கையும் அடக்கம் செய்தனர்.

ஏசாவின் குடும்பம்

36 இது ஏசாவின் குடும்ப வரலாறு. ஏசா கானான் நாட்டுப் பெண்களை மணந்துகொண்டான். அவன் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியான ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாளையும் முதலில் மணந்துகொண்டான். இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் பிறகு மணந்தான். ஏசாவுக்கும் ஆதாளுக்கும் எலீப்பாஸ் என்ற குமாரன் பிறந்தான். பஸ்மாத்துக்கு ரெகுவேல் என்ற குமாரன் பிறந்தான். அகோலிபாமாளுக்கு எயூஷ், யாலாம், கோரா என்ற மூன்று குமாரர்கள் பிறந்தனர். ஏசாவின் இந்தப் பிள்ளைகள் கானான் நிலப் பகுதியிலேயே பிறந்தனர்.

6-8 யாக்கோபு மற்றும் ஏசா ஆகியோரின் குடும்பங்கள் கானான் நாட்டில் வளர்ந்து மிகப் பெரிதாயின. எனவே ஏசா தன் சகோதரன் யாக்கோபை விட்டு விலகிப்போனான். ஏசா தனது மனைவியரையும், பிள்ளைகளையும், அடிமைகளையும், பசுக்கள் மற்றும் மிருகங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு சேயீர் எனும் மலைப் பகுதிக்குச் சென்றான். (ஏசாவுக்கு ஏதோம் என்ற பேரும் உண்டு. சேயீர் நாட்டுக்கும் இந்தப் பெயர் உண்டு)

ஏசா ஏதோம் ஜனங்களுக்குத் தந்தையானான். சேயீர் எனும் மலைப் பகுதியில் வாழ்ந்த ஏசா குடும்பத்தினரின் பெயர்கள் பின்வருமாறு:

10 ஏசாவுக்கும் ஆதாவுக்கும் பிறந்த குமாரன் எலிப்பாஸ். ஏசாவுக்கும் பஸ்மாத்துக்கும் பிறந்த குமாரன் ரெகுவேல்.

11 எலிப்பாசுக்கு தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் எனும் ஐந்து குமாரர்கள்.

12 எலிப்பாசுக்கு திம்னா என்ற வேலைக்காரி இருந்தாள். அவளுக்கும் அவனுக்கும் அமலேக்கு என்ற குமாரன் பிறந்தான்.

13 ரெகுவேலுக்கு நகாத், செராகு, சம்மா, மீசா என்று நான்கு குமாரர்கள்.

இவர்கள் ஏசாவுக்கு பஸ்மாத் மூலம் வந்த பேரக்குழந்தைகள்.

14 ஏசாவின் மூன்றாவது மனைவியான சிபியோனின் குமாரத்தி ஆனாகினின் குமாரத்தியான அகோலிபாமாள் எயூஷ், யாலாம், கோராகு எனும் குமாரர்களைப் பெற்றாள்.

15 ஏசாவின் குமாரர்களில் கீழ்க்கண்ட கோத்திரங்கள் தோன்றினர்.

ஏசாவின் மூத்த குமாரன் எலீப்பாஸ். எலீப்பாசிலிருந்து தேமான், ஓமார், செப்போ, கேனாஸ், 16 கோராகு, கத்தாம், அமலேக்கு என்பவர்கள்.

இவர்கள் ஏதோம் நாட்டில் எலீப்பாசின் சந்ததியும் ஏசாவின் மனைவி வழி வந்த ஆதாளின் கோத்திரங்கள்.

17 ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் குமாரர்களில் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள் முக்கியமானவர்கள்.

இவர்கள் ஏதோம் நாட்டில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகனுமாயிருந்த பிரபுக்கள்.

18 ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர்கள் எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவின் மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த தலைவர்கள்.

19 இவர்கள் எல்லோரும் ஏசாவின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.

20 அந்த நாட்டில் ஏசாவுக்கு முன் வாழ்ந்த சேயீருக்கு

லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, 21 திஷோன், ஏதசேர், திஷான் என்னும் குமாரர்கள் இருந்தனர். இவர்கள் ஏதோம் நாட்டில் சேயீரின் குமாரர்களாகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.

22 லோத்தானுக்கு ஓரி, ஏமாம் எனும் குமாரர்கள் இருந்தனர். லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.

23 சோபாலினுக்கு அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் எனும் குமாரர்கள் இருந்தனர்.

24 சிபியோனுக்கு அயா, ஆனாகு எனும் குமாரர்கள் இருந்தனர். ஆனாகு தன் தகப்பனாகிய சிபியோனின் கழுதைகளைப் பாலைவனத்தில் மேய்க்கையில் வெந்நீர் ஊற்றுகளைக் கண்டுபிடித்தான்.

25 ஆனாகினுக்கு திஷோன், அகோலிபாமாள் எனும் பிள்ளைகள் இருந்தனர்.

26 திஷோனுக்கு எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் எனும் குமாரர்கள் இருந்தனர்.

27 ஏத்சேனுக்கு பில்கான், சகவான், அக்கான் என்னும் குமாரர்கள் இருந்தனர்.

28 திஷானுக்கு ஊத்ஸ், அரான், என்னும் குமாரர்கள் இருந்தனர்.

29 ஓரியரின் சந்ததியிலே லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, 30 திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள் தலைவர்கள் ஆனார்கள். இவர்களே சேயீர் நாட்டிலே தங்கள் பகுதிகளில் இருந்த ஓரியர் சந்ததியிலே உள்ள பிரபுக்கள்.

31 அப்பொழுது ஏதோமிலே ராஜாக்கள் இருந்தார்கள். இஸ்ரவேலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஏதோமில் பல மன்னர்கள் இருந்தனர்.

32 பேயோர் எனும் ராஜாவின் குமாரனாகிய பேலா ஏதோமில் ஆட்சி செலுத்தி வந்தான். அவன் தின்காபா எனும் நகரிலிருந்து ஆண்டான்.

33 பேலா மரித்ததும் யோபாப் ராஜா ஆனான். இவன் போஸ்றாவிலுள்ள சேராகுவின் குமாரன்.

34 யோபாப் மரித்ததும் ஊசாம் அரசாண்டான். இவன் தேமானிய நாட்டினன்.

35 ஊசாம் மரித்ததும் ஆதாத் அரசாண்டான். இவன் பேதாதின் குமாரன். (ஆதாத் மோவாபிய நாட்டிலே மீதியானியரை வெற்றி பெற்றவன்) இவன் ஆவீத் நாட்டிலிருந்து வந்தவன்.

36 ஆதாத் மரித்தபின் சம்லா அரசாண்டான். இவன் மஸ்ரேக்கா ஊரைச் சார்ந்தவன்.

37 சம்லா மரித்தபின் சவுல் அரசாண்டான். இவன் அங்குள்ள ஆற்றின் அருகிலுள்ள ரெகொபோத் ஊரைச் சேர்ந்தவன்.

38 சவுல் மரித்தபின் பாகால்கானான் அரசாண்டான். இவன் அக்போருடைய குமாரன்.

39 பாகால் கானான் மரித்தபின் ஆதார் அரசாண்டான். இவன் பாகு எனும் நகரைச் சேர்ந்தவன். இவனது மனைவியின் பெயர் மெகேதபேல். இவள் மத்ரேத் மற்றும் மேசகாவின் குமாரத்தி.

40-43 ஏசாவே ஏதோமிய குடும்பங்களின் தந்தை ஆவான்.

ஏசாவின் வம்சத்தில் திம்னா, அல்வா, ஏதேத், அகோலிபாமா, ஏலா, பினோன், கேனாஸ், தேமான், மிப்சர், மக்தியேல், ஈராம் எனும் பிரபுக்கள் இருந்தனர். ஒவ்வொரு குடும்பமும் அந்தந்த குடும்பப் பெயர்களால் அழைக்கப்படுகிற பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.

கனவு காணும் யோசேப்பு

37 கானான் தேசத்திலேயே யாக்கோபு வாழ்ந்து வந்தான். இதே நாட்டில் தான் அவனது தந்தையும் வாழ்ந்திருந்தான். இது யாக்கோபின் குடும்ப வரலாறு:

யோசேப்பு ஓர் 17 வயது இளைஞன். தன் சகோதரர்களோடு சேர்ந்து ஆடு மாடுகளைக் கவனித்துக்கொள்வது அவனது வேலை. பில்காள், சில்பாள், ஆகியோரின் குமாரர்களும் அவனோடு இருந்தனர் (பில்காளும, சில்பாளும் அவனது தந்தையின் மனைவிகள்.) யோசேப்பு தன் சகோதரர்கள் செய்த கெட்ட செயல்களைத் தந்தையிடம் சொன்னான். யோசேப்பு பிறக்கும்போது இஸ்ரவேலுக்கு மிக முதிய வயது. எனவே அவன் மற்ற குமாரர்களைவிட யோசேப்பைப் பெரிதும் நேசித்தான். அவனுக்கென்று ஒரு தனி அங்கியைக் கொடுத்திருந்தான். அது மிக நீளமானதாகவும் அழகானதாகவும் இருந்தது. யோசேப்பின் சகோதரர்கள், தங்கள் தந்தை தங்களைவிட யோசேப்பை அதிகமாக நேசிப்பதாக உணர்ந்தனர். இதனால் அவர்கள் அவனை வெறுத்தனர். எனவே அவர்கள் அவனோடு அன்பாகப் பேசுவதில்லை.

ஒரு நாள் யோசேப்புக்கு விசேஷமான கனவு வந்தது. அவன் அதனைச் சகோதரர்களிடம் சொன்னான். அதனால் அவர்கள் அவனை மேலும் வெறுத்தனர்.

யோசேப்பு, “நான் ஒரு கனவு கண்டேன். நாம் எல்லோரும் வயலில் வேலை செய்துகொண்டிருக்கிறோம். கோதுமை அரிகளைக் கட்டிக்கொண்டிருக்கிறோம். அப்போது என்னுடைய கட்டு நிமிர்ந்திருந்தது. உங்கள் கட்டுகள் என் கட்டுகளைச் சுற்றி வந்து வணங்கின” என்றான்.

அவனுடைய சகோதரர்கள், “இதனால் நீ ராஜாவாகி எங்களையெல்லாம் ஆளலாம் என்று நினைக்கிறாயா?” எனக் கேட்டனர். அவன் சகோதரர்கள் இக்கனவைப்பற்றி அறிந்தபிறகு அதிகமாக அவனை வெறுத்தனர்.

பிறகு யோசேப்புக்கு இன்னொரு கனவு வந்தது. அதையும் அவன் அவர்களிடம் சொன்னான். “நான் இன்னொரு கனவு கண்டேன். அதில் சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கின” என்றான்.

10 அவன் அக்கனவைத் தந்தையிடமும் சொன்னான். ஆனால் அவனது தந்தை அவனை விமர்சனம் செய்து, “என்ன மாதிரியான கனவு இது? நானும் உனது தாயும் சகோதரர்களும் உன்னை வணங்குவோம் என நினைக்கிறாயா?” என்று கேட்டான். 11 யோசேப்பின் சகோதரர்கள் தொடர்ந்து அவன்மீது பொறாமைகொண்டிருந்தனர், அவன் தந்தையோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டு, அது என்னவாக இருக்கும் என்று யோசனை செய்தான்.

12 ஒரு நாள் யோசேப்பின் சகோதரர்கள் சீகேமிற்குத் தங்கள் தந்தையின் ஆடுகளை மேய்க்கப் போனார்கள். 13 சில நாட்களான பின்பு யாக்கோபு யோசேப்பிடம், “சீகேமிற்குப் போ. அங்கு உன் சகோதரர்கள் ஆடு மேய்க்கிறார்கள்” என்றான்.

யோசேப்பும், “நான் போகிறேன்” என்று கூறினான்.

14 யாக்கோபு அவனிடம், “போய் உன் சகோதரர்களும், ஆடுகளும் பத்திரமாக இருக்கிறார்களா என்று பார்த்து வா” என்றான். அவனை எபிரோன் சமவெளியிலிருந்து சீகேமிற்கு அனுப்பினான்.

15 சீகேமிற்குப் போகும்போது யோசேப்பு வழிதப்பிவிட்டான். ஒரு மனிதன் இவன் அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்து, “யாரை நீ தேடிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.

16 “நான் என் சகோதரர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் மந்தைகளோடு எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?” என்று கேட்டான்.

17 அவனோ, “அவர்கள் ஏற்கெனவே தோத்தானுக்குப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றான். எனவே யோசேப்பும் தோத்தானுக்குப் போய் சகோதரர்களைக் கண்டுகொண்டான்.

அடிமையாக யோசேப்பு விற்கப்படுதல்

18 யோசேப்பு தூரத்தில் வரும்போதே அவனது சகோதரர்கள் அவனைப் பார்த்துவிட்டு, அவனைக் கொன்றுவிட முடிவுசெய்தார்கள். 19 அவர்கள் ஒருவருக்கொருவர், “கனவு காணும் யோசேப்பு வந்துகொண்டிருக்கிறான். 20 இப்பொழுது நம்மால் அவனைக் கொல்லமுடியும். கொன்று ஏதாவது ஒரு கிணற்றில் அவன் பிணத்தை எறிந்துவிடுவோம். ஏதோ காட்டு மிருகம் அவனைக் கொன்றுவிட்டதாகத் தந்தையிடம் சொல்லுவோம். அவனது கனவுகள் பயனற்றவை என்று நீரூபிப்போம்” எனப் பேசிக்கொண்டனர்.

21 ஆனால் யோசேப்பைக் காப்பாற்ற ரூபன் விரும்பினான். “அவனைக் கொல்ல வேண்டாம். 22 அவனைத் தூக்கி பாலைவனத்திலுள்ள இந்தக் கிணற்றில் போட்டுவிடுங்கள்” என்றான். பிறகு அவனைக் காப்பாற்றி தந்தையிடம் அனுப்பலாம் என்று அவன் திட்டம் போட்டான். 23 யோசேப்பு சகோதரர்களிடம் வந்தான். அவர்கள் அவனை அடித்து அவனது அழகான மேல் அங்கியைக் கிழித்தனர். 24 பிறகு அவனை ஒரு வறண்ட கிணற்றில் தூக்கிப்போட்டனர்.

25 அவன் கிணற்றில் கிடக்கும்போது அவர்கள் மேலே உணவு உண்ண உட்கார்ந்தனர். அப்போது வியாபாரிகள் கூட்டமாக கீலேயாத்திலிருந்து எகிப்து நோக்கிப் போவதைக் கண்டனர். அவர்கள் ஒட்டகங்களில் நிறைய செல்வங்களையும் விலையுயர்ந்த பொருட்களையும் ஏற்றிச் சென்றனர். 26 எனவே யூதா சகோதரர்களிடம், “யோசேப்பைக் கொன்று மறைத்து விடுவதால் நமக்கு என்ன லாபம்? 27 அதைவிட அவனை வியாபாரிகளிடம் விற்றுவிட்டால் நிறைய லாபம் கிடைக்குமே, சொந்த சகோதரனைக் கொன்றோம் என்ற பழியும் இருக்காதே” என்றான். மற்ற சகோதரர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர். 28 மீதியானிய வியாபாரிகள் அருகில் வந்ததும் யோசேப்பைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து 20 வெள்ளிக்காசுகளுக்கு அவனை விற்றுவிட்டனர். அவர்கள் யோசேப்பை எகிப்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.

29 இச்சமயத்தில் ரூபன் அவர்களோடு இல்லை. அவனுக்கு அவர்கள் யோசேப்பை விற்றுவிட்டார்கள் என்பது தெரியாது. அவன் கிணற்றைப் பார்த்தபோது அவன் இல்லாததை அறிந்து வருத்தப்பட்டு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். 30 ரூபன் தன் சகோதரர்களிடம் போய், “அந்த இளைஞன் கிணற்றில் இல்லையே, நான் என்ன செய்வது?” என்று கேட்டான். 31 அச்சகோதரர்கள் ஒரு ஆட்டைக் கொன்று அதன் இரத்தத்தை யோசேப்பின் அங்கியில் தோய்த்தனர். 32 பிறகு அதைக் கொண்டுபோய் தந்தையிடம் காட்டி, “இந்த அங்கியைக் கண்டெடுத்தோம். இது யோசேப்பினுடையதா?” என்று கேட்டனர்.

33 தந்தை அந்த அங்கியைப் பார்த்துவிட்டு அது யோசேப்பினுடையது என்று அறிந்துகொண்டான். “ஆமாம் இது அவனுடையதுதான். ஒருவேளை ஏதாவது காட்டு மிருகம் அவனைக் கொன்றிருக்கும். என் குமாரன் யோசேப்பு காட்டு மிருகத்தால் உண்ணப்பட்டான்” என்று கூறினான். 34 அவனுக்கு வருத்தம் அதிகமாகித் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். பிறகு அவன் தன் சோகத்தை சாக்கினாலான ஆடையை அணிந்து வெளிப்படுத்தினான். அவன் தொடர்ந்து நீண்ட நாள் குமாரனைப் பற்றிய துக்கத்தில் இருந்தான். 35 யாக்கோபின் பிற குமாரர்களும், குமாரத்திகளும் அவனுக்கு ஆறுதல் கூற முயன்றார்கள். ஆனால் அவன் ஆறுதல் அடையவில்லை. “நான் மரிக்கும்வரை என் மகனுக்காக வருத்தப்படுவேன்” என்று கூறினான்.

36 மீதியானிய வியாபாரிகள் எகிப்தில் யோசேப்பை விற்றுவிட்டார்கள். பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்குத் தலைவனுமான போத்திப்பாருக்கு அவனை விற்றார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center