Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 20-22

ஏசேக்கியா நோயுற்று மரணத்தை நெருங்குதல்

20 அப்போது, எசேக்கியா நோயுற்று மரண நிலையை நெருங்கினான். ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எசேக்கியாவிடம் சென்று, “நீ உனது வீட்டை ஒழுங்குப்படுத்திவிடு. ஏனெனில், நீ மரிக்கப்போகிறாய். நீ வாழப் போவதில்லை! என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான்.

எசேக்கியா தனது முகத்தைச் சுவரின் பக்கம் திருப்பிக்கொண்டான். அவன் கர்த்தரிடம் ஜெபம் செய்து, “கர்த்தாவே! நான் உண்மையாக என் முழு மனதோடு உமக்கு சேவை செய்திருக்கிறேன் என்பதை நினைத்துப்பாரும். நீர் நல்லதென்று சொன்ன செயல்களை மட்டுமே நான் செய்திருக்கிறேன்” என்றான். பிறகு ஏசேக்கியா மிகப்பலமாக அழுதான்.

ஏசாயா பாதி முற்றத்தை விட்டு விலகு முன், கர்த்தருடைய செய்தி அவனுக்கு வந்தது. கர்த்தர் அவனிடம், “திரும்பிப் போய் எசேக்கியாவிடம் பேசு. எனது ஜனங்களின் தலைவனான அவனிடம், ‘கர்த்தரும் உனது முற்பிதாவான தாவீதின் தேவனும் சொல்லுவதாவது: நான் உனது ஜெபத்தைக் கேட்டேன். உனது கண்ணீரைப் பார்த்தேன். எனவே நான் உன்னைக் குணப்படுத்துவேன். மூன்றாவது நாள் நீ கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவாய். நான் உனது வாழ்நாளில் 15 ஆண்டுகளை அதிகரித்திருக்கிறேன். நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய ராஜாவின் வல்லமையிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன். நான் இந்த நகரத்தைப் பாதுகாப்பேன். நான் இவற்றை எனக்காகவே செய்வேன். ஏனென்றால் எனது தொண்டன் தாவீதுக்கு வாக்குறுதியளித்திருக்கிறேன்.’ என்று சொல்” என்று கூறினார்.

பிறகு ஏசாயா ராஜாவிடம், “அத்திப் பழத்தின் அடையைப் பிசைந்து புண்களின் மேல் பற்று போடுங்கள்” என்றான்.

அவ்விதமாகவே அத்திப்பழத்தின் அடையைப் பிசைந்து எசேக்கியாவின் புண்ணின் மேல் பூசினார்கள். பிறகு எசேக்கியா குணமானான்.

எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தர் என்னைக் குணப்படுத்துவார் என்பதற்கான அடையாளம் எது? மூன்றாவது நாள் நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போவதற்கான அடையாளமும் எது?” என்று கேட்டான்.

ஏசாயாவோ, “நீ என்ன விரும்புகிறாய்? நிழல் பத்தடி முன்னே போகவேண்டுமா, பத்தடி பின்னே போகவேண்டுமா?[a] இதுதான், கர்த்தர் தான் சொன்னபடியே செய்வார் என்று நிரூபிப்பதற்கான அடையாளமாகும்” என்றான்.

10 “நிழல் பத்தடி முன்னே போவது என்பது எளிதானது. அதைவிட நிழல் பத்தடிபின்னே போகவேண்டும்” என்று பதில் சொன்னான்.

11 பிறகு ஏசாயா, கர்த்தரிடம் வேண்டுதல் செய்தான். கர்த்தரும் ஆகாசுடைய (சூரிய கடியாரத்தில்) காலடிக்கு முன்போன நிழல் பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.

எசேக்கியாவும் பாபிலோன் ஆண்களும்

12 அப்போது, பாபிலோனின் ராஜாவாகிய பலாதானின் குமாரனான பெரோதாக் பலாதான் என்பவன் இருந்தான். அவன் எசேக்கியாவிற்காக சில அன்பளிப்புகளையும் கடிதங்களையும் கொடுத்து அனுப்பினான். எசேக்கியா நோயுற்றிருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டே அவன் இவ்வாறு செய்தான். 13 எசேக்கியா, பாபிலோனிலிருந்து வந்த ஜனங்களை வரவேற்றான். தன் வீட்டில் உள்ள விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் அவர்களுக்கு காட்டினான். அவன் பொன், வெள்ளி, வாசனைப் பொருட்கள் விலைமதிப்புள்ள தைலங்கள், ஆயுதங்கள், கருவூலத்திலுள்ள மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் காட்டினான். தனது அரண்மனையிலும் அரசாங்கத்திலும் அவன் அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவுமில்லை.

14 பிறகு ஏசாயா தீர்க்கதரிசி ராஜா எசேக்கியாவிடம் வந்து, “இவர்கள் என்ன சொன்னார்கள்? இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?” என்று கேட்டான்.

எசேக்கியா, “இவர்கள் வெகுதூரத்திலுள்ள நாடான பாபிலோனிலிருந்து வருகிறார்கள்” என்று பதிலுரைத்தான்.

15 “இவர்கள் உன் வீட்டில் எதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள்?” என்று ஏசாயா கேட்டான்.

அதற்கு எசேக்கியா, “இவர்கள் என் வீட்டிலுள்ள அனைத்தையும் பார்த்துவிட்டார்கள், நான் அவர்களுக்குக் காட்டாதது என் கருவூலத்தில் எதுவும் இல்லை” என்று சொன்னான்.

16 பிறகு ஏசாயா எசேக்கியாவிடம், “கர்த்தரிடமிருந்து வார்த்தையைக் கேள். 17 உன்னாலும் உன் முற்பிதாக்களாலும் சேமித்து வைக்கப்பட்ட உன் வீட்டிலும் கருவூலத்திலுமுள்ள பொருட்கள் எல்லாம் பாபிலோனுக்கு எடுத்துச்செல்லும் காலம் வந்துக்கொண்டிருக்கிறது. எதுவும் மீதியாக வைக்கப்படாது. இதனைக் கர்த்தர் கூறுகிறார். 18 பாபிலோனியர்கள் உனது குமாரர்களையும் எடுத்துச்செல்வார்கள். பாபிலோனிய ராஜாவின் அரண்மனையில் உனது குமாரர்கள் அலிகளாக இருப்பார்கள்” என்றான்.

19 பிறகு எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தரிடமிருந்து வந்த இந்த செய்தி நல்லது தான்” என்றான். மேலும் எசேக்கியா, “என் வாழ்நாளிலேயே உண்மையான சமாதானம் இருப்பது நல்லதுதான்” என்றான்.

20 எசேக்கியா செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வல்லமையும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஒரு குளத்தை உருவாக்கி, குழாய் மூலம் நகரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்ததும் சொல்லப்பட்டுள்ளன. 21 எசேக்கியா மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். எசேக்கியாவின் குமாரனான மனாசே என்பவன் புதிய ராஜா ஆனான்.

யூதாவில் மனாசே தனது கெட்ட ஆட்சியைத் துவங்குகிறான்

21 மனாசே ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 12 வயது. அவன் எருசலேமில் 55 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் எப்சிபாள்.

கர்த்தரால் தவறு என்று சொல்லப்பட்ட காரியங்களையே மனாசே செய்துவந்தான். மற்ற தேசத்தினர் செய்த பயங்கரச் செயல்களையே இவனும் செய்தான். (இஸ்ரவேலர்கள் வந்தபோது அத்தகைய தேசத்தினரைக் கர்த்தர் நாட்டைவிட்டுத் துரத்தினார்) தன் தந்தை எசேக்கியா அழித்த மேடைகளை பொய்த் தெய்வங்களின் கோவில்களை இவன் மீண்டும் கட்டினான். இவன் பாகாலின் பலிபீடங்களையும் அசெரியாவின் உருவத்தூண்களையும் இஸ்ரவேல் ராஜா ஆகாப் செய்தது போன்றே கட்டினான். இவன் வானில் உள்ள நட்சத்திரங்களையும் தொழுதுகொண்டு வந்தான். கர்த்தருக்கான ஆலயங்களில் இவன் (பொய்த் தெய்வங்களுக்கான) பலிபீடங்களைக் கட்டினான். (“என் நாமத்தை எருசலேமில் வைப்பேன்” என்று இந்த இடத்தைத்தான் கர்த்தர் சொல்லியிருந்தார்) கர்த்தருடைய ஆலயத்தின் இரு முற்றங்களிலும் வானில் உள்ள கோளங்களுக்கு (நட்சத்திரங்களுக்கு) பலி பீடங்களைக் கட்டினான். தன் சொந்த குமாரனைப் பலியிட்டு நெருப்பில் தகனம் செய்தான். இவன் எதிர்காலத்தை அறிந்து கொள்ள பலவழிகளில் முயன்றான். அவன் மத்திரவாதிகளையும் குறிச் சொல்லுகிறவர்களையும் அணுகினான்.

இவ்வாறு கர்த்தர் தவறென்று சொன்ன பல செயல்களை மனாசே செய்துவந்தான். இது கர்த்தருக்கு கோபத்தைக் கொடுத்தது. அசெராவின் உருவம் செதுக்கிய சிலை ஒன்றை அவன் உருவாக்கினான். அதனை ஆலயத்தில் நிறுவினான். கர்த்தர் இந்த ஆலயத்தைப்பற்றி தாவீதிடமும் அவன் குமாரன் சாலொமோனிடமும், “இஸ்ரவேலிலுள்ள மற்ற நகரங்களை எல்லாம் விட்டு, விட்டு எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். இந்நகரத்திலுள்ள ஆலயத்தில் என் பெயரை எப்போதும் விளங்கவைப்பேன். இஸ்ரவேலர்கள் தங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டிலிருந்து வெளியேற வைக்கமாட்டேன். எனது கட்டளைகளுக்கும் என் தாசனாகிய மோசே மூலம் கொடுத்த போதனைகளின்படியும் கீழ்ப்படிந்து நடப்பவர்களை இங்கே தங்கச் செய்வேன்” என்று சொல்லியிருந்தார். ஆனால் ஜனங்கள் தேவன் சொன்னதைக் கவனிக்கவில்லை. இஸ்ரவேலர்கள் வருவதற்கு முன்னதாக கானானில் வாழ்ந்த தேசத்தவர்கள் செய்ததைவிடவும் மனாசே அதிகமாகத் தீய காரியங்களைச் செய்தான். இஸ்ரவேலர்கள் தங்கள் நிலத்திற்கு வந்தபொழுது கர்த்தர் அந்த தேசத்தவர்களை அழித்தார்.

10 தனது ஊழியக்காரரான தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி, கீழ்க்கண்ட செய்தியை கர்த்தர் சொல்லச்செய்தார்: 11 “யூத ராஜாவாகிய மனாசேயின் செயல்கள் வெறுக்கத்தக்கவை (மிக அருவருப்பானவை) இவன் இவனுக்கு முன்பு செய்த எமோரியர்களைவிட கெட்ட செயல்களைச் செய்கிறான். தனது விக்கிரகங்கள் மூலம் யூதர்களையும் பாவத்துக்குள்ளாக்குகிறான். 12 எனவே இஸ்ரவேலர்களின் கர்த்தர், ‘பார்! நான் எருசலேமிற்கும் யூதாவிற்கும் எதிராகப் பெருந்துன்பத்தைத் தருவேன். இதைப்பற்றிக் கேட்கும் ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள். 13 எனவே எருசலேமின் மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன். ஒருவன் ஒரு தட்டை கழுவி துடைத்து கவிழ்த்து வைப்பது போன்று எருசலேமைச் செய்வேன். 14 இங்கே இன்னும் எனக்கு வேண்டிய சிலர் இருக்கிறார்கள். அதனால் அவர்களை விட்டுவிடுவேன். மற்றவர்களைப் பகைவர்களிடம் ஒப்படைப்பேன். பகைவர்கள் அவர்களைக் கைதிகளாகச் சிறைபிடித்துச் செல்வார்கள். போரில் வீரர்கள் எடுத்துச்செல்லும் விலைமதிப்புடைய பொருட்களைப்போல அவர்கள் இருப்பார்கள். 15 ஏனென்றால் என்னுடைய ஜனங்களாகிய இவர்கள் நான் தவறென்று சொன்னவற்றைச் செய்தார்கள். இவர்களின் முற்பிதாக்கள் எகிப்திலிருந்து வெளிவந்த நாள் முதலாகவே எனக்குக் கோபமூட்டும்படி செய்து வருகிறார்கள். 16 மனாசே பல அப்பாவி ஜனங்களைக் கொன்றுவிட்டான். அவன் எருசலேமை ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு இரத்தத்தாலேயே நிரப்பினான். இப்பாவங்கள் எல்லாம் யூதாவிலுள்ள ஜனங்களை இன்னும் பாவம் செய்ய சேர்க்கையாக இருந்தது. கர்த்தர் தவறென்று சொன்னதை யூதர்கள் செய்வதற்கு மனாசே காரணமானான்.’”

17 மனாசே செய்த மற்ற அனைத்து செயல்களும் அவன் செய்த பாவங்கள் உட்பட யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 18 மனாசே மரித்ததும், தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனை வீட்டுத் தோட்டத்திலேயே அடக்கம் செய்தனர். அத்தோட்டத்தின் பெயர் “ஊசா தோட்டம்.” மனாசேயின் குமாரனான ஆமோன் புதிய ராஜா ஆனான்.

ஆமோனின் குறுகிய கால ஆட்சி

19 ஆமோன் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 22 வயது. அவன் எருசலேமில் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் மெகல்லேமேத். இவள் யோத்பா ஊரானாகிய ஆருத்சியின் குமாரத்தி.

20 இவனும் தன் தந்தை மனாசேயைப் போல், கர்த்தருக்கு வேண்டாததையே செய்துவந்தான். 21 அவன் தன் தந்தையைப் போலவே வாழ்ந்தான். தன் தந்தை செய்த விக்கிரகங்களையே தொழுதுகொண்டான். 22 இவன் தன் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைவிட்டு விலகி அவருக்கு விருப்பமான வழியில் வாழாமல் போனான்.

23 ஆமோனின் வேலைக்காரர்கள் இவனுக்கெதிராகச் சதி செய்து இவனை வீட்டிலேயே கொன்றுவிட்டனர். 24 பொது ஜனங்களோ ராஜா ஆமோனைக் கொன்றவர்களைக் கொன்றனர். பிறகு ஜனங்கள் இவனது குமாரனான யோசியா என்பவனை ராஜாவாக்கினார்கள்.

25 ஆமோன் செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 26 ஆமோன் ஊசா தோட்டத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். ஆமோனின் குமாரனான யோசியா என்பவன் புதிய ராஜாவானான்.

யூதாவில் யோசியா ஆளத்தொடங்கியது

22 யோசியா ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எதிதாள் ஆகும். இவள் போஸ்காத்திலுள்ள அதாயாவின் குமாரத்தி ஆவாள். கர்த்தர் நல்லதென்று சொன்னதன்படியே இவன் வாழ்ந்து வந்தான். தன் முற்பிதாவான தாவீது போலவே தேவனை பின்பற்றினான். யோசியா தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தான். தேவன் விரும்பியவற்றைக் கொஞ்சம் கூட மாற்றவில்லை.

யோசியா ஆலயத்தைப் பழுது பார்க்க கட்டளையிட்டது

தனது 18வது ஆட்சியாண்டில் யோசியா, மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் குமாரனாகிய சாப்பான் என்னும் செயலாளனை கர்த்தருடைய ஆலயத்திற்கு அனுப்பினான். அவனிடம், “நீ தலைமை ஆசாரியனாகிய இல்க்கியாவினிடம் போ. கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் கொண்டு வந்த பணம் அவனிடம் இருக்கும். அது வாயில் காவலர்கள் ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு சேகரித்துக் கொடுத்த பணம். அதனை கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வரவேண்டும். பிறகு அப்பணத்தை கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும் வேலை செய்கிறவர்களைக் கண்காணிப்பவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அக்கண்காணிப்பாளர்கள் அப்பணத்தை ஆலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அங்கு தச்சுவேலை செய்பவர்களும், கட்டுபவர்களும், கல் உடைப்பவர்களும் உள்ளனர். அப்பணத்தால் ஆலயத்தைச் செப்பனிட மரமும் கல்லும் வாங்க வேண்டும். வேலைக்காரர்களுக்குக் கொடுக்கும் பணத்துக்குக் கணக்கு கேட்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சொல்” என்றான்.

சட்டங்களின் புத்தகம் ஆலயத்தில் கண்டெடுக்கப்படல்

செயலாளராகிய சாப்பானிடம் தலைமை ஆசாரியர் இல்க்கியா, “கர்த்தருடைய ஆலயத்தில் சட்டங்களின் புத்தகத்தை கண்டெடுத்தேன்!” என்று கூறினான். அவன் சாப்பானிடம் அதனைக் கொடுத்தான். சாப்பான் அதனை வாசித்தான்.

செயலாளராகிய சாப்பான் ராஜாவாகிய யோசியாவிடம் வந்து, “உங்கள் வேலைக்காரர்கள் ஆலயத்திலுள்ள பணத்தையெல்லாம் சேகரித்துவிட்டார்கள். அதனை அவர்கள் வேலையைக் கண்காணிப்பவர்களிடம் கொடுத்துவிட்டார்கள்” என்றான். 10 பிறகு சாப்பான் ராஜாவிடம், “ஆசாரியனான இல்க்கியா என்னிடம் இந்த புத்தகத்தைக் கொடுத்தான்” என்று கூறி ராஜாவுக்கு அதனை வாசித்துக்காட்டினான்.

11 அச் சட்ட புத்தகத்திலுள்ள வார்த்தைகளைக் கேட்டதும் (துக்கத்தின் மிகுதியால்) ராஜா தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். 12 பிறகு ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனான அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனான அக்போருக்கும் செயலாளரான சாப்பானுக்கும் ராஜாவின் வேலைக்காரனான அசாயாவுக்கும் ராஜா ஆணைகள் இட்டான். 13 ராஜா இவர்களிடம், “சென்று நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேளுங்கள். எனக்காகக், கர்த்தரிடம் இந்த ஜனங்களுக்காகவும் யூத நாட்டிற்காகவும் கேளுங்கள். இப்புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளைப்பற்றி கேளுங்கள். கர்த்தர் நம்மீது கோபமாக இருக்கிறார். ஏனென்றால் நமது முற்பிதாக்கள் இப்புத்தகத்தில் கூறியுள்ளவற்றை கவனிக்காமல் போனார்கள். நமக்காக எழுதப்பட்ட இதன்படி அவர்கள் செய்யவில்லை!” என்றான்.

யோசியாவும் உல்தாள் எனும் பெண் தீர்க்கதரிசியும்

14 எனவே இல்க்கியா எனும் ஆசாரியனும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும் அசாயாவும், பெண் தீர்க்கதரிசி உல்தாவிடம் சென்றனர். அவள் அர்காசின் குமாரனான திக்வாவின் குமாரனான சல்லூம் என்பவனின் மனைவி. அவன் ஆசாரியர்களின் துணிகளுக்குப் பொறுப்பானவன். அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள். அவர்கள் போய் அவளோடு பேசினார்கள்.

15 பிறகு உல்தாள் அவர்களிடம், “என்னிடம் உங்களை அனுப்பியவனிடம் போய், இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறதாவது: 16 ‘இந்த இடத்திற்குத் துன்பத்தைக் கொண்டு வருவேன். இங்குள்ள ஜனங்களுக்கும் துன்பத்தைக் கொண்டு வருவேன். யூத ராஜாவால் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள துன்பங்கள் இவையே. 17 யூத ஜனங்கள் என்னை விட்டுவிட்டு அந்நியத் தெய்வங்களுக்கு நறுமணப்பொருட்களை எரிக்கின்றனர். அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை உண்டாக்குகிறார்கள். அவர்கள் ஏராளமான விக்கிரகங்களை ஏற்படுத்தியுள்ளனர். அதனால்தான் நான் இவர்களுக்கு எதிராக என் கோபத்தைக் காட்டுகிறேன். என் கோபம் தடுக்க முடியாத நெருப்பைப் போன்று விளங்கும்!’

18-19 “யூதாவின் ராஜாவாகிய யோசியா, உங்களை அனுப்பி கர்த்தருடைய ஆலோசனைகளைக் கேட்கிறான். அவனிடம் இவற்றைக் கூறுங்கள்: ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நீங்கள் கேள்விப்பட்ட செய்திகளைக் கூறுகிறார். இந்த நாட்டைப் பற்றியும், இங்கு வசிப்பவர்களைப்பற்றியும் நான் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். உங்கள் இதயம் மென்மையாக ஆயிற்று. எனவே, அதைக் கேட்டதும் நீங்கள் மிகவும் வருத்தம் கொண்டீர்கள். இந்த இடத்தில் (எருசலேமில்) பயங்கரமான சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்று சொல்லி இருக்கிறேன். உன் துக்கத்தைப் புலப்படுத்த உன் ஆடையைக் கிழித்துக்கொண்டு அழத்தொடங்கினாய். அதற்காகத் தான் நீ சொன்னதைக் கேட்டேன்.’ கர்த்தர் இதைச் சொன்னார். 20 ‘எனவே, இப்போது உன்னை உனது முற்பிதாக்களிடம் சேர்ப்பேன். நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய், நான் எருசலேமிற்குத் தரப்போகும் துன்பங்கள் எல்லாவற்றையும் உன் கண்கள் பார்க்காது’ என்று சொல்லுங்கள்” என்றாள்.

பிறகு இதனை ராஜாவிடம் போய் ஆசாரியனாகிய இல்க்கியா, அகீக்கா, அக்போர், சாப்பான், அசாயா ஆகியோர் சொன்னார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center